ஜெ.சொத்துக் குவிப்பு வழக்கு - கர்நாடக அரசின் அப்பீல் மனு - முழு விவரம்

27-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் இறுதிக் களமாக உச்ச நீதிமன்றம் இருக்கிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டுவிட்டது. இதே வழக்கில் அரசு வழக்கறிஞராக இருந்த ஆச்சார்யா இப்போது மனுதாரர். ஆச்சார்யாவின் சார்பில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளவர் வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில்.



1,068 பக்கங்கள் கொண்ட மேல்முறையீட்டு மனுவில், 1,002 பக்கங்கள்வரை வழக்கின் வரலாறும், நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் மொத்த நகலும் இணைக்கப்பட்டுள்ளது. 1,003-ம் பக்கத்தில் இருந்துதான் மேல்முறையீட்டுக்கான காரண காரியங்களை ஆச்சார்யா அடுக்கி உள்ளார். அதன் உள்ளடக்கத்தைப் படிக்கும்போது திகிலாக இருக்கிறது.

நீதியை கல்லறைக்கு அனுப்பிய தீர்ப்பு

கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பில், ஆவணங்களின் முக்கியத்துவம், ஆதாரங்களின் உறுதி, சாட்சிகளின் நேர்மை முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டு உள்ளன. பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. 

தமிழக அரசு தன்னிச்சையாக அரசு வழக்கறிஞரை நியமித்ததில் தொடங்கி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடந்ததில் பல குளறுபடிகள் நிகழ்ந்தன. அவற்றில் தலையிட்டு நீதிபதி குமாரசாமி, ஒருமுறைகூட கறார் காட்டவில்லை. 

மேலும், ‘பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது’ என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் எப்படித் தீர்ப்பளிக்க வேண்டும் என்று, நீதிபதி குமாரசாமிக்கு பல வழிகாட்டுதல்களை எடுத்துரைத்தது. அதில் ஒன்றைக்கூட அவர் கடைப்பிடிக்கவில்லை. மொத்தமாக நீதியைக் கல்லறைக்கு (grave miscarriage of justice) அனுப்பி சமாதி கட்டிய தீர்ப்பாக குமாரசாமியின் தீர்ப்பு உள்ளது.

சில ஆயிரங்களும் பல கோடிகளும் ஒன்றா..?

ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்வதற்கு அக்னிஹோத்ரி வழக்கை முன்னுதாரணமாகக் காட்டி உள்ளார் நீதிபதி குமாரசாமி. அந்த வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக அக்னிஹோத்ரியிடம் இருந்த சொத்து மதிப்பு வெறும் 11 ஆயிரத்து 350 ரூபாய். அது சேர்க்கப்பட்ட காலம் 13 ஆண்டுகள். சொத்து சேர்க்கப்பட்ட காலத்தை ஒப்பிடும்போது அக்னிஹோத்திரியின் வருமானம் மிகக் குறைவு. அதனால்தான் அந்த வழக்கில் குற்றவாளி விடுதலை செய்யப்பட்டார். 

ஜெயலலிதா வழக்கில் வருமானம் பல கோடிகள். அது ஈட்டப்பட்ட வருடங்கள் மிகக் குறைவு. அதுவும் 1947 சட்டப்படிதான் அக்னிஹோத்ரி விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு, ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ஆக என சட்டம் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அதில், பிரிவு 13 (1) (e) நியாயமான வருமானம் என்பது ‘நியாயமான வழிகளில் வந்த வருமானம் மட்டுமே’ என்று தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும், வருமானத்துக்கு அதிகமாக ஏதாவது சொத்துகள் பொது ஊழியருக்கு வரும்போது, அது பற்றி அவர் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு உரிய தகவல்களைத் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும் என்றும் வரையறுத்துள்ளது. இதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

ஆதாரங்கள், ஆவணங்கள், சாட்சிகள் புறக்கணிக்கப்பட்ட தீர்ப்பு 

நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில், கட்டடங்களின் மதிப்பீடுகள் (பக்கம் 776 முதல் 797), வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவுகள் (பக்கம் 797 முதல் 843), கடன் மூலம் வந்த வரவுகள் (பக்கம் 850 முதல் 852), திராட்சைத் தோட்ட வருமானம் (பக்கம் 853), பரிசுப் பொருள்கள் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 853 முதல் 854), சசி என்டர்பிரைஸஸ் (பக்கம் 854 முதல் 860), ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் மூலம் வந்த வருமானங்கள் (பக்கம் 860 முதல் 876), சூப்பர் டூப்பர் டி.வி (பக்கம் 876 முதல் 883), வாடகை வருமானம் (பக்கம்-883) ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளார். ஆனால், இது பற்றிய ஆதாரங்களும் ஆவணங்களும் ஏராளமாக இருக்கும்போது அவற்றை எல்லாம் சரியாகப் பரிசீலிக்காமல் தவறு செய்துள்ளார்.



கட்டடங்களின் மதிப்பீடுகள்

ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கட்டடங்களின் மதிப்பு என அரசுத் தரப்பு 28 கோடியே 17 லட்சத்து 40 ஆயிரத்து 430 ரூபாயைக் கணக்கிட்டது. அதனைத் தீர ஆராய்ந்து அந்தத் தொகையில் இருந்து 20 சதவிகிதத்தை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 22 கோடியே 53 லட்சத்து 92 ஆயிரத்து 344 ரூபாயைக் கட்டடங்களின் மதிப்பாக எடுத்துக்கொண்டது.

ஆனால், நியாயமான கணக்கீடுகள், மதிப்பீடுகள், கட்டடங்களின் ஆடம்பரத் தன்மை, கட்டடங்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட கிரானைட்கள், மார்பிள்கள், அதில் செய்யப்பட்ட வேலைப்பாடுகள், கட்டடங்களில் இருந்த சொகுசு இருக்கைகள், நாற்காலிகள், மேஜைகள், அவற்றின் கலை வேலைப்பாடுகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு, ஒரு சதுர அடிக்கு 28 ஆயிரம் ரூபாய் என தட்டையாக நீதிபதி குமாரசாமி கணக்கிட்டுள்ளார். 

பொதுப்பணித் துறை பொறியாளர்கள், போயஸ் கார்டன் இல்லத்தின் மதிப்பு 7 கோடி ரூபாய் என்று கணக்கிட்டனர். இந்த மதிப்பீடு மிகவும் அதிகம் என்று குறிப்பிட்ட நீதிபதி குமாரசாமி, மொத்தமாக 17 கட்டடங்களையும் ஒரே மதிப்பில் கணக்கிட்டுள்ளார். 17 கட்டடங்களின் தன்மைகளும் வேறானவை. அதில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருள்களின் தரம் வேறு வேறானவை. அதில் இடம் பெற்றுள்ள வேலைப்பாடுகளின் கலைநயம் வித்தியாசமானவை. அவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அனைத்துக்கும் ஒரே தொகையை நிர்ணயித்து கணக்கிட்டது நேர்மையற்ற கணக்கீடு.

இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதா தரப்பு சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த சாட்சியத்தில், தங்களின் கட்டட மதிப்பு  ரூ.8 கோடியே 60 லட்சம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆனால், குற்றவாளிகள் சொன்ன மதிப்புக்கும் குறைவாக நீதிபதி குமாரசாமி மதிப்பிட்டது முறையற்றது. 

சுதாகரன் திருமணச் செலவுகள்

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவாக அரசுத் தரப்பு கணக்கிட்ட தொகை 6 கோடி ரூபாய். ஆனால், சிறப்பு நீதிமன்றம் மூன்று கோடி ரூபாயை மட்டும் சுதாகரனின் திருமணச் செலவாக எடுத்துக்கொண்டது. நீதிபதி குமாரசாமி, வெறும் 28 லட்சம் ரூபாயை மட்டும் திருமணச் செலவாகக் காட்டுகிறார். ஜெயலலிதா வருமான வரித் துறைக்கு அளித்த விவரங்களின் அடிப்படையில் இதை எடுத்துக் கொண்டதாக அவர் குறிப்பிடுகிறார். 

ஆனால், ஜெயலலிதா சிறப்பு நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த வாக்குமூலத்திலேயே, “சுதாகரன் திருமணத்துக்கு தன்னுடைய செலவு 29 லட்சத்து 92 ஆயிரத்து 761 ரூபாய்’’ என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் சொன்ன வாக்குமூலத்தைக்கூட ஏற்காமல், அதையும்விட குறைவானத் தொகையைக் கணக்கிட்டு குற்றவாளிகளை விடுதலை செய்தது தவறான சட்ட நடைமுறை.



கடன் மூலம் வந்த வருமானங்கள்

மிக மிக முக்கியமான பகுதி இது. தேசிய வங்கிகளில் வாங்கிய கடன்களின் மூலம் அவர்களுக்கு 27 கோடியே 17 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாயை கணக்கில் எடுத்துக் கொண்டு, அதில் இருந்து லஞ்ச ஒழிப்புத் துறை கணக்கிட்டு வைத்திருந்த தொகை 5 கோடியே 99 லட்சம் ரூபாயை கழித்துவிட்டு, 18 கோடியே 17 லட்சத்து 46 ஆயிரம் ரூபாயை கடன் மூலம் வந்த வருமானமாகக் காட்டி உள்ளார். 

உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்துப்படி, 10 தேசிய வங்கிகளில் இவர்கள் வாங்கிய கடன் தொகையைக் கணக்கிட்டால், 10 கோடியே 67 லட்சத்து 31 ஆயிரத்து 271 ரூபாய் மட்டுமே வருகிறது. இந்தத் தொகை சிறப்பு நீதிமன்ற நீதிபதி சொன்ன தொகையோ அல்லது அரசுத் தரப்பு சொன்ன தொகையோ அல்ல. நீதிபதி குமாரசாமி போட்டுக் காட்டி உள்ள அட்டவணைப்படி கணக்கிட்டாலே 10 கோடிதான் வருகிறது.

அப்படி இருக்கும்போது, அவர் 27 கோடி என்று கணக்கிட்டுள்ளார். இந்தப்  பிழையைச் சரி செய்தால், மொத்தக் கணக்கீட்டில் அடியோடு மாற்றம் வருகிறது. அதாவது கடன் மூலம் குற்றவாளிகளுக்கு வந்த வருமானம் வெறும் 4 கோடியே 67 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மட்டுமே என்று தெளிவுபடுகிறது. இதன்படி கணக்கிட்டால், குற்றவாளிகளின் முறையற்ற வருமானம் 76.7 சதவிகிதம் என்றாகிறது. அப்படி ஆகும்போது, ஜெயலலிதாவிடம் இருந்த வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பு வெறும் 8.12 சதவிகிதம் என்பது தவறாகி, அவரை நீதிபதி குமாரசாமி விடுதலை செய்ததும் தவறாகிவிடுகிறது.

குற்றவாளிகள் தேசிய வங்கியில் வாங்கிய கடன்களை ஏற்கெனவே சேர்த்துக் கணக்கிட்டுத்தான் அரசுத் தரப்பு அவர்களுக்கு கடன் மூலம் வந்த வருமானம் என்று 5 கோடியே 99 லட்சம் என்று காட்டி உள்ளனர். ஆனால், நீதிபதி குமாரசாமி அதைப் புரிந்து கொள்ளாமல் இரண்டு முறை இந்தத் தொகையை கணக்கில் சேர்த்துள்ளார். இந்தத் தவறைச் சரி செய்தால், குற்றவாளிகள் வருமானத்துக்கு அதிகமாக சேர்த்த சொத்தின் மதிப்பு 126.19 சதவிகிதமாக வரும். 

இப்படி எந்தக் கணக்கின்படி பார்த்தாலும் குற்றவாளிகளை அக்னிஹோத்ரி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியாது. கடன் மூலம் பெற்ற வருமானங்களைக் கணக்கிட்டதில் ஒட்டு மொத்தமாக நீதிபதி குமாரசாமி தவறிழைத்து, அந்தத் தவறையே சரியெனக் காட்டி குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளார். இந்த ஒரு காரணத்தை வைத்தே, குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுதலையை ரத்து செய்யலாம். அதற்கு இதுவே போதுமானது. அப்போதுதான் நீதி கேலிக்குரியதாக மாற்றப்பட்டுள்ள நிலையில் இருந்து மீண்டு வரும்.

திராட்சைத் தோட்ட வருமானம்

ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வந்த வருமானமாக அரசுத் தரப்பு 5 லட்சத்து 78 ஆயிரத்து 340 ரூபாய் என்று கணக்கிட்டது. ஆனால், ஜெயலலிதா தரப்பு தங்களுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து 52 லட்சத்து 50 ஆயிரம் வருமானம் வந்ததாக சொன்னார்கள். இரு தரப்பின் வாதங்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள், தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய அதிகாரிகள் கணக்கிட்ட மதிப்பீடுகளை தீர ஆராய்ந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, திராட்சைத் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதாவுக்குக் கிடைத்த வருமானம்  10 லட்ச ரூபாய் எனக் கணக்கில் எடுத்துக்கொண்டார். 

ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி இவற்றில் எதையும் கருத்தில் கொள்ளாமல், காலம் கடந்து தாக்கல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் வருமானவரிக் கணக்கை மட்டும் கருத்தில் கொண்டு 46 லட்சத்து 70 ஆயிரத்து 600 ரூபாய், ஜெயலலிதாவுக்கு திராட்சைத் தோட்டத்தில் இருந்து வருமானம் வந்ததாகக் கணக்கிட்டுள்ளார்.

கிரிமினல் வழக்குகளைப் பொறுத்தவரை, நீதிமன்றங்களில் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள், சாட்சிகளின் உண்மைத் தன்மையைத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் சட்ட விதிமுறை. ஆனால், இந்த வழக்கில் அதை மீறி, வருமான வரி அதிகாரிகள் அளித்த சான்றுகளின் அடிப்படையில் நீதிபதி குமாரசாமி கணக்குப் போட்டுள்ளார்.

பரிசுப் பொருட்கள் மூலம் வந்த வருமானங்கள்

ஜெயலலிதாவுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் வருமானம் அவருடைய 44-வது பிறந்த நாளுக்குப் பரிசுப் பொருளாகக் கிடைத்துள்ளது. அதில் தவறில்லை என்று நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில், சி.பி.ஐ லஞ்ச ஊழல் தடுப்புச் சட்டம் 1988-ன்படி ஒரு பொது ஊழியர் பரிசுப் பொருள் பெறுவது குற்றம் என்று வழக்குத் தொடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. ஆனால், அந்த வழக்கை காலம் கடந்து தொடுக்கப்பட்ட வழக்கு என்று சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. சி.பி.ஐ சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, இந்த நீதிமன்றத்தில் (உச்ச நீதிமன்றத்தில்) வழக்குத் தொடுத்துள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த விவரங்கள் எதையும் எதிர் தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்துவிட்டனர்.

ஊழல் தடுப்புச் சட்டம் 13 (1) (e), ஒரு பொது ஊழியர் பெறும் பரிசுப் பொருள்கள் பற்றிய விவரங்களை உரிய முறையில் தகவலாக சம்பந்தப்பட்ட துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது. ஆனால், இந்த வழக்குத் தொடுக்கப்படும்வரை, ஜெயலலிதா, தான் பரிசுப் பொருள் பெற்ற விவரத்தை அரசாங்கத்துக்குத் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக சி.பி.ஐ வழக்கு நிலுவையில் இருக்கும் விவரத்தையும் நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கவில்லை.

சசி என்டர்பிரைஸஸ்

சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து தங்களுக்கு 95 லட்சம் வருமானம் வந்தது என்று எதிர் தரப்பு தெரிவித்தது. அதில் வாடகை வருமானம் தனியாக 12 லட்சம் ரூபாய் கிடைத்தது என்றும் தெரிவித்தது. ஆனால், அரசுத் தரப்பு 6 லட்சம் ரூபாயைக் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆனால், இரண்டு தரப்பு சொன்னதற்கும் ஆதாரமாக எந்த ஆவணங்களையும் சிறப்பு நீதிமன்றத்தில் இருவராலும் சமர்ப்பிக்க முடியவில்லை. அதனால், சிறப்பு நீதிமன்றம் அந்தத் தொகையை தள்ளுபடி செய்துவிட்டது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி, அதைக் கணக்கில் கொள்ளாமல் வெறும் யூகத்தின் அடிப்படையில் சசி என்டர்பிரைஸஸ் நிறுவனத்தில் இருந்து குற்றவாளிகளுக்குக் கிடைத்த வருமானம் என்ற வகையில் 25 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டுள்ளார்.

ஜெயா பப்ளிகேஷன்ஸ் மற்றும் நமது எம்.ஜி.ஆர் வருமானம்

நமது எம்.ஜி.ஆரில் இருந்து தங்களுக்குக் கிடைத்த வருமானம் ஒரு கோடியே 15 லட்சம் என்று ஜெயலலிதா, சசிகலா இருவரும் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் ஒத்துக்கொண்ட நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதி நமது எம்.ஜி.ஆரில் இருந்து அவர்களுக்குக் கிடைத்த வருமானம் 4 கோடி என்று கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார். 

தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவர்களே சொன்ன வருமானத்தைக் காட்டிலும், நீதிபதி அவர்களுக்குச் சாதகமான வருமானத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார். அதுவும் காலம் கடந்து பல ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி ஆவணங்களின் அடிப்படையில் இதை நீதிபதி எடுத்துக்கொண்டுள்ளார். 

ஆனால், நமது எம்.ஜி.ஆர் திட்டம் மற்றும் அதன் சாட்சிகள் அளித்த வாக்குமூலத்தில் இருந்த நம்பகமற்ற தன்மை மற்றும் அந்தத் திட்டத்தில் இருந்த போலித்தன்மை ஆகியவற்றை கருத்தில்கொண்ட சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ‘இந்தத் திட்டம் போலியானது. இதில் சொன்ன சாட்சிகள் பிறழ் சாட்சிகள்’ என்றும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் டூப்பர் டி.வி

சூப்பர் டூப்பர் டி.வி மூலம் தனக்கு ஒரு கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக சுதாகரன் தெரிவித்தார். ஆனால், சூப்பர் டூப்பர் டி.வி மூலம் சுதாகரனுக்கு கிடைத்த வருமானம் என்று அரசுத் தரப்பு 9 லட்சம் ரூபாய் என்று குறிப்பிட்டது. ஆனால், எந்த ஆவணங்களையும் பரிசீலிக்காமல்,  சுதாகரன் சொன்னதையே நீதிபதி கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளார்.

சொத்துகள்...

அசையா சொத்துகள் மொத்தம் 146 என்று சிறப்பு நீதிமன்றம் கணக்கிட்டுள்ளது. ஆனால், அதில் எந்தவிதமான குறையும் இல்லாத நிலையில் 49 சொத்துகளை எந்தக் காரணமும் இன்றி நீதிபதி குமாரசாமி நீக்கிவிட்டார். எதற்காக அவற்றை நீக்கினார் என்று அவர், அவருடைய தீர்ப்பில் எந்த இடத்திலும் விளக்கவில்லை. வெறும் 97 சொத்துகளை மட்டும் கணக்கில் கொண்டுள்ளார். மேலும், அந்தச் சொத்துகளின் மதிப்பாக எதிர் தரப்பு நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்ட தொகையே 16 கோடி. ஆனால், உயர் நீதிமன்றம் வெறும் 6 கோடி ரூபாயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.



இது போன்ற குளறுபடிகளால், எதிர் தரப்பு முறைகேடான வழிகளில் சம்பாதித்த சொத்துகளாக ஆதாரப்பூர்வமாக அரசுத் தரப்பு நிரூபித்த 60 கோடி ரூபாயை, நீதிபதி குமாரசாமி வெறும் 37 கோடி ரூபாய் என்று குறைத்துக் காட்டி உள்ளார்.

ஜெயலலிதா விடுதலையானதற்குக் காரணமாக அமைந்த கணக்குகள் பிழையான கணக்குகள் என்பதை நீதிபதி குமாரசாமியின் அட்டவணைகளே நிரூபிக்கின்றன. அதைச் சரி செய்தால், இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவால் விடுதலையாகி இருக்க முடியாது. அந்தக் கணக்கில் நடைபெற்ற பிழைகள் தவிர்த்து வேறு பல விஷயங்களையும் கருத்தில் கொண்டால் நிச்சயமாக ஜெயலலிதாவால் இந்த வழக்கில் இருந்து விடுதலை அடைந்திருக்கவே முடியாது. 

எனவே, இந்த வழக்கு முழுமையாக இங்கு விசாரிக்கப்பட்டு முடியும் வரை, இடைக்கால உத்தரவு பிறப்பித்து ஜெயலலிதாவைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும். அதற்கு ஊழல் தடுப்புச் சட்டம் அந்த உரிமையை வழங்குகிறது. அதனால், தவறான தீர்ப்புக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை, இதில் இடைக்கால உத்தரவு பிறப்பித்து நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்குத் தடை விதிக்க வேண்டும். இல்லை என்றால், இதில் நீதி கேலிக்குரியதாக மாற்றப்படும்.

கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிரான இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில் உடனடியாக சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தேவையான இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். எதிர் மனுதாரர்கள் இதில் எந்த முறையீடும் செய்யாததைக் கருத்தில் கொண்டு உடனடியாக கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும். வழக்கை நடத்த வேண்டும்.

- இவ்வாறு அப்பீல் மனுவில் சொல்லப்பட்டுள்ளதாம். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை வரிக்கு வரி விமர்சித்து இந்த மனுவைத் தயாரித்துள்ளார் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா.

தமிழக அமைச்சர்களுக்கு மீண்டும் கோயில் வேலைகள் காத்திருக்கின்றன என்று கிண்டல் அடிக்கிறார்கள் கர்நாடக வழக்கறிஞர்கள்.

நன்றி : ஜூனியர்விகடன் - 01-07-2015

0 comments: