நுண்ணுணர்வு - சினிமா விமர்சனம்

06-10-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மனதின் அதி நுட்பமான உள்ளுணர்வைக் குறிக்கும் சொல்தான் இந்தப் படத்தின் தலைப்பு. ஏதோவொரு பயங்கரம்.. விபத்து.. செயல்.. பேச்சு.. இதையெல்லாம் முன்கூட்டியே சந்தேகிக்கும் உணர்வுதான் இந்த நுண்ணுணர்வு என்னும் மனித குணம்.
ஒருவரின் மனதில் இருக்கும் அந்த உணர்வை, அவருடைய செயலை இன்னொருவரால் அறிய முடிகிறதெனில் அதை ‘டெலிபதி’ என்பார்கள். ‘எப்படி கண்டுபிடிச்ச?’ என்ற ஆச்சரியக் கேள்வியால் இதனை நிரப்புவார்கள். தன் மனவெளிப்பாடு எப்படி பிறருடைய வெளிப்பாடாகவும் இருக்கிறது என்று ஒருவர் ஆச்சரியப்படுவாரேயானால், அது டெலிபதியின் விளைவு எனலாம்.
இதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு. படத்தில் ஹீரோவாக நடித்து, தயாரித்து இயக்கியுள்ளவர் ஆஸ்திரேலிய தமிழரான மதிவாணன் சக்திவேல். இந்திரா என்பவர் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
ஆர்.தினேஷ், சிட்னி பிரசாத் இருவரும் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். மாயூ கணேசனும், ராஜும் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். இயக்குநரான மதிவாணன் சக்திவேலே கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருக்கிறார்.

டெலிபதி பற்றிய ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டிருக்கிறார் ஹீரோயின் இந்திரா. ஹீரோவான மதிவாணனோ ஒரு பயிற்சி பல் மருத்துவர். அந்த மருத்துவமனைக்கு வரும் இந்திராவை பார்த்தவுடன் பிடிக்கிறது மதிவாணனுக்கு. ஆனால் பழக முடியவில்லை.
மதிவாணன் தங்கியிருக்கும் வீட்டில் அவருடைய நண்பனும் தங்கியிருக்கிறான். ஸ்திரீ லோலனாக இருக்கும் அவனுக்கும் மதிக்கும் ஏழாம் பொருத்தம். ஒரு விடுமுறை நாளில் கடற்கரை பிரதேசத்தில் ஓய்வெடுக்கப் போகிறார்கள் நண்பர்கள்.
அங்கே கடலில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை பார்த்து அவளிடம் தவறாக நடக்க முயல்கிறான் நண்பன். அந்தக் களேபரத்தில் அந்தப் பெண்ணை சாகடித்துவிடுகிறான் நண்பன். எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் வீடு திரும்புகிறான் நண்பன்.
இந்த நேரத்தில் திடீரென்று ஒரு நாள் ஹீரோயினுக்கு டெலிபதி அட்டாக் ஆகிறது. அன்றிலிருந்து ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் இடையில் அனைத்துவித கஷ்டங்களும், விஷயங்களும் தானாகவே பரிமாறுகின்றன. அவர்களால் ஒருவரையொருவர் பார்க்க முடியாவிட்டாலும் பேச முடிகிறது. ஒருவர் பேசுவது மற்றவருக்கு கேட்கிறது. ஒருவருக்கு அடிபட்டால் மற்றவருக்கும் வலிக்கிறது. அவரது துன்பம் இவருக்குத் துன்பமாகவும், அடுத்தவரின் இன்பம் இவருக்கும் இன்பமாகவுமே தெரிகிறது.
இந்த டெலிபதி பேச்சினால் இருவருமே பைத்தியக்காரர்கள்போல் தனிமையில் அமர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்திராவின் அப்பா, இதைப் பார்த்து பயந்து போய் இந்திராவை மருத்துவமனைக்கு அழைக்கிறார். ஆனால் இந்திரா வர மறுக்கிறாள்.
இந்தச் சயமத்தில் கொலையுண்ட பெண்ணின் கேஸை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஹீரோவிடம் வந்து விவரம் கேட்க.. வழக்கில் இருந்து தப்பிக்க நினைக்கும் ஹீரோ உண்மையைச் சொல்லி விடுகிறார். இதைத் தெரிந்து கொண்ட ஹீரோவின் நண்பன் ஹீரோயினை கடத்துகிறான். இதன் பின்பு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் திரைக்கதை.
இதுவொரு அருமையான கதைக் கரு. இந்தக் கரு மட்டும் நம்முடைய பெரிய ஹீரோக்களுக்கு கிடைத்திருந்தால் ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’, ‘24’, ‘இருமுகன்’ மாதிரியான ஒரு பெரிய கமர்ஷியல் படத்தையே தயாரித்து கல்லா கட்டியிருக்கலாம். நிச்சயம் எந்த ஹீரோவும் நடிக்கக் கூடிய கதை இது.
இதில் பங்கேற்றுள்ளவர்கள் அனைவரும் புரொபஷனலாக நடிப்பை தொழிலாக கொண்டவர்கள் அல்ல. திரைப்படத்தின் மீது ஆர்வம் கொண்டு தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக எடுக்க முயன்றிருக்கிறார்கள். இதில் நடிப்பு, ஒளிப்பதிவு, இசை, இயக்கத்தையெல்லாம் அலசி ஆராய வேண்டியதில்லை.
ஒரேயொரு குறைதான்.. தமிழ்நாட்டிலேயே மிக குறைந்த வசதியிலேயே நல்ல, சிறந்த கேமிராவில் படமாக்குகிறார்கள். வெளிநாட்டில், அதுவும் ஆஸ்திரேலியாவில் படமாக்கும்போது ஒளிப்பதிவு இதைவிட சிறப்பாக இருந்திருக்க வேண்டும். அது ஏன் மிஸ்ஸிங் என்றுதான் தெரியவில்லை.
இயக்குநர் இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. தமிழ் ரசிகர்களைப் பொறுத்தமட்டில் சினிமாவுக்கான இலக்கணமாக சிலவைகளை எதிர்பார்த்துதான் தியேட்டருக்கு வருகிறார்கள். அந்த மெண்டாலிட்டி கொண்ட ரசிகனின் பார்வைக்கு வைக்கப்படும் படம் அது போலத்தான் இருக்க வேண்டும்.
இந்தப் படத்தை ஒரு முன் முயற்சியாக மட்டுமே எடுத்துக் கொண்டு அடுத்த முறை தமிழ் சினிமாவின் ஜெராக்ஸ் காப்பியை போலவே வேறொன்றை எடுத்துக் காண்பித்தால் இந்தப் படத்தின் இயக்குநரும் கோடம்பாக்கத்தில் வரவேற்கப்படுவார்.
வரட்டும்.. வாழ்த்துகிறோம்..!

0 comments: