17-10-2013
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தப் படத்துக்கு ஏன் இத்தனை நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள்ன்னு புரியலை..! சற்குணத்தின் மீது விமர்சகர்களுக்கு கோபம் இருக்க வாய்ப்பே இல்லை. களவாணி, வாகை சூட வா என்று, இரண்டு நல்ல படங்களைத்தான் கொடுத்திருக்கிறார். தனுஷ் மீதும் வருத்தமிருக்க வாய்ப்பில்லை.. அப்புறமும் ஏன்..? முதல் பாதி மட்டுமே இதில் கொஞ்சம் அசுவாரசியமாக இருக்கிறது.. இரண்டாம் பகுதியில் காமெடிக்கு பஞ்சமில்லை..! அப்படியிருந்தும் மவுத் டாக்கில் இந்தப் படத்தைப் பற்றி நெகட்டிவ்வாகவே சொல்லிச் சொல்லி படத்தின் ஓட்டத்தைக் குறைத்திருக்கிறார்கள் பல புண்ணியவான்கள்..! இதனால் யாருக்கு என்ன லாபம்ன்னு தெரியலை..!
1993-ல் ஜெயராம், ஷோபனா நடிப்பில் வெளிவந்த 'மேலப்பரம்பில் யான் வீடு' என்ற மலையாளப் படத்தின் ரீமேக்குதான் இது..! இந்தப் படத்தின் ரீல் அந்து விழுகும் அளவுக்கு மாதந்தோறும் இதனை ஓட்டோ ஓட்டு என்று ஓட்டியிருக்கிறது சூர்யா டிவி.. நான் கடந்த 7 ஆண்டுகளாக சூர்யா டிவியில் இதனை பார்த்திருக்கிறேன்.. இப்போது போய் இதனை ரீமேக் செய்ய வேண்டும் என்று நண்பர் சற்குணத்திற்கு தோன்றியது ஏன் என்றுதான் எனக்குப் புரியவில்லை. அந்த அளவுக்கா கதைப் பஞ்சமாகிவிட்டது தமிழ்ச் சினிமாவில்..!?
வெறும் 40 லட்சம் ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்த மலையாளப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி 2 கோடிக்கும் மேலாக கேரளாவிலேயே வசூலைக் குவித்ததாம்.. ரீமேக் உரிமையாகவே 25 லட்சம் தயாரிப்பாளருக்கு கிடைத்ததாகச் சொல்கிறார்கள்..! அஸ்ஸாமிய மொழியிலேயே இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறதாம்.. படத்தின் இயக்குநர் ராஜசேனன் தனது பல திரைப்படங்களில் தமிழ்நாட்டையும் இணைத்துதான் கதை பண்ணியிருக்கிறாராம்..! இதிலும் அப்படியே..!
ஜெயராம் கேரளாவில் இருந்து பொள்ளாச்சிக்கு வந்து ஒரு தனியார் பார்சல் நிறுவனத்தில் வேலை செய்கிறார்..! அதே ஊரில் இருக்கும் செல்வாக்கான வினு சக்கரவர்த்தியின் வீட்டிற்கு பார்சலை கொடுக்கப் போகும்போது அவருடைய மகள் ஷோபானாவின் அறிமுகம் கிடைத்து.. அது காதலாகி.. கசிந்துருகி.. விஷயம் லீக்காகும்போது.. வழக்கமான தமிழ்ச் சினிமா வில்லன் மாதிரி வினு சக்கரவர்த்தியின் மைத்துனன் கரிகாலன் இதை எதிர்க்கிறார். அவரது எதிர்ப்பிற்காக அவசரம், அவசரமாக ஷோபனாவைத் திருமணம் செய்து கொள்கிறார் ஜெயராம்.
இவருடைய வீட்டில் ஏற்கெனவே 2 அண்ணன்கள் திருமணமாகாமல் கன்னியாகவே காலம் கழிப்பதால் இப்போதைக்கு தான் திருமணம் செய்தது வெளியில் தெரிந்தால் பிரச்சினையாகுமே என்று நினைத்து.. ஷோபனாவை வீட்டு வேலைக்காரியாக தன் வீட்டில் நுழைக்கிறார்..!
ஷோபனாவின் அழகில் மயங்கும் ஜெயராமின் 2 அண்ணன்களும் ஷோபனாவுக்கு காதல் வலை வீச.. இதனையும் சமாளித்து.. ஜெயராமையும் சமாளித்து.. கடைசியாக கர்ப்பத்தின் காரணமாய் ஷோபனா மயக்கமாகும்போதுதான் கிளைமாக்ஸ்.. கர்ப்பத்துக்கு யார் காரணம் என்று அம்மாவும், அப்பாவும் 2 அண்ணன்களை மட்டுமே விரட்டிக் கொண்டிருக்க.. கடைசியில் ஷோபனாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்புகிறார்கள்..
ஷோபனாவின் அண்ணன் என்று சொல்லி கரிகாலனின் கையாள் ஒருத்தன் ஷோபனாவை அழைத்துச் செல்ல, வழியில் கரிகாலன் ஷோபனாவை கடத்துகிறான். ஜெயராம் விஷயம் தெரிந்து ஓடி வந்து சண்டையிட்டு ஷோபனாவை காப்பாற்றி நடந்த கதையைச் சொல்லித் தங்களை ஆசீர்வதிக்கக் கேட்கிறார். இந்த நேரத்தில் வினு சக்கரவர்த்தி வந்து தனக்கு இருக்கும் சொத்துக் கணக்கையெல்லாம் சொல்லிவிட்டு "இந்த வீட்ல வேலைக்காரியா என் பொண்ணு இருக்க வேணாம்" என்று சொல்லி அழைக்கிறார். “ அவ வயித்துல வளர்ற எங்க வீட்டு வாரிசைக் கொடுத்திட்டு, அப்புறமா உங்க மகளைக் கூப்பிட்டுட்டு போங்க..” என்று ஜெயராமின் பெற்றோர் சொல்ல.. எல்லாம் சுபமாகிறது..!
அக்மார்க் 1990-களின் கதையாடல்.. சுவையான திரைக்கதை.. சிறந்த நடிகர்களின் நகைச்சுவையில் இந்தப் படம் ஓடியதில் ஒன்றும் ஆச்சரியமில்லை..!
ஜெயராம் கேரக்டரில் தனுஷ். ஷோபனா கேரக்டரில் நஸ்ரியா. மூத்த அண்ணன் ஜெகதி ஸ்ரீகுமாரின் கேரக்டரில் ஸ்ரீமன்.. இரண்டாவது அண்ணன் விஜயராகவன் கேரக்டரில் சத்யன்.. முன்னதில் வேலைக்கு வந்த இடத்தில் காதல்.. பின்னதில் ஊர்த் திருவிழாவுக்கு வந்த இடத்தில் வேலையே காதல்தான்..!
இந்தத் தமிழ்ப் படத்தின் முதற்பாதியில் காதலுக்கான காரணத்தைத்தான் அழுத்தமாக பதிவு செய்யவில்லை இயக்குநர். வேலை வெட்டியே இல்லாம, "இன்னிக்கு அவளை பேச வைக்கிறேன்.." "லவ் பண்ண வைக்கிறேன்.." "சிரிக்க வைக்கிறேன்..." என்றெல்லாம் தனுஷ் சொல்வதெல்லாம் ஏதோ மூன்றாம்தர படங்களை பார்ப்பதுபோலாகிவிட்டது.. நஸ்ரியா முதலில் மறுத்து பின் ஏற்க வைக்கும் அளவுக்கான சினிமாத்தனமான காட்சிகளை சற்குணத்தின் படத்தில் பார்த்ததும் மக்கள் பதறிவிட்டார்கள் என்று நினைக்கிறேன்..!
திரைக்கதையில்தான் அழுத்தம் இல்லையே தவிர.. தனுஷ் எப்போதும்போலவே இயல்பாகவே நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பிற்குப் பஞ்சமில்லைதான்..! கமல்ஹாசனுக்கு பின்பு சமாளிப்புத் திறனில் தனது உடல் மொழியை நன்கு பயன்படுத்துவது தனுஷ்தான்..! ஸ்கூட்டரில் பின்புறம் அமர்ந்தபடியே சூரியின் நக்கலைப் பார்த்து முறைக்கும் அந்த ஒரு காட்சியே அண்ணனின் நடிப்புத் திறனுக்கு சான்று..!
நஸ்ரியா இந்த ஒரு படத்தின் மூலமாகவே 10 படங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய பப்ளிசிட்டியை பெற்றுவிட்டார் என்றாலும் அந்தத் தொப்புள் காட்சியை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தும் அது கட் செய்யப்பட்டதும்கூட படத்தின் எதிர்ப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்..!
ஆனாலும் பொண்ணு மேல ரசிகர்களுக்கு ஒரு கண்ணு விழுந்திருக்கும். நேரம் படம் போலவே.. நஸ்ரியா வரும் காட்சிகளிலெல்லாம் ஜில்லென்று இருக்கிறது.. அந்த முகம் காட்டும் பல்வேறு எக்ஸிபிரஷன்கள் நிச்சயம் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்றே நினைக்கிறேன்..!
சூரி இந்தப் படத்தில் கொஞ்சம் அடக்கியே வாசித்திருக்கிறார்.. இடையிடையே படம் பார்க்கும் ரசிகர்களிடத்திலும் பேசுகிறார். இந்த ஸ்டைலும் நல்லாத்தான் இருக்கு.. சிங்கம்புலியின் பல்லைப் பிடுங்கப் போய்.. அது நஸ்ரியாவை கண்டுபிடிக்கும் அளவுக்கு போவது.. இயக்குநரின் திரைக்கதை யுக்தி.. வேற என்னதான் செய்யறது..? சினிமால முடிச்சை அவிழ்க்குறது எவ்ளோ கஷ்டம்ன்னு கதை டிஸ்கஷன்ல் உக்காந்தாதான் தெரியும்..!
முற்பாதியில் திரைக்கதையில் தொய்வு விழுந்து ரசிக்க முடியாமல் இருந்தபோதும் சற்குணம் வழக்கமான தனது இயக்குனர் திறமையை காட்டாமல் இல்லை..! நஸ்ரியாவின் வீட்டு வாசலில் நின்று பக்திப் பாடல்களை பாடுவது.. முகமூடி போட்டுக் கொண்டு நடனமாடி காட்டுவது.. அவரது வீட்டுக்குள் சென்று அவரது நம்பரை கேட்டு வாங்கி வருவது.. பனை மரத்தில் ஏறி அமர்ந்து இன்னொரு மரத்திற்குத் தாவுவது.. நஸ்ரியாவின் கோபத்தை தணிப்பதற்கு அப்பனும் சேர்ந்து பொருட்களை உடைப்பது.. இப்படியே சற்குணம் தனது இயக்கத்தை நம்பியே முதற்பாதியை எடுத்திருக்கிறார். ஏனெனில் இது மூலக் கதையில் இல்லாத ஒரு புதுக் கதை..!
ஆனால் இரண்டாம் பகுதி முழுவதுமே ஒரிஜினல் மலையாளப் படத்தின் திரைக்கதை என்பதால் இங்கேதான் காமெடி களைகட்டியிருக்கிறது..! நஸ்ரியாவை பார்த்தவுடன் இரண்டு அண்ணன்களும் நினைக்கும் நினைப்புகளும்.. அதற்காக அவர்கள் எடுக்கும் மெனக்கெடல்களும்.. உம்மணாமூஞ்சிகளைக்கூட சிரிக்க வைத்துவிடும்..! ஸ்ரீமன் தன் தொப்பையைக் குறைத்துக் காட்ட வயிற்றை எம்பிக் காட்ட.. பட்டன் தெறித்து விழும் காட்சி.. சத்யன் கோவிலில் லவ் லெட்டரை நீட்ட.. அதை வைத்து தீயைப் பற்ற வைப்பது.. பெண் பார்க்கும் இடத்தில் உறவு முறையை மாற்றிச் சொல்லி கலகலப்பாக்குவது என்று நன்றாகத்தான் போனது..!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த 'இனிக்க இனிக்க' பாடலில் அந்தக் காட்சி இல்லாமல் போனதில் ஒரு வருத்தம்தான். அது இருந்திருந்தால்தான் என்ன..? ஒண்ணும் குடி முழுகிப் போயிருக்காது..! தேவையில்லாமல் ஒரு பிரச்சினையைக் கிளப்பி தனக்குத்தானே சூனியம் வைத்துக் கொண்டுவிட்டார் நஸ்ரியா.. ஒரு அறைக்குள் பேசி முடித்திருக்க வேண்டிய மேட்டரை இப்படி வெளியுலகத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டாம்..!
சரி விடுங்கோ.. முதல் பாதிதான் கொஞ்சம் இழுவை.. இரண்டாம் பகுதியில் படம் ஜிவ்வென்று சிரிப்போடு போகிறது..!
அவசியம் பாருங்க மக்கள்ஸ்..!
|
Tweet |
12 comments:
25 லட்சம் கொடுத்து இந்த கதையை வாங்கினார்களாமா என்ன கொடும சரவணா..தமிழ் இயக்குனர்களிடம் அவ்வளவுக்கு கதை பஞ்சமா?
ஆனால் மேல்பரம்பில் ஆண்வீடு இதைவிட நல்ல சுவாரசியமான திரைக்கதை. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரித்துக்கொண்டே பார்க்கலாம்..
வீட்டில் தனியொருவராக வேலை செய்ய முடியாதென்று எல்லோருக்கு கஞ்சி ஊத்தும் காட்சி, புட்டுச்சுட வைத்திருந்த அரிசி மாவை எடுத்து ஷோபனா கோலம் போடும் காட்சி,அதற்கு பின் ஜகதியை
மாட்டிவிடும் காட்சி, மாட்டு கொட்டகையில் ஜெயராம் படுத்துறங்கும் காட்சி, ஷோபனாவை காதலிக்க இரண்டு அண்ணங்களும் மாமாவும் எடுக்கும் பிரயத்தணங்கள். என ஏராளமான சுவாரசியமான காட்சிகள். ஆனால் நய்யாண்டியில் அதிகம் மொக்கைதான்!
அண்ணன் உத அவர்களுக்கு,
அவ்வளவு நல்லா இருக்கா, இது தெரியாமல் முதல் பாதியிலேயே வெளி வந்து விட்டேன்.
மரண மொக்கை அண்ணே....யுஸ்ல ஒரே ஷோவுல இந்த காவியத்தை துக்கிடாங்க. இது வரைக்கும் இது மாதிரி நடந்ததே இல்ல. முத ஷோ போயிருந்தேன், 30 பேர் வரைக்கும் இருந்தாங்க, இடைவேளையில 20 பேர் எஸ்கேப், படம் முடியும் போதும் வெறும் 4 பேரு தான் இருந்தோம். ரொம்ப கடியான படம் அண்ணே.
விளம்பர படுத்தின மிச்ச ரெண்டு ஷோவுக்கு "வணக்கம் சென்னை" போட்டாங்க.
Enakennamo.. neenga Dhanushoda classmateonu oru doubtu...
[[[Riyas said...
25 லட்சம் கொடுத்து இந்த கதையை வாங்கினார்களாமா என்ன கொடும சரவணா..தமிழ் இயக்குனர்களிடம் அவ்வளவுக்கு கதை பஞ்சமா?]]]
அது இந்தத் தமிழுக்காக இல்லை.. மொத்தமாக வேற்று மொழிகளுக்காக என்று நினைக்கிறேன்..!
[[[ஆனால் மேல்பரம்பில் ஆண்வீடு இதைவிட நல்ல சுவாரசியமான திரைக்கதை. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை சிரித்துக்கொண்டே பார்க்கலாம்..
வீட்டில் தனியொருவராக வேலை செய்ய முடியாதென்று எல்லோருக்கு கஞ்சி ஊத்தும் காட்சி, புட்டுச்சுட வைத்திருந்த அரிசி மாவை எடுத்து ஷோபனா கோலம் போடும் காட்சி, அதற்கு பின் ஜகதியை
மாட்டிவிடும் காட்சி, மாட்டு கொட்டகையில் ஜெயராம் படுத்துறங்கும் காட்சி, ஷோபனாவை காதலிக்க இரண்டு அண்ணங்களும் மாமாவும் எடுக்கும் பிரயத்தணங்கள். என ஏராளமான சுவாரசியமான காட்சிகள். ஆனால் நய்யாண்டியில் அதிகம் மொக்கைதான்!]]]
உண்மைதான்.. எடுத்தவரைக்கும் கொஞ்சம் காமெடி வந்திருக்கிறது.. அவ்ளோதான்..! மலையாளத்துடன் போட்டி போட முடியவில்லை..!
[[[Jamal Mohd said...
அண்ணன் உத அவர்களுக்கு,
அவ்வளவு நல்லா இருக்கா, இது தெரியாமல் முதல் பாதியிலேயே வெளி வந்து விட்டேன்.]]]
ஐயையோ.. மிஸ் பண்ணிட்டீங்களே.. இன்னொரு முறை வாய்ப்பு இருந்தால் இரண்டாம் பகுதியை மட்டும் பாருங்கள்.. நிச்சயமாகப் பிடிக்கும்..!
[[[ராஜ் said...
மரண மொக்கை அண்ணே....யுஸ்ல ஒரே ஷோவுல இந்த காவியத்தை துக்கிடாங்க. இது வரைக்கும் இது மாதிரி நடந்ததே இல்ல. முத ஷோ போயிருந்தேன், 30 பேர் வரைக்கும் இருந்தாங்க, இடைவேளையில 20 பேர் எஸ்கேப், படம் முடியும் போதும் வெறும் 4 பேருதான் இருந்தோம். ரொம்ப கடியான படம் அண்ணே.
விளம்பர படுத்தின மிச்ச ரெண்டு ஷோவுக்கு "வணக்கம் சென்னை" போட்டாங்க.]]]
வணக்கம் சென்னை இதைவிட சுமாராச்சே.. அதுக்கு இந்தப் படமே பெட்டர்..!
[[[Prasann bharathwaj s said...
Enakennamo.. neenga Dhanushoda classmateonu oru doubtu...]]]
ஹா.. ஹா.. எதுக்கு இந்த கோர்த்துவிடுற வேலை..? எனக்குப் படம் பிடிச்சிருக்கு.. அவ்ளோதான்..!
இதே கதையில் பாண்டியராஜன் நடித்து ‘வள்ளி வர போறா’ என்று ஒரு படம் வந்திருக்கிறது
[[[vettiblogger said...
இதே கதையில் பாண்டியராஜன் நடித்து ‘வள்ளி வர போறா’ என்று ஒரு படம் வந்திருக்கிறது.]]]
ஓகேண்ணே.. எல்லாரும் சொன்னாங்க. நான் இன்னும் அந்தப் படத்தைப் பார்க்கலை..! எங்க கிடைக்கும்..?
அப்படியா அண்ணாச்சி, பார்க்கலாமா???
இங்க இந்த படமும், வணக்கம் சென்னை படமும் ஸ்கிரீன் ஷேரிங் பேசிஸில் ஓடுது.... தீபாவளி வரை வேற படம் இல்லைன்னு சொல்லிட்டான், தங்கிட்டு படத்திற்உ போகலை
அன்புள்ள அண்ணா,மேலபரம்பில் ஆன் வீடு படம் ஏற்கனவே தமிழில் ரீமேக் ஆகிவிட்டது.படம் பெயர் வள்ளி வரப்போறா. பாண்டியராஜன் நடித்தது
Post a Comment