தொடரி - சினிமா விமர்சனம்

27-09-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘தொடரி’ என்றால் ‘தொடர்ந்து கொண்டே செல்வது’ என்றுதானே பொருள். ‘தொடர் வண்டி’ என்றுதானே ‘ரயிலை’ குறிப்பிட்டுச் சொல்கிறோம். அந்த ‘தொடர் வண்டி’யையே இன்னமும் சுருக்கி ‘தொடரி’ என்று அழைக்கும் ஒரு புதிய பெயரை கொடுத்தமைக்காக இயக்குநர் பிரபு சாலமனுக்கு முதல் நன்றி.
அதிகப்பட்ச செலவில், மாஸ் ஹீரோவை வைத்து மிகப் பெரிய பேனரில் படம் செய்வது என்பது கத்தி மேல் நடப்பது போலத்தான். இயக்குநரின் திறமை மட்டுமே படத்தைக் காப்பாற்றும். நம்பிக்கை காத்திருக்க வைக்கும். ஆனால் செயல்படுத்த அது மட்டுமே போதாது. இந்தப் படத்தின் சிறிய வெற்றிக்கு காரணம் இயக்குநர் எழுதியிருக்கும் இடைவேளைக்கு பின்னான திரைக்கதையும், அழுத்தமான இயக்கமுமே..!

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் கேண்டீனில் சப்ளையராகப் பணியாற்றுபவர் தனுஷ். அங்கே சூப்பர்வைஸர் தம்பி ராமையா. இந்த டீமில் கருணாகரனும் ஒருவர்.
அன்றைக்கு அந்த ரயிலில் பிரபல நடிகை சிரிஸ்ரீயும் வருகிறார். அவருடன் அவருடைய அம்மாவும், சிரிஸ்ரீயின் டச்சப் கேர்ளான சரோஜாதேவியும் பயணிக்கிறார்கள்.
இந்தியாவின் சாண எரிவாயு துறையின் மத்திய அமைச்சரான ராதாரவியும் அதே ரயிலில் சென்னைக்கு பயணமாகியுள்ளார். இவருக்குத் துணையாக இரண்டு கருப்பு பூனை படை வீரர்களும், அவருடைய அரசியல் பி.ஏ.வும் வருகிறார்கள்.
சிரிஸ்ரீக்கு உணவு சப்ளை செய்யப் போகுமிடத்தில் டச்சப் கேர்ள் சரோஜா தேவியைப் பார்க்கும் தனுஷ் திகைக்கிறார். ஹீரோயினைவிடவும் அழகாக இருக்கும் சரோஜா மீது பார்த்தவுடன் காதல் வருகிறது தனுஷுக்கு. இதற்காகவே அடிக்கடி அவரைப் பார்க்கச் செல்கிறார்.
இந்த நேரத்தில் அமைச்சரின் கருப்பு பூனை படை அதிகாரியான ஹரீஷ் உத்தமனுடன் சண்டை ஏற்பட அது இருவருக்குள்ளும் தீராத வன்மமாக உருவெடுக்கிறது. ஏற்கெனவே வீட்டுப் பிரச்சினையால் மன உளைச்சலில் இருக்கும் ஹரிஷ், ஒரே மாநிலத்தவராக இருந்தும் சரோஜாவின் உதாசீனத்தால் மேலும் அவமானப்படுகிறார்.
ஹரிஷின் கைத்துப்பாக்கி தொலைந்துபோய்விட.. அதை தனுஷ்தான் எடுத்திருப்பார் என்று நினைத்து அவரிடம் கேட்டு மேலும் அவமானப்படுகிறார் ஹரிஷ். ஆனால் இந்தத் துப்பாக்கியை அமைச்சர் ராதாரவியை எடுத்து வைத்திருந்து திருப்பிக் கொடுத்து மீண்டும் அவமானப்படுத்துகிறார் ஹரிஷை.
என்ஜின் டிரைவரான ஆர்.வி.உதயகுமாருக்கு அதுதான் கடைசி வேலை நாள். இன்றோடு ஓய்வு பெறுகிறார். உதவி டிரைவரான போஸ் வெங்கட்டுக்கும், அவரது திருமதியாருக்கும் இடையில் போனிலேயே கடும் மோதல். இந்தக் குழப்பத்தில் பணியில் கவனக்குறைவாக இருந்துவிட.. ரயில் தண்டவாளத்தில் குறுக்கே வந்த மாடுகளுடன் மோதி ரயில் நிற்கிறது.
டிரைவரும், உதவி டிரைவரும் ஒருவர் மாற்றி ஒருவர் திட்டிக் கொள்கிறார்கள். இந்த நேரத்தில் ஹரிஷ் சரோஜாவையும், தனுஷையும் கொலை வெறியோடு தாக்க வருகிறார். அவரிடத்தில் இருந்து தப்பிக்க நினைக்கும் சரோஜா திரும்பவும் ரயில் புறப்படும் சமயத்தில் வண்டியின் என்ஜின் அருகே ஏறிக் கொள்கிறார். அதே நேரம் தனுஷை ஒரு பெட்டியில் வைத்து பூட்டிவிடுகிறார் ஹரிஷ்.
ரயில் புறப்பட்ட சில நொடிகளில் டி.டி.ஆரு.க்கும், போஸ் வெங்கட்டுக்கும் இடையில் சண்டை நடக்க இருவரும் ரயிலில் இருந்து கீழே விழுந்துவிடுகிறார்கள். இதனால், உதவியாளர் இல்லாமலேயே ஆர்.வி.உதயகுமார் வண்டியை செலுத்துகிறார். திடீரென்று அவருக்கு நெஞ்சு வலி வந்து மயக்கமாக.. டிரைவரே இல்லாமல் ரயில், ஓவர் ஸ்பீடில் செல்கிறது.. மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பஞ்சாய் பறக்கிறது.
ஒரு பக்கம் தனுஷ் பெட்டிக்குள் மாட்டிக் கொண்டுள்ளார். இன்னொரு பக்கம் ஹீரோயின் கீர்த்தி சுரேஷ் என்ஜின் அருகே அமர்ந்திருக்கிறார். ஹரிஷ் இவர்களைத் தேடி வருகிறார். ரயில் வழியில் இருக்கும் ஸ்டேஷன்களுடன் தொடர்பே இல்லாமல் கட்டுக்கடங்காமல் எங்கும் நிற்காமல் போய்க் கொண்டிருக்கிறது.
முடிவு என்ன என்பதுதான் படம்..!
ஹிந்தி படமான ‘பர்னிங் டிரெயினின்’ கதையைத்தான் இப்போதைக்கு கொஞ்சம் டிங்கரிங் வேலை பார்த்து திருத்தியிருக்கிறார் பிரபு சாலமன்.  படத்தின் முற்பாதியில் சவசவ என்று நீளும் காமெடி காட்சிகளால்தான் படத்திற்கு நல்ல பெயர் கிடைக்கவில்லை. படத்தில் 25 நிமிட காட்சிகளை தயவு தாட்சண்யமே இல்லாமல் நீக்கிவிடலாம். அப்படி நீக்கினால் ஒரு கிரிப் கிடைத்திருக்கும்.
முற்பாதி எதை நோக்கி படம் செல்கிறது என்பது தெரியாமலேயே நகர்வதால் இடைவேளை பிளாக்கில்தான் படத்தின் கருவே தென்படுகிறது. இதன் பின்னான பகுதிதான் படத்தின் ஜெட் வேகம். நகைச்சுவை, நடிப்பு, திரைக்கதையில் இருக்கும் சுவாரஸ்யமான டிவிஸ்ட்டுகள் என்று பலவும் படத்தைத் தாங்கிப் பிடித்திருக்கின்றன.
தனுஷ் படத்திற்கு படம் மெருகேறியே வருகிறார். இதிலும் அப்படியே.. நக்கல் செய்கிறாரா..? அல்லது கிண்டல் செய்கிறாரா..? அல்லது இயல்பாகத்தான் பேசுகிறாரா என்பதையே தெரியவிடாத அளவுக்கு பல காட்சிகளில் நடித்திருக்கிறார். இதுவே அவரது நடிப்புக்கு சான்று. அதிலும் தம்பி ராமையாவை ஓவராக கலாய்க்கும் காட்சிகளில் ‘பாவம்யா அந்தாளு’ என்று ரசிகனையே புலம்ப வைத்துவிட்டார் தனுஷ்.
சரோஜா என்னும் கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் லவ்வுவது எல்லாம் இயக்குநரின் வேலை என்றாலும் அதையும் கச்சிதமாகவே செய்திருக்கிறார். பாடகியாக வேண்டும் என்கிற அவரது ஆசையைத் தெரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதுபோல நடித்து காதலியைக் கைப்பிடிக்க முயலும் ஆசை தப்புதான் என்றாலும்.. வழக்கமான சினிமா காதல்தானே என்ற ரீதியில் படத்தை அணுகும்போது மன்னித்துவிட்டுவிடலாம்.
கீர்த்தி சுரேஷ் மேக்கப் போடாமலேயே கொள்ளை அழகாகத் தெரிகிறார். நடிப்பும் பட்பட்டென தெறிக்கிறது. இறுதிக் காட்சியில் அந்த நேரத்திய டென்ஷனிலும் அவருடைய நடிப்பே படத்தைத் தாங்கியிருக்கிறது. இவருடைய அப்பாவித்தனத்தை பார்த்து ஒவ்வொரு முறையும் தனுஷ் ‘அடியே’ என்று இழுக்கும்போது ஏற்படும் சின்னச் சின்ன நகைச்சுவைகளே படத்தின் தூண்கள்.
இதேபோல் இன்னொரு பக்கம் தனது தனித்த நடிப்புத் திறனால் படத்திற்கு மேலும் சிறப்பு கூட்டியிருக்கிறார் ‘இளையவேல்’ நடிகர் ராதாரவி. சாண எரிவாயு துறை அமைச்சராக அவர் பேசும் ஒவ்வொரு டயலாக்கும், இன்றைய அரசியல் களத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
‘இந்த வேகத்துல போனா அந்தப் பாலம் இடிஞ்சு விழுந்திருமா?’ என்ற கேள்விக்கு, ‘ம்ஹூம்.. இடியாது. அது வெள்ளைக்காரன் கட்டின பாலம். நம்மாளு கட்டியிருந்தால் நிச்சயம் விழும்..’ என்று அவர் சொல்லும் பதிலுக்குத்தான் அதிகமான கைதட்டல் கிடைத்திருக்கிறது.
அதிலும் ஒவ்வொரு காட்சியிலும் வசனத்தை அவர் உச்சரிக்கும்விதமும், அதனூடேயே அவர் காட்டும் நடிப்பும், சோறை எடுத்து ஹரிஷின் முகத்தில் வீசிவிட்டு பெருங்கோபத்துடன் ‘வெளிய போடா‘ என்று சொல்லும்விதமும் அடாவடி அமைச்சரை அப்படியே காட்டியிருக்கிறது.
இன்னொரு பக்கம் பிரபு சாலமன் எந்தவொரு சினிமா இயக்குநரும் செய்யாத ஒரு வேலையைச் செய்திருக்கிறார். அது இந்திய செய்தி ஊடகங்களை நார், நாராக கிழித்திருப்பதுதான்.
இன்றைக்கு இந்தியாவில் தவறான, அவதூறான செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போய் திணிக்கும் வடக்கத்திய செய்தி சேனல்களின் பர்கா தத், அர்னாப் கோஸ்வாமி, பிரணாய் ராய் போன்றவர்களால்தான் இந்தியாவின் அரசியல், மக்களிடமிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ‘ஆமாம் சாமி’ போட்டு.. விளம்பரங்களை வாங்கிக் குவித்து மறைமுகமான பிரதிபலன்களையும் அடைந்து, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்ற செயல்களைத்தான் இந்த செய்தி சேனல்களில் பெருவாரியானவை செய்து வருகின்றன.
டி.ஆர்.பி. போட்டியினால் ஒரு குற்றம்சாட்டப்பட்டவரை உடனடியாக குற்றவாளி என்றே முடிவு செய்து அவருடைய வாழ்க்கைக்கே ஒரு முற்றுப்புள்ளி வைப்பது இந்த செய்தி சேனல்கள்தான்.
டிரெயனில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் முதலில் டிரெயின் கடத்தப்பட்டது என்றும், என்ஜின் அருகே கீர்த்தி சுரேஷை பார்த்தவுடன் பெண் தீவிரவாதி என்று திசை திருப்புவதும்.. டிரெயினில் கொள்ளையடிக்க வந்த கும்பலை டிரெயின் மீது பார்த்துவிட்டு அவர்கள்தான் டிரெயினை கடத்திய தீவிரவாதிகள் என்பதும், அமைச்சரை கடத்திவிட்டார்கள் என்றும் உண்மையே தெரியாமல் அள்ளிவிடும் கப்ஸா டிவிக்களை தோலுரித்திருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன்.
இதேபோல் கலந்துரையாடலில் வந்து அமர்ந்து கொண்டு நல்லதுக்கும், கெட்டதுக்குமே ஆயிரத்தெட்டு விளக்கங்களை கொடுக்கும் பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களையும் வறுத்தெடுத்திருக்கிறார். முக்கியமாக கோபண்ணாவும், ஹெச்.ராஜாவும் வறுபட்டிருக்கிறார்கள்.
ஒரு அவசர காலத்தில் ரயில்வே துறை என்ன செய்ய வேண்டும்..? என்னவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதில் ஆயிரத்தெட்டு அரசு பார்மாலிட்டீஸை வைத்துக் கொண்டு செய்வது என்பது முடியாத காரியம் என்பதையும் இதில் சுட்டிக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இப்படியொரு படத்திலும் காதல் இருக்க வேண்டுமா என்ற கேள்விக்கு.. இரு வேறு பதில்கள் இருக்கின்றன. வேறு வழியில்லை. இவ்வளவு பெரிய நடிகரை துணைக்கு வைத்துதான் இப்படியான பெரும் பொருட்செலவிலான படத்தை எடுக்க முடியும். போட்ட காசை எடுக்க வேண்டுமெனில் இப்படியொரு கதையம்சம் அவசியம் தேவையாய் இருக்கிறது. ரசிகன் மாறும் சூழல் வரும்போது இதெல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக மாறிவிடும்.
லாஜிக் மீறல் இல்லாமல் இது போன்ற படங்களை எடுக்கவே முடியாது. சினிமாதானே மறந்துவிடுவார்கள் என்றுதான் அனைத்து இயக்குநர்களும் நினைப்பார்கள். இதையேதான் பிரபு சாலமனும் நினைத்திருக்கிறார்.
இந்திய ரயில்வேயின் தண்டவாளங்கள் இப்போதும் 140 கிலோ மீட்டர் வேகத்தை தாங்க கூடியவையாக இல்லை என்பது முதல் உண்மை. இத்தனை ஸ்பீடில் செல்லும் ஒரு டிரெயின் மீது ஒருவர் எந்தக் கைப்பிடியும் இல்லாமல் நிற்பதோ, நடப்பதோ சாத்தியமே இல்லாதது என்பதும் உண்மைதான்.  
ஆனாலும் இது ஹீரோயிஸ படம் என்பதால் ‘எந்திரன்’ போல், ‘கபாலி’யை போல சண்டையிட வைத்து எடுத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் மிகப் பெரிய காமெடியாக இத்தனை களேபரத்திலும் கீர்த்தி சுரேஷை லவ்வும் தனுஷ் கடைசியிலும் ஒரு டூயட்டை பாடுவது மகா கொடுமை. இதற்கும் அந்த ஹீரோயிஸம்தான் காரணமாகும்.
எல்லாம் முடிந்து ஹீரோ செத்துப் போவதாக கதையமைத்தால் அவருடைய ரசிகர்களுக்குப் பிடிக்காதே என்பதால் இத்தனை விபத்துகளுக்குப் பின்பும் ஹீரோவையும், ஹீரோயினையும் உயிருடன் காட்டியிருக்கிறார் பிரபு சாலமன். “அவருடைய சென்ற படமான ‘கயல்’ படத்தில் காதலர்கள் கடைசியில் சாகடித்ததால்தான் அந்தப் படமும் செத்துப் போனது..” என்று ஒரு மவுத் டாக் கோடம்பாக்கத்தில் உலவி வருகிறது. இதையும் மனதில் வைத்துதான் பிரபு சாலமன் இந்த முடிவையெடுத்திருப்பார் என்று தோன்றுகிறது.
ஒட்டு மொத்தமாக பார்க்கப் போனால் மிக பிரமாதமான இயக்கம். அதிகப்படியான காட்சிகள்.. அதிகப்படியான ஷாட்டுகள்.. பிரபு சாலமன் எப்படி இதை எடுத்தார்..? எத்தனை நாட்களில் முடித்திருக்கிறார் என்பதெல்லாம் ஆச்சரியமான விஷயம்தான். நிரம்ப கஷ்டப்பட்டுத்தான் படத்தை உருவாக்கியிருக்கிறார் என்பதை படம் பார்த்தால்தான் புரியும்.
பலவித எள்ளல்கள், எல்லை மீறல்கள்.. கேள்விகள் இருந்தாலும் படத்தின் துவக்கம் முதல் கடைசிவரையிலும் நகைச்சுவை மிளிர அதிலும் இடைவேளைக்கு பின்பு காமெடி தர்பாரே நடந்திருக்கிறது என்றால் நிச்சயம் இது இயக்குநர் பிரபு சாலமனின் சிறப்பான இயக்கத்தினால்தான். அவருடைய இயக்க திறமைக்கு நமது சல்யூட்.
நிச்சயமாக ஒரு முறை பார்க்க வேண்டிய படம்தான் இந்தத் ‘தொடரி’ என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை..!

1 comments:

Unknown said...

அண்ணே கயல் படத்துல ஹீரோ ஹீரோயின் சாகமாட்டாங்க.... திருத்தவும்