ராஜீவ்காந்தி-சிவராசன்+சுபாXசி.பி.ஐ.=சயனைடு

குப்பி


சினிமா விமர்சனம்

'சினிமா என்பது ஒரு மொழி'. 'சினிமா என்பது ஒரு வாழ்க்கை'. 'சினிமா என்பது ஒரு கலை'. 'சினிமா என்பது வியாபாரம்'. 'சினிமா என்பது கானல்நீர்..'

- இப்படி சினிமாவைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அபிப்ராயங்கள் இருக்கின்றன. ஆனால் பிரதான மோதல் "சினிமா என்பது கலையா? வியாபாரமா?" என்பதில்தான் இருக்கிறது.

இந்த இரண்டுக்கும் இடையில் சினிமா ஒரு வாழ்க்கைப் புத்தகமாக ஒரு சிலரால் அடையாளம் காட்டப்படுகிறது. உங்களுடைய வாழ்க்கையில் கடந்து போன, கிழிந்து போன நாட்காட்டிகளை அடையாளம் கண்டு ஞாபகப்படுத்தும்போது, வழிப்போக்கனொருவன் தன் பிறந்த மண்ணை தற்செயலாக மிதிக்கும்போது என்ன உவகை அடைவானோ, அப்படியொரு உவகை அங்கே நமக்கு வரும். அப்படியொரு சிறிய மகிழ்ச்சியை எனக்கு அளித்தது 'குப்பி' திரைப்படம்.

1991 மே 21-ம் நாள் தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு நாளாகிவிட்டது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும்விட தமிழ்நாட்டை தான் மிகவும் நேசிப்பதாகச் சொன்ன இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ்காந்தி இதே தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து கொலையாளிகளைத் தேடும் பணியில் இறங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்த்துக் கொண்டே வந்து ஒரு புள்ளியில் வந்து நின்றது.

அந்தப் புள்ளியைச் சுற்றிப் போடப்பட்டிருக்கும் கோலம்தான் இந்தக் 'குப்பி'. சிவராசன்-சுபா. ராஜீவ்காந்தி கொலைச் சம்பவத்தில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அத்தனை பேரும் உச்சரித்த பெயர்கள் இவைகளாகத்தான் இருக்கும்.

சென்னையிலிருந்து நாற்றமடிக்கும் யில் டேங்க் ஒன்றின் வயிற்றுப் பகுதிக்குள் ஒளிந்து பெங்களூருக்குச் செல்லும் சிவராசன்-சுபா குழுவினர், பெங்களூரில் வாழ்ந்த வாழ்க்கையை அவர்களது முடிவுவரை அதிகப்பட்ச உண்மைகள், சிறிதளவு சினிமாத்தனமான காட்சிகளோடு நம் முன் வைத்திருக்கிறார் இயக்குநர்.

'கொலையாளிகள்' என்று உலகம் முழுவதும் அறியப்பட்டவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்து ஒருவிதத்தில், அவர்களது விரைவான மரணத்திற்கும் காரணமாக இருக்கிறார் ரங்கநாத் என்கிற ஒரு லேத் பட்டறை ஓனர்.

பெங்களூருக்கு வரும் சிவராசனும், சுபாவும் ஏற்கெனவே அங்கு தங்கியுள்ள மற்றொரு புலிகளின் எதிர் வீட்டில் அவர்கள் துணையோடு தங்குகிறார்கள். தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் பிடிபட்ட ஒரு புலியிடம் கிடைத்த தகவலில் பெங்களூரில் ஏற்கெனவே தங்கியிருக்கும் புலிகள் பற்றிய தகவல் கிடைக்க போலீஸ் அவர்களைப் பிடிக்க முயல்கிறது.

பத்து நேரத்தில் இருக்கவே இருக்கிறது சயனைடு என்று நினைத்து புலிகள் அதைக் கடித்துவிட.. ஒருவர் ஸ்பாட்டிலேயே மரணிக்கிறார். மற்றவர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் கழித்து, அனைவரையும் அதிகப்பட்ச பி.பி,க்கு ஏற்றிவிட்டு மரணமடைகிறார். சி.பி.ஐ.யின் சிறப்பு புலனாய்வு டீம் பெங்களூர் வந்து விசாரிக்கிறது.

தன்னை இரண்டு நாட்களாக போலீஸ் தேடுவதை அறிந்த வீட்டு புரோக்கர் பயந்து கொண்டே ஸ்டேஷனில் வந்து சரண்டராகிறார். அவரை விசாரிக்கிறது போலீஸ். "இவுங்க மட்டுமில்ல.. இன்னும் நாலைஞ்சு பேருக்கும் இதே மாதிரி வீடு பிடிச்சுக் குடுத்தேன்.." என்கிறார் புரோக்கர். பதறிப் போய் போலீஸ் "அவர்கள் எங்கே..?" என்று கேட்க.. "அதே வீட்டுக்கு எதிர் வீட்டில்தான்.." என்று புரோக்கர் சொன்னதும் போலீஸ் மட்டுமல்ல.. நாமும் சேர்ந்து ஸ்தம்பிக்க வேண்டியிருக்கிறது.

மறுபடியும் போலீஸ் தேடுதல் வேட்டை. வெள்ளை நிற மாருதி வேனிலேயே இரண்டு நாட்களாகச் சுற்றுகிறார்கள் சிவராசன்-சுபா குழுவினர். இந்த நேரத்தில்தான் வேறொரு புரோக்கர் மூலமாக ரங்கநாத் சிக்குகிறார். அவருடைய வீட்டில் அவரை இறக்கிவிட்டுவிட்டு செல்லும் கொலைகார டீம், அடுத்த நிமிடத்தில் வந்து கதவைத் தட்டுகிறது.

ரங்கநாத் கதவைத் திறக்க.. துப்பாக்கியுடன் உள்ளே நுழைந்து சம்மணங்கால் போட்டு உட்கார்கிறான் சிவராசன். "எங்களுக்கு நல்ல வீடு கிடைக்கிறவரைக்கும் இங்கனதான்" என்கிறான்.

தொடர்ந்து இவர்கள் வீட்டுக்குள் இருந்து கொண்டு அழிச்சாட்டியம் செய்து கொண்டிருக்க வெளியில் இவர்களைத் தேடி அலையோ அலை என்று அலைகிறது போலீஸ். டிவியில் சிவராசனின் பல்வேறு வேடங்களை கிராபிக்ஸ் மூலம் செய்து அதை நியூஸில் காட்டுகிறார்கள். அப்போதுதான் ரங்கநாத்தின் மனைவிக்கே இவர்கள்தான் ராஜீவ் கொலையாளிகள் என்பது தெரியவருகிறது.

இந்த இடத்தில் சிவராசனாக நடித்தவரின் நடிப்பைச் சொல்லியாக வேண்டும். சாப்பிட்டபடியே "சிவராசனைப் பிடிக்கப் போறாங்களாம்.." என்று புறையேறும் அளவுக்கு சிரிக்கும் சிரிப்பு.. சிறந்த தேர்வு. கடைசி வரையில் தனது ஒற்றைக் கண்ணை மூடியே வைத்திருக்க எவ்வளவு கடினப் பயிற்சி எடுத்தாரோ தெரியவில்லை. மனிதரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அடுத்தது ரங்கநாத்தின் மனைவியாக அப்பாவியாக நடித்து வெளுத்துக் கட்டியிருக்கிறார் கன்னட நடிகை தாரா.. (நினைவிருக்கிறதா-இங்கேயும் ஒரு கங்கையின் கதாநாயகி) 200 திரைப்படங்களுக்கும் மேல் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றிருப்பவர். படத்தில் வஞ்சனையில்லாமல் நடிப்பில் பின்னியிருக்கிறார்.

இறுதிக் காட்சியில் தான் போலீஸில் பிடிபட்டபோதும் தன் வீட்டு கேஸ் சிலிண்டர் சிவராசன் வீட்டில் இருப்பதாகவும், அது தனது அப்பா வீட்டுச் சீதனம் என்றும் அதை வாங்கிக் கொடுங்கள் என்று போலீஸிடம் கெஞ்சுவது அக்மார்க் சினிமாத்தனமா காட்சி என்றாலும் ரசிக்கத்தக்க வகையில்தான் இருக்கிறது.

படத்தின் இயக்குநர் இந்தக் கொலை வழக்கில் பிற்பாடு கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததற்காக தண்டனையடைந்து விடுதலையான ரங்கநாத்தின் நெருங்கிய உறவினர் என்பதால் நிறைய 'உண்மை'களை வெளிப்படையாக எடுத்து விட்டுள்ளார். ராஜீவ்காந்தி கொலை பற்றி நான் படித்த பல புத்தகங்களிலும் இந்தக் 'குப்பி'யின் திரைக்கதை உள்ளது. உள்ளபடியே உண்மையைச் சொல்ல வேண்டும் என்ற நினைப்பு இயக்குநருக்கு இருந்திருக்கிறது. அதற்காக அவரைப் பாராட்டியே ஆக வேண்டும்.

அடுத்து சுபாவாக நடித்த மாளவிகா. தன்னுடைய பேமஸான உருட்டு விழி கண்களுடன் பல இடங்களில் தங்களுடைய செய்கைக்கு மக்களிடம் அனுதாபம் சம்பாதிக்கும்விதமான வசனங்களுடன் வலம் வருகிறார். படத்தில் நடித்த அனைவரும் இந்தியர்கள் என்பதாலும் ஈழத்துத் தமிழ் மட்டும்தான் படத்தில் சரிவர அமையவில்லை என்பது என்னுடைய கருத்து.

இறுதியில் நாம் ஒன்று நினைத்தால் கடவுள் ஒன்றை நினைப்பார் என்பதை உறுதி செய்வதைப் போல் ரங்கநாத் மாட்டிக் கொள்வது மிக எளிமையானதாக அமைந்துவிட்டது. யாரோ மூன்றாம் நபர் தன் காதைத் தீட்டிக் கேட்ட ஒரு விஷயத்தை மிக யதார்த்தமாக போலீஸிடம் சொல்ல அந்த விளைவாக மாட்டிக் கொள்கிறார்கள் அனைவரும்.

மாலை செய்தித்தாளும், பெட்ரோலையும் வாங்கிக் கொண்டு புலிகளைப் பார்க்க வரும் ரங்கநாத் வீட்டைச் சுற்றிலும் போலீஸ் நிற்பதைப் பார்த்து திரும்பிப் போய் இரவு முழுக்க ஒரு கடை வாசலில் தூங்குகிறார். மறுநாள் காலை என்னதான் நடக்கிறது பார்த்து விடுவோமே என்ற நினைப்பில் அங்கே வர.. எலி, வலையில் தானே வந்து மாட்டியது போல் போலீஸிடம் சிக்குகிறார். நிஜத்திலும் இப்படியேதான்.. இப்படியொரு கேரக்டர் ரங்கநாத்.

இடையிடையே அவ்வப்போது தேடுதல் வேட்டையில் நடந்த மற்ற சம்பவங்களையும் தொகுத்துதான் கொடுத்துள்ளார் இயக்குநர். கதை என்னவோ இந்தியர்களின் மனதில் ஆழமாகப் பதிந்த கதைதான் என்பதால் இசையமைப்பு தேவையில்லை என்று நினைத்துவிட்டார் இயக்குநர். பின்னணியில் புலிகளை காட்டும்பொழுதுகூட அமைதிதான்.

சிவராசன், சுபா, இருவரின் ஈழம் போய்ச் சேர வேண்டும் என்கிற ஆவல்.. ரங்கநாத்தின் ஆர்வக் கோளாறு.. மாட்டிக் கொண்டால் என்னாகுமோ என்கிற ரங்கநாத்தின் மனைவியின் தவிப்பு.. முடிவு அனைவருக்குமே தெரிந்ததுதான் என்றாலும் சாகின்றபோதுகூட பெரிசு என்ன சொல்லிச் செத்தது என்று 30-வது நாள்கூட கறியைக் கடித்துக் கொண்டே கிசுகிசுக்கும் நம் மக்களுக்கு இது ஒரு பெரிய எதிர்பார்ப்பு. அதனை கிட்டத்தட்ட இயக்குநர் நிறைவேற்றியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

இறுதியாக ஒரு வார்த்தை.. கல்லூரியில் புத்தகத்துடன் நுழையும் அன்றே கையில் ரோஜாவைப் பிடித்துக் கொண்டு எவளிடம் கொடுத்து லவ் பண்ண ஆரம்பிக்கலாம் என்ற அபத்தங்கள்.. 45 கிலோ எடையை வைத்துக் கொண்டு 100 கிலோ எடையில் உள்ளவர்களை அந்தரத்தில் பறந்து பறந்து அடிக்கின்ற ஹீரோயிஸ முட்டாள்தனங்கள்.. நிமிடத்திற்கு நிமிடம் தொப்புளை காமிரா முன் காட்டிவிட்டு மீதி நேரம் ஹீரோவுக்கு அந்த இடத்தையே பட்டா போட்டுக் கொடுக்கும் ஹீரோயினின் நடனங்கள்.. அர்த்தமே இல்லாத வசனத்திற்கு பின்னணியில் காதைக் கிழிக்கும் சவுண்டை போட்டுக் கொலை செய்யும் காட்சிகள்..

இப்படி எதுவும் இல்லாமல் தான் சொல்ல வந்ததை கிட்டத்தட்ட சொல்லி முடித்திருக்கும் இயக்குநருக்கு.. ஒரு அரசியல் கொடூரத்தின் பதிவை திரையுலக வரலாற்றில் பதிவு செய்த திரை இயக்குநருக்கு.. குடும்பத்துடன் உள்ளே சென்று கடைசிவரை நெளிய வைக்காத வசனங்களால், கண்ணை உறுத்தாத காட்சியமைப்புகளால் அழகை காட்டியிருக்கும் இயக்குநர் ரமேஷ¤க்கு எனது வாழ்த்துக்கள்..

படங்கள் உதவி : indiaglitz.com

12 comments:

PRINCENRSAMA said...

புலிகள் ராஜீவ் கொலைக்கான தார்மீகப் பொறுப்பை ஏற்காததோடு, மறுப்பையும் தெரிவித்திருக்கின்றனர். இன்று வரை சிவராசனும், சுபாவும் ஈழத் தமிழ்ர்கள் என்பதைத் தவிர, புலிகள் என்பதற்கான சரியான எந்த ஆதாரமும் காட்டப்படாமலேயே, புலிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது. அந்தத் தவறான முத்திரையை நீங்களும் குத்தவேண்டுமா உண்மைத் தமிழன் அவர்களே!

Jeyapalan said...

// இறுதியாக ஒரு வார்த்தை.. கல்லூரியில் புத்தகத்துடன் நுழையும் அன்றே கையில் ரோஜாவைப் பிடித்துக் கொண்டு எவளிடம் கொடுத்து லவ் பண்ண ஆரம்பிக்கலாம் என்ற அபத்தங்கள்.. 45 கிலோ எடையை வைத்துக் கொண்டு 100 கிலோ எடையில் உள்ளவர்களை அந்தரத்தில் பறந்து பறந்து அடிக்கின்ற ஹீரோயிஸ முட்டாள்தனங்கள்.. நிமிடத்திற்கு நிமிடம் தொப்புளை காமிரா முன் காட்டிவிட்டு மீதி நேரம் ஹீரோவுக்கு அந்த இடத்தையே பட்டா போட்டுக் கொடுக்கும் ஹீரோயினின் நடனங்கள்.. அர்த்தமே இல்லாத வசனத்திற்கு பின்னணியில் காதைக் கிழிக்கும் சவுண்டை போட்டுக் கொலை செய்யும் காட்சிகள்
//

repeetoo
repeetoo
repeetoo

உண்மைத்தமிழன் said...

நன்றி திரு.பிரின்ஸ்.

ஏப்ரல் 10, 2002 அன்று கிளிநொச்சியில் பிரபாகரன் பேட்டியளித்தபோது "ராஜீவ்காந்தியை ஏன் கொலை செய்தீர்கள்?" என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு "நாங்கள் ராஜீவ்காந்தியை கொலை செய்யவில்லை.." என்று சொல்லவில்லை. மாறாக. "அது ஒரு துன்பியல் சம்பவம். மீண்டும் அதைக் கிளற வேண்டாம்.." என்றார். இதற்கென்ன அர்த்தம்?

சம்பந்தமே இல்லையென்றால் "நாங்கள் செய்யவே இல்லை.." என்று அடித்துச் சொல்லியிருக்கலாமே.. (அப்படிச் சொல்லியிருந்தாலும் தமிழ்நாட்டில் உள்ள டிரவுசர் போட்ட சிறுசுகள்கூட நம்பாது என்பது வேறு கதை..)

சிவராசன், சுபா ஆகியோரைப் பற்றிய பல வீடியோ டேப்புகள் சிபிஐ வசம் சிக்கியிருந்தன. நீங்கள் ராஜீவ் கொலை பற்றிய புத்தகங்கள், விசாரணை அறிக்கைகளைப் படிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

சிவராசன் கையில் தொங்கிய துப்பாக்கியுடன் யாழ்ப்பாணத்தில் தெரு முனைப் பிரச்சாரத்தில் மைக் பிடித்து பேசுவது அதில் பதிவாகியுள்ளது.

மனித வெடிகுண்டு தனு பெண் புலிகளுக்குத் தலைமை தாங்கி கொடி பிடித்து அணிவகுப்பு மரியாதை செய்யும் காட்சியும், போர்த்திறன் பற்றி வகுப்பில் பாடம் பயிலும் காட்சியும் படமாக சிபிஐயின் கையில் சிக்கியுள்ளது.

சமீபத்தில் ராஜீவ் கொலை பற்றிய சிறப்பு சிபிஐயில் பணியாற்றிய ரகோத்தமன் என்ற அதிகாரி ராஜீவ் கொலை பற்றி வீடியோ செய்தித் தொகுப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை வாங்கிப் பாருங்கள். தங்களது சந்தேகம் உடனே தீரும்.

>>>>

அடுத்து 'ரிப்பீட்டு' போட்ட செயபாலுக்கு ஒரு ஜே..!

மருதநாயகம் said...

இந்த படம் நெடு நாட்களாக கிடப்பில் இருந்த காரணம் என்ன என்று தெரியுமா?

உண்மைத்தமிழன் said...

மருதநாயகம் ஸார்.. நீங்கள் சொல்வது R.K.செல்வமணி இயக்கத்தில், ரவியாதவ்வின் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான 'குற்றப்பத்திரிகை' திரைப்படத்தை.. பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்ஸார் சான்றிதழ் தரப்படாமல் லேப்பில் தூங்கிக் கொண்டிருந்த 'குற்றப்பத்திரிகை' சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின்படி பிரச்சினைகள் தீர்ந்து.. படம் வெளியாகி.. தியேட்டரிலிருந்தும் ஓடிவிட்டது. அவ்ளோ ஓட்டம்..

இந்தக் 'குப்பி' திரைப்படம் முதலில் கன்னட மொழியில் 'சயனைடு' என்ற பெயரில் எடுக்கப்பட்டது. பின்பு அங்கிருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டுள்ளது.

நீங்கள் இரண்டையும் ஒன்றாக நினைத்துக் குழம்பிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்..

சிவா சின்னப்பொடி said...

ராஜிவ் காந்தியின் மரணம் ஒரு துன்பியல் நிகழ்வு என்பதில் யாருக்கம் மாற்றுக் கருத்தில்லை.
இந்தியா மனித உயிர்கள் அனைத்தையும் சமத்துவமாக மதிக்கின்ற நாடு-சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலை நாட்டுகின்ற உண்மையான ஜனநாயக என்பது நிஜமாக இருந்தால். இராஜிவ் காந்தி அவர்களால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை அங்கு நடத்திய வெறியாட்டங்களை ஈழத்தில் நடத்திய வெறியாட்டங்களை மனிதப்படுகொலைகளை ஒரு நீதியான விசாரணைக் கமிசன் அமைத்து விசாரிப்பதற்கு இந்திய அரசும் இந்திய அரசியல் வாதிகளும் தயாராக இருக்கிறார்களா? அம்பாவி மக்களை யுத்த டாங்கி ஏற்றி நெரித்துக் கொன்ற கொடூரம்-வகைதொகையின்றி;யும் வயது வேறுபாடின்றியும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கொடூரம் தந்தையும் பிள்ளைகளையும் தூப்பாக்கிமுனையில் நிறுத்திவிட்டு அவர்கள் கண்முன்னால் தாயை வல்லுறவுக்கு உட்படத்தியதுடன் அதே தாயை அவரது மகனைக் கொண்டே தந்தை முன்னால் துப்பாக்கி முனையில் வல்லுறவு கொள்ள வைத்து பார்த்து இரசித்த கொடுமை இதை பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை. இந்திய அதிகார வாக்கத்தினுடைய அகராதியில் இவர்களது இழப்புக்கள் துயரங்கள் ஏன் உயிர்கள் கூட பெறுமதியற்றவை கணக்கில் எடுக்கப்பட முடியாதவை. இவர்களை கொத்தக் கொத்தாக கொலை செய்தது என்பது ஏதோ பூச்சி புழுக்களை கொல்வதைப் போல சர்வசாதாரணமான ஒரு செயலாகும்.

உண்மைத்தமிழன் said...

நண்பரே தங்களுடைய வருத்தங்களும், வேதனைகளும் புரிகிறது. ஆனால் நீங்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் இந்த இடுகையில் இட்டிருப்பது 'குப்பி' என்கின்ற ஒரு தமிழ் சினிமா பற்றிய எனது விமர்சனம். நான் ஒரு சினிமா ஆர்வலன் என்ற முறையில் எனக்குத் தெரிந்த மொழியில் நான் எழுதியிருக்கிறேன்.

நண்பர் பிரின்ஸ்

//புலிகள் ராஜீவ் கொலைக்கான தார்மீகப் பொறுப்பை ஏற்காததோடு, மறுப்பையும் தெரிவித்திருக்கின்றனர். இன்று வரை சிவராசனும், சுபாவும் ஈழத் தமிழ்ர்கள் என்பதைத் தவிர, புலிகள் என்பதற்கான சரியான எந்த ஆதாரமும் காட்டப்படாமலேயே, புலிகள் என்று முத்திரை குத்தப்படுகிறது.//

என்று எழுதியதால் அதற்கு நான் பதிலளிக்கக் கடமைப்பட்டு எனக்குத் தெரிந்த விஷயங்களைத் தெரிவித்தேன்.

பிரபாகரன் அவர் வாயாலேயே "அது ஒரு துன்பியல் சம்பவம்" என்று ஒத்துக் கொண்டதால்தான் நான் அந்தச் செய்தியைக் குறிப்பிட்டேன். பிரபாகரன் சொல்லாத வார்த்தையல்ல அது.

எனவே விடுதலைப்புலிகள் எங்கள் நாட்டிற்குள் வந்து எங்களது முன்னாள் பிரதமரை படுகொலை செய்துள்ளார்கள் என்பது கண்கூடு.

ராஜீவ்காந்தி மட்டுமல்ல. அக்கொலைச் சம்பவத்தில் அவரோடு 18 ஒன்றுமறியா அப்பாவிகளும் கொல்லப்பட்டார்கள் என்பதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

நீங்கள் சொன்னது போல் எங்களது இந்திய ராணுவம் கற்பழிப்பு, படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு உங்களைப் போல நிறைய ஈழத் தமிழர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. ஊடகங்களிலும் எழுதப்பட்டு வந்துள்ளதை நான் அறிவேன்.

இந்தச் சம்பவங்கள் நூறு சதவிகிதம் உண்மையாக அல்லாமல் குறைந்தபட்சம், சிறிதளவாவது உண்மையாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

ஏனெனில் உலகத்தில் இந்திய ராணுவம் மட்டுமல்ல.. எந்த நாட்டு ராணுவமாக இருந்தாலும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவது அனைவரும் அறிந்தது ஒன்றுதான். இதற்கு ஒரே காரணம் அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கொஞ்சம் ஜீன் பிரச்சினை. இதை யாரும் உணர்வதேயில்லை.

எங்களது நாட்டிலும் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கப் போகிறோம் என்று சொல்லி தமிழக அதிரடிப் படையினர் 'இதே' வேலையைத்தான் செய்தனர். மணிப்பூரில் மனோரமா என்ற பெண் போராளியை இந்திய ராணுவத்தினர் சிலர் கற்பழித்துக் கொன்ற சம்பவமும் நடந்துள்ளது. இது ஜனநாயகத்தில் ஆங்காங்கே நடப்பது போன்ற நிகழ்ச்சிகள்தான். யார் இல்லை என்று மறுப்பது?

அதற்காக வன்முறைக்கு வன்முறைதான் பதிலா? யோசித்துப் பாருங்கள்.. இப்போது மணிப்பூரில் நடந்த சம்பவத்துக்கு பிரதமர் மன்மோகன்சிங்தான் காரணம் என்று யாராவது குற்றம் சாட்ட முடியுமா? அப்படித்தான் ராஜீவ்காந்தியும்.

புலிகள் செய்தது பச்சைத் துரோகம்.. அவர்களுக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொடுத்து, இருக்க இடம் கொடுத்து, உணவளித்து, போதிய பண உதவியையும் செய்தது ராஜீவ்காந்தியின் தாயார் இந்திராகாந்திதான். வசதி வாய்ப்புகளை வாங்கும்போது மட்டும் நாங்கள் நல்லவர்களாத் தெரிந்தோம்.. உங்களது கருத்துக்களுக்கு உடன்படவில்லையென்கின்றபோது நாங்கள் அழித்தொழிக்கப்பட வேண்டியவர்களாகிவிட்டோம்.

ஈழத் தமிழர்கள்பால் எங்களுக்கு இன்னமும் இரக்கம் உண்டு. அன்பும், பாசமும் உண்டு.

ஆனால் புலிகள் விஷயத்தில் 1991 மே 21-க்குப் பிறகு நேர் எதிராகிவிட்டது.

இந்தச் சூழ்நிலைக்கு முழுக்க முழுக்க புலிகள்தான் காரணமே தவிர.. நாங்கள் அல்ல..

Raaj said...

//நீங்கள் சொன்னது போல் எங்களது இந்திய ராணுவம் கற்பழிப்பு, படுகொலைகளில் சம்பந்தப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டு உங்களைப் போல நிறைய ஈழத் தமிழர்களால் சுட்டிக் காட்டப்பட்டது. ஊடகங்களிலும் எழுதப்பட்டு வந்துள்ளதை நான் அறிவேன்.

இந்தச் சம்பவங்கள் நூறு சதவிகிதம் உண்மையாக அல்லாமல் குறைந்தபட்சம், சிறிதளவாவது உண்மையாக இருக்கலாம் என்று நான் கருதுகிறேன்.

ஏனெனில் உலகத்தில் இந்திய ராணுவம் மட்டுமல்ல.. எந்த நாட்டு ராணுவமாக இருந்தாலும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவது அனைவரும் அறிந்தது ஒன்றுதான். இதற்கு ஒரே காரணம் அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. கொஞ்சம் ஜீன் பிரச்சினை. இதை யாரும் உணர்வதேயில்லை.

எங்களது நாட்டிலும் சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கப் போகிறோம் என்று சொல்லி தமிழக அதிரடிப் படையினர் 'இதே' வேலையைத்தான் செய்தனர். மணிப்பூரில் மனோரமா என்ற பெண் போராளியை இந்திய ராணுவத்தினர் சிலர் கற்பழித்துக் கொன்ற சம்பவமும் நடந்துள்ளது. இது ஜனநாயகத்தில் ஆங்காங்கே நடப்பது போன்ற நிகழ்ச்சிகள்தான். யார் இல்லை என்று மறுப்பது?//

உங்கள் "உண்மை" மெய்சிலிர்க்க வைக்கின்றது.உங்கள் கருத்துபடி ஜனநாயகத்தில் இவையெல்லாம் சாதாரணம் !!!

உண்மைத்தமிழன் said...

//உங்கள் "உண்மை" மெய்சிலிர்க்க வைக்கின்றது.உங்கள் கருத்துபடி ஜனநாயகத்தில் இவையெல்லாம் சாதாரணம் !!!//

மருதா ஸார்.. நான் எழுதியது வெறும் சாதாரண வார்த்தைகளில் அல்ல.. வேதனையோடுதான் எழுதினேன். நேரில் பேசுகின்றபோது உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம். எதிராளியும் அதில் தென்படும் உண்மை உணர்ச்சியை அறியலாம். எழுதும்போது வேறு எந்த வகையில் எழுதுவது சொல்லுங்கள்..?

"ஜனநாயகத்தில் இவையெல்லாம் சாதாரணம்.." என்று நான் எழுதியது ஏதோ அலட்சியப் போக்கில் அல்ல. ஜனநாயகம் என்ற பெயரில் எதுவும் செய்ய முடியாத, சொல்ல முடியாத ஒருவித அடக்கு முறை ஆதிக்க, ஆட்சிக் கலாச்சாரம்தான் அனைத்து நாடுகளிலும் தென்படுகிறது. எனது இந்தப் பதிவில் அவை பற்றிய எனது விரக்தியும் அடங்கியிருக்கிறது.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.. ஒன்றுமறியாத அப்பாவி மலைவாசி மக்களைப் பிடித்து ஒரு வருடமாக கேம்ப் என்ற சித்ரவதைக் கூடத்தில் வைத்திருந்து ஹிட்லரின் சித்ரவதைக் கூடங்களை ஞாபகப்படுத்துவதைப் போல் ஒரு அட்டூழியத்தை செய்து முடித்திருக்கிறது தமிழக-கர்நாடக கூட்டு அதிரடிப் படை.

அதற்குப் பிறகும் அம்மக்கள் எட்டாண்டு காலம் எந்தத் தவறும் செய்யாமல் சிறையில் வாடி வதங்கிப் போய் தற்போது உயிர் இருந்தும் இல்லாதவர்கள்போல் வெளியில் வந்திருக்கிறார்கள்.

குற்றச்சாட்டுக்களை சொன்னார்கள். ஊடகங்கள் பிரபலப்படுத்தின. படித்தவர்கள் கண் கலங்கினார்கள். வழக்கம்போல அரசுகளின் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. கமிஷனும் விசாரித்தது. இன்னும் நிறைய பேர் உள்ளார்கள் என்ற போது "எங்களுக்கு நேரமில்லை. அவ்ளோதான்.." என்று சொல்லி தன் விசாரணையை முடித்துக் கொண்டது.. விசாரணை அறிக்கையின் முடிவை வெளியிடவே பாதிக்கப்பட்ட மக்கள் பிரதமரையே நேரில் சந்திக்க வேண்டியிருந்தது.. சந்தித்தார்கள். கமிஷன் அறிக்கை வெளியானது.

என்னவென்று..? பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென்று.. அதற்கொரு போராட்டம் நிவாரணத் தொகையை உடனே வழங்கும்படி.. நிவாரணமும் கொடுத்தாகிவிட்டது. இதிலும் சில பேர்களுக்கு கிடைக்கவில்லை. இத்தோடு அனைத்தும் முடிந்துவிட்டதா?

அப்பாவி மக்களை ஒரு வருடமாக சட்டவிரோதமாக முகாமில் வைத்திருந்து சித்ரவதை செய்த காவல்துறையினருக்கு பதவி உயர்வுடன், சம்பள உயர்வு. இந்த ஆட்சி அமைப்பிற்கு பெயர் என்ன? இதுதான் ஜனநாயக நாடா?

ஒரு ஆட்சி போய் மறு ஆட்சி வந்தவுடன் இவர்களாவது அந்த கொடுமைக்கார காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால் இவர்களும் கப்சிப். இன்றுவரை ஒரு FIRகூட பதிவு செய்யப்படவில்லை. இதை என்னவென்று சொல்வது?

இது எங்கயோ ஈழத்தில் நடைபெற்றதில்லை. நம் தமிழ்நாட்டில் சேலம் அருகேயுள்ள மேட்டூரில் நடந்தது. மக்களாலும், அமைப்புகளாலும், அரசுகளாலும் அந்தக் கொடுமைக்கார காவல்துறையினரை என்ன செய்ய முடிந்தது? சொல்லுங்கள்.. இது என்ன வகை ஜனநாயகம்.. இதைத்தான் எழுதியிருந்தேன்.. நீங்களும், நானும் 'ஜனநாயகம்' என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்த 'உண்மை ஜனநாயகத்தில் இது சாதாரணம்' என்று..

இப்போது என் மீது கோபம் இல்லையே..?

Anonymous said...

"அது ஒரு துன்பியல் சம்பவம்".அம்பாவி மக்களை யுத்த டாங்கி ஏற்றி நெரித்துக் கொன்ற கொடூரம்-வகைதொகையின்றி;யும் வயது வேறுபாடின்றியும் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய கொடூரம் தந்தையும் பிள்ளைகளையும் தூப்பாக்கிமுனையில் நிறுத்திவிட்டு அவர்கள் கண்முன்னால் தாயை வல்லுறவுக்கு உட்படத்தியதுடன் அதே தாயை அவரது மகனைக் கொண்டே தந்தை முன்னால் துப்பாக்கி முனையில் வல்லுறவு கொள்ள வைத்து பார்த்து இரசித்த கொடுமை இதை பற்றியெல்லாம் யாருக்கும் கவலையில்லை. இந்திய அதிகார வாக்கத்தினுடைய அகராதியில் இவர்களது இழப்புக்கள் துயரங்கள் ஏன் உயிர்கள் கூட பெறுமதியற்றவை கணக்கில் எடுக்கப்பட முடியாதவை,அப்படித்தான் இன்று இது ஒரு துன்பியல் சம்பவம்.

ENNAR said...

அந்த திரைபடத்தை நான் பார்க்க வில்லை தங்கள் மூலம் படித்தேன் நன்றி நன்றாக எழுதியுள்ளீர்கள்

abeer ahmed said...

See who owns organicsupermarket.ie or any other website:
http://whois.domaintasks.com/organicsupermarket.ie