மேகா சினிமா விமர்சனம்

29-08-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சென்ற வாரமே வந்திருக்க வேண்டிய திரைப்படம்.. கிளைமாக்ஸ் காட்சியை கொஞ்சம் மாற்றினால் நன்றாக இருக்குமே என்று பத்திரிகையாளர்களும், நண்பர்களும் எடுத்துச் சொன்னதால், அதைக் கவனத்தில் கொண்டு சிறிது நேரம் எடுத்து கிளைமாக்ஸை மாற்றி ஒரு வாரத்திற்கு பின் திரைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

தடயவியல் துறையில் வேலை பார்க்கிறார் ஹீரோ அஸ்வின். அவரை படிக்க வைத்து அவரது வாழ்க்கை உயர்வுக்கு வழி வகுத்த கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார் திடீரென துப்பாக்கியால் சுடப்பட்டு தற்கொலை என்ற பெயரில் இறந்து போகிறார். ஆனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதை அறிந்து அது தற்கொலையல்ல.. கொலை என்றும், அதைச் செய்தவர் யாரென்பதையும் ஏகப்பட்ட தடைகளைத் தாண்டி ஹீரோ கண்டுபிடிப்பதும்.. இதனால் ஏற்படும் விளைவுகளால் ஹீரோ எப்படி பாதிக்கப்படுகிறார் என்பதும்தான் கதை.
காதலியின் தந்தை பற்றிய ஒரு அறிமுகம்.. இன்னொரு பக்கம் விஜயகுமாரை கொலை செய்த இன்னொரு ஐ.ஜி.. இதற்கு நடுவில் ஒருவேளை இவராக இருக்கலாமோ என்று நினைக்குமளவுக்கு ஆக்சன் காட்டும் தடயவியல் துறையின் தலைவரான ஜெயபிரகாஷ்.. இப்படி மூவரில் யார்தான் செய்திருப்பார்கள் என்கிற சஸ்பென்ஸை கடைசிவரையில் கொண்டு சென்றாலும் கடைசியில் இவர்தான் என்று சப்பென்று முடித்திருப்பதுதான் ஏமாற்றமளிக்கிறது..!
திரைக்கதையின் வேகமும் அழகான இயக்கமும் சேர்ந்து படத்தை இறுதிவரையில் பார்க்க வைத்திருப்பது என்பது மட்டும் உண்மை. படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலமே காதல் காட்சிகளும்.. அதில் இருக்கும் வசனங்களும்தான்..!
மலையாள தேசத்தின் அழகை படகில் இருந்து ரசித்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு அழகான காதல் கதை இதில் உண்டு. இந்த வேலைக்கு வருவதற்கு முன்பாக பகுதி நேர புகைப்படக்காரராக பணியாற்றும் இடத்தில் தனக்கு குடைக்குள் இடம் தந்து அப்போதே மனதில் இடம் பிடித்த ஹீரோயினை விரட்டிப் பிடித்து காதல் கொள்ள வைக்கும் அந்தக் காட்சிகளெல்லாம் ஏ ஒன்.
பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தில் மழை வர.. குடையுடன் நின்று கொண்டிருக்கும் ஹீரோயினின் குடைக்குள் அத்துமீறி நுழைகிறார் ஹீரோ. ஹீரோயின் அதை ஏற்றுக் கொள்கிறார். நிஜத்தில் எங்காவது நடக்குமா இது..? டங்குவாரு அந்துறாது.. ஆனால் இதனை அழகான காட்சிப்படுத்தியதில் நம்மை யோசிக்கவே விடவில்லை இயக்குநர்.
“குடை எடுத்து வராட்டி இப்படித்தான் ரொம்ப கஷ்டப்படணும்” என்று ஹீரோயின் சொல்ல, “இதுல என்ன கஷ்டமிருக்கு..? கொண்டு வந்திருந்தா, இப்போ உங்க குடைக்குள்ள இவ்வளவு பக்கத்துல நான் நின்றிருக்க முடியுமா..?” என அஸ்வின் கேட்பது மிக நல்ல சுவாரஸ்யமான உரையாடல்…
ஹீரோயின் பேருந்தில் ஏறும்போது “அடுத்த தடவை உங்களைப் பார்க்கும்போது, உங்களை எப்படி கூப்பிடுறது..?” என அஸ்வின் கேட்க, ஹீரோயின் தனது ஒற்றை விரலால் வானத்தைக் காட்டி மேகா என்று புரிய வைப்பதெல்லாம் அழகு காட்சி.
புகைப்படம் எடுக்கப் போய் ஹீரோயினின் அண்ணன் திருமணத்தில் ஹீரோயினை தனியே லுக் விட்டு கவிழ்க்க பார்க்கும் அந்த விரட்டலே தனி சுவாரஸ்யம்.. ஹீரோயினை மட்டும் தனியே படம் எடுத்துத் தள்ளுவது… அவரது கையில் இதய வடிவில் மெகந்தி போட்டு விடுவது.. புகைப்படத்தில் நிற்கச் சொல்லும் சாக்கில் ஹீரோயினை தொட்டுத் தொட்டு பேசுவது.. ரவிக்கை தைக்க ஹீரோயினை வெளியே அழைத்துச் செல்வது.. போகும்போது இருவரும் காதில் ஒரே இயர்போனில் பாட்டு கேட்பது.. மழை பெய்யும் அந்த நள்ளிரவில் இருவரும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது… டீக்கடையில் டீயைக் குடித்துவிட்டு ஹீரோயின் முகம் சுளிப்பதும்.. ஹீரோ இதை ரசிப்பதுமான கவித்துவமான காட்சிகள். இயக்கத்தில் பின்னியிருக்கிறார் இயக்குநர்.
போதாக்குறைக்கு இசைஞானியின் புத்தம்புது காலை பாடலும் சேர்ந்து கொள்ள.. முதல் 25 நிமிடங்கள் போகும் நேரமே தெரியவில்லை.. புத்தம்புது காலை பாடலை படமாக்கியவிதம் செய்தவரையில்கூட ஓகேதான்.. ஆனாலும் பாடல் வரிகளுக்கு பொருத்தமாக இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம் என்ற ஏக்கத்தை தவிர்க்க முடியவில்லை..
தனது காதலியை பெண் பார்க்க வந்திருப்பது தெரிந்தும் அவளது வீட்டில்… அவளது அறையில்.. அவளது நண்பர்கள் முன்னிலையிலேயே லிப் கிஸ் கொடுத்துவிட்டு “எனக்கு இப்படித்தான் லவ் பிரபோஸ் செய்ய தெரியும்…” என்று தெனாவெட்டாகச் சொல்லிவிட்டு வரும்போது நமக்குத்தான் மனசு திக் திக்கென்று அடித்துக் கொண்டது. என்னவொரு வயலன்ட் பிரபோஸல்..?
இதே காட்சியில், “என்னை உனக்குப் பிடிக்கும்னு எனக்குத் தெரியும்” என்பார் ஹீரோ. “எப்படித் தெரியும்” என்கிறார் ஹீரோயின். “என்னைப் பார்க்கும்போது, நீ ரொம்ப அழகா இருப்ப…” என ஹீரோ சொல்வது காதலிஸம்.
இன்னொரு காட்சியில் ஹீரோ ஹீரோயினிடம் முத்தம் கேட்க, “பொது இடத்தில் இதெல்லாம் தப்பு” என்கிறார் ஹீரோயின். பட்டென்று ஹீரோயினின் உதடுகளைப் பிடித்திழுத்து, “இது பொது இடமா? எனக்கு மட்டுமே சொந்தமான இடமாச்சே..?” என ஹீரோ சொல்வது காதலின் உச்சக்கட்டம்.
இதேபோல மருத்துவமனையில் ஒய்.ஜி.மகேந்திரன் தனது மனைவிக்கும், தனக்குமான காதலைச் சொல்லுமிடத்திலும் மனம் நெகிழ்கிறது.. இப்படிப்பட்ட கணவர்களும் நாட்டில் நிறைய பேர் இருக்கிறார்கள்.. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள்.. அதற்கு இந்த ஒரு காட்சியே சான்று..!
‘மங்காத்தா’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ போன்ற படங்களில் நடித்திருக்கும் அஸ்வின், இதில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். அழகு, டயலாக் டெலிவரி.. நடிப்பு என்று மூன்றுமே பையனுக்கு உண்டு. தீவிர காதலனாக முற்பாதியில் வந்து கிளைமாக்ஸில் தனது காதலிக்காக உருகிப் போய் நிற்கையில் வேறு மாதிரியான காதலனாகவும் தென்படுகிறார். இயக்கம் அப்படி..!
ஹீரோயின் சிருஷ்டி.. மென்மையாக நடித்துள்ளார். காதல் தனக்குள் வந்துவிட்டதை உணர்ந்து அவர் தவிக்கின்ற தவிப்பை மிக அழகாக முகத்தில் காட்டியிருக்கிறார். காதல் காட்சிகளில் ரசிக்க வைக்கிறது இவரது அமைதியான நடிப்பு.. டெல்லிக்கு போகாமல் திரும்பி காதலனின் வீட்டுக்கே வந்து அந்த 3 அறை வீட்டில் ஒரு பாட்டுக்கு நடனமாடும் காட்சியில் செம ரகளை செய்திருக்கிறார்.
அறிமுக இயக்குநரான கார்த்திக் ரிஷி, காட்சிகளை தொடர்புப்படுத்துவதில் இயக்குநர் கில்லாடியாக இருக்கிறார். ஹீரோ அடிபட்டு ஆஸ்பத்திரிக்குள் நுழைவதும்.. அந்த நர்ஸ் அவருக்கு முன்பே தெரிந்தவராக இருப்பதும்.. இவருடைய நண்பர் கொலை செய்து கிடப்பது.. ஹீரோயினை கடத்திய நபர்கள் போனில் அழைத்து இடத்தைச் சொல்வதும்.. ஹீரோ ஹீரோயினை தேடி கண்டறிவதும் துப்பறியும் படம் போல பரபரப்பாக செல்கிறது..!
இவருக்கு மிகப் பெரிய உறுதுணை ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ். ஒரு காட்சியில்கூட படத்தின் தன்மை கெடாமல், முதல் காட்சியில் பார்த்த அதே பீலிங்கை கடைசிவரையிலும் கொண்டு சென்றிருக்கிறார்..
இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் முதல் ஒரு ரீலுக்கு தான் எப்படி இசையமைத்தேன் என்பதை இயக்குநரிடமே கேட்டார் இசைஞானி இளையராஜா. நான் எதிர்பார்க்கவே இல்லை என்றார் இயக்குநர் கார்த்திக் ரிஷி. உண்மையில் படத்திலும் அப்படித்தான் இருக்கிறது. பின்னணி இசைக்கு மொட்டை சாமியை அடித்துக் கொள்ள இன்னொரு ஆளும் இல்லை என்பதை மறுபடியும் நிரூபித்திருக்கிறார். சந்தேகம் கொள்பவர்கள் இந்தப் படத்தின் முதல் 10 நிமிட காட்சிகளைப் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்..!
பின்னணி இசைக்கு மட்டும் 12 நாள் எடுத்துக் கொண்டாராம் இசைஞானி. மேலும் படத்தின் துல்லியமான ஒலிப்பதிவுக்காக டால்பி அட்மாஸ்(Dolby Atmos) என்ற புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார்களாம்.. படத்தில் அதன் தரம் நன்கு தெரிகிறது. இசைஞானியே பாடியிருக்கும் கடைசி பாடலும் கேட்க வைக்கிறது.. ஆனால் தாளம் போட வைக்கவில்லையே..? என்னவென்று சொல்வது..?
லாஜிக் மீறல்கள் இல்லாமலெல்லாம் இல்லை.. சென்னை சிட்டி போலீஸ் கமிஷனராக போஸ்டிங் கிடைக்க மத்திய அரசு அனுமதியெல்லாம் எதற்கு..? சிட்டி போலீஸ் கமிஷனராக வருவதற்காக சக அதிகாரியை இன்னொரு அதிகாரி கொலையா செய்வார்..? அப்படி போலீஸ் கமிஷனராக வந்து அவர் என்ன செய்யப் போகிறார்..? ஆதாரங்கள் உள்துறைக்கு அனுப்பப்பட்ட பிறகு உள்துறை அலுவலகத்தையே தீ வைத்து எரிப்பது போன்ற சீன்களெல்லாம் இயக்குநரின் ஓவர் கற்பனையாக இருக்கிறது..! இதெல்லாம் நிஜத்தில் நடவாத விஷயமாச்சே..?!
கொலையாளியை கண்டுபிடிப்பதற்காக ஹீரோ போடும் திட்டமெல்லாம் வரிசையாக அடுத்தடுத்து தொடர்ந்து நடப்பதை பார்த்தால் திரைக்கதையை ரொம்ப எளிதாக இயக்குநரின் வசதிக்காகவே எழுதியிருப்பது போல தோன்றுகிறது..!
பாஸிட்டிவ்வான கிளைமாக்ஸ் வேண்டும் என்பதற்காகவே முன்பு எடுத்த கிளைமாக்ஸை மாற்றியிருக்கிறார்கள். இப்போதும் அதன் இடைச்செருகல் தெரிகிறது என்றாலும் வேறு வழியில்லைதான்.. அத்தனை பெரிய கொலையைச் செய்துவிட்டு ஒருவன் இதன் பின்பு நிம்மதியாக வாழ்ந்துவிட முடியுமா..? அதான் போலீஸ் ஸ்டேஷனில் எஃப்.ஐ.ஆரே போட்டாச்சு என்கிறார்கள். பிறகெப்படி ஹீரோ தப்பிக்க முடியும்..?
இதுவொரு நல்ல காதல் படமாக வந்திருக்க வேண்டியது. அல்லது நல்லதொரு சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இருக்க வேண்டியது. இரண்டையும் ஒன்றாக சேர்த்து எடுத்துவிட்டதால், படம் முடிந்தவுடன் அது மட்டுமே குழப்பமாக இருக்கிறது.
இதுவரையில் பார்த்த காதல் திரைப்படங்களிலெல்லாம் தோன்றாத ஒரு விஷயம் இந்தப் படத்தின் காதல் காட்சிகளைப் பார்க்கும்போது நமக்குத் தோன்றியது. அதெப்படி காதலர்கள் 22 வயதுவரையிலும் தங்களை வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கிய பெற்றோரை வெறும் ஒரு மாதமே பழகிய ஒரு பையனுக்காகவோ, அல்லது பெண்ணுக்காகவோ தூக்கியெறிந்துவிட்டு போகிறார்கள்..? போக முடிகிறது..? யோசித்தால் மிக பயங்கரமான நம்பிக்கை துரோகமாக இதைத்தான் நினைக்கத் தோன்றுகிறது..!
எடுத்தவரைக்கும் பார்க்கும்படியாகவே எடுத்திருப்பதால் ‘மேகா’வை ஒரு தரம் பார்த்து விடுங்களேன்..!

4 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் பார்வையில்விமர்சனம் நன்று பார்க்க வேண்டிய படம்.பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

puduvaisiva said...

விமர்சனத்துக்கு நன்றி தல, படத்தை பார்த்துடுவோம்.

கூடுதுறை said...

சே என்ன ஒரு ஏமாற்றம்....

சிருஷ்டி பற்றி மிக குறைவாக கூரியுள்ளிரே...

ஒரு போட்டோ கூட இல்லை...

நீங்கள் உண்மைத்தமிழன் தானா?

இல்லை போலியா?

என்னமோ போங்க...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஒரு வித நெகடிவ் கிளைமாக்ஸ் சேதுபோல பகீர் என்று வந்திருந்தால் கதையின் ஓட்டத்துக்கு ஓரளவு ஒட்டிப் போயிருக்கலாம். படம் வெற்றி பெற்றிருக்கலாம்.

ஹீரோ வில்லன்கள் அனைவரையும் பழிவாங்கி விட்டு ஒய். ஜி. மகேந்திரா வைப் போல காதலிக்கு பணி விடை செய்து காலம் தள்ளுவது போல காட்டி இருந்தால் கூட படத்தோடு ஒட்டிப் போயிருக்கும்.