ரங்கூன் - சினிமா விமர்சனம்

13-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இத்திரைப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப் படத்தில் கௌதம் கார்த்திக், சனா மக்பல்ப் இருவரும் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர். மேலும், மலையாள நடிகர் சித்திக், டேனியல், லல்லு, ப்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மக்கள் தொடர்பு – ரியாஸ் அகமது, கலை இயக்கம் – த.ராமலிங்கம், சண்டை பயிற்சி – அன்பறிவ், உடைகள் – சுஜித் சுதாகரன், நடனம் – சதீஷ், இசை – ஆர்.ஹெச்.விக்ரம், விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு – அனிஷ் தருண்குமார், படத் தொகுப்பு – ஜி.கே.பிரசன்னா, எழுத்து, இயக்கம் – ராஜ்குமார் பெரியசாமி, தயாரிப்பு – பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ், ஏ.ஆர்.முருகதாஸ் புரொடெக்சன்ஸ்.
பர்மா என்ற மியான்மர் நாட்டின் தலைநகரமான ரங்கூனை மையப்படுத்திய கதை என்பதால் படத்திற்குத் தலைப்பு ரங்கூனாம்..!
ஹீரோ கெளதம் கார்த்திக் ரங்கூனில் பிறந்தவர். 3 வயதிலேயே குடும்பத்தினருடன் சென்னை வந்து எண்ணூர் அருகேயிருக்கும் பர்மா காலனியில் குடியேறியவர். சிறு வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டார். அம்மாவும், ஒரு தங்கையும்தான்.
இப்போதைய வாலிப வயதில் அஜீத்திற்கு ரசிகர் மன்றம் வைக்கும் அளவுக்கு ச்சும்மா வெட்டியாக இருக்கிறார் கெளதம். இப்படியே இருந்தால் என்னாவது என்று அவருடைய அம்மா கண்டிக்கிறார். இதனால் ஒரு நல்ல வேலைக்கு போக நினைக்கிறார்.
அந்தப் பகுதியிலேயே செல்வாக்கு மிகுந்த குணசீலன் என்னும் சித்திக்கிடம் வேலை கேட்கிறார் கெளதம். சித்திக் நகைக்கடை வைத்திருக்கிறார். அவருடைய கடைக்கு ஆள் பிடிக்கும் வேலையைத் தருகிறார் சித்திக். அதை செவ்வனே செய்து சித்திக்கின் குட்புக்கில் இடம் பிடித்ததினால் கெளதமை கடைக்குள் அமர வைத்து கஸ்டமர்களிடம் பேரம் பேசும் வேலையையும் செய்ய வைக்கிறார் சித்திக். இப்படி வளர்ச்சியடையும் கெளதம், காலப்போக்கில் கல்லாவிலும் அமர்ந்துவிடுகிறார்.
இந்த நேரத்தில்தான் தான் உறுப்பினராக இருக்கும் சங்கத்தின் பணம் கையாடல் செய்திருந்ததால் அந்தப் பணத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்ட வேண்டிய கட்டாயம் சித்திக்கிற்கு ஏற்படுகிறது.
இடையில் சித்திக்கை கொலை செய்ய முயற்சித்த கும்பலிடமிருந்து அவரைக் காப்பாற்றுகிறார் கெளதம். இதனால் சித்திக்கின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துவிடுகிறார் கெளதம்.
சங்கத்திற்கு கட்ட வேண்டிய பணத்தைக் கட்டினால்தான் சங்க நிர்வாகத்தில் இடம் பெற முடியும் என்பதால் முன்பு செய்து கொண்டிருந்த ரகசியமான தங்க பிஸ்கட் விற்பனையில் இறங்குகிறார் சித்திக். இதற்காக சிங்கப்பூரில் இருந்து தங்க பிஸ்கட்டுகளை இறக்குமதி செய்து சட்ட விரோதமாக விற்பனை செய்கிறார் சித்திக். இந்த வேலையைக் கச்சிதமாக செய்து முடிப்பது கெளதம்தான்.
இடையிடையே ரோட்டில் பார்க்கும் அழகான பெண்ணான சனா மக்பல்பை பார்த்தவுடன் லவ்வாகி அவர் பின்னாலேயே செல்கிறார் கெளதம். சனாவும் அவரது காதலை ஏற்றுக் கொள்கிறார்.
பிஸ்கட் விற்பனையை வெற்றிகரகமாக முடித்துவிட்டாலும் இன்னும் ஒரேயொரு முறை அதே பிஸினஸை செய்துவிட்டு பணம் சம்பாதித்துவிட்டு செட்டிலாகிவிட நினைக்கிறார் சித்திக். இதற்கு கெளதமை பயன்படுத்திக் கொள்கிறார்.
சென்னையில் இருந்து தங்க பிஸ்கட்டுகளை ரங்கூனுக்கு கொண்டு சென்று அங்கேயிருக்கும் பார்ட்டியிடம் கொடுத்துவிட்டு அங்கேயிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி ஒரு அஸைண்மெண்ட்டை கொடுத்து கெளதமை ரங்கூனுக்கு அனுப்பி வைக்கிறார் சித்திக்.
கெளதம் தனது நண்பர்களான டேனியல், லல்லுவுடன் ரங்கூனுக்கு பிஸ்கட்டுகளுடன் செல்கிறார். அங்கே கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்கிறார். பணத்தையும் பெற்றுக் கொண்டு ஹோட்டல் அறைக்குத் திரும்புகிறார்.
ஹோட்டல் அறையில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு அங்கேயே இருக்கும் ஹவாலா பார்ட்டியிடம் கொடுக்க போகும்போது ஏற்படும் பிரச்சினையில் அந்த பையில் பணம் இல்லை என்பது தெரிகிறது. அதிர்ச்சியாகிறார் கெளதம்.
பணமில்லாமல் தமிழகம் திரும்ப முடியாது..? பணத்தைத் தேட வேண்டும்..? அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் இந்த ‘ரங்கூன்’ படத்தின் மீதமான கதை..!
படத்தின் நாயகன் வேடத்திற்கு கெளதம் கார்த்திக் மிகச் சிறப்பான தேர்வு. வாழ்க்கை பற்றிய எவ்வித புரிதலும் இல்லாமல், பணம் கொடுத்தாலும், அன்பான வார்த்தைகளால் பேசினாலும் செய்யும் தொழில் தவறென்று தெரிந்தாலும் செய்தே தீர வேண்டும் என்று நினைக்கும் இள வயது வாலிபனை தனது நடிப்பால் உணர்த்தியிருக்கிறார்.
வேகத்துடன் கூடிய வாலிபனாக.. பணத்தைப் பறி கொடுத்து தவிக்கும் அப்பாவியாக.. குடும்பத்திற்கும் மேலாக நட்பை மேலாக நினைக்கும் தோழனாக.. நட்பே விரோதியாக ஆனதை நினைத்து அதிர்ச்சியில் நிற்கும் ஏமாளியாக.. வாலிப வயதில் வரும் காதலுக்குரிய காதலனாக.. என்று பல்வேறு பரிமாணங்களையும் இந்தப் படத்தில் செய்து காட்டியிருக்கிறார் கெளதம் கார்த்திக்.  இன்னும் சிறந்த கதையும், சிறந்த இயக்குநர்களும் கிடைத்தால் நிச்சயம் தமிழ்ச் சினிமாவில நடிக்கத் தெரிந்த நல்ல நடிகராக வலம் வரலாம்..
‘அடுத்த சிம்ரன்’ என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸால் புகழப்பட்ட சனா மக்பலுக்கு அதற்கான எந்தத் தகுதியும் இல்லை. ஆனால் இயக்குநர் முருகதாஸ், ஏன் இவரை ‘அடுத்த சிம்ரன்’ என்று புகழ்ந்தார் என்பதும் தெரியவில்லை. ஒரு நடனக் காட்சிகள்கூட உருப்படியாய் இல்லை. நடிப்புக்கான ஸ்கோப்பும் இல்லை.. சனாவிடம் அப்படி என்னத்த கண்டுட்டார் முருகதாஸ் என்பதை கண்டறிய ஒரு விசாரணை கமிஷனை அமைத்துதான் கண்டறிய வேண்டும்.
கெளதமின் நண்பனாக நடித்த லல்லு.. ‘நான் சரண்டராகுறேன்’ என்று நட்புக்காக குரல் கொடுக்கும் கேரக்டர். “தங்கச்சிக்கு அங்க மாப்பிள்ளை பார்க்குறேன்.. இங்க மாப்பிள்ளை பார்க்குறேன்றியேடா.. என்னையெல்லாம் பார்த்தா உனக்கு மாப்பிள்ளையா தோணலையா..? எனக்குத் தகுதியில்லையா..?” என்ற உரிமையோடு கேட்கும் அந்தக் கேள்வியினால் அவரை மிகவும் பிடித்துப் போகிறது..! இவரது பரிதாப மரணம்தான் படத்தின் டர்னிங் பாயிண்ட்..! அந்தச் சோக நிகழ்வை படமாக்கியவிதத்தில் இயக்குநருக்கு ஒரு ஷொட்டு..!
கெளதமின் அம்மாவாக நடித்திருக்கும் ப்ரியாவிற்கு இதுதான் நடிப்புக்கென்று பெயர் சொல்லியிருக்கும் படம் எனலாம். மகள் தாலியறுத்து.. மகன் கொலை செய்யக் கிளம்பும் சூழலில், இவருடைய நடிப்புதான் மனதைக் கனக்க வைக்கிறது.
நண்பன் எப்போது துரோகியாவான் என்பதை கண்டறியவே முடியவில்லை என்றால் அந்த நண்பன்தான் உலகின் சிறந்த நடிகனாக இருப்பான் என்பார்கள். டேனியல் இந்தப் படத்தில் அந்தப் பெயரைத் தட்டிச் சென்றிருக்கிறார். ஆனால் அவரின் தன்னிலைவிளக்கத்தை இன்னும் கொஞ்சம் வில்லத்தனமாக சொல்லியிருக்கலாம்..! பல இடங்களில் இவரது டைமிங் சென்ஸ் காமெடிதான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்ய வைத்திருக்கிறது..!
மலையாளத்தின் பக்குவப்பட்ட நடிகரான சித்திக்கின் அனுபவ நடிப்பும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அவரேதான் ஹீரோ.. அவரேதான் வில்லன் என்பதான படத்தின் முடிவும் எதிர்பாராத திருப்பம்.
ரங்கூனின் அழகு ஒளிப்பதிவாளர் அணீஷ் தருண்குமாரின் கேமிராவில் மிக அழகாகப் பதிவாகியிருக்கிறது. இரவு நேரக் காட்சிகளை ரசனையோடு படமாக்கியிருக்கிறார். சண்டை காட்சிகள், பாடல் காட்சிகளில் கேமிராமேனின் பங்களிப்பும் அதிகம். ஹீரோயினை கொஞ்சமேனும் அழகாக காட்டியிருப்பதால்தான் தப்பித்தார் அவர்.
அன்பறிவின் சண்டை காட்சிகளை யதார்த்தமாக வடிவமைத்திருக்கிறார். ஆனால் கொடுமையாகத்தான் இருக்கிறது. படத் தொகுப்பாளர் இடைவேளைக்கு பின்னான காட்சிகளை நீட்டாக கத்தரித்திருப்பதால்தான் படத்தின் சுவாரஸ்யம் கூடியிருக்கிறது. நல்லவேளையாக படத்தில் பாடல்களை திணிக்காமல் விட்டதினால் தப்பித்தோம். இந்த வேகத்தில் போகும் படத்திற்கு எதற்கு ஸ்பீடு பிரேக்கர்..?
கெளதம் அண்ட் கோ ஒரு சிறுவனை கடத்தும் காட்சியும் அதில் இருக்கும் ஒரு சிறிய நாணயமான விஷயமும் கவர்கிறது. பையன் எதிர்பாராதவிதமாக குண்டடிபட்டதால் அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு பையனின் பெற்றோர்களுக்கு தகவலைச் சொல்லிவிட்டு பணத்தை கேட்காமலேயே விட்டுவிட்டு ஓடும் காட்சியொன்று போதும்.. இந்தப் படத்தின் தன்மையை பறை சாற்ற..!
இந்தச் செயலை செய்தவர்கள் காசுக்காக செய்யும் ரவுடிகள் அல்ல. சந்தர்ப்பத்தால் குற்றவாளியாக மாறியிருக்கும் நல்லவர்கள் என்பதை இந்தக் கதையின் உள்ளடக்கத்தை வைத்து நமக்கு புரிய வைத்திருக்கிறார் இயக்குநர். வெல்டன் ஸார்..!
அனைத்து நடிகர், நடிகைகளையும் இயக்குநர் ஒழுங்கே நடிக்க வைத்திருக்கிறார். மேக்கிங் பிரமாதம் என்று சொல்ல வைத்திருக்கிறது. ஆனாலும் ஏதோ ஒன்று இடிக்கிறது. அது என்ன என்பதுதான் யாருக்கும் புரியவில்லை. இடைவேளைக்கு பின்னான காட்சிகளில் கொஞ்சம் சுவாரஸ்யம் குன்றியிருப்பதால் படத்தை முழுமையாக ரசிக்க முடியவில்லை.
கதையை அதே ரங்கூனிலேயே பணத்தைத் தேடும்படியாக மாற்றியிருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும். இங்கே கொண்டு வந்து மறுபடியும் சுற்றிவிட்டு, படம் ஒரு நிலைக்கு வருவதற்குள் தேர் நிலைக்குத் திரும்பிய கதையாகிவிட்டது.
மத்திய வருவாய் புலனாய்வுத் துறையின் அதிகாரிகளுக்கு நமது மாநில காவல்துறையினர் எதற்காக இத்தனை அடிபணிந்து போக வேண்டும்..? நடக்கிற விஷயமா இது..? அதுவும் ஒரே ஒரு அதிகாரி. ஆனந்த் மட்டுமே காட்டப்படுகிறார். மற்ற துறை அதிகாரிகளெல்லாம் இல்லையா..? லோக்கல் போலீஸாரை துணைக்கு மட்டுமே அழைப்பார்களே ஒழிய.. முழு தகவலையும் இவர்களிடத்தில் சொல்லி அவர்களை கண்காணிக்கச் சொல்லவே மாட்டார்கள். ஏனெனில் மாமூல் வாங்குவதில் எக்ஸ்பர்ட்டானவர்கள் லோக்கல் போலீஸ் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
ஜெயிலில் இருந்து திரும்பியதும் தான் விரும்பியபடியே அதே ஏரியாவில் நகைக்கடையைத் துவக்குகிறார் கெளதம். பணம் எங்கேயிருந்து வந்தது என்று கேட்கவே கூடாது. தங்கையின் கழுத்தில் புது தாலி தொங்குகிறது. புது மாப்பிள்ளை பக்கத்தில் நிற்கிறார். இப்படி காட்சியிலேயே முடிவை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள் என்று முடித்திருக்கிறார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
மிகப் பெரிய தங்க வேட்டையை தகவல் சொல்லி பிடித்துக் கொடுத்ததால் வழக்கமாக மத்திய அரசு கொடுக்கும் பரிசுத் தொகையில்தான், கெளதம் தனது நகைக் கடையைத் திறந்திருக்கிறார் என்று ஒரு வார்த்தை சொல்லியருந்தால்கூட நன்றாகத்தான் இருந்திருக்கும்..!
நல்லது. அறிமுக இயக்குநரான ராஜ்குமார் பெரியசாமி அடுத்த படத்தில் இன்னும் பெரிய வெற்றியையும், பெயரையும் எடுக்க வாழ்த்துகிறோம்..!
ரங்கூன் நிச்சயமாக ஒரு முறை பார்க்கலாம்தான்..!

0 comments: