பள்ளிக்கூடம் போகாமலே - சினிமா விமர்சனம்

05-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

மதிப்பெண்கள்தான் முக்கியம் என்று பெற்றோர்களும், தேர்ச்சி விகிதம்தான் முக்கியம் என்று பள்ளிகளும் நினைத்து இன்றைய மாணவர்களை பிழிந்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான ஒரு நோக்கமே தவறு என்பதை ஒரு திரைப்படத்தில் சொல்ல வந்திருப்பதே இந்தக் காலக்கட்டத்தில் மிகப் பெரிய விஷயம்.
அந்த மிகப் பெரிய விஷயத்தை இத்திரைப்படத்தில் செய்திருக்கிறார் இயக்குநர் ஜெயசீலன் பவுல்தாஸ்..!

கால் டாக்சி ஓட்டுனரான ஏ.வெங்கடேஷுக்கு தனது மகன் நன்றாகப் படித்து நல்ல மார்க் எடுக்க வேண்டும் என்று ஆசை. இதற்காக பார்க்கும்போதெல்லாம் மகனை படி, படி என்று கண்டித்துக் கொண்டேயிருக்கிறார். அம்மா தேவதர்ஷிணியின் அனுசரனையால் வீட்டில் அப்பாவுடன் ஒட்டுதல் இல்லாமல் வளர்கிறார் மகன் தேஜஸ்.
தேஜஸின் பிளஸ் டூ வகுப்பில் அதே ஊரில் பெரும் புள்ளியான ரியல் எஸ்டேட் அதிபரான ராஜ்கபூரின் மகள் ஐஸ்வர்யாவும் படிக்க வருகிறாள். இருவருக்கும் இடையில் துவக்கத்தில் மோதல் உருவாகி பின்பு ஒரு கணத்தில் அது முடிவுக்கு வந்து நட்பாகிறது. அதே வகுப்பில் இருக்கும் மிகப் பெரிய பணக்காரரின் மகனான திலீபன் தான்தான் எதிலும் முதல்வனாக இருக்க வேண்டும் என்ற எண்ணமுள்ளவன். இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று நினைப்பவன்.
பள்ளி மாதத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் தேஜஸை பெற்றோர்களும், ஆசிரியர்களும் திட்டுகின்றனர். இதனால் விரக்தியடைந்த தேஜஸ் தற்கொலைக்கு முயல்கிறார். அப்போது அவரைக் காப்பாற்றும் ஐஸ்வர்யா தேஜஸுக்கு ஊக்கம் கொடுத்து அவனை படிக்க வைக்கிறாள். ஐஸ்வர்யாவின் தூண்டுதலாலும், அவளது அன்பான பேச்சாலும் கவரப்பட்டு படிப்பில் ஆர்வம் கொண்டு படிக்கிறான் தேஜஸ். மாத்த் தேர்வுகளில் வகுப்பில் முதல் மாணவனாக வருகிறான்.
இந்த நேரத்தில் பொதுத் தேர்வுக்கு சில நாட்கள் இருக்கும்போது ஒரு மாலை வேளையில் ஐஸ்வர்யாவும், தேஜஸும் காணாமல் போகிறார்கள். ஐஸ்வர்யாவின் அப்பாவும், தேஜஸின் பெற்றோர்களும் அவர்களைத் தேடுகிறார்கள். போலீஸும் வலைவீசி தேடுகிறது..
ஏன் காணாமல் போனார்கள்..? எங்கே போனார்கள்..? யார் அவர்களைக் கடத்தியது..? என்பதுதான் மிச்சம் மீதி கதை..!

அறிமுக நடிகரான தேஜஸ் பிளஸ்டூ மாணவருக்கு பொருத்தமானவர்தான். நடிப்பென்று பார்த்தால் இயக்குநர் சொன்னதை அப்படியே செய்திருக்கிறார் என்று தெரிகிறது. இன்னும் நான்கைந்து பட வாய்ப்புகள் கிடைத்து தன்னை மேம்படுத்திக் கொள்வார் என்று நம்புவோம். நடனமும் நன்கு ஆடியிருக்கிறார்.
ஐஸ்வர்யா மற்றும் திலீபன் இருவருமே நடிப்புக்கு பஞ்சம் வைக்கவில்லை. மெச்சூரிட்டியான வேடத்தை ஏற்றிருக்கும் ஐஸ்வர்யா சிறப்பான இயக்கத்தினால் தனது நடிப்பைக் காட்டிவிட்டு தப்பியிருக்கிறார். அதேபோல் திலீபனும்.. இறுதிக் காட்சியில் தனது அப்பாவிடம் வீர ஆவேசமாகப் பேசிவிட்டு தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்கும் காட்சியில் ஒரு தனியான தவிப்பைக் காட்டியிருக்கிறார். அறிமுக இளம் பிஞ்சுகளை இந்த வகையில் அமர்க்களமாக நடிக்க வைத்த இயக்குநருக்கு ஒரு பாராட்டு..
கணேஷ் வெங்கட்ராமுக்கு இது எத்தனாவது போலீஸ் வேடம் என்று தெரியவில்லை. ஆனால் இது சாலப்பொருத்தம். விசாரணை செய்யும் விதம்.. கேள்விகளை கேட்கும் தொனி, கம்பீர மிடுக்கு.. அதே சமயம் சாந்தமாக உரையாடி பதில்களை பெறுவது என்று போலீஸ் இன்வெஸ்டிகேஷனுக்கு உதவுவதை போலவே இவரது கேரக்டர் ஸ்கெட்ச்சை அமைத்திருக்கிறார் இயக்குநர். மறைந்த நடிகர் ஸ்ரீஹரியின் அழுத்தமான நடிப்பும் படத்திற்கு ஒரு பலமாகக் கிடைத்திருக்கிறது.
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்திற்குக் கிடைத்திருக்கும் பலம். படத்தின் கதைக்களம் சென்னைதான் என்றாலும் படம் முழுக்க முழுக்க கேரள பகுதிகளில் படமாக்கப்பட்டிருப்பது ஒளிப்பதிவு மூலமாகவே தெரிகிறது. இசையும், பாடல்களும் சுமார் ரகம். பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கும்விதம் குளுமை..!
கிளைமாக்ஸில் கணேஷ் வெங்கட்ராம் பேசும் பேச்சுக்கள் இன்றைக்கு இந்தியா முழுவதிலும் இருக்கும் மாணவர்களின் மனதில் இருக்கும் கேள்விகள்தான்.. மதிப்பெண்களை மையமாகவே வைத்தே மாணவர்களின் திறமையை எடை போடுவது முட்டாள்தனம். ஒவ்வொருவனுக்கும் வேறு, வேறு திறமைகள் இருக்கும். அதை வைத்தும் அவன் வாழ்க்கையில் ஜெயிக்கலாம். வெறுமனே மதிப்பெண்களை அதிகம் வாங்கி தொழில் கல்வி படிப்பதாலேயே வாழ்க்கையில் அவன் ஜெயித்ததுபோலாகிவிடாது என்கிறார் கணேஷ்.
ஒவ்வொரு பள்ளியும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சிரமங்களை நினைத்தே பார்க்காமல் தங்களது பள்ளியின் தேர்ச்சி விகித்த்தை எப்பாடுபட்டாவது அதிகப்படுத்துவதே தங்களது நோக்கம் என்று செயல்படுவது சமூகச் சீர்கேட்டைத்தான் விளைவிக்கிறது என்கிறார் கணேஷ்.
இந்த விவாத மேடையை கடைசியான சில நிமிடங்களில் நடத்திக் காட்டி உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர். இப்படியான வெளிப்படையான பேச்சு இதுவரையிலும் எந்த சினிமாவிலும் வந்த்தில்லை என்பதால் பாராட்டுவோம்.
சிற்சில லாஜிக் இடறல்கள் இருக்கின்றன. இருந்தாலும் அத்தனையையும் தாண்டி படம சொல்லும் நீதி இன்றைய இந்திய மாணவர்களின் உரிமைக் குரலாக இருப்பதால் இந்த பள்ளிக்கூடம் போகாமலே படத்தினை வாழ்த்தி வரவேற்போம்.

0 comments: