ஒரு இயக்குநரின் காதல் டைரி - சினிமா விமர்சனம்

09-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

Sures Invisible Innovitions நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் இயக்குநர் வேலு பிரபாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக பொன்.சுவாதி நடித்துள்ளார். மேலும் சந்துரு, ரகுநாத் மேனட், ஜெகா, சுரேஷ், ரம்யா, அகில், திரினா கோஹ்லி ஆகியோரும் நடித்துள்ளனர்.
மக்கள் தொடர்பு – நிகில் முருகன், விளம்பர வடிவமைப்பு – சிந்து கிராபிக்ஸ் பவன், ஸ்டில்ஸ் – ஏ.ஜே.ஜே.ஜோவையா, மேக்கப் – அன்பு, உடைகள் – நட்ராஜ், துணை ஒளிப்பதிவு – ஜீவன், ஜெகா, இணை இயக்கம் – ராமகிருஷ்ணன், ஜெகா, தினேஷ், பாடல்கள், இளையராஜா, சகீன், ரகுநாத் மேனட், நடனம் – ரகுநாத் மேனட், ஒலி வடிவமைப்பு – சந்துரு, பிரபாகர், படத் தொகுப்பு – ஜெ.எஃப். கேஸ்ட்ரோ, ஒளிப்பதிவு – மணிவண்ணன், இசை – இசைஞானி இளையராஜா, எழுத்து, இயக்கம் – வேலு பிரபாகரன், தயாரிப்பு – பி.சுரேஷ் கிருஷ்ணா.

நாட்டில் செக்ஸ் கல்வி பற்றிய புரிதல் சிறு வயதில் இருந்தே மக்களுக்குப் புகட்டப்பட வேண்டும். செக்ஸ் வெளிப்படையாக்கப்படுதல் வேண்டும். செக்ஸ் மறைக்கப்படுவதால்தான் அதன் மீதான ஆர்வம் அதிகமாகி பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரிக்கின்றன என்கிறார் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன்.
தீவிர பெரியாரிஸ்ட்டான அவர் இது மாதிரியான கொள்கைகளை பேசுவதில் எங்கே பெரியாரியம் இருக்கிறது என்று தெரியவில்லை.
இவருடைய முந்தைய படமான ‘மீண்டும் ஒரு காதல் கதை’யிலும் செக்ஸ் தேடுதலால் வாழ்க்கையைத் தொலைத்துவிடும் பெண்களையும், ஆண்கள் செய்யும் துரோகத்தையும் அம்பலப்படுத்தியிருந்தார். அதையேதான் இந்தப் படத்திலும் பயன்படுத்தியிருக்கிறார்.
என்ன ஒரு வித்தியாசம்.. “இந்தப் படத்தின் கதை முற்றிலும் உண்மையே.. என் வாழ்க்கையில் நடந்த கதைதான்…” என்கிறார் இயக்குநர் வேலு பிரபாகரன்.
படத்தின் துவக்கமே அதிர்ச்சியாகத்தான் ஆரம்பிக்கிறது. இயக்குநர் வேலு பிரபாகரன் மீதே ஒரு பாலியல் புகார் போலீஸ் ஸ்டேஷன் படியேறியிருக்கிறது. அங்கே இருக்கும் இன்ஸ்பெக்டர், ஏட்டுக்களிடம் அவமரியாதையை பெற்று தலைகுனிந்து நிற்கும் வேலு பிரபாகரன் தான் கடந்து வந்த பாதையை நினைவு கூர்கிறார். இதில்தான் படம் துவங்குகிறது.
சின்ன வயதில் சொந்த ஊரில் ஒரு பெண்ணைத் தீவிரமாக காதலிக்கிறார் வேலு. அதே பெண்ணுடன் உறவும் வைத்துக் கொள்கிறார். ஆனால் சினிமாவில் தலையெடுக்க வேண்டும் என்கிற ஒரு வெறியில் ஊரைவிட்டு ஓடி வந்தவரைத் தேடி அந்தக் காதலியின் திருமண அழைப்பிதழ் வருகிறது.
மனம் வெறுத்துப் போகிறார். இனி தன் வாழ்க்கையில் வேறு பெண்கள் யாரும் இல்லை என்கிற முடிவில் இருக்கிறார். விஜயாவை பார்க்கும்வரையிலும்.
பட இயக்குநர் வேலையில் இருக்கும்போது, அந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க வந்த விஜயாவை பார்த்து சொக்கிப் போகிறார் வேலு. விஜயாவோ அவருக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த குருநாதருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.
ஆனாலும் விஜயாதான் வேண்டும் என்று அவரை டார்ச்சர் செய்கிறார் வேலு. பரத நாட்டிய குருவிடமிருந்து விஜயாவை தனியே பிரித்து வந்து காந்தர்வ கல்யாணமும் செய்து கொள்கிறார் வேலு. ஆனால் சில நாட்களிலேயே வேலுவின் உண்மையான குணம் வெளியில் தெரிகிறது.
பல நேரங்களில் விஜயாவின் முந்தைய வாழ்க்கையை சுட்டிக் காட்டி வெறுப்பேற்றுகிறார் வேலு. இதனால் கோபமடையும் விஜயா. அவரை விட்டுப் பிரிந்து மீண்டும் பரத நாட்டியத்தில் ஈடுபட முடிவெடுத்து வேலுவுக்கு இறுதியாக ஒரு குட் பை சொல்லிவிட்டுப் போகிறார்.
இந்த நேரத்தில்தான் வேலுவின் கடைக்கண் பார்வை விஜயாவின் சொந்த அண்ணன் மகளான பத்மாவின் மீது விழுகிறது. கல்லூரிக்கு சென்று வரும் பத்மாவை ஃபாலோ செய்து அவளையும் தனது காதல் வலையில் விழ வைக்கிறார் வேலு.
ஆனால் இந்த நேரத்தில் திரைப்படம் எடுத்ததில் நஷ்டம் ஏற்பட்டதால் தான் குடியிருந்த வீட்டையும் விற்றுவிடுகிறார் வேலு. இதன் பின்பு, “எந்த தைரியத்தில் உன்னுடன் இருப்பது…? எனக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது..?” என்று கேள்வியெழுப்புகிறார் பத்மா.
ஆனால் வேலு பிடிவாதமாக பத்மாவை விட மறுக்கிறார். பத்மாவோ அவருடனான திருமண வாழ்க்கைக்கு, முற்றுப் புள்ளி வைத்துவிட்டு தனக்கென்று தனி வாழ்க்கையை துவங்க முடிவு செய்கிறார்.
இதன் பின் வேலு என்ன செய்கிறார் என்பதையும், கதையை எங்கே, எப்படி முடித்திருக்கிறார் என்பதும்தான் இந்தப் படத்தின் திரைக்கதை.
துவக்கக் காட்சியிலேயே ஒரு பிரசவிக்கும் காட்சியுடன் துவக்கியிருக்கும் இயக்குநர் காமத்தை அதன் போக்கிலேயே சென்று கற்றுக் கொள்ளுங்கள். மூடி மறைக்காதீர்கள். மூடி மறைக்க, மறைக்க அதன் மீதான வேட்கை ஆண், பெண் இரு பாலருக்கும் அதிகமாகும். இதன் விளைவுகள்தான் கள்ளக் காதல்களும், படுகொலைகளும், குடும்பச் சிதறல்களும் என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்.
ஆனால் இவர் இப்படி பேசியதற்கும், படத்தின் கதைக்கும் துளிகூட சம்பந்தமில்லை என்பதுதான் துரதிருஷ்டவசமான உண்மை.
உண்மையில் இந்தப் படத்திற்கு ‘ஒரு இயக்குநரின் காம டைரி’ என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும். அதுதான் மிகப் பொருத்தமாக இருந்திருக்கும்..!
படத்தில் இயக்குநரான வேலு பிரபாகரன் தனது இயக்குநர் என்கிற அந்தஸ்தை வைத்து எத்தனை பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டார் என்பதை அவரே சொல்கிறார். இதில் காதல் என்கிற தேடல் எங்கேயிருக்கிறது…? பணத்திற்காகவும், ஆதாயத்திற்காகவும் பெண்களை இவர்தான் பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெரிகிறது.
முதல் காதலின் தோல்விக்கு பின்பு பெண்கள் பக்கமே போக மாட்டேன் என்றவரை விஜயாவின் அழகு கலைக்கிறது. பின்பு விஜயாவின் விலகல் இனிமேல் கட்டினால் கற்புள்ள பெண்டிரைத்தான் திருமணம் செய்வேன் என்று சபதமெடுக்க வைக்கிறது. இதில் ஆணாதிக்கத்தனமான சிந்தனைதான் வெளிப்படுகிறதே தவிர.. வேறென்ன இருக்கிறது..? இவர் மட்டும் ஊர் மேய்வாராம்.. ஆனால் இவருக்கு வருகின்ற மனைவி மட்டும் பத்தினியாய் இருக்க வேண்டுமாம்.. நல்ல கொள்கைதான் போங்க..!
படம் முழுக்கவே நிறைய முரண்பாடுகள்.. எழுத்து, பேச்சு என்று செக்ஸை பற்றி பேசுகிறேன் என்று சொல்லி பழங்காலத்திய மக்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியெல்லாம் பேசுபவர் தான் எடுத்திருக்கும் படத்தில் மட்டும் இப்போதைய பிரச்சினைகளைத் தொட்டுக் காட்டி இப்போதைய இயல்பு வேறு என்று நிரூபித்திருக்கிறார். பின்பு எதற்கு இப்படி சீன் காட்ட வேண்டும்..?!
உண்மையில் இந்தப் படத்தில் இவர் என்ன சொல்ல வந்திருக்கிறார் என்பதை அறிய வேண்டுமெனில் இன்னும் 2, 3 தடவையாவது படத்தை பார்த்தால்தான் புரியும். அந்த அளவுக்கு குழப்படியாய் திரைக்கதை அமைத்திருக்கிறார்.
சொந்த வாழ்க்கையில் வேலு பிரபாகரனின் வாழ்க்கையில் விஜயாவாக வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதாதான். அப்போது அவர் தாடிக்காரர் என்னும் அவரது தாய் மாமனுடன் வாழ்ந்து வந்தார். அந்த்த் தாடிக்காரருக்கு கல்யாணமாகி குழந்தைகளும் இருந்தன. இருந்தாலும் அவரே வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தவர் சில்க் ஸ்மிதா.
வேலு பிரபாகரனுடன் சில்க் ஸ்மிதாவிற்கு தொடர்பு கிடைத்தவுடன் கொஞ்ச நாட்கள் வேலுவுடன் வந்து குடும்பம் நடத்தியிருக்கிறார். பின்பு வேலுவின் டார்ச்சர் மற்றும் சந்தேக புத்தியினால் கோபமாகி திரும்பவும் பழையபடி அதே தாடிக்காரருடன் வாழவே போய்விட்டார் சில்க். இதைத்தான் வேலு பிரபாகரன் இந்தப் படத்தில் கொஞ்சம் மாற்றிச் சொல்லியிருக்கிறாராம்.
இத்தனைக்கும் தான் ஒன்றும் அவ்வளவு யோக்கியமில்லை என்பதையும் திரைப்படத்தில் ஒத்துக் கொள்கிறார். தன் படங்களில் நடிக்க வந்த பெண்களுடன் இதையே சாக்காக வைத்து தான் உறவு வைத்துக் கொண்டிருப்பதையும் ஒத்துக் கொள்கிறார். இதுக்கெதுக்குய்யா பெரியாரியஸத்தை துணைக்கு அழைக்க வேண்டும்…? இனிமேல் இவர் கடவுள் மறுப்புக் கொள்கையை பரப்பினால் என்ன.. பரப்பாமல் இருந்தால்தான் என்ன..? முதலில் நல்ல மனிதனாக இருந்திருக்க வேண்டாமா..?
விருப்பப்பட்டு இருவர் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை என்றாலும், படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பதற்காககவும், படத்தில் நீடிக்க வேண்டும் என்கிற கட்டாயத்திற்காகவும் உறவு வைப்பதுகூட ஒருவகையில் கற்பழிப்புதானே..? அப்படிப் பார்த்தால் வேலு பிரபாகரன் எத்தனை கற்பழிப்புகளை செய்திருக்கிறார் என்பது அவருக்கே வெளிச்சம்.
ஊரைவிட்டு ஓடி வந்த காதலர்களுக்கு இப்படி அட்வைஸ் கொடுக்கிறார் இயக்குநர். “காதல்ங்கிறது சுத்தப் பொய். உடலுறவு சுகத்தை அனுபவிக்கத்தான் காதல்னு கற்பனையை வளர்த்துக்கிறீங்க. ஊரைவிட்டு ஓடாமல் இங்கேயே பல முறை உடலுறவு கொள்ளுங்கள். உங்களுக்குள் காமம் வடிந்த பின்னும் ஒருவரை ஒருவருக்குப் பிடிச்சிருந்தால், அதன் பின்பு சேர்ந்து வாழுங்கள்…” என்கிறார். காதலை கொண்டாடுபவர்களின் கவனத்திற்கு இது போய்ச் சேரட்டும்.
இப்படி சொல்லும் இவரே ஒரு காட்சியில் தன் படத்தில் நடிக்க வந்திருக்கும் சுவாதியிடம்,  “இந்தச் சமூகம் இருக்கே சமூகம்… 60 வயசுக்கு மேல் ஒருத்தன் காதலிக்கவே கூடாதுன்னு நினைக்குது…” என்று சொன்னபடியே தனது கையை நாயகியின் தொடையில் வைத்துத் தடவுகிறார்.
ஆக.. இதிலிருந்து தெரிவது என்ன..? எத்தனை வயதானாலும் என்ன..? காமம் இல்லாமல் காதல் இல்லை. காமத்திற்காகத்தான் காதல்.. 60 வயதிலும் காமம் வடியாவிட்டால் அவனது காதலி என்ன ஆவாள் என்பதெல்லாம் அவளது தலையெழுத்து சார்ந்த விஷயம் என்று மறைமுகமாகச் சொல்கிறார் இயக்குநர் வேலு.
இந்தப் படம் வெளியான அன்றுதான் தன்னுடைய முந்தைய படமான ‘மீண்டும் ஒரு காதல் கதை’யில் நடித்திருந்த ஷெர்லி தாஸ் என்னும் நடிகையை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்தக் காதல் கதையைத்தான் ‘பத்மா’வாக சொல்லியிருக்கிறாரா அல்லது அந்த பத்மா தாடிக்காரரின் மகளா என்பதை வேலு பிரபாகரன் விளக்கவில்லை..!
நடிப்பென்று பார்த்தால் விஜயா மற்றும் பத்மாவாக நடித்திருக்கும் பொன்.சுவாதி எதற்கும் துணிந்துதான் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். மூன்றாண்டுகளுக்கு முன்பாக ‘சவரிக்காடு’ படத்தில் சுவாதி என்கிற பெயரில் அறிமுகமான இவர், இந்தப் படத்தில் பொன்.சுவாதியாக உருமாறியிருக்கிறார்.
தனதுடலை பொதுவுடமையாக்கியிருக்கிறார் சுவாதி. செக்ஸ் அப்பீல் உள்ள தனது உடலை வெளிக்காட்டுவதில் அச்சப்படவில்லை. அசத்தலாக இருக்கிறது இவரது போஸ்..! மச்சம்டா என்று மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு சுவாதியுடன் சூடான காட்சிகளில் கூச்சமே இல்லாமல் நடித்துப் புரண்டிருக்கிறார் வேலு பிரபாகரன்.
அரைகுறை ஆடையில் சுவாதியின் தரிசனத்தை பதிவு செய்திருக்கும் வேலு பிரபாகரன் தன்னுடைய காம சேட்டைகளையும் மறக்காமல் கூடவே பதிவாக்கியிருக்கிறார். இந்தத் தைரியம் நிச்சயம் வேறெந்த இயக்குநருக்கும் வராதுதான்..!
விஜயாவின் பரத நாட்டிய குருவாக நடித்திருப்பவர் சில காட்சிகளே என்றாலும் கவர்ந்திழுத்திருக்கிறார். அமைதியான, அடக்கமாக நடித்து பெயர் வாங்கியிருக்கிறார்.
மணிவண்ணனின் ஒளிப்பதிவில் குறையில்லை. பிட்டுக்களையும் தாண்டி படத்தை ரசிக்க வைத்திருப்பது ஒளிப்பதிவுதான். இசைஞானியின் இசையில் வழக்கம்போல பின்னணி இசை சில இடங்களில் ரசனையாகவும், பல இடங்களில் ஊதுகுழலாகவும் இருக்கிறது. இந்தப் படத்துக்கெல்லாம் இசைஞானி இசையமைக்கணும்னு தலையெழுத்தா என்ன..?
வேலு பிரபாகரனுக்குள் இருந்தது உண்மையில் காதலா..? அல்லது காமமா என்பதை அவரே தீர்மானமாகச் சொல்லவில்லை. அவர் வைத்திருக்கும் திரைக்கதை காட்சிகளின்படி பார்த்தால் அவரிடத்தில் இருப்பது முழுக்க, முழுக்க காமம்தான். காமத்திற்கு எல்லையே இல்லை என்பதால் அவரை போல பூ விட்டு பூ தாவும் வண்டாக இருப்பவர்களெல்லாம் காதலைப் பற்றிப் பேசவே கூடாது..!
காதல் இருப்பவர்களுக்குள் நிகழ்வதுதான் காதல் வாழ்க்கை. இது உண்மையான காதல் உணர்வாளர்களுக்குத்தான் புரியும்.. தெரியும்.. வேலு பிரபாகரன் போன்ற காம ஆசிரியர்களுக்கு புரிய வாய்ப்பே இல்லை. இந்த ஒரு படத்துடன் காமம், காதல் பற்றி அவர் பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது என்று நினைக்கிறோம்.

0 comments: