போங்கு - சினிமா விமர்சனம்

06-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

R.T.Infinity Deal Entertainment நிறுவனத்தின் சார்பில் ரகுகுமார், ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகிய மூவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தப் படத்தில் நட்டி நட்ராஜ் ஹீரோவாகவும், ருஹி சிங் ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் மனிஷாஸ்ரீ, அதுல் குல்கர்னி, முண்டாசுப்பட்டி ராம்தாஸ், அர்ஜூன், சரத் லோகித்தஷ்வா, ராஜன், பாவா லட்சுமணன், மயில்சாமி, சாம்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மக்கள் தொடர்பு – மெளனம் ரவி, கலை – ராஜ்மோகன், சண்டை பயிற்சி – சுப்ரீம் சுந்தர், நடனம் – கல்யாண், பாப்பி, பாடல்கள் – கபிலன், தாமரை, மதன் கார்க்கி, இசை – ஸ்ரீகாந்த் தேவா, படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, ஒளிப்பதிவு – மகேஷ் முத்துஸ்வாமி, எழுத்து, இயக்கம் – தாஜ்.

‘போங்கு’ என்றாலே ‘ச்சும்மா’, ‘சமாளிப்பு’, ‘உண்மையில்லாத’ என்றுதான் அர்த்தம்.. ‘போங்காட்டம்’ என்றால் ‘வெறுமனே செய்தது’ போன்ற நிகழ்வைக் குறிக்கும். இதில் இந்தப் படத்தின் கதைப்படி, ‘தவறான சம்பவங்களை மேற்கொள்ளும் நல்லவர்கள்’ என்று பொருள்பட இந்தத் தலைப்பை வைத்திருக்கிறார்கள் போலும்..!
நட்டி நட்ராஜ், ருஹி சிங், அர்ஜூனன் மூவருமே விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்யும் ஒரு கார் விற்பனை நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். ஒரு முறை மத்திய ஆளும் கட்சியின் எம்.பி. ஒருவர் தனது மகளின் பிறந்த நாளுக்காக சர்ப்ரைஸ் கிப்ட்டாக கொடுப்பதற்காக ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்றை புக் செய்கிறார்.
அந்தக் காரை அகமதாபாத்திற்கு கொண்டு வந்து தனது வீட்டில் ஒப்படைக்கும்படி சொல்லிவிட்டுப் போகிறார். இதற்காக அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை அகமதாபாத்திற்கு கொண்டு செல்கிறார்கள் நட்டியும், அர்ஜூன்னும். ஆனால் நடுவழியில் வந்த சில ரெளடிகள் இவர்களை கத்தியால் மடக்கிப் பிடித்து, அடித்து வீழ்த்திவிட்டு இவர்கள் கண் எதிரிலேயே அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை கடத்திச் செல்கிறார்கள்.
போலீஸில் புகார் கொடுத்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. காரை பறி கொடுத்த எம்.பி. போலீஸிலும், கார் நிறுவனத்திலும் தனது செல்வாக்கைக் காட்ட.. கார் கடத்தலுக்கு துணை போனதாகச் சொல்லி நட்டியையும், அர்ஜூன்னையும் போலீஸ் கைது செய்து சிறையில் அடைக்கிறது.
செய்யாத குற்றத்திற்காக ஜெயிலுக்குள் வந்த வருத்தத்தில் இருக்கும் நட்டிக்கு அங்கேயிருக்கும் ராஜன் நட்பாகிறார். பின்பு ருஹி சிங்கின் உதவியால் ஜாமீன் பெற்று இருவரும் வெளியில் வருகிறார்கள். இவர்களுடன் ராஜனும் நட்பாகி கூட்டத்தில் இணைகிறார்.
இவர்கள் ஜெயிலுக்கு போனவுடனேயே இவர்களது பெயரை பிளாக் லிஸ்ட்டில் சேர்க்கிறது சம்பந்தப்பட்ட கார் நிறுவனம். இதனால் இவர்களால் வேறு எந்தவொரு பெரிய கார் நிறுவனத்திலும் வேலைக்குச் சேர முடியவில்லை. சோர்வடைகிறார்கள்.
அப்போதுதான் ராஜன் சென்னையில் இருக்கும் மிகப் பெரிய கார் திருடரிடம் இவர்களை அழைத்துச் செல்கிறார். செய்யாத குற்றத்திற்காக தண்டனையை அனுபவித்ததால் இப்போது துணிந்து கெட்டதையே செய்யத் துணிகிறார் நட்டி. அந்த கார் தாதா கை காட்டியபடி அந்த ஊரில் மிகப் பெரிய ஜூவல்லரியை நடத்தி வரும் ஒரு மார்வாடியின் பி.எம்.டபிள்யூ. காரை கடத்துகிறார் நட்டி.
காரை கடத்தியவுடன் எதிர்பாராதவிதமாக காருக்குள் இருந்த 10 கோடி ரூபாய் பணமும் நட்டி அண்ட் கோ-விடம் சிக்குகிறது. பணத்தை பத்திரப்படுத்தும் நட்டி, காரை மட்டும் தாதாவிடமே ஒப்படைக்கிறார்.
முதல் முயற்சியிலேயே ஜெயித்துக் காட்டிவிட்டதால் நட்டியிடம் அடுத்த அஸைண்மெண்ட்டை கொடுக்கிறார் தாதா. மதுரையில் இருக்கும் மிகப் பெரிய ரவுடியான பாண்டியன் என்னும் ஷரத் லோகித்தஷ்வாவிடம் இது போன்ற 10 கார்கள் இருப்பதாகவும், அவை அனைத்தையும் திருடும்படி சொல்கிறார்.
நட்டிக்கு இது புது மாதிரியான அனுபவமாக இருப்பதால் தனது அணியினருடனும் மதுரைக்கு வருகிறார். மதுரையில் அரசியல் கட்சிகள், போலீஸ் என்று அனைத்திலுமே சகல செல்வாக்கோடு இருக்கிறார் ஷரத். இதனால் ஆபரேஷனை எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்யாமல் ஆற, அமர ஸ்கெட்ச் போட்டு செய்ய நினைக்கிறார் நட்டி.
இதற்கேற்றாற்போல் ஷரத் நடத்தும் கிளப்பில் மெம்பராகிறார் நட்டி. அதன் பின்பு அங்கே ஷரத்துக்கு எல்லாமுமாக இருக்கும் மயில்சாமியை தோஸ்த்தாக்கி அவர் மூலமாக ஷரத்தின் வரலாற்றை கேட்டுத் தெரிந்து கொள்கிறார்.
அந்த வாரம் நடக்கவிருக்கும் ஷரத்தின் பிறந்த நாளன்று அவருடைய அனைத்து கார்களையும் திருடுவதற்கு பிளான் செய்கிறார் நட்டி. அதே நாளன்று எதிர்பாராதவிதமாக அந்த கிளப்பிற்கு அடிக்கடி வந்து போகும் மணிஷாஸ்ரீ திடீர் விபத்தில் பலியானதாகச் செய்தி வெளியாகிறது. இது ஷரத்திற்கு எதிர்பாராத பிரச்சினையைக் கொடுக்கிறது. இந்தக் களேபரத்தில் சொன்னது போலவே 9 கார்களை கடத்திச் செல்கிறார் நட்டி.
மணிஷாஸ்ரீ, மறைந்த பாராளுமன்ற உறுப்பினரின் மகள் என்பதால் இந்த வழக்கை விசாரிக்க டெல்லியில் இருந்து அதுல் குல்கர்னி வருகிறார். அவரும் வந்து விசாரிக்கத் துவங்கிய நேரத்தில் ஷரத்தும் தனது கார்களை களவாடப்பட்டதை அறிந்து பேரதிர்ச்சியாகிறார்.
யார் இதைச் செய்த்து என்று அவர் விசாரிக்கும்போது அவரைக் கஷ்டப்படுத்தாமல் நட்டியே போன் செய்து பேசுகிறார். ஷரத் இப்போது கைவசம் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் காரை அவர் கண் முன்பாகவே தான் கடத்துவதாக சவால் விடுகிறார். இதனை ஏற்றுக் கொண்ட ஷரத், நட்டி இதனைச் செய்து முடித்தால் அவருக்கு 10 கோடி ரூபாயை பரிசாக தருவதாகக் கூறுகிறார்.
நட்டி அந்த ரோல்ஸ் ராய்ஸை கடத்தினாரா இல்லையா..? மணிஷாஸ்ரீயின் இறப்பு ஏன்.. எதற்கு.. எப்படி..? என்ற கேள்விக்கெல்லாம் விடைதான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.
எந்த பிரிவிலும் சேர்க்க முடியாத ஒரு தனிப்பட்ட நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் நட்டி நட்ராஜ். அவருடைய கடைசி படமான ‘எங்கிட்ட மோதாதே’ படம் வரையிலும் தனக்கேற்ற.. தனது தோற்றத்திற்கும், நடிப்பிற்கும் ஏற்ற கதையிலேயே நடித்து வருகிறார். இந்தப் படமும் அவருக்காக நெய்திருப்பது போலத்தான் தெரிகிறது.
அவரால் முடிந்தவரையிலும், வந்தவரையிலும் நடித்திருக்கிறார். ரஜினியை போல வசனங்களை ஸ்பீடாக பேசுவதிலும், தனி ஸ்டைல் முத்திரை பதித்திருக்கிறார். இந்த ஜோரிலேயே நடிப்பென்று எதிர்பார்க்காத அளவுக்கான திரைப்படங்களில் நடித்தால் அண்ணன் இன்னமும் பல அரிதாரங்களை பூசலாம்..!
முனீஸ்காந்திற்கு தாங்கள் யார் என்பதை உணர்த்தும் காட்சியிலும், அவருக்கு தங்களது திருட்டுத் தொழிலை அறிமுகப்படுத்தும் காட்சியிலும் மிக இயல்பாக நடித்திருக்கிறார் நட்டி. இதேபோல் கடைசியாக வில்லனிடத்தில் போனிலேயே சவால்விட்டுவிட்டு அதை எப்படி செயல்படுத்துவது என்று திட்டம் தீட்டும் காட்சியிலும் பதற்றத்தை உண்டு செய்யவும் தயங்கவில்லை இவரது நடிப்பு..! ஏதோ அவரால் முடிந்ததை செய்திருக்கிறார். ரசிப்போமாக..!
ருஹி சிங் ஹிந்தி ‘காலண்டர் கேர்ள்ஸ்’ படத்தில் நடித்தவர். ஹிந்தி படங்களுக்கே உரித்தான முகவெட்டும், உடல் வாகும் கொண்டவர். இந்தப் படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறார். இவருக்கு பதிலாக இன்னொரு கேரக்டரில் நடித்திருக்கும் மணிஷாஸ்ரீயையே நடிக்க வைத்திருக்கலாம். பொருத்தமாகத்தான் இருந்திருக்கும்.
மணிஷாஸ்ரீதான் ஏதோ நடிகை போல நடித்திருக்கிறார். நன்று.. அர்ஜூன்னும், ராஜனும் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்ட முயன்றிருக்கிறார். ஆனாலும் வழக்கம்போல ஸ்கோர் செய்திருப்பது முனீஷ்காந்துதான். மனிதருக்கு டயலாக் டெலிவரியில் பிய்ச்சு வாங்குகிறார். இவரால்தான் பல இடங்களில் நகைக்க முடிந்திருக்கிறது..! வாழ்த்துகள் ஸார்..!
வில்லனாக சரத் லோகித்தஷ்வா.. அதே கடுகடு முகம்.. கோபப் பார்வை.. வீர வசனம்.. சமாளிப்புகேஷன் முடிந்தது.. கார் திருட்டை தடுக்க வீட்டுக்குள் வரும் சாம்ஸ் கடைசி சில நிமிடங்களை அதகளம் செய்திருக்கிறார். அதேபோல் வீடு புகுந்து கார் திருடுவதெல்லாம் காதில் பூ சுற்றும் கதைதான்..!
அதுல் குல்கர்னி வீணடிக்கப்பட்டிருக்கிறார். இது மாதிரியான சாதாரண கேரக்டர்களுக்கு அவர் எதற்கு..? வேறு தமிழ் நடிகர்களையே பயன்படுத்தியிருந்தால் பணமாவது மிச்சமாகியிருக்கும்..!
கிளைமாக்ஸில் கமர்ஷியல் ஹீரோவுக்காக வைக்கப்பட்ட சண்டை காட்சி  நன்றாகவே படமாக்கப்பட்டிருப்பதால் பி அண்ட் சி ரசிகர்களுக்கு இந்தப் படம் முழு திருப்தியைத் தரும் என்றே நம்புகிறோம்.
இயக்குநர் தாஜின் இயக்கத்தில் பலவித குறைபாடுகள். படத்தின் முற்பாதியை இன்னும் கொஞ்சம் பெர்பெக்சனாக படமாக்கியிருக்கலாம்..! பிற்பாதியில் இயக்கத்தில் அதிகமாக குறைகள் இல்லாமல் பார்த்துக் கொண்டதற்காக அவருக்கு ஒரு நன்றி..!
மகேஷ் முத்துஸ்வாமியின் ஒளிப்பதிவு ஓகே ரகம். ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் ‘அம்பு வில்லுடா’, ‘தங்கமே’ பாடல்கள் குத்துப் பாடல்களை விரும்பும் ரசிகர்களுக்காக திணிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமான கமர்ஷியல் தத்துவப்படி மேலும் மூன்று பாடல்கள் கேட்கும் ரகத்தில்..! ஆனால் பின்னணி இசையில்தான் மனிதர் காதைக் கிழித்திருக்கிறார்.  ஒலியைக் குறைத்திருக்கலாம்..
படத்தின் முற்பாதியில் வேகம் குறைந்திருந்தாலும், பிற்பாதியில் படம் மிக வேகமாக நகர்வதால், லாஜிக் குறைகளையெல்லாம் ஒரு பொருட்டாக கருதாமல் ரசிகர்கள் வெகுவாக ரசித்துவிட்டு செல்கிறார்கள்..!
ஆகவே இந்த ‘போங்கு’ நிச்சயமாக போங்காட்டம் அல்ல..! பார்க்கலாம்தான்..!

0 comments: