கசப்புடன் முடிந்த சினிமா நூற்றாண்டு விழா..! - 2

29-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முதல் பாகம்

22-09-2013 - தெலுங்கு திரைப்பட விழா

ஞாயிற்றுக்கிழமையாக இருந்தும் அன்றைக்குக் காலையில் நடந்த கன்னட திரைப்பட விழாவுக்கு போக முடியவில்லை.. செம டயர்டு.. கண் விழித்தபோதே 8 மணி ஆகியிருந்தது..!  பாஸ் வேறு கையில் இல்லை. இனிமேல் யாரையாவது தேடிப் போய் வாங்கினால்தான் போக முடியும் என்பதால் விட்டுவிட்டேன்.  மாலை தெலுங்கு நிகழ்ச்சிக்கான பாஸை படாதபாடுபட்டு வாங்கி பாய்ந்தோடினேன்..!

நான் அரங்கத்திற்குள் நுழைந்தபோது தரைத்தளம் ஹவுஸ்புல்.. காலரியில் பல இடங்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது.. முதல் நாள் துவக்க விழாவில் இருந்த கெடுபிடிகள் இன்றைக்கு இல்லை..! நடிகர் சாய்குமாரும், நடிகை ரோஜாவும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்.. 





இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன், கே.பாலசந்தர், ஆந்திர மந்திரி அருணா மற்றும் நடிகர்கள் பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், டாக்டர் ராஜசேகர், ஸ்ரீகாந்த், ராணா, டி,இராமாநாயுடு, கே.ராகவேந்திரராவ்... நடிகைகள் ஜெயசுதா, ஜீவிதா, வாணிஸ்ரீ, ஜெயப்பிரதா, ஸ்ரீதேவி, காஞ்சனா, அம்பிகா, ராதா, கார்த்திகா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


கொஞ்ச நேரத்தில் ஒய்யாரமாக ஒரு பெண்மணி அசத்தல் சேலையில் கம்பீரமாக நடந்து வந்து கொண்டிருந்தார். ரசிகர்களுக்கு முதலில்  யாரென்று தெரியவில்லை. பாலகிருஷ்ணா ஆர்வத்துடன் முன் வந்து கை குலுக்கி இறுக்கிய பின்பு கேமிராவின் குளோஸப்பில் முகம் தெரிந்தார் கண்ணழகி மாதவி. காலையில் நடந்த கன்னட திரையுலக நிகழ்ச்சிக்கே வந்திருந்தார் என்றார்கள்..  முதல் வரிசையில் அமர்ந்த மாதவியிடம் அடுத்தடுத்து தெலுங்கு திரையுலகமே கை குலுக்கி ஹாய் சொன்னது.. இதேபோல் வந்திருந்த இன்னொரு பிரபலம் விருமாண்டி அபிராமி.. அப்படியே அச்சு அசலாக விஸ்வரூபம் பூஜாகுமாருக்கு தங்கச்சி போலவே இருந்தார்..! 


ஜெயசுதா, ஜெயபிரதா, வாணிஸ்ரீ, அமைச்சர் அருணா ஆகியோர் மேடையேறி குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்கள். முதல் ஷோவே டிரம்ஸ் சிவமணியின் ஒன் மேன் ஷோ.. குச்சியை தரையில்கூட அடித்து ஒலியை உண்டாக்கினார்.. சாதாரண சூட்கேஸை வைத்தே ஒரு ரிதம் உண்டாக்கினார்.. ஒரு சிறிய மத்தளத்தை அடித்தபடியே கீழே இறங்கி வந்து முன் வரிசையில் இருந்த கமல்ஹாசனிடத்தில் வர.. இவர் ஒரு அடி அடிக்க.. கமல் ஒரு அடி அடிக்க.. இவர் இரண்டு அடி அடிக்க. கமலும் இரண்டடி அடிக்க.. இவர்களின் இசை ஜூகல்பந்தி பத்தடிவரையிலும் தொடர்ந்தது.. செமத்தியாக இருந்தது..! ஆனாலும் கொஞம்சம் நீளம் என்பதையும் சொல்லியாக வேண்டும்..! 


அடுத்து மேடையில் இருந்த ஸ்கிரீனில் தெலுங்கு திரையுலக வரலாறு துவங்கியது.. மெளனப் படம் காலத்தில் இருந்து இன்றைய காலம்வரையிலும் ஆங்காங்கே தொட்டுத் தொட்டு முடித்துவிட்டார்கள்..! தமிழிலும் புகழ் பெற்ற படங்களை காணாததுதான் ஒரு குறைதான்..! இது முடிந்ததும் அண்ணன் கமல்ஹாசன் அரங்கத்தில் இருந்து விடைபெற்றார்.. ஒவ்வொருவரின் பக்கத்திலும் போய் கைகளைக் குலுக்கி எதையோ சொல்லிவிட்டு எஸ்கேப்பானார்..!


அடுத்தது டான்ஸ்..! முந்தைய நாள் ஜெயலலிதா இருந்தபோது மேடையில் ஆடியவர்களின் டிரெஸ்சென்ஸ் ரொம்பவே சென்சார் செஞ்ச மாதிரி இருந்தது.. இன்னிக்கு அது மட்டும் நஹி.. புகழ் பெற்ற தெலுங்கு பாடல்களுக்கு குத்து குத்துன்னு குத்தாட்டம் போட்டுட்டு போனாங்க..! இதுக்கு நடுவுல நம்ம மச்சானை பார்த்தீங்களா..? செந்தூரப் பூவே பாடல்களுக்கும் டான்ஸ் ஆடுனாங்க..! நம்ம பாட்டை தெலுங்குல கேக்கவும் சந்தோஷமாத்தான் இருந்தது.. ஆக மொத்தம் பாடல் வரிகள் புரியவில்லையென்றாலும், ராகம்தான் நம்மை முதலில் ஈர்க்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை..! வாழ்க இசைஞானி..!


ஆந்திராவின் அமைச்சரம்மா அருணா மேடையேற தெலுங்கு திரையுலக சாதனையாளர்களுக்கு பரிசு வழங்கினார்கள்.. இதில் கே.பாலசந்தரும் விருது பெற்றார். செம கைதட்டல்.. சென்னைங்கிறதால தட்டிட்டாங்களோ..! 


அடுத்து ஜூகல்பந்தி ஆரம்பிச்சது.. வரிசையாக 11 பாடகர், பாடகிகள் தெலுங்கு பாடல்களை பாட ஆரம்பிச்சாங்க. இந்த இடத்துல தெலுங்கு ரசிகர்களைப் பத்தியும் சொல்லணும்.. ஒவ்வொரு பாட்டுக்கும் கைதட்டல்.. கூடவே சேர்ந்து பாடுறாங்க.. அத்தனை கூட்டமும் தலையை ஆட்டுது..! என்னவொரு ரசிப்புத் தன்மை.. நம்மளும்தான் இருக்கோமே..?! தமிழ்த்தாய் வாழ்த்தைகூட ஒரு பய வாயைத் தொறந்து பாட மாட்டேன்றான்..!


இந்த நேரத்துலதான் அந்த அனர்த்தம் நடந்துச்சு.. திடீர்ன்னு ஒருத்தர் மேடையேறி ஏகத்துக்கு கத்த ஆரம்பிச்சாரு.. சேம்பர் தலைவர் சி.கல்யாண் மேடையேறி அவருடன் மல்லுக் கட்டினார்.. பாடகரின் கையில் இருந்து மைக்கை வாங்கிய அந்த நபர் ஏதோ பேசப் போக.. ரொம்பச் சரியா மைக்கை ஆஃப் பண்ணிட்டாங்க.. மேடையில் இருந்த எஸ்.பி.பி.யும் தன் பங்குக்கு அவரிடம் பேச.. ம்ஹூம் முடியலை.. 


பாலகிருஷ்ணாவும், ராணாவும் பரபரப்பாக மேடையேறி வாக்குவாதம் செய்ய.. ஒரு வழியாக தரையிறக்கப்பட்டார் அவர்..! இந்தக் களேபரம் நடந்து கொண்டிருந்தபோது பக்கத்தில் எதுவுமே நடக்காததுபோல அந்த ஜூகல்பந்தியும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த்து என்பதுதான் சுவையான விஷயம்..! ஆனாலும் இந்த ஜூகல்பந்தியின் நேரம் மிக அதிகம்.. கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.. கடைசியாக எஸ்.பி.பி,யின் கம்பீர குரலில் ஒரு பாடல்.. அரங்கமே ஆனந்தக் கூத்தாடியது.. 



இது முடிய மீண்டும் அந்த நபர் மேடையேறி எதையோ பேச ஆரம்பித்தார்.. திரும்பவும் சர்ச்சைகள்.. சண்டைகள்.. இப்போது கீழேயிருந்து பெரும் கூட்டமே மேடையேறி அந்த நபரை கையைப் பிடித்திழுத்து வெளியே கொண்டு போனார்கள்..! யாரோ தெலுங்கு டைரக்டராம்.. விழாவில் மரியாதை இல்லை என்று கத்தியதாகச் சொன்னார்கள்..!


அடுத்து மீண்டும் டான்ஸ்.. இப்போது என்.டி.ராமராவ் மற்றும் கிருஷ்ணா, நாகேஸ்வரராவின் படங்கள் காட்சிகளை திரையில் காட்டிவிட்டு அதைத் தொடர்ந்து அவர்களுடைய படங்களின் பாடல்களுக்கு ஆடல் தொடர்ந்தது..! இதுக்கு நடுவுல இந்த ஆந்திர அமைச்சர் அருணாவின் பொறுமையைப் பத்தி சொல்லியாகணும்.. இது மாதிரியான டான்ஸ்களுக்கு நடுவுல 4 முறை அருணா மேடையேறி விருதுகளை பொறுமையா கொடுத்தார்.. 


கே.பாலசந்தர், கோட்டா சீனிவாசராவ், பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராஜசேகர், அனுமந்தராவ், பிரம்மானந்தம், பரிச்சூரி பிரதர்ஸ், மாதவி,  ஜெயபிரதா, ஜெயசுதா, வாணிஸ்ரீ, ராஜஸ்ரீ, தேவிஸ்ரீபிரசாத், ராகவேந்திரராவ், டி.ராமாநாயுடு.. கொல்லப்புடி சீனிவாசராவ்.. காஞ்சனா.. குட்டி பத்மினி.. என்று பட்டியல் நீளமானது..! மாதவி விருது வாங்கியவுடனேயே கிளம்பிவிட்டார்..! மற்றவர்களும் வயதாகிவிட்டதால் அப்படியே போய்க் கொண்டேயிருக்க.. தரைத்தளம் இதற்குப் பிறகு கோயம்பேடு பஸ்ஸ்டாண்ட் மாதிரி இருந்தது..!


இதுக்கப்புறமும் கொஞ்சம் பேசிட்டுத்தான் போகணும்னு மினிஸ்டர் அருணாகிட்ட தெரியாம சொல்லிவிட... அடுத்த கால்மணி நேரத்துக்கு மனுஷி பொங்கிட்டுத்தான் போனாங்க. ஆனா எவன் கேட்டான்..? முன் வரிசை  பிரமுகர்களுக்கு சிற்றுண்டி வந்து கொண்டேயிருக்க.. சிலர் உட்கார்ந்து சாப்பிட.. பலரும் நின்று கொண்டே சாப்பிட்டபடியே தங்களுக்குள் பேசிக் கொண்டேயிருக்க.. யார்.. என்ன பேசுறாங்கன்னே தெரியாத அளவுக்கு இருந்தது தரைத்தளம்..!

ஒரு வழியா அந்தம்மா தன் பேச்சை முடிச்சுட்டுப் போன பின்னாடி இறந்து போன தெலுங்கு கலைஞர்களை ஒட்டு மொத்தமாக வீடியோவில் காட்டினார்கள்.. டச்சிங்காக இருந்த்து.. மீண்டும் ஜூகல்பந்தி.. மீண்டும் டான்ஸ்.. என்று தெலுங்கு மேடை ஆடிக் கொண்டிருக்க.. கீழே தரைத்தளத்தில் அவரவர் அவரவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருந்தார்கள்.. ஜூகல்பந்தி நடக்கும்போது மட்டும் கூடவே சேர்ந்து பாடிக் கொண்டிருந்தார்கள்..! 


வந்திருந்தவர்களில் பாலகிருஷ்ணாவுக்கு மட்டுமே மேடையில் பேசும் வாய்ப்பு கிடைத்தது.. எடுத்த எடுப்பிலேயே “இந்தத் தமிழ்த் தண்ணியைக் குடிச்சு வளர்ந்த உடம்பு இது..” என்று தமிழிலேயே பேச.. செம அப்ளாஸ்..! அதுக்கப்புறம் வழக்கம்போல தெலுங்கில் மாடலாடிவிட்டுத்தான் போனார்.. இந்த விழாவுக்கு வந்திருக்க வேண்டிய மத்திய அமைச்சர் சிரஞ்சீவி ஏனோ வரவேயில்லை..! வெங்கடேஷ், ராஜசேகர் இருவரும் தாங்கள் பேசும் வாய்ப்புக்காக காத்திருந்தாற்போல் தெரிந்தது. ஆனால் கடைசியில் கூப்பிட மாட்டார்கள் என்பது தெரிந்தவுடன் ராஜசேகர் மனைவி ஜூவிதாவுடன் கோபத்துடன் வாக் அவுட் செய்தார்..!

பிரபலங்களை உட்கார விடாமல் செய்த இன்னொரு விஷயம்.. ரசிகர்களின் அன்புத் தொல்லை.. இந்த விழாவில் பெருமளவிற்கு போலீஸ் தொல்லை இல்லை என்பதால் ரசிகர்கள் கேலரியில் இருந்து குறுக்கு வழியில் சறுக்கிக் கொண்டு உள்ளே வந்து தங்களது அபிமான நட்சத்திரங்களிடம் புகைப்படம் எடுக்கத் துவங்க.. அவர்களைச் சமாளித்து வெளியேற்றுவதற்குள் பெரும்பாடுபட்டுவிட்டார்கள் செக்யூரிட்டிகள்.. 

இதில் ஒரு ரசிகன் மிக உரிமையோடு ராணாவின் தோளில் கை போட்டுவிட.. மனுஷன் கடுப்பாகி.. அந்த ரசிகனின் கழுத்தில் கை வைத்து தரதரவென இழுத்துக் கொண்டு போய் வெளியில் விட்டுவிட்டு வந்தார். இதனை பார்த்த பின்பு ராணாவை விட்டு விலகியது ரசிகர்கள் கூட்டம்..!

பாலையா என்கிற பாலகிருஷ்ணாவின் கோபம் தெலுங்கு திரையுலகமே தெரிந்ததுதான்..! முன் வரிசையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த அவரிடம், ஒரு தெலுங்குக்கார பெண்மணி தனது பையனை அழைத்துக் கொண்டு வந்து அருகில் நிற்க வைத்து தான் மட்டும் விலகிப் போய் செல்போனில் புகைப்படம் எடுக்க.. சட்டென்று கோபமான பாலையா.. அந்தப் பையனை அலாக்காக தூக்கி அந்தப் பெண்ணின் பக்கத்தில் போய் விட்டுவிட்டு எதையோ கோபத்துடன் சொல்லிவிட்டு திரும்பிகூட பார்க்காமல் வந்து அமர.. அந்தம்மாவின் முகத்தில் அப்படியொரு அதிர்ச்சி.. சப்தமே இல்லாமல் வெளியேறினார்..!

இந்த நொச்சு தாங்காமல்தான் ஸ்ரீதேவியும் மிக விரைவில் அரங்கத்தைவிட்டு வெளியேறினார்.. ஸ்ரீதேவி-ஜெயபிரதா மோதல் பாலிவுட்டில் 1980-களில் மிகப் பிரசித்தம்.. இப்போதுவரையிலும் சுமூக நிலைமைக்கு வரவில்லை. ஜெயசுதாவின் அருகில் அமர்ந்திருந்த ஜெயபிரதாவுடன் தவிர்க்க முடியாமல் ஸ்ரீதேவி கும்பிடு போட்டு கை குலுக்கவேண்டியதாகிவிட்டது..! இது போலவே பாலிவுட்டின் ஹாட் நியூஸாக தவிர்க்க முடியாத இன்னொரு கை குலுக்கல் கடைசி நாளில் நடந்து முடிந்தது.. அது கடைசிப் பதிவில்..!

மேலும், மேலும் டான்ஸ் நிகழ்ச்சிகளே வந்து கொண்டிருக்க இப்போதே நேரம் 10.30-ஐ தாண்டிவிட்டதால் கூட்டம் பெருமளவு கலையத் துவங்க.. நானும் கிளம்பிவிட்டேன்..!

மூன்றாம் பாகம்

நான்காம் பாகம்

ஐந்தாம் பாகம்

புகைப்படங்கள் உதவிக்கு நன்றி : www.indiaglitz.com



6 comments:

Samy said...

Pictures and news are good to read. Sathi

துளசி கோபால் said...

படங்களில் இருப்பவர்கள் எல்லாம் எவரு, ஏமின்னு சொல்லி இருக்ககூடாதா?

எல்லோரும் எங்கேயோ பார்த்த முகமால்லெ இருக்காங்க!

அடையாளம் கனுபிச்சிந்தி ஜயசுதா மாத்ரமே:-)

வவ்வால் said...

அண்ணாஸ்சி,

அப்புறம் என்னாச்சி?

உண்மைத்தமிழன் said...

[[[Samy said...

Pictures and news are good to read. Sathi.]]]

வருகைக்கு மிக்க நன்றிகள்..!

உண்மைத்தமிழன் said...

[[[துளசி கோபால் said...

படங்களில் இருப்பவர்கள் எல்லாம் எவரு, ஏமின்னு சொல்லி இருக்ககூடாதா? எல்லோரும் எங்கேயோ பார்த்த முகமால்லெ இருக்காங்க! அடையாளம் கனுபிச்சிந்தி ஜயசுதா மாத்ரமே:-)]]]

ஐயோ.. இவ்வளவுக்கு ஆயிப் போச்சு உங்க மறதி..?

1 போட்டோவில் சாய்குமார், ரோஜா, பாலகிருஷ்ணா..

2-வது போட்டோவில் ஜீவிதா, ராஜசேகர் மற்றும் சண்டை போட்ட இயக்குநர்..

3-வது போட்டோவில் நடுவுல உக்காந்திருக்கிறது டி.ராமாநாயுடுவோட பேரன் நடிகர் ராணா..

4-வது போட்டோவில் நடிகர்கள் கோட்டா சீனிவாசாராவ், மற்றும் மோகன்பாபு, ஸ்ரீகாந்த்..

5-வது போட்டோவில் மேடைல குத்துவிளக்கு ஏத்துறாங்க.. காஞ்சனா, வாணிஸ்ரீ, லட்சுமி மஞ்சு, ஜெயபிரதா, அமைச்சர் அருணா, ஜெயசுதா, சேம்பர் தலைவர் கல்யாண்..

6-வது போட்டோவில் கே.பி.யுடன் பேசுவது நடிகை ஜமுனா..

7-வது போட்டோவில் கையில் தடியுடன் அமர்ந்திருப்பது இயக்குநர் கே.விஸ்வநாத். அவருக்குப் பக்கத்தில் நடிகர் ராஜேந்திரபிரசாத்.. ஒரு சீட் தள்ளி அமர்ந்திருப்பது டி.இராமாநாயுடு..!

8-வது போட்டோவில் காஞ்சனா, நடிகர் பாலகிருஷ்ணா, அமைச்சர் அருணா, ஜெயசுதா.. பாலகிருஷ்ணாவுக்கு நேர் பின்னால் நடிகை அம்பிகா..

9-வது போட்டோவில் விருது வாங்கிய பாலகிருஷ்ணா, வெங்கடேஷ், ராஜசேகர்..

10-வது போட்டோவில் ஜூகல்பந்தி பாட வந்த பாடகர்கள் எஸ்.பி.பி. தலைமையில்..!

11-வது போட்டோவில் எஸ்.பி.பி.யும் அந்த ரகளை இயக்குனர் சத்யநாராயணாவும்..

12-வது போட்டோவில் இயக்குநர் சத்யநாராயணா

13-வது போட்டோவில் நடிகர் பிரம்மானந்தம் விருது பெறுகிறார்..

14-வது போட்டோவில் நடிகை மாதவி விருது பெறுகிறார்..

15-வது போட்டோவில் நடிகை அமலாபால் நடனம் ஆடுகிறார்..

16-வது போட்டோவில் பாலகிருஷ்ணா, லட்சுமி மஞ்சு, ஜெயபிரதா, ஜெயசுதா. பாலகிருஷ்ணாவுக்கு பின்னால் நடிகை ராதாவும், அவருடைய மகள் கார்த்திகாவும்..

அவ்ளோதான் டீச்சர்..!

உண்மைத்தமிழன் said...

[[[வவ்வால் said...

அண்ணாஸ்சி,

அப்புறம் என்னாச்சி?]]]

இன்னிக்கு மதியம் சொல்றேன் வவ்ஸ்..!