காற்று வெளியிடை - சினிமா விமர்சனம்

09-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியாவின் ஹாட்டான இயக்குநரான மணிரத்னத்தின் படைப்புகளுக்கென்றே இந்தியாவில் ஒரு தனி மரியாதை உண்டு. இந்தியாவிலேயே இப்படியென்றால் தமிழகத்தில் சொல்லவே வேண்டாம்.
‘நம்ம மணி’ என்று தங்களது பக்கத்து வீட்டுக்காரரை போல நினைக்கும் இந்தியாவின் மணியான இந்த ரத்னம் இயக்கியிருக்கும் இந்தப் படம் எப்படி என்பதை பார்ப்போம்..?!
1999-ல் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்புக்கே தெரியாமல் அப்போதைய பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி பர்வேஷ் முஷாரப்பால் நடத்தப்பட்ட கார்கில் போர் சமயத்தில்தான் இந்தக் கதையும் நடக்கிறது.

இந்திய விமானப் படையில் ஏர் விங் கமாண்டராகப் பணியாற்றும் வருண் சக்ரபாணி என்னும் கார்த்தி, கார்கில் போர் சமயத்தில் மிக் ரக போர் விமானங்களை இயக்கி பாகிஸ்தான் படைகளைத் தாக்குகிறார். அந்தச் சமயத்தில் பாகிஸ்தான் படையினரின் எதிர்த் தாக்குதலில் அவருடைய விமானம் பாதிக்கப்பட்டதால் இவர் மட்டும் உயிர் தப்பிக்கிறார்.
ஆனாலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் விழுந்துவிட்டதால் பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்குகிறார் கார்த்தி. அவர்கள் கார்த்தியை ராவல்பிண்டி சிறைச்சாலைக்கு கொண்டு சென்று கொடூரமாக தாக்குகிறார்கள். கார்த்தி சிறையில் இருக்கும்போது தான் வெளியில் சுதந்திரமாக வர வேண்டும். தனக்கு விடுதலை வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காக அவர் நினைக்கும் ஒரேயொரு காரணம் அவருடைய காதலியான மருத்துவர் லீலா ஆபிரகாம் என்னும் அதிதி ராவ் ஹைதாரிதான்.
அதிதிக்கும் தனக்குமான நட்பு, காதல் வாழ்க்கை பற்றி சிறையில் இருந்தபடியே அவ்வப்போது பிளாஷ்பேக்கில் நினைத்துப் பார்க்கிறார் கார்த்தி.
கார்த்தியின் இயல்பான குணமே பெண்களுடன் பழகுவது.. போரடிக்கும்போது விட்டுவிலகிவிடுவது.. ஒரு குழந்தை பெற்ற பின்பு திருமணம் செய்து கொள்ளலாமே என்கிற அதி தீவிர முற்போக்கு சிந்தனையுடையவர்.
ஒரு விபத்தொன்றில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலைமையில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படுகிறார். அன்றைக்குதான் அதிதியும் அதே மருத்துவமனையில் டூட்டி டாக்டராக பணியாற்ற வந்திருக்கிறார். முதல் பேஷண்ட்டே கார்த்தியாக இருக்க.. கார்த்தியை கண்ணும் கருத்துமாய் கவனித்து அவரை மீண்டும் உயிர்த்தெழ வைக்கிறார் அதிதி.
இதைத் தொடர்ந்து கார்த்தியும், அதிதியும் பழகும் வாய்ப்பு ஏற்படுகிறது. இந்தப் பழக்கம் போகப் போக.. காதலாகவும் மாற… அது கடைசியில் படுக்கைவரையிலும் செல்கிறது.
அதிதியின் வயிற்றில் குழந்தை வளர்வதை அறிந்தவுடன் கார்த்தி “எனக்கு அப்பாவாக இருக்கும் தகுதியில்லை. நான் தான்தோன்றித்தனமாக வாழ்வேன். இது நமக்கு செட்டாகாது…” என்றும் சொல்கிறார். ஆனாலும் அதிதி கருவைக் கலைக்க முடியாது என்று சொல்லிவிட்டுப் போகிறார்.
இதற்கு சில நாட்கள் கழித்து அதிதியின் தாத்தா இறந்து போக, அங்கே செல்லும் கார்த்தியை அதிதியின் பெற்றோர் அவமானப்படுத்துகின்றனர். இதனால் கோபமாகும் கார்த்தி அதிதியின் பெற்றோரை கண்டபடி ஏச.. அவரை வீட்டில் இருந்து வெளியேறச் சொல்கிறார் அதிதி.
இந்த நேரத்தில்தான் பைட்டர் விமானத்தை ஓட்டிச் சென்று பாகிஸ்தான் படையிடம் மாட்டிக் கொண்டிருக்கிறார் கார்த்தி. இப்போது அவருடைய எண்ணம் எப்படியாவது சிறையிலிருந்து தப்பித்து அதிதியை பார்க்க வேண்டும் என்பதுதான். அது நடந்ததா இல்லையா என்பதுதான் படத்தின் இதற்குப் பிறகான திரைக்கதை.
இயக்குதலில் டாக்டரேட் பட்டம் வாங்கியவர் இயக்கிய படம், என்பதால் அனைத்து நடிகர், நடிகையருமே குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள். இதில் கார்த்தியும் விதிவிலக்கல்ல.
எதையும் சீரியஸாகவே எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடியே ஆணாதிக்கத்தனமாக பேசுவது.. தற்பெருமையுடன் திரிவது.. தன்னைத் தவிர மற்றவர்களை எள்ளுக்கீரையாக நினைப்பது என்று தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சை நன்கு உள்வாங்கி நடித்திருக்கிறார்.
பல குளோஸப் ஷாட்டுகளில் கார்த்தியின் நடிப்பு மிக வித்தியாசமாக வெளிப்பட்டிருக்கிறது. பெண்கள், ஆண்கள் யார் என்று அதிதியுடன் அவர் பேசும் பேச்சும், தான் சொன்னால் சொன்னதுதான் என்பதுபோல அவர் செய்யும் செயல்களும் அதிதியை அதிர்ச்சி பிளஸ் அயர்ச்சியடைய வைக்கிறது என்பது உண்மை. அந்த அளவுக்கு அவரது டார்ச்சர் நடிப்பு, மிக உண்மையாக வெளிப்பட்டிருக்கிறது.
நாயகி அதிதி ராவ் ஹைதரி பார்க்க அழகாக இருக்கிறார். கேமிராவுக்கு ஏற்ற முகம். செக்கச் செவலேன்ற அந்த முகத்தில் சோகத்தை பார்க்க நேர்ந்தால் நமக்கே மனசு தாங்காது. இந்தச் சின்ன மனோதத்துவத்தை வைத்துதான் அனைத்து இயக்குநர்களும் ஹீரோயின்களை அழ வைத்து, அவர்களது கதாபாத்திரத்தை ரசிகர்களின் மனதில் பதிய வைக்க முயல்கிறார்கள். இதற்கு மணிரத்னமும் விதிவிலக்கல்ல.
தன்னுடைய  கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார் அதிதி. காதலனான கார்த்தி நல்லவரா.. கெட்டவரா..? அவரை காதலிக்கலாமா? கூடாதா? என்கிற குழப்பத்திலேயே அவர் இருப்பதும், பேசுவதும் அவர் மீதான பரிதாபத்தைக் கூட்டியிருக்கிறது என்றாலும் அதே அளவுக்கு கார்த்தியின் கேரக்டர் ஸ்கெட்ச் மீதான கடுப்பையும் கூட்டியிருக்கிறது.
பாடல் காட்சிகளில் கூடுதல் அழகுடனும், அற்புத நடனத்துடனும், மிகச் சிறந்த நடிப்பையும் கொட்டியிருக்கிறார் படத்தில்..! வெல்கம் மேடம்..!
ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தில்தான் காமெடியே பேசாமல், செய்யாமல் குணச்சித்திர கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். நன்று.. அதிதியின் தோழியாக வரும் ருக்மணி, டெல்லி கணேஷ், கே.பி.ஏ.சி.லலிதா என்று துணை கதாபாத்திரங்களும் நன்கு நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு பாடல் காட்சியில் ருக்மணியின் நடனமும் அசத்துகிறது.
படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன். லொகேஷன் காஷ்மீர் என்பதாலும், அழகழகு காட்சிகளாக எடுத்துத் தள்ளியிருக்கிறார். எந்த பிரேமும் அழகற்று நிற்கவில்லை. அத்தனையும் இது மணிரத்னத்தின் படம்தான் என்பதை நிரூபிப்பதை போலவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் கச்சிதமான வெட்டுகளில் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். சில இடங்களில் குறிப்பால் உணர்த்துவதை போலவே காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால் குழப்பமில்லாமலும் படத் தொகுப்பாளர் தொகுத்தளித்திருக்கிறார்.
உதாரணமாக ராவல்பிண்டி சிறையில் இருந்து கார்த்தி தப்பிக்கும் காட்சியில் அவர் கடைசிவரையிலும் படுக்கையில் படுத்தேதான் இருக்கிறார். ஆனால் அடுத்தக் காட்சியில் பேருந்தில் பயணித்து வருகிறார். இது எதிர்பாராத திடுக் திருப்பம்தான்..!
கலை இயக்கம், உடைகள், ஒப்பனைகள் என்று அத்தனை டிபார்ட்மெண்ட்டுகளும் இந்தப் படத்தில் பேசப்பட்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை.
ஏ.ஆர்.ரகுமானின் இசையில்  பாடல்கள் ஒரு முறை மட்டுமே கேட்கும் ரகம் என்பதுதான் சோகமான விஷயம். பாடல் வரிகளை இசையின் ஆதிக்கத்தால் முனைந்து கேட்கவே முடியவில்லை. 
கிளைமாக்ஸில் ஆப்கானிஸ்தான் நோக்கி மூன்று பேரும் தப்பித்துப் போகும் அந்தப் பரபரப்புக் காட்சியில் இயக்குநர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர் மூவருமே திறம்படி பணியாற்றியிருக்கிறார்கள். படத்திலேயே ‘வெல்டன்’ என்று சொல்ல வேண்டிய காட்சிகள் இவைகள்தான்..!
இந்தப் படம் கார்கில் போர் பற்றிய படமா அல்லது காதல் பற்றிய படமா என்கிற குழப்பத்துடன் படத்தை நிறைவு செய்திருப்பது இயக்குநர் செய்த மிகப் பெரிய தவறு. காதல் படங்களுக்கு மணிரத்னத்தின் முந்தைய படங்களே வரிசை கட்டி நிற்கின்றன. ஆனால் இதில் மையமாக கார்கில் போரையே கையாண்டிருக்கலாம். அதேபோல் காதலையும் உருப்படியாக காட்டாமல், மிகத் தீவிரமான முற்போக்கு பேசுவதை போல காட்டியிருப்பது அதிர்ச்சியாய் இருக்கிறது.
‘அலைபாயுதே’ படத்தில் வீட்டுக்குத் தெரியாமல் ரிஜிஸ்தர் கல்யாணம் செய்து கொண்ட காதலர்களையும், ‘ஓகே கண்மணி’யில் கல்யாணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வந்த காதலர்களையும் காட்டிய மணிரத்னம், இந்தப் படத்தில் இன்னும் கொஞ்சம் அதீதமாக யோசித்து முதலில் குழந்தை பெற்றுவிட்டு பின்பு கல்யாணம் செய்து கொள்ள நினைக்கும் காதலர்களை பற்றிச் சொல்கிறார். கேட்டால், “காலம் கலிகாலமாயிருச்சோ இல்லியோ..? அதான் லோகத்துல இப்படி நடக்குறான்னு சொல்லுவா பாருங்கோ..!”
கார்த்தியின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் குழப்பத்தையே தந்திருக்கிறது. அவர் விமானப் படை அதிகாரி. காதலிக்கிறார் என்பதுவரையிலும் சரிதான். ஆனால் அதை அசட்டையாக.. ஏமாற்றுவது போல.. ஒரு சைக்கோ போல காதலியிடம் டீல் பேசுவதும்.. அவரை டார்ச்சர் செய்வதுமாக இருப்பது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு பெரும் குழப்பத்தைத்தான் கொடுத்தது.
இந்தப் படத்தை கார்த்தியின் ரசிகர்கள் பார்த்தால்.. ஒரு ஹீரோவின் ரசிகர்கள் பார்த்தால்.. எப்படி அவர்களால் ஜீரணிக்க முடியும்..? தன்னுடைய ஆதர்ச ஹீரோ, ஹீரோவாக நடித்திருக்கிறாரா..? அல்லது வில்லனாக நடித்திருக்கிறாரா என்பதே புரியாதபோது அவர்களது ஆதரவு மவுத் டாக்கில் எப்படி வெளியாகும் என்பதை மணிரத்னம் யோசித்தாரா என்று தெரியவில்லை.
அதிதியின் பெற்றோரிடம் கார்த்தி வந்து பேசும் நேரத்தில் தன்னை அவர்கள் அவமானப்படுத்திவிட்டார்கள் என்று பொறுமுகிறார். அப்போதும் “அதிதியை கல்யாணம் செய்து கொள்ள தயார்…” என்கிறார். அதை பக்குவமாக பேசினாலே முடிந்து போகுமே..? அதற்கெதற்கு இத்தனை முரட்டுத்தனம்..? இது முட்டாள்தனமான கேரக்டர் ஸ்கெட்ச். மிக எளிதாக முடிந்திருக்க வேண்டிய விஷயத்தை, முட்டாள்தனமாக ஹீரோவே இழுத்துப் போயிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
“நான் இதுவரையிலும் விளையாட்டுத்தனமாக மனிதர்களை மதிக்கத் தெரியாமல் வாழ்ந்துவிட்டேன். இனிமேல் என் மீது காதல் வைத்திருக்கும் அந்தக் காதலிக்காக வாழப் போகிறேன்…” என்கிற அளவுக்காச்சும் அவர் கிளைமாக்ஸில் பேசியிருந்தால்கூட திருந்திவிட்டார் என்று ஒப்புக் கொள்ளலாம். அதற்கான திரைக்கதை முடிச்சுக்கள் படத்திலேயே இருக்கின்றன.
ராவல்பிண்டி சிறைச்சாலை கொடுமைகள்.. 5 வருட கால கொடுமையான சிறை. அங்கேயிருக்கும் கைதிகளின் மன உளைச்சல்.. மனித வாழ்க்கையின் இருண்ட பக்கத்தைப் பார்த்த அதிர்ச்சி.. பெரும்பாடுபட்டு தப்பித்தவிதம்.. இத்தனையும் தாண்டி மீண்டும் தனது பதவியைப் பெற்றுவிட்ட திருப்தி..
இத்தனை வாழ்க்கை அனுபவங்களை பெற்ற பின்பும் “வாழ்க்கை என்பது இதுதான். இதில் உண்மையாக வாழ்ந்து காட்ட வேண்டும்…” என்று நினைப்பவன்தான் மனிதன். இதற்குப் பின்பு அவர் காதலியைத் தேடி வந்து, அந்த இடத்தில் தனது வாரிசையும்  பார்த்த அதிர்ச்சியில் “இப்போது திருந்திவிட்டேன். என் மனைவியாக வா.. சேர்ந்து வாழ்வோம்…” என்றழைப்பார் என்று எதிர்பார்த்தால், “ஸாரி கேட்க வந்தேன். உன்னை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல..” என்று சொல்லி தத்துவமாக பேசி சொற்பொழிவாற்ற.. கிளைமாக்ஸிலும் மணிரத்னம் ரசிகர்களை பதம் பார்த்துவிட்டார். என்ன ஆச்சு இந்த மனுஷனுக்கு..?
கார்த்தி மட்டுமில்லை. அவரது குடும்பத்தின் கேரக்டர் ஸ்கெட்ச்கூட வில்லங்கமாகவே இருக்கிறது. கார்த்தியின் அண்ணனுக்கு நாளை கல்யாணம்.. பொண்ணோ நிறைமாத கர்ப்பிணி. அப்பாவோ ரொம்பத் திமிர் பிடித்தவராக இருக்கிறார். “எதிர்த்துப் பேசினால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுவேன்…” என்று மருத்துவமனையில் தனது மனைவியை அனைவரின் முன்பாகவே மிரட்டுகிறார். கார்த்தியும் பதிலுக்கு தன் அப்பனிடமே, “முடிஞ்சா எங்க அம்மா மேல கையை வைடா.. பார்ப்போம்..?” என்ற ரீதியில் பேசுகிறார். வாட் இஸ் திஸ்..? என்ன கொடுமை மணி ஸார் இது..?
இப்படியொரு குடும்பத்தில் பிறந்த கார்த்தியும் இப்படித்தானே இருப்பார்..? என்பதற்காக இயக்குநர் வைத்திருக்கும் சமாளிப்புகேஷன் இது என்று நினைக்கிறோம்.
காலம் மாறினாலும் மணிரத்னம் இன்னமும் மாறவில்லை போலும். வசனங்கள் சில இடங்களில் கூர்மையாக இருந்தாலும், அது பாமர ரசிகனுக்கும், சினிமா ரசிகனுக்கும் தேவையில்லாத விஷயங்களையெல்லாம் சொல்கிறது. காதைச் சுற்றி மூக்கைத் தொடும் அளவுக்கான வசனங்கள் எதற்கு..? பட்டென்று நறுக்குத் தெறித்தாற்போல் சொல்லலாமே..?
அதே போல வசனங்களை மிக மெல்லிசான வாய்ஸில் பதிவு செய்து ஒலிப்பதிவில் வெளியிட்டிருக்க.. தமிழகம் முழுவதிலும் ஒற்றை தியேட்டர்களிலிருந்து பல புலம்பல்கள் ஒலிக்கின்றன.. வசனமே கேட்கவில்லையென்று..! வசனம் புரிந்தால்தானே கதை புரியும். கதை புரிந்தால்தானே.. படத்தில் லயிக்க முடியும்..?! ‘கடல்’, ‘ராவணன்’ படத்தின் தோல்விக்கு மிக முக்கிய காரணம் இதுதான்.. இதை யாரிடம் போய் சொல்வது..?
ஒன்று கார்கில் போர் பற்றிய படமாக எடுத்திருக்கலாம். அல்லது காதல் படமாகவே எடுத்திருக்கலாம். இரண்டுமில்லாமல் இரண்டையும் கலந்து குழப்பி, ஒருவிதமான காதல் மற்றும் தேசப் பற்று கலந்த படமாக வழங்கி, அவருடைய ரசிகர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மணிரத்னம்.

0 comments: