தற்காப்பு - சினிமா் விமர்சனம்

01-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கொலை, கொள்ளை, தீவிரவாதத்தை தடுக்கிறோம் என்கிற பெயரில் காவல்துறையினர் செய்து வரும் அப்பட்டமான மனித உரிமை மீறலான என்கவுண்ட்டர் படுகொலைகளை பற்றி அலசி ஆராயும் திரைப்படம் இது.

சக்தி வாசு துடிப்பான இன்ஸ்பெக்டர். என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். இதுவரையில் 10-க்கும் மேற்பட்ட என்கவுண்ட்டர் படுகொலைகளை செய்திருக்கிறார். இவர் கடைசியாக செய்யும் என்கவுண்ட்டர் மிகப் பயங்கரமான ரவுடியான ரியாஸ்கானை. ஆனால் இந்த என்கவுண்ட்டர் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்று மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுக்கின்றன.
இதனால் இதனை விசாரிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம், அஸிஸ்டெண்ட் கமிஷனரான சமுத்திரக்கனியை நியமிக்கிறது. அவரும் சக்தி வாசு மற்றும் அவரது சப் இன்ஸ்பெக்டர்களை அழைத்து விசாரித்து உண்மையை தெரிந்து கொள்கிறார்.
மனித உரிமை கமிஷனுக்கு தனது அறிக்கையை தாக்கல் செய்கிறார் சமுத்திரகனி. இதன் விளைவாக சக்தி வாசுவும், அவரது சப்-இன்ஸ்பெக்டர் நண்பர்களும் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில், இவர்களையே போலீஸார் சுட்டுக் கொல்ல முயல்கிறார்கள். அது ஏன் என்பதும் இறுதியில் இவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதும்தான் இந்த ‘தறகாப்பு’ படத்தின் சுவையான கதை.
இதற்கிடையில் வழக்கமான காதலை எதிர்பார்த்து தியேட்டருக்கு வரும் கூட்டத்தினரையும் திருப்திபடுத்த வேண்டி இரண்டு காதல் ஜோடிகளின் கதையும் படத்தில் இருக்கிறது. ஒரு ஜோடி டெல்லிக்கு அவசரமாக போக வேண்டி டிரெயினில் இடம் கிடைக்காமல் புதுமணத் தம்பதிகளின் டிக்கெட்டில் போலியாக பயணம் செய்து இறுதியில் காதலர்களாக மாறுகிறார்கள்.
இன்னொரு ஜோடியில் காதலன் தற்கொலைக்கு முயன்ற நேரத்தில் காதலி தன் அம்மாவுக்கு ரத்தம் வேண்டும் என்று அழுது அடம் பிடிக்க, மருத்துவமனைக்கு வந்து ரத்தம் கொடுக்கிறார் காதலர். பின்பு இவர் தற்கொலை செய்து கொள்ள தோதான இடம் தேடி காதலியும் இவருடனேயே அலைகிறாள். இவர்களின் காதல் இப்படித்தான் துவங்குகிறது.
கடைசியில் இரண்டு காதலிகளும் ஒரே நேரத்தில் வீட்டில்  இருந்து எஸ்கேப்பாக..  மீட்டிங் பாயிண்ட்டான சிவாஜி நகர் பஸ்ஸ்டாப்புக்கு வருகிறார்கள். அங்குதான் அந்த விடியற்காலை பொழுதில் என்கவுண்ட்டரும் நடைபெறவுள்ளது. இவர்களும் வந்து சிக்கிக் கொள்ள அடுத்தது என்ன என்பதை பதைபதைக்கும் கிளைமாக்ஸோடு முடித்திருக்கிறார் இயக்குநர் ரவி.
ஒரு சஸ்பென்ஸ் திரில்லராக படத்தைத் துவக்கி அந்த டென்ஷனை இடைவேளைவரையிலும் கொண்டு சென்றிருக்கிறார்கள். இடைவேளைக்கு பின்பு சமுத்திரகனியின் ‘ஆபிஸர் ஸார்’ என்கிற இரண்டு வார்த்தைகளே படத்தை அதிகம் தாங்கிப் பிடித்திருக்கின்றன.
சக்தி வாசு இதுவரையிலும் ஏற்காத ஒரு முரட்டு இன்ஸ்பெக்டர் வேடத்தை இந்தப் படத்தில் ஏற்றிருக்கிறார். அதற்கேற்ற முகபாவனைகளைக் காட்டி, என்கவுண்ட்டரின்போது ரியாஸ்கானை சுட்டுக் கொல்லும் நிகழ்வுக்கு, நியாயம் கற்பிக்கும் உணர்வில் ஒரு நியாயமற்ற போலீஸ்காரனை நினைவுபடுத்தியிருக்கிறார்.
சமுத்திரகனிக்கு ஏற்ற கேரக்டர். வசன உச்சரிப்பும், அலட்டிக் கொள்ளாமல் அதட்டலாக நடிக்கும் நடிப்பாற்றலும் கனிக்கு கை வந்த கலையாக இருக்கிறது. அதனால்தான் படத்துக்கு படம் போராளியாகவே நடித்து வருகிறார்.
சமுத்திரகனி, சக்தி வாசு அண்ட் கோ-வை விசாரணை செய்யும் காட்சிகளில் பார்வையாளனுக்குள் ஒரு எதிர்பார்ப்பையும், டென்ஷனையும் ஏற்றிவிட்டிருக்கிறார் இயக்குநர்.  விசாரணை கேள்விகளும், அந்தக் காட்சிகளின் இயக்கமும் சிறப்பானவை. பாராட்டுக்கள் இயக்குநருக்கு.
சமுத்திரகனி பேசும் வசனங்களை மனித உரிமை அமைப்புகள் மட்டுமின்றி பத்திரிகைகளும், பொதுமக்களும்தான் கேட்டுக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால் பதில்கான் கிடைப்பதேயில்லை.
காவல்துறையின் வேலை தண்டனை தருவதல்ல.. குற்றமே நடக்காமல் தடுப்பதுதான்.. விசாரித்து தீர்ப்பு வழங்க கோர்ட்டுகள் இருக்கும்போது நீதியை காக்க வேண்டிய போலீஸ் தீர்ப்பு எழுதலாமா..? போலீஸ் சட்டத்தைக் காக்கலாம். ஆனால் கொலையாளியாக இருக்கக் கூடாது என்பது போன்ற பல வசனங்கள் குத்தீட்டியாய் அதகளம் செய்கின்றன. வசனகர்த்தாவான இயக்குநருக்கு கூடுதலாக ஒரு ஷொட்டு..!
காதலர்கள், காதலிகளில் ரயில் காதலியும், தற்கொலைக்கு முயலும் காதலரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள். கிளைமாக்ஸில் தான் அடிபட்டிருப்பதை காதலியிடம் சொல்ல வேண்டாம் என்று மறுத்தபடியே மடிபவரும், அந்த நேரத்திலும் ரத்த தானம் அளிக்க அழைப்பு வருவதை எடுத்துச் சொல்லி மருத்துவமனைக்கு தன்னைக் கொண்டு போகும்படி கெஞ்சும் அந்த நடிப்பும் மனதைத் தொடத்தான் செய்தது..! இரவு நேர காட்சிகளின் ஒளிப்பதிவும், பின்னணி இசையும் படத்திற்கு ஆறுதலாக இருக்கின்றன.
தற்கொலைக்கு முயலும் காதலரை பேசியே ஏமாற்றும் காதலியும், டிரெயினில் காதலர் செய்யும் ரகளை சமாளிக்க முடியாமல் தவிக்கும் அந்தக் காதலியும் நடிப்பில் குறை வைக்கவில்லை. அந்தக் காட்சிகளை மிகவும் ரசிக்க வைத்திருக்கிறார்கள்.
எந்தவொரு அரசியல் படத்திலும் முடியும் அளவுக்கு லாஜிக் மீறல்கள் இருக்கத்தான் செய்யும். இதிலும் அப்படியே..!
இதுவரையில் இந்தியாவில் நடைபெற்ற போலி என்கவுண்ட்டர்கள் ஏராளம். இதை விசாரிக்கும் பொறுப்பை மாநில அரசுகளிடமிருந்து சிபிஐக்கு கிடைத்தும் சி.பி.ஐ. தண்டனை வாங்கிக் கொடுத்தது என்னவோ சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற ஒரு என்கவுண்ட்டர் படுகொலையில்தான். மற்றவையெல்லாம் குப்பைத் தொட்டிக்கு போய்விட்டன.
சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்கிறோம் என்று சொல்லி கர்நாடக போலீஸும், தமிழக காவல்துறையும் இணைந்து தமிழகத்து மலைவாழ் மக்களை பிடித்து ஹிட்லரின் நாஜி முகாம்களின் சித்ரவதைக்கு ஈடு செய்யும்வகையில் அராஜகத்தை நிகழ்த்தி பல படுகொலைகளை செய்து முடித்தன. ஆனால் இதில் ஒரு கொலைகூட இன்னமும் நிரூபிக்கப்படவில்லை. நூற்றுக்கணக்கான மலையில் வாழ்ந்த ஆண்கள் இப்போதும் காணாமல் போனவர்களாகவே கருதப்படுகிறார்கள்.
வீரப்பனின் கூட்டாளியை போல சீருடை அணிவிக்கப்பட்டு முகாமிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வரவேயில்லை. இப்படி எத்தனையை ஆண்களை இழந்த குடும்பங்கள் இன்றைக்கும் தர்மபுரி, ஈரோடு, கோவை மலைப் பகுதிகளில் கதறிக் கொண்டுதான் இருக்கின்றன.
அதேபோல் தமிழகத்தில் ஜெயல்லிதா ஆட்சி செய்த 15 ஆண்டுகளிலும் நடந்த என்கவுண்ட்டர்களில் எந்த கொலைக்கும் இதுவரையிலும் நீதி கிடைக்கவில்லை. அதேபோல் இந்த என்கவுண்ட்டர்களில் இதுவரையில் ஒரு போலீஸ்கூட இறந்ததில்லை என்பது மறுக்க முடியாது உண்மை. இரண்டு நாட்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக இருந்துவிட்டு ஜாம், ஜாமென்று வீட்டுக்கு போயிருக்கிறார்கள் கொலையாளிகள். இன்றைக்கும் அந்தக் கொலையாளிகள் போலீஸ் டிரெஸ்ஸை அணிந்து கவர்ன்மெண்ட் சம்பளத்தை வாங்கிக் கொண்டு கடமையாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். யாரால் தடுக்க முடிந்தது..?
இந்தப் படத்தில் சொல்லியிருப்பதுபோல் தேசிய மனித உரிமை ஆணையம் ஒரு நபர் கமிஷனை நியமித்து விசாரிக்கச் சொல்வதெல்லாம் நடைமுறையில் சாத்தியமில்லாதது. சி.பி.ஐ. விசாரணை மட்டுமே தொடர வாய்ப்புண்டு. அப்படியே விசாரித்தாலும் இதில் சமுத்திரகனி விசாரித்த்துபோல அவர் ஒருவரே விசாரித்து கண்டறிந்து அறிக்கையை சமர்ப்பிப்பதெல்லாம் இது போன்ற சினிமாவில் மட்டுமே முடியும்.
மேலே சொன்ன குஜராத் போலி என்கவுண்ட்டர் கொலைகளுக்கு தீர்வு கிடைத்தது எப்படியெனில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததால்தான். இப்போது மேல்முறையீட்டில் இந்த வழக்கும் உடையத்தான் போகிறது என்று டெல்லியில் பந்தயமே கட்டி வருகிறார்கள் பத்திரிகையாளர்கள்.
“இந்தியாவில் மிகப் பெரிய விஷயம் அரசியல்தான். அது எங்கள் கைகளில்..” என்கிறார் என்கவுண்ட்டர்களை செய்ய வைத்த தொழிலதிபர். “இல்லை. ஜனநாயகம்தான் மிகப் பெரிய சக்தி படைத்தது…” என்கிறார் சமுத்திரகனி. ஆனால் அந்த ‘போலி ஜனநாயகம்’ இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் காண்பிக்கப்படுவதை போல கிழிந்து பல தோரணங்களாக தொங்கிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
அனைத்து திரைப்படங்களையும் போலவே இதிலும் தர்மம் தோற்று, அதர்மமே வெல்வதாக முடித்திருக்கிறார்கள். இதுதான் நிஜமும்கூட..!
வருடத்தின் துவக்கத்தில் மனித உரிமைகளைப் பேசும் அரசியல் படம்..!

0 comments: