10-09-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இதில் விக்ரம் பிரபு ஹீரோவாகவும், நிக்கி கல்ரானி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர்.
மேலும், பொன்வண்ணன், நான் கடவுள் ராஜேந்திரன், மதுசூதனன் ராவ், நாகி நீடு, ஆடுகளம் நரேன், ஸ்ரீரஞ்சனி, வருண், ராஜ்குமார், வின்சென்ட் அசோகன், தினேஷ், ராஜசிம்மன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஆர்.டி.ராஜசேகர், இசை – ஷான் ரோல்டன், கலை – எம்.பிரபாகரன், படத் தொகுப்பு – தியாகு, பாடல்கள், ரோகேஷ், யுகபாரதி, மதன் கார்க்கி, நடனம் – பிருந்தா, தஸ்தா, சண்டை பயிற்சி – சூப்பர் சுப்பராயன், திலீப் சுப்பராயன், உடை வடிவமைப்பு – அம்ரிதா ராம், உடைகள் – ரெங்கசாமி, ஸ்டில்ஸ் – நரேன், டிஸைன்ஸ் – ஷபீர், தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.ஆனந்த், லைன் புரொடியூஸர் – டைமண்ட் பாபு, தயாரிப்பு – விக்ரம் பிரபு, இசக்கி துரை, ஆர்.கே.அஜய்குமார், எழுத்து, இயக்கம் – அசோக்குமார்.
சிறு வயதிலிருந்தே தீயணைப்புத் துறை வீரனாக வேண்டும் என்பதை லட்சியமாக்க் கொண்டு வாழும் ஹீரோவான குருவுக்கும், அவருடைய அருமையான நண்பர்களுக்கும் அந்த லட்சியத்தை அடையும் வழியில் ஒரு பெரிய இடையூறு குறுக்கிடுகிறது. அந்த குறுக்கீட்டையும் தாண்டி எப்படி தாங்கள் நினைத்ததை சாதிக்கிறார்கள் என்பதுதான் இந்த நெருப்புடா திரைப்படம்.
ஹீரோ குருவின் தந்தை கார்ப்பரேஷனில் கழிவு நீர்த் துப்பரவுத் தொழிலாளி. தாயை இழந்தவர். குரு தன்னுடைய சிறு வயதில் தீயணைப்புத் துறையினரின் பரபரப்பான மீட்புப் பணியை பார்க்கிறார். அதைப் பார்த்தவுடனேயே அவருடைய மனதில் அந்த பணியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.
நாளாக நாளாக தானும் ஒரு தீயணைப்புப் படை வீரனாக வேண்டும் என்கிற அவரது ஆசை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த ஆசையை தனக்கு மட்டுமல்ல.. தன்னுடைய நெருங்கிய நண்பர்களான 4 பேருக்கும் பாஸ் செய்ய.. அவர்களும் வரிசை கட்டி நிற்கிறார்கள்.
தீயணைப்புத் துறை வேலையில் சேரும்வரையிலும் இவர்களுக்கு பொறுமையில்லை. எனவே இப்போதே ஒரு லாரியை வாங்கி அதனை தீயணைப்புத் துறையின் வண்டியை போல மாற்றி தீ விபத்து எங்கு ஏற்பட்டாலும் தீயணைப்புத் துறை வண்டிக்கு முன்பாக இவர்கள் போய் தீயை அணைத்தும், பொதுமக்களை காப்பாற்றியும் சேவை செய்து வருகிறார்கள்.
இவர்களது இந்த மனமுவந்த சேவையைப் பாராட்டும் தீயணைப்பு படை அதிகாரியான நாகிநீடு இவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய நினைத்து தீயணைப்புத் துறையினருக்கான தேர்வில் இவர்கள் கலந்து கொள்ளும்வகையில் தேர்வுக்கான அழைப்பிதழை கிடைக்கச் செய்கிறார்.
ஆனால், தேர்வுக்கு முதல் நாள் குருவின் நண்பர்களில் ஒருவனான வருண் வீடு திரும்பும்போது வின்சென்ட் அசோகனால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்படுகிறார். வருண் தன்னைத் தற்காத்துக் கொள்ள அசோகனை கீழே தள்ளிவிட எதிர்பாராதவிதமாக அசோகன் தலையில் அடிபட்டு உடனேயே அந்த இடத்திலேயே இறந்து போகிறார்.
அந்த நள்ளிரவு நேரத்திலும் இது குருவுக்கும், மற்ற நண்பர்களுக்கும் தெரிய வர.. போலீஸில் விஷயத்தைச் சொல்லிவிடலாம் என்று போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறார்கள். அங்கே அந்தப் பகுதியின் பிரபல புள்ளியான நான் கடவுள் ராஜேந்திரனை சந்திக்கிறார்கள்.
அவரோ போலீஸ் கேஸை திசை திருப்பி உங்களை உள்ளே வைத்துவிடும் என்று சொல்லி அனுப்பிவிடுகிறார். ஆனால் இறந்து போன அசோகன் பிரபல ரவுடி புளியந்தோப்பு ரவியின் உடன் பிறவா சகோதரன் என்னும் விஷயம் காலையில அனைவருக்கும் தெரிய வருகிறது.
தனது உயிர் நண்பனின் மரணத்துக்குக் காரணமானவர்களை பழி வாங்க சபதமெடுக்கிறார் புளியந்தோப்பு ரவி என்னும் மதுசூதன்ன் ராவ். இவரிடமிருந்து குருவும், மற்றவர்களும் தப்பித்தார்களா..? இவர்களது தீயணைப்புப் படை வீரன் என்கிற கனவு என்ன ஆனது என்பதுதான் மீதிக் கதை.
தீயணைப்புத் துறையின் சேவையை பற்றி இதுவரையிலும் எந்தவொரு தமிழ்ச் சினிமாவிலும் இது போன்று சொல்லப்படவில்லை. இந்த உயர்வு நவிற்சியை செய்த இயக்குநர் அசோக்குமார் பெரிதும் பாராட்டக் கூடியவர்தான்.
முதல் காட்சியிலேயே தீயை அணைக்கும் சாகசங்கள் உள்ளிட்டவற்றை செய்து உயிரைப் பணயம் வைத்து குடிமக்களை காப்பாற்றும் காட்சியினால் படத்தின் கதைக்குள் உட்கார வைத்து விடுகிறார் இயக்குநர்.
இந்தக் காட்சிகளை படமாக்கிய ஒளிப்பதிவாளருக்கு மிகப் பெரிய பாராட்டு உரித்தாகட்டும். அதேபோல் ஒரு குழந்தையைக் காப்பாற்றி துணிப் பந்துக்குள் ஒளிந்திருந்து வெளியில் வரும் விக்ரம் பிரபுவின் சாகசக் காட்சி ரசிப்புக்குரியது.
படத்தில் ஏகப்பட்ட டிவிஸ்ட்டுகள். டிவிஸ்ட் மேல டிவிஸ்ட் என்னும் சொலவடைக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு உதாரணம்.
வருண் தாக்கப்பட்ட காட்சிக்கு பிறகு ஒரு பரபரப்பு டெம்போவை ஏற்றிவிட்டு கடைசிவரையிலும் அதனை இறக்கவிடாமல் தோளிலேயே சுமந்திருக்கிறார் திரைக்கதை ஆசிரியரும், இயக்குநருமான அசோக்குமார். அத்தனை ஓட்டமாய் ஓடுகிறது படம்.
இடையிடையே வரும் காதல் போர்ஷன் மட்டுமே கொஞ்சம் டல். தீயணைப்புத் துறையின் உயரதிகாரியான நாகி நீடுவின் மகளான டாக்டருக்கு படிக்கும் நிக்கி கல்ரானி விக்ரம் பிரபுவை காதலிக்கச் சொல்லும் சில காரணங்கள் ஏற்புடையதே..! ஆனாலும் காதல் காட்சிகள் அழுத்தமாக இல்லாமல், பாடல் காட்சிகளுக்காகவே இடம் பெற்றிருப்பதால் கொஞ்சம் சோர்வுதான்.
என்னதான் தீயணைப்புத் துறையில் சேர விருப்பம் என்றாலும் உரிய அனுமதி பெறாமல் இப்படி தீயணைப்பு வண்டியை வைத்துக் கொண்டு சேவை செய்ய வருவதை எந்த அரசு ஏற்றுக் கொள்ளும் என்று தெரியவில்லை. படத்திலேயே மிகப் பெரிய லாஜிக் சறுக்கல் இதுதான். இப்படியே போனால் போலீஸாக விரும்புவர்கள் தனியாக போலீஸ் ஸ்டேஷன் வைக்க அனுமதிப்பார்களா என்று கேட்பார்கள்..!
மதுசூதனன் ராவ்வின் இத்தனை அக்கிரமங்களையும் பார்த்துக் கொண்டு இத்தனை நாட்கள் அமைதியாய் இருந்த போலீஸ் இப்போது போட்டுத் தள்ள தயாராய் இருக்கிறது என்று துடியாய் துடிக்கிறார் போலீஸ் கமிஷனர் ஆடுகளம் நரேன். ஆனால் முயற்சிதான் செய்யவே இல்லை. பின்னர் அவருக்கு ஏன் இத்தனை வெறி..? இதற்கான சரியான காரணமும் சொல்லப்படவில்லை.
விக்ரம் பிரபு இந்தப் படத்தில் நடிப்பில் சரசரவென மேலும் எட்டு படிகள் ஏறியுள்ளார் என்று உறுதியாய் சொல்லலாம். முந்தைய படங்களில் பார்த்த விக்ரம் பிரபுவுக்கும் இதில் இருக்கும் குருவுக்கும் 16 வித்தியாசங்களை உறுதியாய் காட்டலாம்.
நண்பர்களுக்காக உருகுவது.. காதலிக்காக ஏங்குவது.. அப்பாவிடம் பாசத்துடன் கண்டிப்பது.. உண்மை சொல்லாமல் இருக்க முடியாது என்று போலீஸுக்கு போக முடிவெடுப்பது.. கிளைமாக்ஸ் காட்சியில் திருநங்கையை அடிக்க முடியாமல் தவித்துவிட்டு முடியாமல் போய் வெறும் கையாலேயே அடிப்பது.. “என்னை எப்படி கொடுமைப்படுத்தினாலும், கொன்றாலும் என் வேலை உயிரைக் காப்பாத்துறது மட்டும்தான். இன்னொரு உயிரை எடுப்பது அல்ல…“ என்று பக்குவமாய் பேசுவது.. என்று அனைத்து வகையிலும் ஹீரோ குரு, சென்ட்டம் வாங்கிவிட்டார்.
நிக்கி கல்ரானிக்கு அதிகம் வாய்ப்பில்லை என்றாலும் இருக்கும் இரண்டு டூயட்டுகளிலும் கண்ணைக் கவர்ந்திழுக்கிறார். நண்பர்களில் வருணும், ராஜசிம்மனும் சொல்லும்படி நடித்திருக்கிறார்கள்.
இன்னொரு பக்கம் வில்லனான மதுசூதனன் ராவ் தனது உயிர் நண்பனுக்காக கொதிக்கிறார். பழி வாங்கத் துடிக்கிறார். கடைசியில் பரிதாபமாய் முடிகிறது இவரது வாழ்க்கை.
ஒரு புத்தம் புதிய டிவிஸ்ட்டாக கிளைமாக்ஸில் வரும் திருநங்கை கேரக்டர் அழகு. சங்கீதாவின் முரட்டு நடிப்புக்கு ஏக கைதட்டல்கள் கிடைக்கின்றன. இவருக்காக டப்பிங் குரல் கொடுத்த அந்தப் பெண்மணிக்கும் நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. அத்தனை அழுத்தமான காரணத்திற்கேற்ற நடிப்பைக் காட்டியிருக்கிறார் சங்கீதா.
இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் ஏற்கக் கூடியதுதான் என்றாலும் இவர் ஒருவரே மதுசூதனனின் ஆட்கள் அத்தனை பேரையும் தீர்த்துக் கட்டுவதும், நிக்கி அண்ட் கோ-வை இழுத்து வந்து கட்டி வைத்திருப்பதும் கொஞ்சம் ஓவர்தான் இயக்குநரே..!
ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். பாடல் காட்சிகளும், லொகேஷன்களும் கண்ணை கவர்கின்றன. இறுதிக் காட்சியில் சங்கீதாவின் அழகும், அந்த லொகேஷனின் அழகும்கூட ரசிப்பதுபோலத்தான் இருந்தது.
ஒரேயொரு டூயட் பாடல் சிறப்பாய் இருக்க பின்னணி இசையும் முதல் முறையாக ஷான் ரோல்டனின் இசையில் பிரமாதப்படுத்தியிருக்கிறது. முதல் காட்சியில் தலைதெறிக்க ஓடும் தீயணைப்பு வண்டியுடன் கூடவே டிராவல் செய்யும்விதமாய் இருக்கும் இசையும், படபடப்பு, தடதடப்பு அனைத்தும் கலந்த கலவையாய் ஒலிக்கும் இசையும் அழகு.
விக்ரம் பிரபுவின் கேரியரில் அவரது சிறப்பான நடிப்புக்கேற்ற படமாகவும், அழுத்தமான கதையைக் கொண்ட படமாகவும் இது அமைந்திருப்பது பாராட்டுக்குரியது..!
|
Tweet |
0 comments:
Post a Comment