பொறியாளன் சினிமா விமர்சனம்

09-09-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
அனுபவமில்லாமல் தொழிலில் இறங்கக் கூடாது என்பதை அழுத்தமில்லாத காட்சிகளால் ஓரளவுக்கு சுவையான திரைக்கதையால் சொல்லியிருக்கிறார்கள்.

ஹீரோ ஹரீஷ் சிவில் என்ஜீனியரிங் முடித்துவிட்டு ஒரு கன்ஸ்ட்ரக்சன்ஸ் கம்பெனியில் சைட் அஸிஸ்டெண்ட் என்ஜீனியராக வேலை செய்கிறார். எல்லாவித்த்திலும் பெர்பெர்க்ட்டாக இருக்க நினைக்கிறார். ஆனால் தொழிலாளர்களும், முதலாளியும் அப்படி இருக்கவில்லை. எனவே தானே தனியாக ஒரு கட்டுமான நிறுவனத்தைத் துவக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறார்.
அப்பா தனது சேமிப்புப் பணத்தை மொத்தமாக எடுத்துக் கொடுக்க நண்பன் அஜய்ராஜும் கை கொடுக்கிறான். அஜய் அந்த ஏரியாவில் கந்து வட்டி ஸ்பெஷலிஸ்ட்டான சுந்தரின் கையாள். சுந்தரின் பணத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுத்து வட்டிப் பணத்தை வசூல் செய்து சுந்தரிடம் ஒப்படைப்பதுதான் அஜய்யின் வேலை.
வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காத ஒருவனை தனது வீட்டிலேயே கொலை செய்கிறான் சுந்தன். இந்த வழக்கிற்காக ஜெயிலுக்கு போகிறார். அந்த நேரத்தில் சுந்தரின் பணம் 2 கோடியை எடுத்து தனது நண்பன் ஹரீஷின் கட்டுமான நிறுவனத்தில் முதலீடு செய்கிறான் அஜய்.
இந்தப் பணத்தில் ஒரு இடத்தை விலைக்கு வாங்குகிறார்கள். ஆனால் அந்த நிலம் வேறொருவருடையது. கூடுதலாக நீதிமன்றத்தில் வழக்கும் உள்ளது. இந்த நிலைமையில் சிக்கல்கள் அதிகரிக்க.. சுந்தரும் திடீரென்று ஜாமீன் கிடைத்து வெளியில் வருகிறான்.
இப்போது ஹரீஷுக்கு வாங்கிய பணத்தை அஜய்யிடம் உடனேயே கொடுக்க வேண்டிய கட்டாயம்.. தன்னிடம் பணத்தை வாங்கியவரைத் தேடி அலைகிறான்.. கண்டுபிடித்தானா இல்லையா என்பதுதான் கதை..!
இப்போது இந்தியா முழுக்கவே பெரிய அளவில் வளர்ச்சியை பெற்றிருக்கும் தொழில் ரியல் எஸ்டேட் தொழில்தான். ஆனால் நல்லவர்கள் இருப்பதுபோல கெட்டவர்களும் இருப்பார்களே.. அதுவும் இங்கே அதிகம்தான்..
போலி டாக்குமெண்ட்.. வேறொருவர் நிலத்தை தன்னுடைய பெயரில் பட்டா போட்டுக் கொள்வது.. உரிமையாளருக்கே தெரியாமல் விற்பனை செய்வது.. அரசு அதிகாரிகளின் கூட்டணி.. அதிகார வர்க்கத்தின் லஞ்ச வெறி.. எல்லாமும் சேர்ந்துதான் இந்த ரியல் எஸ்டேட் தொழிலை வளர்த்து வருகின்றன. பத்திர பதிவுத் துறையில் ஒரு நாளில் புழங்கும் லஞ்சத் தொகையே பல கோடிகள் என்கின்றனர். அந்த அளவுக்கு லஞ்சமும், ஊழலும் விளையாடும் இந்தத் துறையில் ஹீரோ தெரியாத வயதில் அறியாத விஷயங்களுடன் உள்ளே நுழைந்து சின்னாபின்னமாகிறார்..
தெரியாத விஷயங்களில் ஆழம் தெரியாமல் காலைவிடக் கூடாது என்கிற அட்வைஸெல்லாம் சரிதான்.. ஆனால் அதற்கான காரண, காரியங்களைத்தான் அழுத்தமாகச் சொல்லாமல் மேம்போக்காகச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் இயக்குநர்.
ஹரீஷ்.. சிந்துசமவெளியில் அமலாபாலுக்கு ஜோடி போட்டவர். இடையில் வேறொரு படத்தில் நடித்தவர் இந்தப் படத்தில்தான் அறிமுகம் என்பதுபோல நடித்திருக்கிறார். அப்பாவி கேரக்டர் ஷூட் ஆகிறது என்றாலும் நடிப்புக்கு இன்னும் கொஞ்சம் ஸ்கோர் செய்யணும் போலிருக்கே..!
இயக்குநரின் இயக்கத் திறமையால் இவரும் ஹீரோயினும் தப்பித்தார்கள். ஹீரோயின் ஒரு நாள் அண்ணனாக தனக்காக நடிக்க வரும்படி கேட்டு, காதலியின் மேலுள்ள காதலுக்காக ஒத்துக் கொண்டு காலேஜுக்கு சென்று சீன் போடும் அந்த காட்சியில் இயக்குநரின் திறமை பளிச்சிடுகிறது. அளவான வசனங்கள்.. கச்சிதமான நடிப்பு..
ஹீரோயின் ஆனந்தி.. புதுமுகம் என்றாலும் சிவப்பில்லை என்றாலும் களையாகவே இருக்கிறார். அதிகம் வேலையில்லாமல் போக அடுத்து வரும் படங்களை எதிர்பார்க்க வேண்டியதுதான்..
அதிகம் பாராட்டப்பட வேண்டியவர் சாஸ்திரியாக நடித்திருக்கும் மோகன்ராம்தான். ஏமாற்றுப் பேர்வழி கேரக்டர்.. ஐயராக இருந்தாலும் விபச்சார விடுதிகளுக்கு செல்லும் பழக்கமுள்ளவர். உண்மையைத் தவிர மற்றதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார்.. வழக்கு இருக்கிறது என்கிற உண்மையைச் சொல்லாமல் 2 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு எஸ்கேப்பாகும் அவரைத் தேடியலையும் படலம்தான் இரண்டாம் பாதியில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது..!
பணம் கிடைத்தவுடன் அத்தனை நாள் அலைச்சல் கடுப்புடன், மோகன்ராமை நடுரோட்டில் இறக்கிவிட்டு ஹீரோ காரில் பறக்கும் காட்சியில் கூடுதலாக கைதட்டலும் கிடைக்கிறது.. ஒன்றிப் போய்விட்டார்கள் ரசிகர்கள்..!
இன்னொரு பக்கம் சாந்தமான முகத்துடன் வட்டி பிஸினஸ் சுந்தராக நடித்திருக்கும் அச்சுதகுமார் பாராட்டுக்குரியவர்.. சின்ன பட்ஜெட் என்பதால் அதிகப்படியான காட்சிகளை வைக்காமல் முடிந்த அளவுக்கு எடுத்திருக்கிறார்கள் போலும்..
2 கோடி ரூபாயை வாங்கிவிட்டு அதனை பத்திரமாக திருப்பிக் கொடுக்கும் மோகன்ராம் போன்றவர்கள் நாட்டில் எங்கேயிருக்கிறார்கள் என்று தேடித்தான் பார்க்க வேண்டும். அவர்தான் தெரிந்தே ஏமாற்றித்தானே விற்றிருக்கிறார். பின்பு எப்படி படத்தைத் திருப்பித் தருவார்..?
அதேபோல் கந்து வட்டி சுந்தரின் கேரக்டர் ஸ்கெட்ச்சில்.. கடன் தரவில்லையெனில் வீட்டு பெண்களைத் தூக்குவேன் என்பது போல கொண்டு சென்று, கடைசியில் அந்தத் தகராறிலேயே உயிரை விடுகிறார்.. இதுக்காகத்தான் அந்த கேரக்டர் ஸ்கெட்ச்சா..?
வேல்ராஜின் ஒளிப்பதிவாக இருப்பினும் முதற்பாதியில் டல்லடிக்கிறது ஸ்கிரீன். பிற்பாதியில் பாதி காட்சிகளிலும் அப்படித்தான். என்ன கேமிரா பயன்படுத்தினார்களோ தெரியவில்லை..
ஜோன்ஸ் இசையமைத்திருக்கிறார். பாடல்கள் பரவாயில்லை ரகம்.. தியேட்டரில் மட்டுமே கேட்டுக் கொள்ளலாம். ஆனாலும் ஆட்டமா தேரோட்டமா பாடலை அப்படியே ரீமிக்ஸ் செய்து வேறொரு பாடலை ரெடி செய்திருக்க வேண்டாம்.. இசைஞானி பாவமில்லையா..?
கட்டுமானத் துறை, நில விவகாரம், பத்திரப் பதிவுத் துறை, சிஎம்டிஏ துறைகளை பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். இதில் இருக்கும் அடையாள வார்த்தைகள், துறை சார்ந்த வார்த்தைகளைப் பயன்படுத்தியிருந்தால் கதைக்கும், படத்துக்கும் நெருக்கமாக இருந்திருக்கும். அதில்லாமல் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் டாக்குமெண்ட்.. டாக்குமெண்ட் என்று சொல்லியே ஏய்த்திருக்கிறார்கள்..
இப்போதைய தமிழகத்தின் நிலைமையை நிறையவே வசனத்தின் மூலம் சொல்லியிருக்கலாம்.. திருடர்களை அடையாளப்படுத்த ஆக்கப்பூர்வமான யோசனைகளைச் சொல்லியிருக்கலாம்.. எல்லாவற்றையும்விட்டுவிட்டு ஹீரோ முயன்று பணத்தைத் திரும்ப்ப் பெறுகிறார் என்று சொல்லி சுபம் போட்டு முடித்திருப்பது எந்தவித சுவாரஸ்யத்தையும் தரவில்லை..!
அதிலும் கிளைமாக்ஸில் பிணம் கிடக்கும் ஸ்பாட்டிலேயே “அந்தப் பணத்தை வைத்து நாம பில்டிங் கட்டுவோம்.. பிஸினஸ் செய்வோம்” என்று ஹீரோவிடம் சொல்கிறான் பிரபு. அந்த 2 கோடி ரூபாய் பணம் சுந்தருடையது. அது உண்மையாக சுந்தர் இல்லையெனில் சுந்தரின் மனைவியிடத்தில் போயச் சேர வேண்டியது. அதை வைத்து நாம் பிஸினஸ் செய்யலாம் என்றால்.. கெட்டவன் ஒருவனின் பணத்தைத் திருடி, நாம் பிழைத்துக் கொள்ளலாம். தப்பில்லை என்ற மெஸேஜ் வருகிறது..!
இது தப்பில்லையா..?

0 comments: