கதாநாயகன் - சினிமா விமர்சனம்

09-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

விஷ்ணு விஷால் புரொடெக்சன்ஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷாலே இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
விஷ்ணு விஷால் ஹீரோவாகவும், கேத்தரின் தெரசா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் சூரி, ஆனந்த்ராஜ், அருள்தாஸ், சரண்யா பொன்வண்ணன், துர்கா, நான் கடவுள் ராஜேந்திரன், மீரா கிருஷ்ணன், மனோபாலா, சித்தார்த் விபன், ஜீவா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கலை – ஏ.கோபி ஆனந்த், நடனம் – ஷோபி பவுல்ராஜ், எம்.ஷெரீப், சண்டை பயிற்சி – தளபதி தினேஷ், திலீப் சுப்பராயன், இசை – ஷான் ரோல்டன், பாடல்கள் – ஜி.கே.பி.ரவி, த.முருகானந்தம், ஷான் ரோல்டன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது, ஒளிப்பதிவு – ஜெ.லட்சுமண், படத் தொகுப்பு – ஸ்ரீதரன், எழுத்து, இயக்கம் – த.முருகானந்தம், தயாரிப்பு – விஷ்ணு விஷால், ரஜினி நட்ராஜ்.
‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரனின்’ அதிரிபுதிரி ஹிட்டுக்கு பிறகு அதே ஜர்னரில் படம் செய்ய ஆசைப்பட்டு இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டிருக்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்.


மிகவும் பயந்து சுபாவமான தம்பித்துரை என்னும் விஷ்ணு விஷால் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பணியில் சேர்கிறார். தாசில்தார் அலுவலகத்தில் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கும் புரோக்கர் வேலை பார்க்கும் அண்ணாதுரை என்னும் சூரி, விஷ்ணு விஷாலின் பால்ய காலத்து பள்ளி தோழன் என்பது தெரிய இருவரும் நட்பாகிறார்கள்.
பணிக்குச் செல்லும்போது தனக்கு லிப்ட் கொடுக்கும் ஹீரோயின் கேத்தரினை பார்த்தவுடன் லவ்வாகிறார் விஷ்ணு விஷால். கூடுதலாக இருவருமே பக்கத்து, பக்கத்து வீடு என்பதால் இன்னமும் நெருக்கமாகிறார் விஷ்ணு.
கேத்தரினின் தந்தையான ரஜினி நட்ராஜ் ஒரு போராளி குணமுடையவர். தன் கண்ணெதிரே ஒரு தப்பு நடந்தால் உடனேயே, அங்கேயே தட்டிக் கேட்கும் சுபாவமுடையவர். அவருக்கு ஒரு பிரச்சினை வரும்போது விஷ்ணு விஷால் புறமுதுகிட்டு ஓட.. இதனை மனதில் வைத்திருக்கிறார் ரஜினி நட்ராஜ்.
காதல் முற்றிப் போக தனது குடும்பத்துடன் கேத்தரின் வீட்டிற்கு சென்று பெண் கேட்கிறார் விஷ்ணு. விஷ்ணுவின் பயந்தாங்கொள்ளி மனப்பான்மையை மனதில் வைத்து பெண் தர மறுக்கிறார் கேத்தரினின் தந்தை.
இதனால் விரக்தியடைந்த விஷ்ணு விஷால் அந்தச் சோகத்தைத் தணிக்க டாஸ்மாக் கடையை நாடுகிறார். அன்றைக்கு பார்த்து முன்னொரு நாளில் இந்தப் பிரச்சினைக்கு காரணகர்த்தாவாக இருந்த ரவுடி அருள்தாஸ் அங்கே வர.. ஆவேசப்பட்ட விஷ்ணு விஷால், அருள்தாஸின் மண்டைய உடைத்தும், ரவுடிக் கும்பலை அடித்து உதைத்து அனுப்பி வைக்கிறார்.
நள்ளிரவில் நடந்த இந்தத் தாக்குதலுக்கு பின்பு மறுநாள் மருத்துவமனையில் கண் விழிக்கிறார்கள் சூரியும், விஷ்ணுவும். மருத்துவமனையில் நடைபெற்ற குளறுபடியில் விஷ்ணுவின் இரத்தப் பரிசோதனை குறிப்புகள் மாறிவிட.. அவருக்கு உடனேயே சாவு வரக் கூடிய அளவுக்கு மிகப் பெரிய நோய் இருப்பதாகச் சொல்கிறார் மருத்துவர் விஜய் சேதுபதி.
தான் விரைவில் சாகப் போகிறோம் என்பதையறியும் விஷ்ணு கலக்கமாகிறார். இந்த நேரத்தில் அவரது அக்காவுக்கு திருமணம் நிச்சயமாகிறது. மாப்பிள்ளை வீட்டில் 150 பவுன் நகையும், ஹோண்டா சிட்டி காரும் கேட்க.. இவர்களும் ஒப்புக் கொள்கிறார்கள். இதற்காக 50 லட்சம் ரூபாய் தேவைப்படும் நிலைமை.
அடுத்து விஷ்ணு விஷால் என்ன செய்யப் போகிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
விஷ்ணு விஷாலுக்கு ஏற்ற கேரக்டர்தான். முதல் பாதியில் பயந்த நபராக இருப்பவர் அடுத்த பாதியில் மோதலுக்குத் தயாராகிறார். கொஞ்சம் காதல் செய்கிறார். ஆனால் காதல் பீலிங்குதான் வரவில்லை. சூரியின் உதவியினால் அவ்வப்போது சிற்சில காட்சிகளில் நகைக்க வைத்திருக்கிறார்.
சாவு உறுதி என்ற விரக்தியில் வருபவரிடம் பிச்சைக்காரன் காசு கேட்க மொத்த நோட்டுக்களையும் போட்டுவிட்டு அவனையும் கட்டிப் பிடித்துவிட்டு போகின்றபோது இயக்குநரையும் மீறிய ஒரு நடிகரை காண முடிந்தது.
கேத்தரின் தெரசா வெறும் ஹீரோயின் அடையாளத்துக்காக மட்டுமே நடித்திருக்கிறார். கல்யாணத்துக்கு முன்னாடியே கர்ப்பமாகிவிடலாம் என்று எதற்கும் துணிந்து வரும் கேரக்டர்.  அதிகமான காட்சிகள் இல்லை. பார்த்தவுடன் காதலாகிவிடுவதால் காதலுக்கு ஒரு அடிப்படை காரணம்கூட இல்லாமல் சப்பையாக இருக்கிறது இவரது போர்ஷன்.
சூரிதான் அவ்வப்போது படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். வீட்டு முன்பாக பிளாட்பார்மில் பாய்போட்டு படுத்து காதலியை பார்க்கும் டெக்னிக்கெல்லாம் அரதப் பழசு. அதிலும் கொஞ்சமும் லாஜிக்கில்லாத காட்சிதான். இருந்தாலும் சூரியின் டயலாக் டெலிவரியால் காட்சியமைப்பு பிரெஷ்ஷாக இருக்கிறது. இந்தக் காட்சியின் இறுதியில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்த பாயையும், தலகாணியையும் லவட்டிக் கொண்டு போவதில் காட்சியும் பாஸாகிவிட்டது.
கடைசியில் சூரிக்கு ஆகும் கொடுமையும், நான் கடவுள் ராஜேந்திரனின் பாடும் திறனை பற்றி அவர் அடிக்கும் கமெண்ட்டும்தான் படத்தின் ஹை லைட்.
ஆனந்த்ராஜின் எண்ட்ரி இன்னொரு பக்கம் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும், அந்த வீட்டின் சிச்சுவேஷனும் லாஜிக்கே இல்லாமல் இருந்தாலும் காமெடியை கொண்டு வந்திருக்கிறது. கிட்னி ஆபரேஷனை அந்த வீட்டிலேயே செய்து முடிக்கிறார்கள் என்பதே மிகப் பெரிய காமெடி. ஆபரேஷன் முடிந்து வெளியே வரும் சூரியின் பரிதாபமான பார்வையிலேயே. மொத்த லாஜிக்கும் அடிபட்டு போய் நகைச்சுவை தெறிக்கிறது.
கூடுதலாக சரண்யா பொன்வண்ணனும், விஜய் சேதுபதியும் மனதில் பதியும் அளவுக்கு நடித்திருக்கிறார்கள். ஓஷோவின் பொன்மொழிகளைச் சொல்லி குழப்பியடிக்கும் விஜய் சேதுபதியின் பேச்சு படத்துக்கு ஒரு முதுகெலும்பு. அதேபோல் நோய் இல்லை என்று சொல்வதையும் அதே பாணியில் விஜய் சேதுபதி சொல்வதும் நச்சென்று பதிகிறது.
முழு நீள காமெடி படம் என்றார்கள். ஆனால் மூன்று இடங்களில் மட்டுமே பெரிதும் சிரிக்க வைத்திருக்கிறார்கள். மற்றபடி உதட்டை பிரிக்க வைத்ததோடு சரி.. திரைக்கதையில் புதுமையில்லாமலும், காமெடியான இயக்கம் இல்லாமலும் இருப்பதால் படத்தில் ஈர்ப்பில்லை. படத்தின் மெதுவான ஓட்டமும் மிகப் பெரிய தடைக்கல்லாக இருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் என்றாலும் ரசிக்க முடியவில்லை. ஒளிப்பதிவு ஒன்றுதான் படத்தில் குறிப்பிடத்தக்க அம்சம். இடைவேளைக்கு பின்பும் ஒரு பாடல் காட்சியை வைத்திருக்கலாம். ஆனால் அதற்கான திரைக்கதையை அமைக்காமல் விட்டுவிட்டார்கள்.
ஒரு வலுவான ஹீரோவாக காட்சியளிக்க அதற்கேற்ற கேரக்டர் ஸ்கெட்ச்சும், சுவையான திரைக்கதையும், திறமையான இயக்கமும் இருக்க வேண்டும். இந்தப் படத்தில் அது மூன்றுமே இல்லாமல் சப்பையாக இருக்கிறது. இதுதான் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட்டாக இருக்கிறது.
இந்தக் கதாநாயகன் வெறும் காமெடியனாக மட்டுமே தெரிகிறான்..!

0 comments: