22-04-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இந்தப் படத்தை லீஃப் புரொடக்ஷன்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. இயக்குநர் பினிஷ் ராஜ் இயக்கியுள்ளார்.
இதில் ஸ்வாதி நாராயணன் நாயகியாக நடித்துள்ளார். எதிர் நாயகனாக சுஜீத் ஸ்டெபானோஸ் நடித்துள்ளார். கன்னட நடிகர் கிங் மோகன். மலையாள நடிகை ஸ்ரீதேவி, ஷைன் குருக்கள், விஜு பிரகாஷ், கனகலதா, சோனியா, அப்துல் ஹக்கீம். காவ்யா ஆகியோரும் நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு – சந்தோஷ் அஞ்சல், இசை – விஷ்ணு வி.திவாகரன், வசனம் – ஆர்.வேலுமணி, கலை – ஜைபின் ஜெஸ்மஸ், படத் தொகுப்பு – டிஜோ ஜோசப், நிர்வாகத் தயாரிப்பு – ஷோபன் குமார், தயாரிப்பு மேற்பார்வை – உன்னி கிருஷ்ணன். தயாரிப்பு லீஃப் புரொடக்ஷன்ஸ் இண்டர் நேஷனல்.
நம் நாட்டில் எல்லாப் போட்டிகளிலும் ஆண்கள் சாதாரண ஓட்டமே ஓடுகிறார்கள். ஆனால் பெண்கள் பல தடைகளைத் தாண்டித்தான் ஒட வேண்டியிருக்கிறது. ஒரு துறை என்றில்லை… பல துறைகளிலும் பெண்கள் பல்வேறு தடைகளை, இடையூறுகளை, இடர்ப்பாடுகளைத் தாண்டித்தான் மேலே வர வேண்டியிருக்கிறது.
அதேசமயம் சமீப காலங்களில் பள்ளித் தேர்வுகளில் பெண்களே எப்போதும் அதிக மதிப்பெண்களை பெறுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் அதைச் சாதிக்க அவர்கள் படும்பாடு, சந்திக்கும் வலிகள் யாருக்கும் தெரிவதில்லை.
அப்படி ஒரு பெண் கல்வியில் சாதிக்கத் துடித்து அதற்காக தனக்கு விதிக்கப்பட்ட தடைகளைத் தாண்டி, எவ்வளவு போராட்டங்களைச் சந்தித்து ஜெயிக்கிறாள் என்பதைச் சொல்லும் படம்தான் இந்த ‘இலை’ திரைப்படம்.
தமிழக – கேரள எல்லையில் இருக்கும் திருநெல்லி என்னும் கிராமம்தான் படத்தின் கதைக் களம். ஊர் முழுவதும் விவசாயம்தான். பெண்கள் அதிகமாக படித்ததில்லை. படிக்க வைக்கப்பட்டதுமில்லை.
ஹீரோயினான ‘இலை’ என்னும் ஸ்வாதி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவரது அப்பாவான ‘கிங்’ மோகன், தனது மகள் ‘இலை’ படித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் ‘இலை’யின் அம்மா இதை எதிர்க்கிறார். சீக்கிரமாக ‘இலை’யை தனது தம்பிக்கு திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்.
‘இலை’க்கு பின்பு எட்டு வயதில் ஒரு பையனும், கைக்குழந்தையும் இருப்பதால் வீட்டு வேலைகளைக் கவனிப்பதில் மிகவும் சிரமப்படுகிறார் ‘இலை’யின் தாய். இந்தச் சூழலில் அக்கம் பக்கத்தினர், சொந்த அம்மா, மாமா என்று பலரது எதிர்ப்புகளையும் மீறி படித்து வருகிறார் ‘இலை’.
இந்த நிலையில் ஊர்ப் பண்ணையாரின் மகளும், ‘இலை’யும் ஒரே வகுப்பில்தான் படித்து வருகிறார்கள். பண்ணையாரின் மகளுக்கு படிப்பு ஏறவில்லை. இதனால் ‘இலை’ மீது வன்முத்துடன் இருக்கிறாள் பண்ணையாரின் மகள். தனது மகளின் கோபத்தை அறிந்த பண்ணையார், ‘இலை’யை பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவிடாமல் தடுக்க ஒரு திட்டம் தீட்டுகிறார்.
இதன்படி ஒரு விடியற்காலை பொழுதில் வயல்காட்டிற்கு தண்ணீர் பாய்ச்ச செல்லும் ‘இலை’யின் அப்பாவை மனநோயாளியான தனது தம்பியை வைத்து கடுமையாகத் தாக்கி அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கிறார் பண்ணையார். இதனால் கடைசி பரீட்சையான சமூக அறிவியல் தேர்வுக்கு எழுத செல்ல முடியாத நிலைமை ‘இலை’க்கு ஏற்படுகிறது.
ஒரு பக்கம் பால் கறந்து கடைக்கு கொண்டு போய் கொடுக்க வேண்டும். கைக்குழந்தையை கவனிக்க வேண்டும். தம்பிக்கு சாப்பாடு சமைத்துக் கொடுக்க வேண்டும்.. கோழிகளுக்கு தீவனம் கொடுக்க வேண்டும். அவைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்.. இப்படி ஒரு கிராமத்து வீட்டில் என்னென்ன வேலைகள் இருக்குமோ அது அத்தனையையும் இப்போது ‘இலை’ செய்தாக வேண்டிய கட்டாயம்..!
படிப்பா..? வீடா..? என்கிற பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறாள் ‘இலை’. கடைசியில் என்ன ஆகிறது என்பதுதான் படம்.
‘இலை’யாக நடித்திருக்கும் ஸ்வாதிதான் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கிறார். நிஜத்தில் கல்லூரி படிப்பை முடித்து ஆயுர்வேத மருத்துவராக இருக்கிறார். ஆனால் பத்தாம் வகுப்பு மாணவிக்கான கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். கேரளத்தின் அழகு முகத்திலும், நடிப்பு அனைத்து அவயங்களிலும் தென்படுகிறது.
கடைசி பரீட்சை நாளன்று அவர் படும்பாடுதான் மொத்தப் படமே..! அந்த நாளில் அடுத்தடுத்து வரும் சோதனைகளைத் தாண்டிக் கொண்டு அவர் ஓடும் ஓட்டமும், நடிப்பும் ‘பாவம்டா சாமி’ என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
‘இப்படியொரு பொண்ணுக்கு ஏண்டா இப்படியொரு சோதனை’ என்று கடவுளை நிந்திக்க வைத்திருக்கிறது இடைவேளைக்கு பின்னான காட்சிகள் அனைத்தும்..! அப்படியொரு நடிப்பை காட்டியிருக்கிறார் ஸ்வாதி. குச்சுப்புடி டான்ஸரும்கூட என்பதால் நடிப்பு சொல்லித் தர தேவையில்லை.
வெற்று காலுடன் வயக்காடு, மேடு, பள்ளம், காடு, பாறை என்று அனைத்து இடங்களையும் ரவுண்ட்டித்தது போல அவர் ஓடும் ஓட்டமும், படும்பாடும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திழுத்திருக்கிறது.
இவருக்கு பின்பு ஸ்கோர் செய்திருப்பவர் இவருடைய அம்மாவாக நடித்திருப்பவர்தான். வீட்டில் தனக்கிருக்கும் வேலைகளுக்காகவே மகளின் படிப்பை பாதியில் நிறுத்த எண்ணும் அவரது நோக்கத்தை இன்னொரு பக்கம் பார்த்தால் சரியென்றுதான் சொல்லத் தோன்றும். பெரிய மகள் பத்தாம் வகுப்பு படிக்க.. கைக்குழந்தையுடன் அவர் படும் அவஸ்தைக்கு ஸ்வாதியின் அப்பாவும் ஒரு காரணம்தானே..? இந்த வகையில் பார்த்தால் படம் இரு தரப்பு வாதங்களையுமே எடுத்துரைக்கிறது.
ஸ்வாதி அன்றைய நாளின் பரபரப்பு அலைச்சல்களுக்கிடையே “ஐயோ.. இத்தனை வேலையா..? இத்தனை நாளா அம்மா எப்படி ஒத்தை ஆளா இதைச் செஞ்சாங்க…?” என்று அவரே தனக்குத்தானே கேட்டுக் கொள்ளும் அந்த ஒரு வசனமும் படத்தில் மிக, மிக முக்கியமானது.
ஸ்வாதியின் தம்பியாக நடித்த பையன், அப்பாவாக நடித்தவர்.. தாய் மாமனாக நடித்த சுஜீத், பழங்காலத்து பண்ணையாரை ஞாபகப்படுத்திய நடிகர்.. இவர்களுடன் நடிப்பில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த மலையாள நடிகையான கனகதாராவும் தனது சிறப்பான நடிப்பைக் காட்டியிருக்கிறார்.
பத்தாம் வகுப்பு படிக்கும் வயதில் இருக்கும் நாயகியான ‘இலை’ என்னும் ஸ்வாதிக்கு அந்த வயதுக்கேற்ற அறிவும், பக்குவம் மட்டுமே இருப்பதால், அவர் செய்ததெல்லாம் சரியே என்றுதான் சொல்லத் தோன்றுகிறது..!
ஸ்வாதியின் வீட்டில் நடக்கும் அந்த அமங்கலம் எதிர்பாராதது.. நாம் ஒன்றை எதிர்பார்க்க அங்கே வேறொன்றை திரைக்கதையாக்கியிருக்கிறார்கள். ஆனால் நாட்டு குண்டு சின்னப் பெண்ணின் கையில் கிடைப்பதும்.. பட்டப் பகலில் சிம்னி விளக்கு எரிவது என்பதெல்லாம் நம்மை ஏமாற்றும் திரைக்கதை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
மலையும், மலை சார்ந்த பகுதியும்தான் கதைக் களன் என்பதால் ஒளிப்பதிவாளருக்கு வேலை மிக எளிதாகிவிட்டது. ஷாட் பை ஷாட் கண்ணுக்கு குளிர்ச்சியான காட்சிகளையே படம் பிடித்திருக்கிறார். பாடல் காட்சிகள் இன்னும் கொஞ்சம் கூடுதல் அக்கறையுடன் எடுக்கப்பட்டிருக்கிறது. இதற்கும் ஒரு பாராட்டுக்கள்..!
பாடல்கள் கேட்கும் ரகம். அதே சமயம் பின்னணி இசையில் கொஞ்சம் அதிகப்படியானதைக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர். ஒலியைக் குறைத்திருக்கலாம்.
இடைவேளைக்கு பின்பு கைக்குழந்தையை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு ஸ்வாதி ஊருக்குள் ஓடி, ஓடி வரும் காட்சிகளில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம். இந்தக் காட்சிகளில் நிறையவே எடிட் செய்து அதற்குப் பதிலாக கூடுதல் காட்சிகளை கிரியேட் செய்து வைத்திருந்தால் படத்தின் கதைக்கு இன்னமும் கூடுதல் வலு சேர்த்திருக்கும். அந்தக் காட்சிகள் ஓரளவுக்கு மேல் திகட்டிவிட்டன..!
கணவரையும் இழந்துவிட்ட நிலையில் தனது மகளையாவது படிக்க வைத்து கணவரின் விருப்பதை நிறைவேற்ற அந்தத் தாய் எடுக்கும் முடிவுதான் படத்தின் ஹைலைட். இதுதான் படம் சொல்லும் நீதி..!
எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய… இன்றைய இந்தியச் சமூகத்திற்கு அத்தியாவசியமான கதையாக இந்தப் படத்தை எடுத்திருப்பதால், சினிமா ரசிகர்கள், விரும்பிகள் அனைவரும் இந்தப் படத்தை அவசியம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்..!
|
Tweet |
0 comments:
Post a Comment