தங்க ரதம் - சினிமா விமர்சனம்

18-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

என்.டி.சி. மீடியா மற்றும் வீ கேர் புரொடெக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வர்கீஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.  
‘எனக்குள் ஒருவன்’ மற்றும் ‘ஸ்ட்ராபெர்ரி’ போன்ற படங்களில் நடித்த வெற்றி இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். அதிதி நாயகியாக நடித்திருக்கிறார். மற்றும் செளந்தர்ராஜன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ‘ஆடுகளம்’ நரேன், ‘லொள்ளு சபா’ சாமிநாதன், பாண்டியன், ராண்டில்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இவர்களுடன் டிஸ்கோ சாந்தியின் சகோதரியான சுஜித்ரா ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.
ஒளிப்பதிவு – R.ஜேக்கப், இசை – டோனி பிரிட்டோ, படத் தொகுப்பு – சுரேஷ் அர்ஸ், கலை – N.K.பாலமுருகன், சண்டை பயிற்சி – ஃபயர் கார்த்திக், பாடலாசிரியர்கள் – யுகபாரதி, பாலமுருகன், நடனம் – தீனா, டிசைன்ஸ் – ஷபீர், மக்கள் தொடர்பு – யுவராஜ், தயாரிப்பு நிர்வாகி – சுரேஷ் கண்டியர், நிர்வாக தயாரிப்பு – பினுராம், தயாரிப்பு – C.M.வர்கீஸ். எழுத்து, இயக்கம் – பாலமுருகன்.

ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் தமிழ்நாட்டிலேயே இரண்டாவது பெரிய காய்கறி மார்க்கெட். அந்த மார்க்கெட்டில் ஒரு காலத்தில் நடந்த ஒரு உண்மைக் கதையில் கொஞ்சம் மசாலா தூவி இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் பாலமுருகன்.
ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட்டிற்கு அருகில் இருக்கும் ஊரில் இருந்து காய்கறிகளை ஏற்றி வரும் வேலையை செய்து வருகிறார் ஹீரோ வெற்றி. இவர் ஓட்டி வரும் வேனின் பெயர் ‘தங்க ரதம்’. இந்த வேனுக்கு உரிமையாளர் ‘ஆடுகளம்’ நரேன். நரேன், ஒருவகையில் வெற்றிக்கு சித்தப்பா வேண்டும்.
அதே ஊரில் இவர்களுக்கும் உறவுகளான குடும்பத்தைச் சேர்ந்தவர் செளந்தர்ராஜன். இவரும் ஒரு வேனை சொந்தமாக வைத்து ஓட்டி வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையில் எப்போதும் போட்டா போட்டிதான். யார் முதலில் சந்தைக்கு செல்வது என்று இருவரும் ஒருவரையொருவர் முந்திக் கொண்டு வேனை செலுத்தி வருகிறார்கள்.
முதலில் முந்தி வருபவரின் காய்கறிகள் டிமாண்டு காரணமாக உடனுக்குடன் அதிக ஏலத்தில் விற்பதால்தான் இப்படி இவர்கள் இருவருக்குள்ளும் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
2 வருடங்களுக்கு முன்பு வெற்றி அதே ஊரைச் சேர்ந்த அதிதியை பார்த்தவுடன் ஒரு தலையாய் காதலிக்கிறார். ஆனால் அதிதி செளந்தர்ராஜனின் தங்கை என்பது தெரிந்தவுடன் இது நமக்கு செட்டாகாது என்று சொல்லி விலகிவிட்டார்.
அந்த அதிதி இப்போது வலிய வந்து வெற்றியுடன் பேசுகிறார். பழகுகிறார். இது காதலுக்கு முதல் நிலையில் இருந்து பரவி ஒரு கட்டத்தில் காதலாகவே மாறிவிடுகிறது.
இந்த நேரத்தில்தான் மலைச்சாமி என்னும் வெட்டி ஆபிசரான ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் செளந்தர்ராஜன் மீதிருந்த கோபத்தில் அவரது வேன் கண்ணாடியை உடைத்துவிடுகிறார். ஆனால் இதனைச் செய்தது வெற்றி என்று நினைத்து வெற்றியை கொலை செய்ய வெறியாய் அலைகிறார் செளந்தர்ராஜன்.
இந்த திடீர் குழப்பத்தால் பயந்து போகும் நரேன், வெற்றியை ஒரு வாரத்திற்கு திண்டுக்கல்லில் இருக்கும் தன்னுடைய மைத்துனர் வீட்டில் போய் தங்கிக் கொள்ளும்படியும், தான் அழைக்கும்போது வந்தால் போதும் என்று சொல்லியும் அனுப்பிவிடுகிறார்.
வெற்றி ஊருக்குப் போய்விட அதிதியால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த நேரத்தில் இந்தப் பிரச்சினையை சுமூகமாக முடிக்க விரும்பும் நரேன், சமயோசிதமாக அதிதியை தனது மகனுக்கு கல்யாணம் செய்துவைத்துவிட்டால் இந்தப் பிரச்சினை முடிந்துவிடுமே என்று யோசிக்கிறார்.
தனது குடும்பத்தினரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு, உடனேயே அதிதியின் அப்பாவிடம் பெண் கேட்கிறார். அவரும் இந்தக் கல்யாணத்திற்கு ஒப்புக் கொள்ள உடனேயே நிச்சயத்தார்த்தம் நடந்தேறுகிறது.
நிச்சயத்தார்த்தம் முடிந்தவுடன் வெற்றிக்கு போன் செய்து விஷயத்தை சொல்லும் நரேன் அவரை உடனேயே கிளம்பி ஊருக்கு வரச் சொல்கிறார். இனிமேல் ஊரில் எந்தப் பிரச்சினையும் வராது என்கிறார். ஆனால் தனது காதல், கல்லறைக்குப் போனதை நினைத்து அதிர்ச்சியாகிறார் வெற்றி.
இனிமேல் நடப்பது என்ன..? வெற்றியும், அதிதியும் இணைந்தார்களா..? மோதல் கைவிடப்பட்டதா என்பதுதான் இடைவேளைக்கு பின்னான திரைக்கதை.
ஒரு சின்னஞ்சிறிய கதை. தேவையில்லாத நீட்டல்கள் எதுவுமில்லாமல் நறுக்கென்று ஒரு சிறுகதையை படித்தது போன்று கிளைமாக்ஸை வைத்து படத்தை முடித்திருக்கிறார் இயக்குநர். ஆனால் இடையிடையே பிளாஷ்பேக்கை கொண்டு வந்ததுதான் படத்தை முழுமையாக ரசிக்க முடியாமைக்கு காரணம்.. இந்த பிளாஷ்பேக் கதையை முன்பேயே காட்டிவிட்டு முடித்திருக்கலாம்.
ஹீரோ வெற்றி ஏற்கெனவே இரண்டு படங்களில் நடித்திருந்தாலும், இதில்தான் மெயின் ஹீரோவாக நடித்திருக்கிறார். இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாம்தான். இயக்குநரின் திறமையினால் இந்த அளவுக்கு அவரிடமிருந்து நடிப்புத் திறன் வெளிப்பட்டதே சாதனை என்னும்போது அவரைக் குற்றம் சொல்லி என்ன பயன்..? மலையாள வாடை அடிக்கும் அளவுக்கு இருக்கும் செயற்கையான சில வசனப் பேச்சுக்கள்தான் கொஞ்சம் சோதனையைக் கொடுக்கின்றன.
ஹீரோயின் அதிதி குழந்தை முகம். ஆனால் கலக்கமான முகத்தைக் காட்டுவதில் எக்ஸ்பர்ட்டாக இருக்கிறார். காதலா, வீடா என்கிற குழப்பத்தில் தவிக்கும் இவரது நடிப்புத் திறனால் கொஞ்சமேனும் படத்தோடு ஒன்ற முடிந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் கிளாமர் காட்டாமலேயே ரசிக்க வைத்திருக்கிறார்.
ஆனால் இவரைவிடவும் குத்துப் பாடலில் ஆடிய சுஜித்ராவையே ஹீரோயினாக்கியிருக்கலாம். அப்படியொரு அட்ராக்சனான முகம். ஏன் இப்படி அழகு தேவதைகள் எல்லாம் ஒரு பாட்டுக்கு ஆடி தங்களது கேரியரை தொலைத்துக் கொள்கிறார்கள்..?
‘ஆடுகளம்’ நரேன்தான் படத்தில் அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறார். கச்சிதமான, மிகையில்லாத நடிப்பு. வெற்றியின் அப்பாவை மருத்துவனைக்குத் தூக்கிவந்து சேர்ப்பித்துவிட்டு வெற்றியிடம் பாசத்துடன் பேசுகின்ற காட்சியிலும், டெம்போ வேனை வெற்றியின் பெயரிலேயே எழுதி வைத்துவிட்டதை வீட்டுக்கு வந்து தயகத்துடன் சொல்லும் காட்சியிலும் ‘சபாஷ்’ என்று சொல்ல வைத்திருக்கிறார் நரேன். வெல்டன் ஸார்..!
‘நான் கடவுள்’ ராஜேந்திரனுக்கு ஒரு மொக்கை கேரக்டர். அவருடைய வீட்டில் நடக்கும் கேபிள் டிவி சமாச்சாரம் உவ்வே. ஆனால் அதனை ஆபாசமாக்காமல் வார்த்தைகளிலேயே சாமரசம் வீசுவதை போல காமெடியாக்கி வைத்திருப்பதற்கு இயக்குநருக்கு நமது நன்றிகள்..!
யாருங்க அது ‘வெள்ளப்புறா’ என்னும் பாண்டியன்….? அந்தக் குள்ளமான உருவத்தோடு மனிதர் அலட்டிக் கொள்ளாமல் பேசும் பல வசனங்கள் மனதில் அப்படியே நிற்கின்றன. வெள்ளந்தியாக அவர் பேசுவதும், செயல்படுவதும் படத்திற்கு ஒரு வித்தியாசமான கலரைக் காட்டியிருக்கிறது.
ஆர்.ஜேக்கப்பின் ஒளிப்பதிவில் ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளின் சுற்றுப்புறங்கள் அழகாக படமாக்கப்பட்டுள்ளன. அந்த காந்தி மார்க்கெட்டி பிரம்மாண்டத்தை மட்டும் இன்னொரு சுற்று காட்டியிருக்கலாம்.
டோனியின் இசையில் வார்த்தைகள் புரியும்வகையிலான இசையைத் தந்தமைக்கு நன்றிகள்.. சுரேஷ் அர்ஸின் படத் தொகுப்புதான் படத்தை இந்த அளவுக்காவாவது ரசிக்க வைத்திருக்கிறது என்று உறுதியாகச் சொல்லலாம்.
படத்தின் முடிவு எதிர்பாராதது. தவறை உணரும் நண்பன் அதனை வெளிப்படையாகச் சொல்லும் முன்பாகவே விதி தன் விளையாட்டைக் காட்டிவிட இதனை நினைத்து நண்பன் மறுகுவதோடு படம் முடிவது ஒரு சிறுகதையின் அழகான முடிவுக்கு ஒத்தான விஷயம்..!
நல்லதொரு மென்மையான படத்தைப் பார்க்க விரும்புவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் ‘தங்க ரதம்’..!

0 comments: