சுட்டகதை - சினிமா விமர்சனம்

31-10-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

படத்தை நேற்றுதான் பார்த்தேன் என்பதால் இன்றைக்கு சற்று தாமதமாக விமர்சனம். பதிவு செய்து வைத்தாக வேண்டிய கட்டாயம் இருப்பதால் எழுதி வைக்கிறேன்..!

படம் முடிந்து 6 மாதங்களாகியும் இதோ வருகிறது.. இதோ வருகிறது என்று சொல்லிச் சொல்லியே களைப்படையச் செய்துவிட்டார்கள்..! தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர் முற்றிலும் புதுமுகமாக சினிமாவில் புதுமை படைக்க விரும்புகிறேன் என்று சொல்லியே அடுத்தடுத்து படங்களுக்கு பூஜை போட்டு தமிழ்த் திரையுலகத்தை திகைக்க வைத்தார்..! முதல் படமான 'நளனும், தமயந்தி'யும் தயாராகி 1 வருடத்திற்கு மேலாகியும் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதற்கு பின்பு பூஜை போட்டு துவங்கிய சுட்டகதைதான் லிப்ரா புரொடெக்சன்ஸின் முதல் படமாக திரைக்கு வந்திருக்கிறது..!

படம் மொத்தமே 1 மணி 50 நிமிடங்கள்தான்..! வெறும் 19 பேர்தான் வந்திருந்தார்கள்.. அதிலும் இடைவேளைக்கு பின்பு 10 பேர்தான் இருந்தார்கள் உதயம் காம்ப்ளக்ஸ் சூரியனில்..! படத்தின் முடிவு ஏற்கெனவே தெரிந்ததுதான் என்றாலும் படத்தின் தயாரிப்பாளருக்காகவும், இயக்குநருக்காகவும் பார்த்தே தீர வேண்டிய படமாகிவிட்டது..!


கோரமலை என்னும் மலைப் பிரதேச கிராமத்தில் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கான்ஸ்டபிள் வேலைக்கு புதிதாக வந்து சேர்கிறார்கள் பாலாஜியும், வெங்கியும்.  அந்த ஸ்டேஷனே பைத்தியக்காரத்தனமான போலீஸ் ஸ்டேஷனாக இருக்கிறது.. எப்போதும் தூங்கி வழியும் இன்ஸ்பெக்டர் நாசருடன்.. வேலையே பார்க்க வேண்டாம் என்ற மனநிலையில் இருக்கும் காவலர்களை வைத்துக் கொண்டு படுஜாலியாக இருக்கிறார்கள்..! இதில் பாலாஜிக்கு கை அரித்தால் அவ்வப்போது திருடும் பழக்கம் உண்டு.. வெங்கியின் வலது காது சுத்தமாக அவுட்டாம்..! ஆனாலும் போலீஸ் வேலை கிடைத்து வந்துவிட்டார்..! 

அதே மலைப்பிரதேசத்தில் இருக்கும் தொங்கபுறா என்னும் ஆதிவாசி மக்கள் கூட்டத்தின் தலைவர் எம்.எஸ்.பாஸ்கர். அவரது மகள் ஹீரோயின் லட்சுமி பிரியா.. திருடர்களான குஞ்சானி சாதிக்கார இளைஞர்களிடத்தில் சிக்குகிறார்கள் பாலாஜியும், வெங்கியும். அந்த நேரத்தில் அவர்களை காப்பாற்றுகிறார்கள் பாஸ்கரும், அவரது மகளும். பார்த்தவுடன் காதலாகி இருவருமே ஹீரோயினை வெட்டியாக காதலிக்கிறார்கள்..!

அதே ஊரில் வசிக்கும் ஜெயபிரகாஷ் காம உணர்வை அதிகப்படுத்தும் வகையிலான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்.. இவரிடத்தில் வந்து மருந்து வாங்கிப் போகும் ஜமீன்தார் சிவாஜி. காட்டுக்குள் வேட்டையாடிக் கொண்டிருக்கும் எம்.எஸ்.பாஸ்கரை தவறிப் போய் சுட்டுக் கொலை செய்கிறார் சிவாஜி.. வெட்டி இன்ஸ்பெக்டர் நாசர் தலைமையிலான டீம் இதனை இன்வெஸ்டிகேஷன் செய்யத் துவங்குகிறது..!

போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் கிடைக்கும் துப்பாக்கிக் குண்டை வைத்து சுட்டது ஜமீன்தார் சிவாஜிதான் என்பதைக் கண்டுபிடிக்கிறார் நாசர்.. சிவாஜியின் மனைவியை நேரில் அழைத்து பத்து லட்சம் பேரம் பேசுகிறார். அதே நேரம் காட்டுக்குள் குடிபோதையில் வந்து கொண்டிருந்த பாலாஜி, தான் லவட்டிக் கொண்டு வந்திருந்த இன்ஸ்பெக்டர் நாசரின் கைத்துப்பாக்கியால் ஜமீன்தாரை தற்செயலாக சுட்டுக் கொன்றுவிடுகிறார். முகம் சிதைந்த நிலையில் இருக்கும் அவர் யாரென்று தெரியாமல் குழம்புகிறார்கள்.

பொணத்தை புதைக்கலாமா? எரிக்கலாமா? என்றெல்லாம் சர்ச்சைகள் செய்து முடிவு செய்யாத நிலையில் அவரை சோதனையிடும்போது வீரிய மாத்திரைகள் கிடைக்கிறது. அப்போ இது ஜெயபிரகாஷ்தான் என்று முடிவு செய்து அவரைத் தூக்கி வருகிறார்கள். அதே நேரம் தனது தந்தையை கொலை செய்தவனை கண்டுபிடிக்க வெறியோடு வரும் ஹீரோயினும் இவர்களை பார்த்து பின் தொடர்கிறாள்..! வழியில் கரடியொன்று துரத்திவர தப்பி பிழைத்து ஜெயபிரகாஷ் வீட்டிற்கே வந்துவிடுகிறார்கள். கொலை செய்யப்பட்டது ஜமீன்தார்தான் என்று ஜெயபிரகாஷ் சொல்ல… அந்த நேரம் பார்த்து நாசர் வயர்லெஸ்ஸில் நடந்த கதையையெல்லாம் சொல்லிவிட்டு ஜமீன்தாரை அப்படியே அலாக்காக தூக்கி வரும்படி சொல்கிறார்.. ஹீரோயின் ஜமீன்தாரின் உடலை கேட்க.. ஜெயபிரகாஷ் தனது ஆராய்ச்சிக்காக ஜமீன்தார் உடலை கேட்க.. நாசரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாலாஜியும், வெங்கியும் அல்லல்பட..  எப்படியோ படத்தை எடுத்து முடித்திருக்கிறார்கள்..!

இது போன்ற சின்ன பட்ஜெட்.. அதிகம் அறிந்திராத முகங்களை வைத்து படமெடுத்தால் அதற்கு மிக வலுவான கதை வேண்டும்.. இல்லாவிடில் மொக்கையில் ஒன்றாகிவிடும்.. இந்தப் படம் அந்த அளவுக்கு இல்லையென்றாலும் படத்தின் முதற்பாதியில் படம் எதை நோக்கிச் செல்கிறது என்றே தெரியவில்லை..! போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள் அநியாயத்திற்கு ஜவ்வு..! அதிலும் திருடர்களை துரத்தும் காட்சிகள் முழுவதும் வேஸ்ட்டு.. அந்த சண்டை காட்சியும், தொடர்ந்த சண்டை பயிற்சி காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இல்லை..! நாசரின் நடிப்பு அப்படியே மேடை நாடக நடிப்பு சிற்சில இடங்களில்.. கதையே இல்லையே.. அப்புறம் வேறெதை வைத்து ஒப்பேற்றுவது..?

திரைக்கதையும் சட்டு சட்டென்று காமிக்ஸ் புத்தகங்களுக்குள் போய்விட்டு வெளியே வர.. இதெல்லாம் செங்கல்பட்டை தாண்டியிருக்கும் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களுக்கு எப்படி புரியும்..? அவர்களுக்கு புரிந்திருந்தால் படம் அபார வெற்றி என்று வசூல் கணக்கையும் சொல்லி வெற்றி விழாவையும் நடத்தியிருக்கலாம்..! 

'மூடர் கூடம்' வரையிலான சில படங்களின் வெற்றிதான் இவர்களின் முதல் தயாரிப்பான 'நளனும் தமயந்தி'யையும் தூக்கி பரணில்போட்டுவிட்டு இந்தப் படத்தை முதலில் கொண்டு வர நினைக்க வைத்தது..! ஆனால் அவைகளில் இருந்த அழுத்தமான கதையும், நகைச்சுவை கலந்த இயக்கமும் இதில் இல்லாமல் போய்.. கடைசியில் படம் பார்ப்பதே காமிக்ஸ் போலாகிவிட்டது..!

எப்போதும் முன் வரிசை ரசிகர்களுக்கு படம் பிடித்தாலே போதும்.. அவர்களின் வரவேற்பை பார்த்தே பின்வரிசை, பால்கனி ரசிகர்கள் திரண்டு வருவார்கள். இடைவேளைக்கு பின்பு தியேட்டரில் இல்லாதவர்கள் முன்வரிசைக்கார ரசிகர்கள்தான்.. சில, பல இடங்களில் சிரிக்க வைத்தாலும் அதுவே மெளத் டாக் மூலமாக பரப்புரை செய்ய வைக்கப் போதுமானதாக இல்லை…

'எலே எலே' பாடல் காட்சியும், டாஸ்மாக் பாரில் ஆடும் பாடல் காட்சியும் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது..! இசையமைப்பாளருக்கு மட்டும் கொஞ்சம் பெயர் கிடைத்திருக்கிறது..! முக்கால்வாசி காட்சிகளை இருட்டிலேயே படம் பிடித்து மிரட்டியிருக்கிறார்கள்.. நம்மூரு தியேட்டர்கள் இருக்கிற லட்சணத்தில் இது போன்ற காட்சியமைப்புகள் ரசிகனை படத்தோட ஒன்றிவிட முடியாமல் செய்யும் என்பதை இனிமேலாவது புரிந்து கொள்ள வேண்டும்..!

பிணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று இருவரும் செய்கின்ற ஆராய்ச்சியில் இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் விதிமுறைகளையே தொடர்ச்சியாக 15 நிமிடங்களுக்கு பொது அறிவை புகட்டுவதுபோல சொல்கிறார்கள்.. எப்படி ரசிப்பது..? சினிமா என்பது விஷுவல் மீடியம்..! எவ்வளவு முக்கியமான விஷயமாக இருந்தாலும் அது ரசிகனின் மனதில் நிற்பதை போல காட்டுவதுதான் இயக்குநரின் திறமை.. இயக்குநர் சிபு அடுத்தடுத்த படங்களில் தனது திறமையைக் காட்டி ஜெயிக்க வாழ்த்துகிறேன்..!

முதலில் 'வேந்தர் மூவிஸ் ' வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லி.. பின்பு மறுத்து.. அதன் பின்பு தமிழ்த் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்துமே இந்தப் படத்தை பார்த்த பின்பும் வெளியிட மறுத்துவிட.. கடைசியாக சொந்தமாகவே வெளியிட்டு ஒரு புதிய அனுபவத்தை பெற்றிருக்கிறார் தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர். 

அவரது இந்த முயற்சியின் மூலம் கிடைத்திருக்கும் பாடத்தின் வழியாக.. 'நளனும் தமயந்தி'யும், 'கொலை நோக்குப் பார்வை' என்று தனது அடுத்தடுத்த படங்களை நல்லவிதமாக மார்க்கெட்டிங் செய்து.. எடுக்கவிருக்கும் புதிய படங்களையும் இப்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்றாற்போன்று எடுத்து திரையுலகில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..!

2 comments:

Nondavan said...

நல்ல வேளை, நான் தப்பிச்சேன்... ஒரு கனம், கோவையில் கேஜி சினிமாஸ்ல ஓடுவதை பார்த்து, போகலாம் என்று இருந்தேன்.. நேரமின்மை காரணமாக தப்பித்தேன் என்று இப்போ படிக்கும் போது சந்தோசமா இருக்கு :)

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நல்ல வேளை, நான் தப்பிச்சேன்... ஒரு கனம், கோவையில் கேஜி சினிமாஸ்ல ஓடுவதை பார்த்து, போகலாம் என்று இருந்தேன்.. நேரமின்மை காரணமா தப்பித்தேன் என்று இப்போ படிக்கும்போது சந்தோசமா இருக்கு :)]]]

பரவாயில்லை. இன்னொரு முறை வாய்ப்பிருந்தால் அவசியம் பாருங்கள்..! ஒருவேளை உங்களுக்குப் பிடித்தாலும் பிடிக்கலாம்..!