01-04-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
ஆல்ஃபா ஸ்டுடியோஸ் சார்பில் தினேஷ் செல்வராஜ் இந்தப் படத்தை தயாரித்து, எழுதி, இயக்கியிருக்கிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஆபிஸ்’ தொடரில் கதாநாயகனாக நடித்த கார்த்திக்கேயன் இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவர்களுடன் ஷரியா, இவன்ஸ்ரீ, ஜெகதீஸ், ஜார்ஜ் விஜய், அரவிந்த், அருள் ஜோதி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ஏ.டி.பகத்சிங், இசை – நவீன் மற்றும் பியோன் சுரோ, படத்தொகுப்பு –சேவியர் திலக், பாடல்கள் – கலை சாய் அருண், கலை இயக்கம் – க்ராஃபோர்டு, சண்டை பயிற்சி – ‘ரன்’ ரவி, மக்கள் தொடர்பு – நிகில், ஸ்டில்ஸ் – மனோகர், நடனம் – சான்டி, இணை தயாரிப்பு – காஞ்சனா சிவக்குமார் மற்றும் பத்மபிரியா கோபாலகிருஷ்ணன், கதை – ஆர்.செல்வராஜ் மற்றும் தினேஷ் செல்வராஜ், தயாரிப்பு மற்றும் இயக்கம் –தினேஷ் செல்வராஜ்.
பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜின் மகனுமான இயக்குநர் தினேஷ் செல்வராஜுக்கு இது முதல் படம். இவர், ‘அலைபாயுதே’, ‘டும் டும் டும்’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘கடல்’ ஆகிய படங்களில் இயக்குநர் மணிரத்னத்திடம் இணை இயக்குநராய் பணியாற்றியிருக்கிறார்.
‘அன்னக்கிளி’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘முதல் மரியாதை’, ‘கடலோரக் கவிதைகள்’, ‘உதயகீதம்’, ‘சின்னக் கவுண்டர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு கதை எழுதியவரும், பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, மணிரத்னம், எஸ்.பி.முத்துராமன், ஆர்.வி.உதயகுமார் ஆகியவர்களுடன் இணைந்து பணியாற்றியவருமான கதாசிரியர் ஆர்.செல்வராஜ் இப்படத்திற்கு தனது மகன் தினேஷுடன் இணைந்து கதை அமைத்துள்ளார்.
இன்றைய இளைஞர்கள் என்னதான் படித்திருந்தாலும் பணத் தேவையின் காரணமாய் பலவித குற்றங்களை செய்யவும் தயங்குவதில்லை. அந்த பணம் என்னும் மர்ம தேவதையை வேண்டி பலரும் தங்களது வாழ்க்கையைத் தொலைத்துவிடுகிறார்கள். அப்படி தொலைத்துவிட்ட ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கைக் கதைதான் இந்தப் படம்.
ஹீரோ கார்த்திகேயன் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரின் மகன். ‘தத்தி’ என்று சொல்வதற்கு மிகப் பொருத்தமானவர். இன்ஸ்பெக்டரின் மகன் என்றாலும் வெளியுலகமே தெரியாமல் வளர்ந்துவிட்டவர்.
அவரது அப்பா கை சுத்தமானவர். வாங்குகின்ற சம்பளத்திற்கு உண்மையாய் வேலை செய்ய வேண்டும் என்ற கொள்கையுடையவர். ஹீரோவின் அண்ணன் திடீரென்று இறந்து போகிறார். அவரது இறப்புடன்தான் படமே துவங்குகிறது.
அண்ணன் நண்பர்களை அன்றைக்குத்தான் சந்திக்கிறார் கார்த்திகேயன். அவர்களில் ஒருவரான ஷரியாதான் அந்தக் குழுவுக்கு தலைவர் போல.. சின்ன சின்னத் திருட்டுக்களில் ஈடுபட்டு பொழைப்பை ஓட்டும் கும்பல் அது. அவர்களிடத்தில் தெரியாமல் போய் சேர்கிறார் கார்த்திகேயன். அது அவருக்கு ஒரு திரில்லிங்கான அனுபவமாக இருந்தாலும், போதை உலகத்தை போல அவரை உள்ளுக்குள் இழுத்துவிடுகிறது.
“எதுக்கு சின்னச் சின்னதாக அடிச்சிக்கிட்டு..? ஒரு பெரிய தொகையை அடிச்சிட்டு லைப்ல செட்டிலாகணும்…” என்று நினைத்து ஒரு பிளான் செய்கிறார்கள். வங்கியில் இருந்து பணத்துடன் வரும் ஒருவரை வழிமறித்து அடித்துப் போட்டுவிட்டு அந்தப் பையை எடுத்துச் சென்று பின்பு தங்களுக்குள் பாகம் பிரித்துக் கொள்வதாக திட்டம்.
அனைத்தையும் கச்சிதமாகத்தான் செய்கிறார்கள். ஆனால் பணத்தை மட்டும் தவறான ஆளிடம் கொடுத்துவிட்டார்கள். அது நம்ம ஹீரோவின் கைக்கு வருகிறது. ஹீரோ முதல் அனுபவம் என்பதால் உடல் நடுக்கத்துடன் அந்தப் பையுடன் செல்கிறார். வழியில் அவரைப் பார்க்கும் ஒரு போலீஸ்காரர் அவரை விரட்ட.. வழியில் ஓரிடத்தில் பையை போட்டுவிட்டு தப்பிக்கப் பார்க்கிறார் ஹீரோ.
ஆனால் அவரை விரட்டிப் பிடித்த போலீஸ்காரர், அவரது அப்பாவுடன் வேலை பார்த்தவர் என்றும், அவருடைய அப்பாவை பார்க்க வந்ததாகவும் சொல்ல.. கார்த்தி பெருமூச்சுவிடுகிறார். மறுபடியும் அந்த பணப்பையைத் தேடி ஓடி வருகிறார். ஆனால் அது கிடைக்கவில்லை.
இந்த உண்மைக் கதையை அந்தக் கும்பல் ஏற்க மறுக்கிறது. பணத்தை மறைத்து வைத்து தங்களை ஏமாற்றுவதாகச் சொல்லி கார்த்திகேயனை அடித்து உதைக்கிறார்கள். ஒரு வாரத்திற்குள் 5 லட்சம் ரூபாயை கொண்டு வந்து கொடுக்கும்படி எச்சரிக்கிறார்கள்.
இதனால் பயந்து போன கார்த்திகேயன் அடுத்து என்ன செய்யப் போகிறார்..? 5 லட்சத்தை புரட்டினாரா..? திருட்டுக் கும்பல் அவரை சும்மா விட்டுவிட்டதா என்பதுதான் இடைவேளைக்கு பின்னான சுவையான திரைக்கதை.
ஹீரோ கார்த்திகேயனுக்கு இது முதல் படம். அவருக்கேற்ற கேரக்டர். ‘பேக்கு’, ‘தத்தி’, ‘அட்டு’ என்று அனைத்திற்கும் பொருத்தமாக இருக்கிறது அவரது கேரக்டர் ஸ்கெட்ச். கார்த்திகேயன் அநியாயத்திற்கு பயப்படுகிறார். அழுகிறார். அப்பாவிடம்கூட உண்மையைச் சொல்ல தயங்குகிறார். யார் ஏமாளி.. யார் ஏமாற்றுகிறார் என்பதைக்கூட கண்டறிய தெரியாதவராக இருக்கிறார். இப்படிப்பட்டவரை இந்த உலகம் மிக எளிதாக ஏமாற்றிவிடும் என்பதை இந்தக் கேரக்டர் மூலமாகவே உணர்த்தியிருக்கிறார் இயக்குநர்.
கார்த்திகேயனின் நடிப்பில் குறையில்லை. அந்தக் கேரக்டராகவே வாழ்ந்துவிட்டதால் சபாஷ் போடவும் வைக்கிறார். அதேபோல் ஷரியாவும் தனது தந்திர புத்தியை அவ்வப்போது காட்டி அந்தக் கும்பலை வழிநடத்தும் தலைவனாகவே நடித்திருக்கிறார். இதேபோல் இவன்ஸ்ரீ, ஜெகதீஸ் ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர்.
கார்த்திகேயனின் அப்பாவாக நடித்திருக்கும் அருள் ஜோதி அமைதியான நடிப்பை காட்டியிருக்கிறார். வேலையை ராஜினாமா செய்துவிட்டு மகனுக்கே தெரியாமல் செக்யூரிட்டி வேலை பார்ப்பதெல்லாம் கொஞ்சம் அதிகப்படியான கற்பனைத் திறன் என்றாலும், அது சொன்ன இடம் சோகத்தைப் பிழிந்திருப்பதால் இயக்குநர் தப்பித்துவிட்டார் எனலாம்.
ஜார்ஜ் விஜய் இன்னொரு பக்கம் கலக்கியிருக்கிறார். பைத்தியக்காரனாய் நடித்திருக்கும் இவர் இந்தக் கூட்டத்தைப் படுத்தும்பாடும், இவருடைய சோகக் கதையும் ஒன்றாகவே வருவதால் சிரிப்பதா, வருத்தப்படுவதா என்கிற குழப்பத்துடனேயே இவரை ரசிக்க வேண்டியிருக்கிறது.
பகத்சிங்கின் ஒளிப்பதிவும், சேவியர் திலக்கின் படத் தொகுப்பும் படத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப் பெரிய பலம். சண்டை காட்சிகளிலும், தியேட்டர் காட்சிகளிலும், கார்த்திகேயன் பணப் பையுடன் ஓடும் காட்சிகளிலும் கேமிராமேனின் பங்களிப்பு முக்கியமானது. அந்த ஓட்டத்துடனேயே கார்த்திக் காட்டும் நவரசத்தையும் பதிவு செய்திருப்பதால் ஒளிப்பதிவாளர் பெரும் பாராட்டுக்குரியவராகிறார்.
பின்னணி இசையை கொஞ்சம் அடக்கி வாசித்து.. மீட்ட வேண்டிய இடத்தில் மட்டுமே நீட்டி, மீட்டி இசைத்திருக்கும் நவின், பியன் சாரோ இருவருக்கும் நமது நன்றிகள்..!
இயக்குநர் தினேஷ் செல்வராஜ், இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநரிடம் சீடராக இருந்திருக்கிறார் என்பதை சில, பல காட்சிகளை வைத்திருப்பதன் மூலமாகவே உணர முடிகிறது. இதற்கு படத்தின் துவக்கக் காட்சியே ஒரு உதாரணம்.. தன்னுடைய அண்ணனின் பூதவுடல் அருகே கண் கலங்கிய நிலையில் ஹீரோ கார்த்திகேயன் அமர்ந்திருக்கும் அந்தக் காட்சியே, இந்தப் படம் வேறு மாதிரியான ஒரு படம் என்பதை உணர்த்திவிட்டது.
தொடர்ந்து பல காட்சிகளை ரசிப்பதுபோலவும், மிகைப்படுத்தல் இல்லாமல்.. ரசனையோடு படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதனாலேயே படத்தின் மேக்கிங்கில் வித்தியாசம் காட்டியிருக்கிறார்கள் என்று உறுதியாய் சொல்ல முடிகிறது.
செல்போன்கூட வாங்கிக் கொடுக்காத தந்தையை பார்த்து நிச்சயமாக மகனுக்கு கோபம் இருக்கத்தான் செய்யும். அதே செல்போன் தனக்கு பைசா செலவில்லாமல் கிடைத்தவுடன் கொடுத்தவர்கள் மனதில் இடம் பிடிப்பதும் வாடிக்கைதான். அதைத்தான் ஷரியா அண்ட் டீம் கச்சிதமாக செய்கிறது. அவர்களை அறிமுகப்படுத்திய அடுத்த நிமிடமே அவர்களது உண்மையான தொழில் என்ன என்பதைக் காட்டுவதை போல காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குநர்.
நிரப்பப்படாத செக்கை கொடுத்துவிட்டு போயிருக்கும் இந்தியாவின் பெரும் தொழிலதிபர் பற்றிய கதை திரைக்கதையில் புதிய டிவிஸ்ட்டை ஏற்படுத்துகிறது. சுவாரஸ்யமானது.
5 கோடி ரூபாய் செக்கை பணமாக பெறுவதற்காக சினிமா எடுப்பதுபோல போக்குக் காட்டி அதற்குத் துணையாக ஜார்ஜ் விஜய்யைத் தூக்கி வந்து டிரெயினிங் கொடுத்து ஜார்ஜ் விஜய் கொடுக்கும் டார்ச்சரையும் பொறுத்துக் கொண்டு கிளைமாக்ஸ்வரைக்கும் கொண்டு போய் கடைசியில் சொதப்பலானாலும் அதனை சுவாரஸ்யமான, சுவையான, திரில்லிங்கான திரைக்கதையாக அமைத்திருக்கிறார் இயக்குநர்.
என்னதான் பூனையாக இருந்தால்கூட அதனை ரொம்பவும் சீண்டினால் அது தன்னால் முடிந்த அளவுக்கான எதிர்ப்பைக் காட்டத்தான் செய்யும். அதைத்தான் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் ஹீரோ கார்த்தி செய்திருக்கிறார். கார்த்தி செய்யும் அந்த டிவிஸ்ட் டிராமா சுவையானதுதான் என்றாலும் பெரும் ஓட்டையிருக்கிறதே இயக்குநரே..?!
வங்கியில் பணத்தை டிரான்ஸ்பர் செய்யக்கூட இப்போது பான் கார்டும், ஆதார் கார்டும் அவசியம். இரண்டுமே வாங்கிவிட்டாலும் பணத்தை வாங்கிக் கொண்டு வருமான வரித்துறைக்குக் கணக்குக் காட்டாமல் தப்பிக்கவே முடியாதே..?! என்னதான் வங்கி மேனேஜர் கொடுப்பதாக இருந்தால்கூட சான்றுகள் இல்லாமல் எப்படி கேஷாக தருவார்கள்..?
அந்தக் கும்பல் போலீஸில் சிக்கிவிட்டது.. இப்போது தானாகவே உண்மை வெளிவந்திருக்குமே..? கார்த்தி சுயநினைவில்லாமல் இருப்பதாக நடித்தாலும் இனிமேல் எத்தனை நாளைக்கு நடிக்க முடியும்..? மருத்துவர்களை எத்தனை காலம்தான் ஏமாற்ற முடியும் என்பது போன்ற பல புத்திசாலி கேள்விகள் நமக்குள் எழுந்தாலும்..
இத்தனை தூரம் சிந்தித்து திட்டம் தீட்டி இந்தக் கும்பலை ஒழித்துக் கட்டிய ஹீரோ கார்த்திகேயன், இதற்கும் ஏதாவது சிந்தித்து ஐடியா வைத்திருக்க மாட்டாரா என்கிற நப்பாசையோடு இந்தப் படத்தை பாராட்டுவோம்..!
ஒரு செமத்தியான திரில்லரை பார்க்க விரும்புவர்கள் அவசியம் இந்தப் படத்தைப் பார்க்கவும்..!
|
Tweet |
0 comments:
Post a Comment