விரைவில் இசை - சினிமா விமர்சனம்

01-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

கோடம்பாக்கத்தில் இயக்குநராக வேண்டும் என்கிற வெறியில் இருக்கும் சுதந்திர சேகரன் என்னும் சுசியும், இசையமைப்பாளராக பெயரெடுக்க வேண்டும் என்கிற தீராத தாகத்தில் இருக்கும் ஏ.ரங்கராமன் என்கிற ராமனும் இணை பிரியாத தோழர்கள். அறை தோழர்களும்கூட.

இருவரும் முதல் படத்திலேயே இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற கொள்கையுடையவர்கள். இதனால் சுசி கதை சொல்லப் போகும்போதுகூட ராமனையும் சேர்த்தே அழைத்துச் செல்லும் வழக்கத்தை வைத்திருக்கிறான்.
இவர்களைப் போன்றவர்களுக்கு வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் டீக்கடைகள்தான் பைவ் ஸ்டார் ஹோட்டல்கள். டெல்லி கணேஷ் நடத்தும் டீக்கடையைத்தான் கதைகளை அலசி ஆராயும் இடமாக வைத்திருக்கிறார்கள்.  
திடீரென்று விஜயசங்கர் இவர்களை சந்திக்கிறார். தான் ஹீரோவாக வேண்டும் என்கிறார். அவர்கள் இருவரின் மாதச் செலவுகள் அனைத்தையும் தானே பார்த்துக் கொள்வதாக உறுதியளிக்கிறார். இப்போதைக்கு பணப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்ததே என்றெண்ணி அவரையும் அறையில் அனுமதிக்கிறார்கள்.
பாண்டிச்சேரியில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லி ஓகே வாங்கி அட்வான்ஸையும் வாங்கிக் கொண்டு திரும்புகிறார்கள். ஆனால் அடுத்த நாளே “என் ஜோஸியர் இப்போதைக்கு எதுவும் வேண்டாம்ன்னு சொல்லிட்டார்..” என்று தயாரிப்பாளர் சொல்ல சுசியின் தலையில் இடி விழுகிறது.
இடையில் சுசிக்கு புகைப்படம் எடுக்கப் போன இடத்தில் அர்ப்பனாவுடன் காதல் உருவாகிறது. வெளிநாட்டில் இருக்கும் தன் அப்பாவுக்கு வருங்கால மருமகன் என்னவாக இருக்கிறான் என்பதைச் சொல்ல வேண்டுமே என்கிற தவிப்பில் “சினிமாவை விட்டுவிட்டு யதார்த்தமாக யோசித்து வேறு வேலையைத் தேடிக் கொள்..” என்று அக்கறையாகச் சொல்கிறார் அர்ப்பனா. “என் வாழ்க்கையே சினிமாதான். நீ உன் வழியைப் பார்த்திட்டுப் போ.. நான் என் வழில போறேன்…” என்று அந்தக் காதலுக்கு சங்கூதிவிட்டு ஒரு ஃபுல்லை ராவாக அடித்துவிட்டு காதலை மறந்து தொலைக்கிறார் சுசி.
இன்னொரு பக்கம் ராமனுக்கும் ஒரு காதல் வருகிறது. அது தொலைபேசியில் ‘கடன் வேண்டுமா?’ என்று கேட்கும் டெலிகாலில் இருந்து ஆரம்பிக்கிறது. ஹீரோயின் ஸ்ருதி தனது கஷ்டப்படும் குடும்ப சூழலுக்காக மாதந்தோறும் டார்கெட் வைத்து இந்த கஷ்டமான வேலையைச் செய்து வருகிறார்.
அந்த இனிய குரலுக்காகவே ஸ்ருதியை விரும்பத் துவங்கும் ராமன் ஸ்ருதியுடனான தனது காதலை உறுதி செய்து கொள்கிறான்.
மறுபடியும் தேடுதல் வேட்டையை தீவிரமாக நடத்தி ஒரு தயாரிப்பாளரை பிடிக்கிறான் சுசி. சுசி சொன்ன கதைக்கு தயாரிப்பாளர் ஒத்துக் கொள்கிறார். படத்தின் வேலைகளை ஆரம்பிக்கிறார். “நாளைக்கு காலைல பூஜை. சீக்கிரமா ஸ்டூடியோவுக்கு வந்திருங்க…” என்று சொல்லிவிட்டு தயாரிப்பாளர் போக.. பரபரவென்று இருக்கிறார்கள் சுசியும், ராமனும்.
இந்த நேரத்தில் ஸ்ருதி ஆர்டர் பிடிப்பதற்காக ஒருவரை பார்க்க அவனது வீட்டிற்குச் செல்ல.. அங்கே ஒரு பெரிய களேபரமே நடக்கிறது. தான் ஒரு ஆபத்தில் சிக்கியிருப்பதாகவும், வந்து காப்பாற்றும்படியும் ஸ்ருதி செல்போனில் அழைக்க.. ராமனும், சுசியும் அங்கே ஓடி வருகிறார்கள்.
அவர்களின் வாழ்க்கை லட்சியத்திற்கு பூஜை போடும் அந்த நன்னாளில் அந்த இடத்தில் வேறு ஒரு ‘பூஜை’ எதிர்பாராமல் நடந்துவிட.. அவர்களது வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. அது என்ன என்பதும்..? இறுதியில் என்ன ஆனது..? படம் ஸ்டார்ட் ஆனதா.. இல்லையா.. என்பதெல்லாம் தியேட்டரில் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.
நடிகர்களில் சுசியாக நடித்திருக்கும் மகேந்திரன் ராமனாக நடித்திருக்கும் ரோஜர் இருவருக்குமே நடிப்புக்கு ஸ்கோப் இருந்தாலும் நடிக்க வைக்கப்படவில்லை என்பதால் எதுவும் சொல்ல முடியவில்லை. நாயகிகளில் அர்ப்பனாவும், ஸ்ருதியும் மட்டுமே கொஞ்சமாவது நடித்திருக்கிறார்கள். ஸ்ருதியின் அழகு ரசிக்க வைக்கிறது. அவரை இன்னமும் அழகாகப் பயன்படுத்தியிருக்கலாம்..
டெல்லி கணேஷ் அவர் வருகின்ற காட்சிகளிலெல்லாம் தனது அனுபவ நடிப்பால் பார்க்க வைத்திருக்கிறார். ஜெய்சங்கரின் இரண்டாவது மகனான விஜய்சங்கர் இதில் ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். இயக்குதலில் கோட்டைவிட்டதால் இவருடைய அறிமுகமும் வீணாகிவிட்டது.
பாடல்களும், இசையும் சுமார் ரகம். ஒளிப்பதிவு அதைவிட சுமார் ரகம். பிட்டு, பிட்டான காட்சிகள்.. தொடர்பில்லாத திரைக்கதை அமைப்பு.. இதெல்லாம் சேர்ந்து படத்தின் பிற்பாதியில் சலிப்பைத்தான் தருகின்றன.
கிளைமாக்ஸில் வரும் அந்த டிவிஸ்ட் நிச்சயம் எதிர்பாராதது. இன்னும் நல்லபடியாக பயன்படுத்தியிருந்தால் மூவரின் மீதும் ஒரு பரிதாப உணர்வு வந்து படத்தின் தன்மைக்கு ஒரு பெயராவது கிடைத்திருக்கும். அந்த இடத்திலும் அழுத்தமான நடிப்பும், காட்சிகளும் இல்லாததால் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது.
சொந்த மாநிலமாகவே இருந்தாலும் கோடம்பாக்கத்தில் வாழும் துணை, இணை இயக்குநர்களெல்லாம் அகதி மக்கள் போலவேதான் காலம் தள்ளி வருகிறார்கள். என்றைக்காவது ஒரு நாள் தங்களது லட்சியம் நிறைவேறும். நாங்களும் படங்களை இயக்கி புகழ் பெறுவோம். பாராட்டுக்களை வாங்குவோம் என்கிற லட்சியக் கனவோடு அரை வயிறு, கால் வயிறோடு போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது நகைச்சுவையோடு சொல்லக் கூடிய விஷயமே அல்ல.
இந்தப் போராட்ட உணர்வை அதற்கேற்ற காட்சியமைப்புகளோடு, திரைக்கதையோடு சொல்லியிருக்க வேண்டும். எத்தனையோ திரைக்கதைகள் அமைத்திருக்கலாம்.  ஆனால் இந்தப் படம் இரண்டாங்கெட்டனாக சீரியஸும் இல்லாமல், காமெடியும் இல்லாமல் இயக்குநர் ஏதோ தனக்குத் தோன்றியவகையில், தனக்குத் தெரிந்த வகையில் திரைக்கதை அமைத்து இயக்கி கொடுத்திருக்கிறார். அப்ரண்டிஸிப் இயக்குநர் என்கிற பெயரைப் பெறுவதற்கு எதற்கு இத்தனை முஸ்தீபு செய்து முதல் படத்தை இயக்க வேண்டும்..?
இயக்குநர் வி.எஸ்.பிரபா கோபித்துக் கொள்ளாமல், இன்னும் நான்கைந்து திரைப்படங்களில் வேறு இயக்குநர்களிடம் பணியாற்றி இயக்குதல் தொழிலைக் கற்றுக் கொண்டு படமெடுக்க வந்தால் அவருக்கும் நல்லது. அவரை நம்பி பணம் போடத் துணியும் தயாரிப்பாளருக்கும் நல்லது.
ஒரு நல்ல கதை வீணாகிவிட்டது..!

0 comments: