8 தோட்டாக்கள் - சினிமா விமர்சனம்

08-04-2017

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம்.வெள்ளைப்பாண்டியன்  மற்றும் ‘பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்’  நிறுவனத்தின்  ஐ.பி.கார்த்திகேயன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.   
இந்தப் படத்தில் புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி (மலையாள திரைப்படம் ‘மஹேஷிந்தெ பிரதிகாரம்’ புகழ்) முன்னணி கதாப்பாத்திரங்களிலும், நடிகர்கள் நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, மைம் கோபி மற்றும் மீரா மிதுன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர்  கே.எஸ்.சுந்தரமூர்த்தி(‘அவம்’, ‘கிரகணம்’), கலை இயக்குநர் சதீஸ்குமார் (‘ஜோக்கர்’, வி.ஐ.பி.-2), படத் தொகுப்பு – நாகூரான், பாடல்கள் – குட்டி ரேவதி, ஜி.கே.பி., ஸ்ரீகணேஷ், நடனம் – தினேஷ், பிருந்தா, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், தயாரிப்பு நிர்வாகம் – எஸ்.நாகராஜன், பி.ஆர்.ஓ. – சுரேஷ் சந்திரா, ஒலிக் கலவை – ஐயப்பன், சிறப்பு ஒலி சப்தம் – சேது என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். மிஷ்கினிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய  ஸ்ரீகணேஷ் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். இது இவருக்கு முதல் படமாகும்.
இப்போதைய புதிய இயக்குநர்களில் சிலர் புதிய பார்வையுடன், தெரிந்த கதையை, தெரியாத திரைக்கதையுடன், அசத்தலான இயக்கத்துடன் கொடுக்கும் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள். அந்தத் திறனுடன் உள்ளே வந்திருக்கிறார் புதுமுக இயக்குநர் ஸ்ரீகணேஷ்.

சென்னை, மாம்பலம் போலீஸ் ஸ்டேஷனில் சப்-இன்ஸ்பெக்டராக பணிக்கு சேர்ந்திருக்கிறார் ஹீரோ வெற்றி. சாந்த சொரூபியாக இருக்கிறார். அமைதியாக தன் வேலையைப் பார்க்கும் உத்தமனாக இருக்கிறார்.
சிறு வயதிலேயே செய்யாத ஒரு குற்றத்திற்காக சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் இருந்த காரணத்தினால் மற்றவர்களிடம் பேசுகின்ற முறையில் பெரும் குறைபாடுடன் இருக்கிறார் வெற்றி. சிறிது தயக்கத்துடன்தான் அவரால் மற்றவர்களிடம் பேச முடிகிறது. போலீஸ் என்றாலே பயந்து சாகும் நிலையில் இருந்தவர், சந்தர்ப்ப சூழலால் போலீஸிலேயே வேலை கிடைத்து வந்திருக்கிறார்.
மாமூல் பணத்தைத் தொடவே மாட்டேன் என்கிற கொள்கையிலும் இருப்பதால், அந்த ஸ்டேஷனில் இருக்கும் மற்ற காவலர்களுக்கு அவர் மேல் நிறைய கோபம். இன்ஸ்பெக்டருக்கும் அதே கோபம்தான்..!
தாசில்தார் அலுவலக வாசலில் டைப்ரைட்டர் வைத்து மனு எழுதிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் சிவாஜிக்கும், ஒரு பணக்காரருக்கும் இடையில் சாதாரணமாக ஆரம்பித்த சண்டை, போலீஸ் ஸ்டேஷன்வரைக்கும் வருகிறது.
அந்தப் பணக்காரருக்கு சப்போர்ட் செய்து பேசும் இன்ஸ்பெக்டர் மைம் கோபி, சிவாஜியை மிரட்டி அனுப்பி வைக்கிறார். ஆனால் இதனை அறியும் தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரான ஹீரோயின் அபர்ணா பாலமுரளி இதனை தனது தொலைக்காட்சியில் ஒரு செய்தியாகவே போட்டுவிடுகிறார்.
இதனால் கடும் கோபமான இன்ஸ்பெக்டர் மைம் கோபி, தாசில்தார் அலுவலக வாசலுக்கே வந்து சிவாஜியை அடித்து உதைத்து டைப்ரட்டரை உடைத்துப் போட்டுவிட்டு போகிறார். ஆனால் இதையறியும் ஹீரோ வெற்றி அபர்ணாவுடன் இணைந்து புது டைப்ரைட்டரை வாங்கிக் கொடுக்கிறார்கள்.
இதுவும் செய்தியாகி பரவ.. வெற்றி மீது கோபமாகிறார் மைம் கோபி. இந்த நேரத்தில் ஒரு மிகப் பெரிய கிரிமினல் குற்றவாளியை பாலோ செய்யும் வேலையை இன்னொரு மூத்த சப்-இன்ஸ்பெக்டரான டி.சிவா செய்து வருகிறார். அந்த வேலையை வெற்றியின் தலையில் சுமத்துகிறார் மைம் கோபி. 8 குண்டுகளுடன் துப்பாக்கியும் அவரிடம் தரப்படுகிறது.
குற்றவாளியை பேருந்தில் பாலோ செய்து போகும்போது அந்தத் துப்பாக்கியை பிக்பாக்கெட் அடிக்கும் ஒரு பையன் எடுத்துக் கொண்டு ஓடுகிறான். அவனை பிடிக்க முயல்கிறார் வெற்றி. ஆனால் முடியவில்லை. இதனயைறிந்த மைம் கோபி வெற்றியின் வேலை காலியாகப் போகிறது என்று எச்சரிக்கிறார். ஆனாலும், சிவாவின் சிபாரிசால் ஒரு நாள் அவகாசத்தில் அந்தத் துப்பாக்கியை மீட்டு வரும்படி சொல்லியனுப்புகிறார் மைம் கோபி.
அதற்குள்ளாக ஒரு வங்கியில் துப்பாக்கி முனையில் எம்.எஸ்.பாஸ்கர் தலைமையில் மூன்று கொள்ளையர்கள் ஒரு கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறார்கள். அந்தச் சம்பவத்தில் ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக கொல்லப்படுகிறாள். போலீஸ் திகைத்து தேட ஆரம்பிக்கிறது. இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் பாண்டியனான நாசர் விசாரிக்க வருகிறார்.
வழக்கை விசாரிக்கத் துவங்க அந்த வங்கிக் கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி வெற்றி தொலைத்த துப்பாக்கி என்பது தெரிய வருகிறது. இப்போது வெற்றி தன் துப்பாக்கியை தொலைத்தது தெரிய வர டிபார்ட்மெண்ட்டில் அவரை சஸ்பெண்ட் செய்கிறார்கள். இருந்தாலும் அவரையும் விசாரணைக் குழுவில் சேர்த்துக் கொள்கிறார் நாசர்.
இடையில் வெற்றிக்கு அபர்ணாவுடன் ஆரம்பித்த பழக்கம் காதலாகி இருவரும் காதலிக்கவும் துவங்குகிறார்கள்.
இன்னொரு பக்கம் நகரில் தொடர்ந்து சில கொலைகள் இதே துப்பாக்கியினால் நடக்கத் துவங்க.. போலீஸ் குழம்புகிறது.. குற்றவாளியை நெருங்க முடியாமல் தவிக்கிறது.. அதே சமயம் மீடியாக்களும் பரபரப்புச் செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு சென்னையை பதைபதைக்க வைக்க.. எப்படியாவது குற்றவாளியை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார் நாசர்.
இறுதியில் என்னவாகிறது என்பதுதான் இந்த திரில்லிங்கான படத்தின் சுவையான திரைக்கதை.
ஹீரோ வெற்றிக்கு இது முதல் படம் என்பதால் அதிகம் அவரை டிஸ்டர்ப் செய்யாமல் பாராட்டுவோம். இந்தப் படத்தில் அவரது கேரக்டர் ஸ்கெட்ச் ‘சாந்தம்’ என்பதால் வசனத்தைக்கூட மிக அமைதியாக, மெதுவாக, பொறுமையாக உச்சரிக்கும் பாணியுடன் நடித்திருக்கிறார்.
அடுத்தடுத்த படங்களில் வேறு, வேறு கேரக்டர் ஸ்கெட்ச்சுகளில் வித்தியாசம் காட்டினால்தான் தமிழ்ச் சினிமாவுலகத்தில் இருக்க முடியும் என்பதை அவருக்குச் சொல்லிக் கொள்கிறோம்.
‘மகேஷிந்த பிரதிகாரம்’ என்கிற மலையாளப் படத்தின் மூலமாக அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவர்ந்திழுத்த மலையாள மங்கையான அபர்ணாவுக்கும் அதிகமான குளோஸப் காட்சிகளே வைத்திருக்கிறார் இயக்குநர். அழுத்தமான நடிப்பைக் கொட்டியிருக்கிறார். “என்கிட்ட ஒரு ஸ்கூப் நியூஸ் இருக்கு ஸார்…” என்று அவர் சொல்லும் அந்த அழுத்தமான காட்சியொன்றே இவருக்கான பாராட்டை பெற்றுத் தருகிறது.
நிச்சயமாக இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான தேசிய விருதும், மாநில விருதும் எம்.எஸ்.பாஸ்கருக்குத்தான் கிடைக்க வேண்டும். அதகளம் செய்திருக்கிறார் மனிதர்.
ஹோட்டலில் அமர்ந்து வெற்றியிடம் தனது சோகமான வாழ்க்கைகைக் கதையைச் சொல்லும் காட்சியிலும், கிளைமாக்ஸில் தனது இழந்துவிட்ட வாழ்க்கையை திரும்பப் பெற முயலாமல் விடுதலை பெற நினைத்து பேசுகின்ற காட்சிகளிலும் யதார்த்தமாக நடித்திருக்கிறார். இந்தப் படத்திலேயே மிகச் சிறந்த கதாபாத்திரத் தேர்வு எம்.எஸ்.பாஸ்கர்தான் என்றால் அது மிகையில்லை. வெல்டன் ஸார்..
இன்னொருவர் நாசர். இன்ஸ்பெக்டர் பாண்டியனாக உள்ளே வந்து விசாரிக்கத் துவங்கி.. இடையில் வெற்றி மீது பரிதாபப்பட்டு அவரையும் டீமில் சேர்த்துக் கொண்டு, அதனாலேயே தனது உயிரை காப்பாற்றிக் கொண்டு, மேலதிகாரிகளுக்காக மீண்டும் வெற்றியை வெளியேற்றினாலும் டிபார்ட்மெண்ட் பாசத்தினால் கிளைமாக்ஸில் பரிதாபமாக உயிரைவிடும் அந்த சோகத்தை நிஜமாகவே ரசிகனின் மனதில் விழுக வைத்திருக்கிறார் நாசர்.
சின்னச் சின்ன கேரக்டர்கள்தான் என்றாலும் அந்த சின்ன தாதாவாக நடித்திருக்கும் தேனி முருகன் அதிகம் கவர்ந்திழுக்கிறார். அவருடைய ஸ்டைலான பேச்சும், அப்பாவியான பேச்சுமே சிரிப்பை வரவழைக்கிறது. தனது வீட்டில் எப்படி நெக்லஸ் இருந்தது என்று அவர் யோசிக்கும் நேரத்தில் உண்மையை உடனுக்குடன் புரிந்து கொண்டு, நாசர் சிரிக்கும் சிரிப்பில் அரங்கமே அதிர்கிறது..!
அந்தச் சின்ன எபிஸோட் முற்றிலும் உண்மையே. இன்றைக்கு பல ரவுடிகள் வீணாக கொலையாவதற்குக் காரணம் இந்தக் கள்ளக் காதல்தான்.. இதையும் மிக அழகாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர்.
பாஸ்கர், ஜெய், கதிர், மஹா கேரக்டர்களில் நடித்தவர்கள் தங்களது கதாபாத்திரங்களை நன்கு உணர்ந்து நடித்திருக்கிறார்கள். வெளிநாடு செல்ல பணம் வேண்டுமே என்றெண்ணி கொள்ளையடிக்கும் கூட்டணியில் சேர்ந்து கடைசியாக எதுவும் கிடைக்காமல் போக வாய்ப்பிருப்பதையெண்ணி அப்ரூவராகும் அந்தக் கேரக்டரில் நடித்தவர் தனது அப்பாவித்தனத்தை அற்புதமாகக் காட்டியிருக்கிறார்.
தினேஷ் கே.பாபுவின் ஒளிப்பதிவும், இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையும்தான் படத்திற்குக் கிடைத்த இன்னொரு பலம். பாடல் காட்சிகளே இந்தப் படத்திற்கு தேவையில்லை. இடைவேளைக்கு பின்பு வரும் பாடல் காட்சி படத்தின் தன்மையைக் குறைக்கிறது. அதனை நீக்கினால் நல்லது.
பின்னணி இசை பல இடங்களில் மெளனித்து.. அடுத்துப் பயணிக்கும்போது மெதுவாக துவங்கி, காட்சிகளுக்கு இடையூறில்லாமல் மெதுவாகவே ஓடுகிறது.. இந்த அழகான பின்னணி இசைக்காகவும் இசையமைப்பாளருக்கு நமது பாராட்டுக்கள்.
கிளைமாக்ஸ் காட்சியில் படத்தின் படத் தொகுப்பாளர் நாகூரானின் பங்களிப்புதான் அதிகம். கச்சிதமாக நறுக்கப்பட்ட காட்சிகளின் மூலம் நடந்தது என்ன என்பதை சொல்கிறார்கள். நன்று..! ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சியும், வங்கிக் கொள்ளை காட்சிகளும் சண்டை பயிற்சியாளர் திலீப் சுப்பராயனால் கச்சிதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
‘துருவங்கள் 16’, ‘அதே கண்கள்’, ‘மாநகரம்’ படங்களுக்கு பிறகு இயக்குதலுக்கு பெயர் சொல்லக் கூடிய படமாக வந்திருக்கிறது இத்திரைப்படம். இயக்குநராகத் துடித்துக் கொண்டிருக்கும் துணை, உதவி, இணை இயக்குநர்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம் இது.
ஒரு கிரைம்-திரில்லிங் படத்திற்குத் தேவையான கிரைமிற்கான அடிப்படை காரணம், தூண்டும் சக்தி எது.. என்ற இரண்டு விஷயங்களுமே மக்கள் மனதில் அமரக்கூடிய வகையிலான காரணங்களாக இருக்க வேண்டும். அது இங்கே இருக்கிறது.
தொடர்ச்சியாக திரை விலகுதல் போல அடுத்தடுத்த காட்சிகளில் இந்த குற்றம் நடப்பதற்கான காரணங்கள் விலகும்போது, குற்றவாளிகள் மீது நிச்சயமாக கோபம் எழவில்லை. இதற்கு மாறாக பரிதாபம்தான் ஏற்படுகிறது. இதைத்தான் இயக்குநரும் எதிர்பார்த்திருக்கிறார்.
உதாரணமாக எம்.எஸ்.பாஸ்கரின் கேரக்டர் ஸ்கெட்ச்சில் அவரைப் பற்றிய சின்னச் சின்ன அடையாளங்களெல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக விலகிக் கொண்டே வருவதெல்லாம் படத்திற்கு மிகப் பெரிய சுவாரஸ்யம். கிளைமாக்ஸில் அவருக்கு இருக்கும் நோய் பற்றி ஹீரோ அறிந்து கொள்ளும் இடமும் புதிதுதான். அங்கேயே அவர் செய்யும் குற்றத்திற்கான தண்டனை பெருமளவில் குறைகிறது. இப்படி கதையாக்கத்திலும் குறைவில்லாமல் செய்திருக்கிறார் இயக்குநர்.
இயக்கத்தில் இந்த புதிய இயக்குநரும் ஒரு புதிய பாணியைக் கையாண்டிருக்கிறார். படம் முழுவதிலுமே வேறு ஒரு புதிய வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்கிற உணர்வையே தருகிறது.
வங்கிக் கொள்ளை முடிந்து கொள்ளையர்கள் செல்லும்போது வழியில் ஒரு கடையில்கூட சிசிடிவி கேமிராவே இல்லையா..? அதேபோல் கிளைமாக்ஸ் கொள்ளையிலும்கூட எம்.எஸ்.பாஸ்கர் தப்பிக்கும் காட்சி, செல்போன் நம்பர்களை வைத்து டிரேஸ் செய்து பிடித்திருக்கலாமே என்று நம்மை யோசிக்க வைக்கும் அளவுக்கான சில காட்சியமைப்புகள் இருப்பதையும் நம்மால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
என்ன இருந்தாலும்.. கதாபாத்திரங்களின் பேச்சு ஸ்டைல், நறுக்கென்ற வசனம், வித்தியாசமான திரைக்கதை அமைப்பு.. ஷாட்டுகள்.. எங்குமே தலைவலி வராத அளவுக்கு பார்த்துக் கொண்ட பின்னணி இசை.. கதாபாத்திரங்களின் மீதிருக்கும் கேரக்டர் ஸ்கெட்ச்.. முந்தைய காட்சியின் முடிவை அடுத்தக் காட்சியில் விளக்குவது என்று தொடர்ச்சியாக ஒருவித போஸ்ட் மாடர்னிஸம் டைப்பிலேயே படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீகணேஷ்.
இந்த வருடத்தின் அவசியம் பார்க்க வேண்டிய படங்களில் லிஸ்ட்டில், இந்தப் படமும் இடம் பிடித்திருக்கிறது.
அவசியம் பார்த்துவிடுங்கள் மக்களே..!

0 comments: