காதல் 2014 சினிமா விமர்சனம்

02-09-2014

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!



படத்தின் துவக்கம் ஒரு தற்கொலை முயற்சியில் துவங்குகிறது. காதலர்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்ள மலையுச்சிக்குச் செல்கிறார்கள். அங்கிருந்து குதிக்க நினைக்கையில் கடைசியாக ஒரு முறை கட்டிப் பிடித்துக் கொள்ளலாமா..? முத்தம் கொடுத்துக் கொள்ளலாமா என்று காதலன் கேட்க.. காதலி சம்மதிக்க.. அக்கணமே இருவரும் ஆலிங்கனம் செய்து கொள்கிறார்கள். புதுமையான இந்த அனுபவத்தை அப்போதுதான் அனுபவிக்கும் காதலர்கள் ஒரு சிலிர்ப்பை உணர்கிறார்கள். நாம் ஏன் சாக வேண்டும்..? உயிரோடு இருந்து இதனை அனுபவிப்போமே என்று அந்த நிமிடமே நினைத்து வந்த வழியே வீடு திரும்புகிறார்கள்..
பாஸ்கரனின் தந்தையும், ரஞ்சனியின் தந்தையும் நெருங்கிய நண்பர்கள். அந்த நட்பின் அடிப்படையில் பாஸ்கரன் ரஞ்சனியின் தந்தையை ‘மாமா’ என்றும், அவள் அம்மாவை ‘அத்தை’ என்றும் அழைக்கிறான். உள்ளுக்குள் ரஞ்சமி மீது காதலும் வைத்திருக்கிறான். ஆனால் ரஞ்சனிக்கு அது இல்லை..
தினமும் காலை பாஸ்கரன்தான் ரஞ்சனியை கல்லூரியில் கொண்டு போய்விட்டுவிட்டு வருகிறான். மாலையில் அழைத்து வருகிறான். தைரியமாக பெற்றவர்கள் அனுப்பக் காரணம் ரஞ்சனி இன்னமும் உட்காரவில்லையாம்.. ரஞ்சனி ஸ்போர்ட்ஸ்வுமன். ரன்னிங் ரேஸில் மாவட்ட அளவில் முதலிடத்தில் இருப்பவள். இனி அடுத்து ஸ்டேட் லெவலுக்கு போக டிரெயினிங் எடுத்து வருகிறாள்.
இவளுக்கு ஒரு தாய் மாமன். அப்புக்குட்டி.. கொஞ்சம் காசுக்காரன்.. ரஞ்சனியை திருமணம் செய்ய விரும்பி அவளையும், அவளது வீட்டையுமே சுற்றிச் சுற்றி வருபவன்.. ஆனால் அவனை ரஞ்சனிக்கு பிடிக்கவில்லை.. நேராகவே சொல்லியும், திட்டியும் மாமன்காரன் கேட்பதில்லை..
ஒரு நாள் வீட்டில் ரஞ்சனியும், பாஸ்கரனும் பக்கத்து வீட்டு குட்டீஸ்களுடன் விளையாடிக் கொண்டிருக்கையில் ரஞ்சனி உட்கார்ந்து விடுகிறாள். இதற்கடுத்த நாளில் இருந்து ரஞ்சனியை அவளது அப்பாவே காலேஜுக்கு கொண்டுபோய் விட்டும், அழைத்தும் வருகிறார். பொழப்பு கெட்டு போகிறது பாஸ்கரனுக்கு..
தன்னுடைய காதலை அவளிடம் சொல்கிறான். சில பல பிரச்சினைகளுக்கு பிறகு அவளும் ஏற்றுக் கொள்ள.. அவனது மனதில் ஒளிந்திருக்கும் காமத்தின் துளி வெளியில் பரவுகிறது.. எங்காவது தனிமைக்கு போகலாம் என்றெண்ணி ஒரு தோப்பிற்குள் செல்கிறார்கள்.
அங்கே குடித்துவிட்டு சீட்டு விளையாடி பொழுதைக் கழிக்கும் 4 பேர் பாஸ்கரனை அடித்து உதைத்துவிட்டு, ரஞ்சனியை சீரழித்துவிட்டு போய்விடுகிறார்கள். அடுத்து இவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதுதான் இடைவேளைக்கு பின்பான மிச்சம் மீதி கதை..!
ரஞ்சனியை பலாத்காரம் செய்த கும்பலை பழி வாங்க நினைக்கிறான் பாஸ்கரன். அந்த நேரத்தில் திடீர் திருப்பமாக ரஞ்சனி அந்தக் கும்பலின் தலைவன் குமாருடன் நெருங்கி பழகுகிறாள். இதை பார்த்து பாஸ்கர் குழம்பிப் போக.. ரஞ்சனியோ குமாரை தன்னை திருமணம் செய்து கொள் என்று நெருக்குகிறாள். இப்படியொரு அழகான பெண் தன்னை விரும்பி வருகிறாளே என்று குமார் அதை ஏற்றுக் கொள்ள.. அடுத்தடுத்து காட்சிகள் பறக்கின்றன.. அது என்ன என்பதுதான் கொஞ்சம் சர்ச்சையான திரைக்கதை.
பாஸ்கராக நடித்திருக்கும் ஹரிஷுக்கு அழுத்தமான கதாபாத்திரம். முடிந்த அளவுக்கு நன்கு செய்திருக்கிறார். இன்னும் சில படங்களில் நடித்தால் பரவலாக அவர் அறியப்படலாம்.
ரஞ்சனியாக வரும் நேகா, தோற்றத்தில் சினேகா சரிதா காம்பினேஷனில் தென்படுகிறார். சில காட்சிகளில் அழகாய் இருக்கிறார். படத்தின் பிற்பாதியில் உண்மையாகவே காதலிக்கிறாரா..? இல்லை நடிக்கிறாரா என்கிற குழப்பத்தை நமக்குள் ஏற்படுத்தும் அளவுக்கு நடித்திருக்கிறார்..
‘பாய்ஸ்’ மணிகண்டன் நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில்.. இதில் வில்லன் குமாராக நடித்திருக்கிறார். மிரட்டியிருக்கிறார். அவருக்குள்ளும் ஒரு காதல் பூத்தவுடன் அவர் படும் பாடுதான் நிசமான காதலனின் உணர்வு. உணர்ந்து நடித்திருக்கிறார்.
நாயகியின் தாய்மாமன் ராசுக்குட்டியாக அப்புக்குட்டி. அவரும் அவரது அல்லக்கைகளும் செய்யும் காமெடி சலித்துப் போன விஷயங்கள்.. ஆனால் அவரது திருமணத்தை அவர் முடிவு செய்யும்விதமும் தேர்வு செய்யும் இடமும் ‘நச்’ என்று இருக்கிறது.
பாடல்கள் பரவாயில்லை ரகம்.. இப்படித்தான் இருக்கும் என்று தெரிந்ததுதான்.. காட்சிக்கு காட்சி சின்ன பட்ஜெட் படம் என்பதை காட்டியிருக்கிறார்கள். ஆனால் மேக்கிங்கில் ஒரு வித்தியாசம் தெரிகிறது.. ஒரு ஈடுபாடும், கடும் உழைப்பும் தெரிகிறது.. இயக்குநருக்கு நமது பாராட்டுக்கள்..!
என்னதான் பழி வாங்கும் உணர்வு பெண்ணுக்கு இருந்தாலும் அதன் பின் அவளுக்கு எதுவுமே நடக்காது என்பது போலவும்.. எப்போதும்போல சமூகத்தில் வாழலாம் என்பதெல்லாம் தோள் மீது ஏறி உட்கார்ந்து காதில் பூ வைக்கும் வேலை.. இயக்குநர் இதனைத் தவிர்த்திருக்க வேண்டும்..!
பழிக்குப் பழி கொலைதான் என்பதை ஆணித்தரமாக சொல்லியிருக்கிறார். இது உண்மையாகவே உணரப்பட்டால் இது மாதிரியான கொடுமையான படிப்பு வேறெதுவும் இருக்க முடியாது.. ஸாரி டைரக்டர் ஸார்.. தவறான முடிவை திணித்திருக்கிறீர்கள்.. அதற்காக மட்டும் வருந்துகிறேன்..!

0 comments: