22-09-2014
என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
இப்போதைய காலத்திற்கேற்ற கதைதான்.. 2008-ம் ஆண்டு ராஜீவ் கண்டல்வால் நடிப்பில் ராஜ்குமார் குப்தா இயக்கத்தில் வெளிவந்த ஹிந்தி படம் ‘ஆமிர்’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்குதான் இந்த ‘ஆள்’ திரைப்படம்.
படத்தின் ஹீரோவான அமீர் சென்னைக்காரர். அப்பாவை இழந்தவர். அம்மா, தங்கை, தம்பி சென்னையில் இருக்கிறார்கள். இவர் மட்டும் சிக்கிமில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார். நல்ல சம்பளம் என்பதால் அங்கு சென்றிருக்கிறார். இன்னும் ஒரு வருடம் பணியாற்றி கொஞ்சம் காசு சேர்த்துவிட்டு ஊர்ப்பக்கம் வந்துவிடலாம் என்ற ஐடியாவில் இருக்கிறார். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அது அவரது காதலி மீனாட்சிதான்..
ஒரு நாள் கல்லூரியில் ரிஸ்வான் என்றொரு முஸ்லீம் மாணவனை சக மாணவர்கள் தாக்குகிறார்கள். அவர்களைத் தடுத்து ரிஸ்வானை காப்பாற்றுகிறார் அமீர். தான் முஸ்லீம் என்பதாலேயே தன்னை அடிக்கடி கிண்டல் செய்கிறார்கள் என்றும், அடிக்கிறார்கள் என்றும் குறைபட்டுக் கொள்கிறார் ரிஸ்வான்.
அமீர் அவருக்கு ஆறுதல் சொல்லி அவரை தன்னுடனேயே வந்து தங்கிக் கொள்ளும்படி கேட்கிறார். ரிஸ்வானும் அவருடைய அறைக்கே வந்து தங்கிவிடுகிறார். திடீரென்று அவரது காதலி மீனாட்சி அமீருக்கு போன் செய்து தனது தந்தைக்கு தங்களது காதல் விவகாரம் தெரிந்துவிட்டது எனவும், ஆகையால் உடனடியாக கிளம்பி சென்னைக்கு வரும்படியும் சொல்கிறார்.
திருமண விஷயம் என்பதால் உடனேயே கிளம்பி சென்னைக்கு வருகிறார் அமீர். சென்னை விமான நிலையத்தில் அவர் எதிர்பாராத நிலையில் அவரது சொந்த செல்போன் சார்ஜ் இல்லாமல் இருக்க.. எங்கிருந்தோ டூவீலரில் வரும் ஒரு ஹெல்மெட் முகம் ஒரு செல்போனை அமீரின் கையில் தூக்கியெறிந்து “போன் பேசு” என்கிறது..
அமீர் குழப்பத்துடன் போனில் பேசத் துவங்க.. சட்டென வந்து நிற்கும் அம்பாசிடருக்கு அவரது உடமைகள் மாற்றப்படுகின்றன. வண்டி ஓடத் துவங்கியதால் வேறு வழியில்லாமல் அந்த செல்போனில் பேச வேண்டியிருக்கிறது அமீருக்கு.. முதலில் யார், என்ன என்று புரியாமல் முழிக்கும் அமீருக்கு போகப் போக அது தீவிரவாதத்துக்கு துணை போகும் செயல் என்று புரிய.. அவர்களிடமிருந்து அவர் தப்பித்தாரா இல்லையா என்பதுதான் மிச்சம் மீதிக் கதை..!
லாஜிக் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்குமளவுக்கு படத்தில் மிகப் பெரிய லாஜிக் ஓட்டை.. அம்மா, அப்பா, தம்பி, தங்கை குடும்ப பாசத்தை வைத்து இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஓட்டுவது..? ஒரு நிமிடம் அப்படியே போலீஸ் ஸ்டேஷனுக்குள் போயிருந்தாலே வேலை முடிந்துவிடும்.. சிக்கிம்வரைக்கும் போய் ஒரு கல்லூரியில் பேராசிரியராக இருப்பவருக்கு, இப்படியொரு இக்கட்டான நிலைமையைச் சமாளிக்கவா தெரியாது..?
திரைக்கதை ஆசிரியர் தான் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஹீரோவை இழுத்திருக்கிறார். இதனால் பாதி படத்திலேயே நம்பகத் தன்மை போய் ஹீரோ மீது எரிச்சல்தான் வருகிறது.. எதற்கு இத்தனை அல்லல்..? அவர்கள் கண்ணில் படாமல் போலீஸுக்கு போயிருக்கலாமே என்றுகூட தோன்றுகிறது..! எல்லாம் கதை செய்த மாயம்..!
அமீராக விதார்த். தனியொரு ஆளாக இந்தப் படத்தைத் தன் தோள் மீது சுமந்திருக்கிறார். இதுவரையிலும் ‘மைனா’வை தவிர மற்ற படங்களிலெல்லாம் கஷ்டப்படாமல் வசனம் பேசியே நடித்திருக்கும் விதார்த் இதில் ‘மைனா’வையும் தாண்டி கடுமையாக உழைத்திருக்கிறார். பணம் அடங்கிய பெட்டியை சிலர் பறித்துக் கொண்டு ஓடும்போது துரத்தும் ஓட்டமும்.. லாரி டயருக்குள் சிக்கிக் கொண்டு அவர் கதறும் கதறலும் சில நொடிகள் அந்த கேரக்டரின் மீதான அனுதாபத்தை நமக்குள் ஏற்படுத்தியதென்னவோ உண்மைதான்..!
கிளைமாக்ஸில் நிறைவாகவே நடித்திருக்கிறார் விதார்த். இப்படியொரு கிளைமாக்ஸில் நடிக்கவும் ஒரு ஹீரோவுக்கு தைரியம் வேண்டும். இதற்காகவே விதார்த்துக்கு நமது பாராட்டுக்கள்..!
ஹீரோயினுக்கு பெரிய அளவுக்கான ஸ்கோப் இல்லை. டூயட்டில் ஆடியிருக்கிறார். சில துக்கடா காட்சிகளில் வந்து போகிறார். அவ்வளவுதான்.. வில்லனாக தயாரிப்பாளர் விடியல் ராஜூவே நடித்திருக்கிறார். அடிக்கடி ஒரே போஸில்.. ஒரே மாதிரியான மாடுலேஷனில் அவர் பேசுவது எரிச்சலைத்தான் தருகிறது. ஆனாலும் வசனங்கள் ஈட்டியாய் பாய்கிறது..!
இந்த நாட்டில் முஸ்லீமை இந்தியனாக பார்க்கவிடாமல் செய்வது எது என்பதற்கான காரணத்தை இந்தப் படத்தில் அலசி ஆராய்ந்திருக்கிறார்கள். நிச்சயமாக இதில் வரும் வில்லன் மாதிரியான தீவிரவாத நபர்களால்தான் முஸ்லீம் மக்களுக்கே பிரச்சினை..! ‘ஜிகாத்’.. ‘புனிதப்போர்’ என்பதற்கான விளக்கத்தை அவர்கள் சொல்லும்போது கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் யோசித்தால் மடத்தனமாக இருக்கிறது..!
“பாகிஸ்தானுக்கு போன் செய்த ஒரே காரணதுக்காக உன்னை போலீஸ் துரத்துதுன்னா நம்ம நிலைமையே நீயே யோசித்து பார்…” என்கிறது டயலாக். இந்த சிச்சுவேஷனை உருவாக்கியதே அந்த வில்லன்தான் என்பதை மட்டும் மறைக்கிறார். ஆக, குற்றங்கள் உருவாக்கப்பட்ட பின்பு.. அது நியாயப்படுத்தப்படுவதுதான் ‘ஜிகாத்’ எனப்படும் ‘புனிதப்போரின்’ முதல் படியாகத் தெரிகிறது..
இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் ரணமானது.. இதனாலேயே மலேசியா மற்றும் அரபு நாடுகளில் இந்தப் படம் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாம் ஒருபோதும் கொலைகளை ஆதரிக்கவில்லை என்று அமீர் சொன்னாலும், ‘இஸ்லாத்தை பரப்புவதற்காக அது ஆதரிக்கிறது’ என்று வில்லன் சொல்வதே உலகம் முழுவதிலும் இருக்கும் தீவிரவாதத்தின் காரணத்தை புரிய வைக்கிறது..!
கேமிராமேன் உதயகுமாருக்கு நமது பாராட்டுக்கள். நிறைய உழைத்திருக்கிறார். இயக்குநர், ஹீரோ, ஒளிப்பதிவாளர் மூவருமே படம் முழுக்க ஓடியிருக்கிறார்கள். ஜோகன் என்பவர் இசையமைத்திருக்கிறாராம். டைட்டிலில் பார்த்தோம். இயக்குநர் அரவிந்த் கிருஷ்ணா ஒரு திரில்லர் படத்தை கொடுக்க முனைந்திருக்கிறார். முதல் பாதி கொஞ்சம் சலிப்பாகவும், இரண்டாம் பாதியில் மட்டுமே விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள். இதனால் பாதி வெற்றிதான் கிடைத்திருக்கிறது.. அடுத்த படைப்புகளில் முழு வெற்றி பெற வாழ்த்துகிறோம்..!
|
Tweet |
1 comments:
அண்ணே, புனிதப் போர் குறும் படத்துக்கு அப்புறம் வேற படம் எடுக்கலையாண்ணே?
Post a Comment