08-10-2016
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக 9 ஹிட்டுகளை கொடுத்த நடிகர் இதுவரையிலும் யாருமே இல்லை. அந்தச் சாதனையைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். ரஜினி, கமல், விஜய், அஜீத்திற்கு பிறகு தனிப்பட்ட ரசிகர்கள் என்றில்லாமல் ஒட்டு மொத்தக் குடும்பத்தினருக்கே பிடித்தமான ஹீரோவாக உருவெடுத்திருப்பது சிவகார்த்திகேயனுக்குக் கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம் என்றே சொல்ல்லாம்.
‘சினிமாவில் எல்லாமே நேரம்’ என்பார்கள். ‘கடின உழைப்பு, திறமை இருந்தாலும் நேரம்ன்னு ஒண்ணு இருந்தால்தான் முன்னேற முடியும்’ என்பார்கள். இப்போது சிவகார்த்திகேயனின் நேரம். எதைத் தொட்டாலும் பொன்னாகிறது. அதில் இந்த ‘ரெமோ’வும் ஒன்று.
ரிலீஸுக்கு முன்பேயே லாபத்தைப் பார்த்துவிட்டு இப்போது விநியோகஸ்தர்களும் சந்தோஷப்படும்வகையில் முதல் நாள் காட்சிகளுக்கு கிடைத்த வரவேற்பு கட்டியம் போட்டு சொல்கிறது படத்தின் வெற்றியை..! வாழ்த்துகள்.. பாராட்டுக்கள் சிவா..!
வழக்கமான காதல் கதைதான். சினிமாவில் ‘அடுத்த ரஜினியாக வேண்டும்’ என்று ஆசைப்படும் இளைஞன் எஸ்.கே. சிவகார்த்திகேயனின் உண்மைப் பெயரையை சுருக்கி வைத்திருக்கிறார்கள் போலும். அம்மா மட்டுமே.. பெத்த தாயும், மகனின் முக லட்சணம், திறமை அறிந்து, இதெல்லாம் வேலைக்கு ஆகாது மகனே என்று சொல்லிப் பார்க்கிறார். பையன் கேட்கவில்லை.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனது புதிய படத்தில் நடிக்க புதுமுகங்கள் தேடுவதாகக் கேள்விப்பட்டு செல்கிறார் சிவா. அங்கே நடக்கும் சோதனையில் ‘தேறாது’ என்று சொல்லி சிவாவை ரிஜக்ட் செய்கிறார் கே.எஸ்.ரவிக்குமார். ஆனாலும் சிவாவின் நச்சரிப்பால் ‘ஒரு பெண் நர்ஸா மாறு வேடத்தில் நடிக்கணும். முடியுமா..?’ என்கிறார். ‘அதனால் என்ன..? ஆள் மாறிட்டு வந்து காட்டுறேன் ஸார்’ என்று சவால்விட்டுவிட்டு வருகிறார் சிவா.
அந்த நேரத்தில்தான் ஹீரோயின் கீர்த்தி சுரேஷை கடற்கரையில் பார்க்கிறார் சிவா. பார்த்தவுடன் அவரது இதயத்தில் காதல் அம்பு பாய.. மன்மதன் பானங்களை ஏவ.. கீர்த்தி சுரேஷ் யாரென்று தேடுகிறார். கீர்த்தியின் வீட்டை அடையாளம் கண்டு கொள்கிறார். அவரைப் பற்றி டீடெயில்ஸை கலெக்ட் செய்ய, வாட்ச்மேன் மயில்சாமிக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து சகாயம் பிடிக்கிறார்.
இனிமேல் நேரடியாக சென்று ‘ஐ லவ் யூ’ சொல்லிவிட வேண்டியதுதான் என்று நினைத்து கீர்த்தியின் வீட்டுக்கு நேரில் செல்கிறார் சிவா. அன்றைக்கு அப்போது கீர்த்திக்கு திருமண நிச்சயத்தார்த்தம். அதிர்ச்சியாகி திரும்புகிறார் சிவா.
மனதைத் தேற்றிக் கொண்டு அடுத்த நாள் கே.எஸ்.ரவிக்குமாரின் ஷூட்டிங்கிற்காக பெண் நர்ஸ் வேடமிட்டு செல்கிறார். அங்கேயும் சாதகமான பதில் வராமல் போக.. சோதனையைத் தாங்கிக் கொண்டு வீடு திரும்புபவரை பேருந்தில் சந்திக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
அவரிடம் தான் ஆண் என்பதை மறைத்துவிட்டு சிவா, ரெமோ வேடத்தில் பெண் குரலில் பேச.. அவர் நிஜமாகவே பெண் நர்ஸ் என்று நினைத்து தனது ஆஸ்பத்திரியில் அவருக்கு நர்ஸ் வேலைக்கு ஏற்பாடு செய்வதாகவும், நாளை அவரை மருத்துவமனைக்கு வரச் சொல்லிவிட்டுப் போகிறார் கீர்த்தி.
தான் காதலித்த பெண்ணே அழைக்கிறாளே என்றெண்ணி அடுத்த நாளே அதே மருத்துவமனையில் நர்ஸாக வேலைக்கு சேர்கிறார் சிவா. அங்கே வேலை செய்து கொண்டே கீர்த்தியின் மனதில் இடம் பிடிக்க நினைக்கிறார். இது எதையும் அறியாத கீர்த்தியோ.. அவரை பெண் நர்ஸ் என்றெண்ணி ‘சிஸ்டர் சிஸ்டர்’ என்றழைத்து பாசத்தைப் பொழிகிறார்.
இறுதியில் சிவாவின் காதல் நிறைவேறியதா..? எப்படி..? என்பதுதான் இந்த ரெமோவின் திரைக்கதை. ‘ரெமோ’வின் விரிவாக்கம் சிவா, பெண் நர்ஸ் வேடத்திற்கு தனக்குத்தானே வைத்துக் கொள்ளும் பெயரான ‘ரெஜினா மோத்வானி’யின சுருக்கம்.
ஒரு கதையாகப் பார்க்கப் போனால் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கு ஒத்துவராத ஒரு விஷயம். இந்தக் கதையை இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் ஏன் தேர்ந்தெடுத்தார் என்பதே புரியாத புதிராக இருக்கிறது.
திருமண நிச்சயத்தார்த்தம் முடிந்த ஒரு பெண்ணை விரட்டி விரட்டி ஒன் சைடாக காதலித்து.. பின்பு அவளை டார்ச்சர் செய்து தன்னைக் காதலிக்க வைத்து, ஆணின் திமிரோடு பலவித சாகசச் செயல்களை செய்து அவளை அடைய நினைப்பது எந்தவிதத்தில் நியாயம் இயக்குநரே..?
இன்றைய யூத்துக்களுக்கு காதல் இல்லாமல் படம் இல்லை. அதே நேரம் அது மட்டுமே வாழ்க்கையில்லை என்பதையும் சினிமாக்கள்தான் சொல்லித் தர வேண்டும். இந்தப் படம் முழுக்க முழுக்க வேலை வெட்டியில்லாத ஒரு இளைஞன்.. இன்னமும் சம்பாதிக்கவே ஆரம்பிக்காத இளைஞன்.. அழகாக இருக்கிறாள் என்கிற ஒரே காரணத்துக்காக அதிலும் மருத்துவராக இருக்கும் ஹீரோயினை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்கி.. அவளை நச்சரித்து ஈர்க்கிறான் என்பதெல்லாம் இப்போதைய தமிழ்நாடு எதிர்கொண்டு வரும் சமீபத்திய பெண்ணிய ஆபத்துக்களுக்கு உதாரணமாகிவிடாதா..?
இயக்குநர் சிவகார்த்திகேயனை எதற்கு துணைக்கழைத்தார் என்று தெரியவில்லை. சிவா இதில் நடித்திருக்கவே கூடாது. அந்தப் பெண் வேடம்தான் படத்தின் தூண். அதை மட்டும் பிரதானமாக வைத்துக் கொண்டு யாருக்கோ நிச்சயித்த பெண்ணாக இல்லாமல் கீர்த்தி சுரேஷ் ஒரு நடிகையாகவே இருக்க.. அவருடன் பெண் நர்ஸாக சிவாவும் நடித்து அவரை இம்ப்ரஸ் செய்து காதலித்து, கல்யாணம் செய்வது போல் வைத்திருந்தால்கூட ஏற்றுக் கொண்டிருக்கலாம்.. ஆனால் இந்தக் கதை..? ஸாரி இயக்குநரே.. முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கதை..!
ஆனால் இத்தனையையும் மீறியும் படத்தை குடும்பத்துடன் பார்க்க வைத்திருப்பதன் காரணம் சிவா.. சிவா.. சிவா.. ஒட்டு மொத்தக் குடும்பத்திற்கும் சிவாவை பிடித்திருப்பதன் காரணமே அவருடைய ஹீரோத்தனம் இல்லாத சேட்டைகளும், பேச்சுக்களும்தான். கூடவே அந்த ‘ரெமோ’ கெட்டப் அந்த அளவுக்கு ஈர்க்கிறது.
இந்தப் படத்தில் முதல் ஹீரோயினே ‘ரெமோ’தான். ஸ்டைலாக முன் தலையில் உருண்டு விழுகும் முடியை ஒதுக்கிவிட்டு பார்க்கும் பாவனை.. அந்த சரோஜாதேவி நடை.. கீர்த்தியை பார்த்தவுடன் ரெமோவில் இருந்து சட்டென காதலனாக மாறுவது.. ’ரெமோ’ கெட்டப்புக்காக அல்லல்படுவது.. அவ்வப்போது யோகிபாபுவின் லவ் புரொபஸலில் மாட்டிக் கொண்டு முழிப்பது என்று ‘ரெமோ’ கேரக்டரே படம் முழுவதிலும் தொடர்ச்சியான மெல்லிய நகைச்சுவையை வீசுகிறது.
சிவா, சாதாரணமான எஸ்.கே. கேரக்டரில் எப்போதும்போல வலம் வந்தாலும் இதிலும் அடுத்த மாஸ் ஹீரோவாக வர வேண்டிய அளவுக்கான காட்சியமைப்புகளை பார்க்க நேரிடுகிறது. சண்டை காட்சிகளின் முஸ்தீபு.. பாடல் காட்சிகளில் தனித்தன்மை.. ஹீரோயிஸமான வசனங்கள் மூலம் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படியில் ஏறிவிட்டார் என்றே சொல்லலாம்.
கீர்த்தி சுரேஷின் அழகுக்கு முன்பு சிவா ஒன்றுமே இல்லை என்பதும் உண்மைதான். அத்தனை அழகான பிரெஷ்ஷான முகத்தை மேக்கப் இல்லாதபோதும் அப்படியே இருப்பதால் சொக்கத்தான் வைத்திருக்கிறார் கீர்த்தி. அதிலும் கூடுதலாக நடிப்பும் சேர்ந்து கொள்ள.. மனுஷியின் நடிப்புக்கும் ஒரு ‘ஜே’ போட்டுத்தான் ஆக வேண்டும்.
சிவாவின் துள்ளல் நடிப்புக்குத் துணையாக அவ்வப்போது சின்னச் சின்ன பன்ச்சுகளை சொல்லி கலங்கடிக்கிறார் சதீஷ். நடுரோட்டில் ரோமோவை கட்டிப் பிடித்து சதீஷ் கொஞ்சுவதை பார்த்து சரண்யா படும்பாடும் அந்தக் காட்சிகளும் நகைச்சுவை தர்பார். கவுன்ட்டருக்கு பதில் கவுன்ட்டர் அட்டாக் கொடுப்பதில் இப்போதைக்கு சதீஷ் நிபுணத்துவம் பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.
வழக்கம்போல சரண்யா பொன்வண்ணன் தனது மகனின் திறமையின்மையை சுட்டிக் காட்டும் பொறுப்புள்ள தாயாக துவக்கத்தில் புலம்பித் தள்ளுகிறார். ஆனால் பிற்பாடு கீர்த்தியை பார்த்தவுடன் “அந்தப் புள்ளை எம்புட்டு அழகாக இருக்கு. அவதாண்டா எனக்கு மருமகளாக வரணும்…” என்று வழக்கமான தமிழ்நாட்டு மாமியாராக மாறிவிடுவது படத்திற்குக் கிடைத்திருக்கும் இன்னொரு ஜெர்க்.
என்ன கேரக்டர் ஸ்கெட்ச் என்றே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரு காட்சியில் நடித்திருக்கும் பிரதாப் போத்தன், கீர்த்தியின் அம்மா, அப்பா, கீர்த்தியின் வருங்கால கணவன்.. இவர்களையும் தாண்டி தனது அனாயச நடிப்பால் அனைவரையும் சிரிக்க வைத்திருப்பவர் யோகிபாபுதான்.
கடைசியாக பேருந்தில் ரெமோவின் போட்டோவை போட்ட நோட்டீஸை விநியோகம் செய்து “எனது காதலியை பார்த்தீங்களா..?” என்று கேட்கும் காட்சிதான் படத்திலேயே மிக அதிக கைதட்டல் வாங்கிய காட்சி. எத்தனை அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்கிறார்..? அருமையான இயக்கம்.
படத்தின் அடிப்படையான கதையே தவறாக இருப்பதால் வசனங்களில் அதிகம் ஒன்றிப் போய் ரசிக்க முடியவில்லை. கீர்த்தியின் பல வசனங்கள் அவர் தரப்பை நியாயப்படுத்திப் பேசினாலும், ஹீரோவின் எதிர் வாதமும், அதற்கு அவருடைய ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் ஏகோபித்த கைதட்டலும், எதிர்மறையான கருத்துக்களைத்தான் பிரதிபலிக்கின்றன.
பன்ச் வசனம் பேசும் அளவுக்கெல்லாம் நமக்கு கெத்து இல்லை என்பதை ஓப்பனாக சொல்லிக் கொண்டே காதல் தொடர்பான வசனங்களை அள்ளிவீசி இளசுகளின் கை தட்டலை ஒட்டு மொத்தமாக அள்ளியிருக்கிறார் சிவா. ‘பொண்ணுகளை காதலிக்கிறதுதான் கஷ்டம்.. கன்பியூஸ் பண்றது ரொம்ப ஈஸி’ போன்ற தத்துவங்களை இஷ்டத்துக்கு அள்ளி வீசியிருக்கிறார் இயக்குநர்.
பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்த மிகப் பெரிய பலம். ‘ரெமோ’ போன்ற கேரக்டர் ஸ்கெட்ச்சுகளுக்கு இவர் போன்ற ஒளிப்பதிவு மேதைகளை வைத்தால்தான் எடுபடும் என்று நினைத்து அவரைத் தேடிப் பிடித்த இயக்குநரின் சாமர்த்தியத்தை பாராட்டுகிறோம்.
‘ரெமோ’வின் அழகையும், கீர்த்தியின் அழகையும் கேமிராவில் பதிவாக்கியிருக்கும் அழகில்தான் தியேட்டரே சொக்கிப் போய் அமர்ந்திருக்கிறது. நியாயமாக, இந்தப் படத்தின் வெற்றியில் பாதியளவு பி.சி.ஸ்ரீராம் ஸாருக்கே போய்ச் சேர வேண்டும்.
இசை அனிருத் என்கிறார்கள். ‘செஞ்சிப்புட்டாளே’ பாடலும், ‘தமிழ்ச்செல்வி’ பாடலும் கேட்க வைத்திருக்கின்றன. ‘ரெமோ நீ என் காதலன்’ பாடல் ரெமோவின் கேரக்டர் பில்டப்பாக வந்திருப்பதால் ரெமோவை சைட் அடிப்பதிலேயே குறியாய் இருந்து கடைசியில் பாடலை கோட்டைவிட்டாச்சு.
சண்டை காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் படத் தொகுப்பாளரான ரூபனும் சிவாவுக்காக மாய்ந்து, மாய்ந்து உழைத்திருக்கிறார் போலும். இயக்குநருக்குப் போட்டியாக எடிட்டரும் சிவாவை அடுத்த சூப்பர் ஸ்டார் லெவலுக்கு கொண்டு போயிருக்கிறார்.
குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியவர்கள்.. ரெமோவுக்கு ஒப்பனை செய்த ரேச்சல், நிக்கி, ஷான் ஃபுட் மற்றும் ஆடை வடிமைப்பாளர்களான அனு பார்த்தசாரதி, சைதன்யா ராவ் ஆகியோர்தான். ‘ரெமோ’வின் அழகை கீர்த்தியோடு போட்டிபோடும்வகையில் வடிவமைத்திருக்கும் அழகையே என்னவென்று சொல்வது..? வெல்டன் வொர்க்.
பெரிய பணக்கார குடும்பம்.. பார்க்கும் வேலை மருத்துவர்.. கார்கூடவா வீட்ல இருக்காது..? பேருந்தில் ஏன் செல்கிறார் என்கிற அடிப்படை லாஜிக்கான கேள்வியும் படத்தில் எழாமல் இல்லை.
காதல் திருமணம் சரியா..? பெற்றோர்கள் பார்த்துவைக்கும் திருமணம் சரியா..? என்கிற பட்டிமன்றத்திற்கு சிவா கொடுக்கும் பதில் பொருத்தமாக இல்லை. எத்தனை எத்தனை அரேஞ்சுடு மேரேஜ்கள் இன்றைக்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன என்பதை வெளியில் போய் பார்த்தாலே தெரியுமே..?
யார், எவன் என்று தெரியாமலேயே என்ன படித்திருக்கிறான்..? என்ன வேலை செய்கிறான் என்றுகூட கேட்காமலேயே யாருக்கும் காதல் வந்தவிடுமா என்ன..? இப்படி பல கேள்விகளை வீசும் அளவுக்கு படத்தில் லாஜிக் மீறல்களும் ஏராளம்..!
ஆனால், படம் பார்க்க வந்த ரசிகர்களும், குடும்பத்தினரும் எந்தக் கவலையும் இல்லாமல்.. எந்த லாஜிக்கும் பார்க்காமல் வந்தோம்.. பார்த்தோம்.. சிரித்தோம்.. என்றபடியே திரையரங்கைவிட்டு வெளியேறுவதை பார்க்கும்போது, மக்கள் எவ்வழியோ அந்த வழியே கலைஞர்களும் என்பதைத்தான் நாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது.
‘ரெமோ’வை பார்க்கலாம்.. ரசிக்கலாம்.. சிரிக்கலாம்.. என்பதே இந்தப் படத்தின் முடிவு..!
|
Tweet |
0 comments:
Post a Comment