வேதாளம் - சினிமா விமர்சனம்

11-11-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ரசிகப் பட்டாளத்தை கொண்ட மாஸ் நடிகர்களுக்கு எப்பொழுதுமே இருக்கும் ஒரு பிரச்சினை.. படம் தனது ரசிகர்களால் கொண்டாடப்பட வேண்டும் என்பதுதான். இதற்காகத்தான் நடிக்கிறார்கள். ஒரு படம் தோல்வியென்றால் அது அவர்களின் கேரியரையும் பாதிக்கும். பண வரவையும் பாதிக்கும். இது எல்லாவற்றையும்விட போட்டியாளரின் வெற்றியினால் ஏற்படும் மன உளைச்சலை அவர்களால் தாங்கவே முடியாது. ஏனெனில் அவர்கள் கண்ணாடி தொட்டி போல.. உடைந்தால் ஒட்ட வைக்கவே முடியாது..
‘தல’ அஜீத்திற்கும், ‘இளைய தளபதி’யான விஜய்க்கும் இப்போது இதுதான் பிரச்சனை. தலையைப் பிய்த்துக் கொள்ளும் அளவுக்கான பிரச்சனை.. எப்படி படம் கொடுத்தால் தனது ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்களென்று..? கவனிக்க.. சினிமா ரசிகர்கள் அல்ல.. அவர்களுடைய ரசிகர்கள் மட்டுமே..!
இதனை மனதில் வைத்து முழுக்க, முழுக்க அஜீத் ரசிகர்களுக்காகவே பண்ணப்பட்ட படம் இந்த ‘வேதாளம்’.. இதைப் புரிந்து கொண்டால் இந்தப் படத்தின் கலந்து கட்டிய விமர்சனங்கள் எளிதாக உங்களுக்குப் புரியும்.


தனது தங்கை லட்சுமி மேனனின் ஓவியத் திறமைக்காக அவரை ஓவியக் கல்லூரியில் படிக்க வைக்க கொல்கத்தாவுக்கு அழைத்து வருகிறார் அஜீத். தங்கையை கல்லூரியில் சேர்த்துவிட்டு தானும் ஒரு கால் டாக்சி நிறுவனத்தில் டிரைவராக வேலைக்கு சேர்கிறார்.
ஒரு நாள் அவசரமாக தனது காரில் சவாரிக்கு வந்த இளம் வக்கீலான ஸ்வேதா என்ற ஸ்ருதிஹாசனுக்காக கோர்ட்டில் பொய் சாட்சி சொல்கிறார் அஜீத். ஆனால் அது சொதப்பலாகிவிட ஸ்ருதியின் வக்கீல் தொழில் லைசென்ஸ் கேன்ஸலாகிறது. அஜித் மீது கொலை வெறியாகிறார் ஸ்வாதி.
இந்த நேரத்தில் சர்வதேச போதை மருந்து கடத்தல்கார்ர்களை கண்டுபிடிக்க கால் டாக்சி டிரைவர்களின் உதவியை நாடுகிறது கொல்கத்தா போலீஸ். அஜீத்தும் தற்செயலாக தன் கண்ணில்பட்ட அந்த போதைக் கும்பலை சேர்ந்தவர்களை பாலோ செய்து அவர்களைக் கண்டறிந்து போலீஸுக்கு துப்பு கொடுக்கிறார். போலீஸ் அவர்களைக் கண்டுபிடித்தாலும் முக்கியமான ஒரு புள்ளி தப்பிக்கிறான்.
போதை மருந்தும், பணமும் போலீஸிடம் சிக்கிக் கொண்டதால் கோபப்படும் அந்த ரவுடி கும்பல் துப்புக் கொடுத்த்து யார் என்று தேடுகிறார்கள். அஜீத்தை கண்டறிகிறார்கள். அவரை ஃபாலோ செய்கிறார்கள். அஜீத்தோ அவர்களையே ஃபாலோ செய்து அவர்களது இடத்திற்கே வந்து அவர்களை அதகளம் செய்து தீர்த்துக் கட்டுகிறார்.
இன்னொரு பக்கம் ஸ்ருதியின் அண்ணனான அஸ்வின் ஒரு நாள் அஜீத்தின் கால் டாக்சியில் பயணிக்கும்போது லட்சுமி மேன்னை பார்த்துவிட்டு  காதலிக்கத் துவங்குகிறார். இந்தக் காதலும் நிறைவேறும் தருவாய் வருகிறது.
இந்த நேரத்தில் தனது இரண்டு தம்பிகளை பறி கொடுத்த கோபத்தில் கொல்கத்தா வரும் சர்வதேச கும்பலின் தலைவனான ராகுல் தேவ் அஜீத்தை பழி வாங்க நினைக்கிறார்.  அது முடிந்ததா..? இல்லையா..? என்பதே இந்த வேதாளத்தின் கதை.
எந்த இடத்திற்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் வருவான் என்பதற்கு அடையாளமாகத்தான் ‘வேதாளம்’ என்று பெயர் வைத்திருக்கிறார்களாம்..
சந்தேகத்திற்கிடமே இல்லாமல் இது முழுக்க முழுக்க அஜீத் ரசிகர்களுக்கான படம்தான். அவர்களுக்காகவே உருகி, உருகி படமாக்கியிருக்கிறாகள். கூடவே அண்ணன்-தங்கை சென்டிமெண்ட். மற்றும் குடும்பப் பாசம் இது எல்லாவற்றையும் கலக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
அஜீத் இந்த வயதிலும் பிரமாதமாக சண்டை போடுகிறார். நடனமாடுகிறார். படத்தின் பிற்பாதியில் ‘வரலாறு’ பாணியில் திடீர், திடீரென்று ராட்சஷனாகி முகம் காட்டும்போது தியேட்டரே அதிர்கிறது. அதைத்தான் ரசிகர்களும் எதிர்பார்த்தார்கள்.
இயக்குநரின் திறமையான இயக்கத்தால் அனைத்து நடிகர்களுமே ரசிப்பதுபோல நடித்திருப்பதால் படத்தை பெரிதும் ரசிக்க முடிகிறது. முடியாதது சூரியின் காமெடி என்கிற பெயரில் இருக்கும் வசனங்கள்தான். இது இங்கே எடுபடவில்லை என்பது சூடம் ஏற்றி சத்தியம் செய்து சொல்லலாம்.
ஸ்ருதிஹாசன் இளமை துள்ளலோடு நடித்திருக்கிறார். கோர்ட் காட்சிகளிலும், வீர ஆவேசமாக அஜித்தை தாக்க வரும் காட்சிகளிலும் ரசிக்க வைத்திருக்கிறார். பாடல் காட்சிகளை பாதி பாதியாக கட் செய்து ஓட்டியிருப்பதால் அவரை முழுமையாக ரசிக்க முடியவில்லை. ஆனால் நல்லவேளையாக ஆடைக் குறைப்பு செய்யாமல் ஸ்ருதியை காண்பித்தமைக்கு இயக்குநருக்கு பெரிய நன்றி.
முக்கியமாக படத்தில் ஸ்கோர் செய்திருப்பது லட்சுமி மேனனும், அவருடைய தந்தையான தம்பி ராமையாவும், தாயான சுதாவும்தான். லட்சுமி மேனனின் நடிப்பு ஏ ஒன். படத்தின் பிற்பாதியில் அஜித்தை ஓவர்டேக் செய்து காட்சிகளைக் கைப்பற்றியிருக்கிறார் லட்சுமி.
இதேபோல் தம்பி ராமையா.. கண் பார்வையில்லாத சூழலில் ஒரு ரவுடியின் வீட்டுக்குள் வந்து அமைதியாக பேசியே அவன் தாலியை அறுப்பது என்கிற கொள்கையில் இவர்கள் போடும் டிராமா சிரிக்க வைக்கிறது. பார்க்கவும் வைக்கிறது. இவர்களின் பரிதாப முடிவும், அதைத் தொடர்ந்து “நீ காசு கொடுத்தால்தானே எல்லாத்தையும் செய்வ..?” என்கிற தம்பி ராமையாவின் ஒரு சொல்லும் அஜித்தின் மனதை மாற்றுவதை முடிந்த அளவுக்கு நேர்மையாக பதிவாக்கியிருக்கிறார் இயக்குநர்.
சூரியின் காமெடி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரனின் அடாவடியெல்லாம் வேஸ்ட் என்று சொல்லும் அளவுக்குத்தான் இருக்கிறது. ‘நான் கடவுள்’ ராஜேந்திரனையாவது பிற்பாதி திரைக்கதையில் பயன்படுத்தியிருக்கலாமே..? ஏன் விட்டார் இயக்குநர்..?
படத்தில் மிக ரோதனையானது அனிருத்தின் காதைக் கிழித்த இசைதான். போட்டுத் தாக்கியிருக்கிறார். உச்சஸ்தாயியில் அனைத்து இன்ஸ்ட்ரூமெண்ட்டுகளுமே கத்தித் தீர்த்திருக்கின்றன. கொஞ்சம் அடக்கி வாசித்திருக்கலாம். ‘ஆலுமா டோலுமா’ பாடலும், பாடலை படமாக்கியிருக்கும் பிரம்மாண்டமான காட்சிகளும் சூப்பர்.. ஆனால் இதற்கெல்லாம் தமிழில் அர்த்தம் கேட்கக் கூடாது.. ஏற்கெனவே ‘லோலாக்கு லோல் டப்பிம்மா’ வரிக்கே இன்றுவரையிலும் நமக்கு அர்த்தம் தெரியவில்லை..
தமிழில் இயக்குநர் வீ.சேகர் அத்தனை காலமும் கஷ்டப்பட்டு சம்பாதித்த மொத்த பணத்தையும் காணாமல் போகச் செய்த சரத்குமார், நமீதா நடித்த ‘ஏய்’ படத்தின் கதையையும், தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், தமன்னா நடிப்பில் வெளிவந்த ‘ஊசரவல்லி’ படத்தின் கதையையும் கலந்து கட்டிய கதையாக இந்தப் படம் இருப்பது கண்கூடு.
ஆனால் அதைப் பார்த்து காப்பியடித்து எடுக்கும் அளவுக்கு ‘சிறுத்தை’ சிவா ஒன்றும் முட்டாள் அல்ல என்பதால் இந்த ஒற்றுமை எப்படி நிகழ்ந்தது என்பதையும் ஊகிக்க முடியவில்லை. ஏனெனில் இது ‘தல’ அஜீத் படம். விஷயம் வெளியே தெரிந்தால் அஜித்திற்கு அசிங்கம் என்பதால் நிச்சயம் செய்யத் துணிய மாட்டார்கள் என்பதால்தான் யோசிக்க வேண்டியிருக்கிறது.
இவ்வளவு பெரிய கொல்கத்தாவின் துறைமுகத்தில் ஒரு சொகுசு கப்பலை நிறுத்திவிட்டு அங்கேயே ‘டான்’கள் ஆட்சி நடத்துவதும், அது அன்றுவரையிலும் போலீஸுக்கே தெரியாமல் இருப்பதெல்லாம் நம்ப முடிகிற விஷயமா..?  இறந்து கிடக்கும் பிணங்களை பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு ஆள் வந்து ‘ஸார் இது போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்’ என்று சொல்லி கொடுப்பதெல்லாம் ஓவராகத் தெரியவில்லையா இயக்குநர் ஸார்..?
டெக்னாலஜியை முடிந்த அளவுக்கு திறனாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர். ராகுல் தேவின் கட்டளையால் அஜித்தின் போன் நம்பரை டிரேஸ் செய்யும் வேலைகளும், அவர்களை கண்டுபிடிக்க செய்யும் கம்ப்யூட்டர் வித்தைகளும் ரசிகர்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும். அந்த வகையில் அந்தக் காட்சியில் இயக்குதல் சிறப்பாக இருக்கிறது. அஜீத் சண்டை காட்சிகளில் காட்டியிருக்கும் தீவிரம் அவரது ரசிகர்களை தெறிக்க வைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
ஆயிரம் சொன்னாலும் ‘மங்காத்தா மங்காத்தான்’ என்று சொல்ல வைக்கின்றன அஜீத்தின் அடுத்தடுத்த கமர்ஷியல் ஹிட் படங்கள்.  ஆனாலும், தனது ரசிகர்களை இந்தப் படத்தில் திருப்திப்படுத்தி அனுப்பியிருக்கிறார் அஜீத். இதுவே போதுமா தல..? மத்தவங்க எல்லாரும் பாவமில்லையா..? அடுத்த படத்தையாவது ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களுக்காக மாற்றிக் கொடுக்க முயலுங்கள்..!