உறுமீன் - சினிமா விமர்சனம்

10-12-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

முன் ஜென்மப் பகை.. ஜென்ம்ம் தாண்டியும் தொடர்கிறது.. இரண்டாவது ஜென்மத்திலும் அதே துரோகத்தைச் சந்தித்த வேதனையிலும், துடிப்பிலும் இருக்கும் ஹீரோ.. மூன்றாவது ஜென்மத்தில் வட்டிக்கும், முதலுக்குமாக திருப்பிக் கொடுப்பதுதான் இந்த உறுமீன்..!
‘ஓடுமீன் ஓட உறுமீன் வரும்வரைக்கும் காத்திருக்குமாம் கொக்கு’ என்பார்களே.. அது போலத்தான் முதல் ஜென்மத்தின் கணக்கைத் தீர்க்கவும், இரண்டாம் ஜென்மத்தின் பட்ட துரோகத்தையும் தாங்கிக் கொண்டு மூன்றாவது ஜெனமத்தில் காத்திருந்து துரோகியை பொலி போடுகிறார் ஹீரோ..!

முதல் ஜென்மக் கதை :
ராஜசிம்மன் என்கிற சோழ வம்சத்து அரசனான பாபி சிம்ஹா, தன்னுடைய குருவான பிரம்மர் என்கிற முனிவரிடமிருந்து நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் புத்தகத்தைப் பெற்றிருக்கிறான்.
தன்னுடைய சக நாட்டு அரசனுடன் போரிட வேண்டிய நிலை. இந்த நேரத்தில் தன்னுடைய நம்பிக்கைக்குரிய நண்பனான ‘கருணா’வால் காட்டிக் கொடுக்கப்பட்டு எதிரி அரசனிடம் பிடிபடுகிறான். ஆனாலும் தன்னுடைய விடா முயற்சியால் அங்கிருந்து தப்பித்து தனது குருநாதரைத் தேடி வருகிறான்.
எதிரியிடம் பிடிபட்டு சாவதைவிட தானே தன் சாவைத் தேடிக் கொள்வதே எனக்குப் பெருமை என்று சொல்லி தன்னை உயிருடன் புதைத்துவிடும்படி கேட்டுக் கொள்கிறான். அவனுடன் அந்தக் காலப் புத்தகமும் புதைக்கப்படுகிறது.
இரண்டாம் ஜென்மக் கதை :
நூறாண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதி. வெள்ளையர் ஆட்சிக் காலத்தில்.. தேயிலை தோட்டங்களையெல்லாம் வளர்த்தெடுத்து, டீ உற்பத்தியை பெருக்கி இதன் மூலம் கிறிஸ்துவத்தை மறைமுகமாக பரப்பி வந்த நேரம் இது.
இந்தப் பகுதியிலும் அடுத்த ஜென்ம உருவமாக பிறந்திருக்கிறார் பாபி சிம்ஹா. இப்போது அவர் வக்கீலுக்கு படித்தவர். அந்த ஊரிலேயே ஆங்கிலம பேசத் தெரிந்த ஒரேயொருவர். முதல் ஜென்மத்து துரோகி நண்பனான கருணா, இப்போது கலையரசனாக சிம்ஹாவின் நண்பனாக உடன் இருக்கிறார்.
ஊருக்கு வரும் வெள்ளைக்கார துரை காட்டுக்குள் வேட்டைக்கு போகும்போது துணைக்கு மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் தேவை என்பதால் ஊர் கங்காணி, துணைக்கு பாபி சிம்ஹாவையும், அவரது ஆத்ம நண்பர் கலையரசனையும் அனுப்பி வைக்கிறார்.
போகிற இடத்தில்தான் அந்தக் காலப் புத்தகம் சிம்ஹாவின் கைக்கு கிடைக்கிறது. அது கிடைக்கும் நேரத்தில் வெள்ளைக்கார துரை சிம்ஹாவை செஸ் விளையாட அழைக்கிறார். காய்கள் வெட்டப்பட, வெட்டப்பட தோற்றவர் அவரவர் ஆடைகளைக் களைய வேண்டும் என்பது ஆட்டத்தின் விதிமுறை. தோல்வியடையும் வெள்ளைக்கார துரை முழு நிர்வாணமாக வேண்டிய நிலைமை.
இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் தவிக்கிறார் துரை. இருவருக்குள்ளும் ஏற்படும்  பிரச்சினையில் சிம்ஹா துரையை அடித்துவிட காது கேளாமல், பேச முடியாத நிலைமைக்குத் தள்ளப்படுகிறார் துரை. இதைச் செய்துவிட்டு காட்டுக்குள் தப்பியோடுகிறார் சிம்ஹா.
இப்போதும் உடனிருக்கும் கலையரசன், அந்த தேயிலை தோட்டம் முழுவதையும் தனது பொறுப்புக்குவிட்டால் சிம்ஹாவை காட்டிக் கொடுப்பதாகச் சொல்லி சிம்ஹாவை வெளியில் அழைத்து வந்து விடுகிறான். துரை சிம்ஹாவை கொலை செய்ய.. இரண்டாவது முறையாகவும் துரோகம் ஜெயிக்கிறது.
இப்போது நிகழ் காலம்..
மதுரையில் இருந்து பி.இ. முடித்துவிட்டு வேலை தேடி சென்னைக்கு வந்திருக்கிறார் சிம்ஹா. நண்பன் காளியின் அறையில் தங்கிக் கொண்டு வேலை தேடி வருகிறார். கிடைக்கவில்லை. ஆனால் தற்செயலாக அந்தக் காலப் புத்தகம் சிம்ஹாவின் கைக்கு கிடைக்கிறது.
அது கிடைத்தவுடன் சிம்ஹாவின் வாழ்க்கையில் பெரிய மாற்றம். சட்டென வேலை கிடைக்கிறது. கிடைத்த இடத்தில் கல்லூரியில் தனக்கு ஜூனியரான ரேஷ்மியை அங்கே பார்க்கிறார். கல்லூரி காலத்தில் சொல்ல முடியாமல் போன காதலை, இங்கே சொல்லிவிடலாம் என்று தவியாய் தவிக்கிறார் சிம்ஹா. ரேஷ்மியும்தான்..!
அலுவலகத்தில் வைத்திருந்த காலப் புத்தகத்தில் இருந்து திடீரென்று புகை வர.. புத்தகம் பற்றிய சந்தேகம் சிம்ஹாவுக்குள்ளும் புகைகிறது. மனநல மருத்துவரிடம் ஆலோசனை கேட்கிறார். “அந்தப் புத்தகத்திற்கும் உனக்கும் ஏதோ பூர்வீக பந்தம் இருப்பதாகத் தெரிகிறது. முடிக்காத ஒரு விஷயத்தை முடித்து வைக்க இந்தப் புத்தகம் உதவலாம்..” என்று பூடமாகச் சொல்லியனுப்புகிறார் மருத்துவர்.
இந்த நேரத்தில்தான் ரேஷ்மி கிரெடிட் கார்டில் வாங்கிய கடனுக்காக அவரை போனில் டார்ச்சர் செய்கிறார் கலையரசனின் தம்பி. அவனை நாலு தட்டு தட்டலாம் என்றெண்ணி சிம்ஹாவும், காளியும் அவனை பின் தொடர.. திடீரென்று எங்கிருந்தோ வந்த ஒரு கும்பல் கலையரசனின் தம்பியை எரித்துக் கொல்கிறது. இதற்கு சிம்ஹாதான் காரணமோ என்றெண்ணி அவரைத் தூக்கி வந்திருக்கிறது கலையரசனின் டீம்.
இப்போது அந்தப் புத்தகத்தின் உதவியோடு தான் கணக்குத் தீர்க்க வேண்டியது கலையரசனைத்தான் என்பது சிம்ஹாவுக்குத் தெரிய வர.. அதை செய்து முடிக்க தீர்மானிக்கிறார். எப்படி முடிக்கிறார் என்பதுதான் இந்த புதுமையான, சுவாரஸ்யமான திரைக்கதை கொண்ட படத்தின் மிச்சம் மீதிக் கதை.
பாபி சிம்ஹா ஒரு ஆக்சன் ஹீரோவாக தலையெடுக்க வேண்டியே இந்தக் கதையைப் பிடித்திருக்கிறார் போலிருக்கிறது. முதல் படத்திலேயே மூன்று கேரக்டர்கள். மூன்றில் ஒன்று மோஷன் கேப்சர் ஆப்ஷனில் அட்டகாசமாக படமாக்கப்பட்டுள்ளது. அதில் வரும் சிம்ஹாவின் அச்சு அசலான உருவத்தில் அந்தக் கேரக்டரின் பீலிங்க்ஸ் தெரியும் அளவுக்கு வரைந்திருப்பது சிறப்பு..!
இரண்டாவதாக வரும் ஜான் கேரக்டரில் அந்த அலட்சிய மனப்பான்மை.. வெள்ளையனை எதிர்க்கும் வெறுப்பு.. இரண்டையும் சரி சமமாகவே செய்திருக்கிறார். இதில்தான் செமத்திய சண்டை காட்சிகள்.. ஆக்சன் ஹீரோவுக்கு தேவையானதை இதிலேயே செய்து காட்டியிருக்கிறார். இனிமேல் அவரது ரசிகர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
மூன்றாவதான செழியன் கேரக்டரில் போகப் போகத்தான் ஆக்சனுக்குள் இறங்குகிறார். அதுவரையிலும் இருக்கும சாதா செழியனை அனைவருக்கும் பிடிக்கும்வகையில் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர். புத்தகம் கைக்கு வந்தவுடன் அவருக்குள் ஏற்படும் மாற்றம்.. திடீரென்று எழுப்பியவுடன் ஆக்ரோஷமாக கத்தியபடியே எழும் அந்த ஒரு காட்சியே பயமுறுத்திவிட்டது.
ரேஷ்மியுடனான காதலைச் சொல்ல முடியாமல் சங்கடப்பட்டு கடைசியாக மறைமுகமாகத் தெரிவிக்கும் காதல் செழியனுக்குள் நிஜமாகவே காதலை வரவழைத்திருக்கும் என்று நம்புகிறோம்.. தம்பதிகள் நீடூழி வாழட்டும்.
கிளைமாக்ஸில் அதிக கத்தியின்றி, ரத்தமின்றி சேதாரமில்லாமல் ஆக்சன்களை வைத்திருப்பதால் மறுபடியும் ஒரு ஆக்சன் ஹீரோவை பார்க்க வழியில்லாமல் போய்விட்டது.
ரேஷ்மிக்கு அதிகம் வேலையில்லை. ஆனால் கொடுத்த கேரக்டருக்கு வஞ்சகமில்லாமல் நடித்திருக்கிறார். வசனமே பேசாமல் தடுக்கி விழுந்தே ஒரு காட்சியில் பெரும் சிரிப்பை வரவழைக்கிறார் மனோபாலா.
கலையரசனுக்கும் ‘மெட்ராஸு’க்கு பின்பு பெயர் சொல்லும் படம். ஒவ்வொரு நடிகரும் ஒவ்வொருவிதமான நடிப்பைக் காண்பிக்கும்போதுதான் நடிப்பு என்பதென்ன என்பது ரசிகனுக்கும் தெரிகிறது. ஜானை மாட்டிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்து செல்லும் கலையரசனின் வெற்றிப் பெருமிதம் அவரது நடிப்புத் திறமைக்கு ஒரு ஷொட்டு..!
அதேபோல் இப்போதைய தாதா கலையரசன் கேரக்டரும் அசத்தல். அந்த மாடுலேஷன், பாடி லாங்குவேஜெல்லாம் நிறைய படங்களில் நடித்த அனுபவஸ்தர் போலவே இருக்கிறது..! வெல்டன் கலை ஸார்..!
குறிப்பிடத்தக்க நடிப்பை காண்பித்திருக்கிறார் அப்புக்குட்டி. இரண்டாவது ஜென்மத்துக் கதையில் இவர் மூலமாக உலகத்துக்குச் சொல்லும் ஒரு வசனத்தை சென்சார் போர்டு எப்படி கண்டு கொள்ளாமல்விட்டார்கள் என்று தெரியவில்லை. இந்த ஒரு வசனத்துக்காகவே இயக்குநருக்கு ஒரு சல்யூட்..
“காட்டுல மொத்தம் நாப்பத்தி அஞ்சாயிரம் புலிகள் இருந்துச்சு .இந்தப் படுபாவிப் பயங்க அநியாயமா கொன்னு கொன்னு இப்போ இருபதாயிரம்தான் இருக்கு . டேய் ஒண்ணு ஞாபகம் வச்சுக்கங்கடா … எண்ணிக்கை குறைஞ்சாலும் புலி, புலிதான் “ என்கிறார் அப்பு\க்குட்டி உடனே பாபி சிம்ஹா அவரிடம் ‘’நீங்க எந்தப் புலியை சொல்றீங்க?’’ என்று கேட்க, அப்புக்குட்டி சிரித்துவிட்டு, “உங்களுக்கே தெரியாதா..?” என்கிறார்.   அதேபோல் துரோகியான கலையரசனுக்கு ‘கருணா’ என்று பெயர் வைத்திருக்கிறார். புரிந்தது.
இதேபோல் அப்போதையக் காலக்கட்டத்தில் டீ என்னும் குடிபானம் எப்படி தென்னிந்திய மக்களின் அன்றாட உணவானது என்பதையும், தேயிலைத் தோட்டங்களை வைத்தே கிறித்துவம் எப்படி அந்தப் பகுதியில் பரப்ரப்பட்டது என்பதையும் இயக்குநர் ஒரு சில காட்சிகளில் நுணுக்கமாகப் பகிர்ந்திருக்கிறார்.
முதல் பாதியில் ஓடும் ஒரு பரபரப்பு, இரண்டாம் பாதியில் கொஞ்சம் தொய்வைக் கொடுத்தாலும், கலையரசனை வீழ்த்த வேண்டிய கட்டாயத்திற்குச் சொல்லப்படும் காரணம் மிக எளிமையானதாக பெருவாரியான ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான விஷயமாகவும் இருப்பதால் அதுவே ரசிக்கப்படுகிறது.
கலையரசனின் இன்றைய கதையில் இப்படியொரு பிளாஷ்பேக் தேவையே இல்லை. பழி வாங்கப்படுதலுக்காகத்தான் இந்த மூன்றாவது பிறவி. பின்பு எதற்கு வீணான பில்டப்பு..?
கிளைமாக்ஸ் காட்சிக்காக எங்கே போய் ரூம் போட்டு யோசித்தார்களோ தெரியவில்லை. பரவாயில்லை. கச்சிதமாக அதிகம் ரத்தம் சிந்தாமல், ஒரு செட்டப் செய்து செய்யும் இந்தக் கொலைகளெல்லாம் சாதாரண கமர்ஷியல் படங்களில் படங்களில் காணப்படுவது போலவே இருப்பதுதான் இந்த வித்தியாசமான கதையம்சம் உள்ள படத்தின் ஒரேயொரு மைனஸ் பாயிண்ட்.
ரவீந்திரகுரு நாத்தின் ஒளிப்பதிவும், அச்சு ராஜாமணியின் இசையமைப்பும் படத்திற்கு ஒரு பலம். அறிமுக இயக்குநர் சக்திவேல் பெருமாள்சாமி  வித்தியாசமான ஒரு கதையுடன் அழுத்தமான இயக்கத்தில் ஒரு பொழுது போக்கு படத்தை உரிய நேரத்தில் கொடுத்திருக்கிறார்.
இதன் மூலம் உறுமீனைக் கொத்தப் போகும் மீனவனாக இருக்கும் நடிகர் பாபி சிம்ஹாவுக்கு, இந்தப் படம் பெரிதும் உதவினாலே அது இருவரது வாழ்க்கையிலும் பெரிய திருப்பம்தான்..!

0 comments: