கசப்புடன் முடிந்த சினிமா நூற்றாண்டு விழா..! - 4

30-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



ஆத்தா வந்ததுக்கே அத்தனை அலப்பறையை காட்டின போலீஸ்.. இப்போ ஜனாதிபதியும் வரும்போது சும்மாவா இருப்பாங்க..! ஆனாலும் ஆத்தாவின் தொண்டர்கள் அடங்கலை..! 

சென்னையைச் சுற்றியிருக்கும் இடங்கள்ல இருந்து வண்டி கட்டிக்கிட்டு வந்து குவிஞ்சுட்டாங்க.. அண்ணா சாலைல அன்னிக்கு மதியம் சாரை சாரையா மினி வேன்களும், பஸ்களும் போய்க்கிட்டேயிருந்துச்சு.. ஒவ்வொரு கழக அமைப்பிலும் 10 பேராவது நிர்வாகிகள் இருப்பாங்க.. அவங்க ஒவ்வொருத்தரும் ஒரு மினி வேனை புக் பண்ணி பிரியாணி போட்டு தொண்டர்களை பிக்கப் பண்ணி கொண்டாந்துட்டாங்க.. கார்களையும், வேன்களையும் நிறுத்துறதுக்கே இடமில்லை.. மூர் மார்க்கெட் பக்கத்துல இடத்தை ஒதுக்கியிருந்தாங்க.. அந்த இடமும் ஹவுஸ்புல்லாகிவிட.. வேறொரு இடத்தைக் காட்டி வேன்களை திசை திருப்பிக்கிட்டிருந்துச்சு போலீஸ்..!

ரிப்பன் பில்டிங்ல இருந்து நேரு ஸ்டேடியம்வரைக்கும் இரண்டு பக்கமும் ஆத்தாவை வாழ்த்தி விதவிதமான விளம்பரத் தட்டிகள்.. போஸ்டர்கள்.. வாழும் இந்தியாவேன்னு ஒருத்தர் அடிச்சிருந்தாரு.. வருங்கால பிரதமரேன்னு இன்னொருத்தர் அடிச்சிருந்தாரு.. எல்லாம் ஒரு நம்பிக்கைதான.. விடுங்க..!

மூணு நாளா பாஸ் இருந்தாத்தான் டூவீலர் வண்டிகளை பார்க் செய்ய விடுவோம்ன்னு சொன்ன ஆளுங்க, இன்னிக்கு மட்டும் எதுவுமே கேட்காமல் திறந்துவிட்டுட்டாங்க..! ஆனா வழியெங்கும் போலீஸ்.. போலீஸ்.. ரோட்டுல ஒன்சைடு மட்டும் மரக்கட்டைகளை போட்டு தொண்டர்கள் நிக்குறதுக்காக இடம் கொடுத்திருந்தாங்க.. 2 மணி நேரத்துக்கு முன்னாடியே அந்த இடம் ஹவுஸ்புல்.. அவ்வளவு கூட்டம்.. அந்தப் பகுதில வசிக்கிறவங்கதான் பாவம்.. வீட்டைவிட்டு வெளியே வர முடியலை.. அந்த ரோட்டையே ஒன்வே ஆக்கிட்டதால எல்லாரும் சுத்திதான் வர வேண்டியிருந்தது..!

அம்மா வர்றதுக்கு முன்னாடியே என்ன செய்யணும்..? என்ன செய்யக் கூடாதுன்னு சில தொண்டர்களுக்கு போலீஸார் கிளாஸ் எடுத்துக்கிட்டிருந்தாங்க.. எதையும் தூக்கியெறியக் கூடாது.. மனு ஏதாச்சும் இருந்தா எங்ககிட்ட கொடுத்திருங்க. நாங்க பத்திரமா கொண்டு போய் கொடுத்திருவோம்.. கையை மட்டும்தான் ஆட்டணும்.. விசில் அடிக்கலாம்.. அத்தோட நிறுத்திக்கணும்.. என்று ஒரு பரஸ்பர ஒப்பந்தத்தை தொண்டர்களிடத்தில் பேசி கொண்டிருந்தது போலீஸ்..!

ஸ்டேடியத்துக்கு நேரெதிரில் இருந்த தெருவில் சில கடைகள் இருந்தன. ஒரு டீக்கடையும் இருந்தது. அதையும் இழுத்துப் பூட்டிவிட்டார்கள்..! முக்கியமான சில பேரைத் தவிர மற்றவர்களின் கார்கள் உள்ளே செல்ல முடியாது என்று முன்பே சொல்லிவிட்டதால் விருந்தினர்களை இறக்கிவிட்டுவிட்டு கார்கள், ஷெட்டுக்கு பறந்து கொண்டிருந்தன..!


முதல் நாள் போலவே.. இன்றைக்கும் சில கரைவேட்டிகள் பாஸ் இல்லாமல் வாசலில் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர்..  ஒரு பெரிய கோஷ்டியாக வந்து, அண்ணன் மாவட்டம் ஸார்.. என்று ஒருவரைக் காட்டி அவரது தொண்டர் பூட்டியிருந்த கேட் வாசலில் நின்று கத்திக் கொண்டிருந்தார்.. ம்ஹூம்.. பலனில்லை.. பாஸ் இருந்தா பேசுங்க ஸார்.. இல்லாட்டி அந்த கேட்டுக்கு போங்க.. கொஞ்ச நேரம் கழிச்சு உள்ள விடுவாங்க.. இப்போ விட முடியாது.. என்றார் ஒரு போலீஸ் உயரதிகாரி.. “எங்களையே விட மாட்டீங்கன்னா அப்புறம் யாரைங்க விடுவீங்க..? என்று எகிறினார்கள் கட்சியினர்.. பக்கத்தில் மப்டியில் இருந்த ஒருவரை காட்டிய அந்த 3 ஸ்டார் அதிகாரி, ஸார் ஐ.எஸ்.. நீங்க வேண்ணா இவர்கிட்ட பேசிக்குங்க.. என்று சொல்லிவிட்டு அலட்சியமாக உள்ளே போய்விட.. அந்த ஐ.எஸ். அதிகாரி சங்கடத்துடன், உள்ள இடமில்லை ஸார்.. இல்லாட்டி அவங்க சொல்வாங்களா.. அந்த கேட்ல கேலரிக்கு டிரை பண்ணுங்க.. என்று பக்குவமாக சொல்லியனுப்பினார்.. இண்டலிஜென்ஸ் சர்வீஸ் போலீஸுக்கு இருக்குற மரியாதை, லோக்கல் போலீஸுக்கு இல்லை போலும்..!

பாஸ்.. பாஸ்.. பாஸ்.. என்று கோடம்பாக்கமே தவியாய் தவித்துக் கொண்டிருக்க இங்கே சினிமாவுக்கே சம்பந்தமில்லாதவர்களெல்லாம் கைகளில் பாஸ்களோடு உலா வந்தது மகா கொடுமை.. 2 மணியில் இருந்தே அனுமதித்துவிட்டதால் நான் உள்ளே சென்றபோது அரங்கம் முக்கால்வாசி ஹவுஸ்புல்.. ஒரு இடத்தில்கூட சினிமாக்காரர்களை பார்க்கவே முடியவில்லை. முக்கால்வாசி அதிமுக கட்சித் தொண்டர்கள்.. கொஞ்சம் பேர் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள்... அழைத்து வரப்பட்டவர்களில் பெரும்பாலோர் இளவயதுக்காரர்களாகவே இருந்ததால் தலைக்கும், தளபதிக்கும், சூப்பர்ஸ்டாருக்கும், உலக நாயகனுக்கும் ஏக வரவேற்பு..!

தரைத்தளத்தில் முன் வரிசை காலியாக இருக்க.. முதல் சீட்டில் கர்நாடக நடிகரும், அமைச்சருமான அம்பரீஷ் தனியே அமர்ந்திருந்தார். உள்ளே வந்த அனைத்து பிரபலங்களும் அவரைத் தாண்டித்தான் போக வேண்டியிருந்த்தால் சுமாராக 50 முறையாவது அவர் எழுந்து உட்கார்ந்திருப்பார் என்று நினைக்கிறேன்.. 

அன்றைக்குக் காலையிலேயே தமிழ்ச் சினிமாவில் இதுவரையிலும் நடந்திராத அளவுக்கு ஒரு கேவலம் நடந்தது. அமிதாப்பச்சனின் அருகிலேயே கமல், ரஜினி அமர வேண்டும்.. ஆகவே அது போல சீட் ஒதுக்கீடு செய்யவும் என்று அவர்கள் இருவரின் சார்பில் நடிகர் சிவக்குமார் விழா நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டாராம்.. அது எங்க கைல இல்லையே என்று சேம்பரும்.. இப்ப கடைசி நிமிஷத்துல சொன்னா எப்படி..? ஜனாதிபதி வர்றதால நாங்க எல்லாத்தையும் ஏற்கெனவே பிக்ஸ் பண்ணிட்டோமே என்று அரசுத் தரப்பிலும் பதில் வந்ததாம்.. 

பரிசு பெறுபவர்கள் நீண்ட தூரம் நடந்து வரக் கூடாது.. ஏற்கெனவே எல்லாருமே வயசானவங்களா இருக்காங்க. அதோட அந்த பரிசளிப்பு வைபவத்தை சீக்கிரமா முடிக்கணும்.. நேரமாகக் கூடாது என்பதால் கமல், ரஜினிக்கு முன் வரிசை ஏற்பாடு நிராகரிக்கப்பட்டதாக நிகழ்ச்சி முடிந்த பிறகு சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாம்..! இதுவும்கூட ஒருவகையில் உண்மைதான்.. அஞ்சலிதேவி.. பர்வதம்மா ராஜ்குமார், எம்.எஸ்.விஸ்வநாதன், ஏவி.எம்.சரவணன், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் என்று விருது பெற்ற பலரையும் கையைப் பிடித்து படிகளில் பத்திரமாக ஏற்றி, இறக்கிக் கொண்டு வந்தார்கள்.. நீண்ட தூரம் நடக்க வைத்தாலும் சிக்கல்தான்.. ஓகே.. 


அஜீத்துக்கும், விஜய்க்கும் நடுவில் சரத்குமார் அமர்ந்திருந்தார். கமல் வந்தபோது வழக்கம்போல வரவேற்பு.. கமலும் வரிசையாக அனைவரிடமும் கைகுலுக்கிவிட்டு வந்தவர் தேவியிடம் வந்து நிற்க.. போனி கபூருடன் சேர்த்து மூவரையும் போட்டோவுக்கு போஸ் கொடுக்கச் சொன்னார்கள் போட்டோகிராபர்கள்.. 


இம்முறையும் பிரபலங்களை வரவேற்றது மட்டுமே சினிமா பி.ஆர்.ஓ.க்கள். அமரும் இடத்தைக் காட்டியது அரசு பி.ஆர்.ஓ.க்கள்தான்..! மேடைக்கு வலது புறமாக இரண்டாம் வரிசையில் தமிழ்ச் சினிமாவின் பிரம்மாக்களுக்கு இடத்தை ஒதுக்கியிருந்தார்கள்..! நயன்தாரா, தனுஷ், ஆர்யா மூவரும் கூட்டத்துக்கு நடுவில் அமர்ந்தே தேமே என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்..! இவர்கள் பாதியிலேயே கிளம்பியபோதுதான் வந்ததே பலருக்கும் தெரிந்தது..!


கமலுக்கு பின்பு அமிதாப்பச்சன் வந்தார். அமர்ந்தார். கொஞ்ச நேரத்தில் சூப்பர் ஸ்டாரும் உள்ளே நுழைந்தார்.. அம்பரீஷையும் தாண்டி பலரையும் மின்னல் வேகத்தில் அனைவருடனும் கைகுலுக்கிவிட்டு நேராக அமிதாப்பச்சனின் அருகில் வந்து அவரைக் கட்டித் தழுவி கொஞ்சிவிட்டு பின் வரிசைக்கு வந்து கமல் அருகில் அமர்ந்தார். அவர் உள்ளே வந்ததில் இருந்து அமர்கின்றவரையிலும் எழுந்த கைதட்டலில் காது பஞ்சராகிவிட்டது..! 



கே.பாலசந்தர் பாத்ரூம் செல்வதற்காக எழுந்து நடந்துவரும்போது மின்னலாய் உள்ளே நுழைந்த  ஹிந்தி கனவுக்கன்னி ரேகா படாரென்று அவரது காலில் விழுந்து வணக்கம் சொல்ல அவருக்கே இனிய அதிர்ச்சி.. முதல் வரிசையில் ஏவி.எம்.சரவணன் அருகிலேயே அமர்ந்து கொண்டார் ரேகா.. உட்கார்ந்த உடனேயே பின்பக்கம் திரும்பி நம்ம பிரம்மாக்கள் அனைவரிடமும் நமஸ்தேஜி சொன்னவிதம்கூட தூரத்தில் கேலரியில் இருந்து பார்த்தவர்களுக்கே பரவசமாக இருந்தது..!

சற்று நேரத்தில் ஒடம்பொறவா சகோதரி சசிகலா தனது உறவினர்களுடன் உள்ளே வந்தார்.  முதல் வரிசையில் அவருக்காகவே ரிசர்வ் செய்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் அமர்ந்தவரிடத்தில் சரத்குமார் எழுந்து சென்று பேசினார்..!

மேடையில் இரு புறமும் மைக்குகள் ஸ்டேண்டுகள் வைத்திருந்தார்கள். செக்யூரிட்டி ஆபீஸர்கள் மாறி மாறி ஹலோ மைக் டெஸ்ட்டிங் சொல்லிச் சொல்லியே அந்த மைக்குகளை களைப்படையச் செய்துவிட்டார்கள். அரை மணி நேரமா டெஸ்ட் பண்றாங்கப்பா.. இதுல கடைசி நேரத்துல வந்து ஒருத்தர் மைக்கை கழட்டி செக் பண்ணி திரும்பவும் மாட்டிட்டு போனாரு..! சோதனையாம்..!

இடது புற முன் வரிசையில் அடிமை மந்திரிகள் வரிசையாக வந்து அமர.. அவர்களுக்கு பின்னே மூணு சீட்டு தள்ளித்தான் மற்ற மாநிலங்களிலிருந்து வந்திருந்த சினிமா கலைஞர்கள் அமர வைக்கப்பட்டார்கள்.. இவர்களுக்கிடையே கட்சியின் மாவட்டச் செயலாளர்களும், முக்கியப் புள்ளிகளும் வேறு அமர்ந்து கொள்ள.. சில கலைஞர்கள் உட்கார இடமில்லாமல் அங்கே, இங்கேயென்று அலைந்து கொண்டிருந்தது பரிதாபம்தான்..!

ஆத்தா கிளம்பிய தகவல் கிடைத்ததும் மேடை சுத்தமானது..! 5.15 மணிக்கு ஆத்தா  அரங்கத்திற்கு வந்து சேர்ந்தார்.. கீழே இருக்கும் ரூமில் ஜனாதிபதிக்காக காத்திருந்தார் ஆத்தா.  ஐந்தரை மணிக்கு ஜனாதிபதியும் வந்து சேர்ந்தார். இவர்கூடவே கவர்னரும், கர்நாடக அமைச்சரும், கேரள முதலமைச்சரும் ஒன்றாகவே வந்துவிட்டார்கள். செக்யூரிட்டிக்காக அனைவரையும் கவர்னர் மாளிகையில் இருந்து ஒன்றாகவே அழைத்து வந்துவிட்டார்களாம்..!

இவர்கள் மேடைக்கு வருவதற்கு முன்பேயே மேடையில் பிரசங்கத்தைத் துவக்கிவிட்டார்கள் தொகுப்பாளர்கள். தூர்தர்ஷனில் விளையாட்டு க்விஸ் போட்டி நடத்துபவர்(பெயர் தெரியவில்லை) மற்றும் ஒரு அம்மணி.. இவரையும் எங்கயோ பார்த்திருக்கேன்.. பெயர் தெரியலை.. இந்திய சினிமாவின் வரலாறு பற்றி ஒரு பெரிய கிளாஸே எடுத்தார்கள். அந்த அம்மையார் தமிழில் சொன்னதையெல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் அந்த ஆண் தொகுப்பாளர்..!


அரசியல்வியாதிகளுக்கும் பொதுமக்களுக்குமான தொடர்பு எல்லாருக்கும் தெரிஞ்சதுதான். ஒண்ணுமே சொல்லலைன்னா ஒரு பயலும் எந்திரிக்க மாட்டான்னு அவங்களுக்கே தெரியும். அதுனால ஒரு தடவை இல்ல.. மூணு தடவை ஒப்பாரியே வைச்சாங்க.. "மேதகு ஜனாதிபதி வரும்போது அவருடைய மருவாதைக்காக தேசிய கீதம் இசைக்கப்படும். ஆகவே எல்லாரும் எந்திரிச்சு நிக்கணும்.."னு.. செவனேன்னு எந்திரிச்சு நின்னா, போலீஸ் பேண்டு கோஷ்டி தேசிய கீதைத்தை இசைச்சாங்க.. உட்கார்ந்த உடனேயே மறுபடியும் எந்திரிங்கன்னுட்டாங்க.. சின்மயி மேடம் நாட்டுப்பண் பாடினாங்க..! அப்பாடான்னு உக்காந்தோம்..!


சேம்பர் தலைவர் சி.கல்யாண் வரவேற்புரையாற்றிய பின்பு குத்துவிளக்கேற்றும் வைபவம். நடிகை திரிஷா கையில் ஒரு மெழுகுவர்த்தியோடு வர.. அதனை வாங்கி ஆளாளுக்கு ஒரு பக்கமா பத்த வைச்சுட்டு உக்காந்தாங்க.. இதுக்கு திரிஷா தேவையா..? இவங்களே யோசிக்க மாட்டாங்களா..? தொடர்ந்து அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள் சேம்பர் நிர்வாகிகள்... 

முதல் நிகழ்ச்சியே இந்திய சினிமாவை பற்றிய ஒரு சின்ன டிரெயிலர்.. நடிகர் மாதவன் தொகுத்து வழங்கியிருந்தார்..  எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்கபூர், தேவ் ஆனந்த், அமிதாப்பச்சன், ராஜ்குமார், சத்யன், பிரேம்நசீர், மது, வைஜயந்திமாலா, பத்மினி, கமல்ஹாசன், ரஜினி ஆகியோர் நடித்த பழைய பட காட்சிகளை வைத்தே தொகுத்திருந்தார்கள்.ஜெயலலிதா பாடிய அம்மா என்றால் அன்பு பாடல்.. அதோ அந்தப் பறவை போல பாடல்.. திருவளர்ச்செல்வியோ நான் தேடிய தலைவிதியோ.. கர்ணனின் உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல்.. பாட்ஷாவின் ரஜினியின் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி டயலாக்.. நாயகன் படத்தில் கமல்ஹாசனிடம் பேரன் கேட்கும் நீங்க நல்லவரா கெட்டவரா என்ற டயலாக்.. இப்படி சிலவற்றை மட்டுமே கைதட்டலுக்காக தொகுத்திருந்தார்கள்..!

வாழ்த்துரையில் முதலில் கர்நாடக அமைச்சர் பேசினார்.. அவருக்குப் பின் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேசினார்.. அவருக்கு பின் ஆத்தா பேச வந்தார்.. தனக்குப் பக்கத்தில் தனக்கென தனியாக இருந்த மைக்கை பிடித்த ஆத்தா.. ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததை மிக அழகாக படித்துக் காண்பித்தார். 


ஆத்தாவின் பேருரை :

"இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் பெருமை உண்டு. இந்தியாவில் சினிமா வரலாறுகளைப் படைத்து சாதனைகளை எட்டியுள்ளது. சமுதாயத்தில் சினிமாக்களின் தாக்கம் குறித்து உலகில் உள்ள அனைவருமே அறிந்து, அதை ஏற்றுக்கொண்டுள்ளனர். மனித கலாசாரத்தில் சினிமா கலந்திருப்பதோடு, கல்வி, பொழுதுபோக்கு, பிரசாரங்களை மக்களிடையே சுமந்து செல்லும் கருவியாய் விளங்குகிறது.

உலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நாளில் இருந்து, மக்களிடையே ஆதிக்கம் செலுத்தும் மீடியாவாக சினிமா திகழ்ந்து வருகிறது. சினிமாட்டோகிராபியை அறிமுகம் செய்த லுமையர் சகோதரர்கள், இது ஒரு எதிர்காலமற்ற கண்டுபிடிப்பு என்றனர். ஆனால் அது தவறு என்பதை நமது இந்த விழா கொண்டாட்டம் நிரூபிக்கிறது. சினிமாவுக்கு மேலும் நல்ல எதிர்காலத்தை நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.இந்திய சினிமாக்களுக்கு தனிப்பட்ட அடையாளம் உண்டு. நாட்டில் நிலவும் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார மாற்றங்களை இந்திய சினிமா பிரதிபலிக்கிறது. மும்பை, கொல்கத்தா, சென்னையைச் சேர்ந்த பலர், மவுனப்படங்களை தயாரித்து சகாப்தம் படைத்துள்ளனர். 1920-ம் ஆண்டில் சினிமா தயாரிப்பு என்பது ஒரு தொழில் நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. 1931-ம் ஆண்டில் சினிமா தயாரிப்பு எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது.

அதன் பிறகு வர்த்தக ரீதியான சினிமாக்கள் தயாரிப்பின் ஆதிக்கம் தொடங்கியது. 'ராஜா ஹரிச்சந்திரா' படத்தின் வெற்றிக்கு பிறகு பலர் மவுனப் படங்கள் தயாரிக்கத்தொடங்கினர். 1920-ம் ஆண்டின் மத்தியில், சினிமா குறித்த விஷயங்களின் மையமாக சென்னை திகழத்தொடங்கியது. சினிமாக்களின் தலைமையிடங்களாக அப்போது மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய பட்டணங்கள்தான் இருந்தன.1940-50-ம் ஆண்டுகளில் பாட்டு, நாட்டியம், பின்னணி இசை, ஆகியவை சினிமாக்களின் முக்கிய அங்கமாக இடம் பிடித்தன. 1970-ம் ஆண்டுகளுக்கு பிறகு வர்த்தக ரீதியான சினிமா தயாரிப்பு, இதுவரை இல்லாத அளவுக்கு பெருவளர்ச்சி கண்டது. ரசிகர்களுக்கு இந்திய சினிமாக்கள் விருந்து படைக்கின்றன. இந்திய மக்களை மட்டுமல்ல உலக சினிமாத்துறையிலும் இந்திய சினிமாக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்தியாவில் வாழும் வாழ்க்கையில், சினிமா, பாட்டு, நாட்டியம், அறிவுரைகள் ஆகியவற்றின் தாக்கங்கள் இல்லாமல் இருக்காது. சுதந்திர போராட்டங்கள் முதல் தற்போதைய பிரச்சினைவரை சினிமாக்களில் காண முடியும். சினிமாத்துறையில் எண்ணிலடங்காத நபர்கள் இடம் பெற்றிருந்தாலும், சிலர் மட்டுமே அடையாளம் பெறுகின்றனர். என்றாலும், சினிமா திரையிலும், திரையின் பின்னணியில் பணியாற்றிய ஒவ்வொருவருமே சினிமா வரலாற்றில் சில செதுக்கல்களை செய்துள்ளனர்.இந்திய சினிமாவுக்கு முதல் பெண் டைரக்டரை வழங்கிய பெருமை தமிழகத்துக்குத்தான் உண்டு. அவர் 'சினிமா ராணி' என்று அழைக்கப்பட்ட டி.பி.ராஜலட்சுமி. 

எனது உத்தரவின் அடிப்படையில் அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழா சமீபத்தில் அரசு நிகழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. 1950-60-ம் ஆண்டுகள்தான் இந்திய சினிமாவின் பொற்காலம் என்று அழைக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில்தான் மக்கள் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள மறக்கவே முடியாத நடிகர் எம்.ஜி.ஆர்., வெள்ளித்திரையில் தோன்றினார். அவர் தமிழ் சினிமாவில் அழியாத இடத்தை பெற்றிருக்கிறார்.

தமிழ் சினிமா உலகிற்கு தேவையான ஊக்கத்தையும், உதவிகளையும் வழங்கி, அதன் பின்னணியில் தமிழக அரசு திடமான ஆதாரமாக நிற்கிறது. நான் எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வருகிறேனோ, அப்போதெல்லாம் தமிழ் சினிமாத்துறைக்கு தேவையான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கி வருகிறேன்.ரசிகன் இல்லாமல் சினிமா இல்லை. 100 ஆண்டுகளை இந்திய சினிமா கடந்து செல்கிறது என்றால், அது ரசிகர்களின் அமோக ஆதரவு மற்றும் நல்லெண்ணத்திலான ஊக்கத்தினால்தான். எனவே அடையாளம் காணப்படாத, ஆனால் தவிர்க்க முடியாத தனிப்பட்ட ரசிகனே, நீதிபதியாக இருக்கிறான் என்பதை சினிமா உலகம் எப்போதும் தனது மனதில் கொண்டிருக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் இதயத்திலும், மனச்சாட்சியிலும் பதிவாகும் வகையில் சினிமாக்களை கொண்டு வருவதை கனவாகக் கொள்ளுங்கள்…" 

- புரிந்ததோ புரியலையோ.. ஆத்தா பேசி முடிக்கும்வரைக்கும் காத்திருந்து ஒரு பெரிய கைதட்டலை வழங்கி தங்களது நன்றிக் கடனை செலுத்தினார்கள் தொண்டர்கள்..! அடுத்து கவர்னர் ரோசையா பேசினார். அவரும் ஆங்கிலம்..! 

கவர்னர் பேசிக் கொண்டிருக்கும்போது ஆத்தா திடீரென்று தனது இடது கையின் இரண்டு விரல்களை காட்டி யாருக்கோ, ஏதோ சமிக்ஞை கொடுக்க.. அதனை பார்த்த பின்னால் நின்று கொண்டிருந்த ஒரு அடிமை அரசு ஊழியர் கையது, வாயது பொத்தி ஆத்தாவின் அருகில் போய் நின்றார்.. ஆத்தா முகத்தைத் திருப்பாமலேயே ஏதோ சொல்ல.. பின்னால் இருந்த டீபாயில் இருந்து சுற்றிலும் கவர் செய்யப்பட்ட ஒரு குடுவையை எடுத்துக் கொடுத்தார் அந்த அடிமை.. பச்சைத் தண்ணி போலிருக்கு.. வாங்கி குடித்துவிட்டு திரும்பாமலேயே குடுவையை பின்பக்கமாக நீட்ட.. அதை வாங்கி பவ்யமாக அதே இடத்தில் வைத்துவிட்டு பின்பு தனது இடத்திற்கே வந்து அதே அட்டென்ஷனில் நின்றார் அடிமை அரசு ஊழியர்.. சினிமாலதான்யா இது மாதிரியெல்லாம் பக்காவான சீன் வைக்க முடியும்..! நீங்கள்லாம் நல்லா வருவீங்கப்பா..!

ஜனாதிபதி பேசுவதற்கு முன்பு கலைஞர்களுக்கு விருது வழங்கத் துவங்கினார்.. முதல் விருது ஆத்தாவுக்குத்தான்..! இவருக்கு மட்டும் ஸ்பெஷலா வடிவமைக்கப்பட்ட ஒரு விருது.. மத்தவங்களுக்கெல்லாம் கழுத்துல தொங்குற பதக்கம் மட்டும்தான்..! என்னவொரு ஜால்ரா பாருங்க..?!



மற்றவர்களை அழைக்கும் முன்பு சேம்பரின் துணைத் தலைவர் தரைத்தளத்தின் முன் வரிசையின் அருகே வந்து யார், யார் முதலில் விருது வாங்கப் போவது என்று பெயர்களைச் சொல்லி அவர்களை மேடைக்கு அருகே அழைத்துச் சென்றார்.. நான் முன்பே சொன்னது போல பல பெரிசுகள் நடக்க முடியாமல் இருந்ததால் விருது கொடுக்கும் வைபவம் கொஞ்சம்  மெதுவாகவே நடந்தது..! அத்தோடு இரு பக்கமும் படிக்கட்டுகள் இருந்தன என்றாலும் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் வழியைக் காட்ட மேலே யாரும் இல்லாததால், ஏறிய படியிலேயே சிலர் இறங்கி வர.. கொஞ்ச நேரம் குழப்பம் நீடிக்கத்தான் செய்தது..! 



எம்.எஸ்.விஸ்வநாதன் மேடையேறியவர் மேடையில் இருந்த அனைவரிடமும் ஆர்வத்துடன் போய் கை குலக்கியவர், கவர்னர் ரோசையாவின் அருகில் போய் நின்று கை விரிக்க.. கூட்டமே சிரித்துவிட்டது. ஜனாதிபதியே அவரை அருகில் அழைக்க.. பின்பு அவரிடம் சென்று விருதை பெற்றுக் கொண்டார்..! ஆத்தா மாதிரியேதான் இந்தாளும் இருக்காரு.. பரிசு வாங்குறவங்க கலைஞர்கள்தான..? ஒரு வார்த்தை பேசினா என்ன முத்தா உதிர்ந்து போயிரும்..? ஒரேயொரு சிரிப்பு.. அவ்ளோதான்.. இப்படிப் போய் இந்த விருதை வாங்குறதுக்கு ச்சும்மா வீட்ல குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புறப்படுத்து தூங்கியிருக்கலாம்..! கடுப்பா இருக்கு..! இதுக்குத்தான் அரசியல்வியாதிகளை இது மாதிரியான கலை விழாக்களுக்கு கூப்பிடக் கூடாதுன்றது..! அட.. தமிழ் தெரியாது.. தமிழ் கலைஞர்களை தெரியாது.. விட்ரலாம்.. அமிதாப்பச்சன்.. ஜாவேத் அக்தர்.. ரந்தீர்கபூர், ரமேஷ் சிப்பி.. இவர்களைகூடவா அவருக்குத் தெரியாது. அட.. அவரோட சொந்த மாநிலத்துக்காரர்..! 50 வருஷமா சினிமால இருக்குற பொம்பளை.. அபர்ணா சென்.. அவங்ககிட்டயாச்சும் ஒரு வார்த்தை.. ம்ஹூம்.. போங்கடா.. துப்புக்கெட்டப் பசங்களா..! உங்களுக்கெல்லாம் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைச்சிருக்காங்க பாருங்க.. அவங்களை சொல்லணும்..!


இது ஜனாதிபதிகிட்ட விருது வாங்கினவங்க லிஸ்ட்டு.. 

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், நடிகை ஸ்ரீதேவி, இந்தி நடிகை ரேகா,  ஏவி.எம்.சரவணன், நடிகை வைஜயந்திமாலா, டைரக்டர் கே.பாலசந்தர், நடிகை அஞ்சலிதேவி, தெலுங்கு டைரக்டர் கே.விஸ்வநாத், டைரக்டர் மற்றும் கார்ட்டூனிஸ்ட் பாபு, டைரக்டர் கே.ராகவேந்திரராவ், பர்வதம்மா(கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவி மற்றும் பட தயாரிப்பாளர்), நடிகை பாரதி விஷ்ணுவர்தன், கன்னட நடிகர் அம்பரீஷ், டைரக்டர் ராஜேந்திரசிங் பாபு, துவாரகீஷ்(நடிகர்-தயாரிப்பாளர்-டைரக்டர்), நடிகர் வி.ரவிச்சந்திரன், நடிகர் வீரண்ணா, நடிகர் மது, டைரக்டர் அடூர் கோபாலகிருஷ்ணன், ஸ்டூடியோ அதிபர் சந்திரன் (மேரிலேண்ட் சுப்பிரமணியத்தின் பேரன்), பட அதிபர் குஞ்சாகோ போபன், நடிகர் மம்முட்டி, நடிகர் மோகன்லால், இந்தி நடிகர் அமிதாப்பச்சன், இந்தி பட அதிபர் கிரண் வி.சாந்தாராம், இந்தி நடிகர் ரந்திர்கபூர், இந்தி பட அதிபர் ரமேஷ் சிப்பி, இந்தி பட வினியோகஸ்தர் கமல் பர்ஜாத்யா, தியேட்டர் அதிபர் வினய்குமார் சும்ப்ளே, இந்தி பட பாடல் ஆசிரியர் ஜாவேத் அக்தர், மராட்டிய நடிகர் ரமேஷ் தியோ, நடிகை சீமா தியோ, வங்காள நடிகை அபர்ணாசிங், டைரக்டர் கவுதம் கோஷ், பிரசன்ஜி சாட்டர்ஜி, நரேஷ் கலோடியா, பஞ்சாப் நடிகை பிரீத்தி சப்ரு, ஒரியா நடிகை உத்தம் மகந்தி, போஜ்புரி நடிகர் மனோஜ்தியா, அசாம் நடிகை ஜரிபாவாகின். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழான்றதால பல்வேறு மொழிகளில் நடிச்சவங்களையும் மொழிக்கு ரெண்டு, ரெண்டு பேரை கூப்பிட்டு விருது கொடுத்து ஒப்பேத்தியிருக்காங்க..!


இந்த விருது வைபவத்தில் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.. ஹிந்தி ரேகா விருது பெற்று தனது இருக்கைக்கு திரும்பும்போது வழியில் அமர்ந்திருந்த போனி கபூர், தேவி, ஜாவேத் அக்தரிடம் வரிசையாக கை குலுக்கியவர் அப்படியே பக்கத்தில் அமர்ந்திருந்த அமிதாப்பிடமும் பட்டென்று கையை நீட்டி குலுக்கிவிட்டு படு ஸ்பீடாக தனது இருக்கையில் வந்து அமர்ந்தார்.. இதை  அன்னிக்கு யாராச்சும் போட்டோ புடிச்சாங்களான்னு தெரியலை.. நானும் தேடிப் பார்த்தேன்.. போட்டோவே கிடைக்கலை.. இத்தனைக்கும் இவங்களுக்குப் பக்கத்துலதான் போட்டோகிராபர்ஸ் நின்னுக்கிட்டிருந்தாங்க.. என்ன கொடுமை சரவணா இது..? இது மட்டும் வீடியோ பதிவாவும் கிடைச்சிருந்தா அன்னிக்கே அனைத்து வட இந்திய சேனல்களும் இதையே திருப்பித் திருப்பிக் காண்பித்து பொழுதைக் கழிச்சிருப்பாங்க.. ஒரு நல்ல விஷுவல் நியூஸ் மிஸ்ஸாயிருச்சு மீடியாவுக்கு..!

விருது கொடுத்து முடிச்சவுடனேயே இரண்டு மைக் முன்னாடியும் சிவப்பு கம்பளம் விரிச்ச ஒரு சின்ன பலகை வைக்கப்பட்டது..! ஜனாதிபதியின் முகம் கேமிராக்களுக்குத் தெரியணுமாம். அதுக்காக..! ஜனாதிபதி எழுந்தவர்.. ரெண்டு பக்கமும் பார்த்திட்டு.. வலது பக்கமே போயிட்டார்.. உடனேயே இடது பக்க பலகை எடுக்கப்பட்டு சட்டென்று பையில் போடப்பட்டு மூடப்பட்டது..! ஜனாதிபதியும் எழுதி வைத்ததைத்தான் படித்தார். ஆனாலும் சிற்சில இடங்களில்  மட்டும் கூட்டத்தினரை பார்த்து தானாகவே பேசினார்.. 

என்ன பேசினாருன்னா..?

"இந்த மாபெரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள எனக்கு வாய்ப்பளித்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் தென்னிந்திய வர்த்தக சபைக்கு நன்றி தெரிவிக்கிறேன். மவுனப் படமாக ஹரீஷ்சந்திரா என்ற படத்தை தாதாசாகேப் பால்கே தயாரித்தார். இதற்காக தனது மனைவியின் நகைகள் அனைத்தையும் அவர் விற்றார். அதுதான் இந்த நூற்றாண்டுக்கான தொடக்கமாக அமைந்தது.  இந்திய சினிமா, ஒவ்வொரு 10 ஆண்டிலும் எப்படி வளர்ச்சி கண்டது என்பதை முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கமாக கூறினார். 

இன்று உலகத்தில் மிகப் பெரிய தொழிற்சாலையாக இந்திய சினிமா வளர்ச்சி பெற்றுள்ளது, உலக வர்த்தகமாக திகழ்கிறது. சர்வதேச சினிமா விழாக்களில் இந்தியர்களும் அங்கீகாரம் பெற்று வருகின்றனர். இந்திய சினிமா இசை, இங்கு மட்டுமல்ல, வெளிநாடுகளிலும் இசைக்கப்பட்டு வருகிறது. 

இந்திய சினிமாவில், தென்னிந்திய சினிமாக்கள் மிகப் பெரிய பங்களிப்பை அளித்துள்ளன. மிகப் பெரிய ஜாம்பவான்களான எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், பிரேம்நசீர், ராஜ்குமார், எஸ்.எஸ்.வாசன், நாகிரெட்டி, எல்.வி.பிரசாத் போன்றவர்களை மறக்க முடியாது. முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும் தென்னிந்திய சினிமாவுக்கு சிறந்த பங்களிப்பை அளித்துள்ளார். அவரை இந்திய சினிமா விருதுக்கு தேர்வு செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது வாழ்த்துகள்.

இந்திய சினிமாவுக்கு மத்திய அரசு நல்லாதரவு அளித்து வருகிறது. சமூகத்தில் நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் துறையாக சினிமாத்துறை இருக்க வேண்டும். ஏனென்றால், நம் நாட்டில் சினிமா பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். சினிமாதான் மக்களிடையே ஊடுருவி இருக்கும் மீடியா. பொழுதுபோக்குக்காக மட்டுமல்லாமல், சமூகத்துக்கு தேவையான நல்லொழுக்கத்தையும் அதன் மூலம் வளர்க்க வேண்டும். பழமை வாய்ந்த புனே, கொல்கத்தாவில் உள்ள சினிமா கல்லூரிகளுக்கு தேசிய முக்கியத்துவம் கொடுப்பது குறித்து அறிவிக்க வேண்டும்.

சமீபத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி கேள்விப்பட்டு வருகிறோம். நாட்டில் சில இடங்களில் கலவரங்களும் நடக்கின்றன. அவையெல்லாம் நமது மனச்சாட்சியை உலுக்கிவிட்டன. இதற்கு சினிமா துறையினர் சரியான அறிவுரைகளை சரியான வழியில் சொல்ல வேண்டும். மறைந்துவரும் நல்லொழுக்கங்களை விழித்தெழச் செய்வது அவசியம். சகிப்புத் தன்மையும், மனிதநேயமும் வளர்க்கப்பட வேண்டும். சமூக மேம்பாட்டுக்காக நேர்மறையுடன் பொறுப்போடு செயல்பட வேண்டும்…"

- அடுத்தவங்களுக்கு மட்டும்தான் அறிவரை சொல்வாங்க இந்த அரசியல்வியாதிங்க.. சினிமாக்காரங்க பொறுப்பா இருக்கணுமாம்.. இவங்கெல்லாம் அட்வைஸ் செய்ற அளவுக்கு சினிமாக்காரங்க நிலைமை ஆகிப் போச்சு..! பாவம்தான்..!


சேம்பரின் செயலாளர்களில் ஒருவரான ரவி கொட்டாக்காரா நன்றியுரை சொல்ல.. மேடை கூட்டம் இனிதே முடிவடைந்தது..! ஆத்தாவைப் பார்த்து பெரும் கும்பிடு போட்டுவிட்டு ஜனாதிபதியும் மற்றவர்களும் வெளியேற.. இதுதான் சமயம் என்று கீழேயிருந்த ஒட்டு மொத்தக் கூட்டமும் ரிலாக்ஸானது..! 


தமிழ் கலைஞர்கள் அனைவரிடமும் விடைபெற்று அமிதாப்பச்சன் வெளியேற.. பின்பு ரஜினி.. பின்பு கமல்.. என்று பெரிய தலைகள் எஸ்கேப்பு.. அமைச்சர்களும் அடித்துப் பிடித்து  வெளியேற.. பல கலைஞர்கள்  மேடைக்குக் கீழே பல இடங்களில் நின்று கொண்டு பேசத் துவங்கினார்கள். இந்த களேபரத்தை பார்த்து பயந்து போன தொகுப்பாளர்கள் "சி.எம். திரும்பவும் உள்ள வரப் போறாங்க.. உங்களோட உக்காந்துதான் கலை நிகழ்ச்சிகளை பார்க்கப் போறாங்க.. தயவு செஞ்சு எல்லாரும் அமைதியா உக்காருங்க"ன்னு திரும்பத் திரும்பச் சொன்னாங்க.. ஆத்தா திரும்பவும் வரும்வரையிலும் அவர் வரும் வழியில் பலரும் போய் வந்து கொண்டிருக்க டென்ஷனாகிவிட்டார்கள் செக்யூரிட்டிகள்.... 

விருந்தினர்களை வழியனுப்பிவைத்துவிட்டு ஆத்தா திரும்பவும் உள்ளே வந்த பின்பு நிலைமை சீராகி அனைவரும் கிடைத்த இடத்தில் அமர்ந்தார்கள்.. கமல், ரஜினி, அமிதாப்பச்சன் போனவர்கள் போனவர்கள்தான்..! முன் வரிசையில் சில அமைச்சர்கள் திடீரென்று காணாமல் போக அந்த இடத்தில் அதுவரையிலும் இடம் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருந்த தெலுங்கு நடிகர்கள் ராஜேந்திரபிரசாத்தும், ராஜசேகரும் அமர்ந்தார்கள். முன் வரிசையில் அமர்ந்த தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவிடம் ஒரு அரசு பி.ஆர்.ஓ. பின் வரிசைக்கு போகும்படி சொல்ல.. மனுஷன் கொலை செய்துவிடுவதை போல முறைத்துப் பார்த்தார். அதற்குள் சேம்பர் நிர்வாகி ஒருவர் வந்து அவர் அருகில் அமர்ந்து கூல் செய்து அரசு பி.ஆர்.ஓ.வை அனுப்பி வைத்துவிட்டார்.. தப்பிச்சான் மனுஷன்..!

இப்போது தொகுப்பாளர்களும் மாறி சின்மயி மேடமும், சிவகார்த்திகேயனும் தொகுப்பாளர்களா வந்தாங்க.. முதலில் ஆத்தாவின் திரையுலக வாழ்க்கையை ஒரு குறும்படமா தொகுத்திருந்தாங்க.. இயக்குநர் பி.வாசுதான் இதனை செய்திருந்தார். திரையுலகம் கண்ட திரைச்செல்வின்ற பெயரில் ஒளிபரப்பான இந்த குறும்படம் ஆத்தாவின் திரையுலக வாழ்க்கையை கொஞ்சம், கொஞ்சம் சொன்னது..! அதிலும் எம்.ஜி.ஆருடன் நடித்த படங்களின் ஸ்பெஷலையெல்லாம் சொல்லாமல் ஒரேயடியாக சூரியகாந்தி படத்தில் இருந்து மட்டுமே ஸ்பெஷல் நியூஸாக சொன்னார்கள். இதில் நடிக்க ஆத்தா வெறுமனே 1 ரூபாய்தான் சம்பளமா வாங்கினாராம்.. மேலும் இதில் ஒரு பாடலையும் இவரே பாடியிருக்கிறாராம்.. அதிலும் வேறொரு பாடலின் இடையில் வந்த ஆங்கில வரிகளை தானே எழுதி பாடினாராம் ஆத்தா..! திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆருக்கு வெள்ளி செங்கோல் கொடுத்து கட்சியிலும், ஆட்சியிலும் இடம் பிடித்ததையும் காட்டினார்கள்..! தற்போது ஆட்சியைப் பிடித்த கதையையும் சொன்னவர் இடையில் அவர் ஊழல் வழக்கிற்காக ஜெயிலுக்கு போனதை மட்டும் சொல்லவே இல்லை..! 

அடுத்து மொதல்ல மலையாளத்துக்காரங்க ஆரம்பிச்சாங்க கச்சேரியை.. செண்டை மேளம்.. நடிகர் ஜெயராமும் இதுல சேர்ந்துக்கிட்டு அடிச்ச அடி இருக்கே.. பிச்சுட்டாங்க.. தொடர்ந்து 5 நிமிஷத்துக்கு ஒரே மேள சத்தம்தான்.. இதுவே சினிமாக்கார ரசிகர்கள் கேலரில இருந்திருந்தா டான்ஸும் சேர்ந்தே வந்திருக்கும்..! சூப்பர்ப்.. 

தொடர்ந்தது நடிகை ஷோபனாவின் டான்ஸ்.. 'ஜெயஜெயவர்த்தினி' என்ற பாடலில் சிங்கத்தின் மீது அமரும் காளியம்மாள் வேடத்தை தனது படை பரிவாரங்களுடன் ஆடிக் காட்டினார்.. நன்று..

அடுத்து தேச ஒற்றுமைக்காக 'பாரத விலாஸ்' படத்தின் பாடல் காட்சிக்கு நமது கலைஞர்கள் பலரும் ஆடிக் காட்டினார்கள்.. தேவயானி மட்டும் ஞாபகம் இருக்கு.. மத்தவங்களை தெரியலை.. மறந்து போச்சு..!

அடுத்து வெங்கட்பிரபு  மேடையில் தோன்றினார்.. "சினிமா தோன்றிய காலத்தில் இருந்து இப்போதுவரையிலும் ஹீரோயினை ஹீரோக்கள் எப்படியெல்லாம் காப்பாத்துறாங்க அப்படீன்ற கான்செப்ட்ல சினிமா மாதிரி இதை எடுத்திருக்கேன் பாருங்க..." என்றார்.. ச்சும்மா காமெடிக்குத்தான்னு முன்னாடியே சொல்லிட்டதால தப்பிச்சாரு..!

முதல் கதை மாயாஜாலம் செய்து ஹீரோயின் கயிற்றை அவிழ்த்து காப்பாற்றுவது.. அடுத்தது  பாட்டு பாடியே கயிற்றை அவிழ்த்து காப்பாற்றுவது.. அடுத்து கத்திச் சண்டையிட்டு காப்பாற்றியது.. அதற்கடுத்து  கெளபாய் ஸ்டைலில் போய் காப்பாற்றியது.. தொடர்ந்து ஹோட்டலில் டான்ஸ் ஆடிவிட்டு வில்லனை போலீஸிடம் மாட்டிவிட்டு இவர்கள் தப்பிப்பது..! கடைசியாக இப்போது ஹீரோயினை காப்பாற்றிய பின்பு "மவனே இதுக்குத்தாண்டா இத்தனை நாளா காத்திருந்தேன்"னு சொல்லி அந்த ஹீரோயின், ஹீரோவை கத்தியால குத்தி சாகடிக்குது..! நல்லத்தான் எடுத்திருந்தாரு வெங்கட்பிரபு..! ஆத்தாவின் ரசிப்பு அவரது சிரிப்பிலேயே தெரிந்தது..!

அடுத்து மேடைக்கு வந்தார் சின்னி ஜெயந்த்.. "1 நிமிஷத்துல 100 திரைக் கலைஞர்களின் பெயரை மனப்பாடமா சொல்லி வாழ்த்தப் போறேன்"னு சொல்லிட்டு ஒவ்வொரு கலைஞருக்கும் ஒரு அடைமொழி கொடுத்து அழகா வாழ்த்தினாரு.. கடைசியா நான் எதிர்பார்த்தது போலவே "அன்புக்கு அம்மா" என்று சொல்லியே முடித்தார்..!

இதற்கடுத்து வந்தது ரிக்கார்டு டான்ஸ்.. 'ஓஸ்தி' படத்தின் 'கலசலா' டான்ஸுக்கு லஷ்மிராய் ஆடுனாங்க.. இந்த ஒரு பாட்டு முடிஞ்சவுடனேயே ஆத்தா பட்டுன்னு கிளம்பிட்டாங்க.. உடனேயே மிச்ச சொச்ச கூட்டமும் எந்திரிச்சு போக ஆரம்பிக்க.. சிவகார்த்திகேயன் இப்போ கெஞ்ச ஆரம்பிச்சிட்டாரு.. "இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் இருக்கு போயிராதீங்கப்பா.." என்று..!

ஆனாலும் முக்கிய புள்ளிகள்.. நடிகர், நடிகைகள் எல்லாரும் இந்த நேரத்துலேயே கலையத் துவங்க.. முன் வரிசை களையிழந்து போனது.. அடுத்து கும்கி படத்தோட பாட்டுக்கு டான்ஸ்.. அப்புறம் கன்னட ரவிச்சந்திரன் நடிச்ச படங்களைத் திரையிட்டு அவருடைய படங்களின் பாடல்களுக்கு ஒரு கோஷ்டி டான்ஸ் ஆடுச்சு.. தொடர்ந்து தெலுங்கு வெங்கடேஷ் பாடல்களுக்கு டான்ஸ்.. அப்புறம் திரும்பவும் கன்னடம்.. ராஜ்குமார் பாடல்களுக்கு ஆடுனாங்க.. கன்னடத்துக்காரங்கதான்யா எங்க போனாலும் ஒரே மாதிரியிருக்காங்க.. கன்னட தேசத்தை வாழ்த்தி அவங்க மாநில கொடியை கையில பிடிச்சுக்கிட்டு ஒரு ஆட்டம் ஆடி அசத்திட்டாங்க.. நாமளும் இருக்கோமே..!?

அடுத்து ஹாங்காங்கில் இருந்து 5 அழகிகள் வந்து ஆட்டமோ ஆட்டம் ஆடினாங்க.. இவங்களுக்கும் இந்திய சினிமா நூற்றாண்டுக்கும் என்ன சம்பந்தம்ன்னு யாருக்குத் தெரியும்.. இதுக்கப்புறம் ஒரு 5 பசங்க மைக்கேல் ஜாக்ஸன் டான்ஸ் ஆடினாங்க.. இதுக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு எனக்குத் தெரியலை.. இத்தோட கூட்டம் பெரிதும் கலையத் துவங்க.. எனக்கும் பொறுமையில்லாமல் கிளம்பிவிட்டேன்..! 

இதுக்கப்புறம்தான் தமிழ்ச் சினிமா நடிகர், நடிகைகள் திரும்பவும் டான்ஸ் ஆடப் போறாங்கன்னு சிவகார்த்திகேயன் திரும்பத் திரும்பச் சொன்னாரு. அதை நீங்களே பார்த்துக்குங்கன்னு விஐபி கூட்டம் மொத்தமும் வெளியேறிவிட்டது.. மேடையில் ஆடியவர்களைத் தவிர வேறெந்த சினிமா கலைஞர்களும் அப்போது அரங்கத்தில் இல்லை..!

மெதுவாக ரோட்டுக்கு வந்தபோது சீனியர் பி.ஆர்.ஓ. ஒருத்தர் வீட்டுக்குப் போக காருக்காக காத்திருந்தார்.. "என்னண்ணே நீயே இப்படி கிளம்பிட்ட?" என்றேன்.. "இதுக்கு மேல இருந்து என்ன பிரயோசனம்..? யார் இருக்கா உள்ள..?" என்றார்.. இதுதான் கடைசி நிலைமை..!

இப்போ அடுத்து நம்ம 'கசப்பு' மேட்டருக்கு வருவோம்..!
புகைப்படங்களுக்கு நன்றி : பல்வேறு இணையத்தளங்கள்


8 comments:

ராஜ் said...

சூப்பர் கவரேஜ் அண்ணே. உங்க உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட். அடுத்த பதிவுக்கு வைட்டிங்.

manjoorraja said...

உங்கள் வர்ணனைகளே போதும். நிகழ்ச்சிக்கு போய் ஏன் கஸ்டப்படணும்.

Nondavan said...

அண்ணாச்சி, எங்களுக்காக எம்புட்டு கஷ்டப்படுறீங்க.... அதற்கு முதலில் மிக்க நன்றி அண்ணே...

உங்க பொறுமை அலாதியானது...

உள்ளது உள்ளபடி அப்படியே பார்த்த மாதிரி இருக்கு...

உங்க சிரமம் கடந்து, எங்களுக்காக இவ்வளவு விரிவாக எழுதியமைக்கு நன்றிகளுடன் வாழ்த்துகள்

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ் said...

சூப்பர் கவரேஜ் அண்ணே. உங்க உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட். அடுத்த பதிவுக்கு வைட்டிங்.]]]

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றிகள் ராஜ்..!

உண்மைத்தமிழன் said...

[[[manjoorraja said...

உங்கள் வர்ணனைகளே போதும். நிகழ்ச்சிக்கு போய் ஏன் கஷ்டப்படணும்.]]]

இப்படீல்லாம் சொல்லப்படாதுங்கண்ணா.. தீபாவளி அன்னிக்கு ஜெயா டிவில போடுவாங்க. அவசியம் பார்த்திட்டு மறுபடியும் வந்து கமெண்ட் போடுங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

அண்ணாச்சி, எங்களுக்காக எம்புட்டு கஷ்டப்படுறீங்க.... அதற்கு முதலில் மிக்க நன்றி அண்ணே...

உங்க பொறுமை அலாதியானது. உள்ளது உள்ளபடி அப்படியே பார்த்த மாதிரி இருக்கு...

உங்க சிரமம் கடந்து, எங்களுக்காக இவ்வளவு விரிவாக எழுதியமைக்கு நன்றிகளுடன் வாழ்த்துகள்.]]]

எழுதுவதில் எனக்கு ஒரு நிம்மதி.. இது மாதிரியான பின்னூட்டங்களினால் கொஞ்சம் சந்தோஷம்..! வருகைக்கு நன்றி நொந்தவன் ஸார்..!

shabi said...

தூர்தர்ஷனில் விளையாட்டு க்விஸ் போட்டி நடத்துபவர்(பெயர் தெரியவில்லை/// என்னங்க ஊடகதுறையில் இருக்கும் நீங்க அவர் பெயர் தெரியலன்னு சொல்றீங்க..Dr.சுமந்ராமன் அவர் பெயர்... 8 வருடங்களுக்கும் மேலாக இந்த விளையாட்டு நிகழ்ச்சியை சிறப்பாக வழங்கிக்கொண்டுஇருக்கிறார்...நேரமிருப்பின்/விளையாட்டு சம்பந்த நிகழ்ச்சியில் ஆர்வமிருப்பின் சனிதோறும் இரவு 10.10 க்கு பொதிகையில் இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ஒரு பதிவு போடுங்கள்,

உண்மைத்தமிழன் said...

[[[shabi said...

தூர்தர்ஷனில் விளையாட்டு க்விஸ் போட்டி நடத்துபவர் (பெயர் தெரியவில்லை///

என்னங்க ஊடகதுறையில் இருக்கும் நீங்க அவர் பெயர் தெரியலன்னு சொல்றீங்க.. Dr.சுமந்ராமன் அவர் பெயர்... 8 வருடங்களுக்கும் மேலாக இந்த விளையாட்டு நிகழ்ச்சியை சிறப்பாக வழங்கிக் கொண்டு இருக்கிறார்... நேரமிருப்பின்/விளையாட்டு சம்பந்த நிகழ்ச்சியில் ஆர்வமிருப்பின் சனிதோறும் இரவு 10.10 க்கு பொதிகையில் இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு ஒரு பதிவு போடுங்கள்.]]]

அவசியம் ஒரு நாள் பார்க்கிறேன் ஸார்..! தகவலுக்கு மிக்க நன்றிகள்..!