மரகத நாணயம் - சினிமா விமர்சனம்

18-06-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தப் படத்தை ‘ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி’ சார்பில் தயாரிப்பாளர் ஜி.டில்லி பாபு தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் ஆதி ஹீரோவாகவும், நிக்கி கல்ரானி ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். மேலும் நடிகர் ஆனந்தராஜ், முனீஸ்காந்த், அருண்ராஜா காமராஜ், டேனி, கோட்டா சீனிவாசராவ், பிரம்மானந்தம், எம்.எஸ்.பாஸ்கர், மைம் கோபி மற்றும் முருகானந்தம் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு – பி.வி.ஷங்கர், இசை – திபு நைனன் தாமஸ், கலை இயக்கம் – என்.கே.ராகுல், எழுத்து, இயக்கம் – ஏ.ஆர்.கே.சரவண்.

இதுவொரு பேண்டசி, அட்வென்ச்சர், காமெடி கலந்த கதை. 1100, 1992, 2016 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் இந்தப் படம் நிகழ்கிறது. காஸ்ட்லியான ஒரு மரகத நாணயத்தைத் தேடும் படலம்தான் படத்தின் திரைக்கதை. ஹீரோவான ஆதியின் டீமும், வில்லன் ஆனந்தராஜ் டீமும் இந்த மரகத நாணயத்தை மும்முரமாகத் தேடுகின்றன. இறுதியில் அது யாருடைய கையில் கிடைக்கிறது என்பதுதான் கிளைமாக்ஸ்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைத் தழுவி கொஞ்சம் கற்பனை கலந்து இந்தக் கதையை உருவாக்கியிருப்பதாக இயக்குநர் கூறியிருந்தார்.
உண்மையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக சேலம் அருகே ‘சதுரங்க வேட்டை’யில் வந்த ஏமாற்றுக் கும்பல் போல, ராஜா காலத்து மரகத நாணயம் ஒன்று தங்களிடம் இருப்பதாகவும், அது விலை மதிப்பில்லாதது என்றும், வாங்கி விற்கலாமே என்று ஒரு சிலரிடம் ஆசையைத் தூண்டியது ஒரு திருட்டுக் கும்பல்.
ரகசியமாக பல லட்சம் ரூபாய் கொடுத்து கூட்டணி அமைத்து அந்த மரகத நாணயத்தை வாங்கினார்கள் சில பெரும் புள்ளிகள். அதன் பின்புதான் அது கலைடாஸ்கோப்பில் பயன்படுத்தும் கண்ணாடிகளை பயன்படுத்தி செய்யப்பட்ட பிங்கான் கலவை என்பதை அறிந்து ஏமாந்தனர்.
இதையடுத்து அந்தத் திருட்டுக் கும்பலை தேடிச் சென்று கொலை வெறியோடு தாக்கி கொலையும் செய்தனர். இதையே கொஞ்சம் மாற்றி சுவையான திரைக்கதையில் சிரிக்க, சிரிக்க கொடுத்திருக்கிறார் இயக்குநர் சரவண்.
கி.பி.1100-ம் வருடம் தமிழகத்தின் தொண்டை மண்டலத்தை ஆட்சி செய்தவன் இரும்பொறை என்ற மன்னன். சேர, சோழ, பாண்டியர்களையே தனது படை பலத்தால் வென்று வீராதிவீரனாகியிருந்தார். இதற்காக தன்னைத் தானே பாராட்டிக் கொள்ள நினைத்து விலை மதிப்பில்லாத மரகதத்தால் ஆன நாணயத்தை செய்து அதனை தனது வாளில் பொருத்தி வைத்து தனக்குத்தானே அழகு சூட்டிக் கொண்டான்.
தான் இறந்தவுடன் அந்த மரகத நாணயத்தையும் தன்னுடனேயே வைத்து அடக்கம் செய்துவிட வேண்டும் என்று அவன் சொல்லிவிட்டு இறந்த்தால் அவனுடைய வாரிசுகள் அது போலவே அவனது சடலத்துடன் அந்த மரகத நாணயத்தையும் சேர்த்தே புதைத்துவிட்டார்கள்.
இந்தக் குறிப்பிட்டை செப்பேடுகளின் மூலமாக தெரிந்து கொண்ட சிலர், இரும்பொறை மன்னனின் சமாதியைத் தோண்டி அந்த மரகத நாணயத்தை தேடியெடுத்தனர். அப்படி தேடி, தோண்டியெடுத்தவர்கள் வரிசையாக 132 பேர். இந்த 132 பேருமே விபத்தில் சிக்கி பலியாகிவிட்டார்கள்.
ஆனால் உண்மையில் அந்த மரகத நாணயத்தை யார் தொட்டாலும் அவர்களை மன்னன் இரும்பொறையின் ஆவி விடாமல் துரத்தி கொலை செய்வதாக பல மந்திரவாதிகளும் நினைக்கிறார்கள். இப்போதும் சொல்லி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் திருப்பூரில் இருந்து சுமாராக 40 லட்சம் ரூபாய் கடனுடன் சென்னைக்கு வருகிறார் ஆதி. கடனை அடைக்க வேண்டியிருப்பதால் உடனடியாக பெரிய பணக்காரனாக வேண்டும் என்று நினைத்து குறுக்கு வழியில் பணம் சேர்க்க நினைக்கிறார். இதற்காக சாதாரண சின்னச் சின்ன கடத்தல் வேலைகளில் ஈடுபடும் முனீஷ்காந்த் என்னும் ராமதாஸிடம் சேர்கிறார். அங்கே ஆதியை சேர்த்துவிடுவது ஆதியின் நண்பனான டேனியல்.
“இப்படியே சின்னச் சின்னதாக செய்தால் என்றைக்கு 40 லட்சம் ரூபாயை புரட்டுவது..?” என்று யோசிக்கும் ஆதி, “பெரிய பிராஜெக்ட்டா கை வைப்போம்…” என்று முனீஸ்காந்திடம் சொல்லி வருகிறார்.
இந்த நேரத்தில்தான் மிடில் கிளாஸ் ரவுடியான மைம் கோபியை, சீனாவில் இருந்து வந்த ஒரு அன்பர் சந்திக்கிறார். அந்த மரகத நாணயத்தை பற்றிச் சொல்லி அதைக் கைப்பற்றி கொடுத்தால் 10 கோடி தருவதாகச் சொல்கிறார்.
இதற்காக யார், யாரையோ பிடித்துப் பார்க்கிறார் மைம் கோபி. யாரும் செட்டாகவில்லை. டாப் கடத்தல் பேர்வழியாக இருக்கும் ஆனந்த்ராஜிடமும் கேட்டுப் பார்க்கிறார் மைம் கோபி. அவர்களும் ஆர்வம் இல்லை என்று கழன்று கொள்கிறார்கள். இந்த நேரத்தில்தான் டேனியல் மூலமாக ஆதிக்கு இது தெரிய வர, களத்தில் குதிக்கிறார்.
இந்த நேரத்தில் திடீரென்று முனீஸ்காந்த மாரடைப்பால் காலமாக.. ஆதிக்கும், டேனியலுக்கும் வேலையில்லாமல் போகிறது. சரி.. இந்த மரகத நாணயத்தையே முதல் போணியாக எடுத்துச் செய்வோம் என்று நினைக்கிறார் ஆதி.
ஆனால் இதில் இருக்கும் ஆபத்து பற்றி டேனியலுக்கும், ஆதிக்கும் புட்டுப் புட்டு வைக்கிறார் மந்திரவாதி கோட்டா சீனிவாசராவ். ஆனாலும் இளம் ரத்தமான ஆதி எதற்கும் அஞ்சாமல் துணிந்து நிற்கிறார்.
கையில் ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து “உனக்குப் பிரியமானவர்களை நினைத்தால் அவர்கள் உன் உதவிக்கு வருவார்கள்…” என்று சொல்லிக் கொடுக்கிறார் கோட்டா. மரகத நாணயத்தை தேடிச் சென்று உயிரிழந்த தனது மாமா ஒருவரை நினைவு கூர்கிறார் டேனியல். ஆனால் அந்த மாமா இறந்து போன முனீஸ்காந்த் உடல் மூலமாக உயிர் பெற்று எழுந்து வருகிறார். அதிர்ச்சியாகிறார்கள் இருவரும்.
“தங்களுக்கு மரகத நாணயத்தை கைப்பற்ற உதவி செய்ய வேண்டும்…” என்று ஆதியும், டேனியலும் முனீஸ்காந்திடம் கேட்க.. அவர் அதற்கு தன்னுடைய பால்ய கால தோழர்களையும் உயிர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி மூன்று இறந்து போன உடல்களைக் கேட்கிறார். தோழர்களும் அதற்கு ஏற்பாடு செய்ய.. அருண்ராஜா காமராஜூம், சங்கிலி முருகனும் கிடைக்கிறார்கள்.
கூடவே பேருந்து நிறுத்தத்தில் பார்த்தவுடன் ஆதிக்குள் காதலாகி பின்பு காதல் பணாலாகி.. கைவிட்டுப் போன காதலியான நிக்கி கல்ரானி செத்த பொணமாக நான்காவது ஆளாகக் கிடைக்கிறார். ஆனால் அவருடைய உடலில் ஒரு ஆண் குடியேறியிருக்கிறார்.
இந்த நால்வரும் சேர்ந்து மரகத நாணயத்தைத் தேடியெடுக்க முனைகிறார்கள். செய்து முடித்தார்களா இல்லையா என்பதுதான் படத்தின் சுவையான, சுவராஸ்யமான, நகைச்சுவை கலந்த திரைக்கதை..!
படத்தின் டைட்டில் கார்டிலேயே வித்தியாசத்தைக் காட்டி அசத்தியிருக்கிறார் இயக்குநர். கார்ட்டூன்களால் முன் காலத்துக் கதைச் சுருக்கத்தைச் சொல்லும்விதமே கவனத்தை ஈர்க்கிறது. செங்குட்டுவன், இரும்பொறை, சாணக்யன், நேசமணி என்ற தமிழ்ப் பெயர்கள்.. தமிழ் புலவரான சங்கிலி முருகன், ஆனந்த்ராஜின் கேரக்டர் ஸ்கெட்ச். அவருடைய அல்லக்கை முருகானந்தத்தின் அப்பாவித்தனம்.. நிகில் கல்ரானிக்கு அமைந்திருக்கும் ஆண் குரல்.. மரகத நாணயம் பயணம் செய்யும் இடம், படுகொலைகள் நடக்கும்விதம்.. இரும்பொறையின் ஆவி வரும் தகர டப்பாவால் ஆன லாரி.. இரும்பொறையின் சமாதி.. இறுதியில் பிளேட்டை திருப்பிப் போடுவது போல செய்யும் பிரம்மானந்தத்தின் அப்பாவித்தனமான காமெடி.. என்று படம் பல சுவாரஸ்யங்களால் நிறைந்திருக்கிறது.
ஆதிக்கு நிச்சயமாக இந்த வேடம் பொறுத்தமில்லைதான். ஆனால் முந்தைய கமர்ஷியல் ஹீரோ வேடம் போலில்லாமல் நடிக்கவே தேவையில்லாத அளவுக்கு ஒரு கேரக்டரை கச்சிதமாக செய்திருக்கிறார் ஆதி. காதல் போர்ஷன் இல்லை என்பதால் ஒரு குறை முடிந்தது. ஆனால் ஆக்சன் போர்ஷனில் வஞ்சகமில்லாமல் வைத்து செய்திருக்கிறார். டைமிங்கான வசனங்களை முனீஸ்காந்துக்கு இணையாக பேசியதில் இருந்தே தெரிகிறது.. ஆதி நிரம்பவே தேறிவிட்டார் என்று..! வாழ்த்துகள்..
முனீஸ்காந்த் என்ற ராமதாஸ்தான் படத்தை தாங்கியிருக்கிறார். உண்மையான கடத்தல் பேர்வழியாக பெத்த அம்மாவுடன் ஏதோ சோறாக்கி சாப்பிடும் அளவுக்கு சின்னதா செய்றேன் என்று அடக்கமாக பேசி சீக்கிரமாக இறந்தும் போகிறார். ஆனால் மறுஉயிரில் வந்து இவர் கலக்கும் கலக்கல்தான் படத்துக்கு ஆணி வேர்.
தன் உற்ற நண்பர்களுக்கு உயிர் கொடுத்து அழைத்து வருவது.. மரகத நாணயத்திற்கு ஸ்கெட்ச் போடுவது.. ஆனந்த்ராஜின் அடியாளின் துப்பாக்கி குண்டுக்கு அசால்ட்டாக நெஞ்சை காட்டுவது.. சித்ரவதை கூடத்தில் அந்தக் குண்டனுக்கு பதிலடி கொடுப்பது என்று இவர் இருக்கும் காட்சிகளில் சிரிப்புக்கு பஞ்சமில்லை.
நிக்கி கல்ரானி.. அப்படியே அலாக்காக தூக்கி உச்சி முகிர வேண்டியவர். பஸ் ஸ்டாப்பில் ஆதியின் பார்வை தவிர்க்கும் லாவகம்.. எதிர்காலக் கணவருடன் பயணப்படும்போது ஏற்படும் சங்கடங்களை முகத்தில் காட்டி.. டார்ச்சர் கணவனால் இறப்புவரையிலும் போகும் அளவுக்கு துன்பப்படும் அந்தச் சின்ன கேரக்டரில் அடக்கமோ அடக்கம்..!
ஆனால் மறு உயிர் பிரவேசத்தில் “என்ன கிழிஞ்ச வேட்டி.. யாரை பொணங்குற.. உன்னைய பொணமாக்கிருவேன்..” என்று ஆண்மைத்தன குரலில் கோபத்தைக் காட்டும்போதுகூட சிரிப்பலை தியேட்டரில் உதிர்கிறது.. தொடர்ச்சியான இவரது பல ஆக்சன் காட்சிகள்.. அமர்ந்திருக்கும் ஸ்டைல்.. ஒரு இறந்து போன ஆன்மாவின் பயமறியா தகைமையை காட்டியிருக்கிறார் இந்த எழில்மிகு நங்கை. கங்கிராட்ஸ் மேடம்..!
ஆனந்த்ராஜுக்குள் இத்தனை காமெடியனா..? இவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சே சுவாரஸ்யம். நேரில் போகாமல் ஸ்பீக்கர் செட்டை கொடுத்தனுப்பி அதில் பேசுவது.. சித்ரவதை கூடத்தை ரெடி செய்து வைத்து அதில் களமாடுவது.. அரை வேக்காடு அடியாட்களை வைத்துக் கொண்டு எப்படித்தான் இந்தத் தொழிலை செய்கிறாரோ என்று நம்மையே ஒரு நிமிடம் சிரிக்க வைத்துவிட்டார்.
 ‘அவன் மேட் இன் சைனா.. எப்பவாச்சும் வெடிப்பான். ஆனால் நான் மேட் இன் இண்டியா. எப்ப வேணாலும் வெடிப்பேன்’ என்று மைம் கோபியிடம் இவர் சீறுவதுகூட நகைச்சுவைதான்.
ஒரு காட்சியில் சமய சந்தர்ப்பம் இல்லாமல் வீரம் காட்டும் தன்னுடைய அல்லக்கைகளிடம், ‘நான் சீரியஸாவே சீரியஸான ஆளுடா.. இப்போ காமெடிதான் ட்ரெண்டுன்னு நினைச்சுத்தான் உங்களைக்கூட வெச்சிருக்கேன். உங்ககூட இருக்கிறதால என்னையும் காமெடியா பார்க்கிறானுங்கடா…” என்று வெறுத்துப் போன மன நிலையில் பேசுவதுகூட தியேட்டரே அதிரும் காமெடிதான்..!
ஆதியின் நண்பனாக படம் முழுக்க வலம் வரும் டேனியலுக்கு இந்தப் படம் நிச்சயமாக ஒரு பெரிய பெயரைப் பெற்றுத் தரும். மற்ற படங்களை போல கிறுக்கு வசனங்கள் எதுவுமே இல்லாமல், கதையுடன் ஒட்டிய டயலாக்குகளையே பேசி சிரிக்க வைத்திருக்கிறார் டேனியல்.
இரண்டு காட்சிகள் என்றாலும் மனதில் நிற்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். அதேபோல் இறுதிக் காட்சியில் வந்து காரியத்தை செய்து முடிக்கும் புரோகிதர் போல காட்சி தரும் சங்கிலி முருகன் ஒரு வித்தியாசமான கேரக்டர். சுத்தத் தமிழில் பேசி கலக்குகிறார்.
வந்த காரியம் முடிந்தவுடன் தங்களுக்குத் தாங்களே குழி தோண்டி வைத்துவிட்டு அதில் விழும் முன்பு “நான் போகலாம். ஆனால் என் இனிய தமிழ்.. இன்ப தமிழ் என்றும் சாகாது..” என்று சொல்லிவிட்டுப் போவது டச்சிங்கான வசனம்..!
கூடவே மைம் கோபி, முனீஸ்காந்தின் அம்மா, “அடிக்காதடா தையல் போட்டிருக்கேன். பிரிஞ்சிரும்டா” என்று ஆனந்த்ராஜின் அடியாளிடம் கெஞ்சி, கெஞ்சி தவிர்க்கப் பார்த்து முடியாமல் தையல் பிரிந்து தன் தலை துண்டாகிப் போய் விழுந்தவுடன் அதே டோனில் பேசும் நேசமணி என்னும் அருண்ராஜா காமராஜ் இன்னொரு பக்கம் சிரிக்க வைத்திருக்கிறார்.
பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவில் அதிக இடறல் இல்லாமல் அனைத்துக் காட்சிகளிலும் ஒளி பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனந்த்ராஜின் இடத்தில் மட்டுமே செட்டிங் லைட்டுகள் போடப்பட்டு ஜோராக இருக்கிறது ஸ்கிரீன். இறுதி காட்சியில் அந்த தகர டப்பா லாரியை எங்கேயிருந்து பிடித்து வந்தார்கள் என்று தெரியவில்லை. அதன் அமைப்பும், காட்சியமைப்பும் அட்டகாசம்..!
ரசிகர்கள் கொஞ்சமும் தோய்வடையாமல் இருக்கும் பொருட்டு பாடல் காட்சிகளை மாண்டேஜ் ஷாட்டுகளாவே நிரப்பி நம்மை சோர்வடையாமல் இருக்க வைத்திருக்கிறார் இயக்குநர். இசையமைப்பாளரின் பின்னணி இசைதான் ஜோர். அதிலும் ஆனந்த்ராஜுக்கு போட்டிருக்கும் பின்னணி இசை கச்சிதம்.. அதேபோல் கிளைமாக்ஸில் அந்த பேய் லாரிக்கு ஓட்டியிருக்கும் இசையும் ரம்மியம்..!
ஆங்காங்கே விட்டுவிட்டு நம்மை சிரிக்க வைக்க வேண்டும் என்று இயக்குநர் நினைத்திருக்கிறார் போலும். இடைவேளைக்கு பின்புதான் அதீதமான நகைச்சுவை தெறிக்க வைக்கிறது.
ஒட்டு மொத்தமாக ஒரு நகைச்சுவை படத்திற்கு என்ன தேவையோ, அது அத்தனையையும் தன்னில் உள்ளடக்கியிருக்கிறது இந்தப் படம்.
நிச்சயமாக உங்களுடைய சிரிப்புக்கு நாங்கள் கியாரண்டி. அவசியம் பாருங்கள்..!

0 comments: