காக்கா முட்டை - சினிமா விமர்சனம்

14-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சமீபத்தில் பார்த்த எந்தவொரு திரைப்படத்திற்கும் தியேட்டரில் இந்த அளவுக்கு கைதட்டல்களும், விசில்களும், சந்தோஷக் கூச்சல்களையும் பார்த்ததில்லை..!

சாமான்ய மக்களின் கதையை இயல்பான திரைக்கதையில் அதைவிட இயல்பான நடிப்பில்.. சிறப்பான இயக்கத்தில் வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குநர் எம்.மணிகண்டன்.
எந்த மொழி திரைப்படமாக இருந்தாலும் வேற்று மொழி பேசும் நாட்டில் அந்தப் படமும் பேசப்படுகிறது. பார்க்கப்படுகிறது என்றால் அது நிச்சயம் உலக சினிமாதான். அதன் போக்கில் பார்த்தால் இந்தப் படமும் நிச்சயமாக உலக சினிமாதான் சந்தேகமேயில்லை.
ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து ஐரோப்பிய தேசம்வரையிலும் எந்த ஊர் சினிமா திரையரங்கில் இதனை திரையிட்டாலும் மக்கள் கூட்டம் நிச்சயமாக ரசிப்பார்கள். இது சாதாரண மனிதர்கள் பற்றிய இயல்பான கதை..! இட்டுக் கட்டி செயற்கையாக எழுதப்பட்டவை அல்ல..
நம் ஒவ்வொருவருக்குள்ளும் சிறிய பிராயத்தில் ஒரு கனவு இருக்கும். நம் குடும்பச் சூழலுக்கு மேற்பட்ட ஒன்றை அடைவது என்பதுதான் அந்தக் கனவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அப்போதெல்லாம் என் வீட்டில் இட்லி, தோசையெல்லாம் கிடையாது. அரிசி சோறுதான். எப்போதாவது.. வீட்டுக்கு விருந்தாளிகள் வரும்போது மட்டும்.. அல்லது தீபாவளி, பொங்கல் தினத்தன்று மட்டும்தான் இட்லி, தோசை.. இந்த இட்லி, தோசையை சாப்பிடுவதற்காகவே பண்டிகை தினங்கள் தினம்தோறும் வராதா..? விருந்தினர்கள் தினமும் வந்து தலையைக் காட்ட மாட்டார்களா என்றெல்லாம் நினைத்ததுண்டு..
இது போன்றே  பீட்சா உணவை ஒரு முறை சாப்பிட்டுப் பார்த்தே ஆக வேண்டும் என்கிற ஏக்கத்தில் தவித்து அதற்காக போராடுகிறார்கள் அண்ணன் தம்பியான சிறுவர்கள் இரண்டு பேர்.  அது அவர்களுக்குச் சாத்தியமானதா இல்லையா என்பதுதான் படத்தின் ஒன் லைன்.
இதற்காக இயக்குநர் செய்திருக்கும் திரைக்கதையும், கேரக்டர் ஸ்கெட்ச்சும், படமாக்கலும், சுற்றுச்சூழலும், கதைக்களன் உட்பட அத்தனையும் தத்ரூபமாக கதையுடன் ஒன்றிப் போவதால் இந்த ஒரு படத்தில்தான் செல்போனை நோண்டாமல் கடைசிவரையில் திரையில் இருந்து கண்ணை அகற்றாமல் பார்த்துத் தீர்க்கிறது சினிமா ரசிகர்களின் பார்வை.
‘பெரிய காக்கா முட்டை’.. ‘சின்ன காக்கா முட்டை’ என்கிற அடைமொழியோடு அழைக்கப்படும் அரைக்கால் டிரவுசர் அணிந்த பையன்கள்தான் படத்தின் ஹீரோக்கள்.
சைதாப்பேட்டை பாலத்தின் கீழே இருக்கும் தாடண்டர் நகர் போன்ற பெரிய குடிசைப்புறத்தில் சின்ன வீடு இவர்களுடையது. அப்பா ஜெயிலில்.. ஜாமீனில் எடுக்க காசில்லை. இவர்களை பள்ளிக்கு அனுப்பவும் காசில்லாமல் வேலைக்கு அனுப்புகிறாள் அம்மா. அவளும் வேலைக்குப் போகிறாள். பையன்கள் சரக்கு ரயில்கள் செல்லும் டிராக்கில் கீழே விழுகும் கரித்துண்டுகளை பொறுக்கி வந்து எடைக்கு போட்டு காசு சம்பாதிக்கிறார்கள். வீட்டில் ஒரு வயதான ஆயா. இவர்களைப் போலவே குட்டியான ஒரு நாயும் உண்டு.
கோழி முட்டை சாப்பிட கொடுத்து வைக்காததால் ஆயா சொன்னதுபோல காக்கா முட்டையைத் திருடி சாப்பிட்டு பழகியிருக்கிறார்கள். இதனால்தான் இவர்களுக்கு இந்த செல்லப் பெயர். தாய் காக்காக்களுக்கு சோறு வைத்து அவைகளை அந்தப் பக்கமாக திசை திருப்பி இவர்கள் மரத்தின் மீதேறி ஒரேயொரு முட்டையை மட்டும் பெரிய மனதுடன் வைத்துவிட்டு இரண்டு முட்டைகளை ஆட்டையைப் போட்டு குடிக்கும் அப்பாவிகள்..!
பெரிய மரத்துடன் கிரிக்கெட் விளையாடும் வசதியுடன் கூடிய இந்த இடம் ஒரு நாள் பூட்டப்படுகிறது. காக்கைகள் கூடு கட்டி குடியிருந்த அந்த மரம் வீழ்த்தப்பட்டு மண் தோண்டப்பட்டு பில்டிங் கட்டப்படுகிறது. புதிதாக நவநாகரிகத்துடன் ஒரு கட்டிடம் எழும்பியிருக்கிறது. அது பீட்சா கடை.
கடையைத் திறந்து வைக்க சிம்பு வருகிறார். பையன்கள் பார்க்கிறார்கள். கவனத்தை ஈர்க்கிறது பீட்சா. அதை சாப்பிட்டு பார்க்க துடிக்கிறார்கள். விலை 300 என்றவுடன் திகைக்கிறார்கள். எப்படியாவது அவ்வளவு பணத்தை சம்பாதித்து பீட்சாவை சாப்பிட முடிவெடுத்து பணத்துக்காக கடுமையாக உழைக்கிறார்கள்.
அந்தச் சின்ன வயதில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையும் செய்து 300 ரூபாயைத் சம்பாதித்துக் கொண்டு பீட்சா கடைக்குள் நுழைகிறார்கள். அவர்களுடைய சேரிவாழ் முகமும், அழுக்கு உடையும் அந்தக் கடைக்குள் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் சொல்கிறது. வாட்ச்மேன் உள்ளேவிடாமல் அடித்துத் துரத்த நல்ல உடையுடன் போனால்தான் உள்ளே விடுவார்களோ என்று எண்ணுகிறார்கள்.
இதற்காக இன்னொரு சுற்று சம்பாதிக்கிறார்கள். எப்போதும் கம்பி வலைக்கு பின்னால் மட்டுமே சந்திக்க முடியும் பிளாட் வீட்டு பையனின் உதவியோடு புத்தாடை கிடைத்து பீட்சா கடைக்கு பெருமிதத்தோடு தன்னுடைய எதிரி நண்பர்களையும் அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். இப்போது அவர்களுக்கு அடிதான் கிடைக்கிறது. உடையும் இப்போது தகுதியில்லையா..? பின்பு எதுதான் தகுதி என்பது அந்தச் சிறுவர்களின் புத்திக்கு உரைக்கவில்லை.
திரும்பி வந்தவர்களின் கையில் இருந்த பணம் அவர்களது ஆயாவின் இறுதிக் காரியத்திற்கு உதவுகிறது. ஆனால் இவர்கள் அடி வாங்கியது இன்னொருவனின் செல்போனில் பதிவாகியிருக்க அது வேறொரு ரூபத்தில் மீடியாக்களில் வெளியாகிறது.
எப்பாடுபட்டாவது உழைக்காமல் சம்பாதிக்க நினைக்கும் கட்சியின் அடியாட்களும், இவர்களை வைத்து தாங்கள் வாழ நினைக்கும் அரசியல்வியாதிகளும்.. எந்தப் பிரச்சினையானாலும் லஞ்சம் வாங்கியே பிழைப்பை நடத்தும் போலீஸ்காரர்களும் சேர்ந்து இந்தப் பிரச்சினையை மண்ணோடு மண்ணாக்கினாலும் கடைசியில் கடைக்காரரின் சமாதானத் திட்டத்தினால் இவர்களால் பீட்சாவை சுவைக்க முடிகிறது.
ஆனால் இறுதியில் படம் சொல்லும் நீதியை உணர்ந்தால் மனம் திக்கென்றாகிறது.
சேரியில் வாழும் மனிதர்களும், அழுக்கு ஆடை மனிதர்களும் கையில் பணம் வைத்திருந்தாலும் உலாவக் கூடிய இடம் அதுவல்ல என்று சொல்வதுகூட ஒருவித இனி வெறி, நிற வெறிதான் என்பதை பொட்டில் அடித்தாற்போல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். இதனைப் புரிந்து கொண்டதால்தான் பல திரைப்பட விழாக்களில் இந்தப் படம் பாராட்டையும், பரிசுகளையும் பெற்றிருக்கிறது. வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
புதுமுக நடிகைகள் பலரும் செய்யத் துணியாத ஒரு விஷயம். இரண்டு பையன்களுக்கு அம்மாவாக நடிக்க எந்த ஹீரோயினும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். துணிந்து ஒத்துக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒரு சபாஷ்.
சேரிப் பெண் வேடம். மெல்லிய சேலை.. மேக்கப் இல்லாத முகம்.. அழுது ஊரைக் கூட்ட வேண்டியிருக்காத கேரக்டர் ஸ்கெட்ச். மகன்களின் நடிப்பைப் பார்த்து கொஞ்சுவதிலிருந்து “ஆயாகூட சும்மாதான இருக்கு..?” என்று பெரிய முட்டை கேட்டவுடன் கோபத்துடன் “என்ன பேச்சு பேசுறான் பாரு…” என்று பொருமுவதிலும் ஒரு தாயின் நிஜ நடிப்பை அப்படியே காட்டியிருக்கிறார்.
படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் ஏதோவொரு கவுரவத்தை தனக்குத்தானே சுமந்து கொண்டிருப்பதையும் அதனை கடைசியில் கிளைமாக்ஸில் போலீஸ் ஜீப்பில் வரும்போது ஒத்துக் கொண்டு கண்ணீர் விடுவதெல்லாம் கிளாஸ் நடிப்பு..! வெல்டன் மேடம்..!
சின்னப் பையன்களில் இருவருமே அசத்தியிருக்கிறார்கள். புதுமுக நடிகர்கள் என்றில்லை. சின்னஞ்சிறியவர்களை எப்படி இப்படி அசலுக்கு மிக அருகில் வரும்படியாக நடிக்க வைத்தார் என்று தெரியவில்லை. அவர்களுடைய ஆச்சரியம்.. பயம்.. கோபம்.. வெட்கம்.. தப்பிப் போக நினைப்பது.. அம்மாவிடம் காட்டும் பாசம்.. ஆயாவிடம் காட்டும் நெருக்கம்.. என்று அனைத்தையும் மிக இயல்பாக நடிக்க வைத்து காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
முதல் ஷாட்டில் பையனின் டிரவுசரில் இருந்து உச்சா வெளிவரும் காட்சியை நிச்சயமாக தமிழகத்து மக்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கேமிராவின் கோணமும், இதைத் தொடர்ந்து அந்தப் பையன் அடுத்தடுத்து செய்யும் செயல்களும் ருசிகரமானவை. வாவ் என்று சொல்ல வைக்கும் அளவுக்கு சின்னப் பையன்களின் சின்னச் சின்ன ரியாக்சன்களும், நடிப்பும் நம்மை ஆக்கிரமித்திருக்கிறது.
பீட்சா ஆள் வழி தவறி தெருவில் நிற்கும்போது ஒரேயொரு தடவை பீட்சாவை திறந்து காட்டால் வழியைச் சொல்வதாக பிளாக்மெயில் செய்து அந்த பீட்சாவை மிக அருகில் பார்த்து வாசனையை முகர்ந்து ஏக்கத்துடன் பார்க்கும் அந்தக் காட்சி ரம்மியமானது. ரசிகர்களை படத்தோடு ஒன்ற வைத்தது இந்தக் காட்சியாகத்தான் இருக்க முடியும்.
படத்தில் அதிகமாக கைதட்டல் வாங்கிய காட்சி பீட்சாவை தான் வீட்டிலேயே செய்து தருவதாக ஆயா சொல்லிவிட்டு அதைத் தயார் செய்வதுதான். “அதுல நூல் நூலா வரும்..” என்று பெரிய முட்டை சொன்னதற்கு “அது கெட்டுப் போனாத்தாண்டா வரும்…” என்று ஆயா சொல்லும் காட்சியில் கரகோஷம் தியேட்டரை அதிர வைத்தது. மிக இயல்பான வசனங்களை பேசும்வித்த்தில் நமக்குள்ளேயே பேச வைத்துவிட்டார் இயக்குநர்.
ரயில்வே டிராக்மேன் பழரசமாக வரும் ஜோமல்லூரியின் ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பு மேலும் ஒரு கவனஈர்ப்பை கொடுத்திருக்கிறது. அவர் நினைத்திருந்தால் வெறும் 300 ரூபாய்தானே என்று அவரே கடைக்குச் சென்று பீட்சாவை வாங்கிக் கொடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை. மாறாக பையன்கள் சம்பாதிக்க வேண்டி கரி குடோனையே அவர்களது கண்ணில் காட்டுகிறார். பையன்களின் அந்த உழைப்பையும், வேட்கையையும் பார்த்து பார்த்து புன்னகைக்கிறார் பழரசம். அந்தக் கேரக்டரில் இருப்பது தியேட்டர் ரசிகர்களில் ஒருவன் என்பதை நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பாபு ஆண்டனி தமிழில் வந்திருக்கிறார். ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வை சமாளித்து லஞ்சம் கொடுத்து இடத்தைப் பிடித்து பீட்சா கடையைத் துவக்குவது முதல், கிளைமாக்ஸில் பிரச்சினை அவரது உடன் வரும் கல்லூரி கால நண்பர் கிருஷ்ணமூர்த்தியின் அவரசக்குடுக்கை பேச்சினால் நொந்துபோகும் அளவுக்கு இருந்தும் அப்போதும் கோப்ப்படாமல் பிரச்சினையைத் தீர்க்க முயல்வதுகூட சிறப்பான கேரக்டர் ஸ்கெட்ச்சுதான்.
கிளைமாக்ஸ் நிச்சயமாக யாராலும் யூகிக்க முடியாத்து. அரசியல் படமோ என்று நினைத்து போகும்போது அதனை மனிதர்கள் தாங்களே முடித்துக் கொள்ள முயல்கிறார்கள் என்று சொல்லியிருப்பதுகூட பாஸிட்டிவ்வான விஷயம்தான்..
அரசியல் அடியாட்களாக வரும் அந்த இரண்டு பேரும் இன்றைய நிகழ்கால அரசியலின் உதாரணங்கள்தான். இவர்களைப் போன்ற பல தொண்டர்களால்தான் இந்த எம்.எல்.ஏ.வை போன்ற புத்தியுள்ளவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை இவர்கள் எப்போது உணரப் போகிறார்களோ..? ஆனால் தியேட்டரில் ரசிகர்கள் இவர்களுக்குக் கொடுக்கும் கை தட்டலை பார்த்தால் நிச்சயம் ஏரியாவுக்கு இரண்டு பேர் இப்படியிருப்பார்கள் என்பது நிச்சயம்.
கண்ணனின் ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் படத்திற்கு மேலும் ஒரு பலம். அந்த சின்னஞ்சிறிய இடத்தில் எப்படி ஷூட்டிங்கை நடத்தி முடித்திருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே ஆச்சரியமாக இருக்கிறது. அதிலும் அவ்வப்போது ஏரியல் வியூ ஷாட்டில் அந்தப் பகுதியைக் காட்டும்போது இதுவரையிலும் சென்னையில் இப்படியொரு ஏரியா இருக்கிறது என்பதையே தெரியாதவர்களுக்கு நிச்சயம் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
பாடல் காட்சிகளிலேயே கதையை நகர்த்தியிருப்பதால் அதுவும் தேவையாகத்தான் இருக்கிறது. படத்தின் இயக்குநர் எம்.மணிகண்டன் ஏற்கெனவே பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். கார்த்திக் சுப்புராஜிடம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர். இவருடைய திறமையை உணர்ந்த இந்தப் படத்தை உருவாக்க துணிந்த இயக்குநர் வெற்றிமாறனுக்கும், நடிகர் தனுஷுக்கும் நமது நன்றிகள்.
படத்தில் சிறப்பாக நடித்திருக்கும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் நமது நன்றிகளும், பாராட்டுக்களும் உரித்தாகட்டும்..!
இந்தாண்டு இதுவரையில் வந்த படங்களிலேயே மிகச் சிறப்பான படம் இதுதான் என்று நிச்சயமாக உறுதியாகச் சொல்லலாம். உலக சினிமாவை படைக்க வெளிநாட்டு படைப்புகளைத்தான் பார்க்க வேண்டும். காப்பி செய்ய வேண்டும் என்பதில்லை. நம்மிடையே உள்ள கதைகளையே எடுக்கலாம். ஆனால் இயக்கம்தான் சிறப்பாக வேண்டும். அதற்கு இந்தப் படமும் ஒரு உதாரணம்..
காக்கா முட்டை நிச்சயம் பொன் முட்டைதான். அவசியம் பார்த்து மகிழ வேண்டிய திரைப்படம்..!

0 comments: