மூடர் கூடம் - சினிமா விமர்சனம்

21-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்ச் சினிமாவில் புதிய முயற்சிகள் அத்திப்பூத்தாற்போல் நடந்து அதிலும் ஒரு சிலவைகள் மட்டுமே வெற்றி பெறுகின்றன.. கவனத்தை ஈர்க்கின்றன.. பாராட்டும் பெறுகின்றன.. அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று..!

நகைச்சுவை என்ற பெயரில் எதிராளியின் உடல் அமைப்பை மட்டுமே கிண்டல் செய்து அப்படியே படம் முழுவதும் சிரிக்க வைத்துவிடும் வழக்கமான தமிழ்ச் சினிமாவை பொட்டில் அடித்தாற்போல் இதில் அடித்திருக்கிறார் இயக்குநர் நவீன்..!


வெள்ளை, சென்றாயன், குபேரன், நவீன் என்னும் நான்கு பேர் ஒரு வீட்டில் திருடப் போய்.. அது வெற்றிகரமாக முடித்தார்களா என்பதைத்தான் இந்த இரண்டரை மணி நேர கதையாகச் சொல்லியிருக்கிறார்கள்..! இதில் 3 பேர் முட்டாள்கள்.. நவீன் மட்டுமே புத்திசாலி போல் காட்சியளிக்கிறார்..!  இந்தப் புத்திசாலியால்தான் கதை மேலும், மேலும் நகர்கிறது..! 

முதலில் இப்படத்தின் தயாரிப்பாளர் நவீனை எத்தனைவிதமாகவும் பாராட்டலாம்..! இப்படி ஒரேயொடு லொகேஷனுக்குள்.. சின்ன நடிகர்களை வைத்து.. பாடல் காட்சிகள் இல்லாமல்.. பெரிய அளவுக்கான விளம்பரமும் இல்லாமல் எடுக்க துணிந்த அவரது முயற்சிக்குத்தான் தியேட்டர்களில் பெரும் கைதட்டல்கள் பரிசாகக் கிடைத்திருக்கின்றன.. இதனை வாங்கி வெளியிட்டிருக்கும் இயக்குநர் பாண்டிராஜுக்கும் ஒரு பாராட்டு..!

படத்தில் இடம் பிடித்திருக்கும் ஹீரோக்கள் முதல் துணை நடிகராக வலம் வரும் நாய்வரைக்கும் அனைவருக்கும் ஒரு பிளாஷ்பேக்கை வைத்து அதையும் ரசிக்கும்விதமாக படமாக்கியிருக்கும் விதமே அழகு.. மெளனப் படம் காலம்.. அனிமேஷன்.. ஊட்டி மலைப் பிரதேச லொகேஷனில் நடக்கும் வெள்ளையின் பிளாஷ்பேக்.. குபேரனுக்கு முட்டாள் என்ற வார்த்தையால் வரும் கோபம்.. நவீனின் சோகமான பிளாஷ்பேக்.. அந்த நாய் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்திருக்கும் கதை என்று அனைத்தையும் மிக நீட்டாக சொல்ல வேண்டிய இடத்தில் கச்சிதமாக சொல்லிச் சேர்த்திருக்கிறார் நவீன்..!

நடிப்பில் அதிக ஸ்கோர் செய்திருப்பது சந்தேகமேயில்லாமல் சென்றாயன்தான்..! இவரையும் நாடோடிகள் பரணியையும் ஒன்றாக நினைத்து நானும் ஆரம்பத்தில் குழம்பித்தான் போனேன்..! வசனங்களையும் தாண்டி அந்த மாடுலேஷனிலும், நடிப்பிலும் சென்றாயன் மிரட்டியிருக்கிறார்..! ஆனாலும் சிற்சில இடங்களில் அவருடைய வெறுமையான முக பாவனையே ஓவர் ஆக்டிங் போன்று தோன்றியதையும் மறுப்பதற்கில்லை..!

ஜெயபிரகாஷின் மகன் வெள்ளையை ‘அந்த’  இடத்தில் குத்தியதை நினைவில் நிறுத்தி அடி வாங்குகின்ற காட்சிகளில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். பாவமாக இருந்தது.. அதேபோல் 'மன்னன்' படத்தின் காட்சியைப் பார்த்துவிட்டு நவீனை காதலோடு பார்க்கும் ஓவியாவின் தங்கையின் கேரக்டர் ஸ்கெட்ச் ரொம்பவே ஓவர்தான்..! பய உணர்வோடு பார்ப்பதாகத்தான் அது இருந்திருக்க வேண்டும்.. ஆனால் மாறாக காதல் வருவதென்னவோ தலைகீழ் உணர்வாக தெரிகிறது எனக்கு..! அந்தப் பையன் “மொத மொதல்ல என்கிட்ட ஒரு வேலையைக் கொடுத்திருக்காங்க.. ஒழுங்கா என்னை செய்ய விடுங்க..” என்று சொல்வதுகூட பிள்ளை வளர்ப்பு பற்றி பெற்றோர்களுக்கு சொல்லிக் கொடுப்பது போலத்தான் இருக்கிறது. ஆனால் இதுவும்கூட அப்நார்மல் டைப்புதான்..!

ஓவியாவின் பாத்ரூம் அவசரம்.. பாத்ரூமுக்குள் இன்னொரு திருடன் என்று திரைக்கதைக்குள் புது ஆளை கொண்டு வந்திருக்கும் வித்தைகள்.. அந்த பொம்மை திருடன் சென்றாயனுக்கு அறிமுகமாகும் அந்தக் காட்சியும் ரசனையானது..!  செல்போனில் ஜெயபிரகாஷுக்கு டார்ச்சர் கொடுக்கும் அந்தச் சுட்டிக் குழந்தையை மறக்க முடியுமா..? நடிக்க வைத்ததே தெரியாத வண்ணம் மிக அற்புதமாக நடித்திருக்கிறாள் அந்தச் சிறுமி.. 

நாட்டைவிட்டு ஓடிப் போக முடிவு செய்திருக்கும் ஜெயபிரகாஷின் திட்டம் பணாலாகி.. கடன் கொடுத்த சேட்டு வாங்க வந்து.. கையொடிக்கப்பட்டு பந்தாடப்பட்டு தாவூத்திடம் சரண்டராகும் காட்சிகளும்.. தாவூத் வீட்டில் நடக்கும் இயல்பான காமெடிகளும் இந்த இயக்குநர் நவீனிடம் ஏதோ இருக்குய்யான்னு சொல்ல வைக்குது..!  

குபேரன், வெள்ளையுடன் கூடவே இயக்குநர் நவீனும் தன் பங்குக்கு சிறப்பாகத்தான் செய்திருக்கிறார்..!  ஆனால் ஒரேயொரு முறுகல்.. அவரது வாய்ஸ் மற்றும் மாடுலேஷன்.. இயக்குநர்கள் எல்லோருமே சென்னையின் தியேட்டர்களை மட்டுமே குறியாய் வைத்து ஒலிப்பதிவு கோர்வை செய்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.. மணிரத்னம் டைப்பில் நவீன் பேசும் பல வசனங்கள் கமலா தியேட்டரிலேயே பலருக்கும் புரியவில்லை. மற்றவர்கள் சிரிப்போடு கலந்து கொண்டுதான் சிரித்துத் தொலைத்தார்கள். இங்கயே இப்படியென்றால் மற்ற ஊர்களிலெல்லாம் எப்படியென்று யோசித்துப் பாருங்கள்..!

கொட்டாம்பட்டி தியேட்டரில் எப்படி இதனை ரசித்திருக்க முடியும்..? இதன் விளைவுதான் படத்தின் தற்போதைய முடிவு.. ‘சூது கவ்வும்’, ‘நேரம்’ படங்களைப்போல பரவலாக பேசப்பட்டு, வசூலில் அவற்றைப் பின்பற்றியிருக்க வேண்டிய படம்.. இப்போதுவரையிலும் சிறு நகரங்களிலும், குறு நகரங்களிலும் ஒரு ஷோகூட ஹவுஸ்புல் ஆகவில்லை என்கிறது கலெக்சன் ரிப்போர்ட்..! சென்னையில்கூட மல்டிபிளக்ஸ்களில் மட்டுமே ஹவுஸ்புல் போர்டு.. அதுவும் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே.. நான் பார்த்த கமலாவில் பாதி இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன..!

‘சூது கவ்வும்’ படத்தின் கதை நம்மோடு இணைந்த கதை.. ‘நேரம்’ படமோ கடன் வாங்கிவிட்டு அல்லல்பட்டு நாம் படும் வலியை உணர்த்தியது.. தியேட்டருக்கு வந்தவனும் இதை உணர்ந்தான்.. தியேட்டர் நடத்துபவரும் இதை உணர்ந்திருந்தார்.. மவுத் டாக் என்று சொல்லப்படுவது இதன் மூலமாகவே அதிகமாகி படம் பரவலாகப் பேசப்பட்டு லாபத்தை ஈட்டியது.. ஆனால் இந்தப் படத்திற்கு இதுவே பெரிய மைனஸாகிவிட்டது..! ஒரு வீட்டில் முட்டாள்தனமாக திருடப் போயிருக்கிறார்கள் என்கிற உணர்வே சட்டென்று சாதாரண ரசிகனிடமிருந்து விலகிப் போயிருக்க.. வசனத்தின் மூலம் புரிய வேண்டிய பல காட்சிகளிலும் புரியாமல் இருக்க.. கெட்டது கதை..!

இத்தனைக்கும் படத்திற்கு மிகப் பெரிய பலமே வசனங்கள்தான்.. கம்யூனிஸம் என்றால் என்ன என்பது பற்றி கிளாஸ் எடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால் அந்த வசனங்கள் யாருக்குக் கேட்டிருக்கும் என்பதுதான் சந்தேகம்.. கேட்டிருக்க வேண்டிய பாட்டாளிகள்  தங்களது தியேட்டர்களில் இதைக் கேட்டு மவுத்டாக் விட்டிருக்கலாம்..!? நவீன் தனக்கு வைத்திருந்த குளோஸப் ஷாட்டுகளில் மட்டுமே கொஞ்சமேனும் புரிந்தது.. சென்றாயனிடம் “பனிஷ்மெண்ட் ஓவரா இருக்கு.. கொஞ்சம் குறைச்சுக்கலாமே..?” போன்றவைகளுக்கு அழுத்தம் கொடுத்து பேசியிருக்கிறார். இதுபோலவே அனைத்தையும் பேசியிருக்கலாம்..! இட்ஸ் ஓகே.. அடுத்தப் படத்தில் திருத்திக் கொண்டால் நவீனுக்கே நல்லதாக இருக்கும்..!

சென்றாயன் அந்த தமிழ் வசனம் பேசும்போது எழுந்த கைதட்டல் நிசமாகவே மக்களுக்கு இருக்கும் தமிழ் உணர்வை அடையாளம் காட்டியது.. இந்தக் காட்சியின் இயக்கத்திற்காகவே சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருது நவீனுக்கே வழங்கப்பட வேண்டும் என்று என் மனசாட்சி சொல்கிறது..!

ஆட்டோ டிரைவர் வேடத்தில் வரும் ரவுடிகள்.. பொம்மையைத் தேடி வரும் ரவுடி.. வடசென்னை சேகராக வரும் ரவுடி.. தாவூத் இப்ராஹிம் மற்றும் அவனது அடிப்பொடிகள் என்று பலரது கேரக்டர் ஸ்கெட்ச் பலமாகவே படமாக்கப்பட்டிருக்கிறது.. இதனாலேயே படத்தின் சுவாரஸ்யங்கள் இடைவேளைக்குப் பின்பு மேலும் சர்ரென்று பறக்கிறது..! கிளைமாக்ஸின் அந்த டிவிஸ்ட்டுகள் அபாரமானவை..! ஆளாளுக்கு சென்னை தமிழ் பேசி கிளைமாக்ஸை பறக்க வைத்திருக்கிறார்கள்.. 

கோடிகளில் சம்பாதித்து நாட்டைவிட்டு ஓடிப் போக நினைக்கும் ஒருத்தருக்கு நாட்டுல ஒரேயொரு பிரண்ட் மட்டும்தானா இருப்பாரு..? எத்தனை திருடனுங்க இருந்திருக்க மாட்டானுங்க.. எப்படியாவது யார்கிட்டயாவது போன்ல சொல்லி தப்பிச்சிருக்கலாமேன்னு நாம லாஜிக் யோசிக்கலாம். ஆனா இயக்குநர் அது நமக்குத் தேவையில்லாத விஷயம்ன்னு சொல்லிட்டாரு.. திருட வர்றவங்கதான் முட்டாளுகன்னா வீட்ல இருக்கிறவங்களும் அது மாதிரியேதான் இருக்கணுமான்னு இன்னொரு கேள்வியும் வருது..! அனுபமாவின் கேரக்டர் ஸ்கெட்ச்சை பார்த்தாலே இதுவும் ஒரு காமெடி பேமிலி மாதிரியாத்தான் இருக்கு. ஆனா முதல் காட்சில வெள்ளையை சீக்கிரமா வெளிய அனுப்புறதுக்காக “காபியாச்சும் குடிச்சிட்டுத்தான் போகணும்”ன்னு சொல்ற அந்த வழக்கமான அத்தைகளின் பீலிங்கையும் காட்டியிருக்காங்க.. ஸோ.. படத்தை ரொம்ப ஆராயக்கூடாது.. அனுபவிக்கணும்.. இதுவொருவித சுகமான அனுபவமாகத்தான் இருக்கிறது.. தயவு செய்து மிஸ் பண்ணிராதீங்க..! 

மூடர் கூடம் - அவசியம் பார்க்க வேண்டிய படம்..!

9 comments:

ராஜ் said...

//உழைப்பாளி படத்தின் காட்சியைப் பார்த்துவிட்டு நவீனை காதலோடு பார்க்கும் ஓவியாவின் தங்கையின் கேரக்டர் ஸ்கெட்ச் ரொம்பவே ஓவர்தான்.//
அண்ணே அது மன்னன் படம். எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்தது. "சிவப்பு" தத்துவங்கள் செம கிளாஸ்.

Unknown said...

சென்றாயன் அந்த தமிழ் வசனம் பேசும்போது எழுந்த கைதட்டல் நிசமாகவே மக்களுக்கு இருக்கும் தமிழ் உணர்வை அடையாளம் காட்டியது.. இந்தக் காட்சியின் இயக்கத்திற்காகவே சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருது நவீனுக்கே வழங்கப்பட வேண்டும் என்று என் மனசாட்சி சொல்கிறது..!\\

எனது கருத்தும் இதே

kanavuthirutan said...

சிறப்பான விமர்சனம்.. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்...

Gujaal said...

மூடர் கூடம் (2013) - கொரியன் படத்தின் தழுவல் !!

http://en.wikipedia.org/wiki/Attack_the_Gas_Station

உண்மைத்தமிழன் said...

[[[ராஜ் said...

//உழைப்பாளி படத்தின் காட்சியைப் பார்த்துவிட்டு நவீனை காதலோடு பார்க்கும் ஓவியாவின் தங்கையின் கேரக்டர் ஸ்கெட்ச் ரொம்பவே ஓவர்தான்.//

அண்ணே அது மன்னன் படம். எனக்கு ரொம்பவே பிடிச்சு இருந்தது. "சிவப்பு" தத்துவங்கள் செம கிளாஸ்.]]]

என்ன இருந்தாலும் சின்னப் புள்ளைக்கு அந்த பீலிங் இருக்குன்னு காட்டலாமா..? தப்பில்லையா..?

உண்மைத்தமிழன் said...

[[[சக்கர கட்டி said...

சென்றாயன் அந்த தமிழ் வசனம் பேசும்போது எழுந்த கைதட்டல் நிசமாகவே மக்களுக்கு இருக்கும் தமிழ் உணர்வை அடையாளம் காட்டியது.. இந்தக் காட்சியின் இயக்கத்திற்காகவே சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருது நவீனுக்கே வழங்கப்பட வேண்டும் என்று என் மனசாட்சி சொல்கிறது..!\\

எனது கருத்தும் இதே]]]

கொடுக்கத்தான் வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[சக்கர கட்டி said...

சென்றாயன் அந்த தமிழ் வசனம் பேசும்போது எழுந்த கைதட்டல் நிசமாகவே மக்களுக்கு இருக்கும் தமிழ் உணர்வை அடையாளம் காட்டியது.. இந்தக் காட்சியின் இயக்கத்திற்காகவே சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருது நவீனுக்கே வழங்கப்பட வேண்டும் என்று என் மனசாட்சி சொல்கிறது..!\\

எனது கருத்தும் இதே]]]

கொடுக்கத்தான் வேண்டும்..!

உண்மைத்தமிழன் said...

[[[kanavuthirutan said...

சிறப்பான விமர்சனம்.. எல்லோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.]]]

பார்த்திருங்களேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[Gujaal said...

மூடர் கூடம் (2013) - கொரியன் படத்தின் தழுவல் !!

http://en.wikipedia.org/wiki/Attack_the_Gas_Station]]]

நானும் இப்பத்தான் கேள்விப்படுறேன்.. அதையும் பார்க்கணும்..!