06-09-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
‘நான்’ படத்தின் வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஜீவாசங்கர் அடுத்து இயக்கியிருக்கும் படம் இது.
எத்தனையோ தெய்வீகக் காதல்களையும், எதிர்பாலின ஈர்ப்பினால் உருவாகும் குருட்டுத்தனமான காதல்களையும் கண்டிருக்கிறது இத்தமிழ்த் திரையுலகம். அந்த வரிசையில் இந்தப் படமும் ஒன்று..!
பிளஸ்டூ வகுப்பில் படிக்கும் மாணவர்கள்தான் கதையின் நாயகர்கள்.. தான் கார்த்திகாவை காதலிப்பதாகவும் அவளிடம் போய் தனக்காக பேசும்படியும் தனது நண்பன் ஹீரோ சத்யாவை ஹீரோயினிடம் அனுப்பி வைக்கிறான் பாலாஜி. ஹீரோயின் மியாவோ தன்னை தேடி வந்த சத்யாவையே தான் விரும்புவதாகச் சொல்ல.. காதல் களமாடத் துவங்குகிறது..!
அந்த வயதுக்கே உரித்தான சிணுங்கல்கள்.. சீண்டல்கள்.. காமத்தின் முதல் வாசலை எட்டிப் பிடிக்கும் ஆர்வம்.. என்று அனைத்தையும் உள்ளடக்கிய இவர்கள் காதலை உடைக்கிறது ஊட்டி காவல்துறை. அத்துவானக் காட்டில் அத்துமீறிய நிலையில் இருக்கும் காதலர்களை பிரித்தெடுக்கும் காவல்துறை, இருவரின் குடும்பத்தினருக்கும் இச்செய்தியை தெரிவிக்கிறது. காதலர்கள் பிரிக்கப்பட இங்கே காதல் உறுதியாகிறது..
மியாவின் குடும்பம் கோயம்புத்தூருக்கு மாறுதலாகிச் செல்ல.. விடாப்பிடியாகத் தேடிச் செல்கிறார் சத்யா. அங்கே நடக்கும் சண்டைகள்.. புரிந்து கொள்ளாமை.. இது எல்லாமுமாக சேர்ந்து கிளைமாக்ஸில் ஒரு பரிதாப உணர்வை கொண்டு வருகிறது.. ‘தப்புத்தாளங்கள்’ படத்தில் ஆரம்பித்து சமீப காலமாக நிறைய உச்சு கொட்ட வைத்த படங்களின் கிளைமாக்ஸும் இதேதான்..!
முதல் காட்சியில் இருந்து இறுதிவரையிலும் இயக்கமும், ஒளிப்பதிவும் இணை பிரியா தோழர்களாக இருக்கிறார்கள். மற்ற படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டு தனது இயக்கத் திறமையைக் காட்டியிருக்கிறார் ஜீவா சங்கர்.
கதை 1989-ல் நடப்பதால் அது போன்ற இடங்களை காட்டுவது கஷ்டம் என்பதால் ஊட்டிக்கே டிரான்ஸபராகியிருக்கிறது குழு. நல்ல முடிவுதான்.. ஊட்டியின் அழகை பாலுமகேந்திராவின் படத்தில்தான் முழுமையாக கண்டிருக்கிறோம். இப்போது இதில்.. ஒளிப்பதிவையும் சேர்த்தே செய்திருக்கும் இயக்குநருக்கு இதற்காகவே ஒரு ஷொட்டு..!
சத்யா தனது கேரக்டரை உணர்ந்து நடித்திருக்கிறார். நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். “நான் மன்னிப்பு கேட்கணும்னுதான் வந்தேன். அவர்தான் தள்ளிவிடுறார்…” என்று மியாவிடம் சொல்லும்போதே அவரது கேரக்டர் ஸ்கெட்ச் தெளிவாகிவிட்டது.. ஆனால் அது திரைக்கதையில் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை.. ஹீரோ சத்யா ‘இயல்பாக எதையும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்’ என்பதை ‘காதலுக்காக உருகுகிறார்’ என்று மாற்றியமைத்து இயக்குநர் கதையை நகர்த்தியிருப்பதால்தான் இந்தக் குளறுபடி..!
பொதுவாக ‘இவர்’ போன்றவர்கள் தாங்களாகவே எதையும் தேடிப் போக மாட்டார்கள். ஆனால் இவர்களைத் தேடி வருவதையும் விடவே மாட்டார்கள். இதுதான் இந்தக் குறைபாடு. தனது சொந்தத் தந்தை இறந்துவிட இப்போது தாய் இன்னொரு கல்யாணம் செய்து அந்த கார்டியன் தந்தையோடு இருப்பதை அவர் சொல்லும்போதும் இவரது இன்னொரு முகம் தெரிகிறது.. துவக்கத்தில் இருந்தே தனிமையில் இருந்து வருபவர், தன்னையும் ஒரு பெண் விரும்புகிறாள் என்றவுடன் அவள்தான் வாழ்க்கை என்று ஆவது நியாயமானதுதான். அதைத்தான் சத்யா இதில் செய்ய முனைந்திருக்கிறார்.
மியாவை தொட வேண்டும்.. முத்தமிட வேண்டும் என்று அவர் துடிப்பதும்.. மியாவின் கண்களை பார்த்து பேசுவதற்கு கூச்சப்பட்டு நிற்பதும்.. மியாவின் வீட்டுக்குள் சென்று தயக்கத்துடன் பேசிவிட்டு அவளது கை பட்டவுடன் சிலிர்த்துப் போய் உட்கார்ந்திருப்பதும் அக்மார்க் பிளஸ் டூ ஸ்டூடண்டின் ஒரு காதல் உணர்வுதான்..
தமிழுக்கு புது வரவு மியா ஜார்ஜ்.. அந்தக் கண்களே பாதி வசனங்களை பேசி விடுகின்றன.. ‘நான் உன்னை பார்த்துதான் சிரிச்சேன்.. ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன்’ என்று துவங்கி கடைசியாக தன்னை குத்திக் கொல்ல தயாராகும் சத்யாவை தடுத்து நிறுத்தி தான் இறந்து போகும் அந்தக் காட்சிவரையிலும் பிரேம் டூ பிரேம் மியாவின் ராஜ்ஜியம்தான்..!
இதற்கு இயக்குநரின் அற்புதமான இயக்கம் கை கொடுத்திருக்கிறது என்றாலும் மியாவின் ஒவ்வொரு ஸ்டெப்பும் கச்சிதம்.. ‘என்னை கேக்காமல் என்னை டச் செய்யக் கூடாது’ என்று சொல்லிவிட்டே ஹீரோவின் கையைப் பிடித்துவிட்டு சிரிப்பது.. தன் வீட்டில் படிக்க வந்திருக்கும் ஹீரோவை பட்டென்று முத்தம் கொடுத்துவிட்டு அதற்கொரு சிரிப்பை உதிர்த்துவிட்ட வெட்கப்படும் அந்த அழகு.. இன்பாச்சுவேஷன் காதலின் ஆழத்தை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
கிளைமாக்ஸில் வீட்டுக்கு வந்து ரகளை செய்யும் சத்யாவை “வீட்டை விட்டு வெளியே போ…” என்று மியா சொல்லும்போதே அடுத்த காட்சி அதுதான் என்று யூகிக்க முடிகிறது. ஆனால் அதனை படமாக்கியவிதம்தான் நமக்கு பகீரென்றாக்கியிருக்கிறது.
மியாவின் பெற்றோர்களின் பேச்சு.. சத்யாவின் பெற்றோர்களின் பேச்சு.. நடிப்பு இவையெல்லாம் ஒட்டு மொத்தமாக படத்தின் பங்களிப்பில் பெரும் உதவியைச் செய்திருக்கிறது. போதாக்குறைக்கு காவல்துறையின் நடவடிக்கைகள்கூட படத்தின் மாறுபட்ட தன்மைக்கு உதவியிருக்கிறது. லாக்கப்பில் இருந்து “எல்லாம் உங்களாலதான். அன்னிக்கே பேசாம விட்டிருந்தீங்கன்னா இவ்ளோ பிரச்சினை வந்திருக்காதுல்ல…” என்ற சத்யாவின் கோபப் பேச்சுக்கு இன்ஸ்பெக்டரின் கோபமான பதிலும் மிக இயல்பு.
படத்தில் வரும் ஒரு சின்ன கேரக்டரில்கூட நடிகர்கள் தங்களது இயல்பு மாறாமல் எளிமையாக நடித்திருக்கிறார்கள். தம்பி ராமையா சத்யாவை உட்கார வைத்து ஆலோசனை சொல்லி அனுப்பிவிட்டு புலம்பும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம்.
சஸ்பென்ஸ், திரில்லர் என்றால் அது தொடர் கொலைகளாக இருக்கும் என்பதை மாற்றி இதுவும் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர்தான் என்பதை செய்து காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.. சத்யா அடுத்து என்ன செய்வாரோ என்கிற பதைபதைப்பை ஏற்றுகிறது பின்னணி இசை. பாடல் இசை மனதைத் தொடவில்லையென்றாலும், பின்னணி இசையும் படத்தின் இன்னொரு மிகப் பெரிய பலம்..!
இதில் ஒரு பிரச்சினையை மெல்ல மெல்ல வெளிக்கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர். அது ஹீரோ சத்யாவின் கேரக்டர் ஸ்கெட்ச்.. சத்யா ‘ஒரு அப்நார்மல் பெர்ஸன்’ என்பதை வெறும் வசனத்திலும், சில காட்சியமைப்புகளிலும் காட்டிவிட்டு அடுத்தடுத்த காட்சிகளில் அவர் இயல்பு நிலையில்தான் இருக்கிறார் என்பதாகவும் காட்டுவதுதான் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் நம்மை ஒன்றவிடாமல் செய்துவிட்டது.
இத்தனை பாராட்டுக்களை படத்திற்கும், படத்தின் இயக்குநருக்கும், நடித்தவர்களுக்கும் கொடுத்தாலும் இந்தப் படம் ஒரு எடுக்கக்கூடாத ஒரு கதையை வைத்து எடுக்கப்படக்கூடாத விதத்தில் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்..! படத்தின் இறுக்கமான இயக்கம் இந்த சமூகத்திற்கு மிக ஆபத்தான ஒரு தன்மையை வெளிக்காட்டியிருக்கிறது.
‘பிளஸ்டூ வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு காதல் தேவையில்லை’ என்பதை சொல்ல ஒரு சினிமாகூட இன்னமும் வரவில்லையே என்கிற வருத்தம் சினிமாக்காரர்களுக்கு இருக்கோ இல்லையோ.. சமூகத்தில் இவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உண்டு..!
இன்பாச்சுவேஷன் காதலை பற்றி இப்படியே சினிமாக்களை எடுத்து, எடுத்துத்தான் இப்போதும் பள்ளிகள், கல்லூரிகளில் அதிகமான காதல் பஞ்சாயத்துக்களை உருவாக்கிவிட்டது தமிழ்ச் சினிமா. இது மிகையில்லை. உண்மைதான். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ஆரம்பித்த சச்சரவு இது. இப்போதும்வரையிலும் தொடர்கிறது..
‘இதுவொரு நடந்த கதை.. ஆகவே எடுத்திருக்கிறோம்’ என்று சொல்லித்தான் அத்தனை இயக்குநர்களும் இதனை நியாயப்படுத்தி வருகிறார்கள். ஆனால் எந்தவொரு சினிமா இயக்குநர்களும், கதாசிரியர்களும், நடிகர்களும், தயாரிப்பாளர்களும் “எங்களது குழந்தைகள் பிளஸ்டூ படிக்கும்போது காதலித்தார்கள். எனவே அவர்களுக்கு அப்போதே திருமணம் செய்துவைத்திருக்கிறோம்…” என்று சொன்னதே இல்லை. செய்தும் காட்டியதில்லை.. ஆனால் இதன் விளைவுகளை சினிமாவுக்கு வெளியே இருப்பவர்கள்தான் அதிகம் அனுபவித்து வருகிறார்கள்.
பள்ளிப் பருவத்தில் வரும் எதிர் பாலின ஈர்ப்பை ஒரு காதல் என்று ஏற்றுக் கொள்வது எப்பேர்ப்பட்ட மடத்தனம் என்பதை தற்போது குடும்ப நல நீதிமன்றங்களுக்கு வந்து கொண்டிருக்கும் விவாகரத்து வழக்குகள் அடையாளம் காட்டுகின்றன. அவசரத்தில் திருமணம் செய்த காதலர்களில் பெரும்பாலோர்தான், இப்போது விவாகரத்து கேட்டும் வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் அற்புதமான இயக்கத்தின் விளைவுகள் நிச்சயமாக இப்போதைய காதல் பஞ்சாயத்துக்கள் மற்றும் காதலர்களிடையே இந்தப் படம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றே நம்புகிறோம்.. இதுவொரு தவறான காதல் என்பதை படத்தில் எந்த இடத்திலும் இயக்குநர் முன்னிலைப்படுத்தவே இல்லை.. காதலிப்பது சரி என்றும், வீட்டை விட்டு ஓடுவது சரியென்றும்.. பெற்றோர்களை புறக்கணிப்பது சரியென்றுமே திரும்பத் திரும்ப வசனங்கள் மூலமாக திணிக்கப்பட்டிருக்கிறது.
காதல் உறுதியென்றால் தேடி போ என்கிறார்களே ஒழிய.. படிப்பை முடி.. நல்ல வேலையில் சேர்.. பெற்றோர்களை கவனித்துக் கொள்.. பின்பு அவர்கள் ஒப்புதலுடன் காதலை தேடு.. அதுவரையில் பொறுமையாக இரு என்பதைத்தான் யாரும் சொல்ல மறுக்கிறார்கள்..!
நிச்சயம் இந்தப் படத்தைத் தியேட்டரில் பார்க்கும் பள்ளி மாணவர்கள் காதல் வலையில் சிக்கத்தான் செய்வார்கள். அந்த அளவுக்கு மனதைப் பாதித்து.. மனதை ஊடுறுவும் அளவுக்கு இயக்கம் செய்திருக்கிறார் இயக்குநர் ஜீவாசங்கர். இதுவே மிகப் பெரிய ஆபத்தானதாக இருக்கிறது.. நகைச்சுவை படமென்றால் அதில் இருக்கும் காமெடியை நினைத்துவிட்டு தியேட்டரைவிட்டு எழுந்து போகலாம்.. ஆனால் இதில்..?
தமிழகத்தில் பல இடங்களில் இது போன்ற காதலி படுகொலை.. காதலன் கைது என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன.. இந்தப் படத்தின் பாதிப்பு எப்படியோ என்று நினைத்துதா ஐயப்படுகிறோம்.. வருத்தப்படுகிறோம்..!
‘நான்’ படத்திலேயே சந்தர்ப்ப சூழ்நிலையில் இந்துவான ஒருவன் முஸ்லீமாக மாறி மெடிக்கல் காலேஜில் சீட் பெற்று படிப்பது போல காட்சிகளை வைத்திருப்பார். ஆனால் இதற்காக ஒரு குற்றவுணர்வைகூட அந்த ஹீரோ வெளிக்காட்டியிருக்க மாட்டார். எல்லாம் நல்லதுதான் என்பதுபோலவே காட்சியமைப்புகள் செல்லும். இதுதான் இங்கேயும் தொடர் கதையாகியிருக்கிறது..!
அனைவருக்கும் சமூகம் பற்றிய பொறுப்புணர்வு உண்டு.. அதுவும் கலைஞர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் அதிகம் உண்டு. இதையும் அவர்கள் எண்ணிப் பார்த்தே செயல்பட்டால் எல்லாருக்குமே நல்லது..
இது போன்ற சமூகத்திற்கு ஆபத்தாக விளையும் படங்களைவிடவும், ‘அஞ்சான்’ போன்ற தியேட்டரைவிட்டு வெளியில் வந்தவுடன் மறந்து போய்விடும் கமர்ஷியல் படங்களே தேவலை என்றுதான் இப்போது, இந்த நேரத்தில் சொல்லத் தோன்றுகிறது..!
சொல்லிவிட்டோம்..!
|
Tweet |
3 comments:
yoove; nee enna appaduckk-er'aa" ; ka-ruthu- sool-aa' koodhthe; because nee poi' tamilan;annakavadi' ammavasai;
moothevi.nalla vimarsanatha kurai solra. engavathu poi vilunthu saavudi paradesi.
super super super vimarsanam. very good message to that psycho director.
Post a Comment