13-04-2017
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் பி.செந்தில் முருகன் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.
இந்தப் படத்தில் விருதகிரி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகிகளாக ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் சம்பத் ராம், பாவா லட்சுமணன், காதல் சரவணன், வெண்ணிலா கபடி குழு ஜானகி, மதுபானக் கடை ரவி, நெல்லை சிவா, ஆர்.என்.ஆர்.மனோகர், சுதா, இளங்கோ, அபிஷேக், நிருபமா, டைரக்டர் நாராயணமூர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – சிவநேசன் / உமாசங்கர், இசை – ஸ்ரீராம், பாடல்கள் – இளைய கம்பன், படத் தொகுப்பு – வி.டி.விஜயன் – சுனில், கலை – நா.கருப்பையன், நடனம் – சதீஷ் சண்டை பயிற்சி – பயர் கார்த்திக், தயாரிப்பு மேற்பார்வை – கே.எஸ்.மயில்வாகணன். தயாரிப்பு நிர்வாகம் – முருகதாஸ், தயாரிப்பு – பி.செந்தில் முருகன். எழுத்து, இயக்கம் – ரத்தன் கணபதி.
சின்ன வயதில் இருந்தே தனது அத்தை மகளை மணக்க வேண்டும் என்கிற வைராக்கியத்தில் இருக்கும் சிறுவனான ஹீரோ, அத்தை மகளை அடித்துவிட்டான் என்பதற்காக அதே ஊர்க்கார நண்பனின் கையை அரிவாளால் வெட்டி துண்டாக்குகிறான். நண்பனும் பதிலுக்கு வெட்ட.. குறி தவறி அத்தை மகளின் அண்ணன் இதற்குப் பலியாகிறான்.
இதனால் இருவருமே சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்படுகிறார்கள். அங்கேயும் விடுதலையாகும் நாள் வரும்போது ஹீரோ மீது வன்மத்துடன் இருக்கும் வில்லன் தகராறு செய்து அடிதடியாக மீண்டும் 5 ஆண்டு கால சிறையாக வெளிச்சிறைக்கு மாற்றப்படுகிறார்கள்.
அங்கேயிருந்து மீண்டு வருகிறார் ஹீரோ. உடன் வில்லனும்தான். ஹீரோவுக்கு அவரது வயதான தாயார்தான் துணை. வில்லனின் அண்ணன் அந்த ஊர் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறார். பணமிருப்பதால் வில்லன் அத்தனை வில்லத்தனத்தையும் செய்து கொண்டு ஹீரோவை பழிக்குப் பழி வாங்க துடித்துக் கொண்டிருக்கிறார்.
ஹீரோ ஜெயிலுக்கு போனவுடனேயே அவருடைய அத்தை குடும்பம் ஊரைவிட்டு போய்விட்டதால் அத்தை மகளை காணாமல் தவிக்கிறார் ஹீரோ. இந்தச் சோகத்தில் இவர் இருக்க.. அதே ஊருக்கு புதிய ஆசிரியையாக வேலைக்கு வருகிறார் ஹீரோயின் ஸ்வேதா.
அவருக்கும், ஹீரோவுக்கும் பழக்கமாக.. அது ஹீரோயினால் ஒரு தலைக் காதலாகிறது. எப்படியும் தன் காதல் ஒரு நாள் ஜெயிக்கும் என்று அவர் நம்புகிறார். அதே நேரம் வில்லனின் அண்ணன் மகளும் ஹீரோவின் மீது ஒரு தலைக்காதல் கொள்கிறாள்.
வில்லன் சம்பத்ராஜோ ஹீரோவை கொலை செய்ய பல வழிகளில் முயன்றும் முடியாமல் போய்க் கொண்டிருக்கும்போது தனது அத்தை மகள் யார் என்பதை கண்டறிகிறார் ஹீரோ. இதன் பின்பு நடப்பது என்ன என்பதுதான் படத்தின் கதை..!
விருத்தாசலம் அருகில் இருக்கும் கிராமங்களில் நடக்கும் கதை என்பதால் விருத்தாசலம் என்று பெயர் வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. 1980-களில் வெளிவந்திருக்க வேண்டிய கதை. இப்போது.. இத்தனை தாமதமாகவும் வந்திருக்கிறது.
கதை, திரைக்கதையில் புதுமை இல்லாமல் எல்லா சின்ன பட்ஜெட் படங்களில் என்னென்ன இருக்குமோ அதெல்லாம் தவறாமல் இதிலும் இருக்கிறது.
ஹீரோவின் சொந்த ஊரிலேயே படமாக்கியிருக்கிறார்கள் போலிருக்கிறது. அந்த ஊரின் கோவில் கும்பிடு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒரு பாடல் காட்சியில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஹீரோவின் சொந்தப் படமோ என்று தோன்றுகிறது. இல்லையெனில் இந்த முகவெட்டு உள்ளவரை ஹீரோவாக வைத்து படமெடுக்க வேறு யாருக்கு தைரியம் வரும் என்று தெரியவில்லை.
அந்தக் கால ராஜ்கிரண் போல தன்னை காட்ட வேண்டும் என்று விரும்பியிருக்கிறார் ஹீரோ விருதகிரி. இயக்குநரும் அதற்கு உடன்பட்டு தன்னால் முடிந்த அளவுக்கு நேர்மையாக அனைத்தையும் படமாக்கியிருக்கிறார்.
ஆனால் ஹீரோவுக்குத்தான் இயன்ற அளவுக்கு நடிப்புத் திறனை வெளிக்காட்ட முடியவில்லை. வெறும் சண்டை காட்சிகளில் காட்டும் ஆவேசமும், செண்டிமெண்ட் காட்சிகளில் வரும் தவிப்புமே நடிப்பாகிவிடாது.. அவருடைய தாயாரின் மரணத்தில் நடக்கும் காட்சியில் பழைய ராஜ்கிரணை பார்த்த அதே நினைப்பு வந்து தொலைத்தது..!
ஸ்வேதா, சமீரா, ஷெரீன் தாஹா என்று இந்தப் படத்தில் மூன்று ஹீரோயின்கள். டீச்சராக நடித்திருக்கும் ஸ்வேதாவுக்குத்தான் அதிக ஸ்கோப் இருக்கிறது. தன்னால் முடிந்த அளவுக்கு நடித்திருக்கிறார். இன்னொரு ஹீரோயினான சமீரா இயக்குநர் சொல்லிக் கொடுத்த்தை செய்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் கொஞ்சம் கிளாமரை காட்டி அப்போதைக்கு ஸ்கிரீனை கூல் செய்திருக்கிறார்.
சம்பத்ராஜ் எப்போதும் கத்திக் கொண்டேயிருக்கிறார். கோப்ப்பட்டுக் கொண்டேயிருக்கிறார். வெளியில்தான் இப்படியென்றால்.. தனது வீட்டில்.. சொந்த அண்ணனிடம் பேசும்போதும் இதையேதான் செய்கிறார். கொலை செய்ய வேண்டும் என்றால் எத்தனையோ வழிகள் இருக்கு. சினிமாவில்தான் ஹீரோவை சாகடிக்க்க் கூடாது என்பதால் பலவித இடையூறுகள்.. இதையெல்லாம் தாண்டி வில்லத்தனத்தைக் காட்டுவதென்றால் வில்லன்களுக்கு பெரும் பிரச்சினைதான். இதை சம்பத்ராஜும் இந்தப் படத்தில் அனுபவிக்கிறார்.
சிவநேசனின் ஒளிப்பதிவும், ஸ்ரீராமின் இசையும்தான் படத்தின் மிகப் பெரிய பலம். ஊர்க் கோவில் திருவிழா காட்சிகளை அத்தனை கூட்டத்திடையேயும் பிரம்மாண்டமாக காட்டியிருக்கிறார். பாடல் காட்சிகளை ரசனையோடு படமாக்க இயக்குநருக்கு மிக ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.
உண்மையிலேயே சிறந்த இசையமைப்பாளர்தான் ஸ்ரீராம். பாடல்கள் அனைத்துமே மீண்டும் ஒரு முறை கேட்கத் தூண்டும் வகையில்தான் இருக்கின்றன. அதிலும் ‘தூண்டி முள்ளு மீசையில’, ‘காட்டுத் தீ’ போல பாடல்கள் இரண்டுமே மெலடியில் கேட்க இனிமையாக இருக்கின்றன. ஆர்ப்பாட்டமான ‘தெக்குத் திசை’, ‘ஓடுகாலி புருஷன்’, ‘வெட்டருவா மீசைக்காரன்’ பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. ‘என்னைப் பெத்தவ’ பாடல் மனதைத் தொடுகிறது..!
தமிழ்ச் சினிமா இப்போது எங்கயோ போய்க் கொண்டிருக்கும்போது பழைய கதைகளை ஞாபகப்படுத்துவதைபோல, இந்தப் படத்தின் கதையை கிராமத்துப் பக்கமாக திருப்பி எடுத்திருக்கிறார் இயக்குநர்.
சின்ன வயதிலேயே ‘நாம ரெண்டு பேரும் கல்யாணம் செஞ்சுக்குவோம்’.. ’கல்யாணத்துக்கு அப்புறம் நீ குடிப்பியா..?’ ‘நீ சிகரெட் குடிப்பியா..?’ என்றெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமான கேள்விகளை கேட்டு பிஞ்சு மனதில் நஞ்சைத் திணிப்பது போல காட்சிகளை வைத்திருப்பது மகா கொடுமை..! இதையெல்லாம் இப்போது கிராமத்தில் இருப்பவர்களே ஏற்க மாட்டார்கள்..!
ஒருவேளை இந்தப் படத்தை குழந்தைகள் பார்க்க வேண்டிய சூழல் வந்தால் அது அவர்கள் மனதில் எந்த அளவுக்கான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை யோசிக்க வேண்டாமா இயக்குநரே..?
இப்படியாக இந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸ் படத்தின் ஹீரோவும், படத்தின் அரதப் பழசான கதையும்தான். என்னதான் தமிழ்ச் சமூகம், தமிழ்ப் பண்பாடு, தமிழ்க் கலாச்சாரம் என்று ஜல்லியடித்தாலும் அதையும் கொடுக்கும்விதத்தில் கொடுத்தால் தமிழர்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்வார்கள்..!
இந்தப் படம் அதைச் செய்யவில்லை என்பதுதான் வருத்தமான விஷயம்..!
|
Tweet |
1 comments:
2018 க்கு பிறகு பதிவேயில்லையே ஏன்?
Post a Comment