றெக்க - சினிமா விமர்சனம்

10-10-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘காதலும் கடந்து போகும்’, ‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’ என்று மூன்று அதிரடி ஹிட்டுகளை கொடுத்துவிட்டு நான்காவதாக மிக குறுகிய காலத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வந்திருக்கும் படம் இது.
தமிழகத்தில் மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸில் ஒரு நடிகர் நடித்த அடுத்தடுத்த மூன்று படங்களும் ஒரே நாளில் ஓடுகிறது என்றால் அது விஜய் சேதுபதியின் படங்கள்தான்.
‘தர்மதுரை’, ‘ஆண்டவன் கட்டளை’க்கு அடுத்து இதோ இந்த ‘றெக்க’ படமும் சென்னை சத்யம் திரையரங்கில் ஓடுகிறது. இப்படியொரு சாதனைக்காக விஜய் சேதுபதிக்கு நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து ஹிட்டுகளை கொடுத்துவிட்டதால் அடுத்தும் ஹிட்டடிக்கணுமான்னு எந்தப் புண்ணியவான் விஜய்சேதுபதிகிட்ட மந்திரம் ஓதினார்ன்னு தெரியலை.. இந்தப் படம் பற்றிய பாராட்டுரைகளைவிடவும் சர்ச்சையான விமர்சனங்கள்தான் அதிகமாக எழுந்துள்ளன.

கும்பகோணத்தில் ஒரு பெரிய வக்கீலிடம் ஜூனியர் வக்கீலாக இருப்பவர் விஜய் சேதுபதி. காதல் திருமணங்களை நடத்தி வைப்பதை குடிசைத் தொழில் போல் நடத்தி வருகிறார். காதலனையோ.. காதலியையோ கடத்தி வந்தாவது திருமணத்தை நடத்திவைத்துவிடுவார். இப்படி இவர் செய்யும் சமூக சேவையால் பலரது எதிர்ப்புகளையும் சம்பாதித்து வைத்துள்ளார்.
அதே கும்பகோணத்தில் பிரபல ரவுடியாக இருக்கும் ஹரீஷ் உத்தமன் திருமணம் செய்ய காத்திருந்த பெண்ணைத் தூக்கி வந்து அவள் விருப்பப்பட்டவனுக்கே திருமணம் செய்து வைக்கிறார் விஜய் சேதுபதி. இதனால் ஹரீஷ் உத்தமன், விஜய் சேதுபதி மீது வன்ம்மாக இருக்கிறார்.
காலம் வரும்போது காத்திருந்து அடிப்போம் என்று எதிர்பார்ப்போடு இருக்கும் ஹரீஷுக்கு ஒரு சந்தர்ப்பம் அமைகிறது. விஜய் சேதுபதியின் தங்கையின் திருமணத்திற்கு முதல் நாள் நண்பன் சதீஷின் டாஸ்மாக் அலப்பறையால் ஹரீஷிடம் மாட்டிக் கொள்கிறார் விஜய் சேதுபதி. உடனேயே ஆட்களை அனுப்பி அந்தத் திருமணத்தை நிறுத்தி கலாட்டா செய்யப் போவதாக மிரட்டுகிறார் ஹரீஷ். இதைத் தவிர்க்கும் பொருட்டு அவருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார் விஜய் சேதுபதி.
“நான் சொல்ற வேலையை செய்தால் உன்னோட தங்கச்சி கல்யாணம் நல்லபடியா நடக்கும்…” என்கிறார் ஹரீஷ். இதற்கு விஜய் சேதுபதி ஒத்துக் கொள்கிறார்.
மதுரையில் இன்னும் இரண்டு மாதங்களில் திருமணமாகப் போகும் ஒரு பொண்ணை கடத்தி வந்து தன்னிடம் ஒப்படைக்கும்படி சொல்கிறார் ஹரீஷ்.  சரியென்று கும்பகோணத்தில் இருந்து மதுரைக்கு பஸ் ஏறுகிறார் விஜய் சேதுபதி. அப்போதுதான் தான் தூக்கப் போகும் பெண்ணின் தந்தை அமைச்சர் என்பது விஜய் சேதுபதிக்கு தெரிகிறது. ஆனாலும் முன் வைத்த காலை பின் வைக்காமல் முன்னேறுகிறார்.
அந்தப் பெண்ணான ஹீரோயின் லட்சுமி மேனனை அவருடைய கல்லூரியிலேயே போய் சந்தித்து ஒரு செல்பி எடுத்து அதனை ஹரீஷுக்கு அனுப்பி அத்தோடு எஸ்கேப்பாகலாம் என்றுதான் திட்டம் போடுகிறார் விஜய் சேதுபதி. ஆனால், “தூக்கவே வேணாம்.. நானே கூட வந்தர்றேன்…” என்று சொல்லி லட்சுமி மேனன் தன் வீட்டில் உள்ளவர்களிடத்தில் சொல்லிவிட்டே விஜய்சேதுபதியுடன் செல்ல.. விஜய் சேதுபதிக்கு இப்போது இவரை அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயம்.
ஹரீஷ் உத்தமனுக்கும், கோவையில் இருக்கும் இன்னொரு வில்லனான கபீர் சிங்கிற்கும் ஏற்கெனவே கொடுக்கல், வாங்கல் பிரச்சினையில் நிறைய சண்டைகள்.. வெட்டுக் குத்துகள் நடந்திருக்கின்றன. அந்த கபீர் சிங் திருமணம் செய்யப் போகும் பெண்தான் லட்சுமி மேனன்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதை போல லட்சுமி மேனனை கடத்துவதன் மூலம், கபீரின் திருமணத்தையும் நிறுத்தலாம்.. அதேபோல கபீரிடம் விஜய் சேதுபதியை மாட்டிவிடலாம் என்று எண்ணத்தில் ஹரீஷ் உத்தமன் தனது தந்திர வேலைகளைச் செய்ய.. இதிலிருந்து விஜய் சேதுபதியும், லட்சுமி மேனனும் எப்படி தப்பித்தார்கள் என்பதுதான் இடைவேளைக்கு பின்பான திரைக்கதை.
படத்தில் லாஜிக் கிலோ என்ன விலை என்று கேட்கலாம் போலிருக்கிறது. சமீபமாக வெளிவந்த கமர்ஷியல் படங்களில் இத்தனை ஓட்டைகள் இருப்பது இந்தப் படத்தில்தான்..!
தங்கையின் கல்யாணத்தை வைத்துக் கொண்டு அந்த நள்ளிரவில் வேறு ஊருக்கு எவனாவது போவானா..? அதுவும் இந்த மாதிரி ஆளைத் தூக்குற வேலைக்கு..? இந்த ஒரு கேள்வியிலேயே கதையோடு ஒன்ற முடியாமல் போய்விடுகிறது.
மதுரையில் 50 பேர் அரிவாளோடு சுத்தி வர.. லட்சுமி மேனனின் கையைப் பிடித்தபடியே ஒத்தை கையால் அனைவரையும் வீழ்த்திவிட்டு தப்பித்து வருகிறார் விஜய் சேதுபதி. இத்தனை பராக்கிரமம் படைத்தவர் முந்தைய நாள் நள்ளிரவு கும்பகோணத்தில் ஹரீஷ் உத்தமன் கும்பலையும் இதேபோல் அடித்து உதைத்துப் போட்டு போயிருக்கலாமே..? எதற்காக ஹரீஷுக்கு பயப்பட வேண்டும்..? மதுரைக்குப் பயணமாக வேண்டும்.?
அந்தக் கடத்தலையாவது கொஞ்சம் நம்புவது போல எடுத்திருக்கலாமே..? காலை 10 டூ மாலை 5 கரெண்ட்டு கட்டாம். அதை பேப்பரில் படித்துத் தெரிந்து கொண்டு.. சாலைப் பணி நடைபெறும் ரோட்டில் ரவுடிகள் கண் முன்பாகவே தப்பிக்கிறார் என்றெல்லாம் ஜேம்ஸ்பாண்டு அளவிற்கு யோசித்திருக்கிறார் இயக்குநர்.
இதேபோல் லட்சுமி மேனன் கேரக்டர் ஸ்கெட்ச்சை பார்த்தால் லட்சுமிக்கே குழப்பமாகத்தான் இருந்திருக்கும். கால் லூஸா.. அரை லூஸா.. முக்கால் லூஸா என்றெல்லாம் தெரியவில்லை. ஒரு அமைச்சரின் மகள்.. தன்னை மேடையில் கைதட்டல் வாங்க வைத்துவிட்டான் என்பதற்காக அவன் உடனேயே சென்றுவிடுவாரா..? இதற்கொரு பிளாஷ்பேக்கையும் கடைசியாகச் சொல்கிறார்கள். அது அதைவிட மொக்கை. இதற்கு இதைச் சொல்லாமலேயே இருந்திருக்கலாம்.
மகள்தான் ஒரு மாதிரி என்று நினைத்தால், அவருடைய அம்மா அதைவிட.. மகளைத் தேடி கணவருடன் காரில் வந்து இறங்கும் அம்மா, “அடுத்த தடவை ஓடிப் போகும்போது சரியா ஓடுடி..” என்கிறார். நமக்குத்தான் பக்கென்றாகிறது. இதென்ன கூறு கெட்ட குடும்பமா இருக்கும் போலிருக்கே என்று..! அதேதான் அனைவருக்கும்.
ஒரு வக்கீலாக இருப்பவர் இதற்கெல்லாம் பயந்தால் நடக்குமா..? அல்லது இத்தனை பயப்படுபவர் எப்படி காதலர்களை தூக்கி வந்து கல்யாணத்தை செய்து வைப்பவராக இருப்பார்..? தங்கை கல்யாணம் நல்லபடியாக முடிய வேண்டும் என்று எண்ணுவது நியாயம்தான். அதற்காக இப்படியா..? இந்த லாஜிக்கை புறந்தள்ளிவிட்டு படத்தைப் பார்த்தால் ஒரு பேமஸ் ஹீரோவை, மேலும் மாஸான ஹீரோவாக படைக்கப்பட்ட சித்திரமாகவே தெரிகிறது.
அந்த ஸ்டைல், நடை, உடை, பாவனை.. சண்டை காட்சிகளில் இருக்கும் புதிய டெக்னாலஜிஸ்.. பாடல் காட்சிகளில் ஜிகு ஜிகு ஆடைகள்.. பில்டப்பான வசனங்கள்.. ஹீரோவை மேலும் சூப்பர் ஹீரோவாக்கும் திரைக்கதை.. என்று விஜய் சேதுபதிக்காகவே அமைக்கப்பட்ட கதை.. உருவாக்கப்பட்ட படம் போலவே தெரிகிறது.
வழக்கம்போல விஜய் சேதுபதி இதிலும் அப்படியேதான் நடித்திருக்கிறார். ஹரீஷ் உத்தமனை சந்திக்க வீட்டில் இருந்து வெளியில் வரும் விஜய் சேதுபதி கடைசியான காட்சிவரையிலும் அந்த ‘அசால்ட்டு சேது’வாகவே மாறியிருக்கிறார்.
இடையிடையே சதீஷை பன்ச் டயலாக் பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார். லட்சுமி மேனனிடம் எந்த காதல் பார்வையும் பார்க்காமலேயே இரண்டு டூயட்டுக்களை பாடுகிறார். இமானின் இசையமைப்பினாலும் பாடல்களின் சிறப்பினாலும் அந்த இரண்டுமே அருமை.
படத்தில் மிக ஆறுதலான ஒரு விஷயம். இடையில் வரும் சிஜா ரோஸ்-கிஷோர் சம்பந்தப்பட்ட கிளைக் கதைதான். கிஷோரின் நடிப்பு ஒரு பக்கம் அசத்தல் என்றால் இன்னொரு பக்கம் கண்ணழகி சிஜா ரோஸ் தனது உருட்டும் விழிகளாலேயே நடித்திருக்கிறார். பேசாமல் லட்சுமி மேனனுக்கு பதிலாக இவரையே ஹீரோயினாக்கியிருக்கலாம்.
லட்சுமிக்கு என்னாச்சு என்று தெரியவில்லை. உடல் உப்பினார்போல தெரிந்தாலும் முகமும் சேர்ந்தே பயமுறுத்துகிறது. ஆனால் நடிப்பில் அம்மணி குறை வைக்கவில்லை. அந்த லூஸுத்தனமான கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு கச்சிதமாக நடித்திருக்கிறார்.
இன்னொரு பாராட்டுக்குரிய விஷயம். அப்பா கே.எஸ்.ரவிக்குமாருக்கும், மகன் விஜய்சேதுபதிக்கும் இடையில் இருக்கும் ரிலேஷன்ஷிப். தனிமையில் நண்பர்களை போல பேசிக் கொள்பவர்கள், பிறர் முன்னிலையில் அப்பா, மகனாக நடந்து கொள்வதும்.. மகனைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்து பேசும் அப்பாவாக கே.எஸ்.ரவிக்குமாரின் ஒவ்வொரு வசனமும் வெற்றி கீச்சுக்கள்..!
தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவில் விஜய் சேதுபதியைத் தவிர மற்ற அனைவருமே அழகாகத் தெரிகிறார்கள். லாங் ஷாட்டில் கிரேனில் இருந்து கீழே வரும் கேமிராவுக்கு முதுகை காண்பித்தபடியிருக்கும் வில்லனில் இருந்து துவங்கும் அந்த முதல் காட்சியே கேமிராமேனின் திறமையைக் காட்டிவிட்டது.
சண்டை காட்சிகளிலும், அவரும் எடிட்டர் ஆண்ட்டனியும் சேர்ந்துதான் சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறார்கள். இத்தனை சண்டையிட்டும் காயம்படாத மாஸ் ஹீரோவாக வெளியே வர வேண்டும் என்பதால் அதற்கேற்றாற்போல் சண்டை காட்சிகளை அமைத்திருக்கும் சண்டை பயிற்சியாளர் ராஜ்குமாருக்கு நமது வாழ்த்துகள்.
டி.இமானின் இசையில் ‘விர் விர் விர்ரு’ பாடல் நிஜமாகவே விர்றாகவே பறந்து வருகிறது. அதேபோல் ஷ்ரேயா கோஷலின் மயக்கும் குரலில் ‘கண்ணை காட்டும் போதும்’ பாடல் செமத்தியான மெலடி. இந்தாண்டுக்கான டாப் டென் பட்டியலில் நிச்சயம் இந்தப் பாடலும் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ‘கண்ணம்மா’ பாடல் இன்னொரு பக்கம் நெஞ்சை வருடுகிறது.
படத்தின் முதல் மூன்று நாள் வசூல் விஜய் சேதுபதியின் ரெக்கார்டை முறியடித்திருக்கிறது என்பதால் படத்தின் வெற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  இன்னும் 3 நாட்கள் விடுமுறை இருப்பதால் போட்ட காசுக்கு மேலேயே எடுத்துவிடும் என்பதிலும் சந்தேகமில்லை.
எப்படியிருந்தாலும் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகர்களுக்கு இந்தப் படம் தீனி போடவில்லை என்பது மட்டும் உண்மை. அடுத்த படத்தில் இன்னொரு ‘ஆண்டவன் கட்டளையை’யும், ‘தர்மதுரை’யையும் எதிர்பார்க்கிறோம். தருவார் என்றே நம்புகிறோம்..!

0 comments: