03-06-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தப் படத்தை ஈரோஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் நடிகர் விதார்த் மற்றும் பிரபல டப்பிங் கலைஞரான ரவீணா ரவி இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜெயராஜ், ஜார்ஜ், ஹலோ கந்தசாமி, கிருஷ்ணமூர்த்தி, சித்தன் மோகன், கொண்டி ஆறுமுகம், செல்வ முருகன், வீரசமர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ஒளிப்பதிவு – ஆர்.வி.சரண், படத் தொகுப்பு – கே.எல்.பிரவீன், இசை – எம்.ரகுராம், சண்டை பயிற்சி – ஹரி தினேஷ், கலை இயக்கம் – க்ராபோர்ட், பாடல்கள் – வேல்முருகன், வி.குருநாதன், வசனம் – வி.குருநாதன், சுரேஷ் சங்கையா, தயாரிப்பு மேற்பார்வை – கே.பிரசாத், தயாரிப்பு நிர்வாகம் – எம்.வி.ரமேஷ், இணை தயாரிப்பு – சித்தி புஜாரா, தயாரிப்பு – ஈராஸ் இண்டர்நேஷனல், எழுத்து, இயக்கம் – சுரேஷ் சங்கையா.
எதிர்பார்க்கவே இல்லை.. இப்படியொரு சிறுகதையை செல்லூலாய்ட் வடிவில் காண்போமென்று..! இமையம், ச.தமிழ்ச்செல்வன், மேலாண்மை பொன்னுச்சாமி போன்றோரின் சிறுகதையை படித்தது போலிருக்கிறது இத்திரைப்படம்.
பல தடைகளைத் தாண்டி தனது 35-வது வயதில் திருமணம் செய்திருக்கிறார் ஹீரோ விதார்த். இதற்காக அவர்களது குல தெய்வமான முனியாண்டிக்கு நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக, இதற்காகவே வளர்த்து வந்த கிடாவை வெட்டி கறி விருந்து போட்டு, சாமி கும்பிட நினைக்கிறார்கள் விதார்த்தின் குடும்பத்தினர்.
இதற்காக தங்களது ஊரில் இருந்து 50 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் குல தெய்வம் கோவிலுக்கு லாரி பிடித்துச் செல்கிறார்கள். செல்லும் வழியில் ஒரு ஆர்வக் கோளாறில் புது மாப்பிள்ளையான விதார்த், லாரியின் டிரைவரை ஓரம்கட்டிவிட்டு தானே லாரியை ஓட்டிச் செல்கிறார்.
செல்லும் வழியில் திடீரென்று லாரி மீது வந்து மோதிய ஒரு டூவீலர் ஆசாமி ஸ்பாட்டிலேயே இறந்து போகிறான். இப்போது என்ன செய்வது என்ற குழப்பத்தில் ஆழ்கிறார்கள் குடும்பத்தினர்.
அனைவரும் ஒரு கருத்தைச் சொல்ல.. புதுமாப்பிள்ளைதான் லாரியை ஓட்டி வந்தவர் என்பது தெரிந்துவிட்டதால் அவன் சிறைக்குச் செல்ல நேரிடுமே என்று நினைத்து இந்த விபத்து சம்பவத்தையே மறைக்க நினைக்கிறார்கள் கூட்டத்தினர். இதற்காக பிணத்தைத் தூக்கிச் சென்று மறைத்து வைக்கிறார்கள்.
முனியாண்டி கோவிலுக்கு முன்பாகவே ஒரு மண்டபத்தில் இரவு தங்கிவிட்டு காலையில் செல்லலாம் என்று முடிவெடுக்கிறார்கள். விதார்த் தனது உறவுக்காரரான வழக்கறிஞர் ஜார்ஜுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல, அவர் மறுநாள் காலையில் லாரி உரிமையாளருடன் அங்கே வருகிறார்.
விஷயம் லாரி உரிமையாளருக்குத் தெரிய வர.. அவரும் தாம்தூம் என்று குதிக்கிறார். வக்கீல் அவரை ஆசுவாசப்படுத்துகிறார். ஹீரோவுக்கு பதிலாக வேறு யாரையாவது சிறைக்கு அனுப்பலாம் என்று யோசிக்கிறார்கள். லாரியை ஓட்டி வந்த டிரைவரை கேட்கிறார்கள். அவனோ தப்பித்து ஓடிவிடுகிறான்.
வக்கீல் அரசு மருத்துவமனை டாக்டரை வரவழைத்து பிணத்தை பார்க்க வைக்கிறார். டாக்டரும் பார்த்துவிட்டு “இவன் விஷம் குடித்துதான் இறந்திருக்கிறான்…” என்கிறார். ஆனால் வக்கீல் இதனை ஊர்க்காரர்களிடத்தில் சொல்லாமல் மறைக்கிறார். கோவில் பூசாரியின் மூலமாக இறந்து போனவனின் தாய்க்கும், அந்த ஊர்க்காரர்களுக்கும் விஷயம் தெரிய அவர்கள் அனைவரும் ஓடி வருகிறார்கள்.
வந்த இடத்தில் இரு தரப்பினருக்கும் அடிதடியாகி பெரும் கலவரமே வெடிக்கிறது..! போலீஸும் வருகிறது.. விதார்த் தரப்பினரை கைது செய்கிறது..! இதன் பின்னர் என்ன ஆகிறது என்பதுதான் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தின் சுவையான திரைக்கதை..!
முழுக்க, முழுக்க கிராமியத்தனத்தோடு படமாக்கியிருக்கிறார்கள். கதாபாத்திரத் தேர்வுகள், வசனங்கள், அவர்களது பெயர்கள்.. நடை, உடை பாவனைகள் என்று அனைத்திலும் அச்சு அசலாக கிராமத்தினர்களையே பார்க்க முடிகிறது..!
வெகு இயல்பான நகைச்சுவையை படம் முழுவதும் தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குநர். யாரையும் கஷ்டப்படுத்தியோ, கட்டாயப்படுத்தியோ நகைச்சுவையை வரவழைக்கவில்லை. அவர்களது சாதாரணமான டயலாக் டெலிவரியிலேயே குபீர் சிரிப்புகள் பொங்கி வருகிறது…
மண்ணின் மணம் மாறாத தன்மையுடன் கதையையும், திரைக்கதையையும் வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.
சட்டப்படி அது கொலை என்றாலும், லாரியை ஓட்டி வந்தது புது மாப்பிள்ளைதான் என்று சொன்னவுடனும் ஒவ்வொருவர் பேசும் வசனத்திலேயே அசல் கிராமத்தான்கள் என்பதை புரிய வைத்திருக்கிறார் இயக்குநர்.
அதிலும் புதுமாப்பிள்ளையின் புதிய மாமனாரான ஜெயராஜ் ஆரம்பத்திலேயே கறார் பார்ட்டியாக தன்னைக் காட்டிக் கொள்கிறார். மகள் வாழ்க்கை கெட்டுவிடக் கூடாதே என்பதற்காக அவர் படும்பாடும், அன்றைய நாள் இரவில் மகனைக் காணாமல் அவர் தவிக்கும் தவிப்பும், கொட்டும் வார்த்தைகளும் படத்தின் பார்வையாளர்களையும் படத்துக்குள் இழுக்கின்றன.
தங்கைக்காக ஜெயிலுக்குப் போக நான் ரெடி என்னும் அண்ணனிடம் அவனது குடும்பம், மனைவி, பிள்ளைகளுக்கு யார் பதில் சொல்வது என்று பொறுப்பான அப்பாவாக பேசி பிரச்சினையின் இன்னொரு பக்கத்தையும் காட்டுவதில் ஜெயராஜ் மிக அற்புதமாக நடித்திருக்கிறார். இப்படியொரு நடிப்பு தம்பியை இவரது உண்மையான அண்ணனான இயக்குநர் இமயம் பாரதிராஜா, ஏன் தன் படங்களில் நடிக்க வைக்காமல் இருக்கிறார் என்பது புரியவில்லை.
சமையல்காரராக நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி தனது அறிமுகக் காட்சியிலேயே “வெறும் உப்புமாவுக்காகத்தான் இத்தனை களேபரமா…?” என்று ஆரம்பிப்பதில் இருந்து இறுதிவரையிலும் கலகலப்பை கூட்டிச் சென்றிருக்கிறார். இவருக்குத் தோள் கொடுத்து துணை நின்றிருக்கும் சித்தன் மோகன் ‘அரும்பாடுபட்டு’ என்கிற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு, படத்தின் இறுதிவரையிலும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்திருக்கிறார்.
தனது நண்பனின் மாமனார் என்பதாலேயே அவமரியாதையை சகித்துக் கொண்டாலும் அதையும் முகத்திற்கு நேராக பேசும் விதார்த்தின் நண்பனான ‘கொண்டி’ ஆறுமுகம், எப்படியாவது தனது லாரியை மீட்டுச் சென்றுவிடலாம் என்று நினைத்து கூட்டித்திலேயே மாட்டி தர்ம அடி வாங்கித் தப்பிக்கும் லாரியின் ஓனரான செல்வமுருகன்.. நேர்த்திக் கடனுக்காக துடியாய் துடிக்கும் யதார்த்தமான பாட்டி, பாசமான பெரியப்பாவான கவிஞர் விக்ரமாதித்யன், விருந்துக்கு அலையும் இரண்டு அண்ணன், தம்பிகள்.. அலட்டலே இல்லாத அரசு மருத்துவர்.. பேசித் தீர்க்க நினைக்கும் இன்ஸ்பெக்டர்.. இவர்களது வழக்கை வைத்தே அடுத்த நான்காண்டுகளுக்கு சாப்பிட நினைக்கும் வக்கீல் ஜார்ஜ் என்று அனைத்து கேரக்டர்களுமே ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்கள்.
அதிலும் வக்கீலாக நடித்திருக்கும் ஜார்ஜ் தான் நல்லவனா.. கெட்டவனா.. என்பதையே வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடைசிவரையிலும் ஒரு பிழைக்கத் தெரிந்த வக்கீல் என்பதை வசனத்திலேயே சொல்லிக் காட்டியிருப்பதுதான் படத்தின் ஹை லைட். கிராமப்புற மக்கள் எப்படியெல்லாம் படித்தவர்களால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதற்கு இந்தப் படத்தின் வக்கீல் கேரக்டரும் ஒரு உதாரணம்..
சாதாரணமான நீதிமன்றம்போல் இல்லாமல், நீதிபதியை போல் இல்லாமல்.. தீர்ப்பை மிக இயல்பாக வழங்கி வழக்கினை தள்ளுபடி செய்யும் பாங்குலேயே படத்தின் தன்மை தெரிகிறது..!
விதார்த்துக்கு நிச்சயமாக இந்தப் படம் ஒரு வெற்றிப் படமாக அமைய வேண்டும். தனது மனைவியின் ஆசைக்காக லாரியை ஓட்டப் போய் கொலைப் பழிக்கு ஆளாகி வந்த உறவினர்களிடத்தில் பேச்சு வாங்கி, வாழ்க்கையே தொலைந்து போய் நிற்கும் அந்த பரிதவிப்பை தனது வார்த்தைகளிலும், நடிப்பிலுமே காட்டியிருக்கிறார்.
இவ்வளவு பிரச்சினையிலும் தனது வயதை சொன்னவன் எவன் என்பதை அறிய விழையும் விதார்த்தின் ஆசையும், உண்மையான வயதை வெளிப்படையாக அத்தனை பேர் முன்னால் சொன்னவுடன் கோபத்துடன் பாய்ந்து அடிப்பதுமாய் ஒரு கிராமத்து இளைஞனை கண் முன்னால் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர் சுரேஷ் சங்கையா.
புதுமுகம் ரவீணா ரவியின் தேர்வு மிகச் சரியானது. வேறொரு நடிகையாக இருந்திருந்தால் அவருக்காகவே வேறு ஏதேனும் காட்சிகள் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் வந்திருக்கும். புதுமுகம் என்பதால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் புதுப் பொண்ணாக ஜொலிக்கிறார்.
துவக்கக் காட்சியிலேயே அவர்களது திருமணம் முடிந்து 2 நாட்களாகியும் இன்னமும் ‘உறவு’ ஆரம்பிக்கவில்லை என்பதை வசனத்தாலேயே சொல்லி கதையை நகர்த்தத் துவங்கும்போது, அங்கேயும் ஒரு பிரேக்கிங் நியூஸை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குநர். இதன் பின்புதான் இந்தப் பிரச்சினை தொடர்வதால் அந்த வயதுக்குரிய மணமக்களின் எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும் மிக அழகாய் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
ஆர்.வி.சரணின் ஒளிப்பதிவில் அந்தப் பொட்டல் காட்டின் காட்சிகளையும், இரவு நேரக் காட்சிகளையும் மிகையில்லாமல் படமாக்கியிருக்கிறார்கள். அந்தச் சண்டை காட்சியை எப்படித்தான் படம் பிடித்தார்களோ தெரியவில்லை. அவ்வளவு தத்ரூபம். கும்பல் கலாட்டா என்பதற்கு உதாரணமாக இதனையே சொல்ல்லாம்.
எம்.ரகுராமின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கொஞ்சம் அடக்கி வாசித்திருப்பதால் வசனங்களை மிக எளிதாகக் கேட்க முடிந்திருக்கிறது. இதற்காகவே இசையமைப்பாளருக்கு ஒரு நன்றி..!
படத்தின் மிகப் பெரிய பலமே வசனங்கள்தான். அதிலும் பக்கா கிராமத்து வசனங்கள். கொஞ்சமும் நகர வாடையே வராமல், அவரவர் செய்யும் தொழில்களில் பயன்படுத்தும் வசனங்களையே இயல்பாக தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சில இரட்டை அர்த்த வசனங்களைக்கூட மிக இயல்பாக கடந்து செல்வதை போல பேசியிருப்பது தமாஷ்தான்..!
கடைசியாக விருந்தாக வேண்டிய அந்த கிடாவை மெல்லிய சாரலுக்கிடையில் அந்தப் பொட்டல் காட்டிலேயே அவிழ்த்துவிட்டுவிட.. அது திக்குத் தெரியாமல் ஓடும் அந்த அழகை பார்க்கும்போது கிடா விருந்தெல்லாம் எதுக்கு என்ற கேள்வியுடன் விருந்து சாப்பிட்ட திருப்தியையும் இந்தப் படம் தந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை..!
கதையில்லை.. கதையில்லை.. என்பதெல்லாம் ச்சும்மா என்பதை இந்தப் படமும் உணர்த்தியிருக்கிறது. கதை நம்மிடையே இருக்கிறது. தேடினால் நிச்சயம் கிடைக்கும் என்பதற்கு இந்தப் படத்தின் கதையும் ஒரு உதாரணம்..!
கொஞ்சமும் போரடிக்காத வகையில் சுவையான திரைக்கதையுடன், கதையைவிட்டு விலகாத தன்மையுடன், கிராமத்து வசனங்களுடனும், அற்புதமான இயக்கத்துடனும் சிரித்துக் கொண்டேயிருக்க ஒரு கியாரண்டியிடுடனும் வந்திருக்கும் இந்தப் படம் தமிழ்ச் சினிமாவுக்கு ஒரு புதிய களன்..
அவசியம் பார்க்க வேண்டிய படங்களின் லிஸ்ட்டில் இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது.
|
Tweet |
0 comments:
Post a Comment