ஆல்பா, பீட்டா, காமா, ஒமேகா, டெல்டா - இதில் நீங்கள் யார்..?

23-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மாற்று சினிமா தேடியலையும் மழலை செல்வங்களே.. உங்களுக்காக இதோ.. இப்போது வரப் போகிறது உயிர்மொழி என்னும் தமிழ்த் திரைப்படம்..!

படத்தின் கதைச்சுருக்கமே இதனையொரு மாற்று சினிமா என்று சொல்லிவிடும்..! படியுங்கள்..!


ஆல்பா, பீட்டா, காமா, ஒமேகா, டெல்டா என 5 குணாதிசயங்களை கொண்ட 5 பேரை பற்றிய கதை இது..!

ஆல்பா - தன்னலம் பார்க்காமல் மக்கள் நலனிலும், மனித குல நலனிலும் அக்கறை கொண்டவன். இந்த 5 பேரில் இவன்தான் தலைவன்போல செயல்படுவான்.

பீட்டா - சுயநலம் மிக்கவன். எதையும் தனக்கே சொந்தமாக்கிக் கொள்ள முயற்சிப்பவன்.

காமா - ஒரு குழப்பவாதி. எதையும் இவன் புரிந்து கொண்டானா என்பதையே யாரும் கண்டுபிடிக்க முடியாது. தானும் புரிந்து கொள்ளாமல் அடுத்தவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவான்..

ஒமேகா -  இவன் குழந்தைத்தனம் மாறாதவன். வெளுத்த்தெல்லாம் பால் என நம்புகிறவன்.

டெல்டா - மற்றவர்களைவிட இவன் கொஞ்சம் புத்திசாலி.. அதே நேரம் தான் நினைத்ததை அடையாமல்விட மாட்டான். அதற்காக எந்தக் காரியமும் செய்யத் துணிவான். மொத்தத்தில் ஒரு சைக்கோ போல..!

இந்த 5 பேரும் பார்வையற்ற பெண்ணான பிரியாவை சந்திக்கிறார்கள். இவர்களுக்கு பிரியா மீது காதல். அவளை கவர்வதற்காக பல வேலைகளைச் செய்கிறார்கள். 

இந்த பிரியா யாருடைய காதல் வலையில் விழுந்தாள்..? பார்வை பெற காரணமான சைக்கோ டெல்டா என்ன செய்தான்..? மற்றவர்களின் நிலை என்ன..? என்பதை மிகவும் பரபரப்பாக பல திடுக் திருப்பங்களோடு, காதல் கலந்த திரில்லர் கதையாக உயிர் மொழி படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராஜா..


இயக்குநர் ராஜாவின் பயோடேட்டாவும் கொஞ்சம் பயமுறுத்துகிறது.. உலகம் முழுவதும் 180 நாடுகளுக்கு மேல் கிளைகள் வைத்திருக்கிற பிரபல விளம்பர நிறுவனமான லோ-வில் பல ஆண்டுகள் விளம்பரப் பட இயக்குநராகவும், தொழில் நுட்பத் துறையிலும் பணியாற்றியவராம்.. இந்த விளம்பரத் துறைக்காக பல்வேறு நாடுகளுக்கும் சென்ற அனுபவம் உள்ளவராம்..!

ஹார்மோன் மூவி மேக்கர்ஸ் மற்றும் மானவ் புரொடெக்சன்ஸ் சார்பில் ஷண்முகப்பிரியா தயாரித்திருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் 45 நாட்களுக்கும் மேல் சென்னை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் நடந்து முடிந்திருக்கிறது.. இதனுடைய ஆடியோ ரிலீஸ் நடந்து ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்ட நிலையில் தற்போதுதான் பிரஸ் மீட் நிகழ்வுக்கே வந்திருக்கிறது..!

'ஆல்பா'வாக சர்தார்ஜ், 'பீட்டா'வாக சசி, 'காமா'வாக சாம்ஸ், 'டெல்டா'வாக டான்ஸ் மாஸ்டர் பாபி ஆண்டனி, 'ஒமேகா'வாக ராஜீவ் ஆகியோர் நடிச்சிருக்காங்க.. நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைச்சிருக்காரு. குருதேவ் ஒளிப்பதிவில், பிரவின்-ஸ்ரீகாந்த் எடிட்டிங் செஞ்சிருக்காங்க..!


இந்தப் படம் ரிலீஸான பின்னாடி படம் பார்க்குற ஒவ்வொருவரும் தான் எந்த குணாதிசயம் கொண்டவன் என்பதைப் பொருத்திப் பார்க்கும் சூழல் ஏற்படும். சூழ்நிலைதான் மனிதனுக்கு முக்கியம். அந்தச் சூழல்தான் மனிதனின் குணாதிசயத்தை நிர்ணயம் செய்கிறது அப்படீன்னு இந்தப் படம் சொல்லுதாம்..!


இன்றைய பிரஸ் மீட்டில் இரண்டே வரிகளில் தன் பேச்சை முடித்துக் கொண்ட இயக்குநர் கேள்விகளை கேட்கச் சொன்னார். கதை என்ன..? என்ன சொல்ல வர்றீங்க..? இது மக்களுக்குப் புரியுமா..? என்ற சந்தேகக் கேள்விக்கெல்லாம் படத்தைப் பாருங்க.. அப்புறமா கேளுங்க என்றார் இயக்குநர்..! அப்போ பட ரிலீஸுக்கு அப்புறமாவே பிரஸ் மீட்டை வைச்சிருக்கலாமே..? அப்போ எந்த இயக்குநரும் கைக்கு சிக்க மாட்டாங்களே..! இதையெல்லாம் அவர்கிட்ட கேக்க முடியுமா..? பிரஸ்காரங்க இத்தனை கேள்வியை நோண்டுனதுக்குக் காரணம் போட்டு காட்டிய 2 பாடல்களும்.. ஒரு உணர்ச்சிகரமான காட்சியும்தான்..!

குணா படத்துல கமலஹாசன் ஆஸ்பத்திரி ரூம்ல சுத்தி சுத்தி வந்து தன்னோட கதையைச் சொல்றா மாதிரி.. இதுல ஹீரோயின் பிரியா செம்மொழி பூங்காவையோ சுத்தி சுத்தி தொடர்ச்சியா 3 நிமிஷம் குமுறி குமுறி அழுது.. தன்னோட சோகக் கதையைச் சொல்லியிருக்காங்க.. சிறந்த இயக்கம்.. சிறந்த நடிப்பு.. ரொம்ப உருக்கமாத்தான் இருந்துச்சு.. எதுக்குமே கை தட்டாத, பிரஸ்காரங்க இதுக்குக் கை தட்டினாங்கன்னா பார்த்துக்குங்க..!


ஆனா இந்த ஒரு காட்சியை லீடா வைச்சு ஒரு பாடல் காட்சி துவங்குது.. வெறும் சீக்குவல் சீன்ஸ்களை வைச்சு எடுத்திருக்காங்க.. பரவாயில்லை ரகம்தான்..! அடுத்து காட்டியது ஒரு பிரமாண்டமான பாடல் காட்சி.. முழுவதுமே கிராபிக்ஸ், அனிமேஷனில் செமத்தியான ஒர்க்.. ஒளிப்பதிவு கண்ணைக் கட்டியது..! எக்கச்சக்க செலவாகியிருக்கும்னு தோணுது.. ஆனா பாட்டுதான் புரியலை..! 

இதையெல்லாம் பார்த்துதான் பிரஸ் மக்கள்ஸ் கேள்வி மேல கேள்வி கேட்டாங்க.. செலவு பற்றி கேட்டதுமே, தயாரிப்பாளர்கிட்ட கேட்டுக்குங்கன்னு சொல்லிட்டாரு இயக்குநர். தயாரிப்பாளர் ஷண்முகப்பிரியா, இந்தப் படம் தயாரிச்சு முடிக்கிறதுக்குள்ள பிள்ளையே பெத்துட்டார்ன்னு நடிகர்ஷாம்ஸ் மேடைல சொன்னாரு. (நாட்டுக்கு ரொம்ப அவசியம் பாருங்க..!) 


நேத்தைக்கு மாதிரியே இன்னிக்கும் இந்தப் படத்தோட ஹீரோயின் கீர்த்தி வராதது பிரஸ்காரங்களுக்கு ரொம்ப பெரிய பிரச்சினையாயிருச்சு. ஏன் வரலை.. ஏன் வரலைன்னு கேட்டு குடாய்ஞ்சுட்டாங்க. பிளைட் டிக்கெட் கேட்டாங்க.. ஹோட்டல்ல ரூம் கேட்டாங்க. அந்த அளவுக்கு என்னால வசதி செய்ய முடியலை.. அதுனால நான் வரலைன்னு ஹீரோயின் சொல்லிட்டாங்க என்றார் தயாரிப்பாளர்..!

எனக்கும் இங்க ஒண்ணுதான் புரியலை..! ஷூட்டிங் தொடங்கும்போது ஹீரோயினோட சொந்த ஊர்ல இருந்து வர்றதுக்கும், போறதுக்கும் அவங்க கேக்குறதையெல்லாம் செஞ்சு கொடுக்குறீங்க..! அவங்களை ஹோட்டல்லதான் தங்க வைக்க முடியும்..! அதையும் செய்றாங்க.. இப்போ கடைசீல பிரஸ் மீட்டப்போ மட்டும் அதையே அவங்க கேட்டா.. அது தப்புன்னு ஏன் சொல்றாங்கன்னுதான் எனக்குப் புரியலை..!  இதுல ஹீரோயின் மேலேயே பழி வேற.. படம் முடிஞ்சிருச்சுல்ல.. இனிமே அவங்களுக்கு நாம தேவையில்லை.. படத்துவக்கத்துல வந்து சான்ஸ் கொடுங்கன்னு கெஞ்சுறாங்க.. ஆனா படம் முடியும்போது பாருங்க.. இப்படி வந்து படுத்துறாங்கன்னும் சொன்னாங்க தயாரிப்பாளர்..!

அப்போ ஹீரோயினே காசு போட்டு பிளைட்ல வந்து ப்ரீயா பேசிக் கொடுத்திட்டு யார் வீட்லயாவது தங்கிட்டுப் போகணும்னு நினைக்கிறாங்களா..? தயாரிப்பாளர் பிளைட் டிக்கெட்டுக்கு பதிலா ஹீரோயின்கிட்ட என்ன சொன்னாருன்னு மேடைல சொல்லலை. அதுனால ஹீரோயின் தரப்பு வாதம் என்னன்னே தெரியாம நாம பேசக் கூடாதுல்லையா..? ஆனாலும் மீடியா உலகம் சரண்யா மோகனுக்கு அடுத்து உயிர்மொழி ஹீரோயின்னு டைட்டில் போட்டு நாளைக்குக் கதற வைக்கப் போறாங்க..!

நேத்து கோலாகலம் படத்தின் இசை வெளியீட்டு விழால ஹீரோயின் சரண்யா மோகன் கேரளால இருந்து வரலை.. பிளைட் டிக்கெட் போட்டுக் கொடுத்தும், ஹோட்டல்ல ரூம் ரெடின்னு சொல்லியும் அவங்க வரலைன்னு தயாரிப்பாளர் சொன்னாரு. ஒருவேளை நேத்திக்கு அந்தப் பொண்ணுக்கு வேற படத்தோட ஷூட்டிங் இருந்தா என்ன பண்ணியிருப்பாங்க..? அவங்க தரப்பு நியாயத்தையும் கேக்க வேணாமா..? நேத்துல இருந்து இந்த மீடியாக்காரங்க வறுத்து எடுக்குறாங்கப்பா..! 

சரி விடுங்க.. திரும்பவும் இந்த பதிவின் டைட்டில் மேட்டருக்கே வருவோம்..! ஆல்பா, பீட்டா, காமா, ஒமேகா, டெல்டா - இதெல்லாம் ஸ்கூல்ல படிக்கும்போது வாசிச்சது.. உலகத்தில் இருக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை வைத்து இந்த ஐந்து பேருக்குள்தான் ஒருவரை கூப்பிட முடியும்னு சொல்றாங்க..! இதுவே வித்தியாசமாத்தான் இருக்கு..! படத்துல காதல் இருக்கு. ஆனா வழக்கமான காதலா இல்லைன்னும் சொன்னாரு இயக்குநர்..! இந்தப் படம் பார்த்த்துக்கப்புறமா ஒவ்வொருத்தரும் தன்னோட குணாதிசயம் எது..? தான் என்ன டைப்பு ஆளுன்னு தனக்குத்தானே கேட்டுக்குவாங்கன்னு அடிச்சுச் சொல்றாரு இயக்குநர்..!

ஸோ.. ஒரு அரிய வாய்ப்பு, மாற்று சினிமா தேடினவங்களுக்கு ஒரு லட்டு காத்துக்கிட்டிருக்கு..! படம் மிக விரைவில் வெளியாகப் போகுது..! படத்தை அவசியம் பாத்திட்டு பேசுங்க மக்களே..!


4 comments:

செங்கோவி said...

அண்ணே, இது பதிவா? விளம்பரமா?

உண்மைத்தமிழன் said...

[[[செங்கோவி said...

அண்ணே, இது பதிவா? விளம்பரமா?]]]

சத்தியமா பதிவுதாண்ணே..!

திருவாரூர் சரவணா said...

நடிகர், நடிகைகளுக்கும் முகத்தோற்றம் போலவே நேரமும் மிக முக்கிய முதலீடுதான். நடிகர்கள் பாடு கொஞ்சம் பரவாயில்லை. நேரம் ஒதுக்க ஓரளவு வாய்ப்பிருக்கலாம். ஆனால் நடிகைகள் கிடைக்கும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களில் சம்பாதித்தால்தான் உண்டு. நீங்கள் சொன்னது போல் வேறு படப்பிடிப்பில் கால்ஷீட் கொடுத்திருந்தால் நிலைமை தர்ம சங்கடம்தான். ஒரு படப்பிடிப்புக்கு சகல ஏற்பாடுகளும் செய்து காத்திருக்கும்போது நடிகை பாடல் வெளியீட்டுவிழாவுக்கு வருவது சாத்தியமில்லாத ஒன்று.

இதற்கு தயாரிப்பாளர்கள்தான் முடிவு செய்து படப்பிடிப்பு கால்ஷீட் போலவே பாடல், விளம்பர விழாவுக்கும் நேரம் ஒதுக்கி ஒப்பந்தம் போட வேண்டும். இவர்கள் இஷ்டத்துக்கு திடீர் என்று நாலு நாளைக்கு முன்னால் பாடல் வெளியீட்டு விழா,டீசர் ஓட்டுறோம்னு சொன்னால் வேலைக்காகாது. இப்போது இந்த பிரச்சனையிலும் முன்னே நிற்பது சரியான திட்டமிடல்தான்.

நேரத்தை முக்கிய மூலதனமாக கொண்டு தொழில் செய்பவர்களுக்கு இந்த சிரமம் புரியும்.

உண்மைத்தமிழன் said...

திருவாரூர் ஸார்..

நீங்கள் சொல்வதும் உண்மைதான்..! என்னதான் பக்காவான அக்ரிமெண்ட் போட்டாலும் வேறொரு படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு வருவது முடியாத காரியம்.. அந்தத் தயாரிப்பாளரும் இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டுமே..! பேசித் தீர்க்க வேண்டிய விஷயம்.. நடிகைகள் மீடியாக்களை அணுகுவதே இல்லை என்பதால் அவர்கள் மீதுதான் பழி விழுகிறது..!