04-04-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். ஆரா சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் மகேஷ் கோவிந்தராஜ் படத்தை வெளியிட்டிருக்கிறார்.
இப்படத்தை இயக்குநர் சற்குணத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘சற்குணம் சினிமாஸ்’ முதல் பிரதி அடிப்படையில் தயாரிப்பாளர் நேமிசந்த் ஜபக் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளது.
நயன்தாரா கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன், சுலீல் குமார், ஷான், வெற்றி, பேபி யுக்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இசை – விவேக், மெரிவின், ஓளிப்பதிவு – தினேஷ் கிருஷ்ணன், படத் தொகுப்பு – கோபி கிருஷ்ணா, சண்டை பயிற்சி – திலீப் சுப்பராயன், பாடல்கள் – விக்னேஷ் சிவன், கு.கார்த்திக், கலை இயக்கம் – செங்கை ஏ.ராஜா, ஸ்டில்ஸ் – மூர்த்தி மெளலி, ஒப்பனை – கே.பி.சசிகுமார், பி.ஆர்.ஓ. – நிகில், உடைகள் – அனுவர்த்தன், நிர்வாகத் தயாரிப்பு – சவுந்தர் பைரவி, இணை தயாரிப்பு – ஏ.நந்தகுமார், கணேஷ், தயாரிப்பு – வி.ஹிதேஸ் ஜபக், எழுத்து, இயக்கம் – தாஸ் ராமசாமி.
பேய் இன்னொருவரின் உடலுக்கு தாவி தான் நினைத்தை செய்யும். அதே பேய் பொம்மையாகவும், பெண்ணாகவும், ஆணாகவும் பல படங்களில் பார்த்திருக்கலாம். காராக மாறியதை பார்த்திருக்கிறீர்களா..? அது இந்தப் படத்தில் சாத்தியமாகியிருக்கிறது.
வைரக்கண்ணு என்னும் தம்பி ராமையாவின் ஒரே மகள் பவளக்கொடி என்னும் நயன்தாரா. தனது மகளுக்கு இத்தனை வயதாகியும் திருமணமாகவில்லையே என்ற வருத்தம் தந்தைக்கு. இந்த வேண்டுதலுக்காக குலதெய்வம் கோவிலுக்கு போக முடிவெடுக்கிறார் தம்பி ராமையா.
இதற்காக கால்டாக்சி பிஸினஸ் செய்யும் தனது தங்கையிடம் சென்று ஒரு காரை கேட்கிறார். ஆனால் தங்கையும், தங்கை கணவரும் அவரை அவமானப்படுத்த அந்த இடத்தில் பொங்கியெழும் நயன்தாரா, தன்னுடைய தந்தைதான் அத்தையை கஷ்டப்பட்டு வளர்த்து, படிக்க வைத்து, ஆளாக்கி, கல்யாணம் செய்து வைத்து, இப்படி பெரிய பணக்காரியாக்கினார் என்றும், பணத்திமிரில் அவர்கள் பேசுவதாகவும் சாடுகிறார்.
கூடவே தானும் அவர்களை போல கால்டாக்சி பிஸினஸ் செய்யப் போவதாக சவால்விட்டுவிட்டு செல்கிறார். சொன்னதுபோலவே வீட்டில் சேமிப்பில் இருக்கும் அனைத்து பணத்தையும் எடுத்துக் கொண்டு செகண்ட் சேல்ஸ் கார் வாங்கச் செல்கிறார்.
பல நல்ல கார்கள் இருந்தும், ஆஸ்டின் என்னும் அந்த பழைய கார் நயன்தாராவை பிடித்திழுக்கிறது. காரணமே தெரியாமல் அதில் ஈர்க்கப்படும் நயன்தாரா அந்தக் காரை வாங்கிவிடுகிறார்.
இன்னொரு பக்கம் புதிதாக திருமணமான ஐ.டி. ஊழியரின் வீட்டுக்குள் நுழையும் 3 பேர் அந்த வீட்டில் இருந்த பெண்ணை படுகொலை செய்கிறார்கள். இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் ஹரீஷ் உத்தமன் விசாரிக்கிறார். சி.சி.டி.வி. கேமிரா இல்லாததாலும், ஒரு சின்ன க்ளூகூட கிடைக்காததாலும் ஏமாற்றத்தில் இருக்கிறார் ஹரீஷ் உத்தமன்.
ஒரேயொரு காரை வைத்துக் கொண்டு அப்பன், மகள் இருவரும் கால் டாக்சி பிஸினஸ் செய்கிறார்கள். ஒரு பார்ட்டி கொடைக்கானல் செல்ல வேண்டும் என்று இந்தக் காரை புக் செய்கிறார்கள். வாடகை ஓட்டுநரை நியமித்து அவரையும் உடன் அனுப்பி வைக்கிறார் தம்பி ராமையா.
ஆனால் செல்லும் வழியிலேயே அபார்ட்மெண்ட் கொலையாளிகளில் ஒருவன் அந்தப் பக்கமாக நடந்து செல்கிறான். அவனைப் பார்த்தவுடன் கார் டிரைவரின் கட்டுப்பாட்டில் இருந்து விலகி தாறுமாறாக செல்கிறது. அந்த ஆளை துரத்துகிறது. கடைசியில் ஓரிடத்தில் மோதி நின்றுவிடுகிறது. இத்தகவல் நயன்தாராவுக்குத் தெரிய வர.. நயன்தாரா விரைந்து வந்து காரை மீட்டுச் செல்கிறார்.
ஆனால் செல்லும் வழியிலேயே அதே ஆளை பார்த்தவுடன் நயன்தாராவின் டிரைவிங்கையும் மீறி அவனை கொல்கிறது கார். இது எப்படி நடந்தது.. என்பதே தெரியாமல் முழிக்கிறார் நயன்தாரா.
காருக்குள் ஏதோ பிரச்சினை இருப்பதை உணர்ந்த நயன்தாரா தன்னுடைய குல தெய்வம் கோவிலில் தன்னை எச்சரித்த பெண்ணை தேடி வந்து பார்க்கிறார். அவரோ அந்தக் காருக்குள் ஒரு நாய் பேய் ரூபத்தில் இருப்பதாகவும், அதற்கு நயன்தாரா மூலமாக ஒரு வேலை செய்ய வேண்டியிருப்பதால் அது நயன்தாராவை இழுத்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.
அந்தக் காரை முன்பு வைத்திருந்த்து யார் என்பதை விசாரித்து அவரை தேடிப் போய் பார்க்கிறார் நயன்தாரா. அவர் சொல்லும் விஷயங்கள் அனைத்தும் நயன்தாராவுக்கு திகைப்பாக இருக்க.. தன்னைப் பற்றிய ஒரு பெரிய உண்மையை அந்த நேரத்தில் தெரிந்து கொள்கிறார் நயன்தாரா. அதே சமயம் தனது காரை ஆட்டிப் படைக்கும் நாயின் பழி வாங்கும் செயலில் இருக்கும் நேர்மையையும் சரியானது என்றே நினைக்கிறார்.
நயன்தாராவை பெண் பார்க்க வந்து அவமானப்பட்டு போகும் இன்ஸ்பெக்டர் ஹரீஷ் உத்தமன் இந்த வழக்கை விசாரிக்கிறார். காரின் ரேடியேட்டர் மூடி கழன்று விழுந்திருந்ததால், அதை துப்பாக வைத்து கடைசியில் அந்தக் கார் நயன்தாராவின் ஆஸ்டின் கார்தான் என்பதை கண்டறிகிறார் இன்ஸ்பெக்டர் ஹரீஷ் உத்தமன்.
நயன்தாராவை ஸ்டேஷனுக்கு இழுத்து வந்து விசாரிக்கிறார். ஆனால் உயரதிகாரியின் தலையீட்டில் நயன்தாரா விடுவிக்கப்பட்டாலும் “இன்னும் 2 பேர் இருக்கிறார்கள். அவர்களையும் நான் கொலை செய்வேன்…” என்று ஹரீஷ் உத்தமனிடம் சவால்விட்டுவிட்டுச் செல்கிறார் நயன்தாரா.
சொன்னதை செய்தாரா இல்லையா என்பதுதான் இந்த ‘டோரா’ படத்தின் சுவாரஸ்யமான இரண்டாம் பகுதி.
நயன்தாராவைச் சுற்றியே கதை நகர்வதால் அவர் இல்லாத காட்சிகளே குறைவு. வயதானாலும் அவரது அழகு கூடிக் கொண்டேதான் இருக்கிறது. நடிப்பைப் பற்றி குறையே சொல்ல முடியாத அளவுக்கு இருக்கிறது நயன்ஸின் நடிப்பு.
அப்பாவிடம் கொஞ்சல்.. மிரட்டல்.. என்று முற்பாதியில் படத்தை காமெடியாக கொண்டு செல்ல பெரிதும் உதவியிருக்கிறார் நயன்தாரா. காரின் புதிய ஆவேசம் பற்றி புரியாமல் விழிப்பதும், பின்பு காரின் கதை அறிந்து தானும் அந்தக் கொலைச் சதிக்கு உடந்தையாக நினைப்பதும் சரியான திரைக்கதை.
சில, பல குளோஸப் காட்சிகளில் நயன்ஸின் அழகுக்கு ஈடு இணை தமிழ்ச் சினிமாவில் இப்போதைக்கு யாருமில்லை என்பதையே காட்டுகிறது. போலீஸ் ஸ்டேஷனில் சந்திரமுகி பாணியில் நொடிக்கு நொடி முகம் மாற்றி பேசிவிட்டு தனது நடிப்புத் திறனை காட்டியிருக்கிறார் நயன்ஸ்.
கிளைமாக்ஸில் தர்ம அடி வாங்கியும் அடி கொடுத்தும், கெத்து காண்பித்து தனது சூப்பர் ஸ்டாரினி பட்டத்தை தக்க வைத்துக் கொண்டுவிட்டார். இறுதியில் எல்லாம் முடிந்து அவர் நடந்து வரும் தோரணையே சூப்பர் ஸ்டாரினி என்பதை தெளிவாக காட்டுகிறது. வெல்டன் நயன்ஸ்..
அந்த நாய், சிறு பெண், தாத்தா சம்பந்தப்பட்ட கதை ஒரு எமோஷனல் டிராமா. அந்தக் கதையை படமாக்கியவிதம் மனதில் கொடூரத்தை விதைக்கிறது என்றாலும், அது கொலையாளிகளை கொலை செய்தாலும் பரவாயில்லைதான் என்பதைத்தான் ரசிகனுக்கு உணர்த்துவது போல இருக்கிறது.
தம்பி ராமையா வழக்கம்போல பல மவுத் டாக் வசனங்களையே பேசி சிரிக்க வைத்திருக்கிறார். நயன்ஸுக்கும், அவருக்குமான பாசப் பிணைப்பும், அன்பும், பண்பும் நெகிழ வைக்கிறது. தன் மனைவி தன்னைவிட்டு ஓடிப் போனாலும் மகளுக்காக கல்யாணமே செய்து கொள்ளாமல் கடைசிவரையிலும் மகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து ஆளாக்கியிருக்கும் பெருமிதத்தையும் சொல்லி கைதட்டல் வாங்குகிறார் தம்பி ராமையா.
ஹரீஷ் உத்தமனின் விசாரணை முறை.. எளிமையான அவரது நடிப்பு.. நயன்தாராவை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் கடைசிவரையிலும் போராடுவது என்று அவர் தனக்களிக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.
ஒரு கார்தான் கதைக்களன். ஸ்டார்ட் ஆகிவிட்டால் அது தானாகவே இயங்கத் தொடங்கும். ஒரு நாயின் ஆவிதான் அந்தக் காரை இயக்குகிறது என்பது மாதிரியான கேரக்டர் ஸ்கெட்ச்சில் பல விஷுவல் எபெக்ட்ஸ்களுக்கு நடுவில் ‘டோரா’ கார் அமைதியாகவே நடித்திருக்கிறது.
ஆக்சன் காட்சிகள் அனைத்துமே காரை மையப்படுத்தியே இருக்கிறது என்பதால் படமாக்கலில் ஒளிப்பதிவாளரின் பங்களிப்பும் பெரிய அளவுக்கு இருக்கிறது. இரவு நேர காட்சிகளே அதிகம் என்பதால் அதையும் கண்ணை உறுத்தாமல் மிக அழகாக படமாக்கியிருக்கிறார்கள்.
‘டோரா’ காரின் தீம் மியூஸிக் அழகு. இரண்டாம் பாதியில் வரும் குழந்தைக்கான பாடலும் அழகு. பின்னணி இசையில் அதகளம் செய்திருப்பதால் டென்ஷனை இவரே அதிகமாக ஏற்றியிருக்கிறார். இன்னொரு பாராட்டை பெறுபவர் கலை இயக்குநர். நயன்தாராவின் வீட்டை கலை ரசனையோடு வடிவமைத்திருக்கிறார். அதுவும் சேர்ந்தே அழகாக தெரிய.. பிரேமில் நயனுடன் போட்டி போட்டு அழகாக இருக்கிறது அந்த வீடு. வெல்டன்..
எவ்வளவுதான் பேய்க் கதை என்றாலும் இப்போதைய சாதாரணமான போலீஸ் விசாரணை, நடைமுறைகள் அனைத்தையும் இந்தப் படம் கண்டும் காணாமலும் போயிருப்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.
நட்ட நடுரோட்டில் இரவு நேரத்தில் கொலை நடக்க.. அந்த இடத்தில் தப்பிச் செல்லும் நயன்ஸின் காரை வழியில் இருக்கும் எந்த சிசிடிவி கேமிராவிலும் பதிவாகவில்லையா என்ன..?
கடைசி இரண்டு ஆட்களும் கொலை செய்யப்பட போகிறார்கள் என்பது இன்ஸ்பெக்டருக்கு தெரியும் என்றால் அவர் தீவிரமாக பாலோ செய்திருந்தாலே போதும். நயன்ஸை நகர விடாமல் செய்திருந்தாலே போதும்.. ஆனால் இது எதையும் செய்யாமல் நயன்ஸின் பின்னாலேயே போவதெல்லாம், இயக்குநரின் வசதிக்காக எழுதப்பட்ட திரைக்கதையாகவே தோன்றுகிறது.
எத்தனையோ பேய்ப் படங்களை பார்த்திருக்கிறோம். அப்போவெல்லாம் இதுபோல் லாஜிக் பார்த்தோமா..? இல்லையே..? அதேபோல் இப்பவும் நம்ம நயன்ஸுக்காக படத்தைப் பார்த்துவிட்டு போக வேண்டியதுதான்..!
டோரா – ஒரு முறை பார்க்கலாம்தான்..!
|
Tweet |
0 comments:
Post a Comment