குரங்கு பொம்மை - சினிமா விமர்சனம்

02-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஸ்ரேயா ஸ்ரீமூவிஸ் L.L.P. நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் ‘இயக்குநர்  இமயம்’  பாரதிராஜாவும், நடிகர் விதார்த்தும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். 
மேலும் டெல்னா டேவிஸ், ரமா, பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு,  கல்கி,  பாலாசிங்,  கிருஷ்ணமூர்த்தி  மற்றும்  பலர் நடித்துள்ளனர்.
இசை – B. அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு – N.S. உதயகுமார், படத் தொகுப்பு -அபினவ் சுந்தர் நாயக், கலை – வீரமணி, வசனம் – மடோன் அஸ்வின், பாடல்கள் -நா.முத்துக்குமார், நடனம் – ராதிகா, சண்டை – மிராக்கல் மைக்கேல், மக்கள்  தொடர்பு -இரா. குமரேசன், நிர்வாகத் தயாரிப்பு – M. கண்ணன், இயக்கம் – நித்திலன்.

தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட ஹீரோ விதார்த் சென்னையில் கால்டாக்சி ஓட்டி வருகிறார். அவருடைய தந்தையான பாரதிராஜா சிலை கடத்தும் தொழில் உள்ளிட்ட பலவகையான கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பி.எல்.தேனப்பனிடம் காலம், காலமாக வேலை பார்த்து வருகிறார்.
இது விதார்த்துக்கு பிடிக்கவில்லையென்றாலும் தன்னை சிறு வயதில் இருந்தே அரவணைத்து இன்றைக்கு இந்த அளவுக்காச்சும் இருப்பதற்கு தேனப்பனே காரணம் என்பதால் அவரைவிட்டுப் பிரிய மனசில்லாமல் இருக்கிறார் பாரதிராஜா.
விதார்த்துக்கு பெண் பார்க்கப் போன இடத்தில் தேனப்பனின் பின்னணி தெரிந்து பெண் தர மறுக்கிறார்கள். இந்தக் குழப்பத்தில் மணப்பெண்ணின் தந்தையான பாலாசிங்கை அடித்துவிடுகிறார் விதார்த். மணப்பெண்ணாய் நின்ற ஹீரோயினை விதார்த்துக்கு பிடித்திருந்தாலும் கண நேரத்தில் ஏற்பட்ட கோபத்தில் கல்யாணப் பேச்சு நின்று போகிறது.
இந்த நேரத்தில் தஞ்சை அருகில் இருக்கும் மிகப் பெரிய கோவிலிருந்து 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலையை களவாடுகிறார் தேனப்பன். இதை பார்த்துவிடும் போலீஸ் கான்ஸ்டபிளைகூட கொலை செய்துவிடுகிறார்.
அந்த சிலையை பத்திரமாக சென்னைக்கு கொண்டு சென்று புரோக்கரான சேகர் என்னும் குமரவேலிடம் கொடுக்கும் வேலையை பாரதிராஜாவிடம் ஒப்படைக்கிறார் தேனப்பன். இந்த வேலை விதார்த்துக்கு பிடிக்காது என்பதால் அவரிடம் சொல்லாமலேயே சென்னைக்கு வருகிறார் பாரதிராஜா.
வந்த இடத்தில் அவரே தொலைந்து போகும் அளவுக்கு பிரச்சனைகள் எழுந்து காணாமலேயே போகிறார். விஷயம் தெரிந்து தனது அப்பாவைத் தேடியலைகிறார் விதார்த். இன்னொரு பக்கம் தான் கொடுத்துவிட்ட சிலையைக் காணாமல் தேடுகிறார் தேனப்பன்.. கண்ணில் சிக்குனாரா பாரதிராஜா..? சிலை கிடைத்ததா..? இல்லையா..? என்பதுதான் இந்த ‘குரங்கு பொம்மை’ படத்தின் கதை..!
நான் லீனியர் என்று சொல்லப்படும் திரைக்கதை அமைப்பில் திரைக்கதையை முன் பின் மாற்றி, மாற்றி அமைத்து சொல்லியிருந்தாலும் கச்சிதமான படத் தொகுப்பாலும், இயக்குநரின் திறமையான இயக்கத்தாலும் இந்த ‘குரங்கு பொம்மை’ திரைப்படம் எந்தக் குழப்பமும் இல்லாமல் மிக அழகாக, நேர்த்தியாக படமாக்கப்பட்டிருக்கிறது.
குரங்கு படம் போட்ட பை, கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து களவாடப்படும் அந்த நேரத்தில் ஓடத் துவங்கும் ஓட்டம்தான் படத்தின் வேகமும், விவேகமும்..! இதன் பின்பு கடைசிவரையிலும் என்ன இது..? எதற்காக இது..? யாரால் இது..? என்கிற ஒவ்வொரு கேள்வியையும் அவ்வப்போது புதிராக விடுவித்துக் கொண்டே சென்ற திரைக்கதைக்கு தனியாகவே கைதட்டல்களை அள்ளிக் கொடுக்கலாம்..!
உண்மையிலேயே எதிர்பாராத பல டிவிஸ்ட்டுகள்தான் படத்தை பெரிதும் சுவாரஸ்யமாக்கியிருக்கின்றன. அந்த பேக்கை கல்கி களவாடிச் செல்ல கஷ்டப்பட்டு மடக்கி கொண்டு வந்தால் கிருஷ்ணமூர்த்தி காணாமல் போயிருப்பது.. அதே பேக்கை பாரதிராஜா கொண்டு வருவது.. குமரவேல் பாரதிராஜாவை வீட்டுக்குள் வைத்துக் கொண்டே அவர் வரவேயில்லையே என்று தேனப்பனிடம் கதைவிடுவது.. கிருஷ்ணமூர்த்தியிடம் கூட்டணி வைத்து சேட்டிடம் 3 கோடியை வாங்குவது.. பாரதிராஜாவின் முடிவை தீர்மானிப்பது.. தேனப்பன் சென்னைக்கு படையெடுத்து வருவது. அவர் வரப் போவதை அறிந்து குமரவேல் தயாராய் இருப்பது.. கடைசியாக அந்த பேக் ஹீரோயினின் அப்பா மூலமாக குப்பைத் தொட்டிக்கு போக அதில் இருப்பது என்ன என்று தெரிய வரும் காட்சியில் அப்படியொரு மயான அமைதியை தியேட்டரில் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
விதார்த்தின் நடிப்பு இந்த ஒரு காட்சியிலேயே சிறப்பாகிவிட்டது. படம் முழுவதிலும் காட்சிக்கேற்ற நடிப்பைக் காட்டியிருக்கும் விதார்த்துக்கு இதுவும் ஒரு வெற்றிப் படம்தான். மாமனாரை அடித்த பின்பும், எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு. உனக்கும் பிடிச்சிருந்தா சொல்லு. கல்யாணம் பண்ணிக்கலாம் என்று சொல்லும் விதார்த்தை நிச்சயமாக பெண்களுக்கும் பிடிக்கும்.
மாமனாரிடம் மன்னிப்பு, ஹீரோயினுக்கு தானே வலியப் போய் உதவி செய்வது.. தேடுதல் வேட்டையில் சோர்வடையாமல் ஓடுவதுமாக தனது கேரக்டர் மீதான ஈர்ப்பை காட்சிக்கு காட்சி அதிகப்படுத்தியிருக்கிறார் ஹீரோ விதார்த். அவருக்கேற்ற கேரக்டர். முதலில் அவரை இந்த கேரக்டருக்கு தேர்வு செய்த இயக்குநரை வெகுவாக பாராட்ட வேண்டும்.
ஹீரோயின் டெல்னா டேவிஸுக்கு அதிகமான மேக்கப் இல்லாமல் நடிக்க வைத்திருப்பதற்கே ஒரு ஷொட்டு. அப்பாவுக்காக ஹீரோவிடம் சீறிவிட்டு பின்பு அப்பாவை கரிசனமாக பார்க்க வருபவரின் உள்ளம் அறிந்து இனிமேல் என் பின்னாடி வந்து அலையாதீங்க என்று அக்கறையோடு சொல்லும்விதம்.. தன் காதலை விதார்த்திடம் உணர்த்தும் கட்டம் என்று இவரது போர்ஷனும் படத்தில் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.
பாரதிராஜா நெகிழ வைத்திருக்கிறார். தன்னுடைய வாழ்க்கைக் கதையைச் சொல்லும்  காட்சியில் எம் புள்ளைய கடைசியா ஒரு தடவை பார்த்துட்டு வந்தர்றனே என்று கேட்கும்போது அழவும் வைத்துவிட்டார்.
யாரந்த நடிகர் என்று கேட்க வைத்திருக்கிறார் திருடனாக நடித்திருக்கும் கல்கி. அசால்ட்டாக ஆட்டைய போடும் கேரக்டராக இருந்தாலும் கிளி ஜோஸியன் சொன்னதை நம்பி ஒரு கோடி ரூபாயை திருடி மொத்தத்தையும் படுக்கையில் கிடத்தி அதன் மேல் படுத்திருந்து யோகத்தை பார்க்க விரும்பும் ஒரு கேரக்டர்.
திருடனாகி, விதார்த்திடம் அடிவாங்கி.. பின்பு அவருக்கே உதவி செய்யப் போக.. கடைசியில் மறுபடியும் திருடவே நினைத்து முந்திக் கொண்டு போகுமிடத்தில் அவர் சந்திக்கும் டிவிஸ்ட் அபாரம்..!
சில காட்சிகளே என்றாலும் பரிதாபத்திற்குரிய கணவனாகவும், எதுவும் செய்ய முடியாத அடியாளாகவும் நடித்திருக்கும் கிருஷ்ணமூர்த்தியின் நடிப்பு கவனத்திற்குரியது. அவருடைய மனைவியை சமாளிக்க முடியாமல் அவர் பேசும் சமாதானப் பேச்சு.. வீட்டுக்கு போய் மனைவியிடம் அடிவாங்கிக் கொண்டு மவுனமாக பணத்துடன் செல்லும் காட்சியிலும் ஒரு நேர்மையாளனை அடையாளம் காட்டுகிறார் இயக்குநர்.
விதார்த்தும், கல்கியும் ஒரு சேகரை சந்திக்கப் போக அந்த சேகர் வட்டி கட்ட முடியாதவனை வெளுத்துக் கொண்டிருக்கும் புதுமையான காட்சியை தமிழ்த் திரையுலகம் இப்போதுதான் இந்தப் படத்தின் மூலமாக காண்கிறது.
தேனப்பன் அசால்ட்டு சேதுவாகவே நடித்திருக்கிறார். மிக யதார்த்தமான பேச்சு, நடிப்பு, வசனங்கள் என்று தனது கேரக்டரை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். குமரவேலுவை சோதிப்பதுபோல அவர் பேசும் ஒவ்வொரு பேச்சும், இடைமறிப்பாக சேட்டின் ஆள் உள்ளே வந்து மூணு கோடியை கொடுத்துவிட்டுப் போகும் காட்சிக்கு தியேட்டரில் கை தட்டல் அள்ளுகிறது..!
ஒரேயொரு காட்சியென்றாலும் நச் என்று பதிவாகியிருக்கிறார் கஞ்சா கருப்பு. அதுவும் அவரது வீட்டு தரித்திரத்தை காட்டும்விதமாக அந்தக் கடிகாரத்தை செட் செய்திருக்கும் இயக்குநரின் படைப்புத் திறனுக்கு ஒரு பாராட்டு.
இத்தனை இருந்தும் சில காட்சிகள் உடனடியான நகர வேண்டிய திரைக்கதைக்காக எழுதப்பட்டிருப்பதையும் சொல்லியே ஆக வேண்டும். போலீஸ் ஸ்டேஷனில் அத்தனை பக்கத்தில் பேக்கை தூக்கி வைத்துக் கொண்டு அதனை திறக்க இன்ஸ்பெக்டர் போராடும்போது வாடை அடித்திருக்காதா என்ன..? ஏன் அதைத் தூக்கிக் கொண்டே போகும்போதுகூட விதார்த்துக்கு தோன்றியிருக்காதா..?
கிளைமாக்ஸில் விதார்த் கிருஷ்ணமூர்த்தியின் திடீர் நடு ரோட்டு சந்திப்பு.. முகநூலில் பேக் பற்றி செய்தியை வெளியிட்டவுடன் வரும் திடீர் அழைப்புகள்.. விவரமில்லாதவராக பேசும் பாரதிராஜாவிடம் ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள சிலையை கொடுத்துவிடும் தேனப்பனின் செயல்.. என் வீட்டுக்காரர் எடுத்திட்டு வந்தார் என்று சொல்லி ஹோட்டலில் ஒரு பெண் பாரதிராஜாவின் செல்போனை விதார்த்திடம் கொடுப்பது..! அதே வட சென்னையில் சேகர் என்ற பெயரில் இருக்கும் குமரவேலை கஷ்டமே படாமல் கண்டுபிடிப்பது என்று சில காட்சிகளின் எல்லை மீறலையும் சொல்லியே ஆக வேண்டும். எப்படியிருந்தாலும் இது படத்தின் ஓட்டத்தில் நம் கவனத்தில் இருந்தும் ஓடக் கூடியதுதான்..!
இதேபோல் படத்தின் இறுதியில் குமரவேலுக்குக் கிடைக்கும் தணடனை கொடூரமானது. விதார்த் செய்வது எந்தவகையிலும் நியாயமில்லை. சட்டப்படியாக குமரவேலை தண்டிக்க வாய்ப்பு அவருக்கு இருந்தும் அவர் செய்யாமல் அவரே ஒரு அரைகுறை கொலை செய்வது கடைசியாக அவருக்கும், குமரவேலுவுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வியை எழுப்பிவிட்டது.
இதேபோல் குமரவேலின் தற்போதைய நிலைமைக்கு பின்பு அவரது மனைவியின் நடவடிக்கை மாறுவதுபோலவும், இதனை கண்டு தடுக்க முடியாமல் குமரவேல் மனம் வெதும்புவதாகவும் காட்சி வைத்திருப்பதுதான் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட். கணவனால் நடமாட முடியாமல் போனால் மனைவி உடனேயே சோரம் போவாள் என்பது எந்தவிதமான நம்பிக்கை..? இயக்குநர்தான் சொல்ல வேண்டும்..!
வசனம் எழுதிய மடோனா அஸ்வினுக்கு தனியாக பாராட்டுக்களை குவிக்க வேண்டும். தேனப்பனும் அவரது அடியாளும் பேசும் பேச்சுக்களில் சிலவைகள் ரகளையானவை. “போலீஸ்ல மாட்டினா என்ன சொல்லுவ…?” என்று தேனப்பன் கேட்க.. “அதெப்படிண்ணே.. உங்க பேரைச் சொன்னா போலீஸ் என்னை பிடிப்பாங்களா என்ன..?” என்று அப்பாவியாய் அவர் கேட்க அதற்கு தேனப்பன் காட்டும் ரியாக்ஷன்தான் செம..!
ரொம்ப அப்பாவியாய் “ஏண்ணே இருமுறுறீங்க..?” என்று கேட்டவனிடம் “காலைல சிகரெட் குடிச்சேன். அப்போ இரும மறந்துட்டேன். இப்போ இருமுறேன்…” என்ற தேனப்பனின் பதிலுக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது.
இசையமைப்பாளர் அஜனீஸின் பின்னணி இசைக்கு ஒரு ஷொட்டு. பாடல் இசையில் இரண்டு பாடல்கள் ஒலிக்கின்றன. ஆனால் அதிகம் கவரவில்லை என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.
ஒளிப்பதிவாளர் உதயகுமாரின் கேமிராதான் சென்னையின் குப்பத்து பக்கங்களை ஒரு இண்டு, இடுக்குவிடாமல் படம் பிடித்திருக்கிறார். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகளை அத்தனை அழகாக படமாக்கியிருக்கிறார்.
படத் தொகுப்பாளர் அபினவ் சுந்தர் நாயக்கின் அழகான படத் தொகுப்புக்கும் தனியே பாராட்ட வேண்டும். இது போன்ற முன், பின் சொல்லப்படும் திரைக்கதையில் மிக கவனமாக நறுக்குதல் வேண்டும். ஒரு சிறு பிழையென்றாலும் மொத்த படமும் அடிபட்டு போகும். இதில் ஒரு சிறிய குழப்பம்கூட இல்லாமல் பிளாஷ்பேக் உத்தியைக்கூட எளிதில் புரிந்து கொள்ளும்விதமாக தொகுத்திருக்கிறார். இதற்காக இயக்குநருக்கும் கூடுதலாக ஒரு பாராட்டைத் தரலாம்.
பணம் ஒரு மனிதனை எந்த நேரத்திலும், எப்படி வேண்டுமானாலும் திசை திருப்பும். அது நல்வழிக்கா அல்லது கெட்ட வழிக்கா என்பது பணத்தின் மீது ஆசை வைத்தவரின் குணத்தை பொறுத்தது என்பதை இந்தப் படமும் சொல்லிக் காட்டுகிறது.
குமரவேல் என்கிற ஒருவரின் பண ஆசை எத்தனை பேரின் வாழ்க்கையைக் குலைக்கிறது என்பதை தெளிவாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதேபோல் கண்மூடித்தனமான விசுவாசம் அவரது அழிவுக்கும் காரணமாக இருக்கும் என்பதையும் இயக்குநர் இன்னொரு பக்கம் சொல்லியிருக்கிறார். இதற்காகவும் இயக்குநரை பெரிதும் பாராட்ட வேண்டும்..!
நல்லதொரு திரில்லர் படத்தைக் காண விரும்புவர்கள் அவசியம் சென்று பாருங்கள்..!

1 comments:

Unknown said...

why are u telling full story in the name of review?

padam paathathum ithai padikkavumnu spoiler warning podu?

Otherwise, mental maathiri kathai fullaa sollatha