ஒரு நாள் இரவில் - சினிமா விமர்சனம்

21-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மலையாள சினிமா ரசிகர்களை நினைத்தால் பொறாமையாக இருக்கிறது. ஒரு பக்கம் கமர்ஷியல் படங்களுக்கும் ஆதரவு கொடுத்து, இன்னொரு பக்கம் இது போன்ற ரசிப்புத் தன்மையை மேம்பட வைக்கும் படங்களுக்கும் ஆதரவு கொடுத்து கை தூக்கி விடுகிறார்கள். இந்த இரட்டை ரசிக மனப்பான்மை தமிழக ரசிகர்களுக்கும் இருந்துவிட்டால் தமிழ்த் திரையுலகமும் ஆரோக்கியமாக இருக்கும்..!

2012-ம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த ‘ஷட்டர்’ என்கிற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் இந்தப் படம். மலையாளத்தில் லால் நடித்த கேரக்டரில் சத்யராஜூம், சஜிதா மாடத்தில் நடித்த கேரக்டரில் நடிகை அனுமோலும், சீனிவாசன் கேரக்டரில் யூகிசேதுவும் நடித்திருக்கிறார்கள்.
சிங்கப்பூரில் வேலை பார்த்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறார் சத்யராஜ். கல்லூரிக்கு செல்லும் ஒரு மகள்.. பள்ளிக்குச் செல்லும் இன்னொரு மகள் என இரண்டு குழந்தைகள். வீட்டு வாசலை ஒட்டினாற்போல இருக்கும் இடத்தில் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார். அதில் ஒரு கடை காலியாக இருக்கிறது.
தான் சம்பாதித்து வைத்திருப்பதால்தான் தன் குடும்பம் நன்றாக இருக்கிறது என்கிற எண்ணத்தில் இருக்கும் சத்யராஜுக்கு குடும்பத்தில் எல்லாமே தன் சொல்படிதான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் வருண் தான் எப்படியாவது சிங்கப்பூருக்கு போய் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறான். சத்யராஜிடம் இது பற்றி பேசியிருக்கிறான். அவர் மூலமாக சிங்கப்பூர் செல்லும் ஆசையில் இருப்பதால் அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வதற்குத் தயாராகவே இருக்கிறான். சத்யராஜும் இவனுடைய ஆட்டோவில்தான் போய் வந்து கொண்டிருக்கிறார்.
மகள் தன்னுடன் படிக்கும் ஒரு மாணவனுடன் பைக்கில் ஒன்றாக செல்வதை பார்த்த சத்யராஜ் மகளைக் கண்டிக்கிறார். அவள் கல்லூரிக்கு செல்வதை நிறுத்துகிறார். உடனேயே மாப்பிள்ளையை பார்த்து கல்யாண நிச்சயத்தார்த்தம் செய்கிறார். மனைவி, மகள் எதிர்த்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் இருக்கிறார். இந்தப் பிரச்சினையால் கடும் மன உளைச்சலில் இருக்கிறார் சத்யராஜ்.
இந்தச் சூழலில் ஒரு நாள் காலியான கடையில் தனது நண்பர்களுடன் மதுவருந்துகிறார் சத்யராஜ். நண்பர்களிடையே பேசும் பேச்சுக்கள்.. எழும் விவாதங்கள்.. அது குடும்பம், நட்பு, சிங்கப்பூர் வாழ்க்கை என்பதெல்லாம் கடந்துபோய் பாலியல் பிரச்சினையையும் தொட்டு, சத்யராஜின் மனதையும் அந்த நேரத்தில் சபலத்திற்கு ஆளாக்குகிறது.
அன்றைய இரவிலேயே சத்யராஜ் , வருணுடன் ஆட்டோவில் செல்லும்போது பேருந்து நிறுத்த்த்தில் நின்றுகொண்டிருக்கும் பாலியல் தொழிலாளரியான அனுமோலை பார்க்கிறார். அனுமோலின் பார்வை சத்யராஜை கிறுகிறுக்கவைக்க.. வருணிடம் இதைச் சொல்கிறார்.
வருண் ஓடோடிப் போய் அனுமோலை அழைத்து வருகிறான். இருவரும் தங்குவதற்கு ஹோட்டலில் அறை கிடைக்காத்தால் வேறு வழியில்லாமல் அந்தக் காலியான கடைக்கே அழைத்து வருகிறான் வருண். அவர்களை உள்ளே வைத்துவிட்டு வெளியில் பூட்டிவிட்டு அவர்களுக்காக சாப்பாடு வாங்க வெளியேறுகிறான் வருண்.
அன்று காலையில் அவனுடைய ஆட்டோவில் பயணிக்கும்போது தனது படத்தின் கதையை தவறவிட்டுவிட்டு தவிக்கும் சினிமா கதாசிரியர் யூகிசேது அந்த இரவில் வருணை கண்டுபிடிக்கிறார். யூகிசேதுவின் பேக்கை அந்த கடைக்குள் வைத்திருப்பது வருணுக்கு தெரிகிறது. அந்த பேக்கை எடுத்துக் கொடுக்கும்படி யூகிசேது கேட்க.. அவரையும் அழைத்துக் கொண்டு கடைக்கு செல்கிறான்.
செல்லும் வழியில் போலீஸ் சோதனையில் சிக்கிக் கொள்ள.. பிரச்சினையாக.. வருணை ஸ்டேஷனுக்கு இழுத்துச் செல்கிறார்கள் போலீஸார். வருண் போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக் கொள்ள.. இன்னொரு பக்கம் பூட்டிய அறைக்குள் சத்யராஜும், அனுமோலும் இருக்க.. சத்யராஜை காணாமல் அவரது குடும்பத்தினர் தவித்துப் போய் உறவினர்களுக்கு தகவல் கொடுத்து தேட ஆரம்பிக்க.. அன்றைய நாள் இரவில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் மிக, மிக சுவராஸ்யமான இந்தப் படத்தின் திரைக்கதை.
இந்த பரிதவிக்கும் கேரக்டருக்கு சத்யராஜ் மிக பொருத்தமான தேர்வுதான். இவரைவிட்டால் பிரகாஷ்ராஜ் மட்டுமே தமிழில் இந்தக் கேரக்டரை செய்ய முடியும். கொஞ்சம் திமிறும் வேண்டும். அதே சமயம் தவறு செய்ய பயப்படும் சராசரி மனிதன், தகப்பனாகவும் இருக்க வேண்டும். இது மூன்றையும் நிறைவாக செய்திருக்கிறார் சத்யராஜ்.
 கொஞ்சம், கொஞ்சமாக மதுவின் பிடியில் ஆட்பட்டு, சபலத்திற்குட்பட்டவராகவும், அனுமோலின் ஒரு பார்வையில் பட்டவுடன் பதட்டமாகி ஆர்வத்துடன் “அவ என்னைப் பார்த்தாடா..” என்று தன்னை மறந்து சொல்கின்ற நடிப்பும் அவராகவே இல்லை.
அறைக்குள் மாட்டியவுடன் ‘எதுவும்’ செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டு அவ்வப்போது தனது வீட்டை சன்னல் வழியாக பார்த்துவிட்டு குற்றவுணர்வில் தவியாய் தவிக்கின்ற தவிப்பும் இந்தப் படத்தின் கதையை நேர்மையாக்கியிருக்கிறது..!
சொக்க வைக்கும் சுந்தரியாக படம் முழுக்க வியாபித்திருக்கிறார் அனுமோல். இப்படியொரு பார்வை பார்த்தால் யார்தான் அலற மாட்டார்கள் என்று சொல்லவும் வைத்திருக்கிறார் அனுமோல். மலையாள பெண்களுக்கே உரித்தான முகமும், உடல்வாகுமாக பாலியல் பெண்ணாக துணிந்து நடிக்க முன் வந்திருக்கும் இவருக்கு ஒரு பாராட்டு..!
நிறுத்தி, நிதானமான வசன பேச்சுக்கள்.. “நீங்க என்ன சொன்னாலும் நான் கோச்சுக்க மாட்டேன். ஏன்னா நீங்கதான் கேக்கும்போதெல்லாம் பணம் கொடுக்குறீங்களே..?” என்று சின்னப்புள்ளத்தனமாக அவர் பேசும் பேச்சும், மாடுலேஷனும் ரசிகர்களை கவர்கிறது.. அதேபோல் அவருடைய பேச்சில் இருந்து பணத்தின் மீதான மதிப்பு, குடும்பத்தின் மீதான அக்கறை.. பெண்ணுக்கு கல்வி மிகவும் அவசியம் என்கிற கருத்தாடல் இவையும் சேர்ந்தே வெளி வந்திருக்கிறது..!
கடையைக் காலி செய்ய மறுக்கும் மெக்கானிக் கடைக்காரனை அடிக்கப் போகும் அளவுக்கு கோபக்காரரான சத்யராஜ் அனுமோலை பாதி தைரியத்தில் தொடப் போய் பயந்து பின் வாங்க.. அவர் எதையோ பார்த்து பயந்துவிட்டதாக நினைத்து அரைத் தூக்கத்தில் எழுந்து அறை முழுவதையும் தேடிப் பார்த்துவிட்டு “ஒண்ணுமில்லயே. எதுக்கு பயந்தீங்க..?” என்று பக்குவப்பட்டவராக கேட்கும் அனுமோலை யாருக்குத்தான் பிடிக்காது..? ஹீரோயின்களுக்கு பஞ்சமே இல்லாத கோடம்பாக்கம் இவரையும் அனுமதித்து வரவேற்றால் சிறந்த நடிகையொருவர் நமக்கும் கிடைப்பார்.
யூகிசேதுவும், அவருடைய போலீஸ் இன்ஸ்பெக்டரான நண்பரும் ஒரு தனிக் கதையாக வந்தாலும் படத்தை ஆங்காங்கே தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். யூகிசேது ஒரு வசனகர்த்தாகவும் இந்தப் படத்தில் மிளிர்கிறார். சினிமா கதாசிரியர்களுக்கே உரித்தான படபடப்பு, ஏமாற்ற உணர்வை வெளிக்காட்டிக் கொள்ளாமை.. சகித்துக் கொள்வது என்ற சகல குணங்களையும் உள்ளடக்கி தனது நடிப்பில் காட்டியிருக்கிறார் யூகி.
அறை வாடகை கொடுக்கவில்லை என்கிற நிலைமையில் அவரை ஹோட்டலுக்கே வந்து சந்தித்து தனக்கு குடிக்க கம்பெனி கொடுக்கும்படி கேட்கும் ஒரு தயாரிப்பாளர்… யூகி குடிக்க மாட்டார் என்று தெரிந்தும் தான் பேசுவதையெல்லாம் கேட்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்போடு அவர் வந்திருக்கிறார் என்பதை நமக்கு உணர்த்தி.. கடைசிவரையிலும் பணம், உதவி இது இரண்டையும் செய்யாமலேயே தைரியத்தை மட்டும் சொல்லிவிட்டுப் போகும் அந்த ஆர்.சுந்தர்ராஜனை போன்றவர்கள்தான் இன்றைக்கு திரையுலகில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பிரதிநிதியாக இவரை அடையாளப்படுத்தியிருக்கும் யூகியின் மதிக்கு ஒரு பாராட்டு..!
எப்படியும் தனது பை தன் கைக்கு வந்துவிடும் என்பதால் வருணை டார்ச்சர் செய்யாமல் அதை மீட்க யூகிசேது எடுக்கும் முடிவுகளும், கிளைமாக்ஸில் அவரிடத்தில் கதை வந்து சேரும் காட்சியும் ரசிகர்களை நிச்சயம் கலவரப்படுத்தியிருக்கும்..!
அறிமுக நடிகர் வருண் இன்னமும் 2, 3 படங்களில் நடித்து அனுபவம் பெற்றால் தேர்ச்சி பெற்றுவிடுவார். முதல் படம் என்பதால் தேர்ந்த நடிப்பை எதிர்பார்ப்பது சரியல்ல என்பதால் விட்டுவிடுவோம்..!
சத்யராஜின் மகளாக நடித்தவரின் நடிப்பும் படத்திற்கு கடைசி ரீலில் அடுத்தடுத்து தொடர்ந்து கிடைக்கும் கைதட்டல்களுக்கு ஒரு காரணம்.. நல்ல அழகு.. நல்ல நடிப்பு.  சத்யராஜின் மனைவியாக நடித்தவரும்கூட..!
பாலியல் தொடர்பான கதை என்றாலும் ஒரு சின்ன நெருடலான காட்சிகூட இல்லாமல் அந்த அறைக்குள் நிலவும் நுட்பமான ஆண், பெண் சீண்டல்கள்.. அழைப்புகள்.. தவறென்று தெரிந்து மனக்குழப்ப நாடகங்கள்.. இதையெல்லாம் மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
ஒரு சின்ன சபல ஆசை.. மனிதனை எப்பேர்ப்ப்ட்ட பிரச்சினைகளுக்குள் கொண்டு போய் தள்ளுகிறது என்பதை உதாரணப்படுத்துகிறது இந்தப் படம். மதுவருந்த கிடைக்கும் தோழர்களெல்லாம் உயிருக்குயிரான நண்பர்களல்ல என்பதையும் இந்தப் படத்தின் கதாசிரியர் நன்கு உரைத்திருக்கிறார். அதேபோல் அவசரத்தனமான இந்தக் காலக்கட்டத்தில் நட்பு என்பது எதுவரையிலும் என்பதை புரிந்து கொண்டு பெற்றோர்கள் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது.
பெண் கல்வி மிக மிக அவசியம் என்பதை பாலியல் பெண் ஒருவர் மூலமாகச் சொல்லித் தெரிய வேண்டிய கட்டாயத்தில் தான் இருப்பதை நினைத்து சத்யராஜ் வருத்தமும், வெட்கப்படும் அந்தக் காட்சியில் இயக்குநரின் இயக்கத் திறமைக்கு ‘ஜே’ போட வேண்டும்..!
இயக்குநர் ஆண்ட்டனி அடிப்படையில் எடிட்டர். காட்சிக்கு எது தேவையோ அதை மட்டும்தான் எடுத்தேன். நிறைய எடுத்து நிறைய கட் செய்து தூக்கியெறியவில்லை. மூலக் கதையில் இருந்தே அரை மணி நேர காட்சிகளை ஒதுக்கிவிட்டு இரண்டு மணி நேரமே போதுமானதாக சுருக்கியிருக்கிறோம் என்றார். சுருக்கப்பட்ட இந்தப் பதிவே அற்புதமாக இருக்கிறது. நன்று..!
இசையமைப்பாளர் நவீன் ஐயர் சில இடங்களில் பின்னணி இசையை நாடகத்தனமாகவும், பல இடங்களில் சுறுசுறுப்பாகவும் போட்டிருக்கிறார். பாடல்களே இல்லாமல் வரும் இது போன்ற படங்களால் நிச்சயம் தமிழ் ரசிகர்களின் ரசிக மனப்பான்மை மேலும் உயரும் என்பதில் ஐயமில்லை.
இந்தப் படத்தை ரீமேக் செய்ய நினைத்த இயக்குநர், தயாரிப்பாளர் ஏ.எல்.விஜய்க்கு முதல் நன்றி. நல்ல படத்தை கொடுக்க நினைத்து.. அதில் தான் தலையிடாமல் வேறொருவரை இயக்குநராக்கி அதையும் அழகாக கொடுத்திருக்கும் இயக்குநர் விஜய்யின் படக் குழுவினருக்கு நமது வாழ்த்துகள்..! அதேபோல் சிறந்த கதையைக் கொடுத்திருக்கும் கதாசிரியர், இயக்குநர் ஜாய் மேத்யூவுக்கும் நமது பாராட்டுக்கள்.
‘ஒரு நாள் இரவில்’ நிச்சயம் கொண்டாடப்பட வேண்டிய படம். மிஸ் பண்ணக் கூடாத படம். ஒரு புதிய அனுபவத்தை நிச்சயமாக உங்களுக்குக் கொடுக்கும். பார்க்கத் தவறாதீர்கள்..!

0 comments: