மாய மோகினி - சினிமா விமர்சனம்

13-09-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை கண்ணன் கிரியேஷன்ஸ் சார்பில் கே.தங்கவேலு தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் அப்துல்லாக நாயகனாகவும், சாரிகா மற்றும் ஜோதிஷா இருவரும் நாயகிகளாகவும் நடித்துள்ளனர்.
மேலும் இமான் அண்ணாச்சி, கே.ஆர்.விஜயா, பூவிலங்கு மோகன், பாய்ஸ் ராஜன், மகாநதி சங்கர், ஆஷா, எஸ்.என்.பார்வதி, மாயா ஜாபர் போன்றோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – கே.வி.ராஜன், நடனம் – ராம் முருகேஷ், சண்டை பயிற்சி – தீப்பொறி நித்யா, இசை – எம்.ஜெயராஜ், பாடல்கள் – பாவலர் சிவா, மோகன்ராஜன், பிறைசூடன், மக்கள் தொடர்பு – நெல்லை சுந்தர்ராஜன், படத் தொகுப்பு – லட்சுமணன், தயாரிப்பு – கே.தங்கவேலு, எழுத்து, இயக்கம் – ராசா விக்ரம்.

பேய் இருக்கா இல்லையா என்பதை சொல்ல வந்திருக்கும் அரதப் பழசான பேய்க் கதைகளில் ஒன்றுதான் இந்த மாய மோகினி.
ஒரு கிராமத்தில் இரவு வேளையில் ஒரு பெண்ணின் அழு குரல் கேட்பதாக அக்கிராமத்து மக்கள் பலரிடமும் புகார் சொல்லி வருகின்றனர். இந்த நேரத்தில் ஒரு தொலைக்காட்சியில் பேய் இருக்கிறதா. இல்லையா என்பது பற்றிய ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு போன் செய்யும் அந்த ஊர்க்காரர், தன் ஊரில் பேய் இருப்பதாகவும் நேரில் வந்தால் காட்டுவதாகவும் சொல்கிறார். இதனை நம்பி காம்பியரான ஜோதிஷா மற்றும் கேமிராமேனான நாயகன் சிவா என்னும் அப்துல்லாவும் அந்த ஊருக்கு வருகிறார்கள்.
அவர்களிடத்தில் அந்த மாய மோகினியை காட்டுகிறார்கள் கிராம மக்கள். அந்த மாய மோகினியான சாரிகா, தன்னுடைய காதலனான பிரகாஷின் இறந்து போன உடலை வைத்துக் கொண்டு அழுகிறது. சுற்றிச் சுற்றி வருகிறது.
இதற்கு காரணமாக போன ஜென்மத்துக் கதையொன்றை அந்தப் பேய் சொல்கிறது. இப்போது கேமிராமேனாக இருக்கும் சிவா, போன ஜென்மத்தில் பிரகாஷ் என்ற பெயரில் சாதாரணமான ஒரு துணி வியாபாரியாக இருக்கிறார்.
ஊர், ஊராக போய் துணி வியாபாரம் செய்ய வந்த பிரகாஷ், அந்த ஊரில் கண்ணில் பட்ட சாரிகாவை பார்த்தவுடன் காதலாகி கசிந்துருகுகிறார். அக்கிராமத்து மக்கள் பிரகாஷ் காதல் வேஷம் போட்டு தங்கள் ஊர்ப் பெண்களை மயக்குவதாக நினைத்து பிரகாஷை படுகொலை செய்கிறார்கள். கூடவே சாரிகாவும் இறக்கிறார்.
இப்போது இந்த சாரிகாதான் தனது காதலன் பிரகாஷின் பிணத்தை வைத்துக் கொண்டு நள்ளிரவில் அழுதபடியே இருக்கிறார்.
அந்த பிரகாஷ் இப்போது கேமிராமேன் சிவாவின் உருவத்தில் வந்திருப்பதாக நினைக்கும் சாரிகா ஆவி, இவர்களையே சுற்றிச் சுற்றி வருகிறது. இந்தப் பெண் பேயிடமிருந்து ஜோதிஷாவும், கேமிராமேன் சிவாவும் தப்பிக்க பார்க்கிறார்கள். அது முடிந்ததா இல்லையா என்பதுதான் கதை.
கிட்டத்தட்ட 45 வயதைத் தொட்டிருக்கும் நடிகை குஷ்பூவின் அண்ணனான அப்துல்லாதான் இதில் இரட்டை வேடம் கட்டியிருக்கிறார். ஏன்.. எதற்கு என்றுதான் தெரியவில்லை.
நடிப்பிற்கான முதிர்ச்சி முகத்திலேயே இல்லை. ஆனால் வயதுக்கேற்ற முதிர்ச்சிதான் தெரிகிறது. ஏதோ தனக்கு வந்த அளவுக்கு நடித்திருக்கிறார். தெரிந்த அளவுக்கு காட்டியிருக்கிறார்.
ஹீரோயின்களில் பேயாக நடித்திருக்கும் சாரிகா, காம்பியராக நடித்திருக்கும் ஜோதிஷா இருவருக்கும் பெரிய அளவுக்கு ஸ்கோப் இல்லை. நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். சாரிகா கொஞ்சம் கிளாமரை கொட்டியிருக்கிறார். பேய் காட்சியில் மிரட்டுவார் என்று பார்த்தால்.. ம்ஹூம்.. இயக்கமே சரியில்லாமல் இருக்கும்போது இவரை மட்டும் சொல்லி என்ன புண்ணியம்..?
வீணடிக்கப்பட்டிருப்பவர் கே.ஆர்.விஜயா. வயதான காலத்தில் இத்தனை கொடுமைகள் இவருக்குத் தேவைதானா..? பாவம்.. அழுத்தமேயில்லாத கேரக்டர் ஸ்கெட்ச்சில் ஏனோ அழைத்த கடமைக்கு நடித்திருக்கிறார். அவ்வளவுதான்..!
ஜெயராஜ் இசையில் பாடல்கள் சுமார்தான். பின்னணி இசையை பயமுறுத்தும் அளவுக்குக் கொடுக்காமலும் சீரியல் டைப்பில் கொடுத்து ஒப்பேற்றியிருக்கிறார்கள். சின்ன பட்ஜெட் படங்களுக்கே உரித்தான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜன்.
பேய்ப் படம் என்றாலே பயமுறுத்தல் என்பதுதான் மிகப் பெரிய கடமை. இதில் யாரும், யாரையும் பயமுறுத்தவில்லை. ஆனாலும் பேய்ப் படம், மோகினி பிசாசு என்றெல்லாம் சொல்லிவிட்டார்கள். இப்போது இருக்கின்ற வசதிகளில், வந்து போகும் திரைப்படங்களை நினைத்துப் பார்த்தாவது ஒரு நல்ல திரைப்படத்தைக் கொடுக்க முனைந்திருக்கலாம். இப்படி ஒப்புக்குச் சப்பாணியாய் நானும் ஒரு படத்தை இயக்கிவிட்டேன் என்ற அர்த்தத்தில் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநரை என்னவென்று சொல்வது..?
பழைய பேய்ப் படங்களுடன்கூட ஒப்பிட முடியாத அளவுக்கு தரத்தில் மொக்கையாய் இருக்கிறது இந்த ‘மாய மோகினி’.

0 comments: