மகளிர் மட்டும் - சினிமா விமர்சனம்

15-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ்த் திரையுலகில் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை ‘36 வயதினிலே’ படம் மூலமாகத் துவக்கிய நடிகை ஜோதிகா அடுத்து நடித்திருக்கும் படம் ‘மகளிர் மட்டும்’.
‘பசங்க-2’ படத்தைத் தயாரித்த நடிகர் சூர்யாவின் 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட் நிறுவனமே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மாதான் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
இந்தப் படத்தில் ஜோதிகா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன், நாசர், லிவிங்ஸ்டன், பாவல், கோகுல்நாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒரு மிக முக்கியமான கெஸ்ட் ரோலில் மாதவன் நடித்துள்ளார்.
ஸ்டில்ஸ் – மேனக்சா, விளம்பர டிசைன்ஸ் – 24 A.M., டீஸர், டிரெயிலர் கட் – டி.சிவாநந்தேஸ்வரன், தயாரிப்பு வடிவமைப்பு – சி.எஸ்.பாலசந்தர், உடை வடிமைப்பு – பூர்ணிமா, ஒலி வடிவமைப்பு – அந்தோணி பி.ஜெயரூபன், நடனம் – பிருந்தா, ஒப்பனை – பட்டணம் ரஷீத், சண்டை பயிற்சி – ஸ்டன்னர் சாம், ஒளிப்பதிவு – எஸ்.மணிகண்டன், இசை – ஜிப்ரான், பாடல்கள் – தாமரை, விவேக், உமாதேவி, பிரம்மா, படத் தொகுப்பு – சி.எஸ்.பிரேம், தயாரிப்பு நிர்வாகம் – ஆர்.செல்லத்துரை, இணை தயாரிப்பு – கிறிஸ்டி சிலுவப்பன், ராஜசேகர் கற்பூர சுந்தர பாண்டியன், தயாரிப்பு நிறுவனம் – 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட், தயாரிப்பு – சூர்யா, எழுத்து, இயக்கம் – பிரம்மா.

பெண் சுதந்திரம் என்றால் என்ன..? அது எப்படிப்பட்டது..? அது யாரிடமிருந்து பெறப்பட வேண்டியது..? அதனை எப்படி பெற வேண்டும்..? பெற்ற சுதந்திரத்தை எப்படி பாதுகாக்க வேண்டும்..? எப்படி கொண்டாட வேண்டும்..? என்பதையெல்லாம் கமர்ஷியல் ரசிகர்களும் ரசிக்கும்வகையில் கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா.
பிரபாவதி என்னும் ஜோதிகா ஆவணப்பட இயக்குநர். முற்போக்கு சிந்தனையுள்ளவர். காதல், கல்யாணம், வாழ்க்கை முறை என்று அனைத்திலுமே தன்னுடைய சுய சிந்தனைதான் செயல்படுத்த வேண்டும் என்கிற கொள்கையில் உறுதியாய் இருப்பவர்.
இப்போது இவர் காதலிக்கும் நபரான சுரேந்தர் கத்தாரில் பணியாற்றி வருகிறார். சுரேந்தரின் தாயாரான கோமாதா என்னும் ஊர்வசியுடன் மகள் போல பழகி அவருடனேயே தங்கியிருக்கிறார் ஜோதிகா.
கோமாதா வீட்டிலேயே சிறிய பிள்ளைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கோமாதாவின் கணவர் இறந்துவிட்டார். ஒரே மகன்தான் என்பதால் எந்த தொல்லையும் இல்லாமல் இருக்கிறார்.
கோமாதா வாழ்க்கையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் டியூஷன், வீடு, சமையல், சாப்பாடு என்றே சுற்றி வருவதால் அவருடைய வாழ்க்கையில் ஒரு வித்தியாசத்தை காட்ட வேண்டும் என்று நினைக்கிறார் வருங்கால மருமகளான ஜோதிகா.
தன்னுடைய கல்லூரி கால தோழிகளான ராணி அமிர்தகுமாரி மற்றும் சுபுலட்சுமி இருவரையும் அதற்குப் பின்னர் பார்க்கவே முடியவில்லை என்று வருத்தப்படுகிறார் ஊர்வசி. தனது வருங்கால மாமியாரின் தோழிகளை கண்டுபிடித்துக் கொடுத்து அவருக்கு ஒரு மகிழ்ச்சியை அளிக்க நினைக்கிறார் ஜோதிகா.
இதற்காக முதலில் முகநூல் மூலமாக ராணி அமிர்தகுமாரி என்னும் பானுப்பிரியாவை கண்டுபிடிக்கிறார் ஜோதிகா. பானுப்பிரியா இப்போது ஆக்ராவில் வசித்து வருகிறார். தோளுக்கு மேல் வளர்ந்த பையன்கள் இருவர், ஒரு பெண்ணும் இருக்கிறார்கள். இவருடைய கணவர் நாசர், உள்ளூர் அரசியல் பிரமுகர். மூத்த மகனும் அப்பாவின் அடியொற்றி அதே அரசியல் கட்சியில் தொண்டராக இணைந்து கட்சிப் பணியாற்றி வருகிறார்.
ஆணாதிக்கம் நிறைந்த வீடு. மனைவியை சமைக்கவும், வீட்டைப் பார்த்துக் கொள்ளவும், குழந்தைகளை வளர்க்கவும் மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும் ஒரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்டு இத்தனை சுமைகளையும் தாங்கிக் கொண்டிருக்கிறார் பானுப்பிரியா.
பானுப்பிரியாவின் மூத்த மருமகளுக்கு பெண் குழந்தை பிறந்து வீட்டுக்கு வரும் அதே நாளில் ஜோதிகா ஊர்வசியை ஆக்ராவுக்கு அழைத்து வருகிறார். அங்கே பானுப்பிரியாவை சந்திக்கிறார் ஊர்வசி. இருவரும் தாங்கள் படித்த கல்லூரி நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இதையடுத்து இன்னொரு தோழியான சுபுலட்சுமி என்னும் சரண்யா பொன்வண்ணனை கண்டுபிடித்து தருகிறார் ஜோதிகா. சரண்யா இப்போது ஆந்திராவில் வசிக்கிறார். வயதான மாமியாருடன், குடிகார கணவருடன் குழந்தையில்லாத நிலையில் இருக்கிறார். வாழ்க்கையில் வெறுப்படைந்த நிலையில் இருக்கும் இவருக்கு தனது கல்லூரி கால தோழிகள் திரும்பவும் கிடைக்க.. அவர்களை உடனேயே பார்க்க வேண்டும் என்று நினைத்து கணவரிடம் சொல்லிவிட்டு அவரும் ஆக்ராவுக்கு கிளம்பி வருகிறார்.
அங்கே மூன்று தோழிகளும் சந்தித்துக் கொள்கிறார்கள். ஆனாலும் தனிமையில் தங்கள் விருப்பப்படி பேசுவதற்கான சூழலே அந்த வீட்டில் இல்லாமல் இருப்பதால் இவர்களை தனியே அழைத்துக் கொண்டு போக நினைக்கிறார் ஜோதிகா. கூடவே இன்னொரு முக்கியமான காரணமும் அவருக்கு இருக்கிறது.
ஆனால் அந்த நேரத்தில் உள்ளூர் மாநகராட்சி தேர்தலில் பானுப்பிரியாவை கவுன்சிலர் பதவிக்கு நிற்க வைத்திருக்கிறார் நாசர். தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார் பானுப்பிரியா. இந்த நேரத்தில் தான் வெளியூர் வருவது முடியாது என்று மறுக்கிறார் பானுப்பிரியா. ஆனாலும் ஜோதிகா தன் முயற்சியில் உறுதியாய் இருக்கிறார். 
இதற்காக ஜோதிகா எடுக்கும் முயற்சி பானுப்பிரியாவின் குடும்பத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஆனாலும் ஜோதிகா தன் விஷயத்தில் உறுதியாய் இருந்து மூன்று தோழிகளையும் அழைத்துக் கொண்டு சத்தீஷ்கர் கிளம்புகிறார். முடிவு என்னாகிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் பெண்களை மையப்படுத்தியே திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நான்கு பேரின் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளும் வேறு வேறாக இருந்தாலும் மூன்று தோழிகளின் வாழ்க்கை அனுபவங்களும் ‘பெண் ஏன் அடிமையானாள்’ கதையைச் சொல்லும்விதமாகவே இருக்கிறது.
நிரம்ப சோகமான கதை சரண்யா பொன்வண்ணனுடையது. அவருடைய அறிமுகக் காட்சிக்கு பின்பு அவருடைய வாழ்க்கைக் கதையைக் காட்டும் காட்சியில் அவர் காட்டும் நடிப்பு அற்புதம். எந்த லச்சையும் இல்லாமல், எப்போதும் இப்படித்தான் என்பதுபோல அவருடைய இயற்கையான நடவடிக்கைகள் அப்படியே நம் வீட்டில் நடப்பது போலவே தெரிகிறது. நடிப்பில் முதலிடத்தைப் பிடித்திருப்பது சாட்சாத் சரண்யாதான்.
அதேபோல் குத்துச் சண்டைக்கு பயிற்சி பெறும் அந்த டம்மி தலகாணியை கும்மாங்குத்து குத்தும் காட்சியில்கூட தான் சுமந்த முதல் குழந்தை பெண்ணாக இருப்பதால் அதைக் கலைக்கும்படி கூறிய கணவனையும், அதன் பின் வயிற்றில் குழந்தை தங்காத்தால் தன்னை ஊரே சபித்த்தையும் சொல்லி கண் கலங்கும் காட்சியில் நிஜமாகவே ரசிகர்களையும் கண் கலங்க வைத்திருக்கிறார் சரண்யா.
அவருடைய கணவரான லிவிங்ஸ்டன் போனில் ‘விஷயத்தைச்’ சொன்னவுடன் கேட்டுக் கொண்டவர் முடிவாக ‘என் புருஷன் குடிக்கிறதை நிறுத்திட்டாராம்’ என்று தனக்கு எது தேவையோ, அதையே பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு சொல்லும் போக்கில் ஒரு உண்மையான பெண்ணை பிரதிபலிக்க வைத்திருக்கிறார் சரண்யா. வெல்டன் மேடம்..
இவருக்கு அடுத்து பானுப்பிரியா. நிறைய படிக்க வேண்டும் என்கிற கனவோடு இருந்தவரை வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்து வைத்து ஆக்ராவுக்கு அனுப்பி வைக்க.. இங்கே வந்ததில் இருந்து வீட்டுக்கு வேலைக்காரியாக மட்டுமே தான் உழைத்து வருவதை புன்சிரிப்போடு மட்டுமே சொல்கிறார் பானுப்பிரியா. இந்த சிரிப்பு ஒன்றே இவரது வாழ்க்கையில் புதைந்திருக்கும் சோகத்தை ரசிகர்களால் உணர முடியாமல் செய்துவிட்டது.
இதேபோல் இவரது மகன் சத்தீஷ்கர் போலீஸாரிடம் காவலில் இருக்கும்போது அங்கிருக்கும் பெண் கமாண்டரால் அம்மா என்பவள் யார் என்பதை உணர வைக்கும்போது தெரிகிற உண்மை காட்சியில் அந்த கமாண்டர்கூட ஹீரோயினாகத்தான் தெரிகிறார்.
சாதாரண முடிதான்.. பெண்கள் சமையல் செய்யும்போது அவர்களுடைய தலைமுடி சோற்றிலோ, சாம்பாரிலோ இருப்பது சகஜம். ஆனால் இதற்காக பல குடும்பங்களில் பெண்கள் அடி வாங்குவார்கள்.. திட்டு வாங்குவார்கள்.. இதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாத ஆணாதிக்கத்தை அந்த பெண் கமாண்டர் “சாதாரண முடிதானே.. தூக்கிப் போட்டுட்டு போக முடியல.. நீயெல்லாம் எதுக்கு உங்கம்மாவை தேடுற.. இந்த வயசுல உங்கம்மா உங்களைவிட்டுட்டு ஓடினா நீங்க அவளை என்ன பாடு படுத்தியிருப்பீங்க…?” என்றெல்லாம் கேட்பது நியாயமான கேள்வி..!
பானுப்பிரியாவின் மகன் பாவெல் இதனை நினைத்துப் பார்த்து அந்த ஒரேயொரு காட்சியிலேயே அம்மா என்பவள் யார் என்பதையும், பெண் என்பவள் எதனால் ஆனவள் என்பதையும் மகன் உணர்ந்து கொள்கிறார் என்று முடித்திருப்பது அழகானது.
ஒரு லட்சம் சம்பளம் வாங்கினாலும் பத்து லட்சம் ரூபாய்க்கு நடிப்பார் நடிப்பு ராட்சஸி ஊர்வசி. இதில் இதையேதான் செய்திருக்கிறார். படபடவென வசனத்தை பேசுவதில் இருந்து காமெடி வசனங்களுக்கு தனியே முக்கியத்துவம் கொடுத்து உச்சரித்திருப்பதுவரையிலும் அவர் டேக் இட் ஈஸி ஊர்வசிதான்..! நாசரின் முக அழகைப் பற்றி அவர் பானுப்பிரியாவிடம் ஒப்பிக்கும் காட்சி ஒன்று போதும் ஊர்வசியின் பெருமையைச் சொல்ல..!
பிரபாவதி என்னும் ஜோதிகா காட்சிக்கு காட்சி, பிரேமுக்கு பிரேம் திரை முழுவதிலும் தோன்றியிருக்கிறார். ஜோதிகாவை பில்டப் செய்வதற்காகவே இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்களோ, என்று சில சமயம் நினைக்கும் அளவுக்கு திரைக்கதை அவரைச் சுற்றியே அமைந்திருக்கிறது.
‘கோம்ஸ்’ என்று வருங்கால மாமியாரை செல்லமாக அழைப்பதில் இருந்து, பெண், பெண்ணியம், சுதந்திரம், ஆணாதிக்கம் என்று பலவற்றையும் இவர்களுக்கு கற்றுக் கொடுப்பதுவரையிலும் ஜோதிகாவின் ஆதிக்கம்தான் படத்தில் அதிகம்..!
இடையில் சந்தடிச்சாக்கில் இதுவரையில் எந்தப் படத்திலும் சொல்லாத அளவுக்கு தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகான்-மும்தாஜின் நிஜமான வாழ்க்கைக் கதையையும் சொல்லி, இதன் பின்னால் இருக்கும் இன்னொரு பார்வையையும் எடுத்துரைத்திருக்கிறார் இயக்குநர். இதற்காக இயக்குநருக்கு ஒரு பாராட்டு..!
இந்த மூன்று தோழிகளின் கல்லூரி கால கேரக்டர்களாக நடித்தவர்கள் மூவருமே நடிப்பில் பின்னியிருக்கிறார்கள். அந்தத் திரைக்கதை மிக மிக ரசனையானது. பாடல் காட்சிகளின் மாண்டேஜில் இவர்களது கல்லூரி கால வாழ்க்கையை பிட்டு, பிட்டு வைத்திருப்பது அழகு.
நாசர் வழக்கம்போல ஆணாதிக்கத்தின் உச்சக்கட்ட திமிர்த்தனத்தைக் காட்டியிருக்கிறார். லிவிங்ஸ்டன் தனது கையாலாகத்தனத்தை காட்ட பாட்டு பாடியபடியே இருப்பதும், கழிவிரக்கத்தில் “என்னை அடிச்சிரு சுப்பு…” என்று மனைவியிடம் கெஞ்சுவதும் இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் ரசிக்க வைத்திருக்கிறது. கடைசியில் தன்னுடைய தாயார் இறந்துவிட்டபோதும் மனைவியின் டூரை கலைக்க வேண்டாம் என்றெண்ணி “அதை அவளிடம் சொல்லிராத…” என்று ஜோதிகாவிடம் சொல்லும்போது மனதில் இடம் பிடிக்கிறார் லிவிங்ஸ்டன்.
மூன்று தேவிகளின் காதல் கதைகளில் இருக்கும் உண்மைத்தன்மையும், அதன் நேட்டிவிட்டி சார்ந்த கதையும், அதைப் படமாக்கியிருக்கும்விதமும் ரசிக்க வைத்திருக்கிறது. ஊர்வசியின் காதலன்தான் சரண்யாவின் தற்போதைய கணவன் என்பதை சட்டென்று ஒரு நொடியில் கடந்து போகும் ஷாட்டில் வைத்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.
கடைசியாக கிளைமாக்ஸில் அனைவரையும் அழ வைக்கும்விதமான திரைக்கதையும், திடீர் சர்ப்ரைஸாக களத்தில் குதிக்கும் ஊர்வசியின் மகனான மேடியும் ஒரு புதிரான டிவிஸ்ட். கிளைமாக்ஸில் அம்மாவை புரிந்து கொண்ட மகன்.. மனைவியைப் புரிந்து கொண்ட கணவன்.. என்று பாஸிட்டிவ்வாக முடித்திருப்பது பாராட்டுக்குரியது..!
ஒளிப்பதிவாளர் எஸ்.மணிகண்டனின் வண்ணமயமான ஒளிப்பதிவில் முதல் காட்சியில் இருந்து கடைசிவரையிலும் காட்சிகள் அழகுதான். சென்னையில் இருந்து ஆக்ரா, சத்தீஷ்கர் நீர்வீழ்ச்சி வரையிலும் ரசிகர்களை அழைத்துச் சென்று பார்க்க வைத்திருக்கிறார்கள். எதுவும் சலிக்கவில்லை.
ஜிப்ரானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக இருந்தும், பின்னணி இசை அதிகம் தொந்தரவு செய்யாத நிலையில் இருப்பதால் நடிப்பை பெருமளவில் ரசிக்க முடிந்திருக்கிறது. ‘அடி வாடி திமிரா’ பாடலை படத்தின் லோகோவுக்கான பாடலாகவே அமைத்திருக்கிறார்கள். நன்று. இதேபோல் ‘கேரட்டு பொட்டழகா’ பாடலின் நடனக் காட்சிகள் அருமை.
படத்தை மகளிருக்கான பிரச்சாரப் படமாக ஆகக்கூடிய அளவுக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும், அதனை அவ்வப்போது அடக்கி ஒடுக்கி மிக இயல்பான திரைக்கதையிலும், மிக எளிமையான, அதே சமயம் கருத்தான வசனங்களாலும் படத்தை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பிரம்மா.. அவருக்கு எமது பாராட்டுக்கள்..!
நடுவில் சங்கர்-கவுசல்யா ஆணவக் கொலை பற்றிய உண்மைக் கதையையும் இணைத்திருக்கிறார் இயக்குநர். எத்தனை, எத்தனை விழிப்புணர்வு பிரச்சாரங்களும், கதைகளும் சொல்லப்பட்டாலும் ஜாதி என்னும் அரக்கனை அழிக்கவும், காதலை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவும் பெண்கள் ஓரணியில் திரள வேண்டும் என்பதையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர்.
இந்த மூன்று தோழிகளும் கல்லூரியில் இருந்து பிரிக்கப்படுவதற்கு காரணமான ‘அவள் அப்படித்தான்’ படம் வெளியான அதே தினத்தன்று மூவரையும் சத்தீஷ்கரில் சந்திக்க வைக்கும் ஜோதிகாவின் செயல் மிகப் பொருத்தமானது. இயக்குநர் பிரம்மாவுக்கு இதற்காகவே ஒரு ஸ்பெஷல் பாராட்டு..!
படம் பார்க்கும் ஒவ்வொரு ஆண் மகனையும் தங்களது வீட்டில் இருக்கும் தாய், தங்கை, அக்காள், பாட்டிகள் என்று தங்கள் குடும்பப் பெண்களுக்கு அவர்களுக்குரிய மரியாதையையும், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையையும் நாம் இதுவரையிலும் மதித்து நடந்து வந்திருக்கிறோமா என்று தங்களைத் தாங்களே கேள்வி கேட்க வைத்திருக்கிறது இந்தப் படம்..!
இதுவே இந்தப் படத்தின் வெற்றி எனலாம்..!

0 comments: