ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

27-09-2013

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

அண்ணன் இயக்குநர் மிஷ்கினின் கலைத்தாகம் படத்துக்குப் படம் கூடிக் கொண்டே செல்கிறது..! மற்றவர்களெல்லாம் சினிமாவை மக்களுடையதாக நினைக்க.. இவர் மட்டுமே இதனை ஒரு கலை சார்ந்த படைப்பாக நிறுவ பெரும் முயற்சி செய்து வருகிறார்..!

'சித்திரம் பேசுதடி'யில் ஒரு காதல் கதையை சொன்னவிதம் அனைவருக்கும் பிடித்துப் போக.. அதையே 'அஞ்சாதே'யில் போலீஸ்-ரவுடி-சமூகம் சார்ந்த கதையாகவும் மாற்றி திரில்லராகவும் செய்து காண்பித்தார்.. மூன்றாவதாக 'யுத்தம் செய்'யிலும் இதே திரில்லர் டைப்.. 'நந்தலாலா'வில் கலைப்படைப்பின் உச்சத்தைத் தொட்டார்.. 'முகமூடி'யில் ஹீரோவுக்கான கதையாகவும் மாற்றி எடுத்துப் பார்த்தார்.. 

ஆனாலும் அவரது மேக்கிங் ஸ்டைல் பாமர ரசிகனிடமிருந்து கொஞ்சம் தள்ளிப் போய்விட.. மூன்றிலும் வணிக ரீதியாக தோல்வியைத் தொட்டாலும் சினிமா விமர்சகர்கள் அவரை பாராட்டத்தான் செய்தார்கள்.. இந்த ஒரு பிரிவினரின் பாராட்டே போதுமென்று நினைத்துவிட்டார் போலும்.. இப்போதும் அதே கதைதான்..! 

இந்தப் படத்தைப் பற்றி பாராட்டி பேச வேண்டுமென்றால் ஒரு வாரம் லீவு போட்டுவிட்டு ரூம் போட்டு பேசிக் கொண்டேயிருக்கலாம்.. அந்த அளவுக்கு உலக சினிமா பிரியர்களுக்கு பிடித்தமான படமாக இது இருக்கும்..!  மிஷ்கினின் ஸ்பெஷலான நைட் எபெக்ட்.. எம்ட்டி பீல்டு.. வைட் ஷாட்.. சிங்கிள் கேரக்டர்.. இப்படித்தான் இதிலும் முதல் காட்சி அறிமுகமாகிறது..! அடுத்தடுத்து பரபரப்பாக துவங்கும் திரைக்கதையை, இறுதிவரையிலும் அந்த டெம்போவை கொஞ்சமும் இறங்கவிடாமல் கொண்டு போயிருக்கிறார்..!


மருத்துவக் கல்லூரி மாணவரான ஸ்ரீ, வீடு திரும்பும்போது ரோட்டில் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் கிடக்கும் மிஷ்கின் என்னும் எட்வர்டை பார்க்கிறார். அவரது உயிரைக் காப்பாற்ற அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குத் தூக்கிச் செல்கிறார் ஸ்ரீ. துப்பாக்கிக் குண்டு என்பதால் கிரைம் என்று சொல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போகச் சொல்கிறார்கள். அவ்வளவு தூரம் போவதற்குள் உயிர் போய்விடும் என்பதால் தன் வீட்டிற்கு கொண்டு வந்து தனது கல்லூரி பேராசிரியரான டாக்டரிடம் கேட்டு ஆபரேஷன் செய்து மிஷ்கினின் உயிரைக் காப்பாற்றுகிறார். காலையில் மிஷ்கின் அந்த வீட்டில் இருந்து எஸ்கேப்பாகிவிட.. இதில் இருந்து இவருக்கு வில்லங்கம் துவங்குகிறது.. மிஷ்கின் போலீஸால் துரத்தப்பட்ட கிரிமினல் என்று கூறி ஸ்ரீ-யை ரவுண்டு கட்டுகிறது வீட்டுக்கு வரும் போலீஸ்.. மிஷ்கினின் கதை என்ன..? ஸ்ரீ என்ன ஆகிறார் என்பதுதான் மிச்ச மீதிக் கதை.. இதற்கு மேல் சொல்ல முடியாது.. தியேட்டருக்கு சென்று பார்த்துக் கொள்ளுங்கள்..!

மிஷ்கினின் இயக்கம் டச் படம் முழுவதும் நிரவியிருப்பதால் படத்தில் ஆங்காங்கே இருக்கும் சின்னச் சின்ன ஷாட்டுகளில்கூட குபீர் சிரிப்பு எழும்புகிறது..!  காரில் வந்த தம்பதிகளை கடத்திச் செல்லும்போது ஸ்ரீ தைரியமாக துப்பாக்கியை காட்ட.. மிஷ்கின் அலட்டிக் கொள்ளாமல் துப்பாக்கியை அந்தப் பெண்மணியின் தலையில் வைக்கும் காட்சி.. நடு இரவு சோதனையில் இருக்கும் ஒரு போலீஸிடம் துப்பாக்கி முனையில் சல்யூட் செய்தபடியே நிற்க வைத்திருக்கும் காட்சி.. வில்லனின் அடியாட்கள் போலீஸிடம் வாயாடுவது.. தாக்கிவிட்டுப் பறப்பது.. என்று பலவும் திரைக்கதையுடன்கூடிய நகைச்சுவயாக மனதைத் தொட்டுச் செல்கிறது..!

இயக்கத்திற்கு என்னதான் விளக்கம் சொன்னாலும் யாராலும் இதுதான் சரி என்று சொல்லிவிட முடியாது.. இந்தப் படத்தின் ஒரு காட்சியில்கூட இயக்கத்தில் பிழை இல்லை.. அந்தத் திரைக்கதைக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை நடிக்க வைத்திருக்கும் அழகை பார்த்தால் மிஷ்கினை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை..! 

எந்தவொரு நடிகராக இருந்தாலும் இயக்கம் தெரிந்த இயக்குநரின் கையில் சிக்கினால் அவரிடமிருந்து நடிப்பு கண்டிப்பாக வெளிக்கொண்டு வரப்படும்.. இதில் வழக்கு எண் படத்தில் நடித்த ஸ்ரீ-தான் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.. முதல் அறிமுகக் காட்சியில் இருந்து இறுதிவரையில் பல படங்களில் நடித்த அனுபவத்துடன் இவரை பார்க்க முடிகிறது..! ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.. இன்னமும் மென்மேலும் வளரட்டும்..! போலீஸ் பூத்தில் இருக்கும் போலீஸாருடன் வாக்குவாதம் செய்யும் காட்சியில் ஒரு நிமிடம் நம்மை உள்ளே இழுத்து விடுகிறார்..! வெல்டன் ஸ்ரீ..

நமது இசை விமர்சகர் ஷாஜி சிபிசிஐடி போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார்.. அவரைவிடவும் முந்திக் கொண்டு நமக்குப் பிடிக்கிறது அவரது குரல்.. டாக்டரை வைத்துக் கொண்டு தனது உயரதிகாரியிடம் அவர் பேசும்முறையும், ஆக்சனும் ஒரு படபடப்பான அதிகாரியை காட்டுகிறது.. இவரையும் அவ்வப்போது கொஞ்சம் புலம்ப விட்டு அஞ்சாதே போல் பரபரப்புடன் தேட வைத்திருக்கிறார் மிஷ்கின்..!

மிஷ்கின் இந்தப் படத்தின் கதையை ஓரிடத்தில் சொல்கிறார்.. அந்த டைட் குளோஸப் ஷாட் ஒன்றே போதும் இவருக்கு..! அந்த இடத்தில் மட்டும் நாம் திரையைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் பின்பு கதை சுத்தமாக நமக்குப் புரியாது.. ஆகவே அந்த நேரத்தில் செல்போனை நோண்டாமல் அவர் பேசுவதை கவனித்துப் பார்க்கும்படி ரசிகப் பெருமக்களை கேட்டுக் கொள்கிறேன்...! மார்ஷியல் ஆர்ட்ஸ் மேல் மிஷ்கினுக்கு முதல் படத்தில் இருந்து பெரிய கிரேஸ் போல.. இதிலும் கிளைமாக்ஸ் சண்டை காட்சி அப்படித்தான் தத்ரூபமாக இருக்கிறது..! லாஜிக்கையெல்லாம் இங்கேயும் பார்க்கக் கூடாது..! 

இதில் ஒரு கேரக்டராகவும் நடித்திருக்கிறது இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை.. மயிலாப்பூர் ஸ்டேஷனுக்குள் ஸ்ரீ ஓடுகின்ற கட்டத்தில் துவங்கி.. இறுதியில் வடபழனி விஜயா மாலில் நடக்கும் கிளைமாக்ஸ்வரையிலும் ஓட்டம்.. ஓட்டம்.. ஓட்டம்.. அப்படியொரு ஓட்டம் ஓடுகிறது இசைஞானியின் இசை..! நந்தநாலாவுக்கு பின்பு பின்னணி இசைக்கு இந்தப் படம் நிச்சயம் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் என்றே சொல்லலாம்..!  

தனது குடும்பத்திற்கு ஆபத்து என்றவுடன் மிஷ்கினை கொல்ல நினைக்கும் ஸ்ரீ, பின்பு மனசு மாறினாலும் அதையும் அரைகுறையாகச் செய்வதும்.. மிஷ்கின் சொல்லும் ஓநாய்-கரடி-ஆட்டுக்குட்டி கதையைக் கேட்டு மனசு மாறுவதும் தமிழ்ச் சினிமாத்தனம்தான்.. அந்த அரவாணி மென்மையாக நம் மனசுக்குள் நுழைகிறார்.. அவரை பார்த்தவுடன் தலைமுடியை பிடித்திழுத்து வரும் போலீஸை தமிழ்நாட்டு போலீஸ்தான் என்று பட்டென்று ஒத்துக் கொள்ளலாம்..!  கண் பார்வை இல்லாத அந்தப் பெண்ணும், குழந்தையும் இப்போதும் கண்ணுக்குள் இருக்கிறார்கள்..

எதற்காக இத்தனை படுகொலைகள்.. எதுக்காக இந்த நீண்ட தேடுதல் வேட்டை என்பதற்கெல்லாம் மிஷ்கின் விடை சொன்னாலும், அதையும் சின்னப் புள்ளைக்கு கதை சொல்லும் பாணியில் சொல்லியிருப்பதால் மெட்ரோபாலிட்டன் சிட்டியைத் தவிர மற்ற இடங்களில் புரிந்து கொள்ளப்படுமா என்ற சந்தேகம் எனக்குள் இப்போதும் இருக்கிறது..! புரிந்தால் சந்தோஷம்தான்..!

இப்போதைய மருத்துவ உலகத்தில் எந்தவொரு விஷயமாக இருந்தாலும் நோயாளிக்கு முதலில் சிகிச்சையளித்துவிட்டு பின்புதான் காயம் ஏற்பட்டதன் தன்மை பற்றி பேசப்பட வேண்டும் என்று அரசு ஆணையே உள்ளது.. முதல் ஆஸ்பத்திரியில் சிகிச்சையளிக்க முடியாது என்று சொல்வதே பெரும் லாஜிக் மீறல்.. அடுத்து அப்பலோ ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து இன்ஜெக்சனை வாங்குபவர் அங்கேயாவது இவரை சேர்ப்பதற்கு முயற்சி செய்திருக்கலாம்.. ஆனாலும் அவசரத்தனமாக இப்போதைக்கு அவரை காப்பாற்ற ஊசி போடுகிறார்..! பேராசிரியர் போனில் சொல்லச் சொல்ல.. ஆபரேஷன் செய்து மிஷ்கினை காப்பாற்றுவதெல்லாம் ரொம்பவே ஓவர்.. வயிற்றுப் பகுதியில் பாய்ந்த குண்ட எடுக்க அப்படியொரு ஸ்கெட்ச் செய்துவிட்டு குடலையெல்லாம் வெளியே எடுப்பதை போல் காட்டிவிட்டு பின்பு அதனை தைத்து சிகிச்சையை முடிப்பதாகக் காட்டுவதெல்லாம் சினிமாத்தனம்.. ஆனால் மிஷ்கினின் இயக்கம் அப்படி இப்படி யோசிக்கவிடாமல் தடை செய்கிறது..!

அன்றைய ஒரு நாள் இரவில் நடக்கின்ற கதை என்பதால் இத்தனை கொலைகள்.. போலீஸாரே 6 பேர் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.. காவல்துறை அதனைப் பற்றி பேசாமல் ராத்திரியோட ராத்திரியா சுட்டுக் கொல்லுங்க என்று மட்டும் சொல்கிறது..! இந்தக் கூத்தில் வில்லனின் ஆட்கள் மட்டும் தனியாக பைக்கில் சிட்டியை வலம் வருகிறார்கள்.. போலீஸ் டீமில் இருக்கும் பலரையும் விட்டுவிட்டு பிச்சை என்ற கயவாளி இன்ஸ்பெக்டர் மீது மட்டும் ஷாஜிக்கு எப்படி திடீர் சந்தேகம் வருகிறது என்பதற்கான காரணம் இல்லை.. ஆனாலும் ஸ்பீடு திரைக்கதையில் இதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என்பதுபோல் கதை அந்த இடத்தில் பறக்கிறது..! 

வெறுமனே எட்வர்டு என்ற பெயரை மட்டும் வைத்துக் கொண்டு பக்கத்தில் சர்ச் எங்கயாவது இருக்கா என்று விசாரித்து ஊகிப்பதும் இதே பாலிஸிதான்..! இருந்தாலும் இந்த அளவுக்கு ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க வேண்டாம்.. இது போன்ற படங்கள் கொட்டாம்பட்டியின் சி கிரேடு தியேட்டரில்கூட ஓட வேண்டும்.. அதற்கு முதலில் பாமரனுக்கும் கதை புரிய வேண்டும்.. துவக்கத்தில் போலீஸ் பேசுகின்ற அனைத்துமே ஆங்கிலம் கலந்த வார்த்தைகளாக இருக்க புரியாதவர்களுக்கு கஷ்டம்தான்.. கல்லறையைக்கூட ஆங்கில வார்த்தையில் சொல்லித்தான் தெளிய வைக்க வேண்டுமா என்ன..? கல்லறை என்று சொல்லியிருந்தாலே போதுமே..?

படத்தின் ஷாட் பை ஷாட் தேவையில்லாமல் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை வைத்திருக்காமல் முழுக்க முழுக்க இரவு நேரத்திலேயே ஷூட் செய்து அசத்தியிருக்கிறார் மிஷ்கின்.. ஒளிப்பதிவாளர் பெரும் பாராட்டுக்குரியவர்.. மிஷ்கின் மாதிரியான சிறந்த படைப்பாளிகள் கையில் சிக்கினால் எப்படி நடக்க முடியுமோ அதையேதான் செய்திருக்கிறார்..!  கார் சேஸிங் காட்சியும், மிஷ்கின் காரில் இருந்து தப்பிக்கும் அந்தக் காட்சியும் பரபர.. அதேபோல் கல்லறையில் நடக்கும் துப்பாக்கிச் சண்டையும் கிளைமாக்ஸ் சண்டை காட்சியும் படத்தின் மிகப் பெரிய பிளஸ்..

ஹாலிவுட் பாணியில் வேகமான திரைக்கதையுடன் நேர்த்தியான இயக்கத்துடன் ஒரு கலைப் படைப்பாகவும், திரில்லராகவும் கொடுத்திருக்கிறார் மிஷ்கின்..! சட்டம் கண்மூடித்தனமாக குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகுகிறது என்பதைத்தான் மிஷ்கின் இதில் சொல்ல வந்திருக்கிறார் என்பதாக நானாகவே நினைத்துக் கொள்கிறேன்.. இதுதான் உண்மை எனில் இன்னமும் பெட்டராக இதனை எடுத்திருக்கலாமோ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது..! 

படத்தில் இடம் பெற்றிருக்கும் குறியீடுகளை பற்றிக் குறிப்பிட வேண்டுமெனில் மீண்டும் ஒரு முறை படத்தைப் பார்த்துவிட்டுத்தான் பேச வேண்டும்.. எப்படியும் நமது வலையுலக மக்கள் அவைகளைப் பற்றி விலாவாரியாகப் பட்டியலிடுவார்கள் என்பதால் காத்திருந்து அதைப் படித்துக் கொள்கிறேன்.. 

அவசியம் பார்க்க வேண்டிய படம்தான்.. பாருங்கள்..!

நன்றி..

வணக்கம்..! 

34 comments:

Bala said...

Anna.. Me d first.. Nice review

Philosophy Prabhakaran said...

அண்ணே... நீங்க பாராட்டுறீங்களா ஓட்டுறீங்களா'ன்னு ஒன்னியும் புரியல...

கார்த்திக் சரவணன் said...

அண்ணே, உங்களை நம்பி போலாம்னு இருக்கேன்....

Unknown said...

ஒரு பக்க பாராட்டு அரை பக்க நீராட்டு என அழகா சொல்லி இருக்கீங்க அண்னே நன்றி...படம் பாக்கலாம்ங்கறீங்க...ரைட்டு!

Unknown said...

கண்டிப்பா பாக்குறேன் அண்ணே

Manimaran said...

விமர்சனமே படம் பார்க்க தூண்டுகிறது...கண்டிப்பாக பார்த்துவிட வேண்டியதுதான்,.

kanavuthirutan said...

அண்ணா கமலால பெட்டி வரலைன்னு சொல்லி பணத்த திரும்பக் கொடுத்துட்டாங்க.. சங்கம் தியேட்டர்லயும் அதுதா நிலைமைன்னு சொல்றாங்க... நீங்க எங்கண்ணா பாத்தீங்க.. சே மிஸ் பண்ணிட்டேனே...!

Tech Shankar said...

தவறுகளுக்காக அவமானப்பட்டால், அவற்றைக் குற்றங்களாக்கிவிடுவீர்கள்

(அனுபவசாலி - கன்ஃபூசியஸ்)

Be not ashamed of mistakes and thus make them crimes.

திரு. மிஷ்கின் அவர்களின் சித்திரம் பேசுதடி படத்திலிருந்து
ஒரு காட்சி :

பல முறை விலைமாதரிடம் சென்ற ஒருவர் அப்போதெல்லாம் அது தவறென்று
கருத்தில் கொள்ளவில்லை. அதே நபர் தன் தவறு மற்றொருவருக்கு தெரிந்து விட்டதே என அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்வார். மிஷ்கின் u r gr8. Confucius ன் கருத்தை திரையில் பிரதிபலித்துள்ளீர்கள்.

உண்மைத்தமிழன் said...

[[[Bala said...

Anna.. Me d first.. Nice review]]]

வருகைக்கு நன்றி பாலா.. படத்தை அவசியம் பாருங்கள்..!

உண்மைத்தமிழன் said...

[[[Philosophy Prabhakaran said...

அண்ணே... நீங்க பாராட்டுறீங்களா ஓட்டுறீங்களா'ன்னு ஒன்னியும் புரியல...]]]

பாராட்டியும் இருக்கிறேன். எனது விமர்சனங்களையும் எழுதியிருக்கிறேன்..!

உண்மைத்தமிழன் said...

[[[ஸ்கூல் பையன் said...

அண்ணே, உங்களை நம்பி போலாம்னு இருக்கேன்....]]]

போயிட்டு வாங்கண்ணே.. ஏமாற மாட்டீங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[விக்கியுலகம் said...

ஒரு பக்க பாராட்டு அரை பக்க நீராட்டு என அழகா சொல்லி இருக்கீங்க அண்னே நன்றி... படம் பாக்கலாம்ங்கறீங்க... ரைட்டு!]]]

இப்படித்தான் சொல்லணுமாக்கும்..! திட்டிக்கிட்டே இருக்க முடியுமா..? இதைவிடவும் சிறப்பான இயக்கத்தை யாரிடம் எதிர்பார்க்க முடியும்..?

உண்மைத்தமிழன் said...

[[[சக்கர கட்டி said...

கண்டிப்பா பாக்குறேன் அண்ணே..]]]

மிக்க நன்றிகள் தம்பீ..!

உண்மைத்தமிழன் said...

[[[Manimaran said...

விமர்சனமே படம் பார்க்க தூண்டுகிறது... கண்டிப்பாக பார்த்துவிட வேண்டியதுதான்,.]]]

பார்த்துட்டு வந்து சொல்லுங்க பிரதர்..!

உண்மைத்தமிழன் said...

[[[kanavuthirutan said...

அண்ணா கமலால பெட்டி வரலைன்னு சொல்லி பணத்த திரும்பக் கொடுத்துட்டாங்க.. சங்கம் தியேட்டர்லயும் அதுதா நிலைமைன்னு சொல்றாங்க... நீங்க எங்கண்ணா பாத்தீங்க.. சே மிஸ் பண்ணிட்டேனே...!]]]

பிரிவியூல பார்த்தேன் பிரதர்.. இப்போ கமலால ஓடுது..! போய்ப் பாருங்க..!

உண்மைத்தமிழன் said...

[[[Tech Shankar said...

தவறுகளுக்காக அவமானப்பட்டால், அவற்றைக் குற்றங்களாக்கிவிடுவீர்கள்

(அனுபவசாலி - கன்ஃபூசியஸ்)

Be not ashamed of mistakes and thus make them crimes.

திரு. மிஷ்கின் அவர்களின் சித்திரம் பேசுதடி படத்திலிருந்து
ஒரு காட்சி :

பல முறை விலைமாதரிடம் சென்ற ஒருவர் அப்போதெல்லாம் அது தவறென்று கருத்தில் கொள்ளவில்லை. அதே நபர் தன் தவறு மற்றொருவருக்கு தெரிந்து விட்டதே என அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்வார். மிஷ்கின் u r gr8. Confucius ன் கருத்தை திரையில் பிரதிபலித்துள்ளீர்கள்.]]]

இது மிடில் கிளாஸ் மனோபாவம்.. நேர்மையாக இருக்க முடியாமல் அல்லல்படும் அவதி..! அந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சியும் அதுதான்..!

rajasundararajan said...

நல்லா இருக்கு உங்க எழுத்து. பார்த்திடலாம்.

rabiadavinci said...

தமிழ்சினிமாவையே வெளிச்சமாக்கியிருக்கிறார் மிஷ்கின்
படத்தின் பாதிப்பு வெளியில் வரும்போதும் உணரமுடிகிறது.

உண்மைத்தமிழன் said...

[[[rajasundararajan said...

நல்லா இருக்கு உங்க எழுத்து. பார்த்திடலாம்.]]]

இன்னும் பார்க்கலியாண்ணா..? ஆச்சரியமா இருக்கு.. முதல் ஷோவே பார்த்திருவீங்களே..?

உண்மைத்தமிழன் said...

[[[rabiadavinci said...

தமிழ் சினிமாவையே வெளிச்சமாக்கியிருக்கிறார் மிஷ்கின்
படத்தின் பாதிப்பு வெளியில் வரும்போதும் உணர முடிகிறது.]]]

அடுத்தடுத்து உயரங்களைத் தொடுவார் மிஷ்கின்..!

Nondavan said...

நமக்கு டவுன்லோட் தான் கதி போல...!! இது போல த்ரில்லர்களை தியேட்டரில் பார்த்தால் தான் நல்லா இருக்கும்... இங்கு ரிலீஸே ஆகவில்லை...

வர வர நீங்க ஒரு எழுத்து மேஜிக் சித்தர் ஆகிட்டீங்க...!! செமயா வசீகரிக்குது அண்ணாச்சி...

உண்மைத்தமிழன் said...

[[[Nondavan said...

நமக்கு டவுன்லோட்தான் கதி போல...!! இது போல த்ரில்லர்களை தியேட்டரில் பார்த்தால்தான் நல்லா இருக்கும்... இங்கு ரிலீஸே ஆகவில்லை...]]]

மிக விரைவில் வந்துவிடும்.. காத்திருங்கள். அவசரப்பட்டு டவுன்லோடிட்டி பார்த்திராதீங்க ப்ளீஸ்..!

உண்மைத்தமிழன் said...

ஏம்ப்பா கண்ணுகளா..?

பேஸ்புக்ல கணக்கு வைச்சிருக்கிற 252 பேர் இதை லைக் பண்ணியிருக்கீங்க.. ரொம்ப நன்றி.. சந்தோஷம்.. மிக்க மகிழ்ச்சி..!

அப்படியே ஒரேயொரு ஒத்தை வரில கமெண்ட் போட்டிருந்தாலும் எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருந்திரு்ககும்ல்ல.. ஒரு கமெண்ட் போட எவ்ளோ நேரமாகும்..? கொஞ்சம் யோசிங்கப்பா.. ஏதோ உங்களை நம்பித்தான் நாங்க பதிவு எழுதுக்கிட்டிருக்கோம்..! பார்த்துக்குங்க..!

உண்மைத்தமிழன் said...

ஏம்ப்பா கண்ணுகளா..?

பேஸ்புக்ல கணக்கு வைச்சிருக்கிற 252 பேர் இதை லைக் பண்ணியிருக்கீங்க.. ரொம்ப நன்றி.. சந்தோஷம்.. மிக்க மகிழ்ச்சி..!

அப்படியே ஒரேயொரு ஒத்தை வரில கமெண்ட் போட்டிருந்தாலும் எனக்கு இன்னும் கொஞ்சம் சந்தோஷமா இருந்திரு்ககும்ல்ல.. ஒரு கமெண்ட் போட எவ்ளோ நேரமாகும்..? கொஞ்சம் யோசிங்கப்பா.. ஏதோ உங்களை நம்பித்தான் நாங்க பதிவு எழுதுக்கிட்டிருக்கோம்..! பார்த்துக்குங்க..!

வருண் said...

***பல முறை விலைமாதரிடம் சென்ற ஒருவர் அப்போதெல்லாம் அது தவறென்று
கருத்தில் கொள்ளவில்லை.***

அவர் தவறென கருத்தில் கொள்ளவில்லைனு எவன் சொன்னான் உமக்கு? தவறு செய்பவர்கள் பலர் தான் செய்யும் தவறை தவறு என்று தெரிந்தும் "கில்ட்டி உணர்வுகளுடன்" செய்துகொண்டு இருக்காங்க. அதை சரி என்று ஒருபோதும் அவர்கள் நினைப்பதில்லை.

***அதே நபர் தன் தவறு மற்றொருவருக்கு தெரிந்து விட்டதே என அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்வார்.***

மற்றொருவருக்கு அல்ல! தான் அவமானப் படுத்திய ஒருவனுக்கு, தன் மகளை மணம்முடிக்க நினைக்கும் ஒருவனுக்கு தன் அந்தரங்கம் தெரிந்துவிட்டதே என்று..

*** மிஷ்கின் u r gr8. Confucius ன் கருத்தை திரையில் பிரதிபலித்துள்ளீர்கள்.**

மிஸ்கினை பாராட்டணும்னா பாராட்டிட்டுப் போங்கப்பா. கன்ஃப்யூசியஸை இழுத்துவந்து என்னத்தையோ புதுசா கண்டுபிடிச்சமாரி எதுக்கு இதெல்லாம்?

SANKAR said...

முருகனும் கர்த்தரும் கைவிட்ட போலிசை"அய்யா" காப்பாற்றும் காட்சி செம காமெடி.கதை சொல்லும் மிஷ்கினுக்கு குரல் கொடுத்திருப்பது இசை ஞானி தானே?

gani said...

//போலீஸ் டீமில் இருக்கும் பலரையும் விட்டுவிட்டு பிச்சை என்ற கயவாளி இன்ஸ்பெக்டர் மீது மட்டும் ஷாஜிக்கு எப்படி திடீர் சந்தேகம் வருகிறது என்பதற்கான காரணம் இல்லை//

மருத்துவமனையில் இருந்து தம்பா தப்பித்த செய்தியும், பிச்சை மட்டுமே காவல்துறையில் இருந்து தொடர்புகொள்வதும், இதனை கணிக்க செய்திருக்கலாம். ஷாஜியின் நண்பர் தான் பிச்சை பெயரை சொல்லுவார்.

gani said...

நல்ல விமர்சனம் !

Jamal Mohd said...

அண்ணன் உத அவர்களுக்கு,

கலந்த பல வருட காலமாக தமிழ் வலைபக்கங்களில் தேடி தேடி வாசித்த எனக்கு, ஒரு கட்டத்தில் அலுப்பு தட்டி தற்போது தங்களயும் ஆருர் மூனா வையும் மட்டுமே தொடர்கிறேன். ராஜு முருகனுக்கு கிடைத்த வட்டியும் முதலும் போன்று தங்களை இணைய வெளி தாண்டியும் அறியபட எனது பிரார்தனைகள். ஜமால் முஹம்மது

உண்மைத்தமிழன் said...

[[[வருண் said...

***பல முறை விலைமாதரிடம் சென்ற ஒருவர் அப்போதெல்லாம் அது தவறென்று
கருத்தில் கொள்ளவில்லை.***

அவர் தவறென கருத்தில் கொள்ளவில்லைனு எவன் சொன்னான் உமக்கு? தவறு செய்பவர்கள் பலர் தான் செய்யும் தவறை தவறு என்று தெரிந்தும் "கில்ட்டி உணர்வுகளுடன்" செய்துகொண்டு இருக்காங்க. அதை சரி என்று ஒருபோதும் அவர்கள் நினைப்பதில்லை.]]]

நன்று..!

***அதே நபர் தன் தவறு மற்றொருவருக்கு தெரிந்து விட்டதே என அவமானப்பட்டு தற்கொலை செய்து கொள்வார்.***

மற்றொருவருக்கு அல்ல! தான் அவமானப்படுத்திய ஒருவனுக்கு, தன் மகளை மணம் முடிக்க நினைக்கும் ஒருவனுக்கு தன் அந்தரங்கம் தெரிந்துவிட்டதே என்று..]]]

அவரும் "மற்றொருவர்தான்.."

[[[*** மிஷ்கின் u r gr8. Confucius ன் கருத்தை திரையில் பிரதிபலித்துள்ளீர்கள்.**

மிஸ்கினை பாராட்டணும்னா பாராட்டிட்டுப் போங்கப்பா. கன்ஃப்யூசியஸை இழுத்துவந்து என்னத்தையோ புதுசா கண்டுபிடிச்சமாரி எதுக்கு இதெல்லாம்?]]]

அவருக்குத் தோணுது.. சொல்லிட்டாரு.. இதுல என்ன தப்பு இருக்கு..?

உண்மைத்தமிழன் said...

[[[SANKAR said...

முருகனும், கர்த்தரும் கைவிட்ட போலிசை "அய்யா" காப்பாற்றும் காட்சி செம காமெடி. கதை சொல்லும் மிஷ்கினுக்கு குரல் கொடுத்திருப்பது இசைஞானிதானே?]]]

தெரியலை.. இன்னொருவாட்டி பார்த்தால்தான் கண்டுபிடிக்க முடியும்..!

உண்மைத்தமிழன் said...

[[[gani said...

//போலீஸ் டீமில் இருக்கும் பலரையும் விட்டுவிட்டு பிச்சை என்ற கயவாளி இன்ஸ்பெக்டர் மீது மட்டும் ஷாஜிக்கு எப்படி திடீர் சந்தேகம் வருகிறது என்பதற்கான காரணம் இல்லை//

மருத்துவமனையில் இருந்து தம்பா தப்பித்த செய்தியும், பிச்சை மட்டுமே காவல்துறையில் இருந்து தொடர்பு கொள்வதும், இதனை கணிக்க செய்திருக்கலாம். ஷாஜியின் நண்பர்தான் பிச்சை பெயரை சொல்லுவார்.]]]

ஓகே.. தகவலுக்கு நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[gani said...

நல்ல விமர்சனம் !]]]

வருகைக்கு நன்றி நண்பரே..!

உண்மைத்தமிழன் said...

[[[Jamal said...

அண்ணன் உத அவர்களுக்கு,

கலந்த பல வருட காலமாக தமிழ் வலைபக்கங்களில் தேடி தேடி வாசித்த எனக்கு, ஒரு கட்டத்தில் அலுப்பு தட்டி தற்போது தங்களயும் ஆருர்மூனாவையும் மட்டுமே தொடர்கிறேன். ராஜு முருகனுக்கு கிடைத்த வட்டியும் முதலும் போன்று தங்களை இணைய வெளி தாண்டியும் அறியபட எனது பிரார்தனைகள்.

ஜமால் முஹம்மது.]]]

தங்களுடைய வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள் ஜமால்..! தொடர்ந்து வாசித்து ஆதரவு தாருங்கள்..!