இனிமேல் நானும் ஒரு சர்க்கரை நோயாளியே..!

08-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

எனது வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் துவங்கிவிட்டது என்றே நினைக்கிறேன்.

சென்ற வருடத்திய ஏப்ரல் மாதமே எனது வலது கண்ணில் புரை இருப்பதாகவும் அதனை சரி செய்ய உடனேயே ஆபரேஷன செய்ய வேண்டும் என்றும் வாசன் ஐ கேர் மருத்துவர்கள் அறிவுறுத்தியிருந்தார்கள். 

நான்தான் அப்புறம் பார்க்கலாம்.. பார்க்கலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். இந்த வருட புதிய துவக்க நாள்களில் ஏதோ ஒரு வித்தியாசம் கண்ணில் தெரியவே.. ஒரு இனம் தெரியாத பயம் வர.. மருத்துவமனைக்கு ஓடினேன். வாசன் ஐ கேரில் ஆபரேஷனுக்கு 13000 ரூபாய் கேட்டார்கள். மற்ற சில மருத்துவமனைகளிலும் இதேபோலத்தான் கேட்டார்கள். நான் இ்பபோது வாழும் பொழப்பில் இவ்வளவு பெரிய தொகையை செலவழிக்க முடியாத சூழல். 

அதனால் சின்னத்திரை இயக்குநர் சங்கத்தில் உறுப்பினர் என்கிற ரீதியில் சங்கம் அளித்த எஸ்.ஆர்.எம். மருத்துவ காப்பீட்டை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தேன்.

இதனாலேயே தூரமாக இருந்தாலும் கடந்த 4 நாட்களாக காலை 4.30 மணிக்கு அலாரம் வைத்து எழுந்து காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம்.மருத்துவமனைக்கு சென்று அலைந்து திரிந்து வந்து சேர்ந்திருக்கிறேன்.

இரண்டு கண்களிலுமே புரையையும் மீறி வேறு ஏதோ ஒன்று இருப்பதாக கண் மருத்துவர்கள் சந்தேகப்பட்டார்கள். “எங்காவது கரண்ட் ஷாக் எடுத்துக்கிட்டீங்களா?” என்று அபாயகரமான கேள்வியை கேட்டார் ஒரு பெண் மருத்துவர். திக்கென்று இருந்தது. “இல்லையே மேடம் ஏன்..?” என்றேன். என் கண்ணிலேயே காட்டினார்கள். லேசர் மூலமாக எடுத்தப் புகைப்படங்களில் எனது இரு விழிகளின் ஓரத்திலும் கருமை நிறங்களாக காட்சியளித்தன. 

பின்பு தலைமை மருத்துவரும் வந்து இரு தரப்பினரும் சகலவிதமான ஆங்கில டிக்ஷனரி வார்த்தைகளையும் பயன்படுத்தி ஒரு வழியாகப் பேசி முடித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். “ஆபரேஷனை செய்யப் போகிறோம்..” என்றார்கள். அதற்கு முன் அனஸ்தீஷியா மருத்துவரிடம் பிட்னெஸ் சர்டிபிகேட் வாங்கி வரும்படி பணித்தார்கள். இதை இவர்கள் சொல்லி முடிப்பதற்கே மதியம் 2 மணி ஆகிவிட்டதால் மறுநாள் போக வேண்டிய கட்டாயம்..!

மறுநாள் மயக்க மருத்துவியல் நிபுணரை சந்தித்து எனது கோரிக்கையை வைத்தேன். “ரத்தப் பரிசோதனை இல்லாமல் நான் சர்டிபிகேட் தர முடியாதே..” என்றார். “எனக்கு பி.பி., சுகரெல்லாம் இல்ல ஸார். இதுவரைக்கும் அது தொடர்பா எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை..” என்றேன் தீர்மானமாக. “நீங்க சொல்றது சரி. ஆனால் எங்க ரூல்ஸ்படி அதில்லாமல் நாங்க சர்டிபிகேட் தரவே முடியாது.. நீங்க திரும்ப கண் டிபார்ட்மெண்ட்டுக்கே போய் அவங்ககிட்ட எழுதி வாங்கிட்டுபோய் பிளட் டெஸ்ட் பண்ணிட்டு அதை எடுத்திட்டு வாங்க. தர்றேன்..” என்றார் தீர்மானமாக.

மறுபடியும் கண் டிபார்ட்மெண்ட்டுக்கு ரிட்டர்னாகி எழுதி வாங்கிக் கொண்டு லேபுக்கு போய் என்னுடைய ரத்த மாதிரியை தானமாகக் கொடுத்து ரிசல்ட்டுக்காக காத்திருந்தேன். கிடைத்தது. எதுவுமே தெரியாமல் வாங்கிச் சென்று சந்தோஷமாக நீட்டினேன். வாங்கியவர் பேஸ்தடித்துப் போய் அருகில் இருந்த நர்ஸிடம் தனது அதிர்ச்சியை கண்களிலேயே காட்டினார். வேக வேகமாக பேப்பரில் எழுதி என்னிடம் நீட்டி, "இதைக் கொண்டு போய் கொடுங்க.." என்றார். "என்ன ஸார்.. சுகர்ல ஏதும் பிரச்சினையா..?" என்றேன். "இல்லை.. இல்லை. அங்க போய் கேளுங்க.. சொல்வாங்க.." என்று சொல்லி முடிப்பதற்குள் எழுந்து போய்விட்டார்.

ஒரு சந்தேகத்துடனேயே கண் டிபார்ட்மெண்ட்டுக்கு வந்தேன். அங்கேயிருந்த பெண் பயிற்சி மருத்துவரிடம் கொடுத்தேன். பார்த்த கணத்தில் தன் வாயில் விரல் வைத்துவிட்டு என்னை அப்படியொரு முறை முறைத்தார். “என்ன ஸார் நீங்க..? சுகரே இல்லைன்னு சொன்னீங்க.. இப்போ 231 இருக்கு. இதுல எந்த ஆஸ்பத்திரிலேயுமே ஆபரேஷன் செய்ய மாட்டாங்க..” என்று கோபித்துக் கொண்டார். வாங்கிப் பார்த்தேன். சாப்பாட்டுக்கு முன்பு 70-ல் இருந்து 110-க்குள் இருக்க வேண்டிய சுகர் 148 இருந்தது. சாப்பாட்டுக்கு பின்பு 80-ல் இருந்து 140-க்குள் இருக்க வேண்டிய சுகர் 231 இருந்தது.

எனக்குத் தலையும் புரியலை.. காலும் புரியலை.. “மேடம்..  சத்தியமா இது எனக்குத் தெரியாது.. எப்படி வந்துச்சுன்னும் தெரியலை..” என்றேன். “அது யாருக்குமே தெரியாமல்தான் வரும். இதுல நாங்க ஒண்ணும் செய்ய முடியாது ஸார். அனஸ்தீஸியா டாக்டர், டயாப்டீஸ் டாக்டர்கிட்ட ஒப்பீனியன் கேட்டுக்குங்கன்னு எழுதிக் கொடுத்திருக்கார். நீங்க டயாப்டீஸ் டாக்டர்கிட்ட போய் செக்கப் பண்ணிட்டு வாங்க.. அப்புறம் பார்க்கலாம்..” என்று சொன்னவர், “இன்னொரு தடவை பிளட் டெஸ்ட் கொடுக்கணும். எழுதித் தரேன். அதையும் செஞ்சிருங்க..” என்றார். 

தற்செயலாக உள்ளே வந்த டிபார்ட்மெண்ட் சீப் டாக்டரிடம் இதை அவர் சொல்ல.. அவரோ கையெடுத்துக் கும்பிட்டார். “ஐயோ வேணாம் சாமி.. நீங்க சுகரை குறைச்சிட்டு வாங்க. ஆபரேஷன் பண்ணுவோம்..” என்றார். மறுபடியும், மறுபடியும் தயங்கி நின்றேன். பெரிய டாக்டர் தோளில் கை போட்டு ஆதரவாக “வேற வழியில்லை ஸார்.. சுகர் அதிகமா இருக்குற நேரத்துல எந்த ஆபரேஷனும் செய்யக் கூடாது. இது மெடிக்கல் ரூல்ஸ். சுகரை குறைச்சிருங்க. அப்புறமா ஆபரேஷனை பண்ணிக்கலாம். ஒண்ணும் பிரச்சினையில்லை. போங்க..” என்று அன்புடன் சொல்லி அனுப்பி வைத்தார்.

ஆஹா.. இந்த ஒரு ஆபரேஷனை வைச்சே எல்லா வார்டையும் ஒரு ரவுண்டு அடிச்சிரலாம் போலிருக்கேன்னு நினைத்தேன். புதிய டெஸ்ட்டுக்கு அரக்கப் பரக்க ஓடி.. சீக்கிரமா கொடுத்திட்டால் இன்னிக்கே ரிசல்ட்டை வாங்கிரலாமேன்னு நினைத்து ஓடிப் போய் கியூவில் நின்னு செஞ்சாச்சு..! கடைசியாக பசிக்குதே.. கொஞ்சம் வயித்துக்கு போட்டுக்குவோமே.. என்று சாப்பிட்டுவிட்டு தெம்பாக சர்க்கரை வியாதி செக்ஷனுக்குள் போய் நின்னேன். 

புது ஆடு ஒண்ணு சிக்கிருச்சு என்பது போலவே நர்ஸ்கள் பார்த்தார்கள். டயாப்டீஸ் டாக்டரோ எனக்குக் கல்யாணம் பண்ணி வைக்குற லெவல்ல குடும்ப பரம்பரையையே கேட்டுவிட்டு, “இன்னொரு பிளட் டெஸ்ட் எடுக்கணும். போய்க் கொடுங்க. அந்த ரிசல்ட்டோட வாங்க. பேசுவோம்...” என்றார்.  “இப்போதான் ஸார் பிளட் கொடுத்தேன்..” என்று சொல்லி ஒரு சீட்டை காட்டினேன். வாங்கிப் பார்த்துவிட்டு, “இது யூரின் டெஸ்ட்.. இப்போ கொடுக்கப் போறது உங்களோட மூணு மாச சுகர் கவுண்டிங் எப்படியிருக்குன்னு தெரிஞ்சுக்கத்தான்..! போங்க..” என்று விரட்டியேவிட்டார்.

மறுபடியும் லேப். இப்பவும் மூன்று முறையும் ரத்தம் உறிஞ்சிய அதே டெக்னீஷியன் பொண்ணு. “என்ன ஸார்.. திரும்பவும்..?” என்று கேட்டு ஆச்சரியப்பட்டார். விஷயத்தைச் சொல்ல.. “பாவம்தான் ஸார் நீங்க..” என்று ஆற்றிவிட்டு ஒரு கப் நிறைய ரத்தத்தை உறிஞ்சி எடுத்து விட்டுத்தான் அனுப்பினார். “இந்த ரிசல்ட்டும் நாளைக்குத்தான் ஸார் கிடைக்கும். வேற வழியே இல்லை. வந்துதான் ஆகணும்..” என்றார்கள். நம்ம நேரம் இப்படித்தான் இருக்குன்றப்ப அவங்களை குத்தம் சொல்லி என்ன புண்ணியம்..? திரும்பி வந்தேன்.

மறுநாள் காலை மறுபடியும் விஜயம். கொஞ்சம் காத்திருப்புக்குப் பின்னர் ரிசல்ட் கைக்கு கிடைத்தது. HBA1c Result 8.3 ஆக இருந்த்து. 4.5-6.0-க்குள்தான் இருக்க வேண்டுமாம். E AG 192 இருந்த்து. 126-க்குள்தான் இருக்க வேண்டுமாம். யூரினில் சுகர் மூன்று பிளஸ் பாயிண்ட்டுகள். ஒரேயொரு ஆறுதலாக ஹீமோகுளோபின் 12.7-தான் இருந்த்து. இது13-17 இருக்க வேண்டுமாம். 

டயாப்டீஸ் மருத்துவரிடம் வந்து அமர்ந்தேன். பார்த்தார். எந்த சலனத்தையும் காட்டவில்லை. “மாத்திரை தர்றேன்.. டயட்டியீஷனுக்கு எழுதித் தர்றேன்.. அவங்ககிட்ட என்னென்ன சாப்பிடணும்..? எப்படி சாப்பிடணும்ன்னு தெரிஞ்சுக்குங்க.. திரும்பவும் திங்கள்கிழமை வாங்க.. குறைஞ்சிருச்சுன்னா கண்டிப்பா கையெழுத்து போட்டுத் தரேன்..” என்றார்.

டயட்டீஷன் செக்ஷன் வந்தமர்ந்தால் அதுவரையில் இருந்த பசியையும் அப்படியே ஓரம்கட்டிவிட்டார்கள்.



இனிமேல் சக்கரை, இனிப்பு வகைகள், அதிகப்படியான அரிசி சாதம், இளநீர், கோக், பெப்சி வகையறாக்களை தொடவே கூடாது.



காலைல 3 இட்லி அல்லது 3 இடியாப்பம் அல்லது 2 தோசை  அல்லது ஒன்றரை கப் உப்புமா, அல்லது 3 சப்பாத்தி. அதிலும் கோதுமை சப்பாத்திதான்.  என்ற ரீதியில் இரண்டு பக்கங்களுக்கு என்ன நேரத்தில், எந்த அளவில் சாப்பிட வேண்டும் என்று எழுதியே கொடுத்துவிட்டார்கள்..!  வாங்கிப் படித்தால் பசியே மறந்துபோய்விடும்..!




ஆக.. இந்த உண்மைத்தமிழனின் புலம்பல்கள் இந்தாண்டில் இருந்து இன்னும் அதிகமாக ஒலிக்கும் என்பதை வேறு வழியில்லாமல் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டுள்ளேன்.

நமக்குக் கிடைச்சிருக்கிற பிச்சைக்கார வாழ்க்கைல இருக்குற பிரச்சினையே போதாதா என்று நினைத்தால், இந்த கேடு கெட்ட முருகப் பய வருஷத் துவக்கத்திலேயே வைச்ச இந்த டிவிஸ்ட்டுதான் என் வாழ்க்கையில் சூப்பரானது...! இதுதான் கடைசியானது என்றும் நான் நினைக்கிறேன்..! 

சாவதற்கு நான் எப்போதும் பயப்படவில்லை. ஆனால் கஷ்டப்படுத்தாமல் கூப்பிட்டுக்கடான்னுதான் கேட்டுக்கிட்டேயிருக்கேன். பயலுக்கு என்னை மாதிரியே காது செவுடு போலிருக்கு..! ஆத்தா, அப்பன், பொண்டாட்டிகளோட அவன் மட்டும் நல்லாவே இருக்கட்டும்..! 

29 comments:

ப.கந்தசாமி said...

//எனது வாழ்க்கையின் கடைசி அத்தியாயம் துவங்கிவிட்டது என்றே நினைக்கிறேன்.//

இப்பத்தானுங்க வாழ்க்கையின் முதல் அத்தியாயம் தொடங்கியிருக்கிறது! நான் முப்பது வருடமா இந்த சுகரோட வாழ்ந்திட்டிருக்கிறேன்.

மொதல்ல பயப்படாதீங்க. சுகர் இல்லாட்டித்தான் மனுசங்க செத்துப்போயிடுவாங்க. சுகர் கட்டாயம் வேண்டும். என்ன, அது கொஞ்சம் அதிகமானா வம்புகள் வரும். சரியான மாத்திரைகள், உணவுப் பழக்கங்கள் மூலமாக இதைச் சரி பண்ணீடலாம்.

ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் எனக்கு எழுதுங்க. நான் இலவச ஆலோசனைகள் வழங்குகிறேன். drpkandaswamy1935@gmail.com

வடுவூர் குமார் said...

உ.தமிழன், கவலை வேண்டாம். FB யில் ஆரோக்கியம் & நல்வாழ்வும் குழமத்தில் இதைப் பற்றி விவாதித்துள்ளார்கள்' ஆர்வம் இருந்தால் அங்கு செல்லப்பட்டுள்ளவற்றை பார்க்கவும்.

பாலகிருஷ்ணன் said...

ஹிஹிஹி... ஓன்னும் பயந்துக்காதீங்க! 1999லிலேயே சர்க்கரை வந்தாச்சு. அதோட BP, heartல ஓரு வால்வு ரிப்பேர்ன்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்பறம் 3 ஆபரேஷன் பண்ணி வண்டி ஓடிட்ருக்கு...

பாலகிருஷ்ணன் said...

ஹிஹிஹி... ஓன்னும் பயந்துக்காதீங்க! 1999லிலேயே சர்க்கரை வந்தாச்சு. அதோட BP, heartல ஓரு வால்வு ரிப்பேர்ன்னு சொல்லிட்டாங்க. அதுக்கப்பறம் 3 ஆபரேஷன் பண்ணி வண்டி ஓடிட்ருக்கு...

ஸ்ரீராம். said...

சர்க்கரை வியாதி நம் தேசிய வியாதி. உடற்பயிற்சி, டயட் கன்டரோல் போதும். கவலைப்படாதீங்க.. முருகன் இருக்கான். அவன் காப்பாத்துவான்.

வருண் said...

****இந்த கேடு கெட்ட முருகப் பய வருஷத் துவக்கத்திலேயே வைச்ச இந்த டிவிஸ்ட்டுதான் என் வாழ்க்கையில் சூப்பரானது...! இதுதான் கடைசியானது என்றும் நான் நினைக்கிறேன்..!


Read more: http://www.truetamilan.com/2016/01/blog-post_8.html#ixzz3wfm4vPer****

நீங்க் அப்பன் முருகனைத் திட்டுறதுகூட செல்லமாக கொஞ்சுவதுபோலதான் இருக்கு! :))

ஆமா, ராஜ நடராஜன் மறைவு பற்றி உங்களுக்குத் தெரியும்தானே?


வருண் said...

டயட்ல இருந்ந்துகொண்டே இந்தப் பதிவில் உள்ள கடைசிப் பின்னூட்டங்களைப் பார்க்கவும்

http://parvaiyil.blogspot.com/2015/12/blog-post_30.html

ஒருமுறை உங்களை நான் ஏதோ சொல்லிட்டேன்னு உங்களுக்காக வரிந்துகட்டிக்கொண்டு நின்றார் ராஜ நடராஜன்! :(

அகநாழிகை said...

அண்ணே, உடம்பைப் பார்த்துக்கோங்க. கூட நாங்க, நண்பர்கள் எல்லாம் இருக்கோம் என்பதை மறந்துடாதீங்க. எஸ் ஆர் எம் போவதற்கு முன்னால எங்களுக்குச் சொல்ல வேணாமா, காலையில எழுந்து ஓடறேன்னு பதிவுதான் பார்த்தோம். எந்த உதவின்னாலும் சொல்லுங்கண்ணே, நான் இருக்கேன். என்னைப்போல நிறைய பேர் உங்களோட அன்பு வட்டத்தில இருக்கோம். மனசார பிரார்த்திக்கறேன். வலியில்லாம வாழ்க்கை வாழ்வீங்க. அன்பு என்றென்றென்றும்.

பொன். வாசுதேவன் (இது என் பேரு!) :P

சீனு said...

ஏன் நீங்க வாசனே போகனுமா? பணம் பத்தலைன்னா, மவுன்ட் சங்கர நேத்ராலயா போங்க. 5000க்குள்ளயே சரி பன்னிடலாம். சில இடங்கள்ல (சங்கரால கூடனு நெனைக்கிறேன்) இலவசமா கூட பன்றாங்க.

மவுன்ட் சங்கர நேத்ராலயான மாறன்னு ஒருத்தர் இருக்கார். அவர்கிட்ட விசாரிங்க. அவர் நம்பர் வேணும்னா கொடுக்கிறேன்.

மற்றபடி, என் தந்தைக்கு ஆபரேஷன் பன்னும் போது 230-275 இருந்துச்சு. அதுக்கெல்லாம் பிரச்சினையில்லைனுட்டாங்க. பெருசா அலட்டிக்கல.

பிபி தான் இருக்கக்கூடாது. அதுவும், அப்போதைக்கு மாத்திரை கொடுத்து குறைச்சு ஆபரேஷன் பன்னிடறாங்க.

சீனு said...

இன்னொன்னு. வாசன் சரியான கொள்ளை கும்பல். இன்சூரன்ஸ் இருக்கேனு ஒரு முறை வாசன் போனா, 42000 ஆகும்னு சொன்னான். சரின்னு திரும்ப சங்கர நேத்ராலயா போனா, 25000 ஆச்சு.

Unknown said...

Don't disappointed in life.Come and join Aarokiyam and Nalvalvum group in FB. There are thousands of diabatic patients got cured and living their life pleasant.

chandrasekaran said...

சங்கரநேத்ராலயாவில் இலவசப் பிரிவும் இருக்கு. நமது குடும்ப வருவாயைப் பொருத்து முடிவு செய்கிறார்கள். வேலூர் சி.எம்.சி.யில் கண் மருத்துவமனை தனியா இருக்கு. அங்கேயும் கட்டணங்கள் குறைவு. இலவசமும் உண்டு

Unknown said...

இதுக்கு போயி அலட்டிக்கலாமா :)

நிஷா said...

ஆப்ரேசன் செய்த பின் காயங்கள் சீக்கிரமாக ஆறவும் ஆப்ரேசன் நேரம் கத்தி படும் இடத்தில் இரத்தம் கட்டுப்படவும் நம் உடலில் சர்க்கரை கன்ரோலில் இருக்க வேண்டும். சர்க்கரையின் அளவை கணக்கிட்டு ஆப்ரேசன் செய்வோம் என டாக்டர்கள் சொல்வது சரியே! அத்தோடு வயதான பின் வரும் புரை போன்ற கண் நோய்களுக்கு இப்போது லேசர் சிகிச்சையே செய்கின்றார்களே. ஒரே நாளில் வீடும் வந்து விடலாம். உங்களுக்கு என்ன பிரச்சனை என தெளிவாக தெரியவில்லையாயினும் இது வாழ்க்கையின் கடைசி என மனம் தளராதீர்கள். இது தான் ஆரம்பம். இதுவும் கடந்து போகும் என நினையுங்கள்.

எல்லாமே சரியாகிடும்.

ஆர். அபிலாஷ் said...

சரியாகி விடும். கவலைப்படாதீர்கள். 2 மணிநேரத்துக்கு ஒரு முறை எதையாவது லைட்டாக சாப்பிடுங்கள். குறைவான ரத்த சர்க்கரை தான் ஆபத்து. கவனம். மதியம் சோற்றை குறையுங்கள். சம்பா அரிசி நல்லது. காலையில் அதிக இட்லிகள் வேண்டாம். அவ்வளவு தான். அந்த டயட் ஷீட்டை கடாசுங்கள். அது படியெல்லாம் நாம சாப்பிட முடியாது

துளசி கோபால் said...

அடடா.... இதுக்குப்போய் கடைசி காலம் என்றெல்லாம் புலம்பாதீங்க. சக்கரைக்கு இயற்கை வைத்தியம் கூட இருக்கு. கண்ட்ரோலில் வச்சுக்க முடியும்.

எனக்கு நாலு வருசமா சக்கரை. மருந்துகளோடு சமாளிக்கிறேன். ரெண்டு வருசத்துக்கு முன்னே ரெண்டு கண்களுக்கும் ஸர்ஜரி நடந்துச்சு.

உணவுக் கட்டுப்பாடு கட்டாயம் வேணும். கூடவே கொஞ்சம் நடக்கணும்.அது சரியாச் செஞ்சா பிரச்சனை இல்லை. டேக் கேர்!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

உங்கப்பன், எங்கப்பனுமான முருகனை நீங்கள் கொஞ்சும் அழகே தனி!
நான் 10 ஆண்டுகளாகவும் என் மனைவி 15 ஆண்டுகளாகவும், இந்தச் சக்கரையுடனே வாழ்கிறோம். ஐயா கந்தசாமி 30 வருடமாம், பயப்படாதீர்கள்.
தனியாகச் சக்கரை சேர்க்கும் உணவுகளை உடனே நிறுத்தவும்.நன்கு காலாற, வியர்வை சிந்த நடக்கவும்.
இது வரை சாப்பிட்ட அளவில் அரைவாசி அளவே என இன்று முதல் தொடங்குங்கள். மெல்ல மெல்ல அதிகம் சாப்பிடுவது கட்டுக்குள் வந்து,குறைந்த சாப்பாட்டில் பசியும் அடங்கும்.
வெந்தயக் கீரை, குறிச்சாக் கீரை உணவில் சேர்க்கவும்.
லட்டு, சொக்கலட், தித்திக்கும் பழங்களை இப்போதைக்குத் தவிர்க்கவும். கட்டுப்பாட்டுள் வந்தபின் ஆசைக்கமலவுடன் அப்பப்போ சாப்பிடலாம்.
இதுக்கெல்லாம், பயப்படவேண்டாம். இது வியாதியில்லையாம், குறைபாடாம்.

யூர்கன் க்ருகியர் said...

Don't worry.... You will be alright!

? said...

எனக்கு தெரிஞ்ச புரப்பசர் ஒருத்தரு சர்க்கரை வியாதிக்காரரு, 11 மணிக்கு சர்க்கரையில்லா காபி குடிப்பாரு, ஆனா மத்தியான சாப்பாட்டுக்கு போனா புல்லா சரக்கு ஏத்திக்கிட்டு வந்துருவாரு (சாயங்காலம் குடிச்சிட்டு வீட்டுக்கு போனா பொண்டாட்டி வெளுத்துரும்). படிக்கற ஒரு பொம்பளைப் புள்ளைய விடமாட்டாரு, தொல்லை குடுத்துகிட்டே இருப்பாரு- அப்பாலோ ஆஸ்புத்திரி ஒரு டாக்டரோட மனைவி, ஒரு ஊனமான பொண்ணுன்னு பலரை புராஜ்கடை விட்டு ஓட வைச்சிருக்காரு.ஒரு க்குளு - இவரு பேரறிஞர் பல்கலைக்கு ஒரு வருசம் விசியா வேற இருந்தாரு! இதெல்லம் அவரு பண்ணும் போது வயசு 60 நெருங்கிட்டு இருந்தது. இப்படி வயசான சர்க்கரை வியாதிஸ்தர்களே கும்மாளம் போடும் போது உங்களுக்கு என்ன - இப்படி என்ன அயோக்கியத்தனமா பண்ணப் போறீங்க, இன்னும் வயசிருக்கு அடிச்சு ஆடுங்க!

Unknown said...

பயப்படவே வேண்டாம். முப்பது வருஷமாக முப்பது வயது முதல் இந்த குறைபாடுடன் நோயல்ல குறைதான் வாழ்கிறேன். உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிர்ச்சியும் நலம் பயக்கும்.

Unknown said...

பயப்படவே வேண்டாம். முப்பது வருஷமாக முப்பது வயது முதல் இந்த குறைபாடுடன் நோயல்ல குறைதான் வாழ்கிறேன். உணவுக்கட்டுப்பாடும் உடற்பயிர்ச்சியும் நலம் பயக்கும்.

”தளிர் சுரேஷ்” said...

சுகர் உள்ள பலர் மருந்து மாத்திரைகள் உணவுக்கட்டுப்பாடுடன் நீண்டநாள் வாழ்ந்து வருவதை நானும் கண்டுள்ளேன்! பயம் வேண்டாம். கண் புரை நீக்க சங்கர நேத்ராலயா தான் பெஸ்ட் என்று தோன்றுகிறது. இங்கு இலவசமாகவும் கண் சிகிச்சை செய்கின்றார்கள். கட்டணம் வாங்கி செய்தாலும் குறைவு. சிறப்பாகவும் செய்கிறார்கள். என் உறவினர்கள், நண்பர்கள் சிலர் இங்கு வைத்தியம் செய்துள்ளதால் கூறுகின்றேன்! தைரியம் இழக்காதீர்கள்! விரைவில் பூரண நலம் அடைய பிரார்த்திக்கிறேன்! நன்றி!

Ant said...

இது ஒரு குறைபாடு மட்டுமே. உணவுப்பழக்கத்தைக் கொண்டு கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். கவலைப்படதேவையில்லை.

chennaiboys said...

Don't worry u will be alright

chennaiboys said...

Don't worry u will be alright

உசிலை விஜ‌ய‌ன் said...

எனக்கும் சர்க்கரை வியாதி இருக்கின்றது. உணவுக்கட்டுப்பாடு மற்றும் சிறிய உடற்பயிற்சி போதும். ஒன்றும் உயில் போகும் பிரச்சினை இல்லை. உறுதியாக இருங்க பாஸ்.

இந்த கேடுகெட்ட சமூகம் நம்மைபோன்ற கீழ் நடுத்தர இனத்தினை ஒரு பயமுறுத்தல், மற்றும் நம்பிக்கையில்லாத மனத்திலேயே தான் வைத்திருக்கும். அதை மீறி வெளியே வருவது மிகக்கடினம் அல்ல. மிக மிகக் கடினம். ஆனால் முடியாதது அல்ல.

எதோ ஒரு நேரத்தில் உங்கள் மனது மாறி சரியான பாதையில் போகனும் அதுதான். முருகன் ஏசு அல்லா எல்லோரையும் விடுங்க. இடம் , தோரனை, அனுகுமுறை தொழில் அனைத்தையும் மாற்றுங்கள். பெரிதாக குறி வையுங்கள், அதைநோக்கியே நகருங்கள், மிக முக்கியம் நம்பிக்கையாக நருங்கள் மற்றும் நகர்த்துங்கள்.

இந்த சமுதாயத்தில் நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. தோரனை மற்றும் அனுகுமுறைதான் மிக கட்டளை நிறைந்ததாக இருக்கனும்.

வெற்றிநிச்சயம். வாழ்த்துக்கள்.

மலரன்பன் said...

//நமக்குக் கிடைச்சிருக்கிற பிச்சைக்கார வாழ்க்கைல இருக்குற பிரச்சினையே போதாதா என்று நினைத்தால், ...சாவதற்கு நான் எப்போதும் பயப்படவில்லை. ஆனால் கஷ்டப்படுத்தாமல் கூப்பிட்டுக்கடான்னுதான் கேட்டுக்கிட்டேயிருக்கேன். //

இது பொய்யான வாசகம்.

இவ்வியாதிக்குத் தமிழர்கள் வைத்த பெயர் பணக்கார வியாதி. (உண்மையில் இதை வியாதி என்றழைக்கமாட்டார்கள் ஆங்கிலத்தில்). பெயர் காரணம் மெத்தவும் சரி. பணக்காரர்களுக்கு உணவுப்பஞ்சம் கிடையாது. மேலும் வகை வகையாகவும் கிடைக்கும். அவர்தம் உடலுழைப்பில் அப்பணம் வரவில்லை. எனவே உடலுழைப்பு அவர்களுக்கு கிடையாது. அளவுக்கு மேலாக, தவறான உணவுகளைப் பணக்காரத்தனமாக உட்கொள்ளும் வழக்கத்தை உடையவர்களாதலால், பழங்காலத்தில் அவர்களுக்கு மட்டுமே இவ்வுடற்பிரச்சினை வந்தது. எனவே பணக்கார வியாதி என்றார்கள் தமிழர்கள்.

பிச்சைக்காரனைப்போல வாழும் போதும் வரும்; காரணம் அவன் உடலுழைக்காது. உட்கார்ந்து கொண்டே சாப்பாடு கிடைக்கிறது.

உடலுழைத்து வாழும் ஏழைக்கும் அவன் குடுமபத்தினருக்கும் இவ்வியாதி வரவே வராது. காலையிலிருந்து மாலைவரை உடலுழைத்து சொற்ப கூலியைப்பெற்று, சொற்பமான‌ சாப்பாடுதான். அப்படியே அதிகமாக சாப்பிட்டால் அது உடலில் தேங்காமல் உடலுழைப்பின் கரைந்து விடும். எனவே குருதியின் சர்க்கரை அளவு எப்போதுமே சரியாக இருக்கும். எனவேதான் கண்ணதாசன பாடினார்: ஏழையென்றால் அது ஓர் அமைதி.

கஷ்டப்படுத்தாமல் கூப்பிடவேண்டுமென் இறைவன் என்பதும் பொய். காரணம். சர்க்கரை வியாதியினால் வரும் மரணம் மற்ற வியாதிமரணங்களைவிட பெட்டர்தான். இதயக்கோளாறில் மற்றவருக்குச் சிரமம் ஏற்பட்டே போவர். எம் ஜி ஆர் படுக்கையிலேயே மரணமடைந்தார். அவருக்கு கடும் சுகர்.

கிட்னி பாதிப்பு, கண் பார்வை போதல் - இவையொன்றும் வலிய மரணங்கல்ல. ஆனால், கண் போனபின், காலையெடுத்த பின் பிறர் தயவில் வாழவேண்டும். அது மனத்தைச் சங்கடப்படுத்தும்.

உடலுழைக்காமல் வாழ்ந்ததால் உங்களுக்கு சுகர் வந்தது. அதை ஏற்காமல் மறைக்க முடியாது.

பலர் நோய்களினால் மரணமடைவர். சிலர் நோய்களால் மரணபயமேற்பட்டு அப்பயத்தினால் மரணத்தை சீக்கிரமடைவர்.

Unknown said...

நன்றி. ஐயா

Unknown said...

நன்றி. ஐயா