உப்பு கருவாடு - சினிமா விமர்சனம்

28-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

‘அழகியே தீயே’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மொழி’, ‘அபியும் நானும்’, ‘பயணம்’, ‘கெளரவம்’ ஆகிய படங்களை தந்த இயக்குநர் ராதாமோகனின் பெருமைமிக்க அடுத்த படைப்பு இது.

ஒரு தோல்விப் படம்.. அடுத்தப் படம் பாதியிலேயே டிராப் என்கிற கேரியரை கையில் வைத்திருக்கும் இன்னமும் அதிகம் பேசப்படாத இயக்குநரான கருணாகரன்.. இப்போதும் தனது அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட்டை எழுதி தயாராக வைத்திருக்கிறார்.
கருணாவின் நண்பரான தயாரிப்பு நிர்வாகி மயில்சாமி 2 கோடி ரூபாயில் ஒரு தயாரிப்பாளர் தயாராக இருப்பதாகவும், “படம் இயக்க நீ ரெடியா..?” என்கிறார் கருணாவிடம். கருணா இதற்கு ஒத்துக் கொள்ளாக வேண்டிய சூழல்.. அவருடைய தங்கைக்கு விரைவில் திருமணம். அடுத்த சில நாட்களில் திருமண நிச்சயத்தார்த்தம் என்று பல சொந்த சுமைகள் அழுத்துகின்றன.
தனது நண்பர்களான உதவி இயக்குநர்கள் சாம்ஸ், நாராயணன் இவர்களோடு தயாரிப்பாளரை சந்திக்கச் செல்கிறார். தயாரிப்பாளர் ‘நெய்தல்’ ஜெயராமன் என்ற பெயருடன் இருக்கும் எம்.எஸ்.பாஸ்கர். காசிமேட்டில் மிகப் பெரிய தொழிலதிபர். மீன் பிடி ஏற்றுமதி தொழிலில் விற்பன்னர். கூடவே ஒரு பில்டப் சாமியாரை வைத்துக் கொண்டு அவர் சொல்வதை நம்பிக்கையோடு கேட்டு நடப்பவர்.
“தனது இரண்டாவது மனைவி மூலம் பிறந்த ஒரே மகளான பூங்குழலியை ஹீரோயினாக நடிக்க வைத்தால்தான் இந்தப் பட வாய்ப்பு..” என்கிறார் எம்.எஸ்.பாஸ்கர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போகக் கூடாது என்று உதவியாளர்களும், மயில்சாமியும் வற்புறுத்தவே இயக்குநர் கருணாகரன் படத்தை இயக்க ஒத்துக் கொள்கிறார்.
இந்த நேரத்தில் மயில்சாமி தனது உறவினர் பையனான ‘டவுட்’ செந்திலை மூன்றாவது அஸிஸ்டெண்ட்டாக கருணாகரனிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். கதையும், திரைக்கதையும் உருவாகிறது. சமுத்திரகுமாரி என்று பெயர் வைக்கிறார்கள்.
இடைவேளை நெருங்கும் சமயத்தில் ஹீரோயின் அறிமுகமாகிறார். பூங்குழலியாக வரும் நந்திதா குழந்தைத்தனமான பேச்சுடன் இருக்கிறார். ஒரு ஹீரோயினுக்கான பேச்சும், நடத்தையும் அவரிடத்தில் இல்லாத்தால் அவரை வைத்து படத்தை இயக்க முடியாது என்கிற நிலைமை ஏற்படுகிறது.
கருணாகரனின் வீட்டின் மேல் மாடியில் குடியிருக்கும் ரக்சனா மீது கருணாவுக்கு காதல். ரக்சனாவின் அழகும், நடிப்புத் திறனையும் பார்த்து அவரை இதில் நடிக்க வைக்க விரும்புகிறார். ஆனால் அது முடியாமல் போனாலும் நந்திதாவுக்கு நடிப்புச் சொல்லிக் கொடுக்க ரக்சனாவை பயன்படுத்திக் கொள்கிறார் கருணா.
அனைவரும் சேர்ந்து வற்புறுத்துவதால் ஒரு வழியாக நந்திதாவை ஹீரோயினாக்கி படமெடுக்க தயாராகிறார் கருணா. படத்தின் பூஜை தினத்தன்று கருணாவுக்கு பேரதிர்ச்சி. ஹீரோயின் நந்திதா திடீரென்று காணாமல் போக.. எம்.எஸ்.பாஸ்கர் தனது அடியாட்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரில் வந்து கருணா உட்பட படக் குழுவினரை அடித்து உதைத்து இவர்களை இழுத்துப் போகிறார்..
ஏன்..? எதற்கு..? என்பதெல்லாம் சுவையான திரைக்கதை. இதை இங்கே படித்தால் படம் பார்க்கும்போது நிச்சயம் சுவாரஸ்யம் இருக்காது என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறோம். அவசியம் படத்தைப் பார்த்து மிச்சத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
சினிமா தயாரிப்பது சுலபமல்ல என்று தயாரிப்பாளர்களும், சினிமா இயக்குவது சுலபமல்ல என்று இயக்குநர்களும் சொல்லி வரும் அதேவேளையில், சினிமாவை இயக்கும் வாய்ப்பு கிடைப்பதும் அவ்வளவு சுலபமல்ல என்பதை சொல்வதற்காகவும் இந்தப் படத்தை ஒரு உதாரணமாகக் காட்டலாம்.
சினிமாவை களமாகக் கொண்டு எடுக்கப்படும் படங்களெல்லாம் ஓடாது என்பது கோடம்பாக்கத்தின் மவுத் டாக். நிச்சயம் ஓடும் என்பதை இந்தப் படம் நிரூபிக்கும் என்றே நம்பலாம்.
தன்னுடைய முந்தைய படங்களை போலவே இந்தப் படத்தையும் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படமாகத்தான் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் ராதாமோகன்.
படத்தின் மிகப் பெரிய பலமே கேரக்டர் ஸ்கெட்ச்சுதான். இதுவரையில் எந்த பிம்பத்திலும் சிக்கிக் கொள்ளாத கருணாகரன், நகைச்சுவையில் பின்னியெடுக்கும் சாம்ஸ், கூடவே பயணிக்கும் நாராயணன், அப்பாவித்தனத்தை தனது முகத்திலேயே ஒளித்து வைத்திருக்கும் ‘டவுட்’ செந்தில், குணச்சித்திர நடிப்பில் மின்னி வரும் எம்.எஸ்.பாஸ்கர், அழகுடன் நடிப்பையும் சேர்த்து தரும் ஹீரோயின் நந்திதா, ராதாமோகனின் ‘செட் பிராப்பர்ட்டி’ என்றே சொல்லும் அளவுக்கு அவருடைய அனைத்து படங்களிலும் இடம் பிடித்திருக்கும் யதார்த்த நடிகரான குமரவேல், விஜய் டிவியின் ‘சரவணன் மீனாட்சி’யில் மீனாட்யாக ஒளிர்ந்த ரக்சனா.. என்று அத்தனை பேருமே அவரவர் கேரக்டர்களில் குறையே சொல்லாத அளவுக்கு நடித்திருக்கிறார்கள்.
கருணாகரன் பல இடங்களில் நடிக்கவே இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மிக இயல்பாக இருக்கிறார். சாம்ஸ் மற்றும் நாராயணனின் கவுண்ட்டர் வசனங்களுக்கு பதில் சொல்லும் அளவுக்கு கருணாவுக்கும் வசனங்கள் எழுதப்பட்டிருப்பதும், அதை அவர் கை தேர்ந்த ஒரு நகைச்சுவை நடிகரை போல பயன்படுத்தியிருப்பதும்தான், காட்சிக்கு காட்சி நகைச்சுவை மிளிர்ந்ததன் காரணம்..!
மாரிமுத்துவிடம் ‘ஆள், ஆளுக்கு வந்து படத்துக்கு இடைஞ்சல் செய்தால் எப்படி?’ என்று கருணாகரன் பொங்கித் தீர்க்கும் காட்சி சூப்பரோ சூப்பர். இந்தக் காட்சி அடுத்த சில நாட்களில் அனைத்து சேனல்களிலும் தவிர்க்க முடியாத காட்சியாக வலம் வரும் என்பதில் சந்தேகமில்லை. கருணாவுக்கும் அவரது நடிப்பு கேரியரை சுட்டிக் காட்ட இந்த ஒரு காட்சியே போதுமானது.
அதேபோல் பூங்காவில் ரக்சனாவுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும்போது இன்ஸ்பெக்டர் வந்து ரவுசு செய்ய.. ரக்சனா அவரை வார்த்தைகளால் விளாசும் காட்சி, லட்சணக்கான நட்புகளுக்கு சமர்ப்பணமான விஷயம்.
அடுத்துக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ரக்சனாவை. டிவி சீரியலிலேயே அத்தனை முக பாவனைகளை நொடியில் காட்டி அசத்தும் இவர், தனக்குக் கிடைத்த காட்சிகளில்லாம் பெயரைத் தட்டிச் சென்றுள்ளார். நந்திதாவுக்கு நடிப்பு சொல்லித் தரும் காட்சியில் இவரையே ஹீரோயினாக போட்டிருக்கலாமே என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அப்படியொரு ‘பேக்கு’ கேரக்டருக்கு இவர் சரிப்பட்டு வர மாட்டார் என்பதும் ஒரு சரியான வாதம்தான்..!
படத்தின் அத்தனை பெரிய தாக்கத்தையும் கிளைமாக்ஸில் எம்,எஸ்.பாஸ்கர் உடைத்தெறிந்து தனது மீதான பரிதாப உணர்வு ஏற்படும் அளவுக்கு நடிப்பில் பின்னியிருக்கிறார். திருமூலரின் மந்திர வார்த்தைகளைச் சொல்லி அறிமுகமாகி அவ்வப்போது இடையிடையே அவர் சொல்லும் இன்ஸ்டண்ட் கவிதைகளும், குறள்களும், சொல்லாடல்களும் ராதாமோகனின் படத்தில் மட்டுமே கிடைக்கும் தமிழ் இலக்கிய லட்டுக்கள்..!
இவருடனேயே இருக்கும் போலி சாமியாரின் சினிமா ஆசையும், அதற்காக அவர் நடித்தும் திடீர் டிராமாவும்கூட காமெடிதான்..! சாம்ஸ் மற்றும் நாராயணனின் கடி மற்றும் துணுக்குகள் படத்திற்கு மிகப் பெரிய பலம். மயில்சாமி எதற்கெடுத்தாலும் சகுனம் பார்ப்பதும், சாம்ஸ் எதற்கெடுத்தாலும் திருக்குறளை உதாரணமாகக் காட்டுவதும் படத்தை மிக மிக சுவாரஸ்யப்படுத்தியிருக்கிறது. இவர்களையும்விட ‘டவுட்’ செந்திலு அதில் கொஞ்சம் அதிகமாகவே ஸ்கோர் செய்திருக்கிறார்.
அறிமுகமாகும்போது இருக்கும் அதே இன்னசென்ட் பேபியாகவே வருபவர்,, இவரைத் தேடி வந்து மலையாளப் பாடலை பாடி வாய்ப்பு கேட்கும் அந்த சேட்டனின் பாடலுக்கு இவர் காட்டும் மெளனமான அந்த ரியாக்ஷனே தியேட்டரை சிரிப்பலையில் குலுங்க வைக்கிறது. கடைசியில் இவரா ‘அந்த’ வேலையைச் செய்தது என்கிற திடீர் ஆச்சரியம் ப்ளஸ் திகைப்பை ரசிகர்களுக்கு ஏற்படுத்துவதும் நிஜம்.
‘மாஞ்சா’வாக வரும் குமரவேல் மூலமாக இன்றைய இளம் இயக்குநர்களுக்கு நிறைய அறிவுரைகளை வாரி வழங்கியிருக்கிறார் ராதாமோகன். நல்ல விஷயங்கள்.. எங்கே, யார் மூலம் கிடைத்தாலும் ஈகோ பார்க்காமல் அதையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சினிமா என்பது கூட்டு முயற்சி.. தனி நபர்களின் வெற்றி அல்ல என்பதைச் சொல்வதற்காகவே குமரவேலை பயன்படுத்தியிருப்பது போல தெரிகிறது.
குமரவேல் சொல்லும் பல காட்சிகள்தான் உண்மையிலேயே படத்தின் திரைக்கதை என்பதுதான் இந்தப் படத்தின் மெய்யான சிறப்பு. அந்த வகையில் திரைக்கதைக்குள் ஒரு திரைக்கதை என்று வைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் ராதாமோகன்.
‘இந்தக் கதையை எழுதும்போதே நடிகை நந்திதாவை மனதில் வைத்துதான் அந்த கேரக்டரை உருவாக்கினேன்’ என்று இயக்குநர் ராதாமோகன் இந்தப் படத்தின் பிரஸ்மீட்டில் தெரிவித்தார். அது முற்றிலும் சரியானது என்பதை நிரூபித்திருக்கிறார் நந்திதா. இப்படியொரு ‘பேக்கு’ கேரக்டருக்கு அவருடைய முகமும், நடிப்பும் ஒத்து வந்திருக்கிறது.  “இல்ல ஸார்.. ஆமா ஸார்..” என்று நந்திதா இழுத்து இழுத்து பேசும்போதே இவரை வைச்சிக்கிட்டு இவர் என்ன பாடுபடப் போறாரோ என்று நமக்குள் ஒரு கிண்டல் தோன்றுகிறது. இதைத்தான் இயக்குநரும் எதிர்பார்த்தார். நந்திதாவுக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள்..!
படத்தின் இன்னொரு முக்கிய பலம் வசனங்கள். பொதுவாகவே ராதாமோகனின் திரைப்படத்தில் வசனங்கள்தான் அதிகமாகப் பேசப்படும். இந்தப் படத்திலும் அதேதான். வசனகர்த்தா பொன்.பார்த்திபனின் அத்தனை வசனங்களும் முத்துக்கள்.
நகைச்சுவையும் அதே சமயம் கதையை நகர்த்தும் திரைக்கதையாகவும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதுதான் இந்தப் படத்தின் சிறப்பு. ஒரு நிமிடம் ஸ்கிரீனை கவனிக்கவில்லையென்றால்கூட நாம் ஒரு சிரிப்பை இழுத்துவிடுவோம் என்கிற மனப்பான்மையை ஏற்படுத்திவிட்டது இந்தப் படம்.
படம் முழுவதுமே கடற்கரையோம் என்பதாலும், நிறைய காட்சிகள் பகல் நேரம் என்பதாலும் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமின் ஒளிப்பதிவு எந்த நெருடலையும் கொடுக்கவில்லை. நந்திதா ஆடும் அந்த பாடல் காட்சியை மட்டுமே இரவில் படமாக்கியிருக்கிறார்கள். பாடலைவிடவும் நடனம் சூப்பர். ஆனாலும் ராதாமோகனின் படத்தில் இதனை எதிர்பார்க்கவில்லைதான். ஸ்டீவ் வாட்ஸின் இசையில் பின்னணி இசையிலேயே நகைச்சுவைத் தூண்டும் அளவுக்கு அதற்கு தோதான இசையை அமைத்திருக்கிறார்கள். அதிகம் அலுப்படிக்காமல், காதைக் கடிக்காமல் இருப்பதால் இசையமைப்பாளருக்கு ஒரு ஜே. அதே சமயம் பாடல்கள் அதிகம் கவரவில்லை என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். அதனால் என்ன..? இப்போதும் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் இளையராஜா என்பது இந்தப் படத்திலுன் மூலமும் தெரிகிறதே..!
ஒரு எளிமையான கதை.. ஒரு இயக்குநர் புதிதாக படமெடுக்க ஆயத்தமாகிறார். அதற்கு பல இடைஞ்சல்கள் வருகின்றன. அதையெல்லாம் தாண்டி அவர் எப்படி படமெடுக்கிறார் என்பதை மிக யதார்த்தமான நகைச்சுவையோடு, முகம் சுழிக்கவிடாத காட்சியமைப்புகளோடு, குடும்பத்தோடு பார்க்கக் கூடிய வகையில் தரமான படமாக உருவாக்கித் தந்திருக்கும் இயக்குநர் ராதாமோகனுக்கு நமது பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்.. வந்தனங்கள்..! இவருடைய சேவை தமிழ்ச் சினிமாவுக்கு எப்போதும் தேவை என்பதை இந்தப் படமும் நிரூபித்துவிட்டது.
வரும்கால இயக்குநர்களுக்கு ராதாமோகனின் அனைத்து படங்களுமே ஒரு பாடம்தான். அதில் இதுவும் ஒன்றாக இடம் பிடித்திருக்கிறது.
உப்பு கருவாடு – சைவப் பிரியவர்களையும் நிச்சயம் கவரும்..!