அச்சாரம் - சினிமா விமர்சனம்

24-06-2015

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

தமிழ் சினிமா ஹீரோக்களில் எந்த லிஸ்ட்டிலும் இல்லாத கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாக நடித்திருக்கும் படம். கதையை நம்பியே குறைந்த பட்ஜெட்டில் தன்னால் முடிந்த அளவுக்கான இயக்கத்தில் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின்பும் பழைய காதலனுடன் சல்லாபிக்கும் பெண்.. கணவன் இருக்க மற்றொரு நபரோடு எஸ்கேப்பாகும் ஒரு மனைவி.. இப்படி எல்லை மீறும் பெண்களை படத்தின் துவக்கத்திலேயே துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரான  கணேஷ் வெங்கட்ராம்.
மேலும் பணியில் மிகவும் கண்டிப்பாகவும் இருப்பதால் கொடைக்கானலுக்கு தூக்கியடிக்கப்படுகிறார் கணேஷ். அங்கே அவர் சந்திக்கும் முதல் கேஸே ஹீரோயின் பூனம் கவுரின் வீட்டில் நடந்த கொள்ளை வழக்குதான். பூனம் கவுரை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி.. பின்பு அவர் மீது மையல் கொண்டாடும் வில்லனை போலவே நடந்து கொள்கிறார் கணேஷ்.
இந்த விஷயம் பூனத்தின் கணவருக்குத் தெரிய வந்து அவர் மூலமாக இன்ஸ்பெக்டருக்கும் தெரிய வந்து எச்சரிக்கப்படுகிறார் கணேஷ். ஆனாலும் கணேஷ் பூனத்தின் மீது ஒரு கண்ணாக இருக்க.. இந்த நேரத்தில் சென்னையில் நடைபெற்ற 2 பெண்களின் கொலை வழக்கில் கணேஷ் மீது சந்தேகம் வந்து மேலதிகாரிகள் விசாரிக்கத் துவங்க..
கணேஷின் பின்புலம் பிளாஷ்பேக்கில் விரிகிறது. இதுதான் படத்தின் மையக் கதை. கல்யாணமே வேண்டாம் என்று சொல்லிவரும் மகன் கணேஷை தனக்கு நெஞ்சு வலி என்று சொல்லி ஏமாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார் அம்மா ரேகா.
தஞ்சாவூரில் இருக்கும் தனது தூரத்து சொந்தமான பூனம் கவுரை மகனுக்கு நிச்சயம் செய்கிறார் ரேகா. பொண்ணும், மாப்பிள்ளையும் நேருக்கு நேர் பார்க்கவில்லை. புகைப்படங்கள் இடம் மாற்றிக் கொள்கிறார்கள். இதில் பெண்ணை மாப்பிள்ளை பார்த்தாலும், மாப்பிள்ளையை பெண் பார்க்கவில்லை.
இந்த நேரத்தில் பூனமும் வேறொருவரை காதலித்து வருகிறார். வீட்டுக்குத் தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் கல்யாணத்திற்கு முதல் நாள் காதலர்கள் எஸ்கேப்பாகிறார்கள். இந்த அவமானத்தைத் தாங்க முடியாமல் அம்மா ரேகா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொள்ள.. கணேஷுக்கு இந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வர முடியவில்லை. சைக்கோ போல் ஆகிவிடுகிறார்.
கள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களை பார்த்தால் போட்டுத் தள்ளிவிட்டுப் போக வேண்டும் என்று துடிக்கிறார் கணேஷ். இந்த நேரத்தில்தான் தன் அம்மாவின் சாவுக்குக் காரணமான பூனம் கவுரே கையில் கிடைக்கும்போது சும்மா விடுவாரா..? அவரை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறார். கடைசியில் என்ன ஆனது என்பதுதான் படம்.
கணேஷ் வெங்கட்ராம் சிக்ஸ் பேக் வைக்காமலேயே எய்ட் பேக் வைத்ததுபோலவே இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக மிடுக்குடன்  இருக்கிறார். ஆனால் காதல் காட்சிகளில் ரசிக்க முடியாத அளவுக்கு இயக்கம் இருப்பதால் இவரைக் குறை சொல்லி புண்ணியமில்லை. மேலும் இவரது உயரம் வேறு இடிக்கிறது. ஹீரோயின்கள் அண்ணாந்து பார்த்து ‘ஐ லவ் யூ’ சொல்ல வேண்டிய கட்டாயத்திலும் இருப்பதால் ம்ஹூம்.. ரொமான்ஸ் சீன்ஸே வேண்டாம்பா என்று சொல்லும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் ஆக்சன் காட்சிகளில் சில இடங்களில் ஓவர் சப்தம் என்றாலும் போலீஸ் அடியை கொடுத்து பயமுறுத்துகிறார். பாடல் காட்சிகளில் ஓரளவுக்கு நடனமாடியிருக்கிறார். 
ஹீரோயின் பூனம் கவுர் எட்டாத உயரத்தில் இருக்கும் ஹீரோவுக்கு ஜோடி. பாடல் காட்சிகளில் கவர்ச்சியில் தாராளம் காட்டியிருக்கிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார். இன்னமும் சிறந்த இயக்குநர் கிடைத்தால் தேற்றிவிடலாம். அப்பாவை கண்டு பயப்படும் காட்சியில் இன்னும் கொஞ்சம் நடிப்பைக் கொட்டியிருந்தால் பார்ப்பவர்களுக்கு ‘அச்சச்சோ’ என்கிற பீலிங்காவது வந்திருக்கும். கெட்டது கதை என்றாகிவிட்டது படத்தின் அச்சாணியான அந்தக் காட்சி..!
மற்றொரு ஹீரோவாக வரும் சைமன் முதன்முதலாக பூனத்தை பார்த்தவுடன் பேசும் அலுவலக காட்சிகளை ரசனையுடன் படமாக்கியிருக்கிறார்கள். அந்தக் காட்சிககேற்ற வசனத்தை அதற்கேற்ற முகபாவனையுடன் நடித்து அசத்தலாக நடித்திருக்கிறார்கள் இருவரும்
ரேகாவின் அனுபவ நடிப்பை வைத்துக் கொண்டு சமாளித்திருக்கிறார் இயக்குநர். கோவிலில் ‘எனக்கும் ஒரு பெண் இருக்கு’ என்று சொல்லும் சொந்தக்கார பெண்ணிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லிவிட்டு கிளம்பும் காட்சியில் அசத்தல் அம்மாவாகத் தெரிகிறார்.
ஸ்ரீகாந்த்தேவா இசையில் பாடல்கள் ஒரு முறை கேட்க வைக்கிறது. தொடர்ந்து கேட்டால் பிடிக்கலாம். பின்னணி இசையிலும் கொஞ்சம் மிரட்டியிருக்கிறார். பிரதாப்பின் ஒளிப்பதிவில் ஹீரோயினின் அழகைவிடவும் கொடைக்கானலின் அழகு நன்கு தெரிகிறது.  கொடைக்கானல் காட்சிகள் பலவும் இரவு நேர காட்சிகளாகவே இருப்பதால் கண்ணை உறுத்தாத வெளிச்சத்தில் அழகாக படமாக்கியிருக்கிறார். 
சில இடங்களில் இயக்கம் பளிச்சென்றும், பல இடங்களில் ஒளிந்து கொண்டும் இருப்பதால் படம் ஏற்ற இறக்கத்துடனேயே கடைசிவரையில் செல்கிறது.  ஒரு அழகான கிரைம் கதையை கையில் எடுத்துக் கொண்டு திரைக்கதையையும் சுவாரஸ்யமாகவே கொண்டு செல்ல முயன்றிருக்கிறார். எடுத்த எடுப்பிலேயே கணேஷ்தான் கொலைகாரன் என்பது தெரிந்துவிட்டது. பின்பு பூனம் கவுர் யார் என்பதை சஸ்பென்ஸில் வைத்திருந்து லீக் செய்யும்போது அந்த ப்ளோ இல்லாததால் படத்தின் கனம் மனதில் ஏறவில்லை.
காதல் இங்கே தவறில்லை என்றாலும், பெற்றோரை  எதிர்த்து காதலர்கள் வீட்டை விட்டு ஓடுவதும் தவறில்லை என்றாலும், கல்யாணத்திற்கு முதல் நாள் வரையில் காத்திருந்து அதன் பின்னர் ஓடி, இதன் மூலம் இரு குடும்பத்தாருக்கும் சமூகத்தில் தலைக்குனிவை ஏற்படுத்தாதீர்கள் என்பதை அழுத்தம், திருத்தமாக ஒரு நல்ல மெஸேஜாக சொல்லியிருக்கிறார் இய்க்குநர்.
கதையாக படம் ஓகேதான். ஆனால் திரைக்கதையில் அழுத்தமான காட்சிகளாக இல்லாததாலும், பல லாஜிக் மீறல்களையும் கொண்டிருப்பதாலும், வேகவேகமான காட்சி நகர்த்தலால் மனதில் நிற்காமல் போகும் உணர்ச்சிகளாலும் படம் சாதாரண படமாகவே மாறிவிட்டது.
மொத்தத்தில் அச்சாரம் ‘ஹிட்’டுக்கு அச்சாரம் கொடுக்கவில்லை.

0 comments: