24-09-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இதுவுமொரு வழக்கமான ரவுடிகளின் வாழ்க்கைக் கதைதான்..!
ராணிப்பேட்டைதான் கதையின் களம். தமிழ்ச்செல்வன் என்ற படத்தின் ஹீரோ ஒரு வாடகை கொலையாளி. காசி என்னும் பெரிய தாதாவிடம் வேலை செய்கிறார். அவர் கை காட்டினால் இவர் செய்து முடிப்பார். கொடுக்கின்ற கூலியை வாங்கி பிழைப்பை ஓட்டுகிறார்.
அதே ராணிப்பேட்டையைச் சேர்ந்த கலைச்செல்வி ஒரு நர்ஸ். காஞ்சிபுரத்தில் ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிகிறார். இவரது தோழி செல்போன் கடையில் ரீசார்ஜ் செய்ய போகும்போது செல்போனை மறந்து அங்கேயே வைத்துவிட்டு போகிறாள். அதே கடைக்கு அந்த நேரத்தில் வருகிறார்கள் ஹீரோவும் அவனது நண்பர்களும். செல் ரீசார்ஜ் செய்துவிட்டு போகும்போது அந்த செல்போனையும் லவட்டிக் கொண்டு போகிறான் ஹீரோவின் ஒரு அல்லக்கை.
போன் காணாமல் போய் பதறுகிறாள் தோழி. இந்த நேரத்தில் தோழிக்கு போன் செய்யும் கலைச்செல்வி மறுமுனையில் தமிழ்ச்செல்வனுடன் பேசுகிறாள். அந்த போன் தனது தோழியுடையது என்றும் அவளிடம் தயவு செய்து ஒப்படைத்துவிடும்படியும் சொல்கிறாள். அவளது அன்பான குரலுக்கு கட்டப்பட்டு மறுநாள் அந்தத் தோழியின் வீடு தேடி சென்று செல்போனை திருப்பிக் கொடுக்கிறார் ஹீரோ. அப்போது ஹீரோயினுக்கு தேங்க்ஸ் சொல்ல தோழி அவசரப்பட.. தன்னுடைய போனை கொடுத்து பேசச் சொல்கிறான் ஹீரோ. தோழியும் பேசிவிட.. இப்போது ஹீரோயினின் செல்போன் எண், ஹீரோவின் போனில் பதிவாகியிருக்கிறது.
ஹீரோவிடம் மறுபடியும் போன் செய்து பேசுகிறாள் ஹீரோயின். அதே தோழி ஒரு காதல் பிரச்சினையில் சிக்கியிருப்தாகவும் எப்படியாவது அவளது காதலை சேர்த்து வைக்கும்படியும் கேட்கிறாள். அவளது விருப்பத்திற்காக அந்தத் தோழியையும், அவளது காதலனையும் பைக் சேஸிங்.. கார் ரேஸிங்குடனான காட்சிகளுக்கு பிறகு சுடுகாட்டில் தாலியை கட்ட வைத்து தம்பதிகளாக்குகிறான் ஹீரோ.
இப்போது ஹீரோயினுக்கு ஹீரோ மீது மகத்தான காதல் பிறந்துவிட்டது. இதுவரையில் அவர்கள் இருவரும் நேருக்கு நேர் பார்க்காமல் இருக்கிறார்கள். தன்னுடைய பிறந்த நாளில் அவனிடத்தில் தன்னுடைய காதலைச் சொல்ல்லாம் என்று காதலி காத்திருக்கிறாள்.
இந்த நேரத்தில்தான் காசி அடுத்த அஸைன்மெண்ட்டை ஹீரோவிடம் சொல்கிறான். காஞ்சிபுரம் சென்று ஒரு பெண்ணை கொலை செய்ய வேண்டும் என்கிறான். ஹீரோ தனது காதல் விஷயத்தைச் சொல்லி தயங்க.. “பரவாயில்லை. இதுதான் கடைசி.. கைல லம்ப்பா பெரிய தொகை கிடைக்கும். அதை வைச்சு வாழ்க்கைல செட்டிலாயிரலாம்..” என்று ஏத்திவிட.. ஹீரோவும் தான் கொலை செய்ய வேண்டிய பெண்ணைத் தேடி காஞ்சிபுரம் செல்கிறார்.
அந்தப் பெண் காஞ்சிபுரத்தில் இருந்து திடீரென்று திருச்சி சென்றுவிட்டதாக செய்தி வர அங்கேயும் செல்கிறார் ஹீரோ. இந்த நேரத்தில் காசிக்கு ஹீரோ கொலை செய்யப் போகும் பெண் அவனது காதலிதான் என்று தெரிய வர அதிர்ச்சியாகிறான். உடனேயே கொலைக்கு ஆர்டர் கொடுத்தவரிடம் சென்று வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு இந்த அஸைண்மெண்ட்டில் இருந்து விலகிக் கொள்கிறான்.
மேலும் ஹீரோவை தேடி காசியும் திருச்சிக்கு பயணமாக.. அங்கே ஹீரோ ஹீரோயினை தேடிக் கொண்டிருக்க.. இறுதியில் ஹீரோ, ஹீரோயினை கண்டுபிடித்தாரா..? அவளை கொலை செய்தானா? அவள்தான் தன்னுடைய காதலி என்பதை ஹீரோ அறிந்தானா? ஹீரோயினை கொலை செய்ய காரணம் என்ன…? என்பதையெல்லாம் கொஞ்சம் விறுவிறுப்பாகவே எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர்.
ஹீரோ தமிழ்ச்செல்வனாக ராஜேஷ் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். படம் முழுக்க ஒரே ஆக்சன்தான். சிரிப்புக்கும் அதேதான்.. கோபத்திற்கும் அதேதான்.. ரவுடி என்பதற்கான பாடி லாங்குவேஜ்கூட இவரிடத்தில் இல்லை. பின்ன எப்படி ரவுடியாக இவரை ஒத்துக் கொள்வது.. நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான் என்கிற கதையாக படம் முழுவதும் வலம் வந்திருக்கிறார். ஒருவேளை இது அவரது சொந்தப் படமோ..?
ஹீரோயின் கலை அனாமிகா. புதுமுகம்தான்.. அமைதியான, கொஞ்சம் அழகான, கேமிராவுக்கு பொருத்தமான முகம்.. முதல் பாதியில் வசனங்களை கடித்துத் துப்பி கஷ்டப்பட்டு உச்சரித்திருக்கிறார். ஏனென்றுதான் தெரியவில்லை.. பாவம் டப்பிங் பேசியவர்.. எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாரோ..? கிளைமாக்ஸ் காட்சியில் அசத்திவிட்டார்.. அந்த கதறல், படம் முடிந்து வெளியேறும்போதும் காதுகளில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.. அப்படியொரு நடிப்பு.. பாராட்டுக்கள்..!
காசியாக நடித்திருக்கும் ராம்ஸ் கொஞ்சம் மனிதாபிமானத்துடன் கூடிய வில்லனாக நடித்திருக்கிறார். கலைச்செல்வியால் பாதிக்கப்படும் அந்த மருத்துவமனை எபிசோடை தமிழ்ப் படத்தில் வைப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும். இதற்காகவே இயக்குநர் பாண்டியனுக்கு தனி ஷொட்டு.. மருத்துவமனையின் உரிமையாளராக வரும் அசோக் பாண்டியன் எப்படி இதில் நடிக்க ஒத்துக் கொண்டாரோ தெரியவில்லை. ஆனாலும் அழுத்தமான நடிப்புதான்..!
விறுவிறுப்பான கதைதான்.. ஆனால் சிறிய நடிகர்கள்.. நடிக்கத் தெரியாத ஹீரோ.. லோ பட்ஜெட் என்பதால் ஒரே லொகேஷனில் பல காட்சிகளின் ஷாட்டுகளை எடுத்திருக்கிறார்கள். ஒரே மாதிரியான காட்சியமைப்புகளால் போரடிக்கிறது.. திரைக்கதையில் முற்பாதியில் வேகம் இல்லை.. பிற்பாதியில் வேகத்தைக் கூட்டினாலும் அழுத்தமான இயக்கம் இல்லாமல் வண்டி தடுமாறுகிறது. நடித்த மற்ற கேரக்டர்கள் பேசும் வசனங்களே பிசிறு தட்டுகின்றன.. ஒளிப்பதிவு சுமார்.. இசையமைப்பு அதைவிட சுமார்.. பாடல் காட்சிகளை எடுக்கிறேன் என்று எந்தவித ஈர்ப்புமில்லாமல் எடுத்திருக்கிறார் இயக்குநர்.
ஒரேயொரு மாபெரும் லாஜிக் குறையைச் சொன்னாலே இயக்குநரின் அலட்சியம் நமக்குத் தெரிந்துவிடும். கலைச்செல்வியின் புகைப்படத்தை ஹீரோவிடம் தருகிறார் காசி. அதுவொரு பத்திரிகையில் இருந்து கத்தரித்த புகைப்படம். அதில் வேறெந்த விவரமும் இல்லை. மொட்டையாக வெறுமனே போட்டோவை மட்டும் போடும் பத்திரிகைகள் எங்கே இருக்கின்றன..? அதில் ஏதாவது எழுதியிருக்க வேண்டாமா..? இதைக் கூடவா உதவி இயக்குநர்கள் கவனிக்காமல் இருந்தார்கள்..?
ஹீரோவின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதுதான் திரைக்கதையில் இயக்குநருக்கு மிகப் பெரிய உதவியைச் செய்திருக்கிறது..
“ஹீரோயின் கடைசியாக தனது காதலனுக்கு தன்னுடைய புகைப்படத்தை அனுப்பி கொள்கிறேன் என்று கெஞ்சிவிட்டு அதை செய்துவிட்டு அப்பிராணியாக பரலோகம் போய்ச் சேர்ந்த பின்பு தனது செல்போனை எடுத்து ஆன் செய்து அந்தப் புகைப்படத்தை அதிர்ச்சியாகி அழுகும் ஹீரோ” என இந்த ஒரு காட்சியை வைத்தே மிகப் பெரிய லெவலுக்கு படத்தைக் கொண்டு போயிருக்கலாம்.
சின்ன பட்ஜெட்.. சின்ன நடிகர்கள்.. ஒரு அளவுக்கு மட்டுமே திறமையான இயக்குநர்.. இவர்களை வைத்து இப்படித்தான் எடுக்க முடியும். தன்னால் முடிந்ததை எடுத்துக் காண்பித்திருக்கிறார் இயக்குநர் பி.பாண்டியன்.
தயாரிப்பாளர்தான் பாவம்..!
|
Tweet |
1 comments:
வணக்கம்
தங்களின் பார்வையில் விமர்சனம் நன்றாக உள்ளது பார்க்கிறேன் படத்தை பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment