ரஜினி முருகன் - சினிமா விமர்சனம்

15-01-2016

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


அஜீத், விஜய்க்கு பிறகு மிகப் பெரிய ஓப்பனிங்கை கையில் வைத்திருக்கும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் இது. தப்பாமல் மிகப் பெரிய வசூலை குறி வைத்து நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது..!
‘வருத்தப்படாத வாலிபர் சங்க’த்தை இயக்கிய பொன்ராமின் அடுத்த படம் இது என்பதாலும் தப்பில்லாமல் அது போலவே கமர்ஷியலாக, காமெடியை முன் வைத்து சுவையான திரைக்கதையில் பின்னப்பட்டிருக்கிறது படம்.!
கதைக் களம் மதுரை. சிவகார்த்திகேயனின் தாத்தாவான ராஜ்கிரணுக்கு நிறைய பிள்ளைகள். அவர்களில் பலரும் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு மகனான ஞானசம்பந்தம் மட்டும் உள்ளூரில் ஒரு பள்ளியின் தலைமையாசிரியராக இருக்கிறார். இவருடைய மகன்தான் சிவகார்த்திகேயன்.  
இவரும் இவரது நண்பரான சூரியும் வழக்கம்போல வெட்டி ஆபீஸர்கள். வேலைக்கே போகக் கூடாது என்கிற கொள்கையில் இருப்பவர்கள். வீட்டில் இருவரையும் தண்ணி தெளித்து விட்டுவிட்டார்கள். ஒரு ஜோஸியக்காரனின் பேச்சைக் கேட்டு தொழில் துவங்கலாம் என்றெண்ணி  ஆபீஸ் போட்டு அமர்கிறார்கள்.
இந்த நேரத்தில் மதுரையின் பிரபல ரவுடியான சமுத்திரக்கனி சிவாவின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறார். பணக்காரர்களிடம் அடிக்கடி பணம் கேட்டு மிரட்டும் பழக்கமுள்ள சமுத்திரக்கனி சிவாவிடமும் பணம் கேட்க.. சிவா தர முடியாது என்று சொல்ல சிவாவின் அலுவலகத்தை அடித்து நொறுக்குகிறார். விவகாரம் போலீஸ் கேஸாக.. போலீஸில் சிக்காமல் இருக்க வேண்டி அலுவலகத்தை அடித்து நொறுக்கியதற்கு நஷ்டஈடாக 2 லட்சம் ரூபாயை கனி, சிவாவுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது.  வாங்கி மட்டுமே பழக்கமுள்ள கனிக்கு கொடுக்க வேண்டியதாகிவிட்டதே என்கிற கோபம் வெறியாகி மாறியிருக்கிறது.
இப்படி போகும் ஒரு நன்னாளில் சிவா கண்ணில் கீர்த்தி சுரேஷ் பட்டுவிட.. அவரை காதலிக்கத் துவங்குகிறார் சிவா. கீர்த்தியின் அப்பாவான அச்யுத குமாரும், சிவாவின் அப்பாவான ஞானசம்பந்தனும் முன்னாளில் மிக நெருங்கிய குடும்ப நண்பர்கள்.  இந்த அச்யுத குமார் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர்.
சிவாவுக்கு ‘ரஜினி முருகன்’ என்று பெயர் வைத்ததே அச்யுத குமார்தான். கீர்த்தியும், சிவாவும் சின்ன வயதில் விளையாடிக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட ஒரு பிரச்சினையால் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் இப்போது பேச்சுவார்த்தை இல்லாமல் போய்விட்டது.
இது அனைத்தையும் அறிந்திருக்கும் சிவா, கீர்த்தியை காதலித்தே தீருவது என்கிற கொள்கையில் இருக்கிறார். இதற்காக கீர்த்தியின் வீட்டிற்கு எதிரிலேயே ஒரு டீக்கடையை போட்டு அமர்ந்துவிடுகிறார். அச்யுத குமார் கீர்த்தியிடம் சிவாவை பற்றி எச்சரித்து ‘காதல்’, ‘கீதல்’ன்னு எதுவும் வரக் கூடாது என்கிறார். ஆனால் கீர்த்தி சிவாவின் காதல் வலையில் சிக்கிவிடுகிறார்.
இந்த நேரத்தில் தாத்தா ராஜ்கிரண் தனது செல்லப் பேரன் சிவாவை எப்படியாவது செட்டில் செய்துவிட வேண்டும் என்று துடிக்கிறார். இதனால் தான் வசித்து வரும் அந்த பங்களாவை விற்றுவிட்டு அனைவருக்கும் அவரவர் பங்கை கொடுத்து செட்டில்மெண்ட் செய்துவிட துடிக்கிறார். மகன்களுக்கும், மகள்களுக்கும் போன் செய்து சொல்லியும் யாரும் வர மறுக்கிறார்கள்.
இதனால் சிவாவின் தூண்டுதலில் ஒரு டிராமா போடுகிறார். குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். இந்த நேரத்தில் சமுத்திரக்கனி தானும் ராஜ்கிரணுக்கு பேரன் உறவுதான் என்றும், தனக்கும் இந்த வீட்டில் பங்கு இருப்பதாகச் சொல்லி புதிய பிரச்சினையுடன் வந்து நிற்கிறார்.
காதல் கை கூட வேண்டுமெனில் தான் வாழ்க்கையில் செட்டிலாக வேண்டும். அதற்குப் பணம் வேண்டும். அந்தப் பணம் இந்த வீட்டை விற்றால்தான் கிடைக்கும். வீட்டை விற்பதற்கு சமுத்திரக்கனி இடையூறாக நிற்கிறார் என்கிற சூழலில் சிவகார்த்திகேயன் என்னும் ரஜினி முருகன் என்ன செய்தார் என்பதுதான் இடைவேளைக்கு பின்னான சுவாரஸ்யமான கதையின் சுருக்கம்..!
கமர்ஷியலாக நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இடைவேளைக்கு முன்பான திரைக்கதையில் சூரியை பிரதானமாக வைத்து நகர்த்தியிருக்கிறார்கள். படத்தில் ஆங்காங்கே வெளிப்படும் வெறித்தனமான நகைச்சுவையில் தியேட்டரே அதிர்கிறது.
உச்சப்பட்ச காமெடி வாழைப்பழத்தை பிடுங்கப் போய் டீக்கடையே சரிந்து விழுவதுதான். இது போன்ற காட்சியமைப்புகளிலேயே நகைச்சுவையை வரவழைப்பதெல்லாம் அனைத்து இயக்குநர்களுக்கும் வந்துவிடுவதில்லை. பொன்ராம் போன்ற ஒரு சிலரிடம்தான் மட்டும் அது இருக்கிறது.
இந்தப் படத்தின் அடிநாதமே.. தானும் ஒரு பேரன் என்று சொல்லி ஒருவர் வந்து இடையூறு செய்வதுதான். இதை அப்படியே இரண்டாம் பாதியில் சுவையான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.
முதல் கட்ட பஞ்சாயத்து கனிக்கு சாதமாகப் போய் கடைசியில் திகிலோடு முடிய.. இரண்டாம்கட்ட பஞ்சாயத்தில் கனிக்கு எதிர்ப்பாகப் போகும் நிலைமையை சரிவர பேலன்ஸ் செய்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள். முடிவில் வரும் ஒரு டிவிஸ்ட் யாருமே எதிர்பாராதது.  படம் பார்க்கும் அனைவருக்குமே தோன்றிய “இந்த பங்களாவை எதுக்கு விக்கணும்..?” என்கிற கருத்தை கிளைமாக்ஸில் சொல்லி படத்தை முடித்திருப்பது எதிர்பாராத திருப்பம்தான்.
சிவாவை குடும்பத்தினர் மொத்தத்திற்கும் பிடித்துப் போகிறது என்றால் அதற்குக் காரணம் அவருடைய இயல்பான நடிப்பு, வசன உச்சரிப்புதான். அப்பா, அம்மாவிடம் நல்ல பெயர் எடுக்க முடியாமல் தவித்தாலும், கெட்ட பெயரையே எடுத்தாலும்.. யதார்த்தமாக திட்டு வாங்கிக் கொண்டு அலையும் பலருக்கும் எடுத்துக்காட்டாய் ஸ்கிரீனில் நடித்துவிடுவது சிவாவின் பிளஸ் பாயிண்ட்..!
இவரும் சூரியும் ஆடும் காமெடி பல்லாங்குழியில் காட்சிக்கு காட்சி வசனங்கள் வந்து தெறித்து விழுகின்றன. “நீங்களே காமெடி பண்ணிக்கிட்டா இடைல நான் எதுக்கு இங்க..?” என்று சூரி அலுங்காமல் கேட்கின்ற காட்சியில் தியேட்டரே குலுங்குகிறது. இதேபோல் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் போல மேக்கப் போட்டவர்கள் பேசுகின்ற டயலாக்குகளில் கமல் பேசத் துவங்குவதற்கு முன்பேயே “ஐயையோ…” என்கிற பீலிங்கில் சூரியும், சிவாவும் தப்பி ஓடுவதில் தியேட்டர் ஆடுகிறது. இப்பத்தான் மதுரைல கமல் ரசிகர்களுடன் ரகளையாச்சு.. அதுக்குள்ள இது ஏன் சிவா இப்படி..?
சூரி இன்றைய நிலைமைக்கு அனைத்து நடிகர்களுக்காகவும் திரையில் தோன்றிக் கொண்டிருக்கிறார். ஆனால் தனிப்பட்ட முறையிலான நடிப்பு திறமையை இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. எதிலாவது தனித்துவம் மிக்கவராக வருவார் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
கீர்த்தி சுரேஷ். கொள்ளை அழகு. சிரித்தாலே போதும் என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது அவரது மந்தாரப் புன்னகை. பாடல் காட்சிகளில் சொக்க வைத்திருக்கிறார். பாவாடை, தாவணி யாருக்கு சூட் ஆகிறதோ இல்லையோ.. கீர்த்தி சுரேஷ் பச்சக்கென்று மனதில் இடம் பிடித்துவிட்டார். அதிகமாக நடிப்புக்கென்று ஸ்கோப் இல்லையென்றாலும், காதல் காட்சிகளில் ரொமான்ஸை கொட்டியிருக்கிறார். 
ராஜ்கிரண் வழக்கம்போல.. தாத்தாவாக மருகுவதும், பிள்ளைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் அப்பனாக தவிப்பதும்.. 2 வயது பேரனை பார்த்து இப்பத்தான் வாழ்க்கைல முதல் முறையா பார்க்கிறேன் என்று சொல்லி கண்ணீர் விடுவதுமாக நடிப்பை பிழிந்தெடுத்திருக்கிறார். இவர் பேசும் ஒவ்வொரு வசனமும் வெளிநாடுகளில் படம் பார்க்கும் தமிழக மக்கள் ஒவ்வொருவரையும் ஒரு நாள் இரவு நிச்சயம் தூங்கவிடாது..!
ஏழரை மூக்கனாக நடித்திருக்கும் சமுத்திரக்கனிக்கு வித்தியாசமாக வில்லன் வேடம். அடிபட்டாலும் படாததுபோல “பிரிச்சு மேய்ஞ்சிட்டோம்ல்ல.. நம்மள பார்த்து பூராப் பயலுவலும் விலகி ஓடிட்டானுகளே…” என்று கெத்தாக பேசியபடியே செல்லும் நடிப்பு அக்மார்க் டாப்புதான்..!
அச்யுதகுமாரின் நடிப்பு ஒரு பக்கம் பேசப்படுகிறது. மகளுக்கு அட்வைஸ் செய்ய ரஜினியின் படங்களில் இருந்தே காட்சிகளை காட்டுவது டச்சிங்கானது. தலைமுடியை சிலுப்பிக் கொண்டு இவர் பேசும் டயலாக்குகளும்.. நண்பனுக்கு ஒன்று என்றவுடன் தானே தேடி வந்து நட்பை புதுப்பித்து உதவி செய்ய முன் வருவதும் சூப்பரான திரைக்கதை.!
பாலசுப்ரமணியெம்மின் கேமிராவில் கீர்த்தி சுரேஷின் அழகை இன்னும் கொஞ்சம் கூட்டிக் காண்பித்திருக்கிறார். காட்சிக்குக் காட்சி ஒரு சின்ன நெருடல்கூட இல்லாமல் படமாக்கியிருக்கிறார். பாடல் காட்சிகளில் கேமிராவுக்கு மிகப் பெரிய பங்களிப்பு உண்டு..! மாடு விரட்டும் காட்சி.. பஞ்சாயத்து காட்சி.. கோவில் திருவிழா காட்சி என்று பெருந்திரளான காட்சிகளை ரசனையாக படமாக்கியிருக்கிறார் கேமிராமேன்.
இமானின் இசையில் வழக்கமான அதே மெட்டுக்களில்தான் பாடல்கள் தெறிக்கின்றன. ‘உன் மேல ஒரு கண்ணு’ பாடல் வழக்கம்போல ஹிட்டு.. ‘என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ பாடல் காலத்திற்கேற்ற சிச்சுவேஷன் பாடல். கேட்க சுகமாய்த்தான் இருக்கிறது.  இன்னும் எத்தனை நாளைக்கு இதே மெட்டுக்களில் பாடல்களை போடுவார்கள்..? கொஞ்சம் மாத்துங்கப்பா..!
ஒரு கமர்ஷியல் படத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுத்து “நம்பி வாங்க.. சந்தோஷமா போங்க…” என்பதை ஸ்லோகனாக வைத்து விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். இது பக்கவான உண்மைதான்.
நம்பி போகலாம். சிரிச்சுக்கிட்டே வரலாம்..!

3 comments:

Hari said...

இப்படி போகும் ஒரு நன்னாளில் சிவா கண்ணில் கீர்த்தி சுரேஷ் பட்டுவிட.. அவரை காதலிக்கத் துவங்குகிறார் சிவா. பின்புதான் தெரிகிறது கீர்த்தி, சிவாவின் அப்பாவின் நெருங்கிய நண்பரான அச்யுதகுமாரின் மகள் என்று..) கதையை நல்லா புரிந்து கொண்டு விமர்சனம் பண்ணுங்க சார். சிவா லவ் பன்ன அப்புறம் தான் அது அப்பாவோட நண்பரின் மகள் என்று சிவாவுக்கு தெரியும்னு சொல்ரீங்க. கதைல அப்படி எல்லாம் ஒன்னும் இல்லயே. சின்ன வயதில் இருந்தே சிவகார்த்திகேயனுக்கு அந்த ஹீரோயின் அப்பாவோட நண்பனின் மகள் என்று தெரியும். கதையே புரிஞ்சிக்காம விமர்சனம் எழுதரீங்க.

வருண் said...

***கமல் பேசத் துவங்குவதற்கு முன்பேயே “ஐயையோ…” என்கிற பீலிங்கில் சூரியும், சிவாவும் தப்பி ஓடுவதில் தியேட்டர் ஆடுகிறது. இப்பத்தான் மதுரைல கமல் ரசிகர்களுடன் ரகளையாச்சு.. அதுக்குள்ள இது ஏன் சிவா இப்படி..?***

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கேரக்டர் ஒரு ரஜினிரசிகர் என்பதால் கமல் பேசத் துவங்கும்போது ஓடுவதாக எடுத்து இருக்கலாம். அதை நீங்க சினிமாவாப் பார்க்கணும்னு நினைக்கிறேன். :)

எது எப்படியோ, இந்தப் படம் வெற்றியடைந்து லிங்குசாமி ஓரளவுக்கு பண நெருக்கடியை சமாளிச்சு எந்திரிச்சா சரிதான்.


துளசி கோபால் said...

ரஜினிமுருகனுக்கு அம்மாவாக நடிப்பவரின் பெயர் என்ன? வேறெங்கேயோ பார்த்த முகமாக எனக்குத் தெரிகிறது!