புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம் - சினிமா விமர்சனம்

05-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

பார்க்காமலே காதல்.. பார்த்தும் பேசாமலே காதல்.. பிடிக்காமலேயே காதல்.. நெருங்காமலேயே காதல்.. கட்டிப் பிடிக்காமலேயே காதல்.. என்கிற வரிசையில் 1990-களில் வந்திருக்க வேண்டிய திரைப்படம். சற்று அல்ல மிக நீண்ட வருட தாமதமாக இப்போது வந்திருக்கிறது.

நாயகன் கிரீஷ் தென்காசியைச் சேர்ந்தவர். மதுரையில் வேலை செய்கிறார். வேலைக்கு வந்த இடத்தில் ஒரு காதல். நாயகி சிருஷ்டி டாங்கேவை பார்த்தவுடன் பிடித்துவிடுகிறது. பார்க்கிறார். பார்க்கிறார்.. பார்த்துக் கொண்டேயிருக்கிறார். ஒரு நாள் அல்ல. ஒரு மாதம் அல்ல.. மூன்று வருடங்கள்.. ஆம்.. மூன்று வருடங்களாக வெறுமனே பார்த்தபடியே இருக்கிறார். இதுவரைக்கும் பேசவே இல்லையாம்..
வழக்கமாக கல்லூரிக்குப் போக சிருஷ்டி வரும் பேருந்தை எதிர்பார்த்து ரோட்டில் காத்திருக்கும் கிரிஷ்.. பார்வையாலேயே சிருஷ்டியை வரவேற்று பை சொல்லிவிட்டுத்தான் மறுவேலை பார்க்கிறார். சிருஷ்டிக்கும் இவர் மீது காதல்தான். ஆனால் யார் முதலில் அதனைச் சொல்வது என்று இருவருக்குள்ளும் தயக்கம்..
ஒரு நாள் வேறொரு நபர் சிருஷ்டியிடம் காதல் கடிதம் கொடுக்க.. அதை சிருஷ்டி வாங்கிக் கொண்டதை பார்த்தவுடன் சிருஷ்டி தனக்கில்லை என்று தவறாகப் புரிந்து கொண்ட கிரிஷ்.. தண்ணியை போட்டு அலம்பல் செய்து.. அடுத்த தேவதாஸாக உருமாறுகிறார்.
அதே சமயம் சிருஷ்டியின் வீட்டில் அவருக்கு மாப்பிள்ளை பார்த்துவிட.. இந்த நேரத்திலும் விதி விளையாடி இருவரையும் சந்திக்க விடாமலேயே செய்து விடுகிறது. சிருஷ்டியின் மாமா கிரிஷின் நெருங்கிய நண்பராக இருந்தும்.. அவருக்கும் கிரிஷின் ஒருதலைக் காதல் தெரிந்தும், காதலி தன்னுடைய கொழுந்தியாள்தான் என்பது தெரியாமலேயே போகிறது. சிருஷ்டியின் வீட்டுக்குச் சென்ற கிரிஷ் வீட்டுக்குள்ளேயே பெட்ரூமுக்குள் இருக்கும் சிருஷ்டியை சந்திக்க முடியாதபடிக்கு திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர்.
சிருஷ்டிக்கு மாப்பிள்ளை ரெடியாக.. மனமுடைந்த நிலையில் கிரிஷ் தென்காசிக்கு பயணப்பட.. காதலர்கள் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
இந்தப் படத்தின் முதல் பாதியை வேறொரு இயக்கநரும், பிற்பாதியை இன்னொரு இயக்குநரும் இயக்கியிருக்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது..!
அந்த அளவுக்கு முற்பாதியில் இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு என்று அனைத்திலுமே அப்ரண்டிஷிப் ஸ்டைல் தெரிகிறது. ஆனால் படத்தின் பிற்பாதியில்தான் அதிசயமாக அனைத்துமே சிறப்பாக இருக்கிறது.
சினிமா ரசிகர்கள் இது போன்ற காதல் கதைகளையெல்லாம் பார்த்து, பார்த்து, கேட்டு கேட்டு சலித்துப் போயிருக்கும் இந்த நேரத்தில் எந்த தைரியத்தில் இப்படியொரு படத்தை எடுக்க துணிந்தார்கள் என்று தெரியவில்லை..!
ஹீரோ கிரிஷுக்கும் நடிப்புக்கும் வெகு தூரம் என்பது இதிலேயே தெரிகிறது. அவர் கோபித்துக் கொள்ளாமல் சிறந்த பாடகராக மென்மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.. முதற்பாதியில் அரைகுறை ஒளிப்பதிவில்கூட கவனிக்க வைத்திருக்கிறார் சிருஷ்டி டாங்கே. அந்தக் கன்னக்குழி அவருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் தனிச் சிறப்பு. இயக்கம் சிறப்பாக இருந்திருந்தால் நடிப்பும் நன்றாகவே வந்திருக்கும்.. இல்லாமல் போனதில் இவர் மீது தவறில்லை..!
சிருஷ்டியின் மாமாவாக நடித்தவர்.. அக்காவாக நடித்த ஜானகி.. கிரிஷின் அம்மாவாக நடித்த ரேகா சுரேஷ்.. தங்கையாக நடித்த அந்தக் குட்டிப் பெண் என்று இவர்களெல்லாம் நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள். கச்சிதமாக முடித்திருக்க வேண்டிய கிளைமாக்ஸில் ஒரு கனவுக் காட்சியைத் திணித்து நம்ம மனதைக் குலைத்திருப்பது நியாயமா இயக்குநரே..?
தாங்கள் பேசுவது இரட்டை அர்த்த வசனங்கள் என்பது தெரியாமலேயே கல்லூரி மாணவிகளாக நடித்தவர்கள் அனைவருமே வசனங்களை பேசித் தொலைத்திருக்கிறார்கள். மாணவிகள் இந்தக் காலத்தில் இப்படி தெளிவாக இருக்கிறார்கள் என்பதை இந்த இரட்டை அர்த்த வசனங்கள் மூலமாக நமக்கு புரிய வைத்த இயக்குநர், இந்தக் கால காதலும் இப்படியில்லையே என்பதை புரிந்து திரைக்கதை எழுதியிருக்க வேண்டாமா..?
ரைஹானை சேகரின் இசையில் வாலி எழுதிய கடைசிப் பாடலாக படத்தில் இடம் பெற்றிருக்கும் பாடலும், கல்யாண மண்டபத்தில் பாடும் பாடலும் கேட்க இனிமை.. நடனமும் அழகு.. குடும்பத்தினர் அனைவரையும் பாட வைத்து ஒரு வித்தியாசத்தைக் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
இது போன்ற கதைகளுக்கு ஜீவனுள்ள நடிப்பும், காட்சிகளும், திரைக்கதையமைப்பும் தேவை. கிளைமாக்ஸில் இருக்கும் அந்த ஒரேயொரு டிவிஸ்ட்டுக்காக படம் ஓடிவிடும் என்று நினைப்பது மூடத்தனம். ‘காதலுக்கு மரியாதை’ படமும் இதேபோன்ற கிளைமாக்ஸ் டிவிஸ்ட்டில்தான் ஜெயித்தது.. ஆனால் அந்தப் படத்தில்  ‘காதல்’ என்கிற ஜீவன் இருந்தது.. இதில்..?
இயக்குநருக்கு இது முதல் படம் என்பதால் விட்டுவிடலாம்.. அடுத்தடுத்து நல்ல படங்களை இயக்கி பாராட்டைப் பெற வாழ்த்துகிறோம்..!