Showing posts with label விபச்சாரம். Show all posts
Showing posts with label விபச்சாரம். Show all posts

அவரை மாமூன்னுதான் கூப்பிடுவோம் - ஒரு சாலியின் வாக்குமூலம்..!

12-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


பழசு என்றும் புதுசு -10-08-1988


ஆட்டோ சங்கர் அண்ட் கோ எடுத்திருந்த வீடியோ மற்றும் புகைப்பட ஆல்பத்தில் காணப்பட்ட 'பலான பெண்​கள்’ சிலரை சந்தித்து விசாரணை நடத்தினோம்.

''உங்கள் பெயர்?''

''மீனா... மீனா குமாரி!''

''நீங்க எப்படி இந்தத் தொழிலுக்கு வந்தீங்க..?''

''கண்டிப்பா சொல்லணுமா சார்?''

''சரி... ஆட்டோ சங்கர் உங்களுக்கு எப்படி அறிமுகமானார்?''

''ஆட்டோ சங்கர்’னு சொன்னாலே சிரிப்பா வருது சார்... நாங்கல்லாம் அவரை 'மாமூ’னுதான் கூப்பிடுவோம். அவர் எங்களை 'சாலி’னு கூப்பிடுவார். சாலின்னா 'மச்சினி’னு அர்த்தம்.

நானா விருப்பப்பட்டுத்தான் இந்தத் தொழிலுக்கு வந்தேன். அதனாலே மாமூ என்னை அடிக்கடி வந்து தொந்தரவு செய்யாது. ஒரு தடவை நல்லா டிரிங்க்ஸ் சாப்பிட்டுட்டு என்னைத் தொட வந்திச்சு. அந்த நேரம் வேற ஒருத்தர் வர்றதா சொல்லி இருந்தார். அதை மாமூகிட்டே சொன்னதும், 'ஓஹோ... நமக்குத் தேவை துட்டு... துட்டு... துட்டு! இப்ப நான் இங்க இருந்தா... துட்டு கிடைக்காதுல்ல... நான் போயிட்டு அப்புறமா வர்றேன்...’னு சொல்லிட்டுப் போயிடுச்சு.''

''ஆட்டோ சங்கர்... ஸாரி! உங்க மாமூ கொலை பண்ணி இருப்பார்னு எப்பவாவது சந்தேகப்பட்டு இருக்கீங்களா?''

''சத்தியமா இல்லே சார்... பொணங்களைத் தோண்டுறதுக்கு நாலு நாள் முன்னாடிகூட என்னோட வந்து தங்கி இருந்து... ஜாலியாப் பேசிட்டு இருந்திச்சு... கொலை எல்லாம் பண்ணிட்டு, அந்த மாதிரி சிரிக்க முடியும்னு எனக்கு அப்புறம்தான் தெரிஞ்சுது சார்.  அதுக்கு அப்புறம் இன்னி வரைக்கும் நான் தொழிலுக்குப் போகலை... பயமா இருக்குது சார்.''

''உங்க பேர் என்னம்மா..?’

''ஏ.கலைச்செல்வி.''

''பார்த்தா படிச்ச பொண்ணாட்டம் இருக்கீங்க... நீங்க ஏம்மா இந்தத் தொழிலுக்கு வந்தீங்க?''

''ஹ்ஹ... ஹ்ஹா (விசும்பல் ஒலிகளுக்கிடையே) எங்க சாதியில ஒரு நவீன சுயம்வரம் ஏற்பாடு செஞ்சு இருந்தாங்க. அதுக்கு அலங்காரம் எல்லாம் செஞ்சு, எங்க அப்பா என்னை அழைச்சிட்டுப் போனார். எனக்கு அம்மா கிடையாது. நான் பி.ஏ. ஃபர்ஸ்ட் இயர் பண்ணிட்டு இருந்தேன்.   சுயம்வரத்துக்கு வந்திருந்த ஒருத்தர் பேரு நவநீதன். அவருக்கு என்னைப் பிடிச்சதாச் சொல்லி, 'வரதட்சணை ஒண்ணும் வேணாம்’னு அங்கேயே வெச்சுத் தாலி கட்டிட்டார். அப்புறம்தான் தெரிஞ்சுது... அந்த நவநீதன் ஒரு பொம்பளை புரோக்கர்னு.

அந்த நவநீதன், சங்கர் அண்ணன்(?!)கிட்டே வேலை பார்த்துட்டு இருந்தார். சங்கர் அண்ணன் என்னைத் 'தங்கச்சி’னுதான் கூப்பிடும். தொட்டதுகூட இல்லை சார்... ஆனா, நிறையப் பேர் என்னைக் கெடுத்துட்டாங்க. சங்கர் அண்ணன் என்னைப் பார்க்க வரும்போது, இதைச் சொல்லி அழுவேன். அப்பல்லாம் 'இது ஒண்ணும் தப்பில்லே... உடம்புங்கிறது என்ன? சட்டை, பாவாடை மாதிரி... ஆனா, மனசுதான் முக்கியம்... அது களங்கப்படாமப் பார்த்துக்க’னு அட்வைஸ் பண்ணும். ஒரு வகையில் அது உண்மைதானேன்னு நெனைச்சுத்தான் 'இது’ல அட்ஜஸ்ட் பண்ணிட்டு உயிரோட இருக்கேன்...''

''உங்க மேல இப்படி 'தங்கச்சிப் பாசம்’ வெச்சிருந்தவரா, இவ்வளவு கொலைகள் பண்ணினார்..?''

''இதுக்கும் அதுக்கும் ஏன் சார் முடிச்சுப் போடறீங்க? மந்தைவெளி ஆட்கள் மூணு பேரையும் சங்கர் அண்ணனோட ஆட்கள் அடிச்சதை, என் கண்ணாலே பார்த்தேன்... அதை டி.எஸ்.பி. ஐயாகிட்டேகூடச் சொன்னேன். கொலை பண்ணினது எதுவும் எனக்குத் தெரியாது. தெரிஞ்சிருந்தா, அதையும் போலீஸ்ல சொல்லி இருப்பேன்.''

''டி.எஸ்.பி-கிட்டே எப்ப சொன்னீங்க?''

''எப்பன்னு நினைவில்லே... ஏன்னா, போலீஸ்காரங்க அப்பப்ப என்னை எங்கேயாவது கூட்டிட்டுப் போவாங்க.''

''எதுக்கு... விசாரணைக்காகவா?''

''என்கிட்டே என்ன விசாரணை?''

''அப்ப..?''

''ஆமா..! பெரிய அதிகாரிங்ககூட என்னை அனுப்பி  வைப்பாங்க.''

''உங்க பேர்தானே சந்தியா..?''

''யெஸ்... விஷயத்தை நானே சொல்லிடுறேன். மிஸ்டர் சங்கரை நான் மீட் பண்ணினது ரெண்டு தடவைதான். முதல் தடவை 87 அக்டோபர் 6-ம் தேதி ஒரு பார்ட்டி போன் பண்ணிச்சு.

ரெடியா இருந்தப்ப, மிஸ்டர் சங்கர் ஒரு மாருதி கார்ல வந்தார். 'பார்ட்டி யார்?’னு கேட்டதும். ஒரு மினிஸ்டர் பேரைச் சொன்னார். ஒரு பங்களாவில் இறக்கிட்டு, மறுநாள் வர்றதா சொன்னார்.

ஆனா, மறுநாள் வேற ஒருத்தர்தான் அழைச்சுட்டுப்போய், என்னை என் இடத்தில் டிராப் பண்ணினார். அப்புறம், இவர் (சங்கர்) அரெஸ்ட் ஆகறதுக்கு மூணு நாள் முன்னாடி வந்தார். என்கிட்டே, 'நாளைக்கு ஏதாவது பிரச்னை ஏற்பட்டா, 'எனக்கு ஒண்ணுமே தெரியாது’ன்னு மட்டும் சொல்லு’னு சொன்னார். உண்மையில் ஒண்ணும் புரியலை. 'என்ன பிரச்னை?’னு கேட்டதுக்கு, 'பிரச்னை வரும்... எந்த மாதிரினு இப்போ என்னால சொல்ல முடியல’னு மட்டும் சொன்னார்.

அப்போ ஒண்ணும் புரியலை... இப்போ நீங்க சொல்லித்தான் தெரியுது - அந்த மினிஸ்டருடன் நான் இருக்கும்போது வீடியோ எடுத்திருக்காங்கன்னு!

ப்ளீஸ்... என் படத்தையோ என் பெற்றோர் விவரங்களையோ வெளியிடாதீங்க... ஐ’ம் ஸ்டடியிங் ஃபைனல் இயர் எம்.ஏ.! இந்த வருஷத்துடன் 'தொழிலுக்கு’ முழுக்குப் போட்டுட்டு, நார்த் இண்டியாவில் செட்டி​லாகிடப் போறேன். என் பிளான் தவறும் பட்சத்தில், ஐ வில் கமிட் சூஸைட்டு!'' 

(சந்தியா, கலைச்செல்வி இருவர் படங்களும் கிடைத்தும், அவர்கள் விருப்பத்தை மதித்து ஜூ.வி. வெளியிடவில்லை.)

கடைசியாக, வீடியோவில் பார்த்த (முன்னணி) நடிகையை சந்தித்தோம்.

தன் வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்பட்டு, சிலர் தன்னை வலையில் சிக்க  வைத்துவிட்டதாகப் புலம்பினார்.

தொடர்ந்து, ''சில வேளைகளில் சிலரை அட்ஜஸ்ட் பண்ணித்தான் நடக்க வேண்டும். உண்மையில் எனக்கும் ஆட்டோ சங்கருக்கும் தொடர்பு கிடையாது. சில முறை பார்த்து இருக்கிறேன். சில போலீஸ் அதிகாரிகள், வி.ஐ.பி-க்கள் அழைப்பதாகக் கூறி அழைத்துச் செல்வார். கஸ்டமர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட். அதில் சிலர் பிரகாசமான லைட்டை அணைப்பதும் இல்லை. அந்நேரம் வீடியோ எடுக்கப்பட்டு இருப்பது இப்போதுதான் தெரியும்...'' என்று சொல்லி, கிளிசரின் இல்லாமல் அழுதார். அழுதுகொண்டு இருக்கிறார்!

மேற்கண்ட நபர்களிடம் நாம் ஒரு நிருபருக்கு உரிய தோரணையுடன் மட்டுமே விசாரணை நடத்தினோம். இன்னும் இவர்களை போலீஸார் யாரும் வந்து விசாரிக்கவில்லை!

பி.கு: கவர்னர் உத்தரவின் பேரில், திருவான்மியூர் பகுதியின் எஸ்.பி-யாக இருந்த சுப்பையா டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு உள்ளார். இன்னும் சில நாட்களில் போலீஸ் உயர் அதிகாரிகள் இருவர், சர்வீஸில் இருந்து 'வேலை நீக்கம்’ செய்யப்படுவார்கள் என்றும் தெரிகிறது!

- வி.குமார்

 ''என் மவன் போலீஸ்காரங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்திருக்கானாமே...?!'' - ஆட்டோ சங்கரின் (வளர்ப்புத்) தாயுடன் சந்திப்பு...

வேலூர் அருகே உள்ள காங்கேயநல்லூரில் எதேச்சையாக ஆட்டோ சங்கரின் வளர்ப்புத் தாய் (பெரியம்மா) கமலம்மாளை சந்திக்க நேர்ந்தது. ஆட்டோ சங்கரின் தாய் இவர்தான் என்று அவ்வூரில் இருக்கும் நம் நண்பர் அழைத்துப் போய்க் காட்டியபோது அதிர்ச்சி... காரணம், நாம் பார்த்தது - கோயில் மண்டபத்தில் சுருண்டு கிடந்த ஓர் ஏழைப் பெண்மணியை. அவரை எழுப்பி உட்கார வைத்து, நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் (நம்மை அவருக்குப் புரிய வைக்கச் சற்றுக் கஷ்டப்பட்டோம்!)

''நான், எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன். கடைசியில் இப்படிப் பண்ணிட்டானே...'' என்று புலம்பினார் கமலம்மாள். முழுதும் நரைத்திருந்த, எண்ணெய்ப் பசையே காணாத பரட்டைத் தலை. சற்று உள்ளடங்கிய கண்கள். எவ்வளவுக்கு அழுக்காக முடியுமோ, அவ்வளவுக்கு அழுக்கான புடவை. கழுத்தில் மஞ்சள் என்றால் என்னவென்று கேட்கும் தாலிச் சரடு, கால்கள் வீங்கி இருந்தன. மொத்தத்தில் மோசமான, பரிதாபத் தோற்றம். மெல்லிய குரலில் தொடர்ந்தார்.

''என் தங்கச்சி புள்ளதாங்க சங்கரு. என் தங்கச்சி ஜெயலக்ஷ்மி ஆடு மாடுங்க பெத்துப் போடற மாதிரி குழந்தைகளைப் பெத்துப் போட்டுட்டா. சங்கர், அவன் தம்பி மோகன், அவன் தங்கச்சி சாந்தி இவங்களை நான்தான் (எடுத்து) வளர்த்தேன். என்னை மூணு பேரும் அம்மான்னுதான் கூப்பிடுவாங்க. எவ்வளவு கண்டிப்போட அவங்களை வளர்த்தேன் தெரியுமா? சங்கர் இங்கே படிச்சி முடிச்சதும் அவனை வேலூருக்கு அனுப்பிப் படிக்க வெச்சேன். அங்க அவன் பரீட்சையில, இன்னொரு பையனைப் பார்த்து எழுதினப்போ கண்டுபிடிச்சி வூட்டுக்கு அனுப்பிட்டாங்க. அப்புறம் அவன் கொஞ்ச நாள் இங்கேயே தீப்பெட்டி ஒட்டற வேலை செஞ்சிக்கிட்டிருந்தான்... ஒரு தடவை அரக்கோணத்துக்குப் போனான். திரும்பி வரும்போது கூடவே ஜெகதீஸ்வரியைக் கூட்டிட்டு வந்தான். கொஞ்ச நாள் கல்யாணம் கட்டாமலே இருந்ததனாலே, 'எவ்வளவு நாளைக்குத்தான் இப்படியே வெச்சிருப்பே’னு சொல்லி, நானே அவங்களுக்கு இதே கோயில்ல வெச்சிக் கல்யாணம் பண்ணினேன். அப்புறம் அவன் மெட்ராஸுக்குப் போனான். அங்கே முதல்ல பெயின்ட் அடிக்கிற வேலை செஞ்சான். அப்புறம் ஆட்டோ ஓட்ட கத்துக்கிட்டான். அதுக்கப்புறம் அவன் எப்படி இந்த மாதிரி ஆனான்னு எனக்குத் தெரியல...'' என்றார்.

''நீங்க, உங்க பிள்ளை வீட்டுக்குப் (மெட்ராஸ்) போயிருக்​கிறீங்களா?'' என்று கேட்டோம்.

''போயிருக்கேன்... மெட்ராஸ் கோட்டூரில(?) இடது கைப் பக்கம் ஹவுஸிங் போர்டு இருக்கும். வலது கைப் பக்கம் போனா அவன் வீடு வரும். எப்படித்தான் சம்பாதிச்சானோ தெரியலை... வீடு பெரிய பங்களா 'மாதிரி இருந்துச்சு! ரொம்பப் பெரிசு...'' என்று பெருமைப்பட்டுக் கொண்ட அவர், ''உங்களுக்குத் தெரியுமா? என் மவன் போலீஸ்காரங்களுக்கு வீடெல்லாம் கட்டிக் கொடுத்​திருக்கானாமே...?!'' என்றார்.

கடைசியாக நாம் புறப்பட்டபோது, அவர் ''எம் மருமகளைக் கூடவா போலீஸ் பிடிச்சி வெச்சிருக்காங்க...?'' என்று கேட்டார்!

நாம் திரும்பி வரும்போது வயதான ஒருவர், ''இந்தப் பொம்பளை அந்தப் பசங்களை ரொம்ப கண்டிப்பாத்தான் வளர்த்துச்சி. காலையில எழுந்ததும், ஸ்கூல் போற வரைக்கும் தீப்பெட்டி ஒட்டணும். திரும்பவும் மத்தியானம் சாப்பாட்டுக்கு வரும்போது லேபிள் ஒட்டிட்டு சாப்பிட்டுப் பள்ளிகூடம் போகணும். சாயங்காலம் பள்ளிக்கூடம் விட்டு வந்தவுடன், திரும்பத் தீப்பெட்டி ஒட்ட ஆரம்பிச்சா, ராத்திரி தூங்கற வரைக்கும் ஒட்டணும். ரொம்பத்தான் ஜெயில் மாதிரி கண்டிப்பா வெச்சிருந்தா... அதான் அவங்க கெட்டுப் போயிட்டாங்க...'' என்றார்.

''இந்தம்மா கணவர் தங்கராஜ் அந்தக் காலத்திலேயே பெரிய காண்ட்ராக்டர். காரெல்லாம் வெச்சிட்டிருந்தார். அப்படி வாழ்ந்த இவங்க, இப்படி கஷ்டப்படறதைப் பார்த்தா மனசுக்கு ரொம்பவும் கஷ்டமாக இருக்குது சார்...'' என்றார் முதியவர் ஒருவர்.

- இரா.சிவகுமார், டி.ஜி.அனுசுயா

படம்: விடிவெள்ளி ஆறுமுகம்

நன்றி : ஜூனியர்விகடன்-12-06-2011


இந்த இதழ் வெளிவந்தவுடன் அந்தக் குறிப்பிட்ட நடிகை யார் என்பதை அறிந்து கொள்ள பத்திரிகையுலகமும், தமிழகமும் துடியாய் துடித்தது..!

இந்தக் கட்டுரையை எழுதிய வி.குமார், சிவகுமார், அனுசூயா மூவரும் இப்போது எங்கே இருக்கிறார்கள்? யாருக்காவது தெரியுமா..? தெரிந்தால் சொல்லுங்கள்..! முதலில் பாராட்ட வேண்டும்..! இரண்டாவது, யார் அந்தத் திரையுலகத் தாரகை என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்..!(நாட்டுக்கு ரொம்ப அவசியம் பாருங்க..!)

ரொம்பப் பெரிய மனுஷனா ஆக்கிட்டீங்களே..!

09-06-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இது ஆட்டோ சங்கர் கதையின் 3-வது பாகம்.
 
பழசு என்றும் புதுசு - 03-08-1988

'ஆட்டோ’ சங்கரை நேரில் சந்தித்​தோம்! 


''என்னோட முழுப் பேர் கௌரிசங்கர். ஸ்கூல், காலேஜ்லேகூட என்னோட முழுப் பேரைச் சொல்லிக் கேட்டா, யாருக்கும் தெரியாது. சங்கர்ன்னாதான் புரியும். நீங்க நினைக்கறாப்லே எனக்கு அரசியல்வாதிங்க, போலீஸ் அதிகாரிங்க பழக்கம் எதுவும் கிடையாது...'' என்றார் ஆட்டோ சங்கர்!

''நான் பிறந்தது, ஸ்கூல் லைஃப் முடிச்சது எல்லாம் வேலூர் காங்கேயநல்லூர்லதான்... ஹூம்... கிருபானந்தவாரியார் பிறந்ததும் காங்கேயநல்லூர்தான்... நானும் அங்கதான் பிறந்தேன்! கொடுமை இல்லையா?'' என்று கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் அவரே பேசினார்.

''படிப்பிலே ஜஸ்ட் பாஸ்தான். அப்புறம் வேலூர்லே ஒரு காலேஜ்ல பி.யூ.சி. முடிச்​சேன். நீங்களே எழுதி இருந்தீங்களே... படிக்கறப்பவே கஞ்சா, சாராயம் எல்லாம் பழக்கமாயிடுச்சு... தொடர்ந்து படிக்கக் காசில்லே... இதுக்கிடையிலே எங்க அம்மா வேறொருத்தர்கூட வாழ ஆரம்பிச்சிட்டா... இதனாலே வெறுத்துப்போய் 'கெட்டும் பட்டணம் சேர்’ன்னு சொல்றாப்லே மெட்ராஸ் வந்து வேலை தேடினேன்... வெள்ளையடிக்கிற வேலைதான் கிடைச்சது. பார்த்தேன்.

எனக்குச் சின்ன வயசிலேயே பணக்காரனா ஆக ஆசை உண்டு... சொந்தமா ஒரு வீடு, கார் இப்படி...! வெள்ளையடிக்கிற வருமானத்திலே இதெல்லாம் கிடைக்குமா என்ன? இதை நினைச்சா வருத்தமா இருக்கும். அப்பத்தான் வில்சன் பழக்கமானான். வில்சன், திருவான்மியூர் ஏரியாவிலே சாராய வியாபாரம் பண்ணிக்கிட்டிருந்தான். சரக்கு சாப்பிடப் போறப்போ பழக்கம்... ஒரு நாள் வில்சன், 'என்னப்பா... நம்ம கூட வேலை பாக்கறியா?’ன்னு கேட்டதும் கொஞ்சமும் யோசிக்காம 'சரி’ன்னு சொல்லிட்டேன்.

வில்சன் என்னை வேலைக்காரன் மாதிரி நடத்தாம, பார்ட்னர் மாதிரி நடத்தினான். அதுக்கு முக்கியமான காரணம், எனக்கு இங்கிலீஷ் பேசத் தெரிஞ்சதுதான்! டெய்லி நைட்லே வேலை முடிச்சுட்டு எல்லாரும் உட்கார்ந்து சரக்கு சாப்பிடுவோம். அப்போ அவங்களுக்குப் புரியுமோ புரியாதோ, என்னை இங்கிலீஷ்லே பேசச் சொல்லுவாங்க...

எத்தினி நாளைக்குத்தான் சரக்கை உள்ளே தள்ளிட்டு இங்கிலீஷ் பேச்சையே கேட்டுக்கிட்டு இருக்கறது... பொம்பளையைத் தள்ள வேணாமா...! தேடி அலைய ஆரம்பிச்சோம். அப்பப்ப பொம்பளைங்களைத் தேடிப்போறது கஷ்டமா இருந்திச்சு. அதனாலே வில்சன் சொன்னாப்லே... ரெண்டு பொம்பளைங்களை அழைச்சு வந்து பெர்மனன்டா வைச்சிக்கிட்டோம். ரெண்டு பொம்பளைங்களும் பொதுச் சொத்து! யாரும் எப்பவும் உபயோகிச்சுக்கலாம். நாங்க நாலஞ்சு பேர்தான்.

எங்களைத் தவிர சில பேர் 'பொண்ணு வேணும்’னு கேட்க, 'துட்டுக் குடு’னு வாங்கிட்டு, அவங்களையும் நம்ம பொண்ணுங்ககிட்டே அனுப்பிச்சோம். இப்படியா ரெண்டாவது தொழில் அறிமுகமாச்சு. ரெண்டும் நல்லா பிக்கப் ஆயிடுச்சு!

அந்த நேரத்திலதான் எனக்கும் வில்சனுக்கும் கொஞ்சம் துட்டுத் தகராறு வந்தது. அதுலே 'நீ என்ன பெரிய கொம்பா...? போடா...’ன்னு சொல்லிட்டுத் தனியாவே தொழில் பண்ண ஆரம்பிச்சேன்...'' என்று சொல்லிக்கொண்டே போனவர்,

''ஆனா, ஒரு விஷயம் சார்... பத்திரிகைக்காரங்க பண்றது கொஞ்சங்கூட நியாயமில்லை. இஷ்டத்துக்கு எழுதறீங்க... உண்மையிலேயே எனக்கு எங்க ஏரியா வட்டச் செய​லாளர் பெயர்கூடத் தெரியாது... ஆனாக்கா ஏதாச்சும் மீட்டிங்னா வந்து டொனேஷன் கேப்பாங்க, குடுப்பேன்... அவ்வளவுதான்... அதுக்குப் போய் எம்.எல்.ஏ-வுக்குக் கூட்டிக் குடுத்தேன்... மந்திரிகளுக்கு சப்ளை பண்ணினேன்னு ரொம்பப் பெரிய மனுஷனா ஆக்கிட்டீங்​களே..!'' என்றார்.

சிறிது மௌனத்துக்குப் பிறகு, ''எங்கிட்டே கிட்டத்தட்ட எட்டுப் பொம்பளைங்க உண்டு. எல்லாம் லோஃபர்ங்கதான்... அதுகளையே மிடி, சல்வார் டிரஸ் போடச் சொல்லி அனுப்புவேன். புதுப் பொண்ணா இருந்தா... தொழில்லே முரண்டு பண்ணக்கூடாது, ஓடிடக் கூடாதுங்கறதுக்காகக் கொஞ்ச நாள் என் கீப் மாதிரி வைச்சுப்பேன்... ஆனா, லலிதா நம்மகிட்டே ரொம்ப அட்டாச்டா இருந்தா, ஏதோ என் வொய்ஃப் மாதிரி! 'நீங்க வேற பொம்பளையைத் தொடக் கூடாது’ங்கற மாதிரி கண்டிஷன்ஸ் எல்லாம் போட்டா. எனக்கும் அவமேல ரொம்ப 'இது’தான். ஆனா, அந்த லலிதா... என்னோட வேலைக்காரன் மாதிரியிருந்த சுடலைக் கூட... ச்சே... வெறுத்துட்டேன்...'' என்றவர் திடீரென்று, ''என்னோட குழந்தைகளைப் பாத்தீங்களா? ரொம்ப துடிப்பானவங்க சார்... படிப்பிலேயும் நல்லா ஸ்கோர் பண்றாங்க... ம்... கான்வென்ட்லே படிக்கிற அதுங்களையும் ஸ்கூலை விட்டு வெளியே அனுப்பிடுவாங்க,  இல்லையா...?'' என்று கேட்டார்.

''அது சரி... இப்ப வருத்தப்படறதுலே என்ன இருக்கு? முன்னேயே யோசிச்​சிருக்​கணும்... அந்தச் சுடலை கூட லலிதா ஒரு நாள், ரெண்டு நாள் இருந்தா பரவாயில்லே... இழுத்துட்டுப் போய்த் தனிக்குடித்தனமே பண்ண ஆரம்பிச்சுட்டா... சரி, குடித்தனம் பண்றதோட நின்னுக்குவாங்கனு நினைச்சா, போட்டியா நம்ம 'தொழிலையே’ தனியா பண்ண ஆரம்பிச்சுட்​டான் சுடலை. இதனாலே நம்ம வாடிக்கை ரொம்ப பாதிச்சுடுச்சு... அதான் ஒரு நாள் ஃப்ரெண்ட்லியா வரச்சொல்​லித் தண்ணியடிக்கச் சொன்னேன். அப்ப ரொம்ப போதையிலே நம்மகிட்டே தப்பா பேசிட்டாப்லே... கழுத்தை நெரிச்சுட்டேன்... குளோஸாயிட்டான்... பாடியை என்ன பண்ற​துன்னு தெரியாமத்தான் எரிச்சேன்...

அப்புறம் சுடலையைத் தேடி லலிதா வந்தா, சுடலையை குளோஸ் பண்ணியது அவளுக்கு எப்படியோ தெரிஞ்சிருந்தது. அதனாலே அவளையும் தீர்த்துட்டேன்... இந்தச் சுடலையும், ரவிங்கற ஆளும் ரொம்ப தோஸ்த். நான் சுடலையை என் வீட்டுக்குக் கூப்பிட்ட விஷயத்தை ரவிகிட்டே சொல்லிட்டு வந்திருக்கான் போல! அதனாலே ரவி வந்து எங்கிட்டே, 'சுடலை உன்னைப் பார்க்க வந்துட்டுத் திரும்பலையே... என்ன பண்ணினே?’னு கேட்டான். விதி... அவன் கதையையும் முடிக்க வேண்டியதாயிடுச்சு...! ஆனா இந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் இருக்காங்களே... அவங்களைக் கொலை பண்ணணும்னு நான் நெனைச்சுக்கூடப் பாக்கலைங்க...

உண்மையிலே என்னன்னா, இந்த மூணு பேரும் அடிக்கடி வில்சன் கூடச் சுத்தற பசங்க... எங்கிட்டேயே, ஒரு தடவை 'ஒரு பொண்ணு வேணும்’னு கேட்டுக் கூட்டிட்டுப் போயிட்டுக் காசு குடுக்காம மகாபலிபுரம் ரோட்டுப் பக்கமா தனியா விட்டுட்டு வந்துட்டானுக... அந்தப் பொண்ணு அழுதுகிட்டே நடந்து வந்து விஷயத்தைச் சொல்லிச்சு. பழிவாங்கச் சரியான நேரம் பாத்துக்கிட்டு இருந்தோம். ஒரு நாள் மாட்டினாங்க... நல்லா போதைலே வந்த பசங்களை நம்ம ஆட்கள் பாத்து வம்புக்கிழுத்து அடிக்க, அவங்க அடிக்க... அந்த மோகன் கை ஒடிஞ்சிப் போச்சு... உடனே நான் அடிக்கிறதை நிப்பாட்டச் சொல்லிவிட்டு ஒரு வண்டிலே தூக்கிப் போடச் சொல்லி அனுப்பிட்டேன்... அப்பவே ஒருத்தனுக்குப் பேச்சுமூச்சு இல்லே... வண்டி போன கொஞ்ச நேரம் கழிச்சுதான் இதை பாபு என்கிட்டே சொன்னான்... அதும் எப்படி? 'அண்ணே... ஒருத்தன் ஆள் குளோஸ் போல... அப்படியே அனுப்பிட்டா நாம மாட்டிக்குவோம்’னு சொன்னான். உடனே நம்ம அம்பாஸடர் கார்லே துரத்தி அடையாறு பால் பூத் இல்லே... அங்க மறிச்சு மூணு பேரையும் அள்ளி கார்லே போட்டு எங்க வீட்டுக்குள்ளே கொண்டாந்து போட்டுட்டோம்... மறுநாள் காலைலே போய் பார்த்தப்ப... ரெண்டு பேர் செத்துப் போயிருந்தாங்க! கோவிந்தராஜ் மட்டும் கொஞ்சம் முனங்கிக்கிட்டே தண்ணி கேட்டான்... 'ரெண்டு பேர் செத்து ஒருத்தன் பிழைச்சா... நம்ம கதி என்னாகறது?’ங்கற எண்ணத்துலே, அவனையும் குளோஸ் பண்ணிட்டேன்...'' என்று கொஞ்சமும் தயங்​காமல் சொல்லிக் கொண்டே போனார். தொடர்ந்து அவரே, ''புதைக்கறதுலே ஒண்ணும் பிரச்னையில்லை... ஆனா, இந்த சம்பத் பொண்டாட்டிதான் அங்க இங்க அலஞ்சி நம்மளை மாட்ட வெச்சிடுச்சு...'' என்றார்.

சற்று நேர மௌனத்துக்குப் பிறகு தொடர்ந்தார் சங்கர்: ''லோக்கல் போலீஸுக்குத் 'தொழில்’ சம்பந்தமா மாமூல் போயிடும்... நான் கொலை பண்ணின விஷயம் எதுவும் தெரியாது... ஆனாக்கா அந்த சம்பத் பொண்டாட்டி குடுத்த புகாரை வெச்சி என்னை ஸ்டேஷனுக்குக் கூப்பிட்டாங்க. ரெக்கார்ட் பண்ணாம என்னைப் 14 நாள் வெச்சிருந்தாங்க சார்... ஒவ்வொருத்தரா டெய்லி ஒரு கட்சிக்காரங்க என்னை ஜாமீன்ல அழைச்சுட்டுப் போக முயற்சி பண்ணாங்க... இன்ஸ்பெக்டர் விடமாட்டேன்னுட்டாரு... நான், பாபு, ஜெயவேல் மூணு பேரும்தான் மாட்டினோம். மூணு பேரையும் தனித்தனியா கூப்பிட்டு விசாரிச்சாங்க... ஆனா, லாக்கப்லே போடறப்போ மூணு பேரையும் சேத்தே போட்டாங்க... அதனாலே எங்களுக்குள்ளே 'போலீஸ்கிட்டே என்ன சொல்றது’ன்னு பேசி அதுபடியே அப்போதைக்கு ஏமாத்திட்டோம்... இப்ப மாட்டிக்கிட்டோம்...'' என்று கூறினார்.

கடைசியாக, ''சத்தியமா எனக்கும் அரசியல்வாதிங்​களுக்கும் சம்பந்தமே கிடையாது. ப்ளூ ஃபிலிம், ஆல்பம் தயார் பண்றது இதெல்லாம் கதை... நம்பா​தீங்க...'' என்றார் ஆட்டோ சங்கர்!

சைதாப்பேட்டை சப்-ஜெயிலில் இருந்த சங்கரை நாம் சந்தித்தபோது சொன்ன விஷயங்கள்தான் இவை.

இப்போது சங்கர் சென்னை சென்ட்ரல் ஜெயிலில் பலத்த பாதுகாப்போடு இருக்கிறார். அரசியல்வாதிகளின் தொடர்பு இல்லை என்று ஆட்டோ சங்கர் சொல்கிறார். என்றாலும் அவருக்கு ஏதேனும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதால், சங்கருக்குக் கொடுக்கப்படும் உணவு வகைகளை அதிகாரிகள் சாப்பிட்டுப் பார்த்த பிறகே வழங்குகிறார்கள்.

- வி.குமார்

நன்றி : ஜூனியர்விகடன்-08-06-2011

புள்ளி..! பிறை..!! பவுர்ணமி..!!!

01-06-2011
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஆட்டோ சங்கர் பற்றிய ஜூனியர்விகடனின் 2-வது கட்டுரை இது..! ஜர்னலிஸம் என்றால் என்ன என்பதையும், புலனாய்வுப் பணி என்றால் என்ன என்பதையும் ஜூனியர்விகடனை வைத்துத்தான் அந்தக் காலத்தில் அளவிட்டார்கள்..!

அதற்கான காரணங்கள் அவர்களின் இந்தக் கட்டுரையிலேயே தென்படும். படித்துப் பாருங்கள்..!
 பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 13: 20.7.88
 

திருவான்மியூர் கொலைகளைத் தொடர்ந்து விசாரணைகள் நடத்தியதில்... ஏழு ஆண்கள், மூன்று பெண்கள் என்று மொத்தம் 10 பேரை (எண்ணிக்கை கூடலாம்!) கொலை செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கௌரி சங்கர் என்கிற (ஆட்டோ) சங்கர் மற்றும் இவரது கூட்டாளிகள் சுமார் எட்டு பேரும் கைது செய்யப்பட்டனர். பி.யு.சி. வரை ஒரு கல்லூரியில் படித்துவிட்டு, கரஸ்பாண்டன்ட் கோர்ஸில் பி.ஏ. (பொருளாதாரம்) படித்து வருகிறார் சங்கர்!

தந்தை தங்கராஜ், கட்டட மேஸ்திரி. தாயார், ஒரு நர்ஸிங்ஹோமில் ஆயா. ஏழைக் குடும்பம். எனவே, பி.யு.சி. முடித்ததும் வேலை தேடி அலைந்தார் சங்கர். எந்த வேலையும் கிடைக்கவில்லை. ஆனாலும் வீடுகளுக்கு வெள்ளையடிப்பது, கட்டட வேலைகளுக்கு எடுபிடியாக... என்று பல்வேறு வேலைகள் பார்த்து வந்தார். கல்லூரி நாட்களிலேயே கஞ்சா, சாராயம் என்று எல்லாப் பழக்கங்களும் உண்டு.


இப்படித்தான் ஒரு நாள், ஒரு வீட்டுக்கு வெள்ளையடித்து, அதில் கிடைத்த கூலியில் நிறைய சாராயம் குடித்துவிட்டு ரோட்டில் கிடந்தார். அந்த வழியே போன போலீஸார் இரண்டு பேர், சங்கரைத் தூக்கிப் போய் ஸ்டேஷனில் போட்டார்கள். போதை தெளிந்து எழுந்தவரிடம், ''குடிச்சுப் போட்டுக் கலாட்டாவா பண்றே...?'' என்று லத்தியடி கொடுக்க, சங்கர், ''நானா... கலாட்டாவா? ஐயோ... கிடையாதே சார்!'' என்றார். அதற்கு கான்ஸ்டபிள்கள், ''அதைச் சும்மா சொன்னா எப்படி...? 'முறைப்படி’ சொல்லு...'' என்றதும், சட்டென்று புரிந்துகொண்ட சங்கர், தன் பையிலிருந்த ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டு 'விடுதலை’யானார்!

மற்றொரு சமயம் குடித்துவிட்டு, நிஜமாலுமே கலாட்டா செய்து இரண்டு பேரை அடித்துக் காயப்​படுத்திவிட்டார். தொடர்ந்து, நேராக ஸ்டேஷன் போய் 'தோஸ்த்’ கான்ஸ்டபிள்களிடம் 'முறைப்படி’ விஷயத்தைச் சொன்னார். விளைவு? அடிபட்ட இரண்டு பேரையும் 'குடித்துவிட்டுக் கலாட்டா செய்ததாக’க் கூறி லாக்கப்பில் அடைத்து​விட்டார்கள்!

இந்தச் சூழ்நிலையில்தான் ஒரு நண்பன் மூலம் ஆட்டோ ஓட்டக் கற்றுக் கொண்டார். 83-ம் ஆண்டு மார்ச் மாதம் ஆட்டோ ஓட்டிச் சென்று ஒரு பெரியவர் மீது மோதிவிட, 'ராமநாதன்’ என்ற பெயர் கொண்ட அவர், படுகாயத்​துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தே போனார். உடனே சங்கர், டிராஃபிக் இன்வெஸ்டி​கேட்டிங் ஆபீஸரிடம் 'முறைப்படி’ சரணடைய, இறந்துபோன பெரியவர் 'அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்த’தாக வழக்கில் எழுதப்பட்டது!

ஒரு விதத்தில் இதுதான் சங்கரின் முதல் கொலை!

பிறகுதான் சங்கர், கள்ளச் சாராயத்துக்கும், விபசாரத்துக்கும் பேர் போன திருவான்மியூர் பகுதிக்கு வந்தார். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலாகி இருந்தது. அந்த நேரத்தில், 'திறமையாகவும், துணிச்சலாகவும் ஆட்டோ ஓட்ட இளைஞர்கள் தேவை. திருமணம் ஆகாதவர்கள் மட்டும் அணுகவும்’ என்று ஒரு விளம்பரம், நாளிதழ் ஒன்றில் வந்தது. குறிப்பிட்ட முகவரிக்குப் போனார் சங்கர். அது அ.தி.மு.க. (இப்போது ஜானகி அணி) பிரமுகர் ஒருவரின் முகவரி. அவரின் தொழில் - சாராயம் விற்பது!

சங்கரின் தோற்றத்தைக் கண்டதும் பிரமுகருக்குப் பிடித்துவிட்டது. உடனே வேலை கிடைத்துவிட்டது. ஆட்டோவில் சாராயம் ஏற்றி வருவது... போவதுதான் வேலை.

நாளுக்கு சுமார் 200 ரூபாய் வருமானம். குடிக்கச் சாராயம் இலவசம். பண நடமாட்டம் அதிகரிக்க, விபசாரிகளின் நட்பு ஏற்பட்டது! அவ்வப்போது போலீஸ் பிடிக்கும்​போது எல்லாம், 'முறைப்படி’ சொல்லி வெளிவந்துவிடுவார். அதையும் மீறிப்​  போனால், பிரமுகர் தலையிட்டு வெளியே அழைத்து வந்துவிடுவார்.  இதனால் ஆட்டோ டிரைவர்களில் பலரும் போலீஸ் பிரச்னை எனில், சங்கரிடம்தான் வருவார்கள். சாரும் அதைத் தீர்த்துவைப்பார். இப்படியாகக் கொஞ்சம் 'ஹீரோ’ ஆனார்.

ஒரு முறை அ.தி.மு.க. பிரமுகருக்காக ஓர் இளம் பெண்ணை ஏற்பாடு செய்து கொடுத்தார் சங்கர். என்ன நடந்ததோ தெரியாது... இரண்டு நாள் கழித்து நாளிதழ்களில் 'இளம் பெண் வயிற்று வலி தாங்காமல் தூக்குப் போட்டு இறந்தாள்’ என்ற செய்தி வந்தது!

உண்மையில் என்ன நடந்ததென்று தெரியவில்லை. ஆனால், '85-ம் ஆண்டு மத்தியில் நடந்த இந்த சம்பவத்துக்குப் பிறகுதான், திருவான்மியூர் பகுதி விபசாரிகளுடன் சங்கரின் தொடர்பு நெருக்கமானது.

இதற்கிடையில் சுந்தரி என்ற பெண்ணைத் திருமணம் செய்து​கொண்​டார். சுந்தரி 82-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்துவிட்டாள்! (அவள் நினைவாகத் தன் வீட்டுக்கு 'கீத சுந்தரி’ என்று பெயரிட்டுள்ளார்!)

12 வயதுக்கு மேற்பட்ட எத்தனை வயதுடைய  பெண்ணும் தனியாக வந்தால், ஆட்டோவில் ஃப்ரீயாக ஏற்றிச் செல்லும் வழக்கம் உடையவராம். ஒரு முறை பெரிய மழையில் தனியாக மாட்டிக் கொண்ட ஜெகதீஸ்வரி என்ற பெண்ணைத் தன் 'சம்பிரதாயப்படி’ ஓசியில் ஆட்டோவில் கொண்டுபோய் வீட்டில் இறக்கி உதவ... காதல் மலர்ந்து கல்யாணமும் செய்துகொண்டார். திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் நடந்த திருமணத்துக்கு சுமார் 100 போலீஸார் வந்திருந்தார்களாம். பல கான்ஸ்டபிள்களுக்கு அழைப்பிதழோடு 100 ரூபாயும் கவரில் வைத்து  அனுப்பி​யதாகக் கூறப்படுகிறது!


திருமணமான பிறகு, சங்கரின் தொழிலில் பெரிய முன்னேற்றம். தனியாகவே சாராய விற்பனை, விபசாரத் தொழில் நடத்த ஆரம்பித்​தார். இதற்கு முக்கிய பலமாக இருந்தவர் அரசியல் வி.ஐ.பி. ஒருவர். தன் தொழிலுக்குத் தோதான 'வொர்க்கிங் பார்ட்னர்’ சங்கருக்குத் தேவைப்பட்டது. அப்போதுதான் பாபு கிடைத்தார்.

சுமார் 12 வயதில் இருந்தே ஆட்டோ ஓட்டி(!) வந்த பாபு,  கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர். நடேச நாடார் என்பவரைக் கொலை செய்ததற்காகக் கைது செய்யப்​பட்டார். உடனே சங்கர் போய், பாபுவை ஜாமீனில் எடுத்தார். லாக்கப்​பில் இருந்து மீட்கப்பட்டதால் விசுவாசம் கொண்ட பாபுவை அடுத்து, ஏரியாவில் கொஞ்சம் சீனியர் 'மாமா’வான சுடலையையும் தன் பார்ட்னராகச் சேர்த்துக் கொண்டார் சங்கர்.

வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தனியாக வரும் பெண்களை குறிப்பிட்ட ஆட்டோ டிரைவர்கள் பார்த்தால் உடனே ஆட்டோவில் ஏற்றி, சங்கரிடம் விட்டுவிட்டுப் போவார்கள். எனவே, தினசரி புதுப் பெண்கள், புது வாடிக்கையாளர்கள்... என்று தொழில் அமோகமாக நடந்தது.

இது பற்றி சங்கர் கூறுகையில், ''சின்னப் பொண்ணு, நடுத்தரம், பழைய கிராக்கினு ஏக ரகம் உண்டு. அதனாலே அடையாள வார்த்தைகள் (Code words) வெச்சிக்கிட்டோம். புள்ளி, பிறை, பௌர்ணமி... இப்படி. அதாவது புள்ளின்னா இருபது வயசுக்குள்ள... பிறைன்னா முப்பது வயசுக்குள்ள... பௌர்ணமின்னா அதுக்கு மேலே...'' என்றார்.

இப்படித் தொழில் ஆரம்பித்த ஒரே வருடத்தில் சுமார் 30 லட்ச ரூபாய் சம்பாதித்துவிட்டாராம். ''அதிலே​தான் வீடு கட்டினேன்...'' என்று கூறும் சங்கரின் வீட்டு கிரகப்பிரவேசத்துக்கு, டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்​பெக்டர் உள்படப் பல போலீஸார் வந்தனர்!

அதன் பின் ஆறு மாதம் சங்கருக்கு ஏழாம் இடத்தில் சனி திசை! காரணம், தயாநிதி என்ற சப்-இன்ஸ்பெக்டர் திருவான்மியூருக்கு மாற்றலாகி வந்தார். சங்கரின் நடவடிக்கையை நிறுத்தி, சங்கரை மொட்டை போட்டு நடு ரோட்டில் வைத்து, அடித்து உதைத்து வழக்கு போட்டார். உடனே ஒரு (மாஜி)மந்திரி தலையிட்டு சங்கருக்கு சப்போர்ட் செய்ய, 'விட முடியாது’ என்று மறுத்துவிட்டார் தயாநிதி. விளைவு? தயாநிதிக்கு டிரான்ஸ்ஃபர்!

ஆனாலும் சங்கர் தனக்கு ஏற்பட்ட இந்தப் பிரச்னையால் மனம் ஒடிந்து நிறையக் குடித்தார். இதனால் 'தொழில்’ பாதித்தது. அதற்குப் பதில் தொழிலை சுடலை என்பவர் கவனித்து வந்தார். அந்த நேரம்தான் லலிதா என்ற 'புது கிராக்கி’ பெங்களூரில் இருந்து வந்தாள். சங்கருக்கு லலிதாவைப் பார்த்த மாத்திரத்தில் பிடித்துவிட்டது. பழைய உற்சாகம் திரும்பியது. அவளுடனே சுற்றினார். ஆனால், சங்கரை லலிதாவுக்குப் பிடிக்கவில்லை. சுடலையுடன் பழக ஆரம்பித்தாள். விளைவு? கோபம் கொண்ட சங்கர், சுடலையை ஒரு டவலால் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். பின்னர் ஜனவரி மாதத்தில் ஒரு நாள் லலிதாவையும் கொன்றுவிட்டார். லலிதாவின் பிணத்தைப் புறம்போக்கு நிலத்தில் வைத்துப் புதைத்து, தளம் எல்லாம் பூசி ஒரு குடிசையும் கட்டினார். அடுத்த சில தினங்களில் மேலும் ஏழெட்டுக் குடிசைகள் கட்டி அங்கே இருந்த ஏழைகளுக்கு மாதம் 20 ரூபாய் வீதம் வாடகைக்கு விட்டுவிட்டார்!


லலிதாவைப் புதைத்த இடத்தில் (வீட்டில்) வயதான ஒரு பெண்மணி குடியிருந்தார். விசாரணையின்போது (ஜூலை 14-ம் தேதி வியாழன் அன்று) மேற்படி லலிதாவைக் கொன்ற விஷயம் தெரிந்தது. எனவே, மறுநாள் ஜூலை 15-ம் தேதி காலை குறிப்பிட்ட இடத்தில் தோண்டினார்கள். தோண்டுவதற்கு முன்பு குடியிருந்த கிழவியிடம் விஷயத்தைச் சொன்னதுதான் தாமதம்... ''ஐயோ... ஐயோ! இந்த இடத்திலேதான் நான் சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன். இந்த இடத்திலே பொணமா...?'' என்று அலறியபடி ஓடியே போனார்!

தோண்டிய இடத்தில் எலும்புக்​ கூடு கிடைத்தது. அங்கேயே போஸ்ட்​மார்ட்டம் நடந்தது.  ஆட்டோ டிரைவர் ரவி, ''சுடலை அன்னிக்கு உன்னைப் பார்க்க வந்தானே... அப்புறம் ஆளையே காணோமே?'' என்று கேட்க... பிணமாக்கப்பட்டு புதைக்கப்பட்டார் ரவி!

இந்த ரவியைக் கொல்லும்போது இந்திரா என்ற (விபசார) பெண் உடன் இருந்தாளாம். ரவி கொலையான ஆறு நாட்கள் கழித்து இந்திரா 'தீப்பிடித்து எரிந்து’ இறந்துவிட்டாள்! சங்கரின் வீட்டிலேயே நடந்த இந்த இறப்பு  பற்றி போலீஸ் புகார் பெறவும் இல்லை... எவ்வித விசாரணையும் செய்யவும் இல்லை.

கடைசியாகத்தான் சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகிய மூவரும் கடந்த 29.5.88 அன்று சங்கரின் குரூப்பால் கொலை செய்யப்பட்டார்கள். இம்மூவரையும் கொல்வதற்குக் காரணம்?


சங்கரைப் போலவே வில்சன் என்று ஒரு வஸ்தாது அதே ஏரியாவில் இருந்தார். அவருடைய நண்பர்கள் (கையாட்கள்?)தான் இந்த சம்பத், மோகன், கோவிந்தராஜ் என்று போலீஸார் கூறுகிறார்கள். அந்த வில்சனை ஏப்ரல் மாதத்தில் இருந்து காணவில்லை. அது பற்றி விசாரிக்க வந்த மூவரையும்தான் சங்கர் அண்ட் கோ தீர்த்துக் கட்டியது! ஆக, வில்சன் என்ற நபரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிய வருகிறது.

மொத்தத்தில்...

மேற்படி கொலைகளுக்கு முழுக் காரணம் போலீஸார் என்றே கூறலாம். ஆரம்பத்தில் இருந்தே போலீஸாருடன் 'முறைப்படி’ தன் உறவை வளர்த்து வந்திருக்கிறார் சங்கர். உதாரணமாக டி.ஐ.ஜி. ஒருவர் உபயோகித்து வந்த கார் ஒன்றை ஏலத்தில் எடுத்துள்ளார். அந்த காரில்தான் விபசாரிகள், சாராயக் கடத்தல் எல்லாம் நடத்தி வந்தார் சங்கர். இந்த காரை ரோட்டில் கண்டதும் அட்டென்ஷனில் சல்யூட் அடிக்கும் கான்ஸ்டபிள்கள் நிறையப் பேர். இந்த காரை சங்கர் ஏலம் எடுக்கக் காரணமாகவும், இந்தக் கொலைகளை மறைக்க உடந்தையாக இருந்ததற்காகவும் ஒரு கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், ஒரு டி.எஸ்.பி. ஆகியோ​ரும் தண்டிக்கப்படுவார்கள் என்றே தெரிகிறது.

இவர்களைத் தவிர, அரசியல் பிரமுகர்கள் நான்கு பேர் சங்கர் விஷயத்தில் நிறைய உதவிகள்(?) செய்து இருப்பதாகத் தெரிகிறது. பல போலீஸ் 'தலை’களும் இதில் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. எனவே, முக்கியமாகிவிட்ட இந்த வழக்கு துரிதமாக நடக்கும் பொருட்டு, விரைவில் சி.பி.சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட இருக்கிறது. விரைவில், மேலும் பல 'எலும்புக்​ கூடுகள்’ வெளிவரலாம்!

நன்றி : ஜூனியர்விகடன்-01-06-2011

ஆட்டோ சங்கரின் கொலைகள் வெளியான வரலாறு-1

31-05-2011 

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கள்ளச்சாராயம், விபச்சாரம், கடத்தல், கொலை, தாதாயிஸம் போன்றவைகளையெல்லாம் கேள்விப்பட்டும், திரைப்படங்களில் பார்த்தும் இப்படியெல்லாம் செய்ய முடியுமா என்றெல்லாம் எங்களுக்கு நாங்களே கேட்டுக் கொண்டிருந்த காலத்தில், ஆட்டோ சங்கர் என்கிற இந்த இளைஞரின் வழக்கு தமிழகத்தில் வெளியானபோது நிசமாகவே பகீரென்றானது..!

புலனாய்வு பத்திரிகைகள் அரசியல் கூட்டணிகளுக்கும், பிரிவுகளுக்கும், கொஞ்சம் பரபரப்பு, கிசுகிசுகளுக்கும் தீனி போட்டுக் கொண்டிருந்த காலத்தில் அவைகளின் மூலமாகவே சில படுகொலைகள் வெளியானதை பார்த்து நிஜமாகவே எனக்கு ஆச்சரியம்தான்.. அந்த வகையில் இந்த ஆட்டோ சங்கர் செய்த படுகொலைகளை வெளிக்கொணர முதல் முயற்சியாக இருந்த ஜூனியர்விகடன் பத்திரிகையாளர்களுக்கு எனது பாராட்டுக்கள்..!

அந்த முதல் கட்டுரை வந்த பிறகு ஆட்டோ சங்கரின் வழக்கு முடிவடையும்வரையிலும் அப்போதைய பல்வேறு பத்திரிகைகளிலும் நாள் தவறாமல் இடம் பிடித்தவர் ஆட்டோ சங்கர்..! கட்சியினரின் ஆதரவு, லஞ்சத்திற்கு அலையும் காவலர்களின் கூட்டணியும் இல்லாமல் இருந்திருந்தால் ஆட்டோ சங்கரின் வாழ்க்கை இந்த அளவிற்கு மாறிப் போயிருந்திருக்காது. எப்போதும் புறச் சூழல்களை சுத்தமாக மறைத்துவிட்டு நபர்கள் செய்யும் தவறுகளை மட்டுமே குறிப்பெடுத்துக் கொள்வது நமது வழக்கமாச்சே..!

ஆட்டோ சங்கர் பிடிபட காரணமாக இருந்த சம்பவங்களை அன்றைக்கே ஜூனியர்விகடன் கட்டுரையாக வெளியிட்டிருந்தது. அதே கட்டுரை இப்போது மீண்டும் 'பழசு இன்றும் புதுசு' தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரையில் படிக்காதவர்கள் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்..!

பழசு இன்றும் புதுசு - 12 : 13.7.88

ஜூன் 27-ம் தேதி காலை 10.30 மணி... ஜூ.வி. அலுவலகத்துக்குப் புகார் கொடுக்க வந்தவர் பெயர் விஜயா!

தன் கணவர் சம்பத், தன் சகோதரர் மோகன், தன் கணவரின் நண்பர் கோவிந்தராஜ் ஆகிய மூவரையும் கடந்த ஒரு மாதமாகக் காணவில்லை என்று விஜயா சொன்னார். ''எப்படியாவது என் வீட்டுக்காரரைக் கண்டு பிடிச்சுக் குடுங்கய்யா...'' என்று விஜயா கதறி அழுதது,  மனதுக்குக் கஷ்டமாக இருந்தது. பிறந்து இரண்டே  நாளான குழந்தையையும் தூக்கி வந்திருந்தார்!

''என்ன சொல்லிவிட்டுப் போனார்கள்?'' என்று கேட்டதற்கு, ''திருவான்மியூர்வரை போறோம்னு சொன்னாங்க. போனவங்க, மறுநாள் வரைக்கும் திரும்பி வரலை. என்ன ஆச்சோன்னு கவலையோட இருந்தப்ப, மூணு பேரையும் ஏத்திட்டுப்போன ஆட்டோ டிரைவர் சேகர் வந்தாப்ல. சேகர் எங்களுக்கு நல்லாப் பழக்கமானவர்தான். அவர்தான், 'திருவான்மியூர்ல ஒரு ஹோட்டலுக்குப் போனோம். அங்க மது சாப்பிட்டாங்க. அப்ப திடீர்னு நாலைஞ்சு பேர் வந்து சம்பத், மோகனை எல்லாம் அடிச்சாங்க. நான் பயந்துபோய் ஓடியாந்துட்டேன்’னு சொன்னார். எனக்குப் பயமாப் போச்சு... எங்க வீட்ல இருந்தவங்க, 'இன்னிக்கு ராத்திரிவரைக்கும் பாப்போம்... வரலைன்னா, நாளைக்குப் போய் போலீஸ்ல கம்ப்ளெயின்ட் குடுக்கலாம்’னு சொன்னாங்க. மறுநாளும் வரலை. உடனே மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளெயின்ட் குடுத்தேன். எங்க வீட்டுக்காரர் மது சாப்பிடுவதைச் சொல்லக் கூச்சப்பட்டு, 'காணலை’ங்கிற விஷயத்தை மட்டும் சொன்னேன்...

தகராறுக்குப் பயந்து, வெளியூர்ல இருக்கும் சொந்தக்காரங்க வீட்டுக்குப் போயிருப்பாங்கன்னு நினைச்சு, எல்லாருக்கும் லெட்டர் போட்டு விசாரிச்சேன். திருவான்மியூர்லே போய் விசாரிச்சும் ஒண்ணும் தெரியலை. வேற வழி தோணாம, கவர்னர், ஜ.ஜி., கமிஷனர் எல்லாருக்கும் புகார் குடுத்தேன். யாரும் எதுவும் பண்ணலைங்க. அப்பதான் சில பேர், ஜூ.வி. ஆபீஸ் போய் சொல்லச் சொன்னாங்க...'' என்று அழுதார் விஜயா!

ஆட்டோ டிரைவர் சேகரிடம் சென்று விசாரித்தோம். விஜயா சொன்னதையே அவரும் சொன்னார். ''போலீஸ்ல இதை நீங்க சொல்லலையா?'' என்று கேட்டோம். ''மூணு நாள் கழிச்சுப் போய் சொன்னேன். எழுதித் தரச் சொன்னாங்க... எழுதிக் குடுத்தேன். அப்பாலே என்னைக் கூப்பிட்டு, 'என்ன நடந்திச்சு?’னு கேட்டுட்டுத் திரும்ப அனுப்பிட்டார் இன்ஸ்பெக்டர்!'' என்றார். இதற்கிடையில்தான் விஜயா, மயிலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்திருந்தார்.

எனவே மயிலாப்பூர் ஸ்டேஷன் போய், ''ஏதாவது தகவல் கிடைத்ததா?'' என்று கேட்டோம். ''திருவான்மியூர் போய் குடிச்சிட்டுக் கலாட்டா பண்ணியிருக்​காங்க. அதனாலே திருவான்மியூர் ஸ்டேஷனுக்குத் தகவல் சொல்லிட்டோம்!'' என்று சிம்பிளாகச் சொன்னார்கள்!

திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்தோம். தொடர்ந்து எங்கேஜ்டாகவே இருந்தது. நேரில் சென்றோம். இன்ஸ்பெக்டர் தலைமலை இருந்தார். போனின் ரிசீவர் கீழே எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, ''ஏன் சார் ரிஸீவரை எடுத்துக் கீழே வெச்சிருக்கீங்க?'' என்றதும், ''ஆமா, ஒரே தொந்தரவு... அதான் எடுத்து வெச்சேன். உங்களுக்கு என்ன வேணும்?'' என்றார். காணாமல் போன நபர்கள் குறித்துக் கேட்டதும், ''ஏன் சார், எங்க பொழப்புதான் மோசம்னா, உங்களுக்கும் என்ன தலையெழுத்தா சார்? போலீஸ் வேலைங்​றது நீங்க நினைக்கிற மாதிரி அவ்வளவு லேசு இல்லை.  காணாமப் போனவங்களைக் கண்டு ​பிடிக்கிற வேலைய மட்டும் பார்க்க முடியுமா? மூணு பசங்களும் தகராறு பண்ணாங்க... ஓடிப் போய்ட்டாங்க. எங்கே, எப்படி இருக்கானுகளோ? தகவல் இருந்தா, சொல்லி அனுப்பறேன்.'' என்றார்.

நாம், ''ஹோட்டலில் தகராறு நடந்ததே... அங்கே ஏதும் தகவல் கிடைக்கலையா?'' என்று கேட்டோம். ''நீங்க பத்திரிகைக்காரங்கதானே... நீங்களே ஹோட்டலுக்குப் போய் விசாரிக்க வேண்டியது​தானே...'' என்றார்.

அதுவும் சரிதான் என்று அந்த ஹோட்டலுக்குப் போய் டிபன் சாப்பிட்டபடியே சர்வர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். 'சங்கர்’ என்ற நபர்தான் அவர்களை அடித்தார் என்றும், அவரின் வீடு அருகில்தான் இருக்கிறது என்றனர். சங்கர் என்பவர் பெண் புரோக்கர், கள்ளச் சாராய வியாபாரி என்று குற்றம் சாட்டினார்கள். அன்றைய தினம் நடந்த சண்டையில் ஒருவரின் கை முறிந்து மயக்கமாகிவிட்டார் என்றும் மற்றொருவர் தலை உடைந்து வந்த ரத்தத்தைப் பார்த்தபோது, இறந்தே போயிருக்கலாம் என்றும் சொன்னார்கள்.

நேராக சங்கர் வீட்டுக்குச் சென்றோம். பெரிய வீடு. சங்கர் இருந்தார். விவரம் சொல்லிக் கேட்டோம். அவர் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல், ''அவங்க மூணு பேர் வந்தது உண்மைதான். அந்த ஹோட்டல் நம்ம நண்பருடையது. அங்க குடிச்சிட்டுக் கலாட்டா பண்ணி சேரை உடைச்சாங்க. உடனே நான் தட்டிக் கேட்டு கையிலே நூறு ரூபா குடுத்து அனுப்பிச்சுட்டேன்...'' என்றார் சாதாரணமாக. 

குழப்பமாக இருந்தது. விஜயா, சம்பத்தின் சகோதரர் கோவிந்தன், அவர் நண்பர் கணேசன் ஆகியோரை அழைத்துக்கொண்டு, டி.ஐ.ஜி. ஜாஃபர் அலியை சந்தித்தோம். திருவான்மியூர் இன்ஸ்பெக்டர் சொன்ன பதில், ஹோட்டலில் விசாரித்த செய்திகள், சங்கர் பேசியது ஆகியவற்றைக் கேட்டுக் குறித்துக்கொண்ட டி.ஐ.ஜி. வயர்லெஸ் மைக் மூலம் டி.எஸ்.பி. தங்கையாவை வரவழைத்தார். அவரிடம், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. மீண்டும் நம்மை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரச் சொன்​னார்.

மறுநாள் ஜாஃபர் அலியை சந்தித்தோம். ''சங்கர் ஒரு 'புரோக்கர்’ங்​கிறது உண்மைதான். மூணு பேரையும் அடிச்சதுக்கு சங்கரை அரெஸ்ட் பண்ணி விசாரிச்சாங்களாம். உங்ககிட்ட சொன்ன மாதிரியேதான் ஸ்டேஷன்லயும் சொன்னானாம். திரும்பவும் அவன்கிட்டே விசாரிக்க சொல்லியிருக்கேன்...'' என்றார்.

ஜூலை 5-ம் தேதி இரவு கணேசன் பதற்றத்துடன் நம் அலுவலகம் வந்து சொன்ன விஷயம் அதிர வைத்தது. ''சார்... சார்... அந்த மூணு பேரையும் கொலை பண்ணிப் புதைச்சிட்​டாங்களாம் சார். அந்த சங்கர் வீட்டாண்ட ஏதோ தகராறு நடந்தப்போ, இந்த விஷயம் லீக் ஆகியிருக்கு சார்!'' என்றார் கணேசன் அழுதுகொண்டே.

உடனே, கணேசனுடன் டி.ஐ.ஜி. ஜாஃபர் அலியை சந்திக்கச் சென்றோம். ஏதோ முக்கிய மீட்டிங். வெளியே வந்த டி.எஸ்.பி., தங்கையா, ''ஹலோ... கண்டு பிடிச்சாச்சுங்க. மூணு பேரையும் கொலைதான் பண்ணியிருக்கான்.  டி.ஐ.ஜி-கிட்டே கேட்டுக்கங்க...'' என்றார்.

டி.ஐ.ஜி. ஜாஃபர் அலி, ''சங்கர் மூணு பேரையும் கொலை பண்ணிட்டதாகவும், அவன் வீட்டுக்குப் பக்கத்துல  புதைச்சிருக்கிறதாகவும் சொல்றான். ஸ்பாட்டுக்குப் போய்ப் பார்க்கணும்...'' என்று சொல்லியபடி எழுந்தார்.

கூடவே நாமும் போனோம். ஏகப்பட்ட போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டு இருந்தது. புதைக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட இடத்தைச் சுற்றி நிறைய வீடுகள் இருந்தன. புதைக்கப்பட்ட இடம் தாசில்தார் ஆபீஸ் கிளார்க் ஒருவருக்கு சொந்தமானது.

இடத்தைத் தோண்டிப் பார்ப்பது என்று முடிவாகியது. நாள்பட்ட பிணத்தைத் தோண்ட வேண்டுமெனில் ஆர்.டி.ஓ., தாசில்தார் முன்னிலையில்தான் தோண்ட வேண்டும் என்பது சட்டம்.

மறுநாள் (ஜூலை 7) காலை 10.30 மணி... டி.ஐ.ஜி. முதல் ஃபாரன்சிக் ஆபீஸர், ஸ்பாட் போஸ்ட்மார்ட்டம் செய்ய டாக்டர் என ஏகப்பட்ட அதிகாரிகள் கூடினார்கள். சாலையின் இரண்டு பக்கமும் மக்கள் அருகே வராமல் இருக்க, போலீஸாரால் தடை செய்யப்பட்டது. சுற்றிலும் விஷயம் பரவி, செம கும்பல்...

சம்பத், மோகன், கோவிந்தராஜ் ஆகியோரின் உறவினர்கள் சிலர் மட்டும் தடைசெய்யப்பட்ட இடம் அருகே அனுமதிக்கப்பட்டார்கள். ஏழு... எட்டு இளைஞர்கள் - தோண்டுவதற்காக... அழைத்து வரப்பட்டார்கள். அவர்களுக்காக பிராந்தி, சென்ட், ஊதுபத்தி போன்றவை வாங்கி வரப்பட்டன.

கொலையாளிகளில் ஒருவனாகக் குற்றம் சாட்டப்​பட்ட பாபு என்பவன், இடத்தை அடையாளம் காட்ட, விலங்கோடு கொண்டு வரப்பட்டான். அவனை ஒரு வீட்டின் பின்புறம் அழைத்து விசாரித்துக் கொண்டிருந்தார் ஜாஃபர் அலி.

''எத்தனை பேர் சேர்ந்து கொலை பண்ணீங்க?''

''நாங்க ஏழெட்டுப் பேர் இருக்கும் சார்...''

''யாரெல்லாம்..?''

பெயர்கள் சிலவற்றைச் சொன்னான்.

''எப்படிடா கொன்னீங்க..?''

''ஹோட்டல்ல தகராறு நடந்ததும், உருட்டுக் கட்டையால அடிச்சோம் சார். அதுல ஒருத்தன் கை உடைஞ்சிருச்சு.  உடனே மத்த ரெண்டு பேரும் ரொம்ப கோபமாகி, எங்க மேலே சேரைத்  தூக்கி அடிக்க ஆரம்பிச்சாங்க. அப்புறம்தான் எங்க ஆட்கள் இன்னும் சில பேர் வந்து மூணு பேரையும் நல்லா அடிச்சு, சங்கர் வீட்டுக்குத் தூக்கிட்டுப் போய் போட்டுப் பூட்டி வெச்சிட்டோம். மறுநாள் காலைலே திறந்து பார்த்தோம். ரெண்டு பேர் செத்துக் கிடந்தாங்க... கோவிந்தராஜ் மட்டும் எழுந்திரிக்க முடியாம 'தண்ணி... தண்ணி’னு கேட்டான். உடனே சங்கர், 'ரெண்டு பேர் குளோஸ்... இவனை விட்டுவெச்சா நமக்குக் கஷ்டம்’னு சொல்லி, கோவிந்தராஜ் வாயைப் பொத்திக்கிட்டே கழுத்திலே காலை வெச்சி மிதிச்சுக் கொன்னுட்டான் சார்.''

''அடப் பாவி... இந்த மூணு பேரைத்தான் கொன்னிருக்கீங்களா... வேற யாராவது உண்டா..?''

'இன்னொருத்தன் ரவின்னு... அவனையும் குளோஸ் பண்ணியிருக்கோம் சார்...''

''அது யாரு..? எப்பக் கொன்னீங்க..?''

''ரவியும் ஒரு ஆட்டோ டிரைவர்தான்... பந்த் நடந்துச்சே... அப்பக் கொன்னோம், சார்.''

''மார்ச் 15-ம் தேதியா..?''

''ஆமா சார்...''

''ரவி பாடியை என்ன பண்ணீங்க?''

''அதையும், இங்கதான் புதைச்சு வெச்சிருக்கோம் சார்...''

''இங்கதான்னா... எந்த இடத்திலே?''

''சார் (நாம) நின்னுட்டிருக்கிற இடத்துலதான் சார்...''

''அடப்பாவி...'' என்றபடி வேறு பக்கம் சென்று அவனை மேலும் விசாரித்தார் ஜாஃபர் அலி.

அந்த நேரம் போலீஸார் சங்கரையும் ஸ்பாட்டுக்கு அழைத்து வந்துவிட, அவனிடம் விசாரணை நடந்தது. அப்போது சங்கரிடம் இருந்து கிடைத்த தகவல்கள்...

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் சங்கரிடம் வேலை பார்த்து வந்தான் சுடலை. திடீரென்று சுடலைக்கும் சங்கருக்கும் தகராறு (பெண் விஷயம்) வந்துவிட, எக்கச்சக்க போதையில் இருந்த சுடலையை ஒரு டவலால் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டான் சங்கர்.

பிணத்தை அப்புறப்படுத்த சோம்பல்பட்டு(?) வீட்டின் ஜன்னல்களையும், கதவுகளையும் மூடிவிட்டு இரண்டு கேன்களில் பெட்ரோல் வாங்கி சுடலையின் பிணத்தை எரித்தான் சங்கர். இரவு சுமார் 10 மணிக்கு எரிக்க ஆரம்பித்த சங்கர், கொஞ்சம் கொஞ்சமாகப் பெட்ரோலை ஊற்றி காலை 6 மணி வரை எரித்து வெறும் சாம்பலாக்கிவிட்டான். அந்தச் சாம்பலை எடுத்து வந்து பாபு மற்றும் நண்பர்களிடம், ''இதுதான் சுடலைன்னு சொன்னா, ஆச்சர்யமால்ல..?'' என்று கேட்டபடியே, சாம்பலைக் கடலுக்குக் கொண்டுபோய் கரைத்துவிட்டான். சுடலைக்கு உறவினர் யாருமே கிடையாது. எனவே, சுடலை காணாமல் போனதுபற்றி யாருமே போலீஸில் தெரிவிக்கவில்லை.

சுடலைக்கும் சங்கருக்கும் நண்பர் - கொல்லப்பட்ட ரவி. இவர் மார்ச் 15-ம் தேதி சங்கருடன் பிராந்தி சாப்பிட்டுக்கொண்டே, ''ஆமா... அன்னிக்கு சுடலை உன்னைப் பார்க்க வந்தானே... அப்புறம் ஆளையே காணோமே..?'' என்று கேட்க... ஒரு விநாடி திகைத்துப்போன சங்கர்... பார்த்தான்... ஒரு லுங்கியால் ரவியின் கழுத்தை நெரித்துக் கொன்று, புதைத்தேவிட்டான்.

மேற்படி விஷயங்கள் தெரிந்ததும், ரவியின் தாய் மற்றும் மனைவியை அழைத்து வரச் சொன்னார் டி.ஐ.ஜி. அப்போது ரவியின் தாயாரோ, ''ஏதோ பொணம் தோண்டறாங்களாம்'' என்று வேடிக்கை பார்க்கும் கும்பலில் ஒருவராக நின்று இருந்தார். அவரை அழைத்துப் பக்குவமாக விஷயத்தைச் சொன்னதுதான் தாமதம்... பெற்ற தாய் தன் வயிற்றிலும், மார்பிலும் அடித்துக்கொண்டு அழ... கொடுமை!

இதற்குள் உடல்கள் புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது. மிகவும் அழுகிய நிலையில் உடல் பாகங்கள் காணப்பட்டன. உடைகள் மட்டும் ஓரளவு அடையாளம் தெரிந்தன.

சம்பத், மோகன், கோவிந்தராஜ் மற்றும் ரவி ஆகியோர் தவிர, மேலும் சில கொலைகளை இந்த சங்கர் குரூப் பண்ணியிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. எனவே, நம்மிடம் பல விஷயங்களைப் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் டி.ஐ.ஜி.

இன்ஸ்பெக்டர் தலைமலை பற்றிக் குறிப்பிட்​டோம். ''இன்ஸ்பெக்டர் உடனடியாகச் சில நடவடிக்கைகள் எடுத்திருந்தால், சுமார் 40 நாட்கள் கழித்துப் பிணத்தை எடுக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. எனவே, இன்ஸ்பெக்டர் எதனால் மெத்தனமாக இருந்தார் என்று விசாரித்துத் தக்க நடவடிக்கை எடுப்போம்...’ என்றார். தொடர்ந்து, ''என் பார்வைக்கு இந்த விஷயத்தைக் கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி...'' என்று சொன்னார் டி.ஐ.ஜி. ஜாஃபர் அலி.

ஆனால்... காலம் கடந்துவிட்டதே!

நன்றி : ஜூனியர்விகடன்-29-05-2011

இதைத்தான் சொல்வார்கள்.. "ஆடுகிறவரைக்கும் நீ ஆடு ராசா.. உன் ஆட்டத்தை போதும்னு நீ நினைக்கும்போதுதான், ஆண்டவன் அவன் ஆட்டத்தைத் துவக்குவான்.." என்று..! 

கணவர் காணாமல் போய்விட்டார் என்று புகார் கொடுத்து ஒரு மாதமாகியும் திருவான்மியூர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் எவ்வளவு பொறுப்பாக பணியாற்றியிருக்கிறார் என்பதை நினைத்துப் பாருங்கள்..! பத்திரிகையாளர்கள் நேரில் சென்று பார்த்தபோதே இந்த நிலைமையெனில் புகார் கொடுத்தவர்கள் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும்..?
மாமூல் வருகிறதே என்று சட்ட விரோதச் செயல்களை கண்டும், காணாததுபோல் இருந்துவிடும் சில காவல்துறை அதிகாரிகளாலும், சில சமயங்களில் கட்சியின் ரெளடித்தனத்திற்கு தேவைப்படுகிறார்களே என்பதால் இவர்களை ஊக்குவிக்கும் அரசியல்வியாதிகளாலும்தான் இந்தச் சமூகத்தில் இப்படியெல்லாம் சீரழிவுகள் ஏற்படுகின்றன..!

திருவான்மியூர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நினைத்திருந்தால் நிச்சயமாக சங்கரின் சாம்ராஜ்யத்தை ஆரம்பத்திலேயே சிதைத்திருக்கலாம். 10 வருட காலமாக ஓரிடத்தில் விபச்சாரத் தொழில் செய்து வந்திருக்கிறார் என்றால் அந்தப் பகுதிக்குட்பட்ட காவல்துறை அதிகாரிகள்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்..! 

சில வட்ட அளவிலான அரசியல்வாதிகள் மட்டுமே ஆட்டோ சங்கரை தெரிந்து வைத்திருக்கிறார்கள். முழுக்க, முழுக்க காவல்துறையின் கீழ் மட்ட அதிகாரிகள் பலரும் மறக்காமல் அவரிடம் மாமூல் வசூலித்திருப்பதும், இதன் காரணமாகவே அவரது விபச்சாரத் தொழில் இத்தனை நாட்களாக நடந்து வந்திருப்பதும் அவர் மாட்டிய பின்புதான் தெரிய வந்தது..!

ஆனாலும் பெரிய அளவில் போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் வெறுமனே டிரான்ஸ்பர் மட்டும் செய்து அனுப்பி வைத்ததாகச் சொல்கிறார்கள்..! இந்த வழக்கு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டதால்தான் இந்த அளவுக்காவாவது கண்டறிய முடிந்தது. ஸ்டேஷன் அளவோடு நிறுத்தியிருந்தால் அவ்வளவுதான் என்பது இந்தக் கட்டுரையைப் படிக்கின்றபோதே தெரிகிறது..!

சில அதிகாரிகளின் அலட்சியம் சமூகத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணம்..!