அம்மணி - சினிமா விமர்சனம்

15-10-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்த வருடமே தமிழ்ச் சினிமாவுக்கு ஸ்பெஷல்தான் போலிருக்கிறது. ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒருவகையில் சிறந்த படமாக சொல்லும் அளவுக்கு சிறந்த படைப்புகள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. இந்த மாதத்திய சிறந்த படம் கோட்டாவில் சந்தேகமில்லாமல் இடம் பிடித்திருக்கிறது இந்த ‘அம்மணி’.
என்னதான் பாசத்தைக் கொட்டி வளர்த்தாலும், வளர்ந்த பிள்ளைகளுக்கு பணத்தின் மீதான ஆசை மட்டும்தான் அதிகமாக இருக்கும். இப்போதைய காலக்கட்டத்தில் நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்கும் கீழான நிலையில் இருக்கும் குடும்பங்களில் நடக்கும் சண்டை, சச்சரவுகளுக்கு மிகப் பெரிய காரணமாக சொத்து, பணம் இவையிரண்டும்தான் முக்கியப் பங்களித்து வருகின்றன. இந்த ‘அம்மணி’ திரைப்படம் சொல்வதும் இதைத்தான்.
ஜீ தமிழ்த் தொலைக்காடசியில் இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்திவரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சியில் ஒரு நாள் பங்கெடுத்த ஒரு முதிய பெண்மணியின் சொந்தக் கதைதான் இந்த ‘அம்மணி’.

வடசென்னையில் இருக்கும் ஸ்டான்லி மருத்துவமனையில் ஆயாவாக வேலை செய்கிறார் ‘சாலம்மா’ என்கிற லட்சுமி ராமகிருஷ்ணன். இவருடைய கணவர் இதே மருத்துவமனையில் வேலை பார்க்கும்போதே இறந்து போனதால், கருணை அடிப்படையில் அந்த வேலை சாலம்மாவுக்குக் கிடைத்திருக்கிறது.
கணவர் இறந்தபோது மூத்த மகனுக்கு 7 வயது. இரண்டாவது மகனுக்கு 5 வயது.  அப்போதிலிருந்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். இதில் இளைய மகனான நிதின் சத்யா ஆட்டோ ஓட்டி வருகிறார். மூத்த மகன் பெயிண்டராக இருக்கிறார். ஆனால் மகா குடிகாரன்.  இரண்டு மகன்களுக்கும் திருமணமும் செய்து வைத்துவிட்டார். இரு மகன்களுக்குமே இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
சாலம்மாவுக்கு இவர்களையும்விட மூத்த மகளும் ஒருவர் இருக்கிறார். அவர் காதல் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓடிவிட்டதால் அவரோடு ஒட்டும் இல்லாமல் உறவும் இல்லாமல் இருக்கிறது சாலம்மாவின் குடும்பம்.
தண்டையார்பேட்டை ரயில்வே லைன் பக்கத்திலேயே சாலம்மாவின் கணவருக்கு சொந்தமாக இடம் இருந்திருக்கிறது. அலுவலகத்தில் லோன் போட்டு அங்கே வீடு கட்டி குடியிருக்கிறது சாலம்மாவின் குடும்பம். அதே குடியிருப்பில் இன்னொரு ஒற்றை அறை கொண்ட வீட்டில் தெருவில் குப்பைகளை பொறுக்கி பிழைத்து வரும் ‘அம்மணி’ என்ற வயது முதிர்ந்த பெண்மணியும் இருக்கிறார்.
திடீரென்று மகள் வயிற்று பேரன் சாலம்மாவை தேடி வருகிறான். தனக்கு சென்னையில் வேலை கிடைத்திருப்பதாகவும் அதனால் இங்கேயே தங்கிக் கொள்வதாகவும் சொல்கிறான். சாலம்மாவின் குடும்பத்தினருக்கு இதில் ஒப்புதல் இல்லாமல் இருக்கிறது. அவனை விரட்டுவதில் குறியாய் இருக்கிறார்கள். சாலம்மாள் மனது கேட்காமல் அம்மணியின் அறையிலேயே அவனை தங்க வைக்கிறாள்.
ரிட்டையர்டாகும் வயது வந்துவிட்டதால் ஊழியர் சேமநல வருங்கால வைப்பு நிதி பணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் சாலம்மா. அவள் மட்டுமல்ல.. அவளுடைய மகன்களும்கூடத்தான்.
மூத்த மகனான பெயிண்ட்டர் அம்மாவின் பி.எஃப் பணத்தை எதிர்பார்த்து பெயிண்ட் காண்ட்ராக்ட் எடுத்து நஷ்டப்பட்டு அவலத்தில் இருக்கிறார். இளைய மகனான நிதினும் ஆட்டோ கடனை அதை வைத்துதான் அடைக்க வேண்டும் என்று காத்திருக்கிறார். ஆனால் வரவிருக்கும் 2 லட்சத்து 6 ஆயிரம் ரூபாயில் வீடு கட்டியதற்கான கடனான 2 லட்சத்தை கொடுத்துவிட்டால் மீதமாக கையில் 6 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருக்கும் என்ற சூழ்நிலை.
மூத்த மகனைவிடவும் இளைய மகன் சற்று விவரமாக இருப்பதால் பி.எஃப். பணம் எதுவும் இல்லை என்கிற சூழலில் அந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றிக் கொடுக்கும்படி கேட்டு அடம் பிடிக்கிறான். மூத்த மகனுக்குக் குடுத்தால் அவன் குடித்தே அழித்துவிடுவானே என்பதால் அவன் சொல்படியே எழுதிக் கொடுக்கிறாள் சாலம்மா.
இடையில் மகள் வயிற்றுப் பேரன் தான் வெளிநாட்டிற்குச் சென்று பணம் சம்பாதித்து குடும்ப கடனை அடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். அதற்காக 2 லட்சம் ரூபாயை சாலம்மாவிடம் கேட்கிறான். பெரிய பேரன் உண்மையான பாசத்தோடு வந்திருக்கிறான் என்று நினைத்திருந்த சாலம்மாவுக்கு இது பெரும் அதிர்ச்சியாகிறது. பணமில்லை என்றவுடன் இந்தப் பேரனும் பாட்டியுடன் சண்டையிட்டுவிட்டு கிளம்புகிறான்.
ஒரு நாள் மூத்த மகனுக்கும், இளைய மகனுக்கும் இடையில் ஒரு பெரும் சண்டை ஏற்பட.. “இது என் வீடு. அம்மா எனக்கு எழுதிக் கொடுத்திருச்சு..” என்று சொல்லி தன் அண்ணனை வீட்டைவிட்டு வெளியே போகும்படி சொல்கிறான் இளையவன். கூடவே அம்மாவையும் கூட்டிக் கொண்டு போகும்படி சொல்ல.. பெரும் அதிர்ச்சியாகிறார் சாலம்மா.
தன்னுடைய கடைசி காலத்தில் தன்னை கவனித்துக் கொள்வான் என்று நினைத்த மகனே, தன்னை தள்ளி வைத்ததை ஜீரணிக்க முடியாத அவலத்தில் இருக்கும் சாலம்மா, இதன் பின்பு அவர் எடுக்கும் ஒரு முடிவுதான் அவரது எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. அது என்ன என்பதும். இதன் பின்னான கதை என்ன என்பதும்தான் படத்தின் திரைக்கதை.
மிகச் சிறிய வயதில் வீட்டுக்கு பின்னே கொய்யா மரத்தில் சாய்ந்தபடியே அந்த மாதத்திய ராணி முத்துவில் வெளிவந்த திரிபுரசுந்தரி என்னும் லட்சுமியின் ஒரு நாவலைப் படித்து முடித்த திருப்தியை இந்தப் படம் கொடுத்திருக்கிறது.
பிள்ளைகளைப் பெற்றெடுப்பதும், வளர்ப்பதும், குடும்பமாக வளர்வதும்கூட பெற்றோர்களின் சுயநலம்தான். ஆனால் இதுதான் மனித வளர்ச்சியின் நோக்கம். அதன் அடிப்படையே ஒருவரையொருவர் சார்ந்து வாழ்தல்தான். குடும்பம்தான் முக்கியம் என்ற கலாச்சாரத்தைக் கொண்டிருக்கும் தமிழகத்தில்தான், சமீபமாக இதன் நம்பிக்கைகள் தகர்க்கப்பட்டு வருகின்றன.
ஒரு பக்கம் பிள்ளைகளின் தனிக்குடித்தனம் அதிகமாக.. இன்னொரு பக்கம் முதியோர் இல்லங்கள் அதிகமாகிக் கொண்டே போக.. ஏன், எதற்கு இத்தனை கஷ்டப்பட்டு பிள்ளைகளை பெற்று வளர்க்க வேண்டும்.. என்று முதிய வயதில் அனைத்து தாய், தந்தையரையும் யோசிக்க வைக்கிறது இன்றைய இளைய தலைமுறையினரின் செயல்.
மிடில் கிளாஸ் குடும்பத்துக்கே உரித்தான போலி கவுரவம், மாமியார், மருமகள் சண்டை, அண்ணன் தம்பி மோதல்.. ஈகோ, வறட்டு கவுரவம், பணத்தின் மீதான ஆர்வம்.. சொந்த பந்தம் என்றாலும் பணம் என்றவுடன் குணம் மாறும் இயல்பு.. என்று பலவற்றையும் இந்தக் குடும்பத்து கதையில் மிகைப்படாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர் லட்சுமி.
இன்னொரு பக்கம் எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரவு நேரத்தில் குப்பைகளை அள்ளி அதில் கிடைக்கும் பணத்தில் பிழைத்து வரும் அம்மணியும், அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சும் படத்திற்குக் கிடைத்திருக்கும் இன்னொரு பெரிய பலம்.
ஒரு ஆத்திரத்தில் அம்மணியை வீட்டைவிட்டு வெளியேறச் சொல்லும் மகன்.. அம்மணியிடம் பணமும், நகைகளும் இருப்பதைப் பார்த்தவுடன் குணம் மாறி செல்வதும், பின்பு மருமகள்கள் இருவரும் அம்மணி மீது காட்டும் போலி பாசம், பரிவு எல்லாவற்றையும்கூட திரைக்கதையில் உண்மையாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
யாருமே இல்லாத அனாதையாக இருந்தாலும் கிடைத்ததை வைத்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்கிற அம்மணியின் கொள்கையை சாலம்மாவால் பின்பற்ற முடியவில்லை என்றாலும், இறுதியில் அப்படியொரு முடிவைத்தான் எடுக்கிறார் சாலம்மா.
“இந்த உலகத்துல நமக்குன்னு எதுவுமே சொந்தமில்லடி. இதோ.. இந்த லைட்டு மட்டும் போயிட்டா.. நம்ம நிழல்கூட நமக்குச் சொந்தமில்லை..” என்று அம்மணி  பாட்டி பேசும் வசனம், சாலம்மா போன்று, குடும்பம் இருந்தும் அனாதையாகிவிட்டோமே என்கிற தாழ்வுணர்ச்சியில் இருப்பவர்களுக்கு ஒரு உற்சாக டானிக்குதான்.
அவ்வளவுதான் வாழ்க்கை என்று நினைப்பவர்களுக்கு இந்த அம்மணி பாட்டியின் கதை ஒரு பூஸ்ட்டு. அம்மணியாக நடித்திருக்கும் மலையாள நடிகையான சுப்புலட்சுமி, பல மலையாளப் படங்களில் பாட்டியாக களமிறங்கியவர். இப்போது அதிக வயதில் நடிக்கும் நடிகை என்ற பெயரையும் எடுத்திருக்கிறார்.
தன்னுடைய கணவரைப் பற்றிச் சொல்லிவிட்டு, தான் ஆசையாய் வளர்த்த தங்கை மகளே 100 ரூபாய் கொடுத்து வெளியில் அனுப்பியதை அம்மணி பாட்டி குறிப்பிடும்போது உருகாத மனசும் உருகும்.
அந்த கூன் விழுந்த உருவம்.. சுருங்கிப் போன தோல்களுடன் அழகிழந்த முகம்.. ஆனால் கண்ணில் சோகத்தையே காட்டாமல் முகத்தில் எப்போதும் சிரிப்புடனும், தைரியத்துடனும் பரிகாசத்துடன் இருக்கும் அம்மணி, பிள்ளைகள், மருமகள்கள், பேரன், பேத்திகள் இருந்தும் நிம்மதியில்லாமல் தவிக்கும் சாலம்மாவிற்கு சொல்லும் சமாதானங்களும், தைரியமும்தான் இந்தப் படம் சொல்லும் நீதி..!
சாலம்மா கேரக்டரில் லட்சுமி ராமகிருஷ்ணனே நடித்திருக்கிறார். ஒரு பக்கம் வீட்டில் அம்மாவாக, மாமியாராக.. இன்னொரு பக்கம் மருத்துவமனையில் ஆயாவாக என்று தன்னுடைய கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
இரண்டாவது மகன் மீதிருக்கும் பாசத்தில் சொத்தையெல்லாம் அவன் மீது எழுதிவைத்துவிட்டு அடுத்த சில நாட்களிலேயே மகனே “நீ தனியா போயிரு..” என்று சொல்லும் சொல்தான் சாலம்மாவை நிலை குலைய வைக்கிறது. அதை மிக அழகாக பதிவாக்கியிருக்கிறார்கள்.
இந்தக் கணமே தான் இறந்துவிட்டேன் என்பதை உணர்ந்த லட்சுமியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்தான் படத்தின் கிளைமாக்ஸ். என்ன இருந்தாலும் அந்த ஒரு வார்த்தைக்காக தனது சுயத்தை இழந்து, மறைந்து வாழ என்ன அவசியம் வந்தது சாலம்மாவுக்கு.. அவர்கள் கண்ணெதிரேயே வாழ்ந்து காட்ட வேண்டாமா..? அதைத்தானே அம்மணியும் அவருக்கு உணர்த்தியிருக்கிறார்..! பின்பு ஏன் அந்த திடீர் முடிவு..?
கிளைமாக்ஸில் ஏற்படும் அந்த டிவிஸ்ட் யாருமே எதிர்பார்க்காத்து.. ஏதோ ஒன்று இருக்கிறது என்கிற சஸ்பென்ஸுக்குள் கொண்டு போனாலும், விடை கிடைத்தவுடன் அம்மணிக்கு கிடைத்த கடைசி மரியாதையை நினைத்து ரசிகனின் மனம் ஆசுவாசப்படுகிறது.
மருமகள்களில் மூத்த மருமகளாக நடித்தவர் அசத்தியிருக்கிறார். குளோஸப் காட்சிகளில் அழுகையும், வெறுமையும்.. ஏமாற்றமுமாக பொங்கித் தீர்த்திருக்கிறார். கொஞ்சம் அழகாக இருக்கும் திமிரில் எப்போதும் இருக்கும் இளைய மருமகள், தனது சதி வேலையை கொஞ்சம், கொஞ்சமான வார்த்தைகளில் காட்டுவதெல்லாம் மிக இயல்பு. நிதின் சத்யாவும், மூத்த மகனாக நடித்தவரும்கூட தங்களது கேரக்டருக்கு பங்கமில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
படத்தில் ஒரு காட்சியில்.. ஒரு ஷாட்கூட தேமே என்று படமாக்கப்படவில்லை. அனைத்தும் பெர்பெக்ஷன். இயக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு சிறிய தேக்கம்கூட இல்லாமல் செய்திருக்கிறார்.
இம்ரான் ஹமத் மற்றும் கே.ஆரின் ஒளிப்பதிவு படத்திற்கு கிடைத்திருக்கும் பலம். இதேபோல் படத் தொகுப்பு செய்திருக்கும் ரெஜித், கே.ஆர். இருவருமே தங்களது பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். வீட்டுக்குள் நடக்கும் அக்கப்போரின் காட்சிகளை தொகுத்து வழங்கியிருக்கும்விதம் சூப்பர்.
“என்னுடைய சாவு எப்படியிருக்கும் தெரியுமா..?” என்கிற சாலம்மாவின் கற்பனையில் விரிகின்ற ‘லைஃப் மச்சான்’ பாடலும், இந்தப் பாடலுக்கான ஆடலும் அசத்தல். இப்படியெல்லாம் சுடுகாட்டுக்கு போய்ச் சேர யாருக்குத்தான் ஆசை இருக்காது..? இசையமைப்பாளர் கே-யின் அசத்தல் டியூனில் வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கும் ‘மழை இங்கில்லையே’ பாடல் அமர்க்களம். படம் முடிந்த பிறகும் பாடல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.
வெறும் ஒன்றரை மணி நேரத்தில் ஒரு நாவலை வாசித்த உணர்வைக் கொடுத்திருக்கும் இந்தப் படம் நிச்சயமாக ஓட வேண்டும். இது போன்ற படைப்புகளுக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் சிவப்புக் கம்பள வரவேற்பளித்தால்தான் குப்பையான கமர்ஷியல்கள் தோல்வியடைந்து அவைகள் வெளியேற்றப்படும்.
நமக்கு எது தேவை என்று நாம் விரும்புகிறோமோ அதைத்தான் நாம் வரவேற்க வேண்டும். அப்படி தமிழகத்து மக்களிடையே வரவேற்கப்பட வேண்டிய திரைப்படம் இது.
அவசியம் பார்த்து மகிழுங்கள்..!

0 comments: